Tuesday, February 16, 2010

வளர் நிலை

புற‌ம்பேசிப் புற‌ம்பேசி
சுய‌ம் இழ‌ந்த‌ கூட்ட‌த்தில்
இறுக்கிப் பிடித்த‌ உயிரோடும்
பாசச் சறுக்கல்களில்
ப‌ட்ட‌ அடிகளின் வடுக்க‌ளோடும்...

கையறு நிலை வந்தும்
கைபிடித்த தன்மானத்தில்
நாளை விடிந்துவிடும்
அனிச்சையாய் உயிர்த்தெழுந்து...
ஏவ‌ல்க‌ளை எல்லாம்
இன்ப‌மாய்ச் சும‌ந்த‌படி...

எத்த‌னை தான் கொட்டினாலும்
இதற்கு உணர்வே வ‌ருவ‌தில்லை
ஏமாற்றங்களின் எதிரொலிப்பாய்
முன்னிலும் ப‌ல‌மாய்
ப‌ல்முனைத் தாக்குத‌ல்!

உள்ளெழும்பும் 'வளி'யிட‌த்து
வ‌லுவிழ‌க்கும் நாக்கு - அது
எய்த‌வ‌ன் வீரியத்தில்
இன்ன‌மும் ஆட்ட‌ம் போட‌

சீழ்பிடித்த பற்களினூடே
சீர‌ழியும் தமிழும் - அத‌ன்
சீற்ற‌மிகு வார்த்தைக‌ளும்
வரம்ப‌ழிந்த நாற்ற‌ங்களும்
'சிவனேயெனச்' ச‌கித்த‌ப‌டி..

சித‌றிய‌ வார்த்தையெல்லாம்
பழிச்சொல்லாய்ப் பரிணமித்தும்
மாசற்ற‌ மனச்சாட்சியின்
மரபு சார்ந்த வழிநடத்தல்!

க‌ண்ணீரில் க‌ரைந்த‌ ம‌னம்
வார்த்தைக் கொப்ப‌ரையில்
வழுக்கி விழும்!
விழுந்த வேகத்தில்
துடித்து எழும்
தாக்க வரும் வறுமைக்கு
தோதான‌ பதில் கொடுக்க!

வழக்கம் போல் இப்போதும்
தாய்க்குள‌வி கொட்ட கொட்ட
விஷம் வாங்கும் சேய்ப்புழுவென‌
சமுதாய வீதிகளில்
வாழ்க்கை பயிலும்
பாரதியின் புதுமைப்பெண்கள்(!)
ஆணுக்கு நிகராய்
பட்டமும் பதவியும்
அணியாய் கொண்டு!


Monday, February 15, 2010

கண்ணால் காதல் பேச வா!

[காத‌ல‌ர் தின‌த்துக்கு எதுவும் எழுத‌லைன்னா எப்ப‌டி? க‌டையில‌ இப்போ கதையும் கீது

வாத்தியாரே! அறிமுக‌ச் சலுகையா படிக்க விலை, வ‌ரி ரெண்டுமே கெடையாது. மெய்யாலுமே இது ப்ரீ தாம்பா. சாப்டு பாத்து அப்பால‌ உப்பு புளி காரம் எல்லாம் கரீட்டான்னு பின்னூட்டம் போடுங்கப்பா.]

*********************

பிப்ர‌வ‌ரி 14,2010, 4:15 pm

என்ன பண்ணிக்கிட்டிருக்கே.

சும்மா தான். தனியா உக்காந்து படிச்சிட்டுருக்கேன்.

ஏன் யாருமில்லையா?

ஆமாம். வெளியே போயிருக்காங்க. நான் படிக்கனுமின்னு போகல.

படிக்கறியா. சரி படி. நான் உன்னை இன்னிக்கு வெளிய அழைச்சிட்டுப் போக‌லாம்னு நெனைச்சேன்.

என்ன‌ திடீர்ன்னு?

இன்னிக்கு தாம்பா வீட்டுல‌ இருக்கேன். வேலை எதுவும் கிடையாது. அதான்..

ஓகோ. உங்க‌ளுக்கு வேலை இல்லையின்னா தான் அடுத்தவ‌ங்க‌ள‌ ப‌த்தி நெனைப்பீங்க‌ளோ?

அப்படியில்ல......ச‌ரி. ப‌டி. இன்னொரு நாள் போக‌லாம்.

ப‌ரீட்ச்சைக்கு ஒரு மாச‌மிருக்கு.

அத‌னால‌ என்ன‌? ப‌டி. நீயெல்லாம் இப்போயிருந்து ப‌டிச்சாத்தான் பாஸாவ‌து ஆவே.

யேய்.........

ஜீவ‌னிழ‌ந்த‌து அலைபேசி.

************************

பிப்ர‌வ‌ரி 14,2010, 5:30 pm

என்ன‌ ப‌ண்ணிக்கிட்டிருக்கே.

ம்ம். காது குத்திக்கிட்டிருக்கேன்.

உங்கப்பாவுக்கா? அதான் எங்க‌க்கா குத்துறாளே போதாது? நீ வேற‌யா?

திமிரு. ரொம்ப‌ அதிக‌மாயிடுச்சு. ச‌ரி தொந்த‌ர‌வு ப‌ண்ணாதீங்க நான் ப‌டிக்க‌ணும்.

ச‌ரி ப‌டி. வாட்ச் மேன் கிட்ட ஒரு கிஃப்ட் த‌ந்திருக்கேன் ம‌ற‌க்காம‌ வாங்கிக்க‌.

வாச‌ல்யா? இவ்வ‌ளவு தூர‌ம் வ‌ந்திட்டு.... இருங்க‌ தோ வ‌ந்துட‌றேன்...

வேணாம் வேணாம் நீ ப‌டி. ப‌ரீட்சை இருக்குல்ல‌.

ப‌ர‌வால்ல‌. பாத்துக்க‌லாம்.

ம்ம்.அப்படீன்னா சரி. வா. சீக்கிர‌ம்.

**********************

பிப்ர‌வ‌ரி 14,2010, 5:45 pm

என்ன இத்தன அலங்காரம். வெளிய போறியா?

பெச‌ன்ட் ந‌க‌ர் வ‌ரைக்கும் போக‌லாமா?

நாங் கேட்ட‌துக்கு ப‌டிக்க‌ணும்னு சொன்னே.இப்போ ... எனக்கு வேலையிருக்கே.

முடியுமா? முடியாதா?

ம்ம். ராட்ச‌சி. முடியாதுன்னா விட‌வா போறே. ச‌ரி வா.

***********************

பிப்ர‌வ‌ரி 14,2010, 6:15 pm

என்ன‌ இன்னிக்கு இத்த‌ன‌ கூட்ட‌ம்? ஜோடி ஜோடியா?

காத‌ல‌ர் தின‌ம் அதான்.....

கொஞ்ச தூரம் த‌ண்ணீல‌ கால‌ ந‌னைச்சுக்கிட்டே ந‌ட‌க்க‌லாம்பா

கொஞ்ச‌ம் யோசிச்சுப் பாரு. இப்போ சுனாமி வ‌ந்தா எப்ப‌டியிருக்கும்?

ம்ம்ம். அசிங்க‌மா இருக்கும்.

லூசு. ஒன‌க்கொரு விச‌ய‌ம் தெரியுமா? ந‌ம்ம‌ ம‌துரையில‌ க‌ட‌ல் இருந்துச்சாம்...

லெமூரீயாக் க‌ண்ட‌ம் ..க‌ட‌ற்கோள்.. மெதுமெதுவாய் சிந்து ச‌ம‌வெளி வ‌ரை போன‌வனை எரிப்ப்து போல் பார்த்துவிட்டு...

நாம‌ போக‌லாம். ப‌டிக்க‌ணும் என‌க்கு.

நான் அறிவார்த்த‌மா ஏதாவ‌து பேசுனா உன‌க்கு இப்போல்லாம் பிடிக்கிற‌தேயில்ல. என்ன‌ ப‌ண்ணுற‌து உங்கிட்ட‌ இல்லாத‌ அறிவு என்கிட்ட‌ அடைக்க‌ல‌மாகியிருக்கு. எல்லாம் விதி. கோவ‌ப்ப‌ட‌க்கூடாது.

போதும்.. போதும் உங்க‌ சுய‌விள‌ம்ப‌ர‌ம்.. போக‌லாம்.

************************

பிப்ர‌வ‌ரி 14,2010, 6:40 pm

கூட்ட‌த்தைக் க‌ட‌ந்து வ‌ண்டியிருந்த‌ இட‌த்துக்கு வ‌ருவ‌த‌ற்குள் க‌ல‌வையான‌ காட்சிக‌ள்.

வீசும் இள‌மையில் குளிர் காய்ந்த‌ப‌டி ... அனைவரையும் கடந்த போது அவனை கவனித்தாள். செல்ல சிணுங்கல்களையும் , முத்தச் சத்தங்களையும் அலட்சியம் செய்தவாறு அவளை பத்திரமாய் இருப்பிடம் சேர்ப்பதே குறி எனக் கொண்டதாய் பட்டது.

எப்ப‌டிச் சொல்வ‌து...

இந்த‌ ம‌ர‌த்திட‌ம் எப்ப‌டி காத‌லைச் சொல்வது?சொன்னா மட்டும்.... படிக்கிற வயசுல எதுக்கு காதல் கத்திரிக்காயின்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடும்... அம்மா அப்பாகிட்ட.. தாத்தா பாட்டின்னு வீடே நாறிடும் ... வேணாம்...

கொஞ்ச‌மாவ‌து புரியுதா பாரு. நெடு நெடுன்னு வ‌ள‌ந்திருக்கே த‌விர‌ கொஞ்ச‌ங் கூட‌ .....

"ஏய் என்னாச்சு? ஏன் கண்ணெல்லாம் க‌ல‌ங்கியிருக்கு...."

"ஒண்ணுமில்ல‌."

"த‌லைவ‌லிக்குதா? சாப்பிட‌றியா ஏதாவ‌து?"

"ஒண்ணுமில்ல‌. நான் வீட்டுக்கு போக‌னும்"

"ச‌ந்தைக்கு போக‌னும். காசு குடு. ஆத்தா வையும்"

அவ‌ள் ஆற்றாமையை அவ‌ன் கேலியால் கிள‌றிவிட‌வும்.... அட‌க்கி வைத்த‌ க‌ண்ணீர் அருவியாய் ...

"என்ன‌டா செய்யுது?" உண்மையிலே ப‌த‌றிய‌வ‌னாக‌ அவ‌ன் கேட்க‌வும்.

"ஒண்ணுமில்ல‌ மாமா. என்னை வீட்டுல‌ விட்டுடுங்க‌. பிரெண்ட்ஸ் தேடுவாங்க‌. நான் வேற‌ சொல்லாம‌ வ‌ந்துட்டேன் "

"அவ்ளோதானா. நான் வேற‌ ப‌ய‌ந்து போயிட்டேன்."

*************************

எதிர்பார்த்து ஏமாந்து போய்... அந்த‌ ஏமாற்ற‌த்தையும் மூடி ம‌றைக்க‌ ... எத்த‌னை அவ‌ஸ்தை? அவ‌ன் பேசிய‌ எதுவுமே ஏற‌வில்லை மூளைக்குள். எத்த‌னை இய‌ல்பாய் இருக்கிறான். இவ‌னால் எனக்குள் இத்த‌னை மாற்ற‌ம். தெரிந்தால் நிச்ச‌ய‌ம் பார்ப்ப‌து கூட‌ இல்லை என்றாகி விடும். ம‌றைத்திடு ம‌ன‌மே.

அவ‌ள் அவ‌னின் முறைப்பெண். சென்னையில் த‌ங்கி முதுக‌லை இறுதியாண்டு ப‌டிக்கும் மாண‌வி.

அவ‌ன் அவ‌ளின் தாய் மாம‌ன்.அம்மாவின் சித்தப்பா மகன். ஒரு த‌னியார் நிறுவ‌ன‌த்தில் ப‌ணி. எப்போதாவ‌து இவ‌ர்க‌ள‌து ச‌ந்திப்பு நிக‌ழும். அம்மா த‌ந்தனுப்பிய‌ திண்ப‌ண்ட‌ங்க‌ளுக்காக‌வோ, இவளை ஊருக்கு வ‌ழிய‌னுப்புவ‌தின் நிமித்த‌மாக‌வோ நிக‌ழும் ச‌ந்திப்புக்கள் அவன் வரையில் இயல்பாய் இருக்க, ஏனோ இவ‌ளை ம‌ட்டும் அவ‌ன் பால் இழுத்திருந்த‌து.

*************************

பிப்ர‌வ‌ரி 14,2010, 7:10 pm

"சொன்ன‌து எல்லாம் விள‌ங்குச்சா?"

"ம்ம். என்ன சொன்னீங்க?"

"ஆகா. இவ‌ளுக்கு ஏதோ பேய் பிடிச்சிடுச்சு. ஊருக்கு கூட்டி போய் ம‌ந்திரிக்க‌னும். வீடு வ‌ந்திருச்சு இற‌ங்கு"

"ஏய் என்ன‌ ஆச்சு ?"

உலுக்கியவனை பார்த்தாள், அவன் ஏதோ சொல்ல வந்து தடுமாறுவதாய்...

இதாவது சொல்லுறதாவது... அப்படி ஏதாவது நடந்தா உலகம் அழிஞ்சிரும்.

எரிச்ச‌லாய் த‌லை நிமிர்த்திய‌வ‌ள் அவ‌னின் நேரான‌ பார்வையில் சிக்குண்ட‌வ‌ளாய் மீண்டும் த‌ரை நோக்கினாள்.

"ச‌ரி. நான் வ‌ர்றேன்."

"கொஞ்ச‌ம் இரு."

"என‌க்கு பொண்ணு பாக்குறாங்க‌. நான் உங்க‌ப்பா கிட்ட‌ கேக்க‌ போறேன் நீதான் வேணும்னு.நீ என்ன‌ சொல்லுற?" என்றவன் நிறுத்தி, "நீ என்ன‌ சொல்லுவேன்னு தான் தெரியுமே."

நம்ப முடியாமல் "எப்ப‌டி?" என்றாள்.

"உன் க‌ண்க‌ள் பொய் சொல்லாது என்கிட்ட‌."

விட்டுப் பிரிகையில் கைக‌ளை பிடித்திழுத்த‌வ‌ன்....

எதிர்பாராத கணத்தில் க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டு ர‌க‌சிய‌மாய்

" நான் உன்னை காத‌லிப்ப‌தும் என‌க்கு எப்போதோ தெரியும் ... ஆனா இன்னிக்குத் தான் தெரிஞ்சுது நீயும் என்னைக் காத‌லிக்கிறேன்னு.வாட்ச் மேன் கிட்ட இருக்க பரிச பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும். அதுக்குள்ளேயும் ..." கிசுகிசுப்பாய் சொல்லி விட்டு கிள‌ம்பிப் போனான்.

அவ‌ச‌ர‌ க‌தியில் நிக‌ழ்ந்த‌ மாற்ற‌ங்க‌ள் க‌ன‌வ‌ல்ல‌ நிச‌மென‌ புரிய‌ மீண்டும் அழுதாள்.இம்முறை பெருகிற்று ஆன‌ந்த‌ க‌ண்ணீர் காத‌லோடு.

Saturday, February 13, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

எங்க‌ இவ‌ர‌ காணோமுன்னு தேடுற நெறய பேருக்கு இவரு காணாம போயிட்டாருங்குறத தெரியப்படுத்துற பதிவு! பாத்து கவனமா படிங்க சாமி!

பெயர் : பசுநேசர் திரு இராமராஜர் அவர்கள்

வயது : நேத்து தான் 16 முடிஞ்சி இன்னிக்கு 17 ஆரம்பிச்சிருக்கு

அடையாளம் : காணாமல் போன அன்று ஒப்பனை இல்லாததால் அடையாளம் காண்பது கடினம்.குத்து மதிப்பாய் இப்படி இருந்தார் எனக் கொள்க!(1/2 அங்குலம் ஒப்பனையோடு கற்பனை செய்துக்கோங்க!)



மேலதிக தகவல் : பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார் (வயசு(?) எங்கயோ உதைக்குதுல்ல! இவுரு தமிழ் சினிமா பிரபலமுங்கோ!) எனவும், மக்கள் சேவை செய்வதாய் சொல்லி அங்கே போய், மத்தியான நேரங்களில் குறட்டை விட்டு சபையின் செயல்பாட்டை கெடுத்த குற்றத்துக்கு அவைத் தலைவர் பசுநேசர் நடித்து(சொதப்பிய) படங்களை ஆயுள் முழுவதும் பார்க்க கட்டளையிட்டார் எனவும் அறியப்படுகிறது.ஒரு நாள் இரவுக்குள் முழுக்க முழுக்க மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!


தனித்திறமைகள் :

1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்
2. சேர்ந்து நடிக்கும் கதாநாயகிக்கும் சேர்த்து தானே ந‌ளின‌த்துட‌ன் ந‌டிக்க‌த் தகுந்த‌ சிற‌ந்த‌ ந‌டி(கை)க‌ன்.
3. குடுத்த‌ கூலிக்கு மேலாய் கூவுவ‌து இவ‌ர‌து வ‌ழ‌க்க‌ம்.
4. கரகாட்டம் கூட சரியா வராதுன்னு கேள்வி!
5. உதட்டுச் சாயம் தயாரிக்கும் நிறுவனங்கள் இவரை அணுகலாம் விளம்பரத்துக்கு!


பின்குறிப்பு:

மொக்கை பதிவு கேட்ட வாசக உள்ளங்களுக்கு சமர்ப்பணம்!!


Wednesday, February 3, 2010

வெளிச்சம் போர்த்தாத இரவுகள்






திரியோடு உனக்கென்ன சம்பந்தம்?
உடன் எரியும் அளவுக்கு!
விளக்கோடு விளையாடும்
விட்டில் பூச்சி!

மிருகம் மாறி மனிதன் ஆனதாய்...
பின் எப்படி,
ஒரு கொசுவின் சீண்டலில்
சட்டென சாத்தான் பிரவேசம்?
ஓ! உன் பலம் எப்போதும்
இளைத்தவனிடத்தில் மட்டும்!

இருள் இரவின் அழகு!
நிலவொளியில் பூமி
வார்த்தைக்கு எட்டாத சோபிதம்!
வெளிச்சம் போர்த்தாத
நகரத்து இரவுகள்
மின்வெட்டு உபயத்தில்!

அய்யோ! அது என்ன?
ஒரு விண்மீன் தற்கொலை!
படபடப்பை போக்க
'பச்சை மரத்தைப் பார்'
தோழி சொன்னாள்!
விழுந்ததின் தடம் எப்படியிருக்கும்
விபரீத மூளையில் வானாராய்ச்சி!

தூக்கத்தோடு துக்கத்தின்
சாயலும் அறவே அகன்றது
மேகத்தின் பூந்துவலை துவட்டலில்
நாணமுறும் பெண்மகவாய்
வெண்ணிலவை பார்க்குகையில்.....

மின்பொறிக்குள் அடங்காத
இயற்கையின் ஆளுமை!
தென்றலாய்,இருளாய்,
த‌ண்ணொளியாய்...
சொகுசான வாழ்க்கை
இதுவரை
தொலைத்தது இயற்கை
நிரம்பிய வாழ்க்கை எனப்பட்டது
சில்வண்டுகளின் ரீங்காரத்தோடு
மின்மினிப் பூச்சிகளின்
ஊர்வலத்தை காணும் போதில்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!