Sunday, October 20, 2013

கலவையான உணர்வுகள்

*
**
ஒரு மழை நாளில், நான் பாதி நனைந்தபடியும் அந்த கர்ப்பவதி முழுக்க நனையாமலும் ஒரே குடையின் கீழ் சாலை கடந்தோம்.சாலையின் மறுபுறம் சென்றடையவும் அவளது பேரூந்து வரவும் நன்றி கூடச் சொல்லாமல் கடந்து போனாள் அந்தப் பெண். சுணங்கிப் போனது மனது. நன்றிக்கென உதவி செய்யவில்லையெனினும் நன்றிகள் பெரும்பாலும் நாகரிக பழக்கத்தின் விடைபெறும் அடையாளமாக மாறி விட்டது.

என் குடையில் வீடு வரை தனியே நனையாமல் தான் வந்தேன். எவருக்கும் நன்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று இறங்கிய கணத்திலிருந்த மகிழ்வும் நிம்மதியும் தனித்த என் பயணத்தில் இல்லை. அற்புதமான அந்த கணங்களுக்காகவேணும் நன்றி சொல்லியாகவேணும் மானசீகமாக. இப்படியே நினைத்துக் கொண்டிருந்தேனா பிறகு வந்த விடியலில் வழக்கம் போல் மறந்தும் போனேன்.

காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த நாட்களில் பிஸியோதெரபிஸ்டுக்கென காத்திருக்கையில் அங்கே உதவியாளராக இருந்த முகம் பரிச்சயமானதாயிருக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகமெல்லாம் சிரிப்பாக கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ சொல்ல வந்தவள் என் தளர்நடையில், ‘என்னாச்சு மேடம்? அடியா? காலிலயா? எங்க காட்டுங்க? என்றபடி பெரிய வயிற்றுடன் குனிந்து சரிபார்த்தாள். அதில், கடமையைத் தாண்டிய சினேகமிருந்தது.

*
**
எங்கள் தெருவில் கூர்க்காக்களே இல்லை.

நேற்றைய தினம் பத்து ரூபாய் வேண்டி நடுத்தர வயதில் ஒருவர் வந்து நின்றார்.தான் இந்த ஏரியாவின் கூர்க்கா என்றார். எப்படி நம்புவதென்று பெரிதாய் விவாதங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருந்தேன். எனக்கும் ஹிந்தி
தெரியுமென்று பீற்றிக் கொள்ளும் தருணங்களவை. ”ஜீ! மேடம்” என்றவாறே ஆமோதித்துக் கொண்டிருந்தார். வேலையே செய்யாது என்னை ஏமாற்றப் பார்க்கிறார். எப்படி சகிப்பது? தர முடியாதென சொல்லவா இத்தனை பேசினாய் என்பாரே! போனால் போகிறது பத்து ரூபாய் தானே? அவரிடம் ஐம்பது ரூபாய் தந்து பால் பாக்கெட் ஒன்று வாங்கி வரச் சொன்னேன். நகர்ந்ததும் தான்உறைத்தது. பத்து ரூபாயோடு போக வேண்டியது. ஐம்பது ரூபாய் தந்து ....இப்படியா இருப்பாங்க. நீ சரியான ஏமாளிடீ! பதினைந்து நிமிட இடைவெளியில் அவரைக் குறித்து ஏதும் சிந்திக்காமல் நான் ஏமாளியாகப் போகும் கணங்களை வெறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரின் நம்பகத்தன்மை குறித்த எனது பார்வை எப்படி சரியானவையாக இருக்க முடியும்? சற்று நேரத்திற்கெல்லாம் 17 ரூபாய் போக 33 ரூபாய் சில்லரையுடன் வந்து நின்றார். மன்னிப்பு கேட்டிருந்திருக்கலாம். எங்கேவிட்டது என்னுள்ளிருக்கும் முரட்டுக்குணம். மாறாக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுடன் பத்து ரூபாய் தந்து அனுப்பினேன்.

 நல்லிரவில் கவனித்தேன் கூர்க்காவின் விசில் சத்தம். அது அவராகவும் இருக்கலாம். நம்பிக்கையுடனிருப்பதற்கும் வாழ்வில் காரணங்கள் இருக்கின்றன.

*
**

வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக் கொடுக்க இருப்பவனையும் மூன்று முறை தன்னைத் தெரியாதென மறுதலிக்க இருப்பவனுக்கும் சேர்த்தே தன் உடலையும் செந்நீரையும் அப்பமும் திராட்சையுமாக அந்த கடைசி விருந்தில் பந்தியிட்டார் இயேசு. அதே புன்னகையுடன் ஆரத்தழுவி உச்சி முகர்ந்து என்னை சுவாசித்து பிரிந்ததொரு நல்உறவு.

மெசியா போலில்லை.

விம்மி விம்மியழுதேன். என்னை துவேசித்து உமிழ்ந்ததற்காகவும், யாரென்றே தெரியாதென சொன்னதற்காகவும்.

யோசித்துப் பார்த்ததில் பிடிபட்டது பிழை. இடியாப்பமும் குடல் குழம்பும் பரிமாறிவிட்டேன். ஆப்பமும் திராட்சை ரசமும் உண்ணத் தந்திருந்தால் ஒரு வேளை நான் மெசியாவின் மனனிலையில் ஜீவித்திருக்கக் கூடும்.

தேற்றுதலுக்கென சப்பைக் காரணங்களுக்கா பஞ்சம் நம்மிடத்தில்...

#நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...

*
**
நண்பர் ஒருவர்.

பைக் ஆக்சிடெண்டாகி பிழைத்ததே அதிர்ஷ்டம். அதிலும் தலையில் அடிப்பட்டதில் இன்னும் நினைவு ரீதியான பிரச்சினைகள் சரியாகவில்லை. உணவின் சுவை கூட இன்னும் விளங்கவில்லை.

’தீபாவளிக்கு ஊருக்கு போகலயா?’

’இல்லப்பா’

’ஏன்?’

’நான் பஸ்ல ஊருக்கு போயி பத்து பதினைஞ்சு வருசமாச்சு.’

’ஓ அப்ப டிரைன்லயா போறீங்க?’

’இல்ல’

’பிளைட்? உங்கூருக்கு கப்பல் ப்ளைட்லாம் போகாதே!’

’நக்கலா? நான் எங்க போனாலும் பைக்ல தான் போவேன்.’

அவருக்கு ஏதோ ஒரு கிராமம் நாகர்கோவில் பக்கத்துல. 600 கிமீ க்கு மேலேயே இருக்கும். தீபாவளி அன்னிக்கு ஊரு நினைவு வந்து ஆக்சிடெண்ட் ஆனது மறக்கக் கூடாது.

கவனமா இருங்கப்பா. இதிலெல்லாம் என்ன கெத்து வேண்டிக் கெடக்கு.. பஸ்ஸோ ட்ரைனோ பிடிச்சி போறதுக்கென்ன? டிக்கெட் கிடைக்குமா என்பது தனி.. ஆனா பயமில்லாம இருப்பமில்ல நாங்களும் ? இதுல போற போக்குல என்னையும் மெரட்டிவுட்டுறது.. இன்னிக்கு தான் இது மாதிரி டென்சன்லாம் என் தலையில ஏறும்.
*

கனவில் பயணங்கள் - 2

உன்னைத் தேடிய பயணங்களில்
நான் மடிவதுவும்
நம் காதல் பிழைத்துக் கிடப்பதும்
நித்தியப் பிழையெனினும் நீட்டித்தே
கனவு பழகுகிறேன்
நெடும்பயணத்தின் முடிவில்
இறங்கிய பேரூந்தொன்றில்
பயணச்சுமைகளேதுமற்று
மனச்சுமை தாங்கி வருகிறேன்
புது நிலம்
புது மக்கள்
புது மொழி
தென்படும் முகங்களிலெல்லாம்
தமிழே இல்லை
விரல் பிணைத்து நடந்த பாதைகளையெல்லாம்
கால்கள் புலனாய்வு செய்கின்றன
தடங்கள் எதுவும் தென்படவேயில்லை
வீடு திரும்பலுக்கென அல்லாடும் மனதை
கூடலின் கனவுகளினுள் திருப்புகின்றேன்
கடக்கும் கண்களில் சில ஏதோவொரு கொடூரத்தின்
ஞாபகம் தெளித்து மறைகின்றன
சடாரென்று மழை வருகிறது
நிழற்குடையில்லா மண் சாலையில்
மரக்குடைக்கென ஒதுங்குகிறேன்
வெட்டும் மின்னலும் உறுமும் இடியும்
‘அர்ச்சுனா’வென்று சுவாதீனமற்று
மொழிகின்றன இதழ்கள்
சூத்திரங்களேதுமில்லா சுந்தரக் கனவு போல
சக்கராயுதமேந்தி அர்ச்சுன முகத்தோடு
வில்லம்பு சகிதம் அந்நியனொருவன்....
குழம்பிய மனம் தெளியுமுன்
கழுத்தை நெருங்குகிறது சக்கராயுதம்
பிழையென்ன செய்தேன் மாதவ அர்ச்சுனனே!
குரல்வளை வெட்டி பேச்சுத் திண்றுகிறேன்
பளீரிட்ட மின்னல் வாரிக் கொண்டு போகிறது
மின்வெட்டு விடியலில் அழுத்திய சங்கிலி
நான்குமுறை யோசித்தும்
ஒன்று மட்டும் விளங்கவில்லை
அர்ச்சுனன் ஏன் மாதவன் வேடமேற்று வந்தான்?

பயணம் தொடரும்....

Wednesday, October 16, 2013

என் (கிராமத்து) வீடு


வட்டக் குடிசையிலிருந்து மச்சு வீடுயர்த்த
அண்ணனும் தம்பியும்
காடாறு மாதம் வீடாறு மாதமென
திரைகடலோடி திரவியம் சேர்த்தார்களாம்
ஒண்டக் குடிசையிலாத
கருப்பனையும் ஆண்டியையும்
உயர்த்தி அழகு பார்த்தது

உழைப்பு

வியர்வையையும் கனவையும்
விதைத்தார்கள்
அடையாளமாய் நின்றிருந்தது வீடு
பிரமாண்ட கல்வெட்டென...

தேக்குமரக் கதவுகளும்
எட்டறை தடுத்து
நடுவிலோர் முற்றமும்
முகப்பும் பந்திக்கட்டும்
வழவழக்கும் சுண்ணாம்புச் சுவரெனவும்
அட்டகாசமாயிருக்கும் என் கிராமத்து வீடு

இரட்டை மாடிகளும்
ஆனையடிக்கல் பதித்த மொட்டைமாடியும்
சீட்டிப்படி அறைகளும்
வெள்ளைக் கற்படிகளும்
சங்கு பதித்த முன்வாசலும்
உள்ளறை அலமாரிகளும்
எப்போதும் மிளிர்ந்தபடியிருக்கும்
சாமி விளக்கும்...

அப்பத்தாவும் அய்யாவும்
ஆன்மாவாய் நிறைந்தயென் வீடு

நகரத்து எலிவளைக்குள் வாழ்ந்தாலும்
கிராமத்திலென் வளை அரண்மனையென
கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன்
திருமணக் கனவுகளிலெல்லாம்
முற்றத்துப் பந்தலில் தான்
தாலிகட்டுவான் மாப்பிள்ளை

சித்தப்பாவின் திருமணமும்
பெரியத்தான் திருமணமும்
அக்காக்களின் திருமணமும்
பிள்ளைப்பேறுகளும்
பூப்பெய்தல்களும்
கோலாகலப் பூரிப்புகளோடு
அவ்வீடு கண்டு சிரித்திருக்கிறது

ஏகப்பட்ட காதல்களை
ஏகப்பட்ட திருமணங்களை
ஏகப்பட்ட மரணங்களை
ஏகப்பட்ட உறவின் விரிசல்களை
இன்னும் எத்தனையோ
பார்த்தபின்னும் உருக்குலையாமல்
கம்பீரமாய் தானிருந்தது

ஒவ்வொரு பொங்கலும்
ஒவ்வொரு தைப்பூசமும்
ஒவ்வொரு பங்குனி உத்திரமும்
சின்னதொரு கல்யாணம்

உறவுகள் சூழ விருந்து வைத்து
உச்சி முகர்ந்து கொண்டாடி
சீண்டிப் பேசி சிரித்து மகிழ்ந்து
இளவரசியென மிதப்பாய்
செறுக்குற்றிருந்த பொழுதுகள்

மூத்தவனை பிணமாய் கிடத்திய
அதே கிழக்கு பார்த்த
சன்னல் முற்றத்தில்
அப்பத்தாவும் அய்யாவும்
சின்னப்பத்தாக்களும்
பெரியப்பாவும் பெரியம்மாவும்
நின்று எரிந்தார்கள் தீபமாய்....

சங்கரண்ணா வீட்டை இடித்துக் கட்டுகிறான்
சேதி சொன்னான் சின்னத்தம்பி

காரணங்கள் ஆயிரம்
ஏசி பாயிண்ட் வைக்கமுடியவில்லை
வாயில்கள் தலையிடிக்கின்றன
அட்டாச்டு பாத்ரூம் இல்லை
நவீனத் தோற்றமேயில்லை
கிராமத்து சாயலிருக்கிறது
கவனிப்பாரற்று கரையான் பூத்திருக்கிறது
மனைவி மக்களுக்கான புழக்கம் போதவில்லை
தேவைகளுக்குள் சமரசமாகி சத்தமின்றி
தேய்ந்து போகின்றன எதிர்ப்புக் குரல்கள்

ஒவ்வொரு கல்லாய் கட்டிச் சேர்த்த
அப்பத்தாவின் கண்ணீர்
கைகளில் பிசுபிசுக்கிறது
அவளரற்றும் ஓசை செவி நிறைக்கிறது

அய்யா அப்பத்தா போலவே
எழுபது வயது தாண்டிய
அவ்வீடும் மரணிக்கவிருக்கிறது

இடிக்கும் சப்தமேதும் கேட்காத தொலைவிலிருக்கிறேன்
கையாலாகாத என்னிடமேன் முறையிடுகின்றன
என்வீட்டின் தெய்வங்கள்?






Tuesday, October 15, 2013

அபிசேக மழை

கலச நீர்த்துளி பட்டுத்தீர
ஆயிரம் பாவங்களோடொரு கூட்டம்
கருடனின் வரவுக்கென...

யாக தூபத்தின்
ஆகுதீ வாசம் பிடித்தபடி
நெடுநேரக் காத்திருப்புக்குப் பின்
வட்டமிட்டதொரு கருடன்

உச்சிக் கோபுரத்தில்
மாவிலை நனைத்து
அள்ளித் தெளித்தார் அர்ச்சகர்

அத்தனை தலையிலும்
வைரம் மினுங்கி
நீரானது

நவதானியங்கள் சேர்த்தடைத்த
பொன் முலாமிட்ட
ஐம்பொன் கலசங்கள்
சூரியன் பட்டுத் தகதகத்தபடியிருக்க

தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு
ஓடி வந்த மழை
அளவிலாக் கூட்டத்தை விரட்டிவிட்டு
தான் மட்டும் தழுவி
மகிழ்கிறது

கங்கைநீரை விட மழைத்தீர்த்தம்
புனிதமென நனைந்தபடி கிடக்கிறான்
தெருப் பிச்சைக்காரன்

பாவங்களற்ற அவன் மேனியினின்று
அழுக்கை கழுவிப் போகிறது மழை

Monday, October 14, 2013

நானாகவேயிருந்தால்...

யாரையோ என்னில் தேடிக்கொண்டிருந்தாய்
யாரெனக் கேட்டேன் பதிலேயில்லை
யாராயிருந்தாலுமென்ன தாயாயிருப்பதென்றானபின்?
எண்ணித் துணிந்தவொரு தேவகணத்தில்
என்னுள் நீ தேடியது யாரென்று விளங்கியது
யாராகவுமில்லாதிருந்த நீ யாரோவாக முயல்கிறாய்
பாசமிகு தாயா?
பருவம் நிறை காதலியா?
பால்யத்து சினேகிதியா?
இப்போது சொல் நான் யாருனக்கு?
எத்தனை கேட்டாலும்
எப்படி பதிலளித்தாலும்
அவளைப் பற்றிய பிரதிபலிப்புகளில்
சஞ்சலப்பட்டு
அதிர்ந்தலைவுறுகிறது
அமைதிக்கு பெயர் போனயென் ஆழ்மனம்....
அவளாகவுமில்லாமல்
உனதாகவுமில்லாமல்
நானாகவேயிருந்தால் ஏற்காதோ உன் மனம்?

காதலா!

எல்லாப் பொழுதுகளிலும் நினைவுகளாய் இருப்பதாகவும்
தனிமை அவனால் நிரம்பிக் கிடப்பதாகவும்
பிதற்றிக் கொண்டிருந்தான்
அன்றாடங்களை அச்சுப்பிசகாமல்
சொன்னபோதெல்லாம் சுவர்களிலிருக்கும்
கண்களைத் தேடிக்கொண்டிருந்தேன்
விட்டுப் பிரிதலும் விரகத் துயரும்
சாதலினும் கொடிதென்றாய்
சிற்றின்ப போகியென்று சீற்றம் கொண்டு
மூதுரை சொல்லிவைத்தேன்

கூற்றுகளையும் இளக்காரப் புன்னகைகளையும்
கிழித்தெறிவதற்கெனவே
வேடமிட்டுக் கொண்டேன்
வாட்டமிகு முகத்தை புன்னகை பூசி மறைத்தேன்
ஏக்கங்களத்தனையும் எழுத்தில் வராமல்
பார்த்துக் கொண்டேன்
நட்பின் வட்டத்தை நீயின்றி செதுக்கிக் கொண்டேன்
இனியொருமுறை எதிரில் வந்தால் காறியுமிழ்வதென
கணக்கற்ற வெறுப்பினை வளர்த்துக் கொண்டேன்
செல்பேசி அழைப்பிலெல்லாம்
இதழ்பூட்டிக் கொண்டன வார்த்தைகள்

எங்கோயிருந்த நீ இங்கே வந்துதித்த போது...
என்னையுமறியாமல்
ஏதேதோ மாற்றங்கள்

ஆம்!
முன்போல் இருட்டுக்கு பயமில்லை
பல்லிகளையும் பாசமாய் பார்க்கிறேன்
மின்வெட்டுத் தருணங்களிலெல்லாம் விதிர்த்தெழாமல்
கவிதை பேசிக் கொண்டிருக்கிறேன்
இசையை இன்னும் அதிர்ந்து உள்வாங்குகிறேன்
நேரில் பார்த்துக் கொண்டபோது
ஏன் கட்டிக் கொண்டழுதேன்?
விடாமல் நீயுமேன் விசும்பிக் கொண்டிருந்தாய்?

Saturday, October 12, 2013

துவேஷம்

துவேசத்தின் மழையின் நனையும்
எனதன்பின் நட்புகள்
சறுக்கிய இடங்களையே
கவனமாய் சேகரிக்கிறார்கள்

எழுதி வைத்தவைகளில்
சாதகமானவைகள் மட்டும்
அவரால் படிக்கப்படுகிறது
தவறாமலொரு அறிவிப்பு
என் முகவரிக்கு

நண்பர்களாய் இருந்தார்களென்று
கடந்ததில் சொல்வதில்
இரண்டு பக்கமிருக்கிறது

மகிழ்வின் கணங்களை மறுபடி ஓட்டிப்பார்ப்பது
அதன்பின்
இழைக்கப்பட்டதை நினைத்து வருந்துவது

இரண்டும் நடக்குமெனினும்
முதலாவதையே
முழுதாய் விரும்புகின்றேன்

பேரன்பில் மூழ்கிப் பயணிக்கும்
மீனாய் இருந்துவிட்டுப் போயேன்
நதியின் மீது நட்புக் கொண்டதாய்
சொல்லிக் கொண்டு
ஏன்
வலைவிரித்துக் காத்திருக்கிறாய்?
மிதப்பவைகளை வைத்துக்கொண்டு
என்ன செய்துவிடுவாய்
கரை சேரும் படகின் நகர்வே
மிஞ்சிக் கிடக்கும் நட்பின் தயவால் தான்...

Friday, October 11, 2013

அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்

தோற்றுப் போனவர்களை குடும்பமும் மறந்து போகிறது...

நினைப்பை அவரிடத்தில் இருத்தி வைக்கவே ஜெயிப்பது அவசியமாகிறது. தன்முனைப்போடு போராடும் பெண்களில் பலருக்கு பால்யத்தின் பாசமென்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வாழ்ந்த பேரன் பேத்திகளுக்கு அவர்களில்லாதவொரு தருணத்தில் வாழ்க்கைக்கான போராட்டமும் சேர்ந்து ஒரு வித சுமையைத் தந்துவிடுகிறது. கூட்டுக் குடும்பம், குடும்பப் பாங்கு என்றெல்லாம் பேசி வளர்த்தவர்கள் வளர்ப்பில் தனக்கென வாழாது வாழ்வைத் தொலைத்த அறிவிலிகளைத் தான் சொல்கிறேன்.


சில பல வருடங்களில் வருமானத்திறகென வரவேற்கப்படுகிறாள் அப்பெண். இவளின் வருமானம் அவசியமில்லாத போதும் இவள் குறித்த உறவினர்களின் தேவைகள் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. தன்னை விடவும் சின்னவர்கள் தன்னால் முன்னேறி குடும்பம் குழந்தையெனும் போது பெருமிதப்படும் மனது தனக்கென்றெதுவுமில்லாது போகுமொரு நாளில் பால்யத்தின் பாசத்திற்கென தவம் கிடக்கிறது. தன்னிறவு பெற்ற குடும்ப உறவுகளோ தனித்து விட்டுவிடுகின்றன. எத்தனை சுதந்திரமிருந்தும் தனக்கென ஒரு கூட்டிற்காக ஏங்கித் தவிக்கிறது பாழும் மனது. கூண்டில் அடைபட்ட பறவை பறந்து இரவுக்கு கூண்டுக்கு வருமாம் பழகிய தோஷத்திற்கு... நான் புறாக்களைத் தான் சொல்கிறேன்.

வீட்டிற்கென ஓடி ஓடி.. அவள் நிற்குமிடம் பெண்மையின் பலவீனங்கள் எட்டிப்பார்க்கும் அந்த வயோதிகத்தின் முன்வாசல். சமூகத்தின் பார்வையில் தன்னை நல்லவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்பெண் மீது அவமதிப்பெனும் சுமையையும் போர்த்துகிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். குற்றப்பெருக்கு. சுமை தாங்கி தானே! ஊமையாய் பாரம் சுமக்கும் எதிர்பார்ப்பில்லாத போராளிகள் நானறிந்த வரையில் ஆயிரம் பேர்.

சம்பாதிக்கும் பெண்.
தான் தோன்றிப் பெண்.
மனமுதிர்வான பெண்.
பொறுமையான பெண்.
அன்பான பெண்.
அடங்காப் பிடாரி பெண்.
அறிவுத் தெளிவுள்ள பெண்.

இத்தனைக்கும் பின்னர் அவள் சுமக்கும் இன்னொரு பட்டமுமிருக்கிறது....

தனித்த பெண்.

வயோதிகத்தில் இல்லாத வாலிபத்துக்கு இளப்பமும் எள்ளலும்... இவர்தம் கண் முன்னே தானே தீர்ந்தது அவள் இளமையும் வயதும். சுயநலத்துக்கென சுமை தூக்க விட்டுவிட்டு கூன் விழுந்த முதுகைப் பரிகசிக்கிறார்கள் தங்கைகளும் தம்பிகளும்....

இதெல்லாம் நடுத்தர வர்க்கத்து சாமான்ய சராசரிப் பெண்களைக் குறிப்பவை. ஒரு செக்கு மாட்டின் நகர்தலைப் போல அவர்களுக்கு வாழ்க்கை கனவுகளோடு மட்டும் முடிந்து விடுகிறது.

இதற்கிடையில் அவர்கள் பாலியல் துன்புறுத்தல்,சாதி,தற்காப்பு,மானம்,
சமூக மதிப்பென்று ஆயிரம் தீவேலிகளை அன்றாடம் கடந்தாக வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்!

உடலைக் கட்டிக் கொண்டழுதும் அவள் தெய்வமாகத் தெரியவில்லையா? நிர்வாண மனது வாய்த்தும் போர்த்திய உடைகளுடன் ஒரு தெய்வத்தை நீங்கள் அன்றாடம் தரிசிக்காமல் பரிகசிக்கிறீர்கள்....

உங்களால் உங்கள் ஊனக் கண்களால் தரிசிக்க இயலாது

ஆம்!

கருவறையில்லாத அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்

பொன்வண்ணக்காரிளை

நுட்பத்திற்கென செவி கூர்ந்திருக்கும் தருணம்
செம்மொழிக் கலைஞனொருவன்
மேடையேறுகிறான்
ஆன்மாவை விளக்கத் துவங்கியதும்
ஆன்மீகமா என்றவாறு பின்னுக்குச் சாய்கிறேன்
எனை வசதியாக இருத்திக் கொள்கிறதந்த
பொதுக்கூட்ட நாற்காலி
இருளின் கரங்களில் பூமி துவள்கிறது
ஒற்றை ஒளியென
அவனையே பார்ததபடியிருக்கின்றன
ஓராயிரம் கண்கள்
ஆரம்பித்த இடத்திலிருந்து
அரசியல் அன்றாடமென
அரிய சொல்லாடல்கள்
அநாயாசமாய் அள்ளித் தெளிக்கிறான்
ஆன்மக் கவிதைக்கான தேடலில்
இன்றுவரை காத்திருந்து தோற்றதாகச் சொல்கிறான்
வெளுத்த கேசம் வெண் தாடி
மாசடைந்த கண்கள்
கறுத்த உதடுகள் பேசுவதத்தனையும்
ஒளிரும் மனதின் திமிர்ந்த கருத்துக்கள்
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
பேசிக் கொண்டேயிருந்தான்
பெருமழையடித்த பின் சொட்டும் நீர்போல்
என்னுள் இலக்கியம் சேகரமாகியது
வெற்றுக்கால்கள் நாலுமுழ வேட்டியுடன்
மேடை விட்டிறங்கியவன்
காலில் விழ எத்தனிக்கையில்
எப்போதும் போல
தடுத்துவிட்டதென்னுள்ளிருக்கும் மிருகம்
குறைந்தபட்சம் கைகுலுக்கி
அறிமுகமேனும் நடந்தேறியிருக்கலாம்
அதுவுமின்றி ....
வெளிச்சத்தில் சிக்கினால்
நகக்கண்ணில் படிந்திருக்கும் கந்தகச் சேர்மங்கள்
எழுத்தின் வழியிறங்கி
ஏதோவொரு ஆதிக்க வர்க்கத்தை
எரியூட்டும் நிச்சயம்

சுயவிளக்கம்....

யார் கைதூக்கிவிட்டும் யாராலும் முன்னுக்கு வர முடியாது.யார் இகழ்ந்தும் காழ்ப்பில் ஒதுக்கியும் யாரையும் பின்னுக்குத் தள்ள முடியாது.
அவருக்கென்று சுயமாக திறமையோ தெளிவான அறிவோ இல்லாத வரை அவர் முன்னேற தான் மட்டுமெ காரணமென்று அலுத்துக் கொள்ளும் கூட்டம் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

இன்னும் சில இடங்களில், வளர்ந்து வரும் சிலர் தான் தாக்கப்படுவதாகவும் ஒடுக்கப்படுவதாகவும் தானே புரளியைக் கிளப்பி பெரிய பச்சாதாபத்தையும் கருணையும் கொண்டு தன்னை நிலை நிறுத்தத் துடிக்கிறார்கள். படுகேவலமான விளம்பர யுக்தி. ’என்னடா விளம்பரம்? அந்த சினிமாக்காரங்க தான் அப்டின்னா’ கரகாட்டக்காரன் காமெடி தான் நினைவுக்கு வருது.

இந்த நவீன இலக்கிய உலகை, இலக்கியவாதி என்கிற தகுதியில்லாமல் பொதுவான பார்வையாளராக வெகுநாட்களாக கவனித்து வருகிறேன். எனக்கெல்லாம் எழுத்தென்பது மனதில் நினைப்பதை எழுத்தாக்கும் முயற்சி. முயற்சித்துக் கொண்டேயிருக்கும் மாணவி தான் நான் இன்னும். நவீன இலக்க்கியவாதிகள் பேசித் திரியும் ஆயிரம் வரிகளில் ஒன்றிற்கு கூட அவர்கள் எழுத நினைத்த அந்த மறைபொருள் கருவை உள்வாங்குமளவு அத்தனை பெரிய அறிவுஜீவியுமில்லை. அதே சமயம் எழுத்துக்கும் நடத்தைக்கும் இம்மியளவு சம்பந்தமுமில்லாத பல ஆளுமைகளைப் பார்த்து எரிச்சலடைந்து இருக்கிறேன். தனிமனித அறம் கடைபிடித்தலென்ன அத்தனை கஷ்டமா? ’நீ வாழ அடுத்தவனைத் தூற்றாதே’ இந்தமட்டும் கூடவா கஷ்டம்?

தலித்தியம் பெரியாரிஸம் பெண்ணியம் இதெல்லாம் முன்னெடுக்கும் பெரும்பாலோர் தன் சுய விளம்பரத்துக்காக,அரைகுறை உணர்வோடு பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். மிகவும் வருத்தமான விசயம் இது. லைக்கும் கமெண்டுக்குமென இது போலான மதிப்பும் வலியுமிக்க விசயங்களை முன்னிறுத்த என்ன அவசியம் வந்தது? பிறப்பால் நீ இன்னவனென்று ஒதுக்கப்படும் ஒரு நிலையில், அவன் அட! ஏன் இப்பிறவியெடுத்தோம்ன்னு கூனிக் குறுகிப் போதல் எத்தனை வலியோடான வருத்தம். இன்னும் நடக்குது தானே... ?அதையே குத்திப் பேசி இன்னும் மிருகமாய் அலையும் பலர் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படிக்க மறந்து வல்லுநர் ஆனார்கள் போலும். நான் கடந்த வலிமிகு விசயங்களை நிச்சயம் பதிவேன். இதற்கு சாதிச் சாயம் பூசப்பட்டாலும் உண்மை என்பதை படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும். கவிதையில் பொய் சொல்லிவிடலாம். ஆனால் உரைநடையில் மிகை உணர்வு பொய் தூவல் எல்லாம் எளிதில் புரிந்திடும் தானே ... ?

இதோ இங்கே பெரியாரையும் தலித்தியத்தையும் (உயர்வாகவோ / தாழ்வாகவோ) பேசி தன்னை நிறுப்பித்துக் கொள்ளும் எவரும் அந்த கருத்துக்களையும் அவர்தம் வலியையும் உணர்ந்தாரில்லை. எங்களைப் போன்று இதன் எல்லாபடிநிலைகளிலும் வாழ வாய்ப்புக் கிடைத்தவர்களையும் மட்டமாக இந்த முகனூல் கலாச்சாரத்தில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது எரிச்சல் மிகுந்த வலி. இதில் புதிதாய் வந்தவர்கள் என்கிற ஹைலைட் வேறு. சங்கத் தமிழ் பேசுவதாலேயே எழுதுவதாலேயே எல்லாமும் ஏற்கனவே பதியப்பட்டதென்றும் படியெடுக்கிறோம் என்கிற சொல்லாடலும் தவறு. எனக்கும் கற்பனா சக்தி உண்டு. கொஞ்சம் எழுத வருதுன்னும் சொல்லாம்ன்னு நெனைக்கறேன். சங்கத் தமிழ் படித்த ஒருவனுக்கு தான் மட்டுமே தமிழின் சுமை தாங்கி என்கிற அனாவசிய கர்வம் இல்லாது போகும். தமிழ் நிறைவுடை மொழி. புரியாதவனுக்குத் தான் எழுத்தாளுமையென்றும் எழுதுவதாலேயே தலைக்குப் பின் சூரிய வட்டமிருக்கிறதென்கிற கனமும் இருக்கும்.

சங்கப் பாடல்களில் எல்லா உணர்வுகளிலும் தமிழன் ஊறித்திளைத்திருக்கிறான். நம் தேவைக்கேற்ப புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ஒரு தனிமனித வாழ்வியல் சூழல் என்கிறமட்டும்.. சமூக ஏற்றத் தாழ்வு எத்தனையோ ஆண்டுக் கொடுமை. அது தவறென வாதம் புரியும் நவீனங்கள் வரவேற்கத் தக்கன. இன்னமும் ஒருவன்/ஒருத்தியின் மனநிலை சார்ந்து தானே எழுதப்படுகிறது படிப்பவருக்கும் புரிந்தும் சில நேரம் புரியாமலும்.... ஆக கடமைக்கென கவியெழுதல் அத்தனை உடன்படும் விசயமல்ல என்றாகிறது. இதே தொனியில் எழுதிக்கொண்டும் பிதற்றிக் கொண்டும்.. கடுப்பா இருக்கு. என்னையும் நான் படிக்கிற எழுத்துக்களையும் சேர்த்து தான் சொல்றேன். ஆனால் பாருங்க, நானெல்லாம் இலக்கிய வட்டத்துக்குள்ள நுழையவேயில்லை. அது என் விருப்பத் தெரிவுமல்ல. ஒளிவட்டம்,ஆசிச்சொல்,அகமலர் நிறைவாழ்வுத் தழும்பலகளென பெரிய சுயபிரசங்கமும் செய்வதில்லை.

ஆதலினால் என்னைச் சீண்டாது படிக்கவிடுங்கள். ஆயுள் முடிவதற்குள் ஆன்ம படைப்பிற்கென அவசியமிருக்கிறது.

’நான்’ எனும் திமிர்




ன்னுலகம்
பட்டாம்பூச்சிகளாலும்
மீன் தொட்டி மீன்களாலும்
குழந்தையின் கால் தடங்களாலும்
பரிமளித்து வந்தது

உலகை வெளித்தள்ளி
ஓட்டுக்குள் முடங்கியிருந்தேன்
நம்பிக்கை தந்தார்கள்
அணை கட்டுவித்த
பேரன்பின் நதியாயிருந்தேன்
பாசத்தால் உடைத்தெடுத்தார்கள்

மொழியால்
இசையால்
அன்பால்
தன்னுள் கூடுகட்டவென்று
அழைப்புகள் வேறு....

இல்லாத பிரச்சினைக்கு
இருப்பாய் எனையேன் தேர்ந்தார்
இன்றுவரை பதிலில்லை

கறுப்பு நாளிலொன்றில் 
கண்கள் திறந்து போது
புலப்பட்டதந்தக் காட்சிப்பிழை

அன்பை சந்தேகித்தோ
அதை புறகணித்தோ
பழகியிராத கண்களிலெல்லாம்
வேதனையின் காத்திரம்

மீண்டும்
முடங்கிக் கொண்டேன் கூட்டுக்குள்
இம்முறை
தீப்பிடித்து எரிகிறது
என்னுள் அடங்கமறுக்கும்
நதி!

குற்றமற்றிருப்பதாகவும்
விசாரிக்கப்படாது
தண்டனை ஏற்றதாகவும்
சொல்லிப் புலம்புகிறார்கள்
நான் விட்டுப் பிரிந்தவர்கள்....

உன்னைப் பற்றி
இன்னது சொன்னது
தானில்லையென்று
அடித்துச் சொல்கிறார்கள்
பொதுவில் பேசியவர்கள்
ஆதி யாதென அறிவேன் தானே!

புறம்பேசிகளைப் பற்றி
எப்போதும் கவலையில்லை

ஏங்கிக் கிடக்கிறாளென
ஏளனம் பேசி
என்னோடே பயணிக்கும்
கருப்பு நண்பர்களைத் தான்
துரோகிகள் என்கிறேன்

பேசித் தீர்த்திருக்கலாம்
திட்டித் தீர்த்திருக்கலாம்
இல்லை
சின்ன புறக்கணிப்பில்
துடித்திறக்கச் செய்திருக்கலாம்
எதுவுமில்லாமல்
ஏன் நட்பாய் நடிக்கிறார்கள்?

தனிமைக்குள் ஓடிவந்து
தானாய் ஒட்டிக் கொள்ளும்
நாயுருவிகளை
நட்பென்றா சொல்வது....?

யாருக்குமல்ல
எனக்கே பயந்து வாழ்பவள்
நான்!

இங்கே ‘நான்’ என்பது
சமரசங்களில்லா
நேர்மையின் கர்வம்
தீயிலிட்டாலும்
ஜொலிக்கும் வெண்சங்கின்
பவித்திரம்
ஆகச் சிறந்த பெண்மையின்
திமிர்

நான் என்றுமே
என்னுடனிருக்கும்
நான்

எவர் தூற்றியும்
எவர் இகழ்ந்தும்
எவர் உமிழ்ந்தும்

என்னோடிருப்பது
’நான்’ எனும் திமிர்
அழிவேனாகிலும்
அடங்க மறுக்குமென் சுயம்

Wednesday, October 9, 2013

உபரி

மரக்குதிரையில் பயணிக்கிறான்
குட்டி இளவரசன்
சாய்வு நாற்காலியில் மிதந்தபடியிருக்கிறார்
தாத்தா
ராஜபாட்டையில் குளம்படியும்
படகின் நீர்த் தளும்பலும்
மத்தியான மௌனத்தைக் கிழித்துவிடுகின்றன
வெற்றிலையிடித்து அதட்டி வைக்கிறாள் பாட்டி
எரிந்த சூரியன்
குளிர்ந்து நிலவாகிறது
தாத்தாவும் குழந்தையும்
தத்தம் அறையில்..
இராப்பூச்சிகளின் கூட்டத்திற்கு
பயண அனுபவங்களை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றன
மரக்குதிரையும் நாற்காலியும்

கூழாங்கற்கள்



நதியாகிறாய்
அதில் உருளும் கல்லாகிறேன்
கூர்மழுங்கி
மென்மையாய்
வழவழத்துப் போனதன்
வருத்தங்களிருந்தது
ஆசையாய் அக்குழந்தையின்
கைசேரும் வரை...

நான் பாஸாகி விட்டேன்

”என்ன பிரச்சினைடீ. இந்த நேரத்துல.....”

“ ”

“உங்கம்மாப்பாக்குள்ள சண்டையா?”

“ம்ம்ம்”

“சமைச்சாளோ”

“இல்ல”

“தோசை வார்க்கவா?”

“வேணாம். பத்தில லைட் மட்டும் எரியட்டுமா வாத்தியாரம்மா? படிச்சிக்கறேன்”

“இதுக்கேண்டி இத்தன தயங்குற...வெறும் வயித்திலயா கெடக்க? இரு இந்தா வர்றேன்”

இரண்டு தோசையும் பொடியும்...

‘உண்ணீர் உண்ணீரென’ ஔவையின் வாக்கின்படி அத்தனை அன்பாய் கெஞ்சுவாள். விண்டு விழுங்குமுன் கண்ணீர் நிறைத்து விம்மல் வெளிப்படும். தன்மானத்தில் கூனிக் குறுகிப்போய்....

தம்பிகள் சின்னவர்கள். தூங்கிக் கொண்டிருப்பார்கள். விவரம் தெரிந்த நான் மட்டும் வேதனையோடு அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருப்பேன்.

”அழக்கூடாது. நாளைக்கு பரிட்சையில்ல.படி”

அதட்டலின் தொனியில் இருமலோடு ஒரு குரல் வீட்டுக்குள்ளிருந்து கேக்கும்.

”படி.... அதெல்லாம் பெரியவங்க புரிஞ்சு சேர்ந்துக்குவாங்க. நீ அழாம படி”. செல்லம் வாத்தியார் ஆஸ்துமா முனங்கலோடு அதட்டுவார்.

விம்மலடங்க ஒரு குவளைத் தண்ணீரை நீட்டுவாள் அந்தம்மா.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு, Artificial Intelligence ஐ புரட்ட ஆரம்பிப்பேன். நள்ளிரவு கடந்து மணி ஒன்றை நெருங்கும் நேரம் தலையணையோடு போர்வையும் தந்தபடி என்னருகில் வந்து படுத்துக் கொள்வாள்.

விடிகாலை நாலுமணிக்கு எழுப்பி, செய்யும் அன்றாட வேலைகளுக்கிடையில் எனக்கும் வாத்தியாரய்யாவுக்கும் சுடச்சுட பில்டர் காப்பி. தெம்பாய் இருக்கும்.

ஆறுமணியானதும் எங்கள் வீட்டின் நிலவரமறிந்தும் அம்மாவுக்கு அறிவுரை சொல்லிய பின்னர் என்னை அனுப்பி வைப்பாள்.

அழுது வீங்கிய முகத்துடன் கல்லூரிக்குள் நுழையும் போது முட்டிக் கொண்டுவரும். என்ன என்ன என்று கேட்கும் தோழிகளிடம் எதுவும் சொல்லவும் முடியாமல்.... இதோ இப்படி எழுதுகிறேனே, அன்றைக்கெல்லாம் அத்தனை ரகசியமாய் இருந்தது என் வேதனைகளும் அழுகைகளும். பரீட்சை மும்முரத்தில் தோழிகள் முட்டிக் கொண்டிருக்க என் சுணக்கமறிந்தே நெருங்கி வந்து,

‘சாப்டியா கயல்’ என்ற நண்பனின் முகம் பார்க்காமல் திரும்பும் போதே தெரிந்துவிடும் அவனுக்கு.

’ஒழுங்கா எழுதுடா! இதெல்லாம் மறந்துடும் ஒருநாள் பாரு. கவலப்படாதே!’ பெரியமனுசனாய் ஆறுதல் சொல்வான் என் வயதுக்காரன்.

மாலையில் வீடு திரும்பினால் ஏதேனும் ஒரு உறவுக்கார கும்பல் வந்திருக்கும். அம்மாவும் அப்பாவும் சண்டையை மறந்து தடபுடல் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பேப்பரில் நான் பாஸாகி விட்டேன்.

இது போல் எத்தனையோ பரிட்சைகளிலும்....

நட்பாய் வாத்தியாரம்மா,வாத்தியாரய்யா, என்னுயிர் நண்பன் என்ற காரணிகள் இருந்திருக்கிறார்கள். நன்றி சொல்ல காரணமா இல்லை? உச்சி முகர்ந்து ஆனந்தப்பட அவர்கள் தானில்லை என்னுலகில்...

கணவன் இறந்த மூன்றாம் மாதத்தில் இறந்து போனாள் அந்தம்மா. தொலைதூர தேசமொன்றில் வசிக்கிறான் என் நண்பன்.

எங்கிருந்தாலும் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்.

Tuesday, October 8, 2013

துயர்

துயரின்
கடைசிச் சொட்டும்
காய்ந்து விடும் வரை..

கண்ணீர் பெருகட்டும் விடு

தனிமையில் அரற்றி
ஓய்ந்து
நாளேட்டின் பக்கங்கள்
நிரம்பி வழிந்த பின்
அந்த உன்னத தருணத்தில்
பசியுணர்
பின் புசி!

அழாதிருத்தலும்
அதீத அழுத்தமென்றே
அறியப்படுகிறது

ஆகையினால்
கொஞ்சம் மனம் விட்டு
அழுது பார்!
நீ
அறியாத பாரம் நீங்கி
அமைதி பெறலாம் இனி!

மௌனம் உடையும் தருணம் பார்த்து...

ஆளில்லாத போது சரி
உன்னோடிருக்கும் போதுமா
அந்தரப் பட்சியோடு
மௌனம் பேச வேண்டும்?

பார்வையால் எனையளந்தது போதும்
சிமிட்டும் இமைகளும்
வலியில் துடிக்கின்றன

வார்த்தையால் எதையாவது பேசி
வருத்தாமல் எதையாவது சொல்லி
வாஞ்சை கலந்து காதல் மொழியோடு
மகிழ்வாய் கலைந்திட வேண்டுமிந்த கணங்கள்

மென்று விழுங்கியபடி
பயத்தில் நடுங்கியபடி
தலை கவிழ்ந்தபடி
எங்கோ வெறித்தபடி

பிடித்தமில்லை உன் போக்கு...

என் ஒரு கணம்
உனக்கொரு யுகம்

ஏன் இத்தனை அவஸ்தைகளோடு
என்னோடு கழிக்க விரும்புகிறாய்
வாழ்வின்
அர்த்தமிகு  கணங்களை....
சம்பிரதாயங்களில் சிக்கிடாத
சுதந்திர மனுஷி தான்
கோழையென அறிவித்திட
ஒருபோதும் துணிந்தேனில்லை

நீயே தான் ஓட்டுக்குள்
முடங்கிக் கொள்கிறாய்
ஆமையோட்டுக்குள் வசித்திருக்கவும்
சம்மதித்தாயிற்று

அதே பேரமைதி தான்

சொல்லெறிந்து
கலைக்க விரும்பவில்லை
முன்னொரு காலத்தில்
கட்டுவித்த காதல்
கனவுகளின் கூடு
நீயே கலைந்துவிடு!
அரற்றி அழுதுவிட்டு
மௌனம் பழகிக் கொள்கிறேன்
வாழ்ந்து கொண்டே சாகும்
வரமெனக்கு வேண்டாமே!

Monday, October 7, 2013

முளைவிடும் மரங்கள்

மூடிய கைகளிலிருந்து
ஒவ்வொரு விரலாய்
விடுவிக்கிறாள் மித்திரா

சின்னஞ்சிறு மரங்கள்
பத்து முளைத்திட்டதாம்

ஒரே குதூகலம்

அவள் நடக்கும் வழி தோறும்
வேடிக்கை பார்க்கவென
வரிசையில் பலநூறு மரங்கள்

கூண்டுப் பறவையின் உலகம்

தீர்ந்திடாத வாழ்க்கையில்
திகட்டும் சுவையுடன்
ருசிக்கப்படாத பக்கங்கள்
எல்லோரிடமும் இருக்கலாம்...
அதை ஏன்
காதலோடும் திருமணத்தோடு
சேர்த்து முடிச்சிடுகிறீர்கள்

அந்தக் கிராமத்து அங்கன்வாடியில்
ஆட்டிசக் குழந்தையொன்று
ஆவிபறக்க வைக்கப்பட்டிருந்த
காய்கறிச் சோற்றை
அள்ளித் தின்ன அத்தனை ஆவலாய்...
மனதின் கட்டளையை
அதன் கை செயல்படுத்தவில்லை
காரணம் கேட்டேன்
பிறப்பிலே அப்படித் தானென்றார்கள்
ஊதி ஊதி ஊட்டிவிட
உற்சாகப் பெருவெள்ளம்
அதற்கும் எனக்கும்....

இராமாயணம் வாசித்த
கொஞ்ச நேரத்திலேயே
தூங்கிவிடும் அத்தைக்கு
நானில்லாத பொழுதுகளில்
மாத்திரையின்றி
நித்திரை வருவதில்லையாம்
அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்
தனிமையின் காரணமாயிருக்கலாம்
பதிலாய் நிரப்பிவிட்டேன் வெற்றிடத்தை...

அவளில் இரண்டாம் கருவும்
சிதைவுற்றதொரு நாளில்
நகரம் தாண்டி நானிருக்குமிடம்
தேடி வந்து கதறிய தோழிக்கு
என்ன செய்தேன் நினைவேயில்லை
அதிராமல் அழைத்து வந்து வீடு சேர்த்த பின்
அவளை விடவும் அத்தனை அழுதேன்
அவளறியாமல்...

சம்பிரதாயங்களில்லாத காதல் அது
ஒரு முறை கூட
நேசிப்பை காதலை
வார்த்தைக்குள் சிக்க வைத்ததில்லை
கண்களும் உணர்வுகளும் ஒருங்கே பேசும்
பிரிந்தாலும் புலனுணரும்
என்பதே தெளிவு

எல்லாவற்றையும்
சொல்ல வேண்டுமென்ற கட்டாயமெதற்கு?
ஒரு கூண்டுப் பறவையின்
உலகத்திலும்
எண்ணிக் கொள்ள கம்பிகளுண்டு...

மரம்வெட்டி வீரர்கள்

இங்கு நூறு மரங்களிருந்தன
இருபத்தோரு மனிதர்கள்
இறந்த வருத்தத்தில்
வெட்டி வீழ்த்திவிட்டார்கள்
மனிதர்களை வெட்ட முடியாத கோபமாம்
வாழைவெட்டி வாள்வீரர்களாயிருக்கும்
பக்கவேர் பிடித்து நூறிலிருந்து
ஆயிரமாய் பெருகிய
நாங்கள்
உங்களுள் யாரையும் வெட்ட விரும்பவில்லை
கனிதந்து நிழல் தந்து
பசுமை போர்த்தி
மன்னிக்கும் மரமாய் தான் இன்னமும்....
வெட்டிய நீங்கள் மட்டுமேன்
மீந்திருக்கும் மனிதமும் சரிந்து
மிருகமாய் மாறிப் போனீர்கள்?
திரிந்த உம் முகம் சரிசெய்வதற்குள்
இன்னபிற மனிதர்களுக்கு
தலையங்கம் தைக்கிறீர்களாமே!
மரங்கள் வெக்கித் திரும்பும்
மனித முகங்கள்
நிச்சயம் உங்களுடையதாய் தானிருக்கும்!

பயமுறுத்தல்

விட்டுப் பிரிவதையே
வேடிக்கையாய்
பயமுறுத்துகின்றனர்

நான் தனித்து நடந்தே
கால்கள் ஓய்ந்தவள்
மறந்தனர் போலும்

சலசலப்புக்கெல்லாம்
நடுங்குவதாய்
நடிக்கவே அலுப்பாயிருக்கிறது

தீங்கென்பது யாதெனில்...

புழுக்கள் நெளியும்
சாக்கடை  கலந்த குடி நீர்
கொதித்தும் தீரா அசூயையுடன்
குடிக்கப் பழகியவரா நீங்கள்

நெகிழிப் பைகளுக்குள்
வாழ்க்கையை சுருட்டி
இடம்பெயரும்
அடையாளமற்றவரா நீங்கள்

பிணவாடை வீசும் மருத்துவமனைக்குள்
எலிகளோடு போராடி
உயிர்தப்பிய போராளியா நீங்கள்

சட்டைப் பையில்
காசில்லாத காரணத்தால்
உறவுகளில் எவரையேனும்
மரணத்திற்கு தாரை வார்த்த
தோற்றுப் போன மனிதரா

இத்தனைக்கும் பதில்
ஆமோதிப்பான தலையசைப்பெனில்...

மிக மிகக் கொடுமையான
ஒரு திரைப்படத்தையும்
கண்ணீர் சிந்தியேனும்
கடைசி வரை பார்த்துவிடுமளவு
பொறுமை
உங்களுக்கு பழக்கப்பட்டிருக்குமா

தெரியாது

ஆனாலும்
உங்களுக்காக போராடுவதாய்
வாய்கிழிய பேசித் திரிபவரை
கடவுளாய் கொண்டாடி
நீங்கள்
உங்கள் சந்ததிக்கும் தீங்கிழைக்கிறீர்கள்

உங்கள் தாத்தனும் அப்பனும்
உங்களுக்கிழைத்த தீங்கினைப் போலவே....

நிழலிருக்கும் என்னோடு...

என்ன பெரிதாய் கிடைத்துவிடும்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தூது சொல்லி
தூபம் போடுபவர்களுக்கு ..?!

மனிதர்கள் வினோதமானவர்கள்
மறைபொருள் ஏதுமில்லாதவிடத்தும்
ரகசியங்களிருப்பதாய்
போர் மூட்டி விடுகிறார்கள்

எத்தனை பாசம் தந்தாலும்
திருந்தும் வழி பாராது
நம்பிக்கைகளைச் சாம்பலாக்கிவிடுகிறதோர்
தீய நட்பு

சுட்டபோதும்
கலங்கினேனில்லை
உயிர்த்துடிப்பை சோதித்த பின்
உதிரம் குடிக்கின்றன காட்டேறிகள்

வலித்தபோதும்
கத்தினேனில்லை
கழுவேற்றி சாணம் தெளித்த பின்
வஞ்சம் தீர்க்கின்றன மானுட மிருகங்கள்

எல்லாமும்
பண்டமாற்றாகி
பணம் கொழுத்த சமூகத்தில்
கொடுத்தும் எதிர்பாராதிருப்பவன்
கவனிக்கப்பட மாட்டான் தானே!

இத்தனைக்குப் பின்னும்
இன்னுமா உலகை நம்புகிறாய்?
கேட்டபடி சிரிக்கிறான்
தற்கொலைக்கென நெடுநாளாய்
வாழ்ந்து கொண்டிருப்பவன்

அலட்டிக் கொள்ளாத
அன்புருவெல்லாம்
அத்தனை அதிசயமில்லை
அக்கம் பக்கம் பார்
அது போதும்

ஒட்டிய வயிறோடு
பரட்டைச் சிறுமியொருத்தியின்
கண்ணிறஞ்சுதலுக்கு முன்னே
இவையென்ன பெரிதா?

நடக்கிறேன்!

நிழலிருக்கும் என்னோடு....

கெஞ்சலாய் கொஞ்சம்...

மதுக்குப்பிகளில்
அடைக்கப்பட்ட போதையை
தளும்பத் தளும்ப
குவளைகளில் நிரப்பிக் கொண்டிருக்கிறாய்
நுரை பொங்கி வழியுமதன்
நாற்றத்தினூடாக
சில வசவுகளும்...
சில விளக்கங்களும்...
சில கவிதைகளும்...
எவ்வுணர்வின் தளும்புதலுக்கான
மருந்தென மதுவைத் தேர்ந்தாயோ?!
அதெல்லாம் இருக்கட்டும்
போதையோடு போதனை
செய்வதையாவது நிறுத்திவிடேன் கொஞ்சம்...

Sunday, October 6, 2013

முன்னறிதலும் பலவீனமே

இப்படியொரு சொல்லுக்கு எதிராய்
இன்ன வகைச்சொல் தான் வரும்
இந்த நடவடிக்கைக்கு
இப்படி தான் பதில் பேசும் எதிரணி
எனக்கெதிரான யுத்திகளின் நகர்த்தல்
எனக்குத் தெரிந்த
ஏதாவதொரு உபாயமாகத் தானிருக்கும்
என் படையும்
அவர் படையும்
நான் சொல்கிறபடியே போரிடுகின்றன
கூர்மதி வட்டம் தாண்டிய
அனிச்சை கொந்தளிப்புகளும் மனப்பாடம்
மூன்றாம் எதிரியின் வழி
நான்காம் உலகமும் படிகத் துவங்கியாயிற்று
ஜெயித்துக் கொண்டேயிருப்பது
அத்தனை உவப்பல்ல காண்பீர்
அவர் முகத்து உவகைக்கென
ஆங்கே தோற்பதும் கடமையாகிறது
கனத்த மனத்தின் திறப்புக்கென
கனகச்சிதமான சொற்சாவிகள்
எம் வசமிருக்கின்றன
ரகசியங்களுக்கென தனியொரு அறையில்லை
நீர்குமிழ் மேவிப் பூசியதை
நான் சொல்லாமல் எவரும் உடைத்துவிட முடியாது
கைப்பிடிக்குள் சூழலை
சிறைப்பிடித்திருப்பதும் எரிச்சலூட்டுகிறது
ஆச்சர்யங்களும் பிரம்மிப்புகளும்
ஏமாற்றமும் எதிர்பாராதவையுமின்றி
என்ன வாழ்க்கையிது
நத்தைக் கூட்டுக்குள் மூழ்கிவிட்டு
சமுத்திரம் படித்ததாய் சத்தமிடுவது?
எதையும் மதித்திடாத ஆணவத் திமிருக்குத் தீனியாய்
எத்தனை படித்தாலும்
நெடுநேரம் குழந்தையாய் வைத்திருப்பதில்லை
பிறகென்ன வாசிப்பு
மீண்டெழும் எல்லாவுணர்ச்சிக்குப் பின்னும்
எள்ளின் நுனியளவேயாயினும்
குழந்தையாகிச் சிரிப்பேனாகில்....
அன்று பேசலாம் வாருங்கள்
ஆகச் சிறந்த படைப்பின் பெருஞ்சீற்றத்தை...

துறவி

சலனமுற்று நகரும் நதியுள் கால் நனைக்கிறேன்
என் வரவின் ஆச்சர்யங்களற்று
அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது
ஏதோ புரிந்தது
நனைந்த பாதங்களின் ஈரத்தை
காற்றும் வெயிலும் உறிஞ்சித் தீர்க்கின்றன
தனலா தண்மையா
எதற்குமசையாமல் நடக்கப் பழகுகிறேன்
துறவியென்பது செவிப்பறை சேர்கிறது
துள்ளியெழுந்து
மிகைப்புனைவை போர்த்திக் கொள்கிறேன்
நாணமும் பயிர்ப்பும்
அலங்காரமாய் ஒட்டிக் கொள்கின்றன
எவருமில்லை
நானே தான் இதற்கெல்லாம் காரணம்
இன்னமும் தீர்ந்திடாத இளமையோடெல்லாம்
துறவறம் பூணுதல் அத்தனை அழகல்ல

வகைமையேது?

எழுதிப் போவென
அடம்பிடித்தே
ஆத்திரப்படுத்துகின்றன
அடங்காத வார்த்தைகள்

காந்தியோ
ஏசுவோ
புத்தனோ

இப்படியொரு உந்துதலிருக்கும் வரை
எவராயிருந்தாலும்
எழுதுவாராயிருக்கும்

தீவிர இலக்கியச் செங்கோல்
தரித்தபடி
கவி சொல்லக் கட்டளையிடுகிறான்
பரிமேலொருவன்

விலங்குகள் பூட்டி
பெண்ணெனப் பெயரிட்டபின்
புலம்பவும்
கொதிக்கவும்
அழுகவும் முடிகிறதேயொழிய
காத்திரமாய்
வார்த்தைகளை
எப்படி வரிசைப்படுத்துவது?

ஞானி

திறவாத கதவின் முன்
தீவிரப் பிரச்சாரம்
செய்கிறீர்கள்

பூட்டப்பட்டிருப்பதாய் நீங்கள்
சொல்கிற கதவின்
மறுபுறத்தில்
தன்னோடு தானே பேசித் திரிகிறான்
ஞானியொருவன்

Saturday, October 5, 2013

இப்படியாகத் தான்....

மனநோய்க்கான ஒட்டுமொத்த மருந்துகளுடன்
செவிலியுடையணிந்த
மருத்துவர்கள் கதவு தட்டுகிறார்கள்

தெளிவாயிருப்பதாய் சொல்கிறேன்

எல்லா பைத்தியங்களும்
இதுபோல் தான் சொல்லுமென்ற
இளக்காரத்தை இதழிடையில்
உடுத்திக் கொள்கிறார்கள்

சிரிஞ்சுகளில் உறிஞ்சப்படும்
மருந்தின் நிறம்
ஏதேதோ கலவைகளாய்...

அதனழகை ரசித்து
அந்தாதி பாடுகிறேன்
ஆமோதிப்பாய் தலையசைத்து
பலவந்தமாய் படுக்கையில் கிடத்துகிறார்கள்

பயங்கரமான அலறலோடு
பகற்கனவு முடிவுக்கு வருகிறது

எவர் செவி கிடைக்குமென்ற
ஏக்கத் தேடலின் தோல்வி
ஒரு கவிதையில் முடிகிறது....

Friday, October 4, 2013

கதை கேட்கலாம் வாங்க!

அவனைக் காதலித்தால்
செத்துவிடுவேனென்றாள்
அம்மா!
அப்போது அவர்களிருவருக்கும்
நிச்சயம் முடிந்திருந்தது...
அவளைக் கரம் பிடித்தால்
கருகிவிடுவேனென்றாள்
அவனின் அம்மா!
அத்தைகளும் சித்திகளும்
முறுக்கிக் கொண்டிருந்தார்கள்
பெரியம்மாக்களும்
இன்ன பிற பெரிசுகளும்
தத்தம் வஞ்சத்தை இவர்தம் வாழ்க்கையில்
தீர்த்துக் கொண்டார்கள்
வணங்காமுடி அப்பாவுக்கு
அவர்கள் தரும் தண்டனையாம்
வீட்டுக்கு அடங்கியவன் தானே
விட்டு விலகிப் போனான்
திருமணத்தில் மணப்பெண் மாறிப்போனாள்
செழுமையான பணத்தோடும்
சீர்வகை கார் பங்களாவோடும்...
வந்தவளை வாழ்த்த அம்மாவும் போயிருந்தாளாம்
திருமணப் புகைப்படங்களில் பார்த்தேன்
கம்பீரமாய் இருந்தான் மாப்பிள்ளை
காதலைக் கட்டிக் கொண்டு
கண்ணீரோடு வாழ்த்தியபடி ஒரு ஜீவன்
குடும்ப அரசியலில்
எல்லோரும் வேட்பாளர்கள்
எல்லோரும் பதவியேற்கிறார்கள்
நாதியற்றவர்கள் மட்டும்
பாதிக்கப்பட்டும் பாரம் சுமக்கிறார்கள்
அம்மாவும்
ஆச்சியும்
அவனும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
நித்தமும் இங்கொருத்தி செத்துக் கொண்டிருக்கிறாள்
ஆண்டுகள் கடந்தும் அவனோடு சேர்த்திணைத்து...
இன்னமும் உலவிக் கொண்டிருக்கின்றன வதந்திகள்
கிண்டலாய் நக்கலாய் எகத்தாளமாய்
நலம் விசாரிக்கும் எல்லோருக்குமிது
பொது அறிவிப்பு
அவளுலகில் அவனுலகில்...
அவனுமில்லை அவளுலகில்...
இருவேறு பாதைகள் பிரிந்து நெடுங்காலமாயிற்று
இதில் வரும் ’அவள்’ போல்
யாரிருந்தாலும்
உரிமையாய் இரண்டு விசயம்...
”முதுகெலும்பிலிகளை காதலிக்காதீர்கள்!”
“முடங்கிக் கிடக்காதீர்கள்! உலகம் பெரிது!”

யாருக்கோ...

கதைகளேயில்லை என்னிடம்
தேடி வந்த நீங்கள்
அலுத்துக் கொள்கிறீர்கள்!
அன்றொரு நாள்
அதிகாலையில்
சாகசமும் போராட்டமும்
நிறைந்தவொரு கதைக்களத்தில்
உங்களுக்கொரு வாய்ப்பிருந்தது
கௌரவ வேடமோ
கதாநாயகனோடதோ...
பங்களிப்பைப் பொறுத்து உருமாறியிருக்கலாம்
நீங்களோ
அலைபேசியை அணைத்துவிட்டிருந்தீர்கள்
போகட்டும்
பெருமையாய் சொல்லிக் கொள்ள
எனக்கொரு
தோற்றுப் போன பாத்திரம் கிடைத்தது...

Thursday, October 3, 2013

காடு

ஆகுளி பறையிசைத்து
முழவு கொட்டி
கொம்பூதி
அதிர்ந்தபடியிருக்கிறது
வளம் சூழ் தருக்க வனம்
முழுநிலவுக் கொண்டாட்டம்
வனக்காளி எழுந்தருளக் கூடும்

நேற்றைய மழைக்கு பிறந்து
இன்றிரவில் சிறகுதிர்த்த
கரும் ஈசல் போராளிகள்
மின்மினிப் பூச்சிகளின் திடீர் ஒளிர்வுகள்
கிணையதிர்ந்து பேரமைதி காடதிர
குலவிக் கொண்டிருக்கும் அன்றில் பறவைகள்
இணை பிரிந்து இமை மரித்தன
தூப நடனத்தில் வெளிக்கிளம்பும் வனதேவதைகள்
வேட்டையை விஞ்சிய அதகளம்
சன்னதக் கூப்பாடுகளில்
பிய்ந்து தொங்கும் வார்த்தைகள்
வந்து விழ முந்தி ஏந்தி நிற்கும்
தளர்முலை தாய்க்குலத்தார்
அவர்தம் ஆள்படையென அதிர்ஷ்ட மயக்கத்தில்....

சீறியாழ் கூட்டமொன்று
கோடாரி கையோடு செந்தீப்பந்தமேந்திய
குரலொருமித்து மௌனம் கிழித்த வானதிர்வில்
முயல்களும் பன்றிகளும் ஒரே பாதையிலோடுகின்றன
முன்னேற்பாட்டு வலைகளில்
வசமாய் சிக்கிய வேட்டையிலொரு பங்கு
வெளிக் கிளப்பிய வனதேவதைக்கு...
அந்நிய முதலாளிகளின் சந்தனக்காப்பு

கழுத்தறுபடுமுன் முயல் சிந்திய சாபத்தில்
உறுத்தும் அறத்தின்படி
காடு விட்டு நகரமேகியது
ஆதி தெய்வம்

அவளில்லை பலியுமில்லை
கறைகழுவப்பட்ட பீடங்களில்
சுகித்துக் கிடக்கிறது அப்பெருவனம்

திணை ஆறு


*

நினைத்த மாத்திரத்தில்
அன்பால் நெருங்கிவிடும்
சாத்தியக் கனவு நீ!
புனலாடி பெருமகிழ்வு
திண்புயக் பெருங்காவல்
நுதல் நனைக்கும்
மென்சூட்டு மான்முத்தம்

**

கார்மேகத் தோகையோடு
மழையாடும் நடனத்தில்
நானிசைக்கும்
ஆம்பல் பண் நீ!

***

குரலினிமையில் சொக்கிக் கிறங்கும்
அஞ்சிறைத் தும்பி நான்
கிங்கர கீதமிசைத்தபடியிரு!
பயமின்றி துஞ்சட்டுமென் இமைகள்
நூற்றாண்டுக் கவலை மறந்து....

****

கொந்தளிக்கும் கடலுள்
சறுக்கிக் கொண்டோடும்
அலைவிசைப் பலகையென
துவளும் பணைத்தோளேந்தி எழுதிவிடு
இன்னுமொரு காமுறு கவி!

*****

எல்லாமும் நீ என்றானபின்
என்னுள் எதாவது மிச்சமிருக்கிறதா
எனக்கே எனக்கென்று...
அதீதம் தான்
ஆனாலும் இனிக்கிறது
தாழற்று ததும்பும்
நின் தரணிப் பெருங்காதல்

*******

கொட்டும் பறையதிர
விட்டெழும்பும் தூளிப்படலமென
இதழ் சிவக்கும் முத்தப்பறை
மீட்டி யெழுப்பட்டும்
அழுந்தக்கட்டிய பெண்மையின்
அந்தரக் கனவுறை
யாழின் நரம்புகளை...

*********

Wednesday, October 2, 2013

கனவில் பயணங்கள் -1

உயிர் உறிஞ்சி உடல் துப்புகிறாய்
எந்தக் கனவில் தொலைந்தாய்
இமைமூடி பொழுது புலருமிந்த
நித்திரை விளையாட்டுக்களனைத்தும்
நேற்றைய நம்மைத் தேடிக் கண்டடையவே

ஆழ்மனதை எழுத்தில் பேசுவதின்
சிரமம் என்ன தெரியுமா?
படிப்பவரெல்லாம் எனக்காக கண்ணீர்
சிந்துவார்கள்
அதிலே சிலருன் பாத்திரமேற்று
நிகழ்வில் வலம்வர ஒப்புதல் வேண்டியும்
பாத்திரப் படைப்பின் பின்புலம்
தானென்று தர்க்கமிட்டும் வருகிறார்கள்

போகட்டும்
நேற்றைய கனவில்
உன்னைத் தேடியொரு ரயில்பயணம்
ஓட்டைப்பல் சிறுமியொருத்தி
சினேகமாய் வந்தென் பெயர் கேட்கிறாள்
கன்னம் கிள்ளியபடி சொல்கிறேன்
மாராப்புக்குள் மறைந்தும் தெரியும்
திருமதியென்பதன் அடையாளம்
எதிர்வரிசையிலொரு மூதாட்டி
பார்த்தபின்னும் கேட்கிறாள்
பெருமிதமாய் பதில் சொல்கிறேன்
பெரியவர்கள் மௌனத்தால் ஒதுக்குகிறார்கள்
குழந்தைகள் கரையொதுங்கிய
சிப்பியைத் தான் தீண்டுவார்கள்
முத்துக்களற்றிருப்பதன் கவலையேதுமில்லை
வலைவிரித்து மீன் பிடிக்கவும் தேவையற்ற மனம்
பயணத்தில் நீயும் உடன் இருந்திருக்கலாம்
பல்லழகியும் அவள் பசுந்தமிழும்....
கதை சொல்லி மடியிருத்தி போக்குக் காட்டி
அந்தப் பயணத்தை நீடித்தபடியிருந்தேன்
பார்!
வெண்ணுரை பெருக்கி நீலக்கடல்
தூரத்தே சப்தமிடுகிறது

அலையோசைக்கு யார்
அலார மணியோசையை
பிண்ணனி சேர்த்தது...?

[விடியல் -1]

கவிக்கோர்வை - 19

****

எனக்கான கேள்வியொன்றை
கேட்டுவிடு பார்க்கலாம்
அதற்கான
ஆகச் சிறந்த பதிலை
நிச்சயம் தருவேன்

***
கண்ணாடியால் சூழப்பட்ட அறையில்
தான் வசிக்கிறேன்
ஆக
முதுகில் கண் இருப்பது
அவசியமற்று போனது

***

உமையொரு பாகமென்று பாடாதீர்கள்
கவிஞர்களே!
அவளுள் சிவனொரு பாகமென்று
பாடிப் பழகுங்கள்

****

இவர் சொன்னார்
அவர் சொன்னார்
அதையே/இதையும்/எதையோ சொன்னார்
இதுவரை
எவரும்
உண்மை சொன்னதில்லை

****

கிட்டத் தெரியும் தட்டான்களும்
தூரத் தெரியும் விமானங்களும்
ஒரே மாதிரியான
ஆச்சரியங்கள் தான் குழந்தைகளுக்கு....

****

நிமிடத்திற்கு நிமிடம்
மாறிக் கொண்டிருக்கிறேன்
சோப்புக் குமிழி போல் படர்ந்த
வண்ணங்களை வேடிக்கை பார்க்கிறாய்
பரிணாமங்களில் ஒன்றைத் தான்
திரும்பத்திரும்ப சொல்லியாக வேண்டும்
நானும் கூட
நிலையற்றவள் தான்

****

மன்னித்துவிடு!
கதவு தட்டாமல் அறை நுழைந்துவிட்டேன்
சம்பிரதாயத்திற்கென வெளியேறி
அனுமதியோடு மீண்டும் வருகிறேன்
அன்றேனும்
சிரித்தபடி உபசரி பார்க்கலாம்!

****

Tuesday, October 1, 2013

ஆகையினால்...

யானை ந்னா கம்பீரமா தான் இருக்கணும். அதால கூனிக் குறுகி உறுத்தலோட இருக்க முடியாது/கூடாது. அந்தப் பெரும் யானையின் கம்பீரத்தின் மீது காதல் கொண்டவள் நான். என்றாவதொரு நாள் அது சில்லறைகளுக்குள் தொலைந்த இருட்டின் வடிவமென்று உணர்ந்தேனாகில் சுக்கல் சுக்கலாய் சிதைந்து போவேன்.

ஆக, யானை என் பொருட்டும் அதன் கம்பீரத்தை காப்பாற்றுவது கடமையாகிறது.

ஏன் சூழ்நிலையின் பிடியில் சுயமழிந்து போகிறார்கள்.

சாதாரணனில்லை என்பது தான் பொய்யா? ஒரே குழப்பமா இருக்கு.

உரையாடும் மனிதர்களைத் தான் சொல்கிறேன்.  போலிகளைக் கண்டால் பற்றிக் கொண்டுவருகிறது.

அரசியல்வாதியோ இலக்கியவாதியோ பேசிட்டிருக்கும் போது பதில் சொல்ல நேரமெடுத்துட்டேருந்தா இன்னும் புதுசா ஒரு கதை சொல்ல டைம் எடுக்கறாங்கன்னு அர்த்தம். இல்ல இடைச்செருகலா ஏதோ சொருகி பேச்சு திசைமாறும் வாய்ப்புண்டு. ஆனா டைமிங் சென்ஸ்ல சிக்ஸர் அடிச்சா ‘வாவ்’ ஒரு ஆச்சர்ய கைதட்டல் நிச்சயமுண்டு.

மடைதிறந்த வெள்ளம் போல யாரையும் பேசவிடாம தானே பேசிட்டு இருந்தா நல்லா ஹோம்வொர்க் பண்ணி மனப்பாடம் பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு அர்த்தம். பாவம் பார்த்து, காதை மூடி அவருக்கு பின்னாலிருப்பவற்றை வேடிக்கை பார்க்கலாம்.அவர் பேசிக் கொண்டிருக்கட்டும்.

தயங்கி மெதுவா பேச ஆரம்பிச்சி எதோ ஒரு புள்ளியில அடைமழை பொழிஞ்சாத் தான் உண்மையான மனித போராளி/சுகவாசி கிட்ட பேசறோம்ன்னு அர்த்தம். அந்த மழையும் கூட மிகையுணர்ச்சி இல்லாம மண்வாசனையோட இருந்தா தான் அடுத்தமுறை பேசப் பிடிக்குது.

எனக்குத் தெரிந்த ஒரு புதுமைப் போராளி பெண்ணின் மாதவிடாய் குறித்து அத்தனை உருகிக் கொண்டிருந்தார். சிரிப்பாய் இருந்தது. தன் மனைவிக்கும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் இது பொது தான் என்றாலும் எத்தனை வலி எத்தனை துன்பமென்று முகத்துக்கு நேரே பிரசங்கிப்பதில் என்ன பயன்? வலி உணர்ந்தவர் அதை அடிக்கோடிட்டு பரிதாபப்படுவதில்லை. அத்தனை மிகைப்படுத்தலுக்கும் நன்றிப் பெருக்கேதுமில்லாமல் ‘ஹேய்! நீ என்ன சொல்ல வர்ற’ என்றேன். நான் திமிர்ப் பிடித்தவளென்றார். நன்றி சொன்னேன்.

பெண்ணுரிமை/பெண் சுதந்திரம்ன்னா என்னான்னு கேட்டாங்க. பெண் பெண்ன்னு அடிக்கடி சொல்லாம சகஜீவின்னு பேசப் பழகு. அப்புறம் உரிமை பத்தியும் சுதந்திரம் பத்தியும் பேசலாம்.

மௌனம் அழகாக இருக்கிறது. இப்போதைக்கு புறவெளிக் கிரணங்கள் எரிச்சலூட்டுகின்றன.
என் வனத்தில் சில் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வரத்துவங்கிவிட்டன.

நான் கவிதை பழகுகிறேன்.

வேண்டாம் மனிதர்கள்.

ம்ம் மனிதர்கள்

வேவு பார்க்கவென்றே சில புறாக்கள்
பூங்கொத்து சுமந்து வருகின்றன
வந்தவையெல்லாம் வருத்தத்துடன் திரும்பாமலிருக்க
நானிருக்கும் வேதனைகளைச் சொல்லிப் புலம்புகிறேன்
அய்யோ பாவமென
’உச்’சுக்கொட்டி உற்சாகமடைகின்றன
பேரன்பின் நதி நான்
மிதக்கும் கவலைகளில் புரிந்து கொள்
நான் அத்தனை அடர்த்தியானவள்
வெளிச்சங்கள் நடமிடும்
கருமிருட்டுக் காட்டுக்குள்
தேடிக் களைத்திடுமுனக்கு
ஆச்சர்யங்கள் இன்னுமிருக்கிறது....
ஆசுவாசம் கொள்!
இந்த இரவு விடியட்டும்

செயல் பிறழ்வு

பிருஷ்ட பீடம்
விம்மிய கொங்கைகள்
குழிந்த கொப்பூழ்
மலிந்த புனிதமாய்
யோனி இதழ்கள்
இவை மறைக்கப் போர்த்திய உடை தான்
உன் வரைவில் பெண்ணெனில்
நீ
இன்னும் பிணத்தைத் தான்
புணர்ந்து கொண்டிருக்கிறாய்
பிள்ளைமை தாங்கி
நிர்வாண மனத்தோடொரு
உயிர் ஏங்கிக் கிடக்கிறது
மாராப்பு மீறி வீசும்
முலைப்பால் கவிச்சி..
கவனித்துப் பார்
அவளுன் தாயாகவுமிருக்கலாம்

Monday, September 30, 2013

ஐயம்

நூற்றாண்டு மரத்திலிருந்து
உதிர்ந்த சருகுகளும்
உரிந்த பட்டைகளும்
மரத்தின் திசுக்களில்
தன்னிருப்பை எழுதி வந்திருக்குமோ
என்னவோ!
வெட்டப்பட்டக் கிளையின் வேதனையில்
பக்கக் கிளை வளருமே தவிர
அப்பாகம் துளிர்ப்பதில்லை காண்!
உடைபட்டக் கிளை பதித்து
அங்கோர் மரம் வளர்ந்ததுவும் காண்!
ஒளிர்வும் பொலிவும்
உற்றுநோக்கலும்
கற்றுத் தேர்தலும் வேர்பிடித்தலில் இருக்கிறது
தசை பெருக்கும்
தாவர சுழற்சியுள்
வெயில் மழை காற்று
என்பனவாகிய காலத்தின் கூறுகள்
பற்றுதலிலின்றி பரிணமிப்பதில்லை
தென்றலின் வருடலில்
உடல் கூசிப் பெருமூச்செறியும்
அவயங்களுடன் கதை பேச வந்திருக்கிறேன்
செவ்விக்குடன்படுமா அப்பெருமரம்?!

Sunday, September 29, 2013

விலங்கு பூண்டிருக்கும் விலங்கு

வாதைகளோடு பிணைந்து கிடக்கிறது
வலிக்கும் நிதர்ச்சனங்கள்
சொற்களற்ற கையறு நிலையில்
என் கவிதையை
எனக்காக நானே எழுதமுடிவதில்லை
எனைக் கடக்குமெவரேனும்
பிரதிபலன் பாராது
கைவிலங்கை உடைத்துவிடுங்கள்
வாய்க்கட்டையும் பிய்த்தெறியுங்கள்
ஒடுக்கப்பட்ட வாழ்வியலை
பேசவேண்டியது
வரலாற்று அவசியமாகிறது

Saturday, September 28, 2013

அவளாகி நானும்....

இன்னும் அந்தக் குழந்தைக்கு தலை நிற்கவில்லை. எல்லா விரல்களும் வாயினுள் விட்டு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது.கிட்ட நெருக்கிய கணம், மற்றொரு கையால் என் தலை முடியைப் பிடித்துக் கொண்டது. மெதுவாய் விடுவித்துக் கொண்ட அதே நேரம் அந்தக் குழந்தையின் அம்மா என்னை நோக்கித் திரும்பினாள். புன்னகைத்தபடி
“கொஞ்சம் பிடிச்சக்கறீங்களா? இதோ வந்துடறேன்”

சென்னையில் இது போலும் நான் பார்த்ததில்லை.அத்தனை எளிதில் குழந்தையைப் பிறரிடம் தரும் தாய்மார்களைப் பார்த்ததில்லை. சுடிதார்ல குழந்தை பாத்ரூம் போனா என்னாகும் இங்கிருந்து வங்கிக்கு வேற போகனுமே.. அப்பாடா! வெள்ளை கவுன் பாதுகாப்பு அம்சங்கள் சகிதம் என் கைக்கு வந்தது அந்தக் குட்டி தேவதை. கழிப்பறை நோக்கிப் போனவள் முப்பது நிமிடம் ஆகியும் திரும்பி வரவில்லை. எந்த லக்கேஜூம் இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொதுவிடத்து வருகிறவள் போல் தெரியவில்லை. அவளும் ஏதோ குழப்பத்தில் இருப்பது போலவும்.... அய்யோ! சடாரென குழந்தை திருட்டு சம்பந்தமான எல்லா திரைப்படங்களும் செய்திகளும் வந்து போயின..

கண்சிகிச்சைப் பிரிவின் தளம் இது. இது போல நிறைய தளங்கள் உண்டு. ஒவ்வொரு வகை மருத்துவத்திற்கும் ஒவ்வொரு தளம். நான் வேறு இத்தனை நேரமாக குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேனே தவிர அவள் என்னவானாள் என்கிற கேள்வி என்னுள் கேட்டுக்கொள்ளாமல் இருந்தேனே! என்னை நானே நொந்து கொண்டு அவளைத் தேடத் துவங்கினேன். பயம் வேறு. இதற்கிடையில் கொஞ்சமும் அழாமல் தோளில் சாய்ந்தபடி கன்னம் காது என எச்சிலபிஷேகம் நடந்தபடியிருந்தது. முதல் தளம் இரண்டாம் தளமென்று தேடியும் கண்ணில் தட்டுப்படவில்லை. அலைபேசிய தோழி வேறு போலீஸ் கம்ளைண்ட் ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்தாள். போட்டோ எடுத்தியா? அந்தப் பொண்ணு எப்டி இருப்பான்னெல்லாம்... மிரண்டு போய்ட்டேன். இதென்னடா சனிக்கிழமையும் அதுவுமா இப்படி ?
கீழே ரிஷ்ப்சன் வரை இறங்கிப் போய் CCTV ரிக்கார்டிங் பார் என தோழியின் சமயோஜிதம் ஆறுதல் தந்தது.

என் அப்பாயின்மெண்ட் வந்து விட்டது. குழந்தையோடு உள்ளே நுழைந்தேன். கண் பரிசோதனையின் போது குழந்தை கையில் இருக்கக் கூடாதென்றார்கள். நர்சிடம் போவதற்கு அத்தனை கத்தியது குழந்தை. அதிசயமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு இவங்கம்மா வந்தா நான் இங்க இருக்கேன்னு சொல்லுங்க என்றேன் நர்சிடம். இருபது நிமிட பரிசோதனைக்குப் பின் குழந்தையோடு வெளியில் வந்தேன். முழுதாய் ஒரு மணி நேரம் என்ன செய்கிறாள் கழிப்பறையில்? செம கடுப்பாக வந்தது. என்னோடு இன்னும் இரண்டு நர்சுகளும் தேடிக் கொண்டிருந்தார்கள்.எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. வேறு தளத்திற்கு சென்று விட்டாளோ? சமர்த்தாக தோளில் சாய்ந்தபடி இருந்தது அந்தப் பஞ்சுக் குட்டி. அத்தனை அழகான குழந்தை. பேசாமல் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்து உட்கார்ந்தேன். இன்னும் ஒரு 40 நிமிடம் கடந்து ஒரு வயதான பாட்டியுடன் மெதுவாய் வந்தாள்.

”கஷ்டப்படுத்திட்டாளா குழந்தை?”
“அதில்ல. எங்க போனீங்க?ஒரு மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என்னங்க நீங்க”
“இல்ல பாட்டிக்கு லேப் டெஸ்ட் எடுக்கக் கொடுத்திருந்தேன். கூட்டி வர லேட்டாயிடுச்சு. அதான்”
“சொல்லி இருக்கலாம்ல? பயந்தே போயிட்டேன்”
“என்ன பயம்?” சிரித்தபடி கேட்டாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தையை வாங்கிக் கொண்டாள். வாயிலிருந்து கையை எடுத்ததும் முன்போல் கத்த ஆரம்பித்தது.இதானா காரணம். நான் கூட முன் ஜென்ம பந்தம் ஒட்டுதல் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டேனே! நல்ல அம்மா நல்ல குழந்தை. நல்லா வருவீக!

விடைபெறும் போது சொன்னாள்,

“முகத்தைப் பார்த்தா தெரியாதாங்க. நம்பிக்கையானவங்களா இல்லையான்னு?”

அது சரி! இளிச்சவாய்ன்னு பார்த்தாவே தெரியும் போல. சனிக்கிழமை வேறு. வங்கி சம்பந்தமான முன்று வேலைகள் முடிக்கமுடியாமல் போனது.இனி செவ்வாய் கிழமை தான்.

ஆனாலும் அந்தச் செல்லக்குட்டி.க்யூட். கண்ணுக்குள்ளேயே நிக்குது.

Thursday, September 26, 2013

நந்தியும் சிவதரிசனமும்

ஒவ்வொரு சிவாலய தரிசனத்தின் போதும் அந்தப் பெரும் நந்தியின் காதில் சொல்லி வர நிறைய விசயங்கள் இருந்திருக்கின்றன. கரும்பாறை சிலையதன் உடல் சிலிர்க்க எத்தனை முறை பேசியிருப்பேன் நினைவில்லை. வெளிப் பிரகாரம் சுற்றிக் கொடிமரம் தொழுது இன்னுமொரு முறை சிவனைப் பார்க்க ஒரு அடி தள்ளித் தான் அமர்ந்திருக்கிறது நந்தி. மருளும் பார்வையென்றால் என்னவென்று கன்றின் கண்களைப் பார்த்தால் புரிந்துவிடும். ஏனோ மனதுக்கு இணக்கமான சிலை தான் நந்தி. வேண்டுதலென்று ஏதுமில்லாமல் அதன் காதில் இன்று வாழ்க வளமுடன் சொல்லி வந்தேன். பலநூறு வருடப் பழக்கத்தில் அதற்கு வாழ்த்துச் சொன்னவள் நானாக இருந்திருப்பேனென்று சிறுபூனையின் மனனிலையில் பெருமிதப்பட்டுக் கொண்டேன். பெருந்தன்மையாய் நந்தியும் மன்னித்திருக்கும்.

ஊரிலென்றால் சாயந்திரம் கோவிலுக்குள் நுழையும் போதே வாத்திய ஓசை கேட்கும். அம்மன் கோவிலில் தான் கூட்டம் நிரம்பி வழியும். சிவன் கோவிலிலோ ஒரு வயதான ஓதுவார் தேவாரப் பதிகத்தைத் தினமும் ஆர்மோனியப் பெட்டியுடன் வாசித்துக் கொண்டிருப்பார். காது கேளாத அவர், கூட்டம் இருக்கிறதா என்பதையும் பார்க்காமல் பாடிக் கொண்டிருப்பார். ஆனால் அந்தக் குரலில் ஏதோ உயிர்ப்பிருக்கும். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஆட்களும் நிறைய மணிப்புறாக்களும் அணிகளும் கோமாடத்துப் பசுக்களும் அழகாய் இருக்கும். மனம் நிறைந்தும் இருக்கும். அத்தனை அமைதியும் திருப்தியும் சென்னையிலுள்ள பழம்பெரும் சிவன் கோவில்களிலும் கிடைக்கிறது தான். ஆனாலும் இங்கே ஏதோ பக்தியில் நகரத்துவம் புகுந்தாற்போல..

இன்று ஒரு சிவாலய தரிசனம். பிரதோஷ நாட்களில் மட்டுமே ஆலய தரிசனம் என்கிற கணக்கெல்லாம் இல்லையென்றாலும் உபவாசமென்கிற எண்ணம் தோன்றும் போதெல்லாம் கோவிலுக்குப் போவதென்கிற வழக்கம் வைத்திருக்கிறேன். நிம்மதிக்கென என்கிற போதும் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தபடி மூலவர் கோபுர தரிசனமும் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் யாளியின் வடிவத்தில் பற்களை எண்ணுவதுமாய் கழியும் அந்த நாழிகைகள் அற்புதமானவை தான். கூடவே சிவபுராணமும் படிக்கக் கேட்க சரிவிகிதமாய் மனம் நிறைவு பெறும். கடவுளை தியானத்தின் மூலம் அடையமுடியுமென்றால் அந்த தியானத்திற்கான ஓர்மையுள் உறையும் பொழுதுகள் தான் ஆலய தரிசனங்கள். என் வரையில் பக்தியென்பது இப்படியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது நண்பர்காள்! சிவனோ அரியோ அம்மனோ இயேசுவோ பள்ளிவாசலோ மனம் எங்கு அமைதியுறுகிறதோ அங்கே தான் பக்தியும் மனதின் சுதந்திரமும் பிரவாகமெடுக்கிறது. இன்று உடல் மனம் ஒருமித்த மகிழ்வான தருணமதை உணர்ந்தேன்.

Tuesday, September 24, 2013

மனம் திறந்த ஒரு கடிதம்

தோழிக்கு!

தேர்ந்த வித்தகியின் வினயத்தினை ஒத்தது நின் விழி பேசும் மொழி...
பயமாய் இருக்கிறது பிள்ளைமை படர்ந்திராத பெண்களைப் பார்க்க...
கடினமொழியுனது... மழலையைத் தான் விரும்பி ஏற்கிறேன்.
பேசுவதைக் கேட்கப்பிடிக்காமல் கண்கள் ஏதோவொரு குழந்தையைத் தேடுகின்றன....
எவர் மீதோ எவரின் நட்பின் மீதோ நான் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தகர்க்கும் காரியத்தில் முழுமூச்சாய் இறங்குகிறாய்...

விளக்கம் கேட்கவும் விளக்கம் சொல்லவும் நாங்களே விரும்பியதில்லை. தேவையுமிருந்ததில்லை. பாலின பேதம் நுழையாத தனிவழியில் பயணிக்கும் நட்பது.நானே தேர்ந்த நல்லுறவானதந்த நட்பு. ஆத்மஞானியவன். உடல்களைக் கடந்தவன். இனி சுகிக்க துக்கிக்க மிச்சமில்லாத அனுபவக்குவியல்.அங்கே என் அடையாளம் பெண்ணாய் எப்போதுமில்லை. சகஜீவி என்கிற தோழமையுண்டு. முழுதாய் சுதந்திரமாய் உணரும் தருணங்கள் நாங்கள் விவாதிக்கும் மின்னாடல் தருணங்கள். பேசியிருக்கலாம் தான் இத்தனையும்...நெற்றி நெறித்து தீவிழியோடு பேசும் என் கோபம் தாங்குவாயா? முதல் சந்திப்பு வேறு. மரியாதை நிமித்தம் மௌனம் பேசி வந்தேன். மெசியாவெனச் சொல்லிக் கொண்டாய். சிரித்துக் கொண்டேன். நன்னீரோடையைக் குட்டையெனக் குழப்பி மீன் பிடிக்கும் வேலையெல்லாமா மெசியாக்கள் செய்வார்கள்.

தெளிவாய் தோழி!

அத்தனை ஆபத்தானவர்கள் என்னுடன் இல்லை. அன்பாலானது என்னுலகம். அடக்குமுறைகளின்றி கரங்கோர்த்துச் சிரிக்கும் இயல்பானவர்கள் சூழ் உலகம். போலியில்லாத நண்பர்கள் வரிசையில் ஏன் உன்னைச் சேர்த்தேன்? உன் எழுத்தும் அதன் நேர்மையும் உண்மையென்றெண்ணினேனோ என்னவோ! முதல் சந்திப்பே இத்தனை கசந்தது உன்னுடன் மட்டும் தான். நான் சுதந்திரப்பறவை. கண்ணிகள் வைத்து என்னைப் பறக்க விடாது சிறைபடுத்துபவர்களைப் புறக்கணிப்பது என் கட்டாயமாகிறது. எப்போதும் சிக்கினேனில்லை. :)

மன்னிக்கவும் தோழி!
நடத்தை, சுய ஒழுக்கம், கண்ணியம் இதெல்லாம் என் வரையில் நான் மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளேன். அங்கே நீங்கள் ஏன் கல்லெறிகிறீர்கள்? காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று உங்களின் தேவையில்லாத அக்கறை எரிச்சலாயிருக்கிறது. எவர் அசைத்தும் நகராத கரும்பாறை மனமிது. அத்தனை எளிதல்ல நானும் என் கோட்பாடுகளும். அப்பாவிடம் சொன்னேன். சிரித்தார்.அவரிடமும் பேசியிருக்கிறாய். நல்லது. புரிதலுக்கு ஆட்பட்ட எந்த உறவுக்குள்ளும் அத்தனை சீக்கிரம் நுழைந்துவிடுவதில்லை இது போன்ற சந்தேகக் கணைகள்.
பிறகேன் இத்தனை வரிகள்? கேட்பது கேட்கிறது. வலிதனை வரிகளில் இறக்கி வைத்தே கடந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே... நிச்சயம் படிப்பாய் தெரியும்.  உனக்கென்பதுவும் புரியும். படி. தெளி.

தனிப்பட்ட பிரச்சினை தான் பேசித் தீர்க்கலாமே ஏன் இப்படியொரு பதிவு? இப்படி கேட்பவர்களுக்கும் ஒரே பதில் விஷ மரமொன்றின் வேர் நானறியாமல் பரவியிருக்கிறது. அதன் பரவல் எத்துணை தூரமென்று தெரிந்த நாளின் அதிர்ச்சி இன்று வரை நீடிக்கிறது.
நீ பரப்பும் பொய்யுரைகள் என் காது நிறையும் போது எத்தனை வலி தெரியுமா? என்ன மாதிரியான புகழுக்காக இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி அதற்கு என் பெயர் சூட்டுகிறாய்?  பிரபலமாதலும் பிரபலத்துவமும் வெளியுலக வெளிச்சமும் தேவையில்லாத தன்னிறைவு நிம்மதியில் தான் திளைத்திருக்கிறேன். இப்படியொரு அடிக்கோடிதலுக்கு என்ன அவசியம் வந்தது? அலர்தூற்றும் ஒரு அறிவிலியுடனா நான் என் 72 நிமிடங்களைப் பேசிக் கழித்திருக்கிறேன்.

உன் குரல் கேட்கவோ உன்னைப் பற்றி பேசவோ விரும்பாத மனநிலை தான் இன்றுவரை. உன் அக்கறையின் பேரில் திடீரெனக் குதிக்கும் உறவு/நட்பின் கரங்களின் எண்ணிக்கை தான் என்னை இப்படி எழுத வைக்கிறது. புறம் பேசுதலுக்கென உள்பெட்டியில் கருத்துரையிடுபவர்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை எப்போதுமே.

பிரச்சினையில்லாத எனக்கேன் தீர்வுகளைப் பரிந்துரைக்கிறீர்கள்?!

பெண்ணென்ற கரிசனத்தோடென்றால் இதல்ல கரிசனமென்பது... அப்பட்டமான கீழ்மையின் பாதிப்பு. தவிர எவ்விடத்திலும் பெண் என்கிற அடையாளத்திற்காக சலுகை பெறத் துடிக்கும் நிலையிலும் நானில்லை. இது உங்கள் மனவளப் பிரச்சினை. மீண்டு வாருங்கள் தோழி.

நீங்கள் இத்தனை தூற்றியும், நீங்கள் எதிர்வரும் போழ்தில் இதழிடையில் மலர்வானதொரு புன்னகை மிச்சமிருக்கும்.
பிரச்சாரத் தொனியிலிருந்து விலகி நேர்மையான எழுத்துக்களோடு பயணியுங்கள். வாசகியாய் இருப்பேன். அதே நட்பென்பது கடினமெனினும் பழக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
காலத்தின் கைகளில் எனை ஒப்புவித்தபடி... ஓடிக்கொண்டிருக்கிறேன். நின்று நிதானிக்க நேரமில்லை.

வாழ்த்துகளும் வணக்கங்களும்...

வாழ்க வளமுடன்

- கயல்

Monday, September 23, 2013

கவிக் கோர்வை - 18

எண்ணம் இடுதிரியோ
எரியும் சுடர் தான்
என் கவியோ?!
*****
சலங்கையிலிருந்து உதிர்ந்த
தனியொரு முத்துக்கும்
குலுங்கிச் சிரிக்கும் திறனுண்டு

*****
சொல்லாமல் வந்துவிட்டேன்
மயிற்கற்றைச் சுருளை அலுத்தபடி
பெருக்கித் தள்ளும் நாளில்
நினைத்துக் கொள்வாயா அம்மா?

*****
வாய்க்கூடணிந்த கன்றொன்று
மண் தின்பதற்கென்று அலைவுறுகிறது...

*****
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை
கடவுளுடனான சினேகத்தில்
மகிழ்கிறது

*****
நூறு சதவீதம் நிரம்பிய குளமும்
காற்றுக் குமிழிகளைத் துப்பியபடியிருக்கிறது....

*****
இரண்டாம் யாமத்தில்
வானக் குளத்து நிலா
பூமியில் மிதந்தபடியிருக்கிறது

*****
நிகழ் இரவில்
நிழல் தேடி...
தீபங்களேந்தியபடி
நகர்கிறதந்த நிஜம்

*****
தீர்ந்து போன வார்த்தைகளோடு
மௌனம் பருகி விடைபெறுமிந்த
சம்பிரதாயங்கள் வேண்டாமே!
வலுவில் கூட்டிவரும் சிரிப்பும்
அருகிருந்தும் தூர நிற்பதுவும்
அவஸ்தையாய் இருக்கிறது
பிறர் பார்க்க
பிறர் ரசிக்க
பிறர் புகழ
பிறர் மகிழ
பிறருக்கென....
எத்தனை முறைதான்
கிழித்து ரணமாக்குவாய்
உன் காதல் சுமந்தெறிந்த மனதை....

இரு தெய்வங்கள் வரமருள்கின்றன

இடைக்கச்சையும் மார்புக்கச்சையும்
அவிழும் பேராபத்தில்
அதிரும் இசைக்கென ஆடிக்கொண்டிருக்கிறாள்
நர்த்தகி ஒருத்தி
வெளிச்சம் பாய்ச்சி வியாபாரமாக்கும்
உத்திகளிலிருக்கின்றன
பணம் தந்த மிருகங்கள்
இமைக்காமல் கண்கள் விரிய காத்துக்கொண்டிருக்கின்றன
பலகோடிக் கண்கள்
பதைபதைபுடன் செய்வதறியாது என்போல் சிலரும்....
குழுவிலிருக்கும் இன்னொருத்தனும் இன்னொருத்தியும்
திடுமென புகுத்திய நடன அசைவுகளில் ஆடை திருத்த அவகாசமளிக்கிறார்கள்
கைதட்டுங்கள்!
ஒரு மனுசிக்கு
இரு தெய்வங்கள் வரமருள்கின்றன

Sunday, September 22, 2013

இருண்மை வலி

இருண்மை படர்ந்த கவிதையுள்
உருகும் சிறுமெழுகென
ஒளிசிந்திப் போகிறது ஏதோவொரு வரி
விலங்கிட்ட கைகளுடன்
பளீரிடும் சிரிப்பை உதிர்க்கும்
அவளை வெளிச்சத்தில் பாருங்கள்
ஒளி குன்றும் போதில் குளமாகிய கண்கள்
எழுத நினைத்த அனைத்தையும் மறந்துவிட்டேன்
இன்னொரு மெழுகுவர்த்தியைக் கொல்ல வேண்டும்
இப்போதைக்கு அவ்வளவு தான்
விலங்கை விடவும் இருளே அதிகம் அச்சுறுத்துகிறது
அவளையும் என்னையும்...
முடிந்தால் பூட்டிய விலங்குடைக்க
நாளை ஏதேனும் செய்யவேண்டும்

Saturday, September 21, 2013

தெத்துப்பல் அழகி

அரைமணி நேர உடற்பயிற்சியும் வேக நடையும் வெந்நீர் குளியலும் கடந்தும் அரற்றும் மனது ஒரே கேள்வியைத் தான் கேட்கிறது....
“உடல், உன் உயிரை விட பெரிதா ? அம்மணமென்ன அத்தனை பெரிதா?”
இந்த கவரிமான்,கற்பு பிதற்றலெல்லாம் எரிச்சலின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. உன்னுடம்பை ஆடையின்றி எவராவது பார்த்துவிட்டால் அவனோடே வாழ்ந்து செத்துப்போ எனவும் தூக்கில் தொங்கிவிடு என்றுமா நீ படித்த படிப்பு சொல்லி வளர்க்கிறது? எவர் வழி இவ்வழி தேர்ந்தாய்?
தெத்துப்பல்லிருக்கும். மாநிறம் தானென்றாலும் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகி. சின்ன வயதில் பார்த்தது. தோழியின் தங்கை. அத்தனைப் பரிச்சயமில்லையெனினும் பார்த்திருக்கிறேன்.
மரண ஓலமின்றி நடந்த அவளின் இறுதி ஊர்வலத்தில் கலந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் மனம் மரத்துவிட்டது. அழுகை வருவதில்லை அத்தனை சீக்கிரம். என்னை விடுங்கள். அங்கே பெரிதாய் எவருமே அரற்றவில்லை. சீக்கிரம் சீக்கிரமென்கிற குரல்கள் தான் கேட்டபடி இருந்தன. வந்ததிருந்த உறவினர்கள் யார் நீங்களென்று விசாரித்து உள்ளே விட்டார்கள்.
இன்னும் சிலமணி நேரத்தில் சிதைக்குப் போகும் மகளென்ற போதும் அவள் மரணத்தை விடவும் அதன் காரணத்தை மறைக்கும் தவிப்பிலிருக்கும் தகப்பன் எத்தனை பெரிய மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கிறான்? விசும்பாமல் வெறித்தபடியிருக்கும் அந்தக் குடும்பத்தின் அத்தனை முகத்திலும் பேரதிர்ச்சி.

’வயித்துவலி சார்’ அப்பட்டமாய் பொய் சொன்னார். எத்தனை வாதாடியும் ‘வேணாம்மா. போலீசு கீலீசு கோர்ட் பத்திரிக்கை இதெல்லாம் வேணாம்மா. விட்டுடுங்க ப்ளீஸ். இன்னும் ரெண்டு பொட்டப்பிள்ளைங்க...’ அமைதியாய் கலைந்தார்கள்.

எங்கிருந்தென்று புரியவில்லை.ஆனால் சரிசெய்ய வேண்டும். பாலியல் கொலைகளும் பலாத்காரங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணிகளாய் பிறர் இருந்தால் தண்டணை வாங்கித் தர முடியும். உள்ளுக்குள்ளே உடைந்து சிதறி தற்கொலையில் மாய்ந்து போகும் இவளைப் போன்றவர்கள் தான் சார்ந்த குடும்பத்துக்கு மனநோயை பரிசாய் தந்துவிடுகிறார்கள்.

அந்தம்மாவின் முகம் பார்க்கவே முடியவில்லை. சே! நினைவுகளைத் தூரப் போடும் வரமொன்று தாருங்களேன். இம்சித்தபடியிருக்கிறது வேதனையாய் தூங்கிய அந்த முகம்.

Thursday, September 19, 2013

நினைவுகளை ஏன் வைத்திருக்கிறேன்?

பதியமிட்ட ரோஜாச் செடி
நட்டுவைத்த முருங்கைக் கொம்பு
பிடுங்கி நட்ட பக்கவாழை
வேலியோரத்தில் செழித்து நிற்கும்
அடுக்குமல்லி
சிரிக்கக் காத்திருந்த
இதழ் வளர்ந்த செம்பருத்தி
மல்லி புதினா மணக்க கடும்புதரென
கறிவேப்பிலைக் காடு
வேம்பு பலா மா சேர நீண்டுயர்ந்த
தென்னைக் கூட்டம்
குளவிகள் கொசுக்களென்றிருந்தும்
சொக்கி நிற்க காரணமாய்
சிறு குருவிக் கூடு
கயிற்றுக் கட்டிலும்
கவிதைப் புத்தகங்களும்...
வெயில் பூசி தென்றல் ஆற்றும்
மிதஞ்சூட்டில் நித்திரைக் கனவு
எல்லாமும் விட்டு வந்தேன்
நினைவுகளை ஏன் வைத்திருக்கிறேன்?

Wednesday, September 18, 2013

அழகு தானில்லையா?!

விளையாடிக் கொண்டிருக்கிறோம்
உன் கவிதையில் நானும்
என் கவிதையில் நீயும்
சொல்லிக் கொள்ளாமல் நீண்டபடியிருக்கிறது
பொய்முகமூடி தானென்றாலும்
யார் முதலில் கழற்றி வைப்பதென்றே...
ம்ம்ம்...
இருபுறமும் துளையிட்ட குழல் என்கிறாய்
அதனுள் இசைத்தபடி நகரும்
காற்றென்கிறேன்
எவரோடு போனாலும் - எனை
வேரோடு பறித்துவரும் வல்லமை சாற்றுகிறாய்
ஆண்மையில் திளைத்துப் போய்
மௌனிக்கிறேன்
மனக்குதிரையை லாவகமாய் செலுத்துகிறாய்
உரசி வரும் உனை நான் காதலாய் பார்ப்பதும்
நீ என்னைச் சீண்டிச் சிரிப்பதுவும்
நகர்த்தும் சாட்டை எவரிடம்?
இசைந்தபடி இழுத்துக் கொண்டோடும்
காதலைத் தான் கேட்க வேண்டும்
அழகாய் இருக்கிறதிந்த
கவிதைக்கு பதிலாய் இன்னொரு கவிதை....

Tuesday, September 17, 2013

பொய்

ஒன்றைச் சொல்லியும்
பிரிதொன்றை மறைத்தும்
பொய்யில் பூக்க வைக்கிறேன்
உனது புன்னகையை...
நிலா, முற்றத்து அண்டாவில்
மூழ்கிக் குளிக்கிறது என்பது போல
எண்ணற்ற பொய்கள்
நீ சிரித்தால் போதும்
பாவக் கணக்கை
பிறகு பார்த்துக் கொள்ளலாம்

Monday, September 16, 2013

பிம்பம்

பிம்பங்களின் அசைவுகளில்
வசமிழந்து கிடக்கிறான்
ரசிகன்
உத்திகளின் கயிறு கொண்டு
ஆட்டுவிக்கிறது மாயை
பொம்மலாட்டத்தில்
லயித்துக் கிடக்கும் மனிதனை
பொம்மையாக்கி ஆட வைக்கிறது
திரையிலாடும் பிம்பம்

Sunday, September 15, 2013

சுயம்பென்றாலே தான்தோன்றிகள் தாம்!

நண்பனோடு உறவு கொள்வதில்லை
அவன் நண்பன்
நண்பன் மட்டுமே
தெளிவாகியிருக்கும் இந்நேரம்
நம்பாமல் கிசுகிசுத்தாலும்
கடுகளவும் மதிக்கப்போவதில்லை
உங்களுக்கு அவசியமில்லாத எதற்கும்
என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள்!
உறவுக்கழைக்கும் காதலனிடம் நட்பை வேண்டுகிறேன்
தாலிக்குப் பின்னென்ற
தீர்மானத்தை முன் வைக்கிறேன்
காதலன் கணவனாவதை தற்காலிகமாக தள்ளிவைக்கிறான்
என் நியாயம் இப்படி....
ஒருநாள் விருந்துக்கு
வாழ்நாள் மரத்தை வெட்டுவானேன்...
போலிகள் மீது நம்பிக்கையில்லாதயென்னை
சுற்றம் வெறுக்கிறது
இருந்தாலும்.....
கடலளவு பாசத்தோடு கரை தொடுகிறேன்
எதிர்படும் எல்லோருமென்னை
'கட்டுப்பெட்டிப் பட்டிக்காடு' என்கிறார்கள்
அங்கே தானே இம்மரம் வேர்பிடித்தது?
மிகையுணர்ச்சிகளுகாட்படும் வழக்கமில்லையாதலால்
பிள்ளைமை சிந்தும் செம்மொழிக்கவி
ஒரு கோப்பைத் தேநீர்
இரண்டு மெல்லிசைக் கோர்வைகள் போதும்
இயல்புக்கு வர....
அந்தோ பரிதாபம்!
அடிபட்டு எதிரியானோர் அணியில்
புறம்பேசி பல்கழன்றவர்களும் சேர்ந்திடுகிறார்கள்
எதிர்படும் நாளில் மலர்வாய் புன்னகைக்க வேண்டும்

Wednesday, August 21, 2013

மைனா




மனமுழுக்க எத்தனையோ கதைகளுண்டு.. என்னோடிருந்த மைனாவை இங்கே தான் தொலைத்து விட்டேன். மிளகாய் பழம், சிறகு நறுக்கல் என எல்லா சித்திரைவதைகளும் செய்தபடி அத்தனை பேரன்பு அதன் மேல்....அதற்கும் அதே பேரன்பு என் மேல் உண்டு. உண்மை தான் நம்புங்கள். என்னோடு பேசப் பழகிய இடைப்பட்ட நாட்களில் சிறகு வளர்ந்திருந்தும் பேரன்பினோடு தத்தித் தத்தி நடந்தபடியிருக்கும்.

யாருமே தேவையில்லையெனத் தோன்றிய நாளொன்றில் அதனையும் துரத்திட... விடாமல் வட்டமடித்தபடி என்னோடே இருந்தது.

என் தோள் பற்றி அனுசரணைக்கு அலைந்த அச்சிறு பறவையின் பாசம் இன்னும் கண்ணுக்குள்ளே...

எவர் திட்டினாலும் அதன் முன் அமர்ந்து கொண்டழுவது வாடிக்கை.. நான் மகிழ்வோடிருக்கையில் என்னிதழுள் பொதிந்த நெல்மணிகளை கவனமாய் தின்னத் தருவேன்.
அந்தக் கணங்களுக்காய் என்னைச் சுற்றிப் பறந்ததென நினைத்திருந்தேன். உண்மை அதுவல்ல... வட்டில் நிறைய நெல்மணிகளிருந்தும் பட்டினியில் செத்தேவிட்டது என் சில நாள் பிரிவில்.

அதன் பின் பறவைகளே வளர்க்கவில்லை. அக்காவின் வீட்டில் பார்த்திருக்கிறேன் குலவும் லவ்பேர்ட்ஸ். அத்தனை ஆசை நானும் வளர்க்க. ஆனாலும் வேண்டாம்.

பறவைகளே வளர்ப்பதில்லை. பறவையாதல் பைத்தியம் பிடித்துவிடுமென்று பறவைகளே வளர்ப்பதில்லை.

இதோ நீளுமிந்த மண்பாதையில், மூங்கில் புதர்களில், தத்தி தத்தி அது நடக்க, கூடவே நானும் நடந்த நினைவுகளை இழுத்துக் கொண்டு பறந்தபடியிருக்கிறது ‘மீனா’ என்று பெயரிடப்பட்ட மைனா.

Wednesday, July 17, 2013

இசையாய் ஒரு நட்பு

என்ன பேசுவது

எல்லாம் தீர்ந்துவிட்டது

மௌனப் புரிதல் சாத்தியப்பட்டபின் சுயவிளக்கங்கள் விலகி நிற்கின்றன.

வசமாகி வசப்பட்டு மீண்டெழும் நிமிடங்களில் கோலோச்சிப் போகிறதொரு வனப் பறவை. ஒவ்வொரு மீட்சியிலும் நுகரும் பிம்பங்களிலெல்லாம் அதன் அன்பின் மொழியே....

கையில் வேலோடு கூர்மையாய் பார்த்தபடியிருக்கிறான் வேடனொருவன். கண்ணிமைக்கும் நொடியில் மரணம். சூழல் புரியாது பாடித் திரிகிறதொரு வெளிச்சக் கெண்டை. சடுதியில் அவன் பார்வை திசைமாற்றி தப்புவிக்கிறது அவ்வனப்பறவை.

உயிர் பிழைத்து தூரத்து நதியுள் அமிழ்ந்தெழும்பும் சின்னஞ் சிறு கெண்டையின் பரவச நீந்தலில் தன்னிலை மறந்து சிறகடிக்கிறது வனப்பறவை. பிறர் சுகத்தில் தான் மகிழும் மகிழ் பறவை.

வனத்துள் அமலோற்சவங்கள் வாடிக்கையென்பதால் உந்திப் பறக்கும் அதன் சிறகுகளில் கர்வமேயில்லை.

அங்கயற் கூடலுள் மெலிதாய் கிசுகிசுக்க இப்போதெல்லாம் பறவையின் பாசமே காரணமாயிருக்கிறது.

நன்றிப் பெருக்கிலும் நட்பின் பாசத்திலும் இணங்கிக் கிடக்கின்றன அற்புத ஜீவிகள்.

பாருங்களேன்... பறவையின் சிறகடித்தலுக்கு மௌனமாய் யாழிசைக்கிறது நன்னீர்க் கெண்டை.

இசையின் தேன்மொழியில் காலம் எழுதிக் கொண்டிருக்கிறது பறவைக்கும் கயலுக்குமான மகோன்னத நட்பினை...

Sunday, July 14, 2013

விக்கல்

உச்சந்தலையின் மயிரெடுத்து
சுண்டி விடுகிறாள்
கத்தியெடுத்து கழுத்தில் வைக்கிறாள்
சத்தமாய் அதட்டுகிறாள்
தண்ணீர் தருகிறாள்
தலையை நிமிர்த்தி
அண்ணாந்து பார்க்கப் பணிக்கிறாள்
அறுபது நொடி
அவஸ்தைக்குப் பின்
ஆசுவாசமாய் அடங்கிப் போகிறது
விக்கல்
பார்வை தெளிய
அவளைப் பார்க்கிறேன்
தளும்பிய கண்ணோடு
இன்னும் என்னையே பார்த்துக் கொண்டு ...
சீண்டாமல் கிடக்கிறது
தட்டில் பரிமாறிய உணவு

நான் யாரென ஆய்ந்தறி

தானே நீள்கிறது 
தண்மையாய் ஒரு கரம்
பாசத்திற்கு வறுமை தானே
வாஞ்சையாய் வாரியணைக்கிறேன்
கை தொட்டதால் ஒட்டிய தீட்டென்னவோ ?
களமாறி கைகோர்த்தலென்ற
அங்கலாய்ப்புகளில் ஏதும் புரிவதேயில்லை
அட!
மிதிபட்டெழுந்து வந்தவள்
வலியினைச் சொன்னால்
பூசும் சாயம் சாதியா?
வலுவில் செல்வதில்லை
வந்தததை விடுவதில்லை
முதிராத மனமில்லை
முற்றிலும் துறவுமில்லை
பிழையொன்று கண்டேன் அதில்
பரிதாபத்துக்கென்று
பச்சாதாபத்தில்
அன்பொழுக நடிக்காதீர்கள்
அதன் பின்
அலுக்காதீர்கள்
உங்கள் சூதறியா
என் சுயம் அத்தனை அசிங்கப்படும்
எழுத்தில் சொல்லிடமுடியாது
என் சுயம் அத்தனை அசிங்கப்படும்
அன்பிற்கென வளைந்த என் முதுகில்
அதிகாரமாய் ஏறாதீர்கள்
விசிறியடிக்குமென் தன்மானக் குதிரை
வேகமாய் விலகுங்கள்
வேறு வேலையிருக்கிறது....

Saturday, July 13, 2013

மதுமலர்

மதுவழியும் மலர்களின் மடியில்
கவிழ்ந்துறங்கும் நிலவுக்கென
சலசலக்கும் குளக்கரையில்
சலனமற்று காத்திருக்கிறேன்
சத்தமாய் சதிராடிக் கொண்டிருக்கிறது
ரசனையில் ஊறித் திளைத்த மனம்

கவலையற்ற காதலோடு
களமிறங்கி ஒளிவீசுகிறது தண்ணிலவு
களங்கமெல்லாம் மச்சமென
திமிறி வசப்படுகிறது மனது

முன்னிரவுத் தொடுகையில்
முளைக்கத் துவங்கின சிறகது
பின்னிரவுக்கெல்லாம் பறக்கத் தயாராய்
பேதை நான் அறிந்தேனில்லை

எட்டி உதைத்து எம்பிப் பிடித்தேன்
தூரத்தே பூமி
தொடும் தொலைவின் வானம்
சுமந்து பறந்த நிலா
நடுவானில் மல்லாந்து சிரிக்க
உதிரத் துவங்கிய நான்
பறக்கத் துவங்கினேன்
அட!
ஒடுங்கிய சிறகுகள்
விரிந்த கணம்
வசப்பட்டது வானம்
கன்னஞ் சுடும் கதிரொளியில்
கனவென்று உறைக்கக் கூடும்
அதுவரையில்....
நிலவு கலமாகவும்
நான் அதில் பயணியாகவும்

Thursday, July 11, 2013

யாரோ எவரோ...

அவரோ எவரோ
எனக்கு
என்னைத் தவிர்த்து
யாவரும்
யாரோ எவரோ...
சினேகப் புன்னகைக்கு
பதிலாய் ஒரு புன்னகை
சிந்திய தமிழுக்கு
பதிலாய் ஒரு நன்றி
உறக்கம் சிறைபிடிக்கும் வரை
படிக்கத் தமிழ்ப் பாட்டு
உடலரசியலிலும்
உள்ளம் கலப்பதில்லை
உன் அரசியலொரு பொருட்டா
மறந்தே போனதுன் பெயர்
நாளை உன் நிழலும்...
மன்னிக்க
சாபமான நினைவுகளிருக்கிறதொரு கோடி
உன்னையுமா சுமக்கவேணும்...
விட்டுப் பற
உரசாமல் விலகிப் பற
சிறகுகள் தவிர்த்து நமக்குள்
யாதொரு ஒருமித்தலுமில்லை ...
இயல்பே அன்பெனினும்
எனக்கு
என்னைத் தவிர்த்து
யாவரும்
யாரோ எவரோ...

Wednesday, July 10, 2013

மோனலிசா

பௌர்ணமி கிரணங்கள்
யன்னலிறங்கும் தேவநேரம்
அணுக்கமாய் குழலிசை
இகரக்குறுக்கத்தில் ஏற்றிய சிறுகவி
புரவி பறக்கும் பாதை
படையல் புசிக்கும் யாளி
கோதூளி அடங்கிய கொட்டில்
பதுமை பரமன்
தண்டையதிரும் மென்னடை
மெல்ல ஒடுங்கிச் சேரும் திண்புயம்
திருமண் சுமந்த குழவியதன் கையில்
திடுமென அசையும் உடுக்கை
தூரத்தே எரியும் உடலம்
நுதல் மினுங்கும் வைரத்துளி
அதிர்ந்து இமை திறக்கையில்
சிவப்புச் சுவரில்
மௌனமாய் சிரிக்கும் மோனலிசா

Tuesday, July 9, 2013

அவளைத் தீண்டாது திரும்புங்கள்


மீதிபட்ட கோப்பைத் தேநீர்
மல்லிப் பூ விரவிக் கிடக்கும்
கசங்கிய விரிப்போடு
ஒற்றைத் தலையணை
மெலிதாய் சுற்றிக் கொண்டிருக்கும்
மின்விசிறி
ஒருக்களித்து திறந்திருக்கும் கதவு
ஏதோவொரு இந்திய மொழியில் பாடிக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சி
இப்படியானதொரு அறைக்குள்
வெளிச்சம் தரும் சாளரங்கள் சாத்தப்பட்டு
திரைச்சீலைகள் போர்த்தப்பட்டிருக்கின்றன
பாவாடை விலகி தெரியும் தொடை
மாராப்பு விலகித் தெரியும் முலை
இடுப்பு மடிப்புகளிலோ
இன்னபிற கிளர்ச்சிக்காகவோ
எப்போதும் கூர்ந்து கவனிக்கபடும்
தனித்திருப்பவளின் படுக்கையறை...
அறிவுரைச் சித்தாந்தங்களின்படி
எப்போதும் சாத்தியபடியே...
அவ்விடம் ஒரு ஆடவனைத் தேடி
களைக்கிறதவர் கண்கள்
அவளைத் தவிர எவருமில்லை
அவ்விடத்தில்
அவளைத் தவிர எப்போதும் எவருமில்லை
இதைச் சொன்னால்
எத்தனைபேருக்குப் பிடிக்கும்
வேண்டியதை ஒட்டியும்
வேண்டாததை வெட்டியும்
உருவாகிறது ஒரு கதை....
கதை உலவட்டும்
அது அவளைத் தீண்டாது
பவித்திர தனிமையில்
மின்னும் மரகதமாய்....
கண்மூடி இசையாகி உலவிக் கொண்டிருக்கிறாள்
அவளைத் தீண்டாது திரும்புங்கள்

முத்தச் சங்கமம்

செம்மஞ்சள் முகத்தில்
முன்நெற்றி ஆகாயம்
வட்டப்பொட்டு செந்நிலா
ஒற்றை மீன் மிதக்கும் குளமிரண்டு
குகை வழிப் பாதை
கூர்மேட்டு நாசி
பவளப் பிளவொன்றின்
மறைவில்
இருவரி பரல் வரிசை
கதுப்புகள் குழிய
திணறும் வியர்வை நதி
இன்னுமின்னும் ....
போதுமென்ற சைகை
முத்தச் சத்தம்
கவிச் சங்கம் அதன் பின்
முழங்கவேயில்லை

Saturday, July 6, 2013

நடுநிலை

நடுநிலைக்கென்று சௌகரியங்கள் இருக்கின்றன
எவர் கருத்துக்கும் தலையாட்டலாம்
செவிமடுக்கலாம்
கைதட்டலாம்
விசிலடித்து வெறியேற்றலாம்
கடினமான பொழுதுகளில் பேச்சற்று
மௌனிக்கலாம்
யார் வீட்டின் இழவோயென்று
யாதொரு பதைபதைப்புமில்லாமல்
காதில் இசைக்கும் கருவியோடு
மாராப்பு விலக
மாரடித்தழும் மடைச்சியை ரசிக்கலாம்
இந்தப் பக்கமா
அந்தப் பக்கமா
பேரத்தின் வசூலில் இறங்கலாம்
ஓட்டுகள் வாங்கலாம்
காறியுமிழலாம்
கட்டியணைக்கலாம்
இழப்பொரு பக்கம் இழிச்சொல் மறுபக்கம்
இடிவிழுந்த குடும்பத்தை இன்னும் சிதைக்கலாம்
மிச்சமிருக்கும் உயிர்களையும்
நக்கல் பேச்சால் நாறடித்திடலாம்
எப்போதேனும்
மிக மிக அரிதாக எப்போதேனும்
தானும் மனிதரென்றுணரலாம்
உணராதிருப்பதையும் 

உரக்கப் பேசி மறைத்திடலாம்
நடுநிலைக்கென்று ஆயிரன் நன்மைகளுண்டு

Friday, July 5, 2013

ஞாபகக் கேணி

நாகரிக முகமூடிக் கழறும் கணம்
காம வெறிக் கண்களோடொரு
வன்பசி மிருகம்
வாரியணைக்கிறது
குறுவாளெடுத்து கொலைக்கென
ஆயத்தமாவதில்
மெல்லிய சிக்கல்
நானே உணவிட்டு வளர்த்த மிருகம்
பாசத்தில் குழைத்த
பதில்களும் அத்துப்படி
வார்த்தைகள் தின்றழித்த
நினைவுகளை
யாழினில் இசைக்கிறது
இனி நான் என் செய்வது?
செவி மறைத்து
ஊமையாகிறேன்
தூர்ந்து போகட்டும்
ஞாபகக் கேணி

Thursday, July 4, 2013

கவிக் கோர்வை - 17

*

யாரோ மனம் தட்டும் போது தான் மாமா
நீ இன்னும் உள்ளிருப்பது தெரிகிறது
உயிரில் கலப்பதென்பதை
நேற்று வரை நம்ப வில்லை
நீ
கலந்திருக்கிறாய்
காதலாய்...

*

கோடிச் சொல்லில்
ஒற்றைச் சொல்லேனும்
உனக்காய்
உனக்கெனவே
உன்னால்
உருக் கொண்டெழுகிறது

*

அறுந்த நரம்பெனச் சொல்கிறார்கள்
அது இசைத்த ராகங்களை
நினைவில் மீட்டுகிறேன் யான்
உயிரோடில்லையா
நீ
உன்னை சுவாசித்தே
வாழ்கிறேனே நான்

*

கவிக் கோர்வை - 16

அம்மரம்
பல உதிர்தல்களையும்
பல அமர்தல்களையும்
பரிணமித்தலில் பார்த்தே வந்திருக்கிறது
நான் துளிர்த்த இடமும்
அதில் வளர்ந்த இடமும்
வளர்ச்சிதையின் வார்த்தையாகலாம்
அதோ
பறந்தபடி இருக்கிறதே சருகு
எவருடைமை என்றில்லாத
தனித்த பெருவெளி
அதில் பச்சை இலையெனில்
அனுமதியேயில்லை
உதிர்ந்த சருகென்பதே ஏற்பு
காலத்தால்
அதிர்ந்துதிர்தலிலும் அனேகம் நன்மையுண்டு

Wednesday, July 3, 2013

கவிக் கோர்வை - 15

*

நிஜத்தில் தூரமாய்
நினைவில் நெருக்கமாய்
அல்லோகலப்படுகிறது
அதிர்ந்தறியாதயென் தனிமை

*

பனைமரத் தோப்புகளில் காற்று
பறை இசைத்து ஆர்ப்பரிக்கிறது
கருக்குகளில் அறுபட்ட
காற்றின் கதறலென
பதறிப் போகிறது மனசு

*


ஆமோதிப்பதாகவெனும் பொருளில்
தவறி வந்து விழுகிறது
ஒரு
‘ம்ம்’
அவசரத்தில் மாற்றியெழுதுகிறேன்
அதையே
‘ம்ம்ஹூம்’
என்ன சொன்னாலும்
எதுவும் செய்ய முடியாத தொலைவிலிருக்கிறான்
மனதுக்கு நெருக்கமானவன்

*

Tuesday, July 2, 2013

சகலமானவர்களுக்கும்...

ஆரோக்கியசாமியின் கல்லறைத் திண்டில்
முப்பத்தாறு இரவுகள்
எங்குமில்லாத நித்திரை தழுவல்
அங்குதான் அனுகூலமானது

இந்துச் சுடுகாட்டில்
மின்சாரத்தில் பஸ்பமாகும்
பிணவாடை முகர்ந்தபடி
பல சாயந்திரங்கள்
போனவாரத்தின் மின்வெட்டுப் பகலில்
இருபத்திரண்டு வயதிலொரு
இளம்யுவதி
நிர்மலாவென்று சொல்லியழுதார்கள்
விம்மி எழும்பும்
விலா எலும்புகள் தெறிக்க
அடித்து ஒடுக்கினான்
சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்

பேய் பிடித்தவர்களை
தர்ஹாவின் புகைக்கு மத்தியில்
தலைவிரித்தாடி பார்த்திருக்கிறேன்
தினப்படி காட்சி தான்
கொஞ்சமும் பயந்தேனில்லை

கிராமத்துப் பூசாரியின்
உடுக்கை சத்தமும்
விளாசியெடுக்கும் சாட்டையும்
மிதமிஞ்சிய வன்முறைதான்

பேய்களே இல்லை
அது மூடநம்பிக்கை

குழல் விளக்கைத் தவிர
ஏதும் நிறைக்காத
காலியான தனியறையில்
ஏதோ இருக்கிறது
எவரோ அழுகிறார்கள்
எவரோ நடக்கிறார்கள்
எவரோ சிரிக்கிறார்கள்
என்னமோ நடக்கிறது

தனக்கென எழும்பும்
சுவர்களுக்குள்ளே தான்
பேய்கள் மனிதர்களைப் பிடிக்கின்றன

கவிக் கோர்வை - 14

*

பற்றிக் கொண்ட சூளைக்குள்
பச்சை மரமும் பஸ்பமாகும்
மழை நனைத்தும்
தணல் சுட்டதைச் சொல்லும்
வெந்த செங்கல்

*

படித்துறை ஓரத்தில் தான்
கால் நனைத்து
ஆழம் பார்க்கிறேன்
கிழிந்து பின் சேர்க்கிறது
ஓடும் நதி

*

சிதறிய சொந்தங்களைப் பார்த்தழுகிறது
செதுக்கப்பட்டச் சிலை
அச்சிலை தொட்ட அபிஷேகத் துளியை
தானுறிஞ்சி சிலிர்ப்படைகிறது
பொடிந்து பட்ட மணற்துகள்

*



Monday, July 1, 2013

கவிக் கோர்வை - 13

*

தன்னை மறைக்கும் கையையும்
பிரதிபலிக்கிறது
கண்ணாடி

*

ஈசலின் சிறகுகள் எனது
நகங்களால் கிழித்துவிடாதே
நாழிகைகள்
வேகமாய் நகர்கின்றன


*


மோட்சத்துக்கும்
பாம்பின் விசத்துக்குமிடையே
அல்லாடிக் கொண்டிருக்கிறேன்
மெதுவாய் சிதறுகிறது சோழி
ஜோடியாய் சிரிக்கப் பணிக்கிறாள்
எப்போதும் தாயம் வேண்டுபவள்

*

Sunday, June 30, 2013

என் கவிதை

எனக்கான வார்த்தைகளைப் போட்டு
சமைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு கவி
விரைவில்
உங்களுக்கும் பரிமாறுவேன்
அது என் சுவை
பழகிய ருசி
தொன்று தொட்டு ஒரே சேர்மானம்
சமைக்கும் போது சுவைப்பதில்லை
அதில்
இரண்டு கல் உப்பு அதிகமிருக்கலாம்
நான்கு சிட்டிகை இனிப்பு
குறைத்துப் போட்டிருக்கலாம்
புளிப்போ கசப்போ
ஏதோவொன்று தூக்கலாய் இருக்கலாம்
உவகை மேவிய உவர்ப்புமிருக்கலாம்
அனுமானங்களெல்லாம்
’....லாம்’ களாய் முடிந்தாலும்
அதுயெனக்கு மனவலிக் கசாயம்
விரும்பினால் பருகுங்கள்
வேண்டாமெனில்
நாளையின் இரவுக்கென நான் அதை சேமிப்பேன்

Friday, June 28, 2013

உயிர்வாங்கிப் பறவை

ஈரலில் படிந்த விசத்தை
கிளறி விடுகிறாய்
ஒரு கோப்பைச் சாராயத்தில்...
குடிப்பதற்கு மட்டும்
ஆயிரம் காரணங்களுனக்கு
வரிசையில் நிற்கின்றன

வசவித் தெளிந்துணர
வாடிக்கையாய்
நான்கைந்து பெட்டிகள்
புகைத்துத் தீர்க்கிறாய்!
சுகித்துக் களித்த
பெண்களனைவரையும்
ஊர்,பெயர் சகிதம்
ஒப்பித்தபடி தூங்கிப் போகிறாய்
எத்தனை தான் பாறையென்றாலும்
இத்தனையில் கடைசிக்கு
கலங்காமலா இருக்கும்?

கண்ணீர் வரிகளோடு
நிசப்தம் சூழந்த இரவு
மேல்மாடச் சாளரங்களில்லாவிடில்
குமைந்தே குறுகிவிடும் வாழ்நாட்கள்
காற்று தழுவும் இளமையையும்
மார்பிலாடும் சரடையும்
பெருமூச்சோடு தொட்டு மீள்கிறேன்
பந்தமில்லா கயிறெதற்கு
பற்றோடு ஒட்டிக் கொண்டிருக்கும்
பரிதாபமிக்க ஜீவன்கள் காரணம்

நீ சொல்லும் கதை கேட்டால்
புலரும் சூரியனும் கூசிப்போகும்
ஆணென்ற அடையாளம்
தவறுகளுக்கெல்லாம்
தனிஅர்த்தம் கற்பிக்கும்
எல்லாம் சரி!
என்னை ஏன்
பாதிரி ஆக்குகிறாய்
கவிதையெழுதுவதைத் தவிர
நின் மனையாள் வேறொரு பாவமும்
செய்தேனில்லை

சுதந்திரமானவர்கள் துணைக்கு
அடிமைகளையே தேர்கிறார்கள்

Tuesday, June 25, 2013

போலிகளே!!!

எத்தனை தடவை தான்
நிரூபிப்பது?
நீ தேடும் காரணிகளேதுமில்லாத
சாமான்ய பெண் நானென்று?
திரும்பத் திரும்ப இம்சிப்பதில்
தெளிவாகிறது
நான் யாரெனச் சொல்வதில்
நான் யாரென அறிவித்தலில்
என் இயலாமையை உலகறியச் செய்தலில்
என்னைப் பற்றி நீ கட்டமைத்த
ஏதோவொரு
முன்முடிவின் அடித்தளம் வலுப்படுகிறது
வலுத்த அரசியல் பிண்ணனியாயிருக்கும்
அறியாமைகளென நான் சொன்னதை
கண்டுபிடித்ததாய் நீ அறிவிக்கிறாய்
அடிபொடிகளின் கரகோஷத்தில் விண்ணதிர்கிறது
என்னைப் பற்றிய உண்மைகள் தான்
இருந்தாலும் குரல் வேறு
அவமானத்தில் கூனிப் போகிறேன்
அழுது முடியும் வரை தைரியம் வரப்போவதில்லை
அழுவது வீரமல்ல இது மனச்சாட்சி
அதனாலென்ன விருதுக்கெனவா வீற்றிருக்கிறேன்
அவமானத்துக்கு அழுவது கறை கழுவுதல்
போலிகளை இனங்காண்வதாய்
போலிகளே புறப்படுகிறார்கள்
உரைக்கப் பேசுபவன்
உத்தமனாகிறான்
என் உழைப்பெல்லாம் பிரளயம் விழுங்கிவிட்டது
இருக்கும் பிடி தானியத்தில்
எத்தனை கதிர் விளையும்
கணக்கீடுகளோடு
வரப்பு வயல்களில் நீர்வடியுமட்டும்...

Monday, June 24, 2013

கவிக் கோர்வை - 12

*

அகில் புகையில்
மயங்கி ஒடுங்குகிறது
வெற்றிவேர்
தணலின் வாட்டத்தில்
சுழலும் சுருளது
மூர்ச்சித்தவனின் சுவாசம்
கலக்கிறது
வேர் மடிந்ததும்
அவன் எழுந்ததும்
ஒரே கணத்தில்...
உச்சாடனங்கள் ஓங்கியதிர
கனவு கலைகிறது

*

காற்றில் பறந்தபடி இருக்கட்டும்
அந்தச் சிறகு
சாதி பகுத்த மண் வேண்டாம்

*

Saturday, June 22, 2013

பலவீனம்

ஒரு கோடை விடுமுறைக் காலம்.பேத்தியைப் பார்க்க மகள் வீட்டுக்கு வந்திருக்கிறார் அந்த கிராமத்து முதியவர். ’எப்ப பார்த்தாலும் ஏன் தாத்தா வாழைப்பழமே வாங்கி வர்றீங்க. சுத்த போர்’ என்றபடி ஓடிவிட்டாள் குட்டிப் பேத்தி. கழட்டி மாட்டியிருந்த கதர்ச் சட்டையில் பயணச் செலவுக்கு ஒரேயொரு ஐம்பது ரூபாய் மட்டும். கூடவே கத்தையாய் ஏதேதோ ரசீதுகள். தலை வாழை உணவு உபசரிப்பில் தூக்கம் வந்துவிட்டது. பயணக் களைப்போடு நன்றாய் தூங்கி விட்டார். ஐஸ் வண்டிகாரனின் அவரசரத்தில் வீட்டிலிருந்த குட்டிப் பெண் அவரிடம் கேட்காமலே சட்டையிலிருந்த பணத்தை எடுத்து விட, இது எதுவும் அறியாமல் விடைபெற்று கிளம்பி விட்டார். பேரூந்து ஏறிய பின் தான் தெரிந்திருக்கிறது. பாதி வழியில் இறக்கிவிடப்பட்டு பெரம்பூரிலிருந்து சூளைமேடு வரை நடந்தே வந்திருக்கிறார். பசியும் களைப்புமாய் சோர்ந்து வந்தவரிடம் கோபமாய்,
‘இவ்ளோ தூரம் நடக்கறாதுக்கு, திரும்பி அங்கேயே போய் கொஞ்சம் பணம் வாங்கி வருவது தானே?’
தயக்கமாய் பதில் சொல்கிறார்,
‘தன்மானம் இடம் கொடுக்கல. நடந்தே வரலாம்னு நடக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் தண்ணி கொடும்மா.’ தளர்வாய் உட்காரும் அவரை காண்பது மிகவும் கஷ்டமாயிருந்தது.
மகன் வீட்டுக்குப் போக வேண்டும். திருவெற்றியூரில் இருக்கிறது.

‘ஏன் பெரியப்பா இப்டி வயசான காலத்துல இங்கயும் அங்கயும் அல்லாடிக்கிட்டு. ஊரில போய் நிம்மதியா இருக்கலாம்ல?’

‘அந்தத் தனிமையும் முதியோர் இல்லம் மாதிரி தானே. வேலைக்கு போகிற மகனுக்கும் மருமகளுக்கும் ஒத்தாசையா இருக்கலாமேன்னு தான். அத விடு, அம்மா டேய்! பூண்டுக் குழம்பும் உருளைக்கிழங்கும் செஞ்சி தாடா’

உரிமையாய் கேட்டதும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பெரியம்மா இருந்த வரையிலும் அவர் இத்தனை தளர்ந்து பசிக் களைப்போடு நான் பார்த்ததேயில்லை. எல்லா சொத்துக்களையும் விற்று கல்யாணமான மகனுக்கும் மருமகளுக்கும் தந்துவிட்டு இப்படி அலைகிறார். பென்சன் பணமும் கை விட்டுப் போகிறது. மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணமென்று. தன்னுடன் இருக்கும் அப்பாவிடம் பணமென்று வாங்குவதில்லை கட்டணங்களை தலையில் கட்டி விடுகிறான் அண்ணன். தனக்கென ஏதும் வைத்திராமல் இப்படி இருக்கும் அவரைப் பார்த்தால் கோபமாகவும் அதே சமயம் பாவமாகவும்.ஒரு வார்த்தை அண்ணாவையோ அண்ணியையோ குறைவாக பேசமாட்டார். அத்தானையும் அக்காவையும் கூட.

நன்றாய் படித்து அரசு வேலையில் மிடுக்காய் இருந்தவர். காலை எழுவதே வேலைக்குச் செல்வதற்கென்று வாழ்ந்து பழகியவர். சம்பாதிக்கும் பணமத்தனையும் பெரியம்மாவின் நிர்வாகத்தில் தான். அத்தனை ஒற்றுமையான தம்பதிகள். எப்படியிருந்த மனுசன் என்கிற வார்த்தை ஏனோ அவரை நினைவுக்குள் இழுத்துவருகிறது.

அவரறியாமல் ஐந்து நூறு ரூபாய் தாள்களை சட்டைப்பையில் வைத்துவிட்டேன். கிளம்பும் போது பார்த்து விட்டார் போலும்.
’எதுக்குடா இவ்ளோ எனக்கு, இந்தா’ நான்கு தாள்களைத் திருப்பித் தந்தார். அழுதுகொண்டே முறைத்ததில், ‘சரி சரி அழாதே!’ நெற்றியில் முத்தமிட்டு விடைபெறும் அவரை நான் என்னுடனே வைத்துக் கொள்ள நான் அவருக்கு மகனாய் பிறந்திருக்க வேண்டும்.பணம் என்கிற வஸ்துவின் தேவை குறையும் போது அண்ணாவுக்கும் இவர் கண்ணுக்குத் தெரியலாம்.
அப்போது வரை பெரியப்பா இப்படியே தான் அல்லாடக் கூடும். தப்புவிக்க என்னிடம் மனமிருந்தாலும் உரிமை இல்லை. ஒரு முறை அண்ணியிடம் ‘அவர் என்னுடனே இருக்கட்டும் ‘ எனக் கேட்டு ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். அண்ணாவை விடவும் அக்காவை விடவும் எனக்கு அவரிடம் உரிமையில்லை... ஆனால் பாசம் அதிகம்.

முதியோர் இல்லங்களைப் புறக்கணிக்காதீர்கள் நண்பர்களே! பாசமற்று பெயருக்கு சேர்ந்து வாழ்தலை விடவும் தன் வயதொத்த நண்பர்களுடன் வாழ்ந்து முடிதல் சுகம். பெரியப்பா போல சுமைதாங்கி இயந்திரங்கள் ஓய்வு காலத்தில் விரும்பியபடி வாழ்தல் எங்கு சாத்தியமோ அங்கேயே இருக்கட்டும்.

ஆனால் அவருக்கு பாசமென்பதே பலவீனம்....
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!