Wednesday, January 16, 2013

வாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்


மஞ்சு விரட்டு மாடுகள் வளர்ப்பது கிராமத்தின் முக்கியாம்சங்களில் ஒன்று. சிலர் இதை அரசியலாக்கி லாபம் காண்பதும் உண்டு. ’ஏறுதழுவல்’ வீரத்தமிழர் பண்பாடு.விழுப்புண் பெற்ற இளங்காளையர்க்கு மாலைசூட்டுதல் அவர்தம்
வழக்கம்.இலக்கிய காட்சிகள் அழகாக விவரித்துச் சொல்லும்.இதெல்லாம் இருக்கட்டும் இன்று காணும் பொங்கல். எங்க ஊர்ல - மஞ்சு விரட்டுக் களைகட்டும். கிராமத்து வாழ்க்கையைப் போலவே, இது போலான அரிய நிகழ்ச்சிகளையும் ரொம்பவே இழக்கிறேன்.

மஞ்சுவிரட்டுக் குறித்த விசயங்களில் எனக்கும் கொஞ்சம் பரிச்சயமுண்டு. அதற்கான ஆயத்தங்கள் பற்றியும் கொஞ்சம் அறிவுண்டு. பொங்கலுக்கு ஒரு மாதமுன்பே மாட்டின் வலுவிற்கான தயாரிப்புகள் ஆரம்பித்துவிடும் உணவுரீதியாக. மஞ்சுவிரட்டு மாட்டோட மூக்கணாங்கயிற முதல் நாள் தான்  பிரிச்சி எடுப்பாங்க. அப்பத் தான் அதுக்கு அதிக வெறி வரும்ன்னு.
சிவப்புக் கயிறும் சலங்கையும் நெத்திச் சுட்டியும் சந்தனப் பொட்டு மாலை என இன்னிக்கு மட்டும் எல்லா முரட்டுக் காளைகளும் மணக்கோலத்துல... மஞ்சு விரட்டில் மாடுகள் கட்டுமிடம்,தொழுவம் இதெல்லாம் வர்க்க ரீதியானதென்றாலும் நின்று விளையாடும் மாடுகளுக்கு எந்த வர்க்கபேதமும் இல்லை. கட்டவிழ்த்தால் எதிர்போரைத் தாக்கித் தனியிடமேகுவதே குறிக்கோளாயிருக்கும். மேல் பாய்ச்சல், கீழ்பாய்ச்சலென்று பழக்கிய வித்தைகளையெல்லாம் எதோவொரு வீரனிடம் காண்பித்துவிட்டு ரத்தம் வழியும் கொம்புகளோடு மண்மேட்டைக் குத்திக் கிளரும் அடங்காத மாடுகளைப் பார்த்திருக்கிறேன்.
எத்தனை பேர் குடல் சரிய இறந்து போனார்கள்? எத்தனை பேரின் நிலைக் கவலைக்கிடம் இதெல்லாம் காதில் போட்டுக் கொண்டே விருந்தோம்பல் கொஞ்சமும் குறைவின்றி நடந்தபடியிருக்கும்.

கட்டு அவிழப் பெற்ற மாடுகளைத் திருப்பியும் வீடு வந்து சேர்ப்பது தான் பெரிய வேலை.திருப்பியும் அதைக்  கட்டிப்போட பிடி கயிற்றோட இன்னிக்கு முச்சூடும் ஆட்களை எங்கள் பிராந்தியத்தில் பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் வேலை ரொம்ப மிச்சம், வெல்லம்-தேங்காய்-பச்சரிசி இத வச்சிக்கிட்டுச் சமர்த்தா வந்திருன்னு சொன்னாக் கேட்குமளவுக்கு ஒரு மாடு வளர்த்தேன்.அதை மெல்ல ஏமாற்றிக் கொம்புகளில், முடிச்சிட்ட கயிற்றை மாட்டி விட வேண்டும். பிறகனைத்தும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.மிகக் கூராகச் செதுக்கப்பட்டிருக்குமதன் கொம்புகளின் பிரயோகம் எனக்கெதிராய்த் திரும்பினால் மரணம் நிச்சயம்.என்னை விடவும் ’அது’  என்குறித்து மிகக்கவனத்தோடிருக்கும்.யாருக்கும் அடங்காத அந்த முரட்டு உருவத்துக்கு என் அன்பாலேயே வசியம் செய்திருந்தேன்.மூக்கணாங்கயிறு அழுந்திய ரணம் ரத்தமாய் வடிந்தாலும் என் கட்டளைக்குக்  கீழ்ப்படியும்.வாலையும் துமிலையும் தொடுவது மிகவும் ஆபத்தானது அந்த நேரத்தில்.. அத்தனை ஆக்ரோசமாயிருக்கும். ஆனாலும் என்னை அதன் கழுத்தை நீவி விட அனுமதிக்கும். அப்பாவுக்கு என் தைரியம் பெருமையாயிருக்குமென்பதாலே இந்த விசப்பரீட்சையில் நான் இறங்குவது வழக்கம். மிகவும் கம்பீரமான மாடு.அலங்காரங்கள் செய்தபின் அதன் துள்ளலும் துடிப்பும் பார்ப்பவரை மிரளவைக்கும்.மஞ்சுவிரட்டுக்குத் தோதான காளைப்பருவமதற்கு. அதற்கு மட்டும் பகுத்தறிவிருந்தால் அதன் சக்திக்கு முன் என்னையெல்லாம் மதிக்கவே செய்யாது.நல்லவேளையாக, அது என்னை எஜமானியாகவும் அதை நான் வளர்ப்புப் பிராணியாகவும் மனதார சுவீகரித்திருந்தோம்.
முக்கியமானதொரு விசயம் அதற்குச் சிவப்பென்றாலும் கறுப்பென்றாலும் ஆகாது. அந்தக் காலகட்டத்தில், அவ்விரு நிறங்களிலான ஆடைகளைத் தவிர்க்க எங்களுக்குள்ளான புரிதல் தாண்டிய பாசமொரு காரணம்.எங்களுள் நிலவியது நல்லதொரு நேயமென்றே கொள்ளவேண்டும். என் பெயரைக் கேட்டாலோ என் குரல் கேட்டாலோ அதனிடத்தில் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொள்வதைக்  கவனித்திருக்கிறேன்.
கல்லூரி முடித்து வீடு வந்தவுடன் அதனோடு பேசா விட்டால் தலை வெடித்துவிடும். என் வளர்ப்பு பிராணிகளில் நாய்கள்,மைனா,கிளி,பூனை,கோழி என எல்லாமும் இருந்திருக்கிறது, ஆனாலும் நான் அதிகம் நேசித்த ஒரு  ஜீவன் அதுவாகத் தானிருக்கும்.
மூன்று வருடங்கள் ’அது’ என்னோடிருந்தது.
வேலைக்கென ஊரை விட்டுச் சென்னை வந்த அடுத்த வருடம், யார் பராமரிப்பதென்ற குடும்ப அரசியலில் அதுவும் இல்லாமல் போனது மாட்டை மிகவும் நேசிக்கும் பெரியப்பாவைப் போல....

‘அது’வும் பெரியப்பாவும் எல்லாப் பொங்கலுக்கும் தவறாமல் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை வெற்றிடமொன்று பரவி வலியோடான கனம் பரவுகிறது.

 சொல்ல மறந்து விட்டேன் அதன் பேர் ‘ராமு’.

Saturday, January 12, 2013

நிறப்பிரிகை

எல்லா நட்பும் வெண்ணொளிக்கற்றை
என்னில் பட்டுப் பிரிகிறது 
எழுவகை நிறமாய்...
தன்னந்தனித் தடங்களில் மிளிர்ந்தாலும் 
வேசங்களற்ற மிழற்றலில் மகிழ்ந்தாலும் 
ஆளுமை ஆதரவு அலட்சியமென்று 
அதன் கரங்கள் 
அவ்வப்போது நீண்டு சிறுத்தாலும்
ஏனோ...
நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருக்கிறேன்
எந்த வீச்சிலேனும் 
முன்னிருந்த வெள்ளந்தி நிறமதனை...
வளர்ந்தபின் பால்யம் சாத்தியமா 
செவி நிறைக்கும் கேலிகள்! 
ஆம்! தாயெனும் பிச்சி நான்
ஒன்றை பலவாக்கும் வித்தக நோக்கில் 
முதிர்வுக்குத் தள்ளப்பட்ட பால்யம்
குற்றவுணர்ச்சியோடு 
சுயபிரஞ்ஞையற்ற பச்சாதாபம் மனவறை நிறைக்கிறது 
இப்போதெல்லாம் 
முற்றத்தில் 
முப்பட்டகங்களில்லை 
வந்தவை தன்னியல்பு பிறழாமல் இருக்கட்டும்
தோட்டத்தில் அணிவகுக்கும் 
போன்சாய் மரங்களைப் போல்... 
வேர்கள் தொட்டிக்குள் முடங்கினாலும் 
அன்பின் மழை நிதமும் உமை நனைக்கும்!

Friday, January 11, 2013

முன்பொருநாள் இங்கொரு குளமிருந்தது

கோடைப் பொழுதுகளில் 
தாகம் தீர வேண்டி 
பறவைகள் படையுடன் 
வந்து செல்லும்

மக்கிய எச்சங்களில் முளைத்ததொரு  
பெருமரம் நீர்ச்சத்தின் அடையாளமாய்...
பாதைகள் கூட 
உரசாமல் ஒதுங்கிச் சென்றன
குளமிருந்தயிடத்தில்
குடியிருப்புகள்
ஆனாலும் மரத்துக்குண்டான
மரியாதை மட்டும் அப்படியே

விருந்தினர் வருவதும்
கூடமைப்பதும்
குஞ்சுகள் பொரிப்பதுமென
மரத்துக்குண்டான வாழ்வை
அம்மரம் வாழ்ந்து கொண்டிருந்தது

பாதை நெடுஞ்சாலையாவதில்
ஆட்டம் கண்டது ஆயுட்காலம்

பறவைகளுக்காக 

கண்ணீர் வடிக்காதீர்கள்!
இங்கில்லையெனில்
இன்னொரு மரக்கிளையில் 

அமைந்துவிடுமதற்கொரு கூடு..
மரத்துக்கென மன்றாடுங்கள்
வெட்டிச் சாய்க்கப்படும்
இப்பெருமரத்தின் அடிவேரில் தான்
குளத்தின் கடைசித்துளி
பதுங்கியிருக்கிறதென்று 

வெட்டுவதற்கு முன்
யாரேனும் சொல்லுங்கள்!

Monday, January 7, 2013

பொங்கலு வந்திருச்சா?

மாட்டுத் தொழுவத்துக்கு
முன்னால
அடுப்ப மூட்டி 
கோலமிட்ட பானையில் 
புதுநெல்லரிசி பொங்கலிட 

புளிய மர நெழலில் 
ஓலப் பாய் விரிச்சி 
கூடியிருக்கும் சொந்தமெல்லாம் 
வருசத்துப் பேச்சத்தனையும் 
அன்னிக்கே பேசித் தீர்க்கும்

எல்லாருஞ் சேர்ந்து பொங்க வச்சு 
வாழயெலமேல படையலிட்டு 
மம்பட்டி செதுக்கிவிட்ட ’திடீர்’ கம்மாயிக்கு 
கொடத்து தண்ணியூத்தி கரையுடைக்க 
’மறுகா’ போகுதுண்ணு 
கிழக்க விழுந்து கும்புடுவோம் 
பகுத்தறிய அதுவா நேரம்? 

பொங்கலோ பொங்கலுன்னு 
பட்டி சுத்தி வாரயில 
பித்தள வட்டி தட்டி வார 
அய்யாவுக்கும் 
’நாடு செழிக்க நல்ல மழ பெய்ய’வுன்னு 
ஒரத்துச் சொல்லுற பெரியப்பாவுக்கும் 
ஒரே பேரு! 

காதறுத்து திட்டி கழிச்சப்றம் 
துள்ளியாடும் கிடேரிக்கண்ணு 
கரும்பால மால கட்டி 
கதம்பமதுஞ் சுத்தி 
பட்டி தெறக்கயில 
பயந்து மருகிப் போகும்!
வாலத் திருகிவிட்டு 
வெரஞ்சோட பழக்குவாக 
ஆமா! 
எங்க தொழுவுலல்லாம் 
கிடேரிக்கும் காளைக்கும் 
பொதுவிதிதேன் 
நாளுங் கெழமைக்கெல்லாம் 
மொடங்கிக் கெடக்கப்படாது! 

கருத்த கன்னத்துல
மஞ்சத் தடவிப் போற 
மொறமாமன் வீரத்த 
ஓரக்கண்ணால ரசிச்சி 
மொகஞ் செவக்கும் 
அழகி யாரிருக்கா இப்பவல்லாம்?

கூடிக் களிச்சிருந்த 
நாளெல்லாம் கனவாப் போச்சுதுங்க 
பங்காளி சண்டையில 
ஊரே ஒடஞ்சுதுங்க 
பாசத்தால பேசிச் சரிகட்ட 
அங்க கிராமமேயில்லயிங்க 
நகரப் பேய் புகுந்து 
தடயமெல்லாம் அழிஞ்சுதுங்க 

பொங்கலு வந்திருச்சா?
பொங்கலு வந்திருச்சா? 

என்னத்த நாஞ் சொல்ல 
வாழ்ந்து கெட்ட எம்வூட்டுக்கதய 
இந்தா, பாட்டா எறக்கிபுட்டேன் 
புரிஞ்சவுக படிச்சிங்குங்க

கல்விக் கொடை தந்த வள்ளல்

விஜய் டீவில இன்னிக்கு 'நீயா?நானா?' பார்த்தேன்.நான் பார்த்த எல்லா ஷோவைக் காட்டிலும் ஒரு கிராமப்புற மாணவியா இதான் ’பெஸ்ட்’ந்னு சொல்வேன். அத்தனை அற்புதமா அரசுக் கலைக் கல்லூரிகளின் கல்வித்தரம் பத்திச்  சொன்னாங்க.விவரிச்சாங்க.ஏத்துக்கிட்டாங்க.சொல்லப்பட்ட விதம் கூட ரொம்ப அறிவார்த்தமாவும் இயல்பாவும் இருந்துச்சு. கேட்டுக்கிட்டே இருந்தேனா என்னோட கல்லூரியப் பத்தின நினைவுகளில் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.மிகவும் போராட்டமாத் தான் அமைஞ்சது கல்லூரி வாழ்க்கைக்குப் பின் வேலை தேடும் படலம்.வாழ்க்கையில ஏற்ற இறக்கங்களைச் சுலபமா எதிர்கொள்கிற துணிவும் தைரியமும் இதுபோலான கல்லூரிகளிலே படிக்கற நடுத்தரவர்க்கத்துப் பெண்களுக்குத் தான் இயல்பா வருதுன்னு சொன்னாங்க.100% சரி. எப்பவும் போல எனனை முழுதா ஆராய்ந்தபின்னாடியே தான் இதச் சொல்றேன்.கல்லூரிச் சூழல் என் வாழ்வில் மிகவும் அருமையான,முக்கியமான காலகட்டம். 

படிப்பில நான் ரொம்பவே சுமார்.ஆனா மதிப்பெண் வாங்குறதுக்குப் படிக்காம,எப்படி எதில் படித்ததை உபயோகிப்பது என்கிற சுதந்திரத்தோடு சுயசிந்தனையை வளரச் செய்தயென் கல்லூரிக்கு நன்றி.மனிதர்களைப் படிக்கிற வித்தையை அங்க தான் நான் கத்துக்கிட்டேன்.அருமையான வாழ்வியல் கற்றுத் தந்தது என் கல்லூரி.

ஏனோ இன்னிக்கு என்னோட கல்லூரி மேல அத்தன மரியாதை வருது. எப்பவும் இருக்கும்னாலும் எழுதத் தோணினதில்ல.ஆகா,உனக்கு வயசாயிடுச்சுடீன்னு உள்ளுக்குள்ள அடிச்சிக்கிட்டாலும் சொல்லவந்ததச் சொல்லியே ஆகனும். 

எம்.ஜி.ஆர். காரைக்குடிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில கலந்துக்க வந்தப்போ, அவரை ஏழைப் பங்காளன்,வள்ளலென்றெல்லாம் அழைப்பதை இடைநிறுத்திச் சொன்னாராம்,’இது அழகப்பர் வாழ்ந்த மண். இங்க என்னை வள்ளல்ன்னு சொல்லாதீங்க.அதுக்கு நான் தகுதியானவனில்லைன்னு’. பல்கலைக்கழகத்திலிருந்து உடற்கல்வி பயிற்சிக் கல்லூரி வரையிலான அத்தனை பெரிய நிலப்பரப்பு. தானமாத் தர யாருக்கு மனசு வரும்? கடன் வாங்கிக் கல்விக் கண் திறக்க எந்த மாமனிதனுக்குத் தோணும்? தன் உடல்நிலை சரியில்லாத காலகட்டத்திலும் கூட? எத்தனையோ பேர் அவரை எத்தனையோ விதமா புகழ்ந்திருந்தாலும் நானும் சொல்ல வேணாமா? நான் என்ன சாதிச்சிட்டேன். அவர் புகழ் பாட நானெல்லாம் ஆளான்னு மனசாட்சி கேட்டாலும், ’உரிமை தான்’ன்னு பெருமையாச் சொல்லிக்கிறேன். ஒரு தனி மனுஷியாய் என் சாதனைகளுக்கு ஒன்றும் குறைவில்லை.

வள்ளல் அழகப்பர் என்கிற மாமனிதன் நிர்மாணித்த அந்தக் கல்லூரியில் படித்தேன் என்பதை நான் படிக்கும் காலத்தில் உணரவேயில்லை. ஏனெனில்,அது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமானதொரு கல்லூரி. :). அப்பா சித்தப்பா,அண்ணன்கள், தம்பி, தங்கை என என் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் எல்லோரும் ஒரு முறையாவது தங்கள் கல்விக் காலத்தை அந்தப் பெயரோடு தொடர்புபடுத்திக் கொண்டிருப்பர். அப்படி எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்தது ‘அழகப்பச் செட்டியார்’ என்கிற பெயர்.

மூன்றாமாண்டு என்று நினைக்கிறேன், அப்பாவும் ராஜூ மாமாவும்(அப்பாவின் கல்லூரித் தோழன்) பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் கால்பந்து போட்டி நடந்து முடிந்ததும் அழகப்பர் வீட்டிலிருந்து உணவு வருமாம். அவரோடு சேர்ந்து எல்லோரும் சாப்பிடுவார்களாம்.போட்டியில் தோற்றாலும் இதே உபசரிப்பென்பது கூடுதல் தகவல்.தன் மாணவர்களைத் தன் சகதோழனாகப் பாவிக்கும் மாண்பு வள்ளலின் தனிச்சிறப்பு.அப்பாவின் வாழ்வில் அவர் கல்லூரிப் பேராசிரியர்கள் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தார்கள். பெரியார் வழிக்கு, சுயமரியாதை என்கிற சொல்லுக்கு வித்திட்டவர்களுள் ஒருவரென வள்ளலை அப்பா சொல்வது வழக்கம். தறிகெட்டலைந்த காலகட்டங்களையும் கல்லூரிக்குள் கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களையும் பகிருவார் அப்பா. பெருமையாயிருக்கும். எளிமை, அடக்கம்,அறிவுசார் வாழ்வென வள்ளலிடம் கற்றுக் கொள்ள ஏராளமான உயரிய பண்புகளுண்டு. அத்தனைக்கும் மேல் கல்லூரியை உயிராய் நேசித்தவர் வள்ளல் அழகப்பச் செட்டியார். கல்லூரியிலேயே தான் அவர் சமாதியும் அமைந்திருக்கிறது. 

அவரின் கொடைச் சிறப்புப் பற்றிக் கூகிளில் தேடினால் ஆயிரம் கிடைக்கும். என்வரையில் பிரம்மித்த விசயத்தைச் சொல்கிறேன்.எங்கள் கல்லூரி நூலகத்திற்குச் செல்லுங்கள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்களைப் பாருங்கள். தன் வாழ்நாள் முழுவதும் தேடிச் சேகரித்த அத்தனை புத்தகங்களையும் தானமாய்த் தான் நேசித்த கல்லூரிக்கே தந்து அறிவுக் கண் திறந்த அவரின் பெருந்தன்மைக்கு எப்படி நன்றி சொல்ல? அவர் வாழ்ந்த காலத்தில் கிட்டத் தட்ட எல்லாத் தரப்பு நூல்களும் அங்கிருக்கும். குறிப்பாய், தமிழ்த்துறைசார் நூட்கள் யாவும் அங்கு கிடைக்கும்.

“கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
 வீடும் கொடுத்த விழுத்தெய்வம் – தேடியும்
 அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் 
 வெள்ளி விளக்கே விளக்கு” 

இந்த வாழ்த்தை,எல்லாக் கல்லூரி விழாக்களிலும் வாசிப்போம்.மனப்பாடமும் கூட. ஆனால் இப்போது இதை வாசிக்கும் போது ஏனோ திரைகட்டுகிறது கண்ணீர். ஒரு தனிமனித முயற்சியும் கனவும் சமுதாய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிகோலும் என்பதை வாழ்ந்து சாதித்தவர். பொதுவாய்,  மனிதர்களைப் புகழ்வது எனக்கு வழக்கமல்ல. இவரைப் போல மனிதருள் வாழ்ந்து சிறந்த தெய்வங்களைப் புகழாது போனால் எனக்குத் தெரிந்த சொற்பத்  தமிழும் என்னைப் புறக்கணிக்கும்.

ஆம், வள்ளல் அழகப்பச் செட்டியார் எங்களுள் வாழும் தெய்வம்.

Saturday, January 5, 2013

கவிக் கோர்வை - 02


ஏதோவொரு மாயவட்டத்துள்
உழல்கிறேன்
என்னைச் சுற்றியுள்ள
ஆடிகளிலெல்லாம்
குறுஞ்சிரிப்போடு நீ!
கனவென்று தெரிந்தும்
படர விடுகிறேன் நம்பிக்கைகளை...
இப்போதெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அரிதாய்... மிக அரிதாய்
இமை திறக்கும் போதிலும்
முத்தமிட்டுத் தொலைக்கிறாய்
வெட்கத்தில் தானே
கனவுக்குள் நுழைகிறது நிகழ்வு

***

இறகுகளைச் சேமித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்ந்தழிந்த பறவைகளின் நினைவாக...
இங்கிருந்து பறந்த ஏதோவொரு பறவைக்கும்
என்னோடான சினேகத்தின் நினைவிருக்கும்

***

தனித்து நிற்கவியலாத
தள்ளாடும் கொடிகளுண்டு
அவற்றிற்கெல்லாம்
ஆலாய்
அரசாய்
நாணலாய்...
அணைத்தபடி பூத்துக் காய்க்கிறது
காட்டுச் செடி
யாரும் யாரோடுமில்லை
யாருக்கும் யாருமில்லை
என்றாலும்
பிறப்பின் பயனாய்
சேவகம் புரியும்
பெயருடைத் தரு நான்

நகர்ந்தபடியிரு


அடுத்தவர் பார்வை தொட்டால்
முடங்கிப் போகும்
நத்தையாயிராதே!
என்றேனுமொரு நாள்
உயிரற்றதென்று
ஓட்டோடு சேர்த்து
உயிரும் நசுக்கப்படலாம்
நகர்ந்தபடியிரு!

நீ செல்லும் பாதையில்
ஈரமுலரும் போது
புது மழை வரும் 

நகர்ந்தபடியிரு!

அருட்கொடை


பிழைக்கவொரு
பாலைவனம் கிடைத்தது
தண்ணீருக்குப் பஞ்சமே தவிர
நிழலும் கனியும் தரும்
பேரீச்சமரங்கள்
அருட்கொடையாய்.....

நாளை


எரிமலை துப்பிய சாம்பல்
படியட்டும் விடு
பறவைகள் உபயத்தில்
நிச்சயம்
இங்கொரு மரம் துளிர்க்கும்

கடைசிப் பூ


கைவிளக்கின்
விரிசோதி விழுங்கும் இருள்
அரவத்தின் வாயகப்பட்ட
அரைப் புத்தி மண்டூகம்
முன்னதன் ஒளிபட்டு
மீண்ட மாத்திரத்தில்
பின்னதன் ஒலி
செரித்தே போனது
தடயங்களேதுமின்றி...
வெளிச்சம் தொட்ட கணத்தில்
காக்கும் கரமென்று
நம்பிக்கை பூத்திருக்குமோ?

கவிக் கோர்வை - 01

*

ஒரேயொரு முறை 

உன் சுட்டுவிரல் 
என்னிடம் 
பிணையாகிக் கிடந்தது 
புலம்பித் தீர்க்கிறாய் 
அன்றுன்னை 
வசியம் செய்ததாய் 
வாழ்த்திப் பிரிகிறேன் 
இப்போதும் அதே பல்லவி 
நான் 
சிரித்து மழுப்பவும் 
நீ 
வெறுப்பை உமிழவும் 
நம்மிடையே 
அல்லாடிக் கொண்டிருக்கிறது 
காதல்

*

ஒற்றை முத்தத்தில் 
வேர் பிடித்து 
கிளை பரப்பி 
தழை செழித்து 
நிழல் பரப்பி 
நேசம் விரிக்கிறது 
காதல்

*

மாற்றங்கள் தொடர்ந்தபடியிருக்கின்றன 
பூவின் வாழ்வைப் போல... 
தளிர்விடுமொரு செடி 
அரும்பு 
மொட்டு 
மொட்டவிழ்தல் 
கதிரவக் குளியல் 
இதழுதிர்தல் 
மீண்டும் புதிதாய் 
ஒரு தளிர்...

*

அஞ்சலி

பசியோடிருக்கும் சிங்கத்தின் கர்ஜனையோடு
சாதகங்களில் மெருகேறியிருக்கும் என்குரல்
இரண்டும் சேர்ந்ததொரு இசைக்கோர்வை 
இவ்வருடத்திய வெளியீடு 
கேட்ட மாத்திரத்தில் 
மக்கள் விக்கித்துப் போகட்டும் 
ஆம்! நானொரு இசைக்கலைஞன் 
துதிக்க மட்டுமே பழகியவையென் 
மென்கரங்களென்பதால் 
கூண்டுக்குள் முதலில் 
சேடிப் பெண்ணை அனுப்புகிறேன் 

பசியடங்கி உறுமலுடன் 
பிடறி சிலிர்க்குமதன் 
சீற்றங்களேயென் தேவை 

கனவுகள் மெய்ப்படின் 
மூகாம்பிகைக்கொரு வெள்ளி கிரீடம் 
அந்த ஏழைப்பெண்ணுக்கு 
ஒற்றை வார்த்தையில் அஞ்சலி  

சற்றுப் பொறுங்கள் 
வாயகப்பட்ட பிணத்தை 
சிங்கம் தின்று செரிக்கட்டும்

Thursday, January 3, 2013

தூபம் போல் என் ஜெபம்...

இயந்திரகதியில் ஆயத்தமாகி,மாணவிகளோடு மாணவியாய் வரிசையில்.என்னைச் சுற்றி இருநூறு பேர் ஏசுவின் நாமத்தை சிரத்தையாய் ஜெபித்துக் கொண்டிருந்தாலும், அசராமல் குலுங்காமல் சாமியாடிக் கொண்டிருப்பேன்.இல்லையில்லை இரண்டு பக்கத்திலும் அரணாய் தோழிகள் இருப்பர்.முன்வரிசையிலும் பின்வரிசையிலும் அடுத்தகட்டத் தற்காப்புக்கு தோழிகள். காலையில் 5 மணிக்கு இறைவனை துதிக்கப் பழக்கிய பள்ளிக்கு கோடானுகோடி நன்றி.

”தூபம் போல் என் ஜெபம் -அது
உன்னைச் சேர வேண்டும்
நேசத்தந்தாய் உந்தன் அருள்.... “

மொத்த தேவாலயமும் அமைதியில் ஆழ்ந்திருக்க, வாத்தியங்களுக்கு நடுவிலொரு தேவக்குயில் இந்தப் பாட்டை பாடும் அந்த அதியுன்னதமான நேரத்தில் தான் என் தூக்கம் கலையும்.அந்தக் குயிலின் பெயர் லில்லி சிஸ்டர்.கண்டிப்புக்கு பேர் போன ஒரு ராணுவக்கூடாரத்தில் நேயத்தால் என்னைக் கட்டிவைத்த சாந்தசொரூபி.தப்பியோட வாய்ப்பே தராமல் அன்பு மழை பொழியும் கருணை தேவதை.

இரண்டு முறை கூடைப்பந்தாட்ட பயிற்சிக்கும் ஒரு முறை பேச்சுப் போட்டிக்கும் விடுதி மாணவிகளை அழைத்து போகும் பொறுப்பேற்றார்.முதல் சந்திப்பிலேயே  என்னை என் தோழிகள் வட்டம் தவிர்த்து டெடி(deady) என்றழைக்கும் உரிமையுடையவராகிப் போனார். டெடி என்கிற பெயர் காரணத்துக்கு என்மீதனைவரும் கொண்ட அன்பே காரணம்.வேறொன்றுமில்லை. :)

லில்லி சிஸ்டர், வீட்டுக்கு மூத்த பெண்.வயது? எனக்கு கணிக்க தெரியவில்லை.இவருக்குப் பின் மூன்று பெண்கள் உள்ள குடும்பம். அப்பா இல்லை. அம்மா மட்டும்.அழகாய்,அறிவாய்,கம்பீரமாய்,பணிவாய் அப்படியொரு சரிவிகிதத்தில், அவரைப் போல் அவருக்குப் பின் ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை.பலமுறை  தோன்றும் இந்த உடையில் எந்த வசீகரமும் இல்லை, ஆனாலும் எப்படி இவரால் மட்டும் இப்படி ஜொலிக்க முடிகிறது? உள்ளத்தின் தூய்மை போலும்.

ஒரு கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்குப் போகவில்லை. புத்தகம் வாஙகவென்று காரணம் சொல்லி, புதுமண்டபத்தில் சுற்றிக் கொண்டிருந்தோம். வார்டன் அக்காவும், லில்லி சிஸ்டரும் மேற்பார்வைக்காக. நான் அவருடன் பேசிக் கொண்டும் வாயாடிக் கொண்டும் வளைய வந்து கொண்டிருந்தேன்.ஒரு கணவன் மனைவி, எங்களைக் கடக்குமுன் கணவன் மட்டும் நின்று 2 நொடி நிதானித்து திரும்பிப் பார்த்தபடியே வேகமாக கடந்து போனான். லில்லி சிஸ்டரின் மொத்த உற்சாகமும் வடிந்தே போனது. அவருக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும். ஏன் பேசாமல் போகிறார்? ஏதோ புரிந்தாலும் அப்படியேதுமிருக்கக் கூடதென்றிருந்தேன்.
பள்ளிப் பேரூந்தின் கடைசிச் சீட்டில் இருந்தார். கண்ணீர் சிந்திக் கொண்டே, கண்களை மூடி, உதடு கடித்து,
“தேவரீர்..” என்ற முணுமுணுப்போடு மனதுக்குள் கடவுளோடு மன்றாடிக் கொண்டிருந்தார்.ஆட்டமும் பாட்டமும் அந்தப் பக்கம் களைகட்டியிருந்தது. கும்மாளமிட அது போல் இன்னொரு நாள் வாய்க்காது போகலாம். ஆனால் என் அன்பிற்குரிய ஜீவன் அல்லாடிக் கொண்டிருந்தது. லயிக்கவில்லை மனது.

“என்னாச்சு சிஸ்டர்?”
சட்டென உணர்வு வந்தவர் பதற்றமாய், “ஒண்ணுமில்லம்மா!வந்துட்டமா அதுக்குள்ளயும்? சத்த அசந்துட்டேன்” என்று நானறியாமல் கண்ணீரை துடைக்கும் முனைப்பிலிருந்தார்.
“மனசு கஷ்டபடாதீங்க சிஸ்டர்”
“பெரிய மனுசியாட்டம். போடி முன்னால” கன்னதைக் கிள்ளி தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டார். ஏனோ நான் அன்றிரவு முழுதும் அழுது கொண்டிருந்தேன்.

அன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு பேசிச் சிரிப்பதே என் வேலையாகிப் போயிற்று.எனக்கொரு பலவீனம்... பியானோ வாசிக்கும் பெண்கள், அதிகமாய் ஆங்கிலக் கவிதைகள் பேசும் பெண்களெல்லாரும் என் அன்புக்குரியவராகிப் போவார்கள் எந்தவித மனத்தடையுமின்றி. அப்படித் தான் இவரும், லில்லி சிஸ்டர் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர்.வாரப் பத்திரிக்கைகளுக்கும் தமிழ் கதைப் புத்தகங்களுக்கும் பள்ளியில் தடையே தவிர காதல் சொட்டும் ஆங்கில இலக்கியத்துக்கு தடையேதுமில்லை.லில்லி சிஸ்டர் மொழிபெயர்த்து சொல்வதில் மிகத் திறமைசாலி. சேக்ஸ்பியர்,கீட்ஸ்,பைரன் இப்படி நிறைய இலக்கியங்கள் கிடைக்கும்

“....இதில என்ன சொல்றான்னா நிலவோட அவள ஒப்பிட்டு பேசறான். He is speaking about the similarities...." கண்ணிமைக்காமல் நானும் லிசாவும் சொக்கிப் போயிருந்தோம் அவர் குரலினிமையிலும் அந்த இலக்கிய நயத்திலும்.

”உங்களுக்கு காதல்னா அவ்ளோ பிடிக்குமா சிஸ்டர். இவ்ளோ அருமையா சொல்றீங்க?”

சட்டென முகம் வாடி “அதும் அன்பு தானேடி”

“சிஸ்டர். அதெப்படி அதும் அன்பாகும்?”

“உனக்கும் ஒருநாள் புரியும்.வாலு.நட முன்னால”

அரையாண்டுத் தேர்வுக்கு முந்தின நாள் இரவு. ஹாலில் யாவரும் ஒன்று கூடியிருக்க, ரோஸி அழுது வீங்கிய கண்களோடு வழிபாட்டறையில். பெண்களின் உலகம் ரகசியங்களால் நிரம்பி வழிகிறது.ஆறுதல் சொல்லும் கரத்தின் வெதுவெதுப்பில் மீட்படைந்தோருமுண்டு. ரோஸி,அவள் என் எதிரிகள் பக்கம்.நான் ஒழுங்கீனமென பட்டம் வாங்க பலமுறை காரணமாயிருந்த நல்லபிள்ளை. எனக்கு அவளைக் கண்டாலே ஏகத்துக்கு எரிச்சல்.பணக்காரி. திமிரென்பதில்லை அவள் என்னை மதிப்பதில்லை ஆகவே அவள் என் எதிரியென நானே வரித்துக் கொண்டேன்.அது தவிர என்னுயிர் தோழி ஜான்சியின் மிகப்பெரிய எதிரி, ஆகவே எனக்கும்.
நாங்கல்லாம் மாங்கு மாங்குன்னு படிகறப்போ அவமட்டும் ஜாலியா தப்புறதா? கூடாது.வத்தி வைத்தாயிற்று.கனல் பார்வை பார்த்தாள்.மிரண்டு போய்ட்டேன். கண்ணீரோடு கோவத்தை கலந்து எய்தும் பார்வையம்பு, உயிர் நீங்கலாக திராணி அனைத்தையும் உறிஞ்சிச் செல்லும். உண்மை மக்களே!

வார்டன் சிஸ்டர் முன்னிலையில் முட்டி போட்டபடி அழுதுகொண்டிருந்தாள்.பதினோர் மணி சுமாருக்கு அலுப்பாய் வந்தாள். நானும் ஜான்சியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தோம்.

காலையில் வழிபாடு முடிந்து திரும்பும் போது கவனித்தேன் அவளும் ஜான்சியும் பேசிக் கொள்வதை. ஏதோ பெரிய பிரச்சினை. ஜான்சி அவளது ஊரைச் சேர்ந்தவள்.இராமேஸ்வரம் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். நிறைய மீனவக் குடும்பங்கள். ரோஸியின் அப்பாவும் மற்ற சொந்தக்காரர்களும் மீன்பிடித்தொழிலை ஆதாரமாக கொண்டவர்கள். பெருந்தனக்காரர்கள் தான். பணமோ சாதாரண வாழ்வாதார பிரச்சனைகளோ இல்லை. என்னவாயிருக்கும்?
மதியம் உணவு இடைவேளை முடிந்து திரும்புகையில் காய்ச்சலென சொல்லி படுத்துக் கொண்டிருந்தாள்.சாப்பிடவுமில்லை. அவள் குழுவினரெல்லாம் அதீதப் படிப்பாளிகள். அவர்கள் கவனம் படிப்பிலிருந்தது.
நாளை மறுநாள் வரை தேர்வுகள் நெருக்கிப் பிடிக்கும்.ஏன் இந்த லூசு இப்படி சோம்பித் திரியுது. கேட்கலாம் தான். ஆனால் அனல் பார்வைக்குப் பயம்.மெதுவாய் லில்லி சிஸ்டரிடம் சொல்லி வைத்தேன்.
“நீயே போய் படின்னு சொல்றதுக்கென்ன ?”
“அவ என் எனிமி சிஸ்டர். நான் சொன்னா முறைப்பா”
“நீதாண்டி அவ பெஸ்ட் பிரண்ட். அவளும் படிக்கணும்ன்னு நெனைக்கிறேல்ல அதான்.என் செல்ல டெடி” சினேகமாய் தோளில் கைபோட்டு அழைத்து போனார். இப்படியான தருணங்களின் மிகவும் பெருமையாக இருக்கும்.பாத்தீங்களா நான் தான் இவங்களுக்கு ரொம்ப பிடிச்சமான மாணவின்னு ஒரு கர்வத்தோடும், எதிரில் வருபவர்களின் எரிச்சல் கலந்த முகத்தையும் பார்ப்பதில் அலாதி ஆனந்தம்.

அதன் பிறகு, தினமும் வழிபாடு முடிந்து திரும்பும் போது லில்லி சிஸ்டருடன் ரோஸி பேசினாள்.என்ன பேசுவார்களென்று தெரியாது, ஆனால் சொல்லும் ரோஸியும் கேட்கும் சிஸ்டரும் கலங்குவது பார்பவருக்கு எளிதில் விளங்கும்.
இரவு நேரத்தில் தூங்குமுன்பு மாதாவின் முன் அமர்ந்து வெகு நேரம் கண்ணீரொழுக பிராத்திப்பாள்.எப்போதும் சிஸ்டருடன் தான் அவளைப் பார்க்கமுடிந்தது. எனக்குள் வெறுப்பும் எரிச்சலும் மண்டிக் கிடந்தது.
அரையாண்டுத் தேர்வு முடிந்து மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் வெகு ஜோராய் அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். அப்பா எதோ மாநாட்டுக்கு மதுரை வருவதாயும் இரண்டு நாள் கழித்து அழைத்துச் செல்வதாயும் தொலைபேசிச் சொல்லிவிட்டார்.அதாவது பதினோரு நாள் லீவில் இரண்டு நாட்கள் இங்கேயே போய்விடும். அதிலும் கொடுமை ரோஸியும் நானும் மட்டுமே தனித்திருக்க வேண்டும். ஆறுதல் சாப்பாடு மிகப்பிரமாதமாய் இருக்கும்.கூடவே லில்லி சிஸ்டருடன் பேசலாம்.

நூற்றியிருபது பேர் இருந்த இடத்தில் இப்போது நான்கே பேர். அதில் இருவர் வார்டன் அக்காக்கள். ஏனோ அமைதி சகிக்கமுடியவில்லை. இரண்டு மணிநேரம் கூட என் வீம்பு பலிக்கவில்லை.
“ஏண்டி எப்பப் பாத்தாலும் அழுதுட்டேயிருக்க?” மௌனத்தை உடைத்தே விட்டேன்.
“”
“ஆமா நீ ஏன் ஊருக்குப் போகல? ஜான்சி லிசா கூடத் தானே போவ? ஏன் போகல?”
“”
“நீ என்கிட்ட தான் பேசனும் வேற வழியேயில்ல. ரெண்டு நாள் தான் அப்றம் நீ இப்டியே இருந்தாலும் யாரும் கேக்கப்போறதில்ல”
“”
“பேசமாட்டியா? நான் லில்லி சிஸ்டர்கிட்ட சொல்லிடறேன். நானா பேசினாலும் அவ முகத்தத் தூக்கி வச்சிக்கிறான்னு”
“நீ தான் அவங்க கிட்ட சொன்னியா?” முத்து உதிர்ந்தது.
“ஆமா. நீ ஏண்டி அழற?”
“”
அத்தனை எளிதாய் பதில் வரவில்லை.
நடு இரவில் அவள் எழுந்து பிராத்தனைக் கூடத்துக்குச் செல்வது தெரிந்தது.
“யாரு யாரு?” வார்டன் அக்காக்கள் குரல் பதற்றமாய் ஒலிக்கவே திடுக்கிட்டு நின்றாள். நாலாப்புறமும் தாளிடப்பட்ட அந்த பெரிய ஹாலிலிருந்த ஒரு பக்கத்துக் கதவைத் திறந்தால் பிராத்தனைக்கூடம். இன்று பாதுகாப்புக் கருதி எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது.தூக்கம் கலைந்த எரிச்சலில் குதறி விட்டனர்.பாவம் அழ ஆரம்பித்தாள்.

“என்ன தாண்டி உம் பிரச்சினை? எப்பப் பாத்தாலும் அழுதுக்கிட்டே.....என்கிட்ட சொல்லுடி”
“யாருக்கிட்டயும் சொல்ல முடியாதுடி”
“லில்லி சிஸ்டர்கிட்ட மட்டும் சொல்ற”
“அவங்களுக்குப் புரியும்”
“எல்லாம் எங்களுக்கும் புரியும் சொல்லு”
”எல்லாமேயிருக்குடி எனக்கு ஆனா உசுரு தான் இல்ல”
“ஹா ஹா அப்ப பேய்கிட்ட பேசிட்டு இருக்கனா” மொக்கைத்தனமாகச் சிரித்தேன் என்பது அவள் இளக்காரப் பார்வை உணர்த்தியது.
“சரி சரி சொல்லு”
“வாழ்க்கையில தோத்துட்டேண்டி.என் அத்தை பையன் நான் உயிரா காதலிச்சவன் வேரொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். எங்களவிட வசதி. பெரிய இடம்.மொத்தமா அவன வெறுத்தேன் என்னை ஏமாத்திட்டான்னு”
”ம்ம்”
“அவன் போன வாரம் ஒரு ஆக்சிடெண்ட்ல செத்துப் போய்ட்டான்”
“ஓ!உனக்கு செஞ்ச பாவம்.விடுடி.உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்”
“அப்டி சொல்லாதேடி.என்னை சிஸ்டராக்க போறதா என் அப்பா சொல்லியிருக்கார். எங்களுக்குள்ள இருந்த பாசம் தெரியல அப்பாக்கு அதான். இவனும் எதும் சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கான்.இப்ப தாண்டி தெரிஞ்சது”
“உங்கிட்ட உங்கப்பா கேக்கலியா?”
“இல்ல இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு பார்த்திருப்பார்.அதுக்குள்ள... கடவுளே!நான் நெனைச்சது ஒண்ணு எனக்கு நடக்கறது ஒண்ணு”
“கஷ்டமா இருக்குடி”
“இப்ப இந்த லீவுக்கு கூட எனக்கு வீட்டுக்கு போகப் பிடிக்கல, இங்கயே தான் இருக்கணும் போல தோணுது.லில்லி சிஸ்டர் தான் என்னை சமாதானம் செஞ்சாங்க. என் வலி அவங்களத் தவிர யாருக்கும் புரியாதுடி. அப்பாகிட்ட பேசினாங்க. கொஞ்ச நாளைக்கு ஊருக்கு வரவேணாம் இங்கயே இருக்கணும்னு.இந்தத் தோல்வி முடிவில்லடி வாழ்க்கைக்கு நெறைய அர்த்தமிருக்கு.முடிஞ்சதப் பத்திப் பேச என்னயிருக்கு? தேங்க்ஸ்டி நீ மட்டும் அவங்க கிட்ட சொல்லலன்னா நான் வேற எதாவது முடிவுக்கு போயிருப்பேன்”
எனக்கும் ஏதோ புரிந்தது.
மறுநாள் பிரார்த்தனையில் நான் தூங்கவில்லை.ரோஸிக்காகவும் மன்றாடினேன். அரையாண்டு லீவு முழுவதும் விடுதியிலே கழிந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வெளிவரும் போது நாங்களிருவரும் நேயமிகு எதிரிகளாயிருந்தோம். எதிரி என்று எப்போது சொல்லிக் கொண்டாலும் உடனே கண்முன் வந்து நிற்கும் அந்த ஒடிசலான கறுத்த உருவத்துக்கு நான் ரோஸியென்று பெயரிட்டிருக்கிறேன். எரிச்சல் மூட்டாமல் சிரிக்க வைக்கிற எதிரிகளுள் அவளும் ஒருவள்.
நண்பர்கள் சடுதியில் கிடைத்து விடுவார்கள்.ஆனால் ஆத்ம நண்பர்கள்? எதிரிகளும் சட்டென முளைத்துவிடுவார்கள். ஆனால் அங்கீகரிகப்பட்ட எதிரியென்று ஒரு விசயம் உள்ளதல்லவா..

பள்ளி முடித்து பலகாலமாகிற்று.

என்னை உங்களுக்கு நினைவிருக்குமா சிஸ்டர்? இப்பவும் நான் உங்க பாசத்துக்கு ஏங்குற அதே டெடி தான் சிஸ்டர். என்னை அடையாளம் தெரியுமா உங்களுக்கு? உங்களின் சின்ன விலகல் பார்வை கூட என்னை நொறுக்கிவிடுமென்பதாலே விலகியே நிற்கிறேன்.தோல்விகள் என்னை அமிழ்த்தும் போதெல்லாம் மூச்சுக் குமிழிகள் உங்களைத் தான் தேடுகிறது. ஒரு தேவகரம் என் தலைமயிர் பற்றி கரை சேர்கிறது.நினைவு வரும்போது தலையணை நனைக்கும் கண்ணீருடன் மேலே சுழலும் மின்விசிறி.உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறது.
ரோஸி, மை டியர் எனிமி. உனக்கு என்னை நினைவிருக்கா? என்னைப் பற்றி நினைக்கும் போது நீயும் சிரித்துக் கொள்வாயா?

உயரிய சேவையினால் - கலங்கமற்ற அன்பினால் - தன்னலமற்ற பாசத்தால் - நீங்களிருவரும் எப்போதும் என் நினைவில் இருக்கிறீர்கள்.

லில்லி சிஸ்டர் அதே கருணையுடன் என்னைப் போல பல்லாயிரம் மாணவிகளுக்கு தாயாக அங்கேயே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ரோஸியும் பல்லாயிரம் மாணவிகளுக்கு ஆசானாக ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக மிகச்சிறப்பாகச் செயல்படுகிறாள்.

வாழும் தெய்வங்கள். வணக்கத்திற்குரியவர்கள்!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!