Sunday, October 20, 2013

கலவையான உணர்வுகள்

*
**
ஒரு மழை நாளில், நான் பாதி நனைந்தபடியும் அந்த கர்ப்பவதி முழுக்க நனையாமலும் ஒரே குடையின் கீழ் சாலை கடந்தோம்.சாலையின் மறுபுறம் சென்றடையவும் அவளது பேரூந்து வரவும் நன்றி கூடச் சொல்லாமல் கடந்து போனாள் அந்தப் பெண். சுணங்கிப் போனது மனது. நன்றிக்கென உதவி செய்யவில்லையெனினும் நன்றிகள் பெரும்பாலும் நாகரிக பழக்கத்தின் விடைபெறும் அடையாளமாக மாறி விட்டது.

என் குடையில் வீடு வரை தனியே நனையாமல் தான் வந்தேன். எவருக்கும் நன்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று இறங்கிய கணத்திலிருந்த மகிழ்வும் நிம்மதியும் தனித்த என் பயணத்தில் இல்லை. அற்புதமான அந்த கணங்களுக்காகவேணும் நன்றி சொல்லியாகவேணும் மானசீகமாக. இப்படியே நினைத்துக் கொண்டிருந்தேனா பிறகு வந்த விடியலில் வழக்கம் போல் மறந்தும் போனேன்.

காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நாட்களில் பிஸியோதெரபிஸ்டுக்கென காத்திருக்கையில் அங்கே உதவியாளராக இருந்த முகம் பரிச்சயமானதாயிருக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகமெல்லாம் சிரிப்பாக கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ சொல்ல வந்தவள் என் தளர்நடையில், ‘என்னாச்சு மேடம்? அடியா? காலிலயா? எங்க காட்டுங்க? என்றபடி பெரிய வயிற்றுடன் குனிந்து சரிபார்த்தாள். அதில், கடமையைத் தாண்டிய சினேகமிருந்தது.

*
**
எங்கள் தெருவில் கூர்க்காக்களே இல்லை.

நேற்றைய தினம் பத்து ரூபாய் வேண்டி நடுத்தர வயதில் ஒருவர் வந்து நின்றார்.தான் இந்த ஏரியாவின் கூர்க்கா என்றார். எப்படி நம்புவதென்று பெரிதாய் விவாதங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருந்தேன். எனக்கும் ஹிந்தி
தெரியுமென்று பீற்றிக் கொள்ளும் தருணங்களவை. ”ஜீ! மேடம்” என்றவாறே ஆமோதித்துக் கொண்டிருந்தார். வேலையே செய்யாது என்னை ஏமாற்றப் பார்க்கிறார். எப்படி சகிப்பது? தர முடியாதென சொல்லவா இத்தனை பேசினாய் என்பாரே! போனால் போகிறது பத்து ரூபாய் தானே? அவரிடம் ஐம்பது ரூபாய் தந்து பால் பாக்கெட் ஒன்று வாங்கி வரச் சொன்னேன். நகர்ந்ததும் தான்உறைத்தது. பத்து ரூபாயோடு போக வேண்டியது. ஐம்பது ரூபாய் தந்து ....இப்படியா இருப்பாங்க. நீ சரியான ஏமாளிடீ! பதினைந்து நிமிட இடைவெளியில் அவரைக் குறித்து ஏதும் சிந்திக்காமல் நான் ஏமாளியாகப் போகும் கணங்களை வெறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரின் நம்பகத்தன்மை குறித்த எனது பார்வை எப்படி சரியானவையாக இருக்க முடியும்? சற்று நேரத்திற்கெல்லாம் 17 ரூபாய் போக 33 ரூபாய் சில்லரையுடன் வந்து நின்றார். மன்னிப்பு கேட்டிருந்திருக்கலாம். எங்கேவிட்டது என்னுள்ளிருக்கும் முரட்டுக்குணம். மாறாக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுடன் பத்து ரூபாய் தந்து அனுப்பினேன்.

 நல்லிரவில் கவனித்தேன் கூர்க்காவின் விசில் சத்தம். அது அவராகவும் இருக்கலாம். நம்பிக்கையுடனிருப்பதற்கும் வாழ்வில் காரணங்கள் இருக்கின்றன.

*
**

வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுக்க இருப்பவனையும் மூன்று முறை தன்னைத் தெரியாதென மறுதலிக்க இருப்பவனுக்கும் சேர்த்தே தன் உடலையும் செந்நீரையும் அப்பமும் திராட்சையுமாக அந்த கடைசி விருந்தில் பந்தியிட்டார் இயேசு. அதே புன்னகையுடன் ஆரத்தழுவி உச்சி முகர்ந்து என்னை சுவாசித்து பிரிந்ததொரு நல்உறவு.

மெசியா போலில்லை.

விம்மி விம்மியழுதேன். என்னை துவேசித்து உமிழ்ந்ததற்காகவும், யாரென்றே தெரியாதென சொன்னதற்காகவும்.

யோசித்துப் பார்த்ததில் பிடிபட்டது பிழை. இடியாப்பமும் குடல் குழம்பும் பரிமாறிவிட்டேன். ஆப்பமும் திராட்சை ரசமும் உண்ணத் தந்திருந்தால் ஒரு வேளை நான் மெசியாவின் மனனிலையில் ஜீவித்திருக்கக் கூடும்.

தேற்றுதலுக்கென சப்பைக் காரணங்களுக்கா பஞ்சம் நம்மிடத்தில்...

#நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...

*
**
நண்பர் ஒருவர்.

பைக் ஆக்சிடெண்டாகி பிழைத்ததே அதிர்ஷ்டம். அதிலும் தலையில் அடிப்பட்டதில் இன்னும் நினைவு ரீதியான பிரச்சினைகள் சரியாகவில்லை. உணவின் சுவை கூட இன்னும் விளங்கவில்லை.

’தீபாவளிக்கு ஊருக்கு போகலயா?’

’இல்லப்பா’

’ஏன்?’

’நான் பஸ்ல ஊருக்கு போயி பத்து பதினைஞ்சு வருசமாச்சு.’

’ஓ அப்ப டிரைன்லயா போறீங்க?’

’இல்ல’

’பிளைட்? உங்கூருக்கு கப்பல் ப்ளைட்லாம் போகாதே!’

’நக்கலா? நான் எங்க போனாலும் பைக்ல தான் போவேன்.’

அவருக்கு ஏதோ ஒரு கிராமம் நாகர்கோவில் பக்கத்துல. 600 கிமீ க்கு மேலேயே இருக்கும். தீபாவளி அன்னிக்கு ஊரு நினைவு வந்து ஆக்சிடெண்ட் ஆனது மறக்கக் கூடாது.

கவனமா இருங்கப்பா. இதிலெல்லாம் என்ன கெத்து வேண்டிக் கெடக்கு.. பஸ்ஸோ ட்ரைனோ பிடிச்சி போறதுக்கென்ன? டிக்கெட் கிடைக்குமா என்பது தனி.. ஆனா பயமில்லாம இருப்பமில்ல நாங்களும் ? இதுல போற போக்குல என்னையும் மெரட்டிவுட்டுறது.. இன்னிக்கு தான் இது மாதிரி டென்சன்லாம் என் தலையில ஏறும்.
*

10 comments:

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்து...

அருமையான பகிர்வுகள்...

வாழ்த்துக்கள்.

கயல் said...

நன்றி குமார்.. இந்தப் பக்கம் அப்பப்போ வர்றதுண்டு. :)

Unknown said...

உங்கள் எழுத்தின் சுவைமணம் கூடிக்கொண்டே போகிறது. இனிமை.

எஸ் சம்பத் said...

தோழர் எட்வின் முகநூலில் பார்த்து இந்த வலைக்குள் வந்தேன்- சிறிய சிறிய பதிவுகளுக்குள் வாழ்வியலோடு தொடர்புடைய செய்திகள் இருக்கிறது - நல்ல பதிவுகள் தொடரட்டும் www.sathikkalaam.blogspot.com

எஸ் சம்பத் said...

தோழர் எட்வின் முகநூலில் பார்த்து இந்த வலைக்குள் வந்தேன்- சிறிய சிறிய பதிவுகளுக்குள் வாழ்வியலோடு தொடர்புடைய செய்திகள் இருக்கிறது - நல்ல பதிவுகள் தொடரட்டும் www.sathikkalaam.blogspot.com

Geetha said...

எட்வின் சார் மூலம் அறிந்தேன் உங்கள் பிளாக்கை இதமான பகிர்வு .நன்றியும் வாழ்த்துக்களும்

DREAM CATCHER said...

Hi

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : சொர்க்கமே என்றாலும்...

ரிஷபன் said...

நல்லிரவில் கவனித்தேன் கூர்க்காவின் விசில் சத்தம். அது அவராகவும் இருக்கலாம். நம்பிக்கையுடனிருப்பதற்கும் வாழ்வில் காரணங்கள் இருக்கின்றன.

உங்கள் பதிவுகளில் கிடைப்பதும் அதுதான் !

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!