Thursday, July 7, 2016

முள்முடி

மீண்டு நீளுமொரு நிகழ்யுத்த சரித்திரத்தில்
நெருஞ்சிகள் உறிஞ்சிய ரத்தமென
அலட்சியப்படுத்தப்படுகின்றன
வாதைகள்
நேற்று முதல் அறியப்பட்ட குமுறல்களை
கதை சொல்லியாக
யாரோவொரு வழிப்போகனாய்
கடந்து செல்கிறார்கள்
கவனிக்கத் கடமைப்பட்டவர்கள்
புறக்கணித்தல்களை பதிவித்து
அதிலேயான் அல்லலுறுவது
உறுதி செய்தபின்னே தான்
நகர்கிறார்கள்
நேசத்தின் நிழலிருந்தவர்கள்
நீங்களும் நாங்களுமென்கிற
வரப்புத் தகராறில்
நடுவிலிருக்கும் பெண்
ஊமையாகிறாள்
மாற்றான் மனைவியோடுடன்
உடன்போன கணவனை விடுத்து
ஏழெட்டு குழந்தைகளும்
ஆட்டுரலுமாக
சுற்றித் தேய்ந்த மனுஷிகள்
தாலி குறித்து என்ன பேசினார்கள்?
கேட்டால்
கலாச்சார காவலர்கள் கத்தியெடுப்பார்கள்
தானே யாவுமான
அம்மாவுக்கு மகனும் மகளும்
எத்தனை நிறைவைத் தந்தார்கள்
முதியோர் இல்லங்களில்
கீதை வாசித்துச் சொல்லுகையில்
வாழ்வையும் வாசிக்கிறேன்
உண்மையில் முதுமையில் தான் பெண்
தனக்காக வாழ்கிறாள்
நினைவுகள் தப்பிய
மூதாட்டியின்
பொக்கை வாய் சிரிப்பில்
குழந்தமை இன்னுமிருந்தது
எல்லோரும் சுமக்கும் சிலுவை
என் முறை வரும்போது
முட்கிரிடங்களுக்கென
வருந்தாதிருப்பேனாக!

திருவள்ளுவன்

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பல்லுயிர் நேயத்தை போதித்தவனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிட முடியவில்லை.
கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பென்றவனுக்கு உலகப் பொதுமறை தந்தவனுக்கு “சங்கராச்சாரியார் சவுக்”லும் இடமில்லை.
காரணம் திருவள்ளுவர் சிலையில் பூணூல் இல்லை.
தருண் விஜய் - இதற்கு நீங்கள் சிலையெடுத்து செல்லாமலே இருந்திருக்கலாம். பாசிச சைத்தான்களுக்கு வள்ளுவப் பேராசானின் மகத்துவம் புரிந்திட வாய்ப்பேயில்லை.
தவறிழைத்துவிட்டீர்கள். உச்சகட்ட அவமானமாக உணர்கிறேன்.
“He is our mylapore man" என்று மார்தட்டும் எந்த தமிழ்(?) பிரபலத்தையாவது அழைத்து சென்றிருக்கலாம். பூஜைகளோடு இன்னும் சில ஆராதனைகளுக்கும் வாய்ப்பிருந்திருக்கும்.
புரிகிறதா? எந்த தேசியவாதிகளும் இந்த நாட்டில் சாதி தாண்டிய மறுமலர்ச்சிக்கு வித்திட முடியாது. திராவிட பண்பாடு சாதித்த சமூக விழிப்புணர்வை பெற பிற இந்திய மாநிலங்களுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டு பிடிக்குமோ?
நூற்றாண்டு தவறென்று நினைத்திருந்தேன் ஒரு அம்பேத்கார் ஒதுக்கப்பட்டதை....
ஐயனே! உமக்குமா இந்த நிலை?
பூணூல் தரிக்காத வள்ளுவனுக்கு கோட்டமே உண்டு எங்களூரில் ....
பேராசானவன்! அவனை மதிக்கத் தெரியாத இடத்தில் வைத்து அவமரியாதை செய்யாதிருங்கள் இந்தியர்களே!
‪#‎ச்சீ‬! மனுவாதிகளே!
இன்று முதல்....
என்று முன்னெடுக்கப்படுபவை யாவும்
கணநேர பரிமளிப்பாக மட்டுமே.
அடர்கனம் தீர்ந்து வீழ்கிற நிழலில் 
நம்பிக்கை சாய்ந்துவிடுகிறது
நாட்டின்
பண்
விலங்கு
சின்னம்
பறவை
எல்லாமும் நினைவிருக்கிறது
அனைவரும் சமமென்பது மட்டும்
நித்தம்
மறந்து தொலைக்கிறது
வேற்றுமையில் ஒற்றுமையென்பது யாதெனில்
அடக்குமுறைகளோடு
அடங்கிப் போவதாக
சமரசப்பட்டுக் கொள்வது
எங்கேனும் ஆளும் நிலையில்
நீங்களிலிருந்தால்
அடங்கிப் போவதற்கென
வர்க்கம் தேடுகிறீர்கள்
அய்யாவென்று
வளையும் முதுகோடு
தன்மானமற்றதான
அடிமை வர்க்கம்
நீங்களற்ற உலகில் தான்
அதிகார போதையற்ற
சமூக நீதி
வழுவாது வாழும்
நீங்களென்பது போலி தேசியம்
நீங்களென்பது போலி சமத்துவம்
நீங்களென்பது போலி புரட்சி
நீங்களென்பது போலி சாதிமறுப்பு
நீங்களென்பது போலி பெண்ணியம்
சின்னதொரு உண்மையின் உரசலில்
நைந்து கிழிகிறது
மகாத்மாக்களாக
மகானுபாவன்களாக
மாபெரும் ஆளுமைகளாக
இதுகாறும் தரித்து வந்த
’போலி’ முகங்கள்
யாவையும் பொய்யென்றுணர்ந்த நாளில்
நீங்களாக நானென்றும்
மாறாதிருக்கவே
நேர்ச்சைகளோடு வேண்டி நிற்கிறேன்
கேளடி பராசக்தி!

காற்றுவெளியிடை....

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே................
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும்....
இதழ்களும்..
இப்படி திரைவடிவம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் அடிக்கடி முணுமுணுக்கப்படும்.
இதழ்களும் ... என்று நிறுத்துகையில் சிரிப்பு வந்துவிடும். சில சமயங்களில் நாமே நம்மை பைத்தியமென்று உணரும் தருணங்களில் சிரிப்பு வரும் தானே! அதுபோலான பெரும்பான்மையான தருணங்கள் மிக மிக ரகசியமானவை. அதனாலே மிகவும் அழகானதும் கூட...
இந்த பாரதி எத்தனை ரசனை மிகுந்த கவிக்காதலன்?
”வீணையடி நீயனக்கு மீட்டும் விரல் நானுனக்கு”
மனதில் விரியும் காட்சியில் வெட்கம் வந்து போர்த்திக் கொள்ளும்.
முன்னொரு காலத்தில் இந்த நாசூக்கான காதல் வரிகளுக்காக் தேடிப் படிந்த கவிதைகள் ஏராளம். இப்போதெல்லாம் ஏன் அந்தக் கவிதைகள் பேத்தலாய் தோன்றுகின்றன?
அன்பே ஆருயிரே போன்ற தினசரி கவிதைகளை தாண்டியாயிற்று.
எப்படி இத்தனை ஆண்டுகள் கடந்தும் பாரதி மட்டும் நிகரில்லாத
கவியாய் எனக்குத் தோன்றுகிறார்?
அவராவது இன்னும் மாற்று சிந்தனைக்கு ஆட்படாமலிருக்கிறார் என்னுள் என்கிற ஆசுவாசத்தோடே,
பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!
காற்று வெளியிடைக் கண்ணம்மா....

மதுர அப்பளம்

நாக்கு அப்பளம்
சோவி அப்பளம்
மோதிர அப்பளம்
ஜவ்வரிசி அப்பளம்
மிளகு அப்பளம்
கறி வடகம்
இப்படி ஒரு கூட்டமே வந்து இறங்கியிருக்கு மதுரையிலிருந்து...
மெல்ல பழைய நினைவுகளையும் எழுப்பி விடுகிறது.
புதுமண்டபம் பக்கத்துல ஒரு அப்பளக் கடை.
வழக்கமா, தீபாவளி/பொங்கல் பர்சேஸ் பண்ணிட்டு, மதியானச் சாப்பாடு முடிச்சிட்டு, வரும் போது வாங்கவென்று ஒரு பெரிய லிஸ்ட்ல கடைசியா அப்பளக்கடை பர்ஸேஸ் இருக்கும்.
பக்கத்துவீட்டு அக்கா, கமலா அண்ணி,அம்மா கூட வேலை செய்றவங்க, அவங்க பிள்ளைங்க அப்றம் நானு.. இப்படி ஒரு கூட்டமா பண்டிகை நாளுக்கான தேடல் துவங்கும்.
எங்கள் வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம். வேஷ்டியும் கண்டாங்கி சேலைகளும் மதுரையில் மிகத் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் அம்மாவும் ஊர் சுற்ற வாய்ப்பென்பதால் இன்னும் சிலருமாக ஒரு பெரிய திட்டம் ரகசியமாக தயாராகி ஒரு சனிக்கிழமையென முடிவாகும்.
சின்ன வயதிலிருந்து மதுரை விழிகள் விரியச் செய்யும் ஒரு நகரமாகத் தானிருக்கிறது. மனுதுக்கு அணுக்கமான ஒரு நகரமாகவும்.
அதிகாலை ஆறு ஏழு மணிக்கு கிளம்பினால் ஒன்பது மணிக்கு மதுரை வந்து சேர்வோம். மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு தாழம்பூ குங்குமமும் ஜவ்வாது விபூதியும் அர்ச்சனை வாழைப்பழங்களோடு நல்லதொரு இடம் பார்த்து உட்கார்ந்தால் பசி கப கபவென்றிருக்கும்.
இட்லியும் வெங்காயச் சட்னியும் வீட்டிலிருந்தே கட்டிக் கொண்டு போய் அங்கே சாப்பிட அத்தனை ருசியாய் இருக்கும்.
அன்றைக்கு வாழ்க்கையும் அத்தனை ருசியாய் இருந்தது.
சேலைகளுக்கென, பாவாடை சட்டைத் துணிகளுக்கென, அப்பாவின் கட்சி வேட்டி, தம்பிகளுக்கு யூனிபார்ம் துணி இப்படி நீளும் பட்டியல் முற்றுப்பெற மத்தியானமாகும்.
சாப்பிட்டுவிட்டு, சேலைக்கு மேட்சிங் வாங்கவென ஒரு அலசல். மொத்தமாய் ஜாக்கெட் துணிகளை நிறுத்து வாங்கும் ஓரிடம், கொள்முதல் கடை. அம்மாவைக் கேட்டால் இப்போதும் கடை பெயரை சரியாகச் சொல்லுவார்.
காலாற சுத்திட்டு, ஒரு தித்திப்பு காபியோட மாட்டுத்தாவணி வருவோம். ஆளுக்கு மூன்று முழம் பூவென்று கமகமக்கும் மல்லிப்பூ.
அதோடு பஸ் பிடிச்சு வீடு வர வேண்டியது தான்.
சென்னையில் ஏதோ குறைகிறது.
மதுரை தான் மனதில் நிற்கிறது.... எப்போது நினைத்தாலும் முதல் மழை நனைக்கும் போதெழும் மண் மணம் போலே.. 
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!