Wednesday, July 17, 2013

இசையாய் ஒரு நட்பு

என்ன பேசுவது

எல்லாம் தீர்ந்துவிட்டது

மௌனப் புரிதல் சாத்தியப்பட்டபின் சுயவிளக்கங்கள் விலகி நிற்கின்றன.

வசமாகி வசப்பட்டு மீண்டெழும் நிமிடங்களில் கோலோச்சிப் போகிறதொரு வனப் பறவை. ஒவ்வொரு மீட்சியிலும் நுகரும் பிம்பங்களிலெல்லாம் அதன் அன்பின் மொழியே....

கையில் வேலோடு கூர்மையாய் பார்த்தபடியிருக்கிறான் வேடனொருவன். கண்ணிமைக்கும் நொடியில் மரணம். சூழல் புரியாது பாடித் திரிகிறதொரு வெளிச்சக் கெண்டை. சடுதியில் அவன் பார்வை திசைமாற்றி தப்புவிக்கிறது அவ்வனப்பறவை.

உயிர் பிழைத்து தூரத்து நதியுள் அமிழ்ந்தெழும்பும் சின்னஞ் சிறு கெண்டையின் பரவச நீந்தலில் தன்னிலை மறந்து சிறகடிக்கிறது வனப்பறவை. பிறர் சுகத்தில் தான் மகிழும் மகிழ் பறவை.

வனத்துள் அமலோற்சவங்கள் வாடிக்கையென்பதால் உந்திப் பறக்கும் அதன் சிறகுகளில் கர்வமேயில்லை.

அங்கயற் கூடலுள் மெலிதாய் கிசுகிசுக்க இப்போதெல்லாம் பறவையின் பாசமே காரணமாயிருக்கிறது.

நன்றிப் பெருக்கிலும் நட்பின் பாசத்திலும் இணங்கிக் கிடக்கின்றன அற்புத ஜீவிகள்.

பாருங்களேன்... பறவையின் சிறகடித்தலுக்கு மௌனமாய் யாழிசைக்கிறது நன்னீர்க் கெண்டை.

இசையின் தேன்மொழியில் காலம் எழுதிக் கொண்டிருக்கிறது பறவைக்கும் கயலுக்குமான மகோன்னத நட்பினை...

Sunday, July 14, 2013

விக்கல்

உச்சந்தலையின் மயிரெடுத்து
சுண்டி விடுகிறாள்
கத்தியெடுத்து கழுத்தில் வைக்கிறாள்
சத்தமாய் அதட்டுகிறாள்
தண்ணீர் தருகிறாள்
தலையை நிமிர்த்தி
அண்ணாந்து பார்க்கப் பணிக்கிறாள்
அறுபது நொடி
அவஸ்தைக்குப் பின்
ஆசுவாசமாய் அடங்கிப் போகிறது
விக்கல்
பார்வை தெளிய
அவளைப் பார்க்கிறேன்
தளும்பிய கண்ணோடு
இன்னும் என்னையே பார்த்துக் கொண்டு ...
சீண்டாமல் கிடக்கிறது
தட்டில் பரிமாறிய உணவு

நான் யாரென ஆய்ந்தறி

தானே நீள்கிறது 
தண்மையாய் ஒரு கரம்
பாசத்திற்கு வறுமை தானே
வாஞ்சையாய் வாரியணைக்கிறேன்
கை தொட்டதால் ஒட்டிய தீட்டென்னவோ ?
களமாறி கைகோர்த்தலென்ற
அங்கலாய்ப்புகளில் ஏதும் புரிவதேயில்லை
அட!
மிதிபட்டெழுந்து வந்தவள்
வலியினைச் சொன்னால்
பூசும் சாயம் சாதியா?
வலுவில் செல்வதில்லை
வந்தததை விடுவதில்லை
முதிராத மனமில்லை
முற்றிலும் துறவுமில்லை
பிழையொன்று கண்டேன் அதில்
பரிதாபத்துக்கென்று
பச்சாதாபத்தில்
அன்பொழுக நடிக்காதீர்கள்
அதன் பின்
அலுக்காதீர்கள்
உங்கள் சூதறியா
என் சுயம் அத்தனை அசிங்கப்படும்
எழுத்தில் சொல்லிடமுடியாது
என் சுயம் அத்தனை அசிங்கப்படும்
அன்பிற்கென வளைந்த என் முதுகில்
அதிகாரமாய் ஏறாதீர்கள்
விசிறியடிக்குமென் தன்மானக் குதிரை
வேகமாய் விலகுங்கள்
வேறு வேலையிருக்கிறது....

Saturday, July 13, 2013

மதுமலர்

மதுவழியும் மலர்களின் மடியில்
கவிழ்ந்துறங்கும் நிலவுக்கென
சலசலக்கும் குளக்கரையில்
சலனமற்று காத்திருக்கிறேன்
சத்தமாய் சதிராடிக் கொண்டிருக்கிறது
ரசனையில் ஊறித் திளைத்த மனம்

கவலையற்ற காதலோடு
களமிறங்கி ஒளிவீசுகிறது தண்ணிலவு
களங்கமெல்லாம் மச்சமென
திமிறி வசப்படுகிறது மனது

முன்னிரவுத் தொடுகையில்
முளைக்கத் துவங்கின சிறகது
பின்னிரவுக்கெல்லாம் பறக்கத் தயாராய்
பேதை நான் அறிந்தேனில்லை

எட்டி உதைத்து எம்பிப் பிடித்தேன்
தூரத்தே பூமி
தொடும் தொலைவின் வானம்
சுமந்து பறந்த நிலா
நடுவானில் மல்லாந்து சிரிக்க
உதிரத் துவங்கிய நான்
பறக்கத் துவங்கினேன்
அட!
ஒடுங்கிய சிறகுகள்
விரிந்த கணம்
வசப்பட்டது வானம்
கன்னஞ் சுடும் கதிரொளியில்
கனவென்று உறைக்கக் கூடும்
அதுவரையில்....
நிலவு கலமாகவும்
நான் அதில் பயணியாகவும்

Thursday, July 11, 2013

யாரோ எவரோ...

அவரோ எவரோ
எனக்கு
என்னைத் தவிர்த்து
யாவரும்
யாரோ எவரோ...
சினேகப் புன்னகைக்கு
பதிலாய் ஒரு புன்னகை
சிந்திய தமிழுக்கு
பதிலாய் ஒரு நன்றி
உறக்கம் சிறைபிடிக்கும் வரை
படிக்கத் தமிழ்ப் பாட்டு
உடலரசியலிலும்
உள்ளம் கலப்பதில்லை
உன் அரசியலொரு பொருட்டா
மறந்தே போனதுன் பெயர்
நாளை உன் நிழலும்...
மன்னிக்க
சாபமான நினைவுகளிருக்கிறதொரு கோடி
உன்னையுமா சுமக்கவேணும்...
விட்டுப் பற
உரசாமல் விலகிப் பற
சிறகுகள் தவிர்த்து நமக்குள்
யாதொரு ஒருமித்தலுமில்லை ...
இயல்பே அன்பெனினும்
எனக்கு
என்னைத் தவிர்த்து
யாவரும்
யாரோ எவரோ...

Wednesday, July 10, 2013

மோனலிசா

பௌர்ணமி கிரணங்கள்
யன்னலிறங்கும் தேவநேரம்
அணுக்கமாய் குழலிசை
இகரக்குறுக்கத்தில் ஏற்றிய சிறுகவி
புரவி பறக்கும் பாதை
படையல் புசிக்கும் யாளி
கோதூளி அடங்கிய கொட்டில்
பதுமை பரமன்
தண்டையதிரும் மென்னடை
மெல்ல ஒடுங்கிச் சேரும் திண்புயம்
திருமண் சுமந்த குழவியதன் கையில்
திடுமென அசையும் உடுக்கை
தூரத்தே எரியும் உடலம்
நுதல் மினுங்கும் வைரத்துளி
அதிர்ந்து இமை திறக்கையில்
சிவப்புச் சுவரில்
மௌனமாய் சிரிக்கும் மோனலிசா

Tuesday, July 9, 2013

அவளைத் தீண்டாது திரும்புங்கள்


மீதிபட்ட கோப்பைத் தேநீர்
மல்லிப் பூ விரவிக் கிடக்கும்
கசங்கிய விரிப்போடு
ஒற்றைத் தலையணை
மெலிதாய் சுற்றிக் கொண்டிருக்கும்
மின்விசிறி
ஒருக்களித்து திறந்திருக்கும் கதவு
ஏதோவொரு இந்திய மொழியில் பாடிக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சி
இப்படியானதொரு அறைக்குள்
வெளிச்சம் தரும் சாளரங்கள் சாத்தப்பட்டு
திரைச்சீலைகள் போர்த்தப்பட்டிருக்கின்றன
பாவாடை விலகி தெரியும் தொடை
மாராப்பு விலகித் தெரியும் முலை
இடுப்பு மடிப்புகளிலோ
இன்னபிற கிளர்ச்சிக்காகவோ
எப்போதும் கூர்ந்து கவனிக்கபடும்
தனித்திருப்பவளின் படுக்கையறை...
அறிவுரைச் சித்தாந்தங்களின்படி
எப்போதும் சாத்தியபடியே...
அவ்விடம் ஒரு ஆடவனைத் தேடி
களைக்கிறதவர் கண்கள்
அவளைத் தவிர எவருமில்லை
அவ்விடத்தில்
அவளைத் தவிர எப்போதும் எவருமில்லை
இதைச் சொன்னால்
எத்தனைபேருக்குப் பிடிக்கும்
வேண்டியதை ஒட்டியும்
வேண்டாததை வெட்டியும்
உருவாகிறது ஒரு கதை....
கதை உலவட்டும்
அது அவளைத் தீண்டாது
பவித்திர தனிமையில்
மின்னும் மரகதமாய்....
கண்மூடி இசையாகி உலவிக் கொண்டிருக்கிறாள்
அவளைத் தீண்டாது திரும்புங்கள்

முத்தச் சங்கமம்

செம்மஞ்சள் முகத்தில்
முன்நெற்றி ஆகாயம்
வட்டப்பொட்டு செந்நிலா
ஒற்றை மீன் மிதக்கும் குளமிரண்டு
குகை வழிப் பாதை
கூர்மேட்டு நாசி
பவளப் பிளவொன்றின்
மறைவில்
இருவரி பரல் வரிசை
கதுப்புகள் குழிய
திணறும் வியர்வை நதி
இன்னுமின்னும் ....
போதுமென்ற சைகை
முத்தச் சத்தம்
கவிச் சங்கம் அதன் பின்
முழங்கவேயில்லை

Saturday, July 6, 2013

நடுநிலை

நடுநிலைக்கென்று சௌகரியங்கள் இருக்கின்றன
எவர் கருத்துக்கும் தலையாட்டலாம்
செவிமடுக்கலாம்
கைதட்டலாம்
விசிலடித்து வெறியேற்றலாம்
கடினமான பொழுதுகளில் பேச்சற்று
மௌனிக்கலாம்
யார் வீட்டின் இழவோயென்று
யாதொரு பதைபதைப்புமில்லாமல்
காதில் இசைக்கும் கருவியோடு
மாராப்பு விலக
மாரடித்தழும் மடைச்சியை ரசிக்கலாம்
இந்தப் பக்கமா
அந்தப் பக்கமா
பேரத்தின் வசூலில் இறங்கலாம்
ஓட்டுகள் வாங்கலாம்
காறியுமிழலாம்
கட்டியணைக்கலாம்
இழப்பொரு பக்கம் இழிச்சொல் மறுபக்கம்
இடிவிழுந்த குடும்பத்தை இன்னும் சிதைக்கலாம்
மிச்சமிருக்கும் உயிர்களையும்
நக்கல் பேச்சால் நாறடித்திடலாம்
எப்போதேனும்
மிக மிக அரிதாக எப்போதேனும்
தானும் மனிதரென்றுணரலாம்
உணராதிருப்பதையும் 

உரக்கப் பேசி மறைத்திடலாம்
நடுநிலைக்கென்று ஆயிரன் நன்மைகளுண்டு

Friday, July 5, 2013

ஞாபகக் கேணி

நாகரிக முகமூடிக் கழறும் கணம்
காம வெறிக் கண்களோடொரு
வன்பசி மிருகம்
வாரியணைக்கிறது
குறுவாளெடுத்து கொலைக்கென
ஆயத்தமாவதில்
மெல்லிய சிக்கல்
நானே உணவிட்டு வளர்த்த மிருகம்
பாசத்தில் குழைத்த
பதில்களும் அத்துப்படி
வார்த்தைகள் தின்றழித்த
நினைவுகளை
யாழினில் இசைக்கிறது
இனி நான் என் செய்வது?
செவி மறைத்து
ஊமையாகிறேன்
தூர்ந்து போகட்டும்
ஞாபகக் கேணி

Thursday, July 4, 2013

கவிக் கோர்வை - 17

*

யாரோ மனம் தட்டும் போது தான் மாமா
நீ இன்னும் உள்ளிருப்பது தெரிகிறது
உயிரில் கலப்பதென்பதை
நேற்று வரை நம்ப வில்லை
நீ
கலந்திருக்கிறாய்
காதலாய்...

*

கோடிச் சொல்லில்
ஒற்றைச் சொல்லேனும்
உனக்காய்
உனக்கெனவே
உன்னால்
உருக் கொண்டெழுகிறது

*

அறுந்த நரம்பெனச் சொல்கிறார்கள்
அது இசைத்த ராகங்களை
நினைவில் மீட்டுகிறேன் யான்
உயிரோடில்லையா
நீ
உன்னை சுவாசித்தே
வாழ்கிறேனே நான்

*

கவிக் கோர்வை - 16

அம்மரம்
பல உதிர்தல்களையும்
பல அமர்தல்களையும்
பரிணமித்தலில் பார்த்தே வந்திருக்கிறது
நான் துளிர்த்த இடமும்
அதில் வளர்ந்த இடமும்
வளர்ச்சிதையின் வார்த்தையாகலாம்
அதோ
பறந்தபடி இருக்கிறதே சருகு
எவருடைமை என்றில்லாத
தனித்த பெருவெளி
அதில் பச்சை இலையெனில்
அனுமதியேயில்லை
உதிர்ந்த சருகென்பதே ஏற்பு
காலத்தால்
அதிர்ந்துதிர்தலிலும் அனேகம் நன்மையுண்டு

Wednesday, July 3, 2013

கவிக் கோர்வை - 15

*

நிஜத்தில் தூரமாய்
நினைவில் நெருக்கமாய்
அல்லோகலப்படுகிறது
அதிர்ந்தறியாதயென் தனிமை

*

பனைமரத் தோப்புகளில் காற்று
பறை இசைத்து ஆர்ப்பரிக்கிறது
கருக்குகளில் அறுபட்ட
காற்றின் கதறலென
பதறிப் போகிறது மனசு

*


ஆமோதிப்பதாகவெனும் பொருளில்
தவறி வந்து விழுகிறது
ஒரு
‘ம்ம்’
அவசரத்தில் மாற்றியெழுதுகிறேன்
அதையே
‘ம்ம்ஹூம்’
என்ன சொன்னாலும்
எதுவும் செய்ய முடியாத தொலைவிலிருக்கிறான்
மனதுக்கு நெருக்கமானவன்

*

Tuesday, July 2, 2013

சகலமானவர்களுக்கும்...

ஆரோக்கியசாமியின் கல்லறைத் திண்டில்
முப்பத்தாறு இரவுகள்
எங்குமில்லாத நித்திரை தழுவல்
அங்குதான் அனுகூலமானது

இந்துச் சுடுகாட்டில்
மின்சாரத்தில் பஸ்பமாகும்
பிணவாடை முகர்ந்தபடி
பல சாயந்திரங்கள்
போனவாரத்தின் மின்வெட்டுப் பகலில்
இருபத்திரண்டு வயதிலொரு
இளம்யுவதி
நிர்மலாவென்று சொல்லியழுதார்கள்
விம்மி எழும்பும்
விலா எலும்புகள் தெறிக்க
அடித்து ஒடுக்கினான்
சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்

பேய் பிடித்தவர்களை
தர்ஹாவின் புகைக்கு மத்தியில்
தலைவிரித்தாடி பார்த்திருக்கிறேன்
தினப்படி காட்சி தான்
கொஞ்சமும் பயந்தேனில்லை

கிராமத்துப் பூசாரியின்
உடுக்கை சத்தமும்
விளாசியெடுக்கும் சாட்டையும்
மிதமிஞ்சிய வன்முறைதான்

பேய்களே இல்லை
அது மூடநம்பிக்கை

குழல் விளக்கைத் தவிர
ஏதும் நிறைக்காத
காலியான தனியறையில்
ஏதோ இருக்கிறது
எவரோ அழுகிறார்கள்
எவரோ நடக்கிறார்கள்
எவரோ சிரிக்கிறார்கள்
என்னமோ நடக்கிறது

தனக்கென எழும்பும்
சுவர்களுக்குள்ளே தான்
பேய்கள் மனிதர்களைப் பிடிக்கின்றன

கவிக் கோர்வை - 14

*

பற்றிக் கொண்ட சூளைக்குள்
பச்சை மரமும் பஸ்பமாகும்
மழை நனைத்தும்
தணல் சுட்டதைச் சொல்லும்
வெந்த செங்கல்

*

படித்துறை ஓரத்தில் தான்
கால் நனைத்து
ஆழம் பார்க்கிறேன்
கிழிந்து பின் சேர்க்கிறது
ஓடும் நதி

*

சிதறிய சொந்தங்களைப் பார்த்தழுகிறது
செதுக்கப்பட்டச் சிலை
அச்சிலை தொட்ட அபிஷேகத் துளியை
தானுறிஞ்சி சிலிர்ப்படைகிறது
பொடிந்து பட்ட மணற்துகள்

*Monday, July 1, 2013

கவிக் கோர்வை - 13

*

தன்னை மறைக்கும் கையையும்
பிரதிபலிக்கிறது
கண்ணாடி

*

ஈசலின் சிறகுகள் எனது
நகங்களால் கிழித்துவிடாதே
நாழிகைகள்
வேகமாய் நகர்கின்றன


*


மோட்சத்துக்கும்
பாம்பின் விசத்துக்குமிடையே
அல்லாடிக் கொண்டிருக்கிறேன்
மெதுவாய் சிதறுகிறது சோழி
ஜோடியாய் சிரிக்கப் பணிக்கிறாள்
எப்போதும் தாயம் வேண்டுபவள்

*

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!