Saturday, December 3, 2011

நா

கந்தக பிழம்பொன்றின்
செறிந்த துளி
சிந்திய வேகத்தில்
கருகிப் போனது உறவு!

வைரம் பிரசவிக்க
கடவுள் தரும் அழுத்தத்தில்
கொள்கலன் விசும்பலோடும்
புறவிசை நெரிசலோடும்
குமுறியபடி எரியும் மனது!

தளும்பாத கோப்பைகளும்
நிரம்பி வழிகையில்
கட்டுடைந்தது நாக்கு
புலன்வழி அறிவும் சேர
மிருகமானது மனிதம்

நட்டுவாங்கம் இல்லாத
ருத்ர தாண்டவம்

திரண்ட ஒருதுளி கண்ணீரில்
அணைந்தது பிரளய நெருப்பு
ஆவியடங்கி சமவெளி விளங்க
இறுகிப் படிந்தது பாறையாய்...

புல்லோ பூண்டோ
விரவிக் கிடக்கும் சாம்பலில்
பரிணமிக்கும் ஏதோவொன்று
தொடங்க கூடும்
தன் வாழ்க்கையை
மாறும் வானிலைக்கு உகந்தபடி!


Sunday, November 20, 2011

போகிற போக்கில்....

பூமி முகம் பார்த்ததும்
சிதைத்து போனது காற்று
”நீர்க்குமிழி”

***

சருகின் மீது பயணிக்கிறது
உயிருள்ள எறும்பு
”கடந்த காலம் ”

***

இருட்டிய வழியில்
நடைபயில்கிறது கைபிடித்த
விளக்கின் ஒளி!

***
இமைகள் இரண்டும்
கட்டிக்கொண்டபின் 
விடுதலையானது
”கண்ணீர்”

***

பூக்களை மிதித்தால்
முட்கள் குத்தும்
”நெருஞ்சிப் பூ”

***

நீர்சூழ் நல்லுலகம்
அதன் நடுவே - மனம்
வறண்ட மனிதர்கள்

***

வெண்ணிற தாள்
ஒற்றைக் கரும்புள்ளி
நிறை மறந்த மனது

***

Saturday, August 27, 2011

நண்பன்

கவலையில்லா மனம்
வேண்டுமெனக் கேட்டேன்

இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்

தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்

மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்

துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!

தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்

ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்

ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்

மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!

தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்

துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்

வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்

உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்

இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்

எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு

நண்பனாய்...
Monday, August 15, 2011

வாழ்க பாரத மணித்திருநாடு! வாழிய வாழியவே!

சுதந்திரப் பயிர்

”தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?
எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?
இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?
நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே”

-பாரதியார்

தலைகீழாக தொங்க விடப்பட்டு,சப்த நாடிகளும் அதிர பிரம்புக் கழிகளினால் அடிகள் ஒருபக்கம். வசவுகளோடு விசாரணை மறு பக்கம். வாய் வழி மலம் வருமளவு சித்திரவதை அனுபவித்த போதும் கூட,தன்னிலை மறந்த நிலையிலும் வந்தேமாதரம் என்றாராராம் எம் மண்ணின் தியாகியொருவன்.

பரங்கியரோடு போட்டியிட்டு, அவருக்குச் சமமாய் கப்பல் விட்டு தன்மானம் காத்தவொருவர் செக்கிழுத்து மடிந்தாராம். வாழ்வின் பிற்பகுதியில் தொழு நோய் பீடித்து மடிந்தாராம் அவர் தம் தோழர்.

வெயில் சுட்டுக் கருத்த தேகத்தோடும், வேர்வை வடியும் மார்போடும் கோவணம் அணிந்த அரைமனிதனைக் கண்டு,  தன் மேலாடை துறந்து கதராடை கொண்டானாம் ’பாரிஸ்டர்’ பட்டதாரியொருவன்!

தன்னைக் காத்து மண்ணை காட்டிக் கொடுக்க விரும்பாத விடுதலைப் போராளியொருவன் தன் பற்காளாலேயே தன் நாவை துண்டித்துக் கொண்டானாம்.

பீரங்கிகள் முழங்கி துப்பாக்கிகள் துவம்சம் செய்த போதும் மண்டியிடாமல் வாளேந்தி நின்றானாம் என் தாய் மண்ணின் மைந்தனொருவன்.கப்பம் கட்டாத குற்றத்திற்கு துரோகியென குற்றம் சாட்டி தூக்கிலிட்டு கொன்றாராம் பரங்கியர்.

அந்தமானின் தீவுகள் தோறும் மணாலோடு மணலாய் மக்கி போன எம்மண்ணின் மைந்தர்கள்.அம்மை கண்டால் கடலில் எறிவாராம். சிகிச்சைகளின்றி சாவினை எதிர்கொண்ட நாளிலும் கூட சுதந்திர கீதம் எழுதினராம். பொய்யில்லை சாட்சிகள் உண்டு. ஜெயில் கம்பிகளும் குருதி படிந்த விசாரணை அறைகளும் சாட்சிகளாய் இன்னும் உண்டு.

சாவையே நேசிக்கும் உறுதி எவருக்கு வரும்? அதுவும் எப்படி பட்ட உறுதி? ஜாலியன் வாலா பாக் படுகொலைகளின் ரத்தம் படிந்த மண்ணை பார்த்துப் பார்த்து தன்னை போராளியாக்கிக் கொண்டவனின் உறுதி. தூக்குக் கயிற்றையும் முத்தமிட்டு மடிந்தவன் இல்லை இல்லை வீரத்தின் வித்தாய் இங்கு புதைந்தவன்.

200 வருடங்கள் அடிமை வாழ்க்கை. எங்கேனும் எப்போதோ சீறிப்பாயும் ஒரு எதிர்ப்பு.ஊறிப்போன அந்நிய மோகம். இப்படியிருந்த நாட்டை வீரமுழக்கமிட்டு தட்டியெழுப்பிய தியாகிகள் எத்தனை?

சோம்பிக் கிடந்தவரை தட்டியெழுப்பிய கவிதைகள் எத்தனை? அதற்கெனவே பலியான உயிர்கள் எத்தனை?

எண்ணிலடங்கா ....

தியாகங்களும் புரட்சிகளும் போராட்டங்களும்

மிதவாதமாய் தீவிரவாதமாய்

உண்ணாவிரதமாய்-போராட்டமாய்-புரட்சியாய்

எப்படியோ தாய்திரு மண்ணிற்கான பலியிடல்களும் சரணடைதல்களும்!

எதுவும் எளிதாய் கிடைத்திடவில்லை.

இறையாண்மை பற்றியும் - பொறுப்பின்மை பற்றியும் -சாதி மத பிரிவினை பற்றியும்-வலுவிழந்த அரசியல் கட்டமைப்பு பற்றியும் குறை கூறிக்கொண்டே காலம் கழிக்கும் மக்களுள் ஒரு சாரார் எப்போது உணர்வார்? குறையில்லாத ஜனநாயகம் உண்மையில் சாத்தியமேயில்லை. அதை மாற்ற நாம் என்ன செய்தோம் என்பதே கேள்வி! காந்தியை பிடிக்காதென்பதை தன் தனித்தன்மையாக எடுத்துரைப்போரும் இங்குண்டு. போஷின் செயல்பாடுகளை விமர்ச்சிப்பவரும் இங்குண்டு.

அவர்க்கெல்லாம் பதிலாய் ஒரு கேள்வி..,

“விமர்ச்சிக்க சுதந்திரம் பெற்றாய் பதிலாய் விமர்சிப்பதை தவிர நாட்டுக்காய் நீயென்ன செய்தாய்?“

செவிவழியாய் கேட்டுக்கேட்டு என் நரம்புகளுக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன் சுதந்திரமென்றால் என்னவென்பதை.

என் சந்ததிக்கு அதை சொல்லி வளர்க்கும் பொறுப்போடு....!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் அன்பர்காள்!

வாழிய பாரத மணித்திருநாடு!

வாழிய வாழியவே!

Saturday, June 11, 2011

காதல் செவ்வாய்

யாரெனக் கேட்கிறார்கள்
யாரெனச் சொல்லட்டும்
யாராவது இருந்தால் தானே!
வெறும் கையில்
பூக்களை அளந்தெடுக்கிறேன்
விற்பனைக்கல்ல
சந்திக்கும் நாளிலென்
விரகத்தின் வீதம் எத்தனையென்று
உன்னிடம் சொல்ல!
=====
கைவளைகளை
ஒட்டிப் பிரித்துக் கொண்டிருந்தேன்
திடுமென உன் நினைவு!
இதழொற்றி
மீண்டதும் ...
சப்தித்தன வளையல்கள்
சிலிர்த்துக் கொண்டேன் நான்
இப்படியாக...
நீயும் நானும்!
=====
பிடித்தவை
வெறுப்பவை
ரசிப்பவை
நீ உவந்து ருசிப்பவை
எல்லாமும்
மனப்பாடம்!
என் விருப்பம் ஏதேனுமொன்று
தெரியுமா உனக்கு?
=====
தினவேறிய தோளோடு
திமிர் தளும்பும் கண்ணோடு
தெளிவான மதியோடு
தெவிட்டாத தமிழோடு....
எல்லாக் கனவும்
பொய்த்தும் கூட
இன்னும்
இயங்கிக் கொண்டிதானிருக்கிறேன்
நீயென்பது கைவரும்
நாளொன்றிற்காய்....
======
காத்திருத்தல்
தவம்
அதன் பின்
பிறவிப் பயனாய்
உன் தரிசனம் கிடைப்பதால்
காத்திருத்தல் தவம்!
=====
எப்படிச் சொன்னாலும்
விளங்கவில்லை உனக்கு!
என்னுலுறையும்
எல்லாமும் நீயென
எப்படிச் சொன்னாலும்
விளங்கவில்லை உனக்கு!
சரி!
இலக்கணம் உடைக்கிறேன்
முத்த வாசகமாவது
புரியுமா உனக்கு!
=====
விண்ணில் நிலவும்
என்னில் நீயும்
தேய்ந்தும் வளரும்
நிரந்தரமென்றாய்!
அதற்குபின்
நானோ
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பயணித்தபடியிருக்கிறேன்
கனவுகளின் ஊடாக!
=====
இதயம் மூளை
இதில் எங்கடி
இருக்கிறாய் நீ!
கேட்டதும்
தீயாய் எரிந்தது
நான் பக்கதிலிருந்தேன்
அப்போது!
=====
கொஞ்சம் இளநரை
தோல் சுருக்கம்
கருவளையம்
முகப்பரு
எல்லாமும்
புலம்பி முடிக்கையில்
மெதுவாய் சொல்கிறாய்
“இருந்தாலும் அழகுடி நீ!”
=====
வருத்தங்களிலென்
தோள் சாய்வாய் நீ!
அப்போதெல்லாம்
வசந்தங்களை
சுவாசிக்கிறேன் நான்!
=====
கண்பார்வையில்
பட்டதை எல்லாம்
கவிதை சமைக்கிறேன்
உன் கண் தொட்டபின்
கல்லாய்
உறைகிறேன்!
=====
வார்த்தைகளெல்லாம்
வலுவிழந்து போயின
உன் மூச்சுக் காற்றின்
ஸ்பரிசத்தில்....
தள்ளி நிலென்று
நீயோ நானோ
சொல்லவேயில்லை
கடைசிவரை!
=====
எனக்குள்
நூறுமுறை
சொல்லிச் சொல்லி
சிலாகித்துக் கொள்கிறேன்
உன் பெயருக்குமுன்
திருமதி சேர்த்து!
=====
எல்லாமும்
எல்லோரும்
எப்போதும்
அழகாய் ....
கண்ணில் நீ
இருப்பதனாலா?
=====
பிரபஞ்ச வெளிச்சம்
புகாத என் மனவறையின்
கதவுகளில் தேவதைகள்
காவல் புரிகிறார்கள்
உள்ளே நீயோ
கொடுவாள் கொண்டு
உன்னை எழுதிக்
கொண்டிருக்கிறாய்!
=====
உன்னைச் சுற்றியே
சுழன்றபடியிருக்கிறது
மனது!
பயமாயிருக்கிறது
சுற்றலின் முடிவில்
சூனியமாகிவிடுமா
என் காதல்!
=====
என்னில்
எல்லாமும் குறை
உனக்கு!
மனமெங்கும் நீ
நிறைந்திருப்பதை
அறிந்து சொல்லுமா
உன் கண்கள்?
=====
அனைத்துலக வாத்தியமும்
ஒருங்கே ஓதினாலும
என் மௌனங்களின்
சக்கரவர்த்தி நீ!
=====
நல்லதை நினை
நல்லதை பார்
நல்லதை கேள்
பார்த்துக் கொண்டே
கேட்டபடியிருக்கிறேன்
உன்னையும்
உன்னாலான நினைவுகளையும்!
=====
உலர்ந்த உதடுகளை
ஈரமாக்கினாய்
நனைந்திருந்தேன்
என்னுள் காதல்மழை

Wednesday, June 1, 2011

இதுவாகவும் கூடுமோ?

இன்னது நிகழ்ந்தால்
இன்னாரெல்லாம்
இகழ்ந்துரைப்பர்!

இவரவரெல்லாம்
யாரோவெனப் போவார்
இனிதாய் ஒலித்தவை
இன்னலாய் மாறக்கூடும்
இவ்விதமானால்
இளக்காரம் நிச்சயம்
இப்படியாக இன்னார்
இச்சேதி தெளிவுற்றால்
இழிந்து உமிழக்கூடும்!

எங்ஙனம்
எவரெவர் வாய்
எப்பொருள்படினும்

உன்னில் நானும்
என்னுள் நீயும்
கருத்தொருமித்தே
காதலானோம்!

சுவாதினமாய் இதழ்
விரியும் மொட்டொன்றாய்
மலர்ந்தது காதல்...

காதலை பேசிப்பேசி
காதலரானோம்

தூற்றலாய்
பிதற்றலாய்
சாபமாய்
கிண்டலாய்
கேலியாய்
ஒதுக்கலாய்

நம்மீது
சொல்லெறியும் நாக்குகள்
எதற்கும் மனவொழுக்கம்
சொந்தமில்லை என்பதறிக!

Monday, May 23, 2011

சரி தவறு

சரியெனப்பட்டது
சத்தமாய் சரிதானென்றேன்
தவறெனப் புரிந்தது
தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்!
ஒத்திசைக்க உற்றவர்கள்
உடனிருந்தார்கள்!
அவர்தம்
கூட்டணி மாறியது
சரியென்றதை தவறெனவும்
தவறென்றதை சரியெனவும்
இம்சிக்கிறார்கள்
பிறழாத நாக்கு வேறு
பொய்யுரைக்க மறுக்கிறது
இப்போதும்
முன்னிருந்த நிலைதான்
இடறாத கொள்கையோடும்
பிறழாத நாக்கினோடும்
தன்னந்தனி மரமாய் நான்!
வந்தமரக்கூடும்
என் கிளையிலும்
சில பறவைகள்!

Sunday, May 22, 2011

எங்கே இருப்பாய் நீ?

நெடு நாளாயிற்று எனக்கு இப்படியிருந்து,வேடு கட்டிய தலையும் தூசிக்கு பதில் மரியாதையாய் தும்மியபடியும் சுறுசுறுப்பாய் இயங்கி...அந்த இருட்டு அறைக்குள் கரப்பான் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் அலட்சியம் செய்தபடி தேடிக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு மரப்பெட்டியாக! பரபரவென தேடுவதும் கண்டடையாத ஆற்றாமையில் உதடு சுழிப்பதுமாய்...

அம்மாவுக்கு ஆச்சர்யம். வந்ததும் அசதியா இருக்கென நத்தையாய் சுருங்கி கொள்பவள். என்ன முக்கியமானதுனாலும் தூங்கி எழுந்தபின் பேசலாமென்று கத்தரித்து போய்விடும் மகள்,ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக எதை தேடுகிறாள்?

தாத்தா எப்போதோ மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் வாங்கித் தந்த மரச்சொப்பு சாமான்களுடன் வந்ததாய் நினைவு. முத்துவும் மேரியும் இது குறித்து சண்டை போட்டது கூட இன்னும் அப்படியே. தம்பி ஒரு நாள் விளையாட்டாய் அரிவாள் கொண்டு பின்னமாக்கியதாய்..இன்னும் இன்னும் வரலாற்று முக்கியம் வாய்ந்த நிறைய போர்கள் ’அது’ யாருக்கு உரிமை என்கிற கேள்விக்கு பதிலாய்.

சட்டென ஏதோ உடம்பில் ஊர்வது கண்டு திடுக்கிட்டபடி,பழைய நினைவுகளை ஒழுங்குபடுத்தி ஞாபகங்களை தூசி தட்ட, அதன் இருப்பிடம் புலப்பட்டது.அந்த சுவரோரத்தில் இருக்கும் கள்ளி மரப்பெட்டிக்குள்ள தான் இருக்கணும். துருப்பிடித்த ஜாமெண்டரி பாக்ஸ், மை உறைந்தும் கூர் ஒடிந்தும் கிடக்கும் பேனாக்கள்,எலி கடித்தது போக இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் வலைகளோடு பிடி உடைந்த டென்னிஸ் பேட்,சுருட்டி வைத்த ஸ்க்கிப்பிங் கயிறு இத்யாதி இத்யாதி..ம்ம்.இங்க தான் எங்கோ இருக்கணும்.விழிகள் பளிச்சிட, அதோ அதோ அதே தான்.

ஒரு கை உடைந்த மரப்பாச்சி பொம்மை

கண்ணில் நீர் துளிர்க்க தூசு தட்டி முத்தமிட்டவள்,குழந்தையாதல் சாத்தியமல்லாத இயந்திர பொழுதுகளில் தன்னிலிருந்து தன்னையே மீட்டெடுக்க பத்திரப்படுத்தினேன் பெட்டிக்குள்.Thursday, April 28, 2011

அவள் அவன்

பழகிய நாய்க்குட்டியை
வருடும் தொணியில்
பயணிக்கின்றன உன் கண்கள்
என்மேனி முழுதும்...

முகம் மறைக்கும் கார்குழலை
ஒதுக்கும் பாவனையில்
முகமெங்கும் உரசிச் செல்கிறது
உன் விரல் ஒரு
தேர்ந்த வினைஞனின்
லாவகத்தோடு...

ஆசையாய் சாய்ந்திருந்த
வன்தோள்களில் என்னிதழ்
பட்டுப்பட்டு அறுந்து போனது
நம்மைப் பிரித்திருந்த
கர்வமெனும் கண்ணாடியிழை!

அரைக்கிறக்கத்தில் உளரல்களுக்கு
வழிமொழிகிறது என் ஆன்மா
சுய தெளிவில்லாமல்...

இதுவரை கொண்டிருந்த
விரகத்தின் வடிகாலாய்
சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னிதழும் என்னிதழும்...
ஒன்றையொன்று வெல்லத்துடிக்கும்
மற்போரின் நீட்சியாய்!

பேரூந்தின் திடீரென்ற குலுக்கலில்
தூக்கம் தெளிந்து ஆசைமுகம் நோக்க
இரு கொம்புகளுடன் கோரப்பற்களில்
சொட்டும் குருதியுடன் அகோரமாய்...
வறண்ட குதூகலத்தினோடு
வழக்கமான நீ!


Saturday, April 9, 2011

நிறுவுக நியதி குற்றமென்று!
எப்போதும் ஒருகோட்டில்
அடங்குதலில் உவப்பில்லை
திசைமாறி திசைமாற்றி
அறிவன அத்தனையும்
அறிந்துவர உத்தேசம்
நைந்த சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!

செய்யாதே எனபதை செய்யெனவும்
செய்யென்பதை செய்யாதேயெனவும்
செவியுறுகின்றன எம்புலன்கள்!

பட்டாம்பூச்சிகள் மீதே கவனம்
ஒரு நாளின் சமபங்கை மனம்
திக்கின்றி அலைதலில் செலவிடுகிறது!
ஆற்றுப்படுத்த வேண்டாமென்பது
ஆறாம் அறிவுக்கு தற்போதைய கட்டளை!

ஒழுங்கற்று இருத்தலின் பயன்யாதென
கற்பித்துப் போனாள் கீழ்வீட்டுச்சிறுமி
அழுகையை காட்டிலும் அலங்கோலமாக்கல்
அத்தனை பிடித்தது எனக்கு!

சற்று நேரத்திலெல்லாம்
என்னறையின் அமைதியை
மழலையால் கிழித்துப் போட்டவள்
பிஞ்சு விரல்களின் மந்திரத்தால்
மாயங்கள் செய்யத்துவங்கினாள்.

சிதறித் தெளித்திருந்த திரவங்களிலெல்லாம்
வான்கோவும் வர்மாவும் தெரியத் துவங்கி
கிழித்தெறிந்த புத்தகங்களிலெல்லாம்
பைரனும் பாரதியும்
போதாதென்று புத்தன் வேறு
பொறுப்பாய் வந்து சொல்லிப் போனான்
வாழ்வென்பது இது தானென்று!

நானொரு பறவை போலே
உருமாறும் தருணம்
‘அம்மா’ நினைவு வர
அவசரமாய் ஓடி மறைந்தாள்.

படியிறக்கிப் போனபின்
வெறிச்சென்றானது
என் வீடும்
அவள் வாசம் படர்ந்த
என் மனதும்!

ஆனால் இப்போதும்
கண்கொள்ளாக் கனவுகளுடன்
காலச்சக்கரத்தில்
நைந்தயென் மென்சிறகுகள்
உருப்பெற காத்திருக்கிறேன்!


Wednesday, March 30, 2011

சிதிலமான நினைவுகள்


நத்தையின் ஓடு போல
இலகுவாய் இயல்பாய்
தசையொற்றி கிடக்கிறது
என் பெண்மை!

வேண்டியமட்டும் இறுக
போர்த்திக் கொண்டிருக்கிறேன்
தன்மானத்தை ஆடையாய்!

அன்பே என்றவனும்
அழகே என்றவனும்
அக்கா என்றவனும்
அம்மா என்றவனும்
தோழி என்றவனும்

ஏதொவொரு பொழுதில்
எப்போதோ எதற்காகவோ
என்னை அழச் செய்தவர்கள்தாம்!

காதலைத் தந்தவனைத் தவிர
எல்லோரயும் விலக்கித் தான்
வைக்கிறது மனசு
வெறுப்பின் மிகுதியில்!

சூடாத கிரீடமென்றாலும்
நிலைக்காத பட்டமென்றாலும்
அவனுலகோடு பங்கிடவழைத்ததின்
நன்றி நவிலலாய் இருக்கக்கூடும்

எப்போதும் என்றில்லை
எப்போதாவது...
இணையைப் பிரிந்து வருந்தியழைக்கும்
பேடையின் கதறலை செவியுறும்
அக்கணம் மட்டும்

நானிழந்த அவனுக்காய்
நானில்லாத அவனோடு
மௌனமொழி பேசி
முற்றாக
விழியோரம் இருதுளி!

Tuesday, February 1, 2011

ஒரு நதிபாடும் பறவையொன்றின்
குரல்வளை கிழித்த அம்பு
வேடனின் குடிலுக்கு
ஒரு கோப்பைக் கறி 
இரு அகப்பை குருதி
மாமிசமணத்தோடு பரிமாறிய
ருசியான உணவாகியிருக்கலாம்.


தொலைநோக்கி குறிபார்த்து
வில்வளைத்தவன் வீரம்
உயிரொன்றை அம்பெய்து
தனதாக்கிய ஆளுமை
எல்லாம் சரி,

மரிக்குமுன்னிருந்த இன்னிசையும்
கானப் பறவையதன்
இசை நவின்ற குதூகலமும்
கொடும் வேடனின் நாவறியுமா?
இல்லை
அதனுயிர் தொட்டுப் பிரித்த
வில்லம்பறியுமா?

**************

ஓடுவதில் களைத்த நதியொன்றின்
பயணம்
போதுமென்ற புள்ளியில்
ஆழ்துளையிறக்கி தன்னிருத்தலை
பதிவு செய்கிறது.

ஊறிப்போதலினுள் உவப்பெய்தா
அந்நதியோ
பயணத்தில் லயித்து
தேக்கி வைத்த
புள்ளிகளுக்கிடையில்
தொடர்ந்தபடியிருக்கிறது
வாய்க்கால் வாயிலாக...


வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!