Friday, April 26, 2013

எரிந்தது வீடு மட்டுமல்ல மிருகங்களே!

’வெந்து கடல் கொதித்தால் விளாவ தண்ணீருண்டோ?’ - பொன். செல்வகணபதி. நல்லாயிருக்குல்ல இந்த வரிகள். அதான் கடன் வாங்கிக்கிட்டேன்.

சொல்ல வந்த விசயம் வேற.

இந்தியாவில் 166 மில்லியன் தலித்துகள் உள்ளனராம். விக்கி சொல்லுது... உண்மையில் அதற்கும் மேலான எண்ணிக்கையில் இருக்கக்கூடும். இவங்கல்ல எத்தனை பேர் அடிமையாய் இல்லாமல் சுதந்திரமாய் வாழ்கிறார்கள்? எத்தனை பேர் உயிர் பயமில்லாமல் வாழ்கிறார்கள். உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பற்ற 166 மில்லியன் மக்களின் கவலையும் நிலையற்ற வாழ்வாதாரமும் ...இத்தனை பேரைக் குறிவைத்துக் கட்டமைக்கப்படும் அரசியலும் அவர்களை அடக்கியாண்டு ரத்தம் உறிஞ்சும் ஆதிக்க சக்திகளும் தான் எத்தனை எத்தனை? தலித் என்பவன் மதத்தால் இனத்தால் மட்டுமா ஒடுக்கப்படுகிறான்? மனித நேயமற்ற சைக்கோக்களால் அடிமைப்படுத்தப்படுகிறான்.ஒன்றுமில்லை, இதோ இங்கே, முகநூலில் தலித் என்கிற பதத்துக்கு கிடைக்கும் மோசமான அங்கீகாரமும் அவதூறுகளும் தான் சாட்சி உண்மையில் எத்தனை கொடூரமான மனப்பிறழ்வாளர்களுக்கு மத்தியில் ஒரு சாதாரணன் காலம் தள்ள வேண்டியிருக்கிறதென்பது ? வலியோடான வருத்தமில்லையா?

தமிழகத்திலோ, அரசியல் கபட நாடகத்தில் எல்லாக் காலமும் இந்த ஆதித் தமிழன் ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறான். அவரவர் பதவி வகிக்க நாங்கள் மிதிபடுகிறோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எரிவது எங்கள் குடிசைகளாக மட்டுமே இருக்கிறது.ஆண்டாண்டு காலமாய் அடங்கிக் கிடந்தவன் அடித்தவனை முறைத்துப் பார்த்தால் வந்துவிடுகிறது கோபமும் குரோதமும்.

மேடை போட்டு சாதி வெறியூட்டி மிருகம் வளர்க்கும் மேதகு பெருந்தகைகளை அரசு சிவப்புக் கம்பளங்களில் வரவேற்றுச் சிறப்பிக்கிறது. இன்று வீராப்பு பேசியவர்கள் அரசியல் சதுரங்கத்தில் எங்கேனும் நகர்த்தப்படலாம். கூட்டணி தர்மத்தில் எப்போதும் உவப்பில்லை.

எப்போதும் அடங்கியே இருக்க பணிக்கப்பட்டவர்களென்று நம்ப வைத்து, அவருக்கெதிராய் கொம்பு சீவும் பிரயத்னங்களில சிலர். மாடுகளைப் போல சுவாதீனமிற்றி ஏவப்படுகிறார்கள் தற்சிந்தனை மறந்தவர்கள்.எரிந்தது வீடென்றால் வீடு மட்டுமா என்றொரு வாக்கியத்தை ஆதவனின் பதிவொன்றில் படித்தேன். எத்தனை உண்மை வீடென்றால் வீடு மட்டுமா? ஓலைக்குடிசையாயினும் சாணி மொழுகிய தரையாயினும் எத்தனை நினைவுகளைச் சுமந்திருக்கும். காரை பெயர்ந்த சுவர்களிலெல்லாம் நிச்சயம் நூறு கதையிருக்கும். இயற்கை விழுங்கியது போக, வறுமை விழுங்கியது போக, காலம் பலவற்றை கடந்த பின்னும் மிஞ்சியிருக்கும் வாழ்கையை, நேற்றைய நினைவுகளோடான ஒட்டுறவை கொளுத்திப் போட மிஞ்சிப்போனால் ஒரு நொடி ஆகியிருக்குமா? எரிந்தது வீடு மட்டுமல்ல மிருகங்களே... எரிந்தது வீடு மட்டுமல்ல.

எல்லாமும் பெரும்பான்மையென்கிற ஜனநாயக கலாச்சாரத்தில்,

கொத்துக் கொத்தாய் செத்து விழுபவன் தலித் என்றால்...
கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கருகிப் போனவள் தலித் என்றால்...
வன்புணர்வுகளுக்கு ஆளாக்கப்பட்டு மரித்துப் போன சிறுமி தலித் என்றால்...
வருத்தங்களும் நிவாரணங்களும் வார்த்தையாகவும் செய்திகளாகவும் மட்டுமே... மறுக்க முடியுமா உங்களால்??

தலைமறைவான நடிகைக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் கூட ஆதிக்கவெறி கொன்று போட்ட தலித் இளைஞனுக்கு தருவதில்லை ஊடகங்கள். இத்தனைக்கும் அவன் அவன் குடும்பத்தின் ஒற்றை ஜீவநாடி என்கிற போதும்! தலித் பற்றின செய்திகளுக்கு ஆயுட்காலம் எத்தனையென்று நினைக்கிறீர்கள்? அதெல்லாம் சொல்லி முடியாது இந்தப் பதிவு. எத்தனை புறக்கணிப்புகளும் ஒதுக்குதல்களும்...துவண்டும் துளிரும் செடி போலத் தான் தலித் என்பவனின் வாழ்க்கை. மரமாகி கனி தர எம்சமூகம் எப்போது தலைப்படும்?

உயிருக்கு சாதிச் சாயம் பூசி, ஒரு கொலையை எப்படி நியாயப்படுத்துவாய்.கொலை எப்போதும் கொலைதான். புனிதப் போரே ஆனாலும் சிந்தப்படுவது ரத்தம் தானே? நாளை பாருங்கள். எல்லாம் மறைந்து விடும். அந்த ஏழைத் தாய் வாழ்க்கையில் பிடிமானம் ஏதுமின்றி வயோதிக காலத்திலும் கூலிக்கு மண் சுமந்து திரிவாள். மறக்கப்பட்டு விடும் ஒரு ஏழையின் கண்ணீர். நிறையப் பெண்களை இப்படி ஆதரவில்லாமல் தனித்துப் புலம்பி பார்த்திருக்கிறேன். உன் உரிமையைப் பறிப்பவன் தலித் அல்ல... அவன் வாழ்வுரிமையை பறித்து அவனை நாயை விடவும் கேவலமாக நடத்தும் உன்னிடமிருந்து தப்பிப் பிழைக்க அரசு தரும் அங்கீகாரம் அது. ஆண்ட பரம்பரைகள் இனி எப்போதும் ஆளப் போவதில்லை. மன்னர்களும் ஜமின்தார்களும் மக்களில் ஒருவராகிப் போன கதை புரியாமல் ஆண்டபரம்பரையாம்... தனி நாடாம்.. செம காமெடி. இந்தியா ஜனநாயக நாடு.(ம்ம்.. இதுவும் தான் காமெடி).ஊழல் அரசியலில் நீங்கள் உலவித் திரியலாம். அடங்கிக் கிடக்கும் பெரும்பான்யானவர்கள் திருப்பியடித்தால் எமை நோக்கி நீளும் கைகளுக்கு வேலையிராது.

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி தான் என்னோட பாட்டி ஊர். மேலவளவு விவகாரம் நடந்த கொடூரமான நாட்களில் நான் அங்கிருந்தேன். பல குடும்பங்கள் சாதிவெறியால் தங்கள் எதிர்காலத்தை இழந்த அவலம். துடிதுடித்திருக்கிறேன். என்ன பிழை செய்து விட்டார்கள். பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட உரிமை கேட்டதற்கு, அதை தர மறுத்து உயிர்பறித்தார்கள் கொடூரர்கள். அந்தக் கலவரத்தில் என் தோழியின் அப்பா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.அர்த்தசாமத்தில் ’அப்பா’வென வீறிட்டு அழுவாள். என்ன சொல்ல? பட்டு வந்த காயங்கள் இன்னும் ரத்தம் கசிந்தபடிதான் இருக்கிறது. தலித் எனும் சொல் அவமானம் இல்லை. வேதனை. எல்லோருக்குள்ளும் வேதனையின் வலி நிச்சயமிருக்கும்.

சகமனிதனை மனிதனாகப் பார்க்கும் நல்ல மனிதர்களே! உங்களின் மேன்மையான இப்போது உதவி தேவைப்படுகிறது.
மரக்காணத்தில் மிருகமாகிப் போனவர்களுக்கு மனிதத்தைப் புகட்டுங்கள்.
வதைப்பட்டுக் கதறும் எமக்கு எப்படிச் சத்தமில்லாமல் அழவேண்டுமென்று சொல்லிப் போங்கள்.
இரண்டும் சாத்தியமில்லையெனில், மிதிக்கும் கால்களை வெட்டும் வித்தையைக் கற்பித்துவிடுங்கள்.
அஹிம்சா தேசத்தில் அடிமைக்கு மட்டுமேன் ஆயுதங்கள் மறுக்கப்படுகிறது?

கடலென விரிந்து கிடக்கும் சாதிய வன்முறைகள் ஒரு சொட்டு கண்ணீரை வரவழைத்தால், உண்மையில் அவன் தான் மனிதன். அர்த்தமில்லாத அடையாளங்களில்லை மனிதனென்பது.... நேசமுடன் விரியும் சின்னதொரு புன்னகையில் மறைந்து கிடக்கிறது.

பிரச்சினைக்கு முடிவாய் பாகிஸ்தானைப் போல தலித்ஸ்தான் என்கிற முடிவுக்கு அடிகோலும் அதிமேதாவிகளே!
நாங்களில்லாமல் உங்களால் ஆளமுடியாது. நாங்களில்லாமல் ஒரு அணுவும் நகராது. நீங்களெல்லாம் பேசிப் பழகியவர்கள். நாங்கள் களம் கண்டு போராடிக் கொண்டிருக்கிறோம் உங்களின் சுகவாழ்வுக்காக. நாங்களில்லாமல், அதாகப்பட்டது அடிமைகளில்லாது ஆண்டபரம்பரைக்கள் எப்படி பெருமை பேசித் திரிய முடியும்.

சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான் சகிப்புத்தன்மையோடிருக்கப் பழகுங்கள். இல்லையெனில் சுக்கல் சுக்கலாய் சிதறுண்டு போகும் இத்தனை காலம் கட்டி வைத்த ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் அற்புதம்.சுயநலத்துக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு ஒப்பானவர்கள் சரியாக வழிநடத்தத் தவறிய தலைவர்கள்.

இவர்களைப் போலானவர்களைப் பேசவிட்டு வெள்ளோட்டம் பார்க்கும் அரசியலார் அநாகரிகமான அஸ்திவாரத்திற்கு அடிபோடுகிறார்கள் அது மட்டும் நிச்சயம்.

மனிதனாக வாழ முயற்சிப்போம்!

Friday, April 19, 2013

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி

என் டைரி முழுவதும் அடையாளங்களோடு குறிக்கப்பட்ட நாட்கள் தான் நிரம்பி வழிகிறது ஒவ்வொன்றையும் நினைவுக்கு அழைத்துச் செல்கையில், சில நாட்கள் சந்தோசமாகவும்..சில நாட்களைக் கொண்டாடவும்.. சில நாட்களில் யாருக்கோ ஆறுதல் சொல்லவும்..சில நாட்களில் எதற்கோ யாரிடமும் பேசாமல் அழுது மருகவும்... ஏங்கிச் சாகவும்...

ஏப்ரல் பிறந்ததுமே படபடப்போடு அந்த நாளுக்கான காத்திருப்பா எதிர்கொள்ளத் துணியா பயமா...இம்சிக்கும் வேதனையா.. இல்லாத பதிலோடு நகரத்துவங்கும் நாட்கள் காலத்தால் ரணங்களைக் கீறிப் பார்த்தபடி...

வாழ்க்கையில் மறதி என்பது வரமென உணரும் தருணங்களுமுண்டு. வாய்த்ததேயில்லை.

துயரங்களை மூடி மறைத்து சிரித்து மழுப்பிக் கொண்டே வாழ்கிறோம். ஏதோவொரு இழப்பிற்கு வருந்துவது இல்லையெனில் இழந்து விட்ட அந்த உறவை எண்ணி வருந்துவது எல்லாருக்கும் உண்டு. அதிலும் தன்னைமீறி துக்கச் சுமை வெளிப்பட்டு விடக்கூடாதெனும் சுயக்கட்டுகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது மனசு பண்பாட்டின் பேரில்... எல்லாப் பிரிவுக்கும் உயிர்வலிக்கும்.

மறக்கப்பட்டதை நினைப்பதற்கும் மறக்கமுடியாததை மறைப்பதற்கும்  தான் நாட்கள் போலும்... எத்தனை தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. நிதர்சனம். பாழும் மனதெப்போதும் நிதர்சனங்களை ஏற்பதில்லை.

1998 வருடத்தின் கறுப்பு நாள் Apr 19. என் பெரிய தம்பியின் நினைவுநாள். அதிலும் எப்படியான நினைவு அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கடைசிநேரத் தருணங்களை அருகிருந்து பார்த்து அனுபவித்த நாள். அவனுக்கென்ன அன்றோடு முடிந்தேவிட்டது. நினைவுக்குள் அவன் புகும் எல்லாக் கணங்களும் அவஸ்தை தான். வலியில்லா அவஸ்தை. கண்ணீர் மட்டும் தளும்பி வழியும் அனிச்சையாய். என் கூடவே வளர்ந்து வறுமையை பங்கிட்டுக் களித்தவன். நான் வாங்கும் எல்லா பரிசுகளும் அவனுக்கென உரிமை கொண்டாடுபவன். பரிசென்றால் சோப்பு டப்பாக்களும் எவர்சிலவர் தட்டுகளும் அத்தனை பெருமையாயிருக்கும் அவனுக்கு. அந்தச் சிறிய வயதிலும் எனக்கென கனவுகள் வளர்த்துக் கொண்டவன். சுயநலமில்லா அவன் என் முதல் குழந்தை.  தொடங்கும் எல்லா நாளிலும் ஏதாவதொரு சந்தர்பத்தில் பலவீனமாய் துரத்தியும் பாசமாய் அமர்ந்து கொள்ளும் அவன் பற்றிய நினைவுகள் என்னைத் தவிர யாரோடும் பரிச்சயமில்லாத நாய்க்குட்டியைப் போல. வசதிகள் அத்தனையும் உழைத்து பெற்றிருக்கிறேன். உரிமையோடு வாழத்தான் அவனுக்கு கொடுப்பினையில்லை. அதே கற்றையான ரூபாய் நோட்டுகள் கைதொடும் போதெல்லாம் இது அப்போதே கிடைத்திருக்கலாமே என்கிற வருத்தம் பணத்தை வெறுக்கச் செய்கிறது. மொத்தமாய் தந்துவிடுகிறேன் திருப்பித் தரச் சொல்லுங்கள் வறுமைக்கு நான் இழந்தயென் தம்பியை.

உன்னை நினைக்காதே நாளேயில்லை. இந்த நாளில் உன்னைத் தவிர யாரையும் நினைப்பதில்லை.

இளமையில் மரித்தவர்கள் எப்போதும் மூப்பெய்வதில்லை.

எப்போதும் மனதுக்குள் சொல்வது தான்...

துண்டுகளாய் வெட்டப்பட்டும்
காற்றில் உயிர்பெறும்
அதிசய ஜீவியென - உன் பிரிவினில்
உருக்குலைந்த உள்ளத்துக்கு
ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்லி வைத்திருக்கிறேன்

உன்னை மகவெனச் சுமக்கும்
வரம் கைவரும் வரை
’பகிரத்துடித்த பாசத்தையெல்லாம்
பத்திரமாய் வைத்திரு!
என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்கும்!’

Wednesday, April 17, 2013

சிறகுப் புள்ளிக் கோலம்

வளைத்துச் சுருக்கிட்டு நீளும் கம்பிகளுக்கு
நடுவிலொரு புள்ளி
கோடுகளின் முனைகள் இணைக்கப்பட்டு
சிறு பரப்புகளும் அடைபட்டுவிடும்
அதிலும் வர்ணமடித்து வலியை மறைத்துவிடுவேன்
கம்பிக்கோடுகள் நீண்டபடியிருப்பதில்லை
உள்ளுக்குள்ளோ வெளிப்புறமோ
மொத்தமாய் வாலைச் சுருட்டிக் கொள்ளும்
எப்போதும் தனித்து விட்டதில்லை
ஒற்றைப் புள்ளியை...
சேது சமைத்த பெருமிதமெனக்கு
நட்டு வைத்த புள்ளியின் சுதந்திரம் பெரிதில்லை
தன்மேலொரு வடிவம் வரைந்தாலும்
அடையாளம் தொலைத்த
ஓராயிரம் புள்ளிகளுக்காய்
வருந்திய வாசலை இப்போதே கவனித்தேன்
கற்பனைக் கைங்கரியத்தால்
ஒவ்வொரு புள்ளியிலும் பட்டுச் சிறகுகள்
முளைக்கத் துவங்குகின்றன
சன்னமாகக் கேட்கிறதவற்றின்
விடுதலை முழக்கம்

Tuesday, April 16, 2013

கோவேறு கழுதைகள்


எழுபது சவரனிலிருந்த
மாப்பிள்ளையின் விலை
மடமடவெனச் சரிந்து
நாற்பது சவரனைத் தொட்டது
சந்தையில் மலிவாய் கிடைத்த
மாப்பிள்ளைதம் புகழ்பாடிக் குதூகலிக்கிறார்கள்
அத்தையும் அம்மாவும்
வீட்டிலுள்ள ஏனையோர் நிலையுமதுவே
அவமானச் சுமையென்றென்னை
பகிரங்கமாய் அறிவித்திருக்கிறார்கள்

அதிருக்கட்டும்
விலைசரிவுக்கான காரணம் அறிகையில்
தங்கமான மாப்பிள்ளைக்கு
திருமணமாகி கூடவேயொரு குழந்தையுண்டு
நீ இரண்டாம்தாரமென்று சொல்லிப்போயினர்
என்னளவிலது சேவை அவருக்கேன் தட்சணை?
வழக்கமான பயத்தால் வாய் திறக்கவில்லை
தனித்து வாழத் துணிவில்லை
’தாலியால் மட்டும்’ இளப்பமாய்
சிரிக்கிறது மனச்சாட்சி

என்ன செய்வது முன்பொருகாலத்தில்
எதிர்காலமென நினைத்திருந்தவன்
அம்மாவின் சொல்லுக்குள்
பிணையாகிக் கிடக்கிறான்
விழுப்புண்கள் பலநூறு வீரத் தமிழ்மகளாய்
தன்னந்தனியே சமர் புரிந்த வேளையில்
வேசிப் பட்டங்களோடு துடிதுடித்து நான் மடிய
தார்மீக பொறுப்பற்றுக் கிடந்தவனை
இன்னமுமா காதலனென்பது?
ம்ம்ம்ம்... அது முடிந்த கதை
இருப்புக்குத் தக்க இணை தேடி
திருமணச் சந்தையில் முதிர்கன்னியாய்.....

எங்கேனும் இதுபோல் நடவாதென்போர்
எங்கே முன்னே வாருங்கள்!
எல்லாயிடமும் நடந்தபடிதானிருக்கிறது
எள்ளளவும் வெளிக்கசிவதில்லை
நானோர் தைரியசாலி
சொல்லி வைக்கிறேன்
இரகசிய சாட்சியாய் பதிந்து கொள்ளுங்கள்
இருள் விலகும் நல்லதொரு பொழுதில்
இன்னும் ஆயிரம் சாட்சிகள் கிடைக்கக் கூடும்
யார் கண்டது
விலை கொடுத்து விற்றதற்கான தண்டனையாய்
உங்கள் மகளோ சகோதரியோ
உங்களுக்கெதிராய்த் திரும்பக்கூடும்
அன்றேனும் புரிந்து கொள்ளுங்கள்
கோவேறு கழுதைகளுக்கும் குறைந்தபட்ச உணர்வுண்டு

Monday, April 15, 2013

அண்ணலின் ஜெயந்தியும் சித்திரைத் திருநாளும்

இன்றைய நாள் மிகப் பெரும் விவாதங்களுடன் ஆரம்பித்துக் குல்பி ஐஸுடன் முடிவுற்றது.அரிதான விடயம்  சித்திரைத் திருநாள் + ஞாயிற்றுக் கிழமை. இரண்டு மூன்று எலிகள் என் சமையலைச் சாப்பிட்டும் உயிருடன் உலவி கொண்டிருக்கிறது. வாதைகளும் வலியுமின்றிச் செத்துப் போக இரண்டொரு கவிதைகளை மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். வாவ், வரே வாஹ் என்று சொல்லிச் சிலாகித்தார்கள். அடக்கொடுமையே! கைவசம்மிருந்த கவிதைச் சரக்குக் காலியான சமயத்தில் சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. அவர்களுக்குச் சரக்கடிக்கும் பழக்கமிருப்பினும் எனக்கு இல்லையென்பதால் சாப்பாட்டோடு கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

யுகாதிக்குப் பச்சடி ஒன்று செய்வார்கள். மாங்காய்,வெல்லம்,வேப்பம்பூ எல்லாம் சேர்த்து. வாழ்க்கையின் அர்த்தம் இதுவே என்பது கணக்கு. யுகாதிக்கு யார் வீட்டுக்கோ விருந்துக்குப் போயிருக்கும் போல அந்தப் புனே பொண்ணு.தமிழ்ப் புத்தாண்டுல அது போல ஏதுமில்லையா என்றொரு கேள்வியை வைத்தது. தை மாதம் ஒன்றாம் தேதியைத் தான் நாங்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம். விருந்து, சித்திரைத் திருநாளுக்கில்ல அம்பேத்கார் ஜெயந்திக்கென்று சொல்லி வைத்தேன். அருமை அருமையென்று பாராட்டிக் கொண்டே சாப்பிட்டார்கள். அவ்ளோ நல்லாச் சமைக்கிற கயல் நீ!

சரி விசயத்துக்கு வருவோம். வடக்கத்தியர்களில் இந்து மதத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலோர் இந்துத்துவாவின் பிடியில் தான் இன்னும் இருக்கிறார்கள். அதன்படியான மதக்கடமையைச் செய்பவன் மோட்சம் அடைவான் என்றாக அவர்களின் சிறுமூளையில் பதியப் பட்டிருக்கிறது. ஆத்ம ஞானம் என்பது தன்னையறிதல் என்று சொல்ல மிகப்போராட வேண்டியிருந்தது.அவர்கள் வார்த்தைகளைப் பூஜிக்கிறார்கள். அந்தப் பதங்களோடே அதன் அர்த்தம் எதுவென்று தெரியாமல் வாழ்கிறார்கள். வர்ணாசிரமங்களில் மிக மிக ஈடுபாடுடையவர்களாய் இருக்கிறார்கள். குறிப்பாகத் தீண்டாமை என்பது குற்றமென்று தெரிந்தும் அதை மிகவும் சரிவரக்  கடைபிடிக்கிறார்கள். எந்தச் சமூகமும் மறுமலர்ச்சி பெற வேண்டுமெனில் பெண்களிடமிருந்து ஆரம்பியுங்கள் என்ற பெரியார் மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருந்தார் எவருக்கு முதலில் மாற்றம் தேவை என்பதை. பெரும்பாலோர், நான் படிப்பறிவும் பொருளாதாரச் சுதந்திரமும் வாய்க்கப் பெற்ற பெண்களைச் சொல்கிறேன். அவர்களிடமும் அத்தனை தெளிவிருப்பதாகத்  தெரியவில்லை. ஒருவேளை எனக்கு அறிமுகமானவர்களால் அப்படித் தோன்றியிருக்கலாம்.

ம்ம்...வாஜ்பாய் மற்றும் அத்வானியின் ஈழக் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றில் ஆரம்பித்தது பிரச்சினை. அதாங்க அனுமனின் வாரிசுகள். இராமயணத்தின்படி ராவணன் போன்ற கொடிய அரக்கர்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் தான் வாழ்ந்தார்களென்று சொல்லி நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டாள். இதிகாசங்கள் பொய் சொல்லாதென்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.கைலாய மலையைச் சொர்க்கமாகச் சொல்லிச் சிவனை அங்கேயே வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெல்லாம் உலவ விடுங்களென்று கோரிக்கை வைத்தேனா, வந்து விட்டது அவளுக்குக் கோவம். . சைவம்,வைணவமென்ற பிரிவுகள் சமணம்,பௌத்தம் போன்ற சமங்களின் தலைவர்கள் அரசியலில் தலையீட்டதின் தாக்கத்திலிருந்து வெளிவர உதித்ததென்று சொல்ல மெல்ல அமைதியானாள். எல்.கே.ஜி குழந்தைக்குக் கதை சொல்லும் ஆர்வம் வந்துவிட்டது எனக்கு.  மகிஷாசுரன் முதல் மாபலி வரை கணக்கெடுக்க ஆரம்பித்தோம். அரக்கர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேசுவோர் மட்டுமென்ற அவளின் மாபெரும் சந்தேகம் தெளியவைக்கப்பட்டது. நன்றி கூகுளாண்டவர்.
அகத்தியமுனி,தமிழ்ச் சித்தர்கள், தமிழின் தொன்மை,இராசராச சோழன்,வந்தியத்தேவன்,மதுரை மீனாட்சி-சொக்கனாதர் கடைசியாகக் கிராம தெய்வங்கள். நீண்ட உரையாடலுக்குப் பின், வந்தபோதிருந்த சிடுசிடுப்பு மறைந்து சினேகமாகப் புன்னகைக்க ஆரம்பித்தாள்.

நேரம் மாலை ஐந்தை நெருங்கியதும் காபி,டிபனோடு விடைகொடுத்தேன். தமிழனை இவர்கள் புரிந்து கொள்வது ரொம்பத் தான் கஷ்டம் போல. இவர்கள் அதிகம் புழங்காத கஷ்மீரிச் சமுகமும் இதுபோலான தவறான பொதுமைப்படுத்தலில் சிக்கிக் சீரழிகிறதோ? தமிழனாய் கஷ்மீரியின் வலி நிறைந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலும் மதத்தின்/இனத்தின்/மொழியின்/சாதியின் பெயரால் ஒதுக்கப்படுவதின் துயரம் தாளாமல் தானே தீவிரவாதம் முளைக்கிறது. தீவிரவாதத்தை அடக்குமுன் ஏன் அரசு இயந்திரம் இதற்கு அடிபோடும் தவறான அரசியல் தலைவர்களைக் களையெடுக்கக் கூடாது? நேயம் மிகுந்த அற்புதச் சமூகம் எப்போது சாத்தியம்? குழந்தை போல் இந்தக் கனவைக் காணப் பிடிக்கிறது.

குழந்தை வளர்ப்பில் தாய்க்கும் பள்ளிக்கும் எத்தனை பொறுப்பு இருக்கிறது. எத்தனை சதவீதம் மிகச்சரியாக வளர்க்கப்படுகிறார்கள். கவலையாய் இருந்தது. மரபென்பது உடைக்கப்பட்டால் தான் மறுமலர்ச்சி வருமென்பது சரியாய் இருக்கலாம். அதனிலும் முதலாய் சகிப்புத் தன்மையிலும் மனித நேயத்திலும் சிறந்த பெண்களால் மட்டும் தான் தன் சந்ததியை மிகச்சரியாய் வளர்க்கமுடியுமென்று ஆணித்தரமாக நம்புகிறேன். நீங்களும் தானே?

Tuesday, April 2, 2013

கோடை விடுமுறை


    பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த நாட்கள்.சுட்டெறிக்கும் இந்தப் பங்குனி வெயிலும் வரவிருக்கும் அக்கினி நட்சத்திரமும் தீயாய் எரித்தாலும் உள்ளுக்குள் குளிர்விக்கிற ஈரமான நினைவுகள் இந்த கோடை விடுமுறைக்குண்டு.அம்மாச்சி, தாத்தாவுடனான அற்புதத் தருணங்கள். விடுமுறைக்கெனக் காத்திருக்கும் கொடிய பள்ளி நாட்கள்.இரண்டு மாத விடுமுறை.அதிலும் பரீட்சைகளின் தலைவலியிலிருந்து விடுபட்ட அந்தத் தருணத்தில் அயர்வைக் களையும் புத்துணர்வு. விடுமுறை எத்தனை தினங்கள் என்பதைக்காட்டிலும் ஆச்சி தாத்தாவை எப்போது பார்ப்போமென்றிருக்கும் அந்தப் பரபரப்பு.அவர்களும் எங்கள் பள்ளி விடுமுறைக்காகவே  காத்துக் கிடப்பார்கள். அத்தனை பாசம், ஏக்கம், தனிமை. அதைப் போக்க அவர்கள் எங்கள் வரவை எதிர்பார்த்திருப்பார்கள். இவர்களைப் போல் ஒரு தாத்தாவோ, அம்மாச்சியோ,அப்பத்தாவோ,அய்யாவோ நிச்சயம் எல்லா கிராமத்திலும் இப்படி வயதான ஜீவன்கள் கோடைக்காய் காத்துக்கிடக்கும். பேரன் பேத்திகளின் பாசமழையில் நனைவதற்கு. எத்தனை பேரின் காத்திருத்தல் நிறைவேறுகிறது?
   
    சுற்றிலும் வயல்கள். நடுவில் மிகப் பெரியதொரு வட்டக்கிணறு.கிணற்று மேட்டில் போடப்பட்டிருக்கும் குடிசை வீட்டில் தங்கி இளநீர்,நுங்கு,ஆற்று மீன் குழம்பு,தட்டைப்பயறு அவியல், தும்பைப்பூவோடு பச்சைகடலை சேர்த்தவித்து கருப்பட்டிக் காப்பியோடு மாலைப் போதுகளென அந்தச் சூழலை அந்த வாழ்வை அப்படியே அச்சுப் பிசகாமல் மனதுக்குள் பொதிந்து வைத்திருக்கிறேன்.பம்பு செட் மூலம் விவசாயம். அத்தனை பெரிய கிணறு, எனக்கு எப்போதும் அது அதிசயம் தான்.பருத்தி,நெல்,தென்னை,எள்  போன்றவை முக்கியமாகப் பயிரிடப்படும். உபபயிர்களாக உளுந்து போன்றவற்றைச் சுழற்சி முறையிலும் விவசாயம் செய்வார் அம்மாச்சி. பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாத்தாவுக்கு வயல் என்றால் உயிர். தனது ஓய்வுக்குப் பின் சொந்த ஊரில் நிலம் வாங்கி, அதன் பிடிமானத்தில் தன் வயோதிகத்தைக் கழித்திட நினைக்கும் பெரும்பான்மை அரசு ஊழியர்களில் அவர் கனவு ஒரளவேனும் நிறைவேறியதெனலாம். மூத்தவளாக பிறந்த காரணத்தால் பெரும்பாலும் நான் மட்டும் தான் அவர்கள் அன்பில் முழுதுமாய் ஊறித் திளைத்திருக்கிறேன். அழும் போது கூட அம்மாவுக்குப் பதில் ஆச்சி என்று அரற்றுவேனாம். அத்தனை பிடிக்கும் ஆச்சி தாத்தா,அய்யா, அப்பத்தா என்று என் கண் முன்னே வாழ்ந்த/வாழும் தெய்வங்களை.

    அம்மாச்சி தவிர யாரும் உயிருடன் இப்போது இல்லை. அவரும் குடும்ப அரசியலில் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டார் என்பது வருத்தம் கலந்த சேதி. இருந்துவிட்டுப் போகட்டும் இதோ பாசம் கசியும் என் நினைவுகளை என்ன செய்ய முடியும் அவர்களால்? தன்மானத்தை விடாத குற்றத்துக்குப் பதிலாய் பாசமிகு உறவுகளிடமிருந்து வலுவில் பிரிக்கப்பட்டேன். காழ்ப்பில் தனிமைப்படுத்தினாலென்ன என் நினைவுகள் உயிர்வாழும். வன்மம் மிதக்கும் ஆணாதிக்கவாதிகளும் பொய்மை பரப்பித்திரியும் சில குயுக்தி மனப்பான்மையுள்ளோரும் நடத்தும் குடும்ப அரசியலில் ஒண்டிப் பிழைப்பதில்லையாதலால் நினைவுகளில் மட்டும் ஆராதித்துக் கொள்கிறேன் தாத்தாவின் மறைவுக்குப் பின் தனித்து வாழும் அம்மாச்சியையும். .இதோ இந்தத் திருவிழாவுக்கும் அந்த ஜீவன் என்னை எதிர்பார்த்து எவருமறியாமல் கண்ணீர் சிந்தியிருக்கும்.மாநகரத்தின் கான்கிரீட் காட்டுக்குள், மரம் வளர்க்கும் ஆசையில் போன்சாய் வளர்க்கும் நான் அதே கிராமத்து மனுசி தான். ஈரத்துக்குக் குறைவில்லை ஆனாலும் பாறையென பிதற்றித் திரிகிறேன். எழுத்துக்களை மனதுக்கு நெருக்கமாய் வைப்பதனால் எதையும் மறைத்து விட முடிவதில்லை.போலியாய் எழுதி, அதைச் சிலாகித்துப் பேசி, எழுதுவதில் கிடைக்கும் மன நிறைவை இழக்க விரும்பவில்லையாதலால் எப்போதும் போல் இப்போதும்...கவனிக்க நான் யாரையும் குறிப்பிடவில்லை.

    விடுமுறை தினங்களென்றாலே நினைவுக்கு வருபவள், வாசுகி, என் வயதுத் தோழி. பல்லாங்குழி, தாயம்,கிளித்தட்டு இதோடு நில்லாமல் நீச்சலும் கற்றுத் தந்தவள்.
’ஏட்டி உனக்கு நீச்சத் தெரியுமா?’
‘தெரியாதுப்பா’
‘எனக்கு எல்லா நீச்சலும் தெரியும்டி’
‘நெசமாலுமா?’
‘வீரகாளி சத்தியமா! கத்துக்கணுமா?’
‘ஓ! ஆனா பயமாயிருக்கு’
பேசிக்கொண்டே கிணற்றைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். கூடவே என்னோடு நடந்து வந்தவள் திடுமெனக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டாள். 12-15 அடி மேலிருந்து கிணற்றுக்குள் விழுந்தேன். திகிலோடு பயமும் சேரவே அலற ஆரம்பித்தேன். வயலில் நிறையப் பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். செத்துவிடமாட்டேன் என்கிற நம்பிக்கை இருந்தது. என் சத்தம் கேட்கணுமே.முடிந்தவரை சத்தமாய் கத்தினேன். ஒரு முகம் கூட எட்டிப் பார்க்கவில்லை. முழுதாய் தரைதொட்டு மேலெழும்பினேன். வட்டக்கிணற்றில் படிக்கல்லுக்கு மறுகோடியிலிருந்தேன். அதிலிருந்து சரியாய் பத்து எட்டில் படிகள் இருந்தன. தெளியுமுன், இரண்டாம் முறை நீருக்குள் மூழ்கினேன். தரை தொட இன்னும் சில அடிகள் என்றிருக்கையில் கையால் துழாவி நீரை விலக்க ஆரம்பித்தேன். வசப்பட்டது நீச்சல்.படிகளைத்  தொடும் நேரத்தில் மேல்ச்சட்டையில் முடிந்து வைத்திருந்த பச்சைக்கடலைகளை மென்றவாறு, ‘தட்சணை குடுக்கணும்ட்டி’ என்று சொல்லிச் சிரித்தாள் தெத்துப் பல்லழகி. பாதிப் படிக்கட்டு ஏறி வந்ததும் கையைக் கோர்த்துக் கொண்டு கிணற்றில் குதித்தோம். பயத்தைக்  களைந்திருந்தேன். தாத்தாவும் ஆச்சியும் தான் பதறிப் போய்விட்டார்கள்.
’தனியா தண்ணில வுழுந்தா நீச்சலடிச்சு கரையேறிடுவேல்லட்டி?’
மூன்று நாள் பயிற்சிக்குப்பின் அவள் கேட்ட கேள்விக்கு, இப்போது வாழ்க்கையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீந்துகின்ற இடம் தான் கிணத்துக்குப் பதில் கடலாய் இருக்கிறது.
   
    அந்த விடுமுறையில் பதிமூன்று நாட்கள் வயலில் இருந்தோம். இரவில் தாத்தாவிடம் கேள்விகள் கேட்டபடி பதிலுக்குக் காத்திராமல் தூங்கிப் போவேன். காலையில் அவர் முந்தின நாள் கேள்வியையும் பதிலையும் தயாராய் வைத்திருப்பார். அவரிடம் இருந்ததெல்லாம் அனுபவக் கதைகள் தாம். தான் பட்ட வடுக்கள்,அவமானங்கள்,வெற்றிகள்,சாதனை மனிதர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போவார். புரிந்ததா அந்த வயதில் தெரியவில்லை இருந்தும் என்னிடம் சொல்லித் தீர நிறைய கதைகள் இருந்தன அவரிடம்.பதியவைத்துச் செல்லவேண்டுமென்ற தாகமாய் இருக்கலாம். தலைகோதியபடி கதைசொல்லி தூங்க வைக்கும் ஆச்சியும் அப்படியே. ஏழு கழுதை வயசுக்கும் நான் அவளின் குழந்தையாகவே பாவிக்கப்படுவேன். கிட்டத் தட்ட பத்தாம் வகுப்புக்கு முன் எல்லா கோடைவிடுமுறையும் ஆச்சி வீட்டில் கழித்திருக்கிறேன்.
    
    இரண்டாம் வருடம் கல்லூரி படிக்கும் போது வாசுகி இறந்து போனாள். கால் தடுக்கி கிணற்றில் விழுந்ததாய் சொன்னார்கள். தற்கொலை என்றார்கள் சிலர். கொலை செய்து கிணற்றில் போடப்பட்டாள் என்றனர் சிலர். அவளே இல்லை என்கிற போது அவள் இறப்பினை ஆராய வலிக்கிறது. உயிரோடிருந்து கிணற்றில் விழுந்திருதால் நிச்சயம் அவள் நீந்தி வந்திருப்பாள் என்று அவள் நினைவு வரும் போது சொல்லிக் கொள்வேன். அப்பா இல்லாமல் மேல்சாதி கனவான்களின் வீட்டின் மாட்டுக் கொட்டிலில் வேலை செய்யும் சாவித்திரியக்காவும்(அவள் அம்மா) அவள் இறப்புக்கு நியாயம் கேட்டு வழக்கேதும் தொடுக்கவில்லை. புதைந்து போனது ஒரு ஏழையின் மரணம். உண்மை உறகாதென்பவர்களைச்  செவிட்டில் அறைவேன். உறங்கும் உண்மைக்கும் உலவும் பொய்மைக்கும் காவல் புரிபவர்கள் பணமும் சாதியும் வைத்துக் கொண்டு கொளுத்துத் தான் திரிகிறார்கள். இதை இங்கேயே
விட்டு விடுவோம். இல்லையெனில் திசைமாறிப் பயணிக்கத் துவங்குவேன்.
      
    பள்ளிக்குச் செல்ல இப்போதும் ஆசையாய் தான் இருக்கிறது இந்த விடுமுறைக்காகவேணும். கிறங்கடிக்கும் வெயிலில் கிளித்தட்டு சுற்றவும், கல்லாங்காய் ஆடவும், கிணற்றுக் கயிறெடுத்து புது ஊஞ்சல் கட்டவும் இந்தக் கோடை விடுமுறை முழுதும் ஆச்சியோடிருக்கவும், பஞ்சதந்திரக் கதை கேட்கவும், சங்கே முழங்கென பாடியாடவும்...
கனவுக்கென்ன எல்லைகளற்று விரிகிறது.

    சடுதியில் மீண்டெழும் என் ஆறாம் அறிவு உறங்கிப் போகட்டும் நான் ஓரறிவோடே காலத்தின் அந்தப் பக்கத்திலேயே மரமாய் நின்று போக ஆசைப்படுகிறேன். எப்போதும் பதில் சொல்லாது சிலையாய்/படமாய் சிரிக்கின்ற கடவுளை  நானும் சிரித்தபடிக் கடக்கிறேன். என்னைப் போல் சாத்தான்களுக்கு கடவுள் பதில் சொல்வதில்லையாம். நேர்மையானவர்களுக்கு அவர் எப்போதும் பதில் சொல்வதில்லை பதிலாய் இந்தப் பெயரோடு உலவும் தைரியத்தைப் பரிசளிக்கிறார்.
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!