Wednesday, May 26, 2010

காவியமானவன் நீ!

"என்ன இது? இப்படிப் பார்க்கிறாய்?”

“காதலெனக்கு உன் மீது”

“என்னிடமா?என்னிடம் மட்டுமா?”

“உன்னிடம் அதிகம்?”

“ஏன் அப்படி?

“சில நேரம் நீ மட்டும் இருந்தால் போதுமெனத் தோன்றும்.உலகை வெல்லும் தைரியம் பிறக்கும்.”

“ம்ம்ம்! குருட்டு தைரியம்.உலகில் எத்தனையோ இருக்க, என் மீது மட்டும் ஏன்?”

“அது அப்படித்தான்... ஏன் என்று தெரியவில்லை....”

சில மணித்துளி மௌனம்.

“என்னை நிச்சயம் இருவருக்கு பிடிக்கும். அந்த இருவருமே புறக்காரணிகளை களையெடுக்க நினைப்பவர்கள்.ஒருவன் வீரன், மற்றொருவன் என் தயவில் தன்னை மறைக்கும்/மறக்கும் கோழை. இதில் நீ யார்?”

“போராளி!”

”ஓ!எதைக் குறித்துன் போராட்டம்?”

“ஆதிக்கமும் அடக்குமுறையுமில்லாச் சமுதாயம் வேண்டி ...”

“வெல்வாயா?”

“சத்தியம். துணையாய் நீ என்னுடனிருந்தால்........”

“சம்மதமெனக்கு”

“மகிழ்ச்சி.... மற்றுமொன்று..... உனக்குப்  பிடித்தால்.........”

”பிடித்தால்......?”

“உன்னை முத்தமிடவா ஒருமுறை?”

“என்ன......?என்ன கேட்டாய்? பயமில்லையா உனக்கு? எத்தனை துணிச்சல்? நான் முகம் திருப்பிக் கொண்டால் என்னவாகும் தெரியுமா?”

”தெரியும் தெரியும்! சத்தத்திற்கு பதில் இரத்தம்....போராளி நான்! இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா?”

“முட்டாளே! உன் கை பிடிக்குள் திமிர முடியாமல் இருக்கிறேன் நான்! சம்மதம் கேட்கிறாய் நீ!”

”இசையாத மனதை அசைப்பது கடினம்!சம்மதமா சொல்....”

“நீ வீரன் மட்டுமல்ல! பண்பாளனும் கூட.. ஒருமுறை என்ன? ஆயிரமுறை முத்தமிட்டுக் கொள் என்னை!”


ஒரு வீரனுடன் கூர்வாள் காதல் பேசியதாம் இப்படி.....


************

Friday, May 21, 2010

நெஞ்சுரம்

இலக்கியம் பேசலாம் வாங்க நண்பர்களே!

இந்த இலக்கியப் பாதையில் சந்தோசமா பயணிக்கிற நேரத்துல ஒரு சின்ன வருத்தம்.பகிர வேண்டியதன் அவசியம் இருப்பதாலே இதைச் சொல்லுகிறேன் இங்கே! இலக்கியம் பத்தி பேசணும்னா உனக்கு குறுந்தொகை தான் கிடைச்சுதாக்கும்னு ஒரு தோழி அலுத்துக்கிட்டா. அப்படி இல்லீங்க குறுந்தொகை அகப் பொருள் கொண்டதாயினும் காதலை விதவிதமாக கூறும் சிறந்தவகை பகுப்பு என்பதாலயே அதைகுறித்த என் ரசனையின் பார்வையை முதலில் வைத்தேன். மற்றபடி காதலை நேசிப்பது எவ்வாறு பெண்மையை மீறுவதாகும்? உலகில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரே திருட்டு இந்த இதயத் திருட்டு. அதை சொல்லும் விதம், காமமே கருப்பொருளாயினும், அகத்து நிகழும் நிகழ்வெனினும் கவிச்சுவை ததும்பும்படி தமிழால் விரவி, இலைமறை காயாக சொல்லும் ஒவ்வொரு பாட்டும் குறுந்த்கையின் சிறப்பு.போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்... சரி வாங்கப்பா நம்ம விசயத்துக்கு!

எனக்கு மட்டுமில்லைங்க நெறையப் பேருக்கு இந்த குறுந்தொகைப் பாட்டு ரொம்ப பிடிக்கும்.’இருவர்’ பட பாடலில் கூட கவிஞர் அழகாக இந்த வரிகளை எடுத்தாண்டிருப்பார். முதன் முதலில் எங்கள் ஊரில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் கேட்டேன். அந்தவாதி ஆண்மகனின் நெஞ்சுரம் மிகுந்த காதலை இவ்வாறு சொன்னது இன்னும் என் மனதில் பசுமையாக! இதோ எனக்குப் பிடித்த அந்தப் பாடல்,

குறுந்தொகை

பாடியவர் : செம்புலப் பெய்நீரார்

பாடல் :

” யாயும் ஞாயும் யாராகியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெய்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”


எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல்.

காட்சி இப்படி விரிகிறது.
தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அவனை காதலாய் பார்க்கிறாள். காமம் களைந்த பின்னும் உயிர்க்காதல் வடியுமா? வழமையாய் மது சிந்தும் விழியாவும் சந்தேகத்தின் சாயலே நிரம்பிக் கிடக்க அதைச் சகியாதவனாய், அறியாமையை போக்க எண்ணி, அவளை குழந்தையென தோளில் சாய்த்து முகம் வருடி , தலை கோதியபடி இவ்விதம் சொல்கிறான். காதலில் பெண்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதில்லை. உணர்த்த வேண்டிய பொறுப்பு சில சமயம் ஆண்களுக்கு கிடைக்கிறது.அதை இந்த தலைவன் எங்ஙனம் கையாளுகிறான் பாருங்களேன்!

”அன்பே! என் தாயும் உன் தாய் இருவரும் தோழிகளா என்ன? இல்லை அப்படித்தானே. உன் தந்தை யார்? என் தந்தை யார்? இருவருக்கும் முன்பின்
பரிச்சயமுண்டா? இவ்வளவு ஏன் இந்த காதலெனும் வரம் நமக்கு கிட்டும் வரை நீயாரென்பதோ நான் யாரென்பதோ நம்மிருவரின் புத்திக்கும் தெரியாத ஒன்று.எப்போது நீ என் வசமானாய்? காதல் உதித்த போது தானே? ”

ஆமோதிக்கும் வகையினில் அவள் தலையசைப்பைக் கண்டவன் மேலும் பேசத் துணிகிறான். ஆரத்தழுவியிருந்தவள் மேனியில் ஒரு தேர்ந்த வினைஞனை போல அவனின் விரல்கள் பயணிக்கிறது.காதலில் மயங்கிக் கிடந்தாலும் அவன் கருத்துக்கு செவி சாய்க்கிறாள் தலைவி.அவனும் மெல்ல மயங்கிச் சொல்கிறான் இப்படியாக,

”ஏன் காதல் வந்தது தெரியுமா? இது பிறப்பின் பந்தம். ஆகையினாலே நம்மிடையே காதல் தோன்றிற்று.செம்மண் நிலத்தில் நீர் விழுந்தால் என்னவாகும்? மண்ணும் நீரும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகிப் போகும்.அப்படிப் பட்டது தான் நம் காதல்.ஒன்றான பின்னே அதற்குப் பிரிவென்பதே இல்லை. என் நேசத்திற்குரியவளே! இதை நீ மனதில் கொள்வாயாக!கவலை வேண்டாம்” என்று கூறி முடிக்கிறான்.

தலைவனின் பதிலில் - உறுதியில் தெளிவுற்ற தலைவி மகிழ்ச்சியுற்று அவன் காதலில் திளைத்ததாய்க் கொள்வீராக!


....மீண்டும் வருவேன்!

அரவமற்ற இரவுகள்


வெளிச்சம் தீர்ந்த நல்லிரவொன்றில்
சட்டெனப் பூத்தன விண்மீன்கள்
தத்தம் இருப்பினைத் தெளிந்து
சேர்ந்தன இரவு பட்சிகள்!

தாழ்வாரத்தின் மூலையில்
பஞ்சாரத்து அடைக்கோழி
சிணுங்கலோடு முட்டைகளை
சேர்த்தணைத்துக் கொண்டது!

நீர்த்துப் போன கனவுகளின் பிம்பம்
கண்களை விட்டு எம்பப் பார்த்ததும்
என்றைக்கோ வழியவிட்ட கண்ணீரை
இன்றைக்குத் துடைத்துக் கொண்டன
கைகள் அனிச்சையாய்!

சலசலக்கும் தென்னை ஓலைகளில்
சீறிப் பாய்ந்தடங்கும் வண்டின் ரீங்காரம்
பூக்களைக் கிழித்துத் தேனுண்ட மயக்கம்!

கடிகாரமுட்கள் சங்கமித்தும் பின்
சத்தமிட்டும் கனவைக் கலைத்தன
அன்று அம்மாவாசை என்பதறியாமல்....
சூரியபிம்பத்தின் வரவுக்காய்
முற்றத்தில் சலனமற்றுக் காத்திருந்தேன்
ஒரு நிலவொளியின் பரவல்
அடர் இருட்டை விழுங்கி
வெளிச்சம் உமிழ்வதைக் கண்ணுற!


Wednesday, May 19, 2010

காதல் மழை ஏந்திழை

வசீகரிக்கப்பட்ட வார்த்தைகளெல்லாம்
வரவு வைத்திருக்கிறேன் நாட்குறிப்பில்!
நீ எதிரில் நிற்கையில் மௌனம் மட்டுமே
சாத்தியமாகிறது என்ன செய்ய?

***************************
குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்துப் போனது மழை!
காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்கச் சாம்பலானது
நாகரிக முகமூடி!

***************************

தோட்டத்துப் பூக்கள்
மழையில் குளித்தன
காய்ச்சல் வந்ததெனக்கு
என் பார்வையில்
அவையெல்லாம் நீயானதால்!

***************************

பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்
மனதில் வந்து போகிறதுன் முகம்
சபிக்கிறேன் மின்னலை
சற்று நீடித்தாலென்னவென்று?

***************************

உன் இதழ்களை கவனித்தவாறே
உரையாடுகிறேன் இப்போதெல்லாம்
உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது
எனக்கான காதல் உதிராதாவென்று?

***************************

நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில்
நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம்
சொல்லாமல் சொல்லிப் போனது
நம் கண(ன)ம் பொருந்திய காதலை!

***************************

ஆழியில் வசிக்கும் சிப்பியானது
வானிலிருந்து மழைத்துளியொன்றை
உள்வாங்கி முத்தாக்குமாம்!
நீ தந்த முத்தமும் அதுபோலவே
வெட்கத்தைத் தின்று நம்முள்
காதலை கருவாக்கியது!

***************************


கிளி கொண்ட கிறக்கம்

வாங்க நண்பர்களே! நாமும் இலக்கியம் பேசுவோம். படைக்கத்தான் அத்தனை திறமை எனக்கில்லை.ஆயினும் தமிழில் ரசிக்க இன்னமும் ஆர்வம் நிரம்பிக் கிடக்கிறது. அப்படி ரசித்தவையில் இதுவும் ஒன்று. பிழையிருந்தால் மன்னிக்க! பிடித்திருந்தால் சொல்லுங்கள் ஒரு சில வரிகள் எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக!


குறுந்தொகை - பாடியவர் : கபிலர்

பாடல் :

சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடுச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி,’அவள் விளி’ என,விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே,சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தன் துளிக்கு ஏற்ற மலர் போன் றவ்வே.

குறவஞ்சி ஒருத்தி, தன் தினைப்புனத்தில் காவல் காக்கிறாள்.ஆயலோட்ட ஏதுவாக பரண் ஒன்றும் இருக்கிறது.தினையின் சுவையில் ஊறித் திளைத்த கிளிக்கூட்டமொன்று வரக் கண்டு, பரண் மீதேறி அக்கூட்டத்தினை விரட்டும் பொருட்டு மூங்கிலால் ஆன வீணை போன்ற அமைப்பு கொண்ட கருவியை சுழற்றி,இரைச்சல் ஏற்படுத்தி கிளிகளை விரட்டுகிறாள். மிரட்டும் பாவனையில் பாடலொன்றும் இசைக்கிறாள்.

மூங்கில் தெறித்த சத்தமும் அவள் இனிய சாரீரமும் சேர்ந்து அத்தனை கிளிகளையும் சொக்க வைத்துவிட்டது. இனிமையான மனம் கொண்ட வஞ்சிக்கு வாகாய் குரலும் அமைந்ததில் வியப்பென்ன? அது எப்படி மிரட்சி தரும்?கவர்ச்சியல்லவா கேட்பவர்க்கு அவள் மேல் உண்டாகும்? அன்பும் இனிமையும் கரைபுரளும் அவளின் பண்ணில் மெய்மறந்தது கிள்ளை பட்டாளம்.

கொண்ட காரியமோ கிளிகளை துரத்துவது.தன் முயற்சியின் மேன்மையை உணர கிளிகளின் இருப்பை பரிசோதிக்கிறாள். அத்தனையும் அப்படியே அங்கேயே சொக்கிக்க்கிடக்க, இத்தனை முயன்றும் தன் காரியம் பலிக்காத வருத்தத்தில் பொங்கி அழுகிறாள் நங்கை நல்லாள்.அப்படி அழும் போது அவளின் கருவிழிகளின் அழகை படிப்பவர் உள்ளம் அவள் மேல் காதல் கொள்ளும்படியாக இவ்விதம் மொழிகிறார் பாரியின் தோழர் கபிலர்.

குறிஞ்சி நிலம் - மலையும் மலை சார்ந்த பகுதியும். சுனைகள் நிரம்பிய பகுதி நீரவளமிகுத்து பசுமையாக விளங்கும். அப்பகுதியில் பூக்கும் குவளை மலர்கள் செழுமையும் பொலிவும் கொண்டனவாக விளங்கும்.அப்பேற்பட்ட குவளை மலரானது தன் பூவிதழ் மீது மழைத்துளிகளை தாங்கினாற் போல் இருந்ததாம் வஞ்சியவள் கண்களின் நீர்கோர்த்த காட்சி. மலர் தாங்கிய நீரின் அழகை,அதன் பரவலை கவியாய் மொழி்யாது போனாலும்  நம் கண்முன்னே அந்தக் காட்சியை கொண்டு வந்து, அதனோடு ஒரு பெண்ணின் விழிகளை ஒப்புமை படுத்தும் கவிஞரின் கவித்திறன் சொல்லிலடங்கா சுவை படைத்தது.என்னே கபிலரின் ரசனை?

--- மீண்டும் வருவேன்

Tuesday, May 18, 2010

வாளோடு வா
என் இனிய எதிரியே!
புறமுதுகில் எழுதப்பட்ட
உன் நாவின் வீச்சுகளுக்கு
தீரமாய் வாள்முனையில்
பதில் தருகிறேன்
வா போரிடலாம்

பெண்ணெனும் பரிதாபம் வேண்டாம்
உன் போர் தந்திரங்களை விடவும்
இந்த இளக்காரப் பார்வை
இன்னும் இம்சிக்கும் என்னை...

உன்னால் தாக்குறவும்
பதிலாய் தாக்கவும்
என் புயங்களுக்கு
பயிற்றுவித்திருக்கிறேன்
தினவேறிய நெஞ்சமுண்டு
துளியும் பயமில்லை

வில்லம்போடு வா!
கேடயங்கள் என்னிடமுண்டு
சொரியும் அம்புகளெல்லாம்
சொற்ப காயங்களோடு
மண்ணில் விழும்
நிச்சயம்

என்னை வெல்ல
காதலெனும் ஆயுதம்
ஒன்றை தவிர
எதுவாகிலும் சரி...

என் தலை கவிழ்க்க
கூரான வாட்களே போதும்...
மலர் மாலைகள் வேண்டாம்
என்னிலம் ஆள
ஆண்மை என்பதின்
அர்த்தம் புரிந்தவன் போதும்
பேடிகள் வேண்டாம்

உலகின் அதிசயப் பெண் நான்
யுத்தமும் ரத்தமும்
குற்றமெனச் சொல்லிக் கொண்டே
என் பாதைகளை சிலரின்
தலைகள் கொண்டு செப்பணிடுகிறேன்
துரோகம் பாதித்த மனத்துக்கு
மயிலிறகு ஒத்தடமாய்!

வாளோடு வா!
நீயா நானா
வெல்வது யார்?
மடிவது யார்?
தெரியும் அப்போது...

மறந்தும் மலரோடு வராதே
அவை என் பலவீனம்

Friday, May 14, 2010

சிந்தனை செய் மனமே!

எத்தனை முறை கைக்கடிகாரத்தை திருப்பித் திருப்பி பார்ப்பது? எண்ண ஓட்டம் அழுதபடி விடை கொடுத்த அம்மாவுடன் பயணிக்கத் தொடங்கியது. என்னாச்சு அம்மாவுக்கு?

இப்பல்லாம் அழறதே வாடிக்கையா இருக்கு.வயதின் வாட்டம் அவளை இப்படி நிதானமிழக்கச் செய்திருக்கலாம். கூடவே மன நிம்மதியிழந்த அவளின் ஆற்றாமையும்!

புரியாமலில்லை.பதிலாய் கனமான அமைதியை தந்துவிட்டு நகர்வது என்றாகிவிட்டது இப்போதெல்லாம்.

”சுமி! தெரியுமா? என் பாட்டியவிட என் அம்மாக்கு தான் எல்லாந் தெரியும். மெட்டில்டா மிஸ் குடுத்த எல்லா அல்ஜீப்ராவும் என் அம்மா தான் போட்டுத் தந்தாங்க.” அடுத்த வீட்டு பெண்ணிடம் அறிவாளி அம்மாவை விளம்பரப்படுத்திய போது கேலியாய் சிரித்த அம்மா.

”அம்மா! இவ்ளோ நல்லா பாடுறீங்களே ஏன்மா பாட்டுக் கத்துக்கல?” பதிலாய் “என் பாடே பெரிசா போச்சுடி! இதுல தனியா பாட்டா?” நக்கலாய் சொன்ன போதும் கண்ணோரம் துளிர்க்கும் இரு துளிக் கண்ணீர் காட்டிக்கொடுத்து விடும்.

“ஆங்ங் ... என்ன செய்தான் தெரியுமா ஹனுமன்? ராமனின் மீதான பக்தியைக் காட்ட அப்படியே குங்குமம் சாற்றிக் கொண்டு கோமாளியாக வந்தான். எல்லாரும் சிரிக்கையில் அவன் மட்டும் ராமனின் நலத்தில் மட்டும் கவனம் வைத்தபடி பூரண பக்தியை நிரூபித்தான்.” ஆம்.அவள் என் மீதான பாசத்தில் பைத்தியமாய் சுற்றுக் கொண்டிருக்க நான் அவள் பாசம் தெரியாமல் அவளை குறைத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன் பள்ளி நாட்களில்...

“எப்படிம்மா உன்னால இப்படி இருக்க முடியுது? ஒரே புயல் மழை. தம்பி எங்கயோ திருச்சி பக்கத்துல மாட்டிக்கிட்டானாம். நான் என்னடான்னா புலம்பிக்கிட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு..?”

“அதெல்லாம் நல்லபடியா வருவான் பாரு” அலட்சியமாய் சொன்ன அம்மா.நம்பிக்கையின் உச்சம்.

“என்ன பெரிசா சம்பாதிக்கிறான் உன் புருசன். இத்தனை பெரிய குடும்பத்துக்கு நீங்க செய்யுறது மட்டும் தனியா தெரியவா போகுது? தனியா போயிரு இல்ல பிள்ளைங்களோட நம்ம வீட்டுக்கு வந்திடு.” அதட்டலும் அவளின் பரதேசிக்கோலத்தின் கொடுமையிலும் வெகுண்டெழும் தாத்தா , “எல்லாம் சரியாயிடும்பா. கொஞ்ச நாள் தானே இந்த தடவையாவது அவரு மேல வந்திருவாருப்பா!” நம்பிக்கையுடன் தைரியம் தரும் அம்மா.

”என் பொண்டாட்டி மூக்குல ஒரு வைரமூக்குத்தி போட்டா எப்படியிருக்கும்?” பொய்யெனத் தெரிந்தும் பூரித்து போகும் அம்மா. “ஏன்மா அப்பவே ‘நறுக்குன்னு’ ஏதாவது சொல்லுறது தானே?”, “விடுடி. ஆம்பளைங்க வீரம் எல்லாம் முழுசா பொண்டாட்டிக்கிட்ட தான் செல்லும். நாம முட்டாளாவே காட்டிக்கணும் எப்பவும்.அப்பத்தான் வண்டி ஓடும்” சாமர்த்தியமா அது தாம்பத்திய தந்திரமா? புரியாத வயசில் அம்மாவின் அத்தனை செயலிலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளதாய்...

ஓடி ஒடி உழைத்த பயனெல்லாம் என் மூலமாய் திரும்ப பெறுகையில்,கணவன் மகனுக்கு பதிலாய் வயசுப் பெண்ணிடம் எதிர்பார்க்கிறோமே எனக் குற்ற உணர்வில் மயங்கும் அம்மா.

எல்லாவற்றிற்கும் கொள்கை பேசும் சீர்திருத்த வாதி, கட்டிக்கொண்ட பாவத்துக்கு அவரை தாழ்த்தாது தான் தாழ்ந்து எனக்குள் உயர்ந்த அம்மா.

எப்போது கோழையானாள்?

“என் கண் மூடுறதுக்குள்ள ....”

தளர்வாய் கண்ணீர் தாங்கியபடி பலகீனமாய் முனங்கிய போது தெரிந்தது. உடல்வலிமை குறைய குறைய மனவலிமையும் ஒடுங்கி போகிறதென்று.....

”ஏன்மா இதே சொல்லி சொல்லி என்ன படுத்தறீங்க! ஊருக்கு போறப்போ நிம்மதியா போக விடுங்க”

”யாரு இருந்தாலும் நீ இல்லாத வெறுமை எனக்கு மட்டும் தாண்டி தெரியுது. முன்ன மாதிரி இல்லடா அம்மாக்கு. கஷ்டமா இருக்கு. பல சமயம் வெந்நீர் வச்சுத் தரக் கூட யாருமில்ல.”

”சரிம்மா! நான் இங்கயே இருந்தா எப்படி முடியும்.அதுக்கா எல்லாரையும் எதிர்த்திட்டு படிச்சேன் வேலை செய்யுறேன்.”

“இல்லடாம்மா நான் என்ன சொல்லுறேன்னா...”

“சாப்பிட்டு தூங்குங்க நான் காலையில சீக்கிரம் கிளம்பிடுவேன்.பேசுறேன் அங்க போயி”


************

சன்னலோர இருக்கையில் தலை சாய்த்தபடி கடந்தவைகளை துணைக்கழைத்தேன்.

நவம்பர் 24,2009. மாலை 5:30 மணி.

“எப்படிம்மா இருக்க?”

“நான் அப்புறம் பேசுறேன்மா.”

நவம்பர் 25,2009.காலை 9:30 மணி.

“எப்படிம்மா இருக்க?உங்கிட்ட”

“என்ன்ம்மா ? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.வைங்க அப்புறம் பேசுறேன்”

நவம்பர் 25,2009.மாலை 7:30 மணி.

”இப்பவாவது பேசலாமாடீ?”

“சொல்லுங்க! என்ன விசயம்?”

“அப்படியே ஏதாவது கோவிலுக்கு போ!”

“ஏன்?”

“நான் இங்க உம் பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டேன். நீ சும்மா சாமி மட்டும் கும்பிட்டா போதும்”

“ஏன்னு சொல்லாம சும்மா தொணத்தொணன்னு...”

“இன்னிக்கு பிறந்த நாளுடீ உனக்கு!அத சொல்ல இரண்டு நாளா பாக்குறேன் கடிச்சிட்டே இருக்க..”

”ம்ம்... சரி சரி.. போறேன் போறேன்” வீராப்பு குறையாமல் .... ஆனால் என்னை நினைக்க இந்த நாளில் நீ இருக்கிறாய் என்கிற தெம்பில் கும்மாளமிட்டது மனது.

அந்த நம்பிக்கையும் இப்போது ஆட்டம் கண்டதில்...

பதினைந்து நாள் கழித்து அவளை பார்த்த போது இன்னும் உள்ளுக்குள் உறுத்தியது.

அவள் நலமாக வேண்டும் என்கிற வேண்டுதலோடு நித்தமும் அலுவலகம் விடுதி என்கிற ஒட்டாத வாழ்க்கை.ஒப்புக்கு சிரித்தும் உள்ளுக்குள் மருகும் நரக வாழ்க்கை.

என்ன செய்வது? விதி அப்படி.நானாய் போட்டுக் கொண்ட கடமை அரிதாரம் அப்படி.


*************


“ஏண்டா அழற? குமாரு அழாதடா.”

“இல்லம்மா உன்ன விட்டுட்டு வெளி நாட்டுக்கு போயெல்லாம் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறேன். உனக்கே முடியல. எதாச்சும்னா சட்டுன்னு வர முடியுமா என்னால?என்ன சம்பாதிச்சி என்ன...”

“விடுடா! எல்லாஞ் சரியாயிடும்.என்ன என் கண் மூடுறதுக்குள்ள உனக்குன்னு ஒரு வாழ்க்கை... அய்ய ஆம்பளப் புள்ள இப்படியா அழறது?கண்ணத் தொடச்சிக்க.கடுதாசி போடு. வண்டி கெளம்புது பாரு!”

திடமான அம்மா அவள் மகனுக்கு தைரியம் சொன்னாள்.

விந்தி விந்தி நடந்தபடி என்னைத் தாண்டிப் போனார் அவர்.

இறங்கி நடந்தேன் என் அம்மாவுக்கு தாயாக வீடு நோக்கி...


வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!