Friday, December 31, 2010

மெல்ல மெல்ல...

“ஏய் பப்ளிமாஸ்! இங்க வாடி”
“என்ன மாமா?”
“நீ என் கண்ணுக்குட்டியாம்ல.இந்த நம்பருக்கு போட்டு நித்யா இருக்காங்களான்னு கேளு.நான் அவ கூடப் படிக்கிறேன். பேசனுமின்னு சொல்லு”
“கேட்டு...உங்கிட்ட குடுக்கணும்மாக்கும்? எனக்கென்ன லாபம்?”
“அப்டியே வச்சன்னா. லஞ்சமா கேக்குற.. இரு இரு.“
“அப்ப முடியாது போ”
”அய்யோ ஏ...ஏய்... நில்லுடி. சைக்கிள் ஓட்ட கத்துக்கணுமின்னு சொன்னேயில்ல?சின்ன சைக்கிள் வாடகைக்கு எடுத்து தருவேன்.என் நித்து மட்டும் பேசிட்டா, எனக்கு அது போதும்.”
இரண்டு மூன்று முறை உளரலுக்குப் பின், நித்யா தொலைபேசியில் வருவதற்குள் நாலைந்து குட்டுகளுடன் தலை விண்ணென்று வீங்கியிருக்கும். எல்லாமும் சைக்கிள் மீதான ஆசையில்.. இமை தாண்டி வராது சத்தியத்திற்கு கட்டுப்பட்டிருக்கும் கண்ணீர் துளிகள்.
தொலைபேசியில் முடிஞ்சதும், நேரில் பார்க்கும் ஆசை வருமோ என்னவோ? எனக்குத் தந்த எல்லா வாக்குறுதிகளும் புகையாய் கக்கியபடி அந்த இருசக்கர வாகனம் அம்மாச்சி வீட்டு எல்லை கடந்திருக்கும்.

********

”ஏய் குட்டிம்மா. இங்க வாடாச் செல்லம்”
”போடி வாடில்லாம் விட்டுட்டியா மாமா? இவ்ளோ பாசமா கூப்பிடுற?”
“இல்ல செல்லம் இந்த நம்பருக்கு கால் பண்ணி ரேவதி இருக்காங்களான்னு கேளு. அவங்க பேசுனதும் என்கிட்ட குடு”
“பேரு வேறயா இருக்கே.... போன பொங்கலுக்கு நித்தியான்னு சொன்னே? அதுக்குள்ளயும் மாறிடுச்சா?”
“அவ ஒரு நம்பிக்கைத் துரோகிடி. அவளப் பத்தி பேசாத.. சொன்னத செய்யாம என்ன பெரிய மனுசியாட்டம் கேள்வி கேட்டுக்கிட்டு”
”சரி சரி கத்தாத...நான் இல்லயினா யாருவச்சு மாமா போன் பண்ணுவ?“
“ம்ம்...அது எதுக்கு இப்போ? நீதாண்டி ராசிக்காரி உன்னமாதிரி வருமா?”
அவள் அழைப்பில் வந்ததும் இவன் உருகும் அழகை பார்த்தபடி, விசமத்தோடு, கதவோரம்....
“என்னடி பார்வை.பெரியவங்க பேசுறதெல்லாம் வேடிக்கை பாக்கக் கூடாது. போ விளையாடு போ!”
”மாமா... நீ அந்தக்காவ... லவ் பண்ணுறியா?”
”ஆமாடி. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”
”இவங்களே கடைசியா இருக்கட்டும். எனக்குத் தெரிந்து இப்பவே கணக்குக்கு நாலு..பாத்துக்க”
“இவ என் உசுரு தெரியுமா.எங்களுக்கே புத்தி சொல்லுறீகளோ..?”
அடிக்க வரவும், சிரித்தபடி நகர்ந்த அந்த நேரத்தில் ஏனோ மனது முழுக்க சந்தோசம்.

*********

பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில்....

“எங்காச்சி மாமா?”
” ”
“ஊரு சுத்தப் போயிட்டாரா? ரெண்டு வருசம் கழிச்சு வர்றேன். என்னப் பார்க்காம எங்க சுத்தப் போயிட்டாரு உங்க புள்ள?”
“ ”
”சின்னாச்சி? ஏன் அழுவுறீங்க?”
விம்மலோடு,”அவன் அறையில கிடப்பான் பாரு.”

கல்லூரியில் நடனத்திற்காக, பாட்டுக்காக,விளையாட்டுக்காக என அவன் வாங்கிக் குவித்திருந்த கோப்பைகளும்,கேடயங்களும்.... எப்போதும் தோழிகளுடன் சொல்லி பெருமையடித்துக் கொள்ள என் வட்டத்தில் இவன் மட்டுமே.படிப்பைத் தவிர நிறைய தனித்திறமைகள் கொண்டவன். சீட்டுக்கட்டு,கோலிக்குண்டு, உண்டி வில் இப்படி எனக்கு அவனால் கற்பிக்கப்பட்ட வீரவிளையாட்டுக்கள் எல்லாவற்றிலும் வல்லவன் என்பதை விடவும் தடகள வீரன் என்பதும் மாவட்ட அளவில் பல முறை பரிசு பெற்றவன் எனபதும் கூடுதல் செய்தி. எப்போதும் துள்ளலுடன், நெற்றி புரளும் கேசத்தை லாவகமாய் கோதிச் சிரிக்கும் அவனும் அந்த வசிகரிக்கும் புன்னகையும் எதிர்பார்த்தபடி....

”மாமா”

“மாமா.....”

அறையின் வடகோடியில், ஒரு ஒடிசலான கருப்பு உருவம். எழுந்து மீண்டும் குப்புறப் படுத்துக்கொண்டது. நிதானித்த சில நிமிடங்களில் ஏதோ உணர்வொன்று உந்தித் தள்ள, அது அது.... அவனே தான்... என் கைகோர்த்து விளையாடிய அதே.. அந்த பால்யத்து நண்பனே தான்...

“மாமா....ஆஆஆ” பெருங்கதறலொன்று அறை நிறைத்தது.

“போடி...இங்கயிருந்து.” கண்ணீரை சிந்தியபடி பலவீனமாய், அவன் குரல் கட்டியம் கூறியது அவனே தான்.

மொட்டைத்தலையும், கறுத்து ஜீவனிழந்திருந்த கண்களும் உடலும் அவன் ஏதோ.. ஏதோ தோல்வியின் உச்சத்திலிருப்பதாயும்,தவறான பாதையின் பிடியிலிருப்பதையும் சொல்ல. தெளிவான தீர்மானத்துக்கு வர எனக்கு மூன்று நான்கு நாட்கள் பிடித்திருந்தது.

*********

அந்த மாபெரும் கலைஞன், போதையின் பிடியில் வெளியுலக சுவாசமே இல்லாது ஒரு எட்டுக்கு எட்டு அறைக்குள் தன் வாழ்வை சுருக்கிக் கொண்டிருந்த காலமது. காதல் தோல்வியிலும் அப்பெண்ணின் அலட்சியமான நிராகரிப்பிலும் தன் இருபத்து நான்கு வருட வாழ்க்கையை துச்சமெனக் கொண்டிருந்த காலம். வாழ்க்கை மீதான வெறுப்பு வளர வளர போதை இவனுள் ஸ்திரமாய் இறங்கிக் கொண்டிருந்தது.

“அங்க போகதடி... அவன் தண்ணியடிச்சிட்டு கிடக்கான். உங்கப்பா எங்க வீட்டுக்கு வந்தாவே திட்டுவாரு. இதுல அவங்கூட பேசுனா அவளோதான்”

“ம்ம். என்ன சொல்லிருவாரு? என் மாமா நான் அப்டி தான் பேசுவேன். யாரு என்ன சொன்னாலும் என் மாமா தானே சின்னாச்சி...ஒரு வேளை மாமாக்கு பதிலா அண்ணான்னு கூப்பிட்டு பழகியிருந்தா பேசுறது ஒண்ணும் தப்பில்லாம போயிருக்குமோ?” வாயடக்கச் செய்துவிட்டு, அலங்கோலமாய் கிடப்பவனை நிமிர்த்த போராடிக் கொண்டிருப்பேன்.

யாரும் நுழையமுடியாத அவன் அறைக்கதவுகள் என் விசும்பலாலும் நட்புக்கரத்தாலும் திறப்பதே பலருக்கு அதிசயம் தான்.பகலெல்லாம் தலையாட்டுபவன் இரவானால் எப்படியோ தலைகிறுகிறுக்கும் போதையுடன் நிற்கக் கூடமுடியாமல்... தாத்தாவின் அர்ச்சனையும் சின்னாச்சியின் அழுகையும் அம்மாச்சி வீட்டு மாடியிலிருந்து தெளிவாய் தெரியும்.கொஞ்சங் கொஞ்சமாய் என் நண்பனை வெளிச்சம் பார்க்க வைப்பதற்குள் விடுமுறையில் பாதி கழிந்து விட்டிருந்தது. எல்லா வயதினனும் குழந்தை போலத் தான் தன் கடந்த காலக் கதைகளை சொல்லிக் கேட்கையில். பழங்கதைகளை பேசிக் கழிப்பது இது போலும் தோல்வித் தருணங்களில், அதுவும் சிறுவயது சினேகிதியால்,அப்பேறு கிடைக்கப் பெற்றவன் மிகச்சிறந்த அதிர்ஷ்டசாலி.என் ஆறுதலும் அசட்டுத்தனங்களும் பெரிய இம்சை தரவே முன்போல் அறைக்குள் யாருடனும் பேசாமல் முடங்கிக் கிடப்பதில்லை. வண்டியில் ஊர் சுற்ற ஆரம்பித்த வரையில் நிம்மதி.

பாதிக்கிணறு தாண்டியவனை அதற்குப்பின் பார்க்க வாய்ப்பேதும் கிடைக்கவேயில்லை. வயதுப்பெண் என்கிற வரையறை வேறு.விடுமுறை முடிந்து கல்லூரி, புது வித சூழல் என மாறியபோதும், மாமா குறித்து சில சமயம் கொடூர சொப்பனங்கள் வந்து போகும். தொடர்பு கொள்ள எந்த பிடிப்பும் இல்லாமல் அவன் நல்வாழ்வுக்கான பிரார்த்தனைகள் மட்டும். சஷ்டிக்கவசமும் விநாயகர் அகவலும், எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த விரதங்கள்.அவனுக்காய் கடைபிடிக்கப்படும்.

**********

“அம்மு! சின்னாச்சி உன்ன பொண்ணு கேட்டு வந்து உங்கப்பா ஒரே களேபரம்.நேத்து காலையில நடந்த கூத்து.எனக்கு கூட ஆச தான்...” அம்மா நீட்டி முழக்கு முன், “மாமாவுக்கு தெரியுமா இதெல்லாம்..? ம்ம்?” கொதிப்புடன் சீறலும் தூக்கலாக, அம்மாவின் குரலில் பதட்டம் தெரிந்தது.

“அவனெங்க இங்க இருக்கான். பெங்களூர்லன்னா இருக்கான். இந்த பெரிசுங்க ஏதோ தப்பர்த்தம் பண்ணிக்கிட்டு... நீ ஒண்ணும் மனசில வச்சிக்கிடாத.. “ அப்படியே அந்தர்பல்டி. அம்மா எப்பவும் இப்படித்தான். எதிராளியின் மனநிலை பொறுத்து வார்த்தையின் போக்கை லாவகமாக மாற்றுவதில் கில்லாடி. நம் போக்கில் போய் அவள் இலக்கை அடையும் தந்திரசாலி.

உனக்கும் எனக்கும் கல்யாணமா மாமா? இது உன் சம்மதத்தோடா நடக்குது? நிச்சயமா இருக்காது. பின்பொரு நாள் அம்மாவின் மூலமாகவே பதிலும் கிடைத்தது. ’அவள அப்படி நான் பார்க்கல’ன்னு சொல்லிக் கத்தினானாம். ஊரிலேயிருந்து மாசி மகத்துக்கு ஆளுங்க வந்தாங்கல்ல அப்ப சொன்னாங்க.அவனுக்கு வேற பாக்குறாங்களாம்டீ.”

நட்பின் புரிதலில் ஆனந்தக்கண்ணீர் வந்தது.

Thursday, December 2, 2010

யாரோவென...

உன்
போலியான புன்னகையில்
நேர்மையற்ற கண்களில்
பசப்பலான வார்தைகளில்
மரணத்தின் வாயிலை
தொட்டு மீள்கிறது என்னுயிர்
சபிக்கப்பட்டழிந்த நட்பின் சுவடுகளை
வாஞ்சையுடன் வருடிப்போகின்றன
நினைவலைகள்
வலிதந்த காலங்கள் நீங்கலாக...

எனக்கிழைத்த துரோகத்தின் பின்புலம்
காதலோ கொடுங்காமமோ கூடாநட்போ
ஏதோவொன்றாயிருக்கலாம்
சுகித்து மீண்டதும்
இல்லை - அவ்விடம்
சூடுபட்டு விலகிய பொழுதேனும்
புரிந்திருக்க வேண்டும்
உன்மீதான நட்பும்
கொண்டாடிய நானும்
நியமங்களின்றி நிந்திக்கப்பட்டு
அந்நியமானது

உன் பெயரை
சுவாதீனமின்றி அர்ச்சிக்கும்
உதடுகள் என்றேனும்
வரம்பு மீறக்கூடும்
அன்றேனும் உயிர்த்தெழு
கர்வம் நீர்த்த சுயத்தோடு...

உன்னாலுடைந்த இதயத்தில்
கடைசிச் சில்லும்
நொறுங்கித் தீரும் வரை
மனவீதியெங்கும்
நிராகரித்தலின் பெருமிதத்தோடு
எக்காளமிடு
எனக்குள் நீ
யாரோவென...

Wednesday, November 24, 2010

காகிதக் கடவுளும், சில கண்ணீர் துளிகளும்

கல்லூரி நாட்களில், அம்மா தான் எனக்கு எல்லாம்.இளங்கலை கணிணியியல் படித்தேன்.கல்லூரிக்கு பஸ்ஸிலோ அப்பாவின் வண்டியிலோ பயணிப்பது வழக்கம்.ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்கும் அப்பாவை விட, ’எனக்கு காசு பெரிசில்ல நீ வாங்குற மார்க்கு தான் பெரிசு’ என்று ஆறு மாததிற்கொருமுறை இம்சிக்கும் அம்மா தான் எனக்கு வற்றாத அமுத சுரபி. தினமும் கல்லூரி போகவென்று அப்பா கணக்கு பார்த்து தர, அம்மா மட்டும் கொடை வள்ளல். மொத்தமாய் நூறு ரூபாய் தாள்கள் கையிலிருக்கும் தருணங்களில் அப்படியே தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்ற கெத்தாய் நடந்து கொண்டிருப்பேன். பணத்தின் மீதான ஆசை வளர ஆரம்பித்த காலகட்டம் கல்லூரி காலங்கள் தான்.
அம்மா வேலைக்கு போகும் காரணத்தால், அப்பாவின் அரசியல் குறுக்கீடில்லாத குடும்ப பொறுப்பு மிகச் சிறு வயதில் தலையிலேற்றப்பட்டது. குருவி தலையில் பனங்காய் என்பதறியாமல் கிடைக்கும் சொற்ப கமிசனுக்காக வலிய ஏற்றிக் கொண்ட சுமையது.எல்லா மாதத்தின் முதல் வாரமும், கல்லூரி முடிந்து திரும்புகையில் கல்லுக்கட்டி சுப்பையா ஸ்டோர்சில் அம்மா கொடுத்தனுப்பியிருக்கும் சீட்டுடன் மளிகை சாமானுக்காக காத்திருப்பேன். பருப்பு,எண்ணை,வற்றல் வடகம் என மளிகை சரக்கு பலவிதமான உட்பிரிவுகள் கொண்டது. ஒவ்வொன்றுக்கும் எது சிறந்தயிடம் என்ற கணிப்பும் சிக்கன தத்துவங்களும் ‘சமர்த்து’ என்கிற பட்டத்தை தரும் காரணிகள் என்பதால் வெகு கவனமாயிருப்பேன். ஓடி ஓடி வாங்கினாலும்,
‘அய்யய்யோ! இங்க பாருடீ! பெருங்கடுகு வாங்கியாந்துட்டா!இதுல காரமே இருக்காதேடீ!’
’தொலியுளுந்து வாங்கியாறலயா? மாவு கணிசம் போறாதேடீ’
இப்படியான அப்பத்தாவின் அங்கலாய்ப்பில் அத்தனை கெத்தும் தூள் தூளாய் பறந்திருக்கும். அவ்வளவு பேருக்கு செய்யுற சமையல்ல எப்படி ரெண்டு தேக்கரண்டி கடுகோட காரம் தெரியப்போவுது? கடுகா பொரியணும் போல கடுகடுப்பா இருக்கும் ஆனா ஏதும் பேசவே முடியாது. அம்மா மட்டும் குறையோ நிறையோ ஏதும் சொல்லாமல், காசும் கணக்கு கேட்காமல் போய்விடுவார். ஆனாலும் குறித்து வைக்க வேண்டும்.
”எங்க வீட்டுல என் பொண்ணுக்கு வீட்டு வரவுசெலவெல்லாம் அத்துப்படி. ஹாஸ்டல்லயே போட்டுடேனா இங்கயிருந்து தான் வாழ்கைய கத்துக்க முடியுமின்னு சின்னச் சின்ன பொறுப்பா தர்றேன். அவளும் நல்லாத்தாங்க சமாளிக்கிறா” சக தோழியிடம் பெருமை பொங்க அம்மா பீற்றிக் கொண்ட தருணத்தில் என் ’கமிசனார்த்துவம்’ தூரப் போய்விட்டது.

**********

அம்மா அப்பாவிடம் அது இதென்று கதை கட்டி சேர்த்து வைத்த காசெல்லாம் பெரியம்மாவின் பாசத்தில் ஒரேயடியாக போய்விடும். வீட்டிற்கு மூத்த பெரியப்பாக்கள் இருவரின் குடும்பமும் மலேசியாவில் இருப்பதால் தொலைபேசியின் தொல்லை எப்போதும் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்கிற சேதி தாங்கி வரும் ஒரு தொலைபேசி அழைப்பு மொத்தபேரின் தூக்கத்தையும் கெடுத்துவிடும். இல்லை கெவுளி(சுவர்க்கோழி) பாசை தெரிந்த அப்பத்தாவின் புலம்பலுக்கு ஆறுதலாய் ஒரு தொலைபேசியழைப்போ, கடிதமோ வராதவரையில் வீடு முழுக்க சாம்பிராணி புகையோடும் தனக்குத் தெரிந்த மன்றாடலோடும் அவளின் பரிதவிப்பு பாவமாய் இருக்கும்.அப்பாவோ சித்தப்பாவோ வீட்டில் இல்லாத நாட்களில் இதுபோன்ற நிலையென்றால், காரைக்குடியிலிருந்து மலேசியாவுக்கு தொலைபேசி விபரம் அறியும் பொறுப்பு என்னிடம் வரும். ரொக்கமாய் சில நூறுகளும் கேட்க வேண்டிய கேள்விகளும் மனனம் செய்தபடி நானும் மிக பவ்யமாக மிச்சமாகப் போகும் ரூபாய்களை கணக்கிலிட்டபடி.வீட்டிலிருக்கும் தொலைபேசியில் அயல்நாட்டுக்கு பேசும் வசதியில்லாததால், பெரியப்பாவிடம் கூறி யாரேனும் ஒருவரை அப்பத்தாவிடம் பேசச் சொல்ல வேண்டும். விசயம் மிகவும் எளிது. ஆனால் எதுக்கு நானூறு ரூபாய் என்கிற யோசனையும் அம்மாவின் நிர்வாகத்திறமை குறித்த எள்ளலும் முதல் முறை மட்டுமே. காரணம் புரிந்தபின் அம்மா எந்த அளவுக்கு புத்திசாலி என்பது தெரிந்தது. எண்களை அமிழ்த்தினேன். எடுத்தது பெரியம்மா தான்.

“பெரிம்மாஆஆஆஆ! நல்லாயிருக்கீங்களா! நான் தான்... ” முடிக்குமுன்னரே குரல் தெரிந்து பெரியம்மா விசும்பலா இல்லை அளவு கடந்த உற்சாகமா எதுவென தெரியாத வகையில்,
“கயலாஆஆஆஆஆஆஆஆஆஆ” என ஒரு பாசமான இழுப்பு. வார்த்தையில் இசையை குழைத்து,எனக்கும் கண்ணீர் முட்டி மீண்டு எழ, முதல் ஆறு ஏழு விநாடிகளை இந்த விளிப்பின் ஓசை நிறைத்திருக்கும்.

பெரியம்மாவின் பூர்வீகம் இந்தியா தானென்றாலும் பதினாறு வயதிலே திருமணமுடித்து கணவனிடம் சென்றவர்.ஆனாலும் எங்க பக்கத்து வட்டார வழக்கு மட்டும் அதே தாள லயத்தில். இன்னொரு சமயமென்றால் இத்தனை வருசமாகியும் மாறாத அவரின் சீரிய மாண்பு பற்றி கவிதை எழுதலாம். ஆனா கையிருப்பு பாசத்துல அடிச்சி இழுத்திட்டு போற சூழ்நிலையில என்ன செய்ய ??? எத்தனை முயன்றும் நம்மள ஒரு வார்த்தை கூட பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டிருப்பார். வெறும் ‘ம்ம்ம்ம்’ மட்டும் கொட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அப்படியே இதய துடிப்பு நின்றுவிடும். கட்டணம் நானூறு தாண்டி நானூற்று அம்பதை தொடப்போகும் ஒரு அபாய வேளையில் எனக்கும் தைரியம் வந்து,

“பெரியம்மா! நான் காரைக்குடில இருந்து பேசறேன். வீட்டுக்கு பேசச் சொன்னாங்க. வைக்கிறேன்” கடன் சொல்ல கவுரவம் தடுக்கும், கையிலிருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு வரும் போதெல்லாம் வெறும் சோகப் பாட்டுகள் தான் நினைவுக்கு வரும்.அம்மா தீர்க்கதரிசின்னு, மனசு எப்பவும் போல கடைசியா புரிஞ்சுக்கும்.

இப்போது மெயிலிலும்,சாட்டிலும் பேசினாலும்.. நண்டு சிண்டு எல்லாத்துக்கிட்டயும் மொபைல் வந்திட்டாலும்.. நினைத்த மாத்திரத்தில் எவருடன் தொடர்பு கொள்ள ஏதுவாய் எல்லாமிருந்தும்...பேசச் செய்ய அப்பாத்தா போல் கிரியா ஊக்கியாக எவரும் இல்லை. பாசத்தால் பிணைக்க பெரியம்மா போல் இன்னொரு ஜீவனும் அங்கில்லை. பெண்கள் மிகவும் அற்புதமானவர்கள். பெண்கள் எந்த நாட்டிலிருந்தாலும் உள்ளுள் பெருகும் பாசமும் ஒருங்கே சேரும் பாந்தமும் தான் இன்னும் கலாச்சாரம், குடும்பம் என்கிற அடிப்படைக்கு வித்திடுகின்றன போலும். பெரியம்மாவோ அப்பத்தாவோ படிபபறிவே இல்லாதவர்கள். குடும்பம் தவிர வேரொரு உலகம் அவர்களறியாதது. என்வரையில் அவர்கள் அடிமைப்படுத்தப்படவுமில்லை, அடிமையாகவுமில்லை.மாறாக மகாராணிகளாக வாழ்ந்தார்கள் எனச் சொல்லலாம். ஆணாதிக்கவாதிகளாய் சொல்லப்பட்ட என் குடும்பத்தினர் சிலர் கூட இவர்களின் வார்த்தைக்கு எதிர்பேச்சு பேசியதில்லை.படிப்பறிவில்லாத-பகுத்தறியாத பாசம் ஜெயித்தது போலும்.

***********

“கயலு! இங்க வாம்மா!”
”என்னங்கப்பா?”
“இந்த தாள்ல உன்னோட கால வையி”
“எதுக்கு”
“கழுத! கேள்வியா கேக்குற? வையின்னா..”
ஊருக்கு கிளம்பும் அவசர வேளையிலும் பெரியப்பா கையில் வெள்ளைதாளும் கையுமாய் நின்றது நினைவிருக்கிறது.பாதங்களை ஒட்டி பேனாவால் தாளில் வரைந்து பத்திரமாய் பெட்டியில் வைப்பார். வித விதமான காலணிகள் என் விருப்பமென்கிற கரிசனம்.எனக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வாங்கி தந்த பாசம்.
ஒவ்வொரு பண்டிகைக்கும், விடியுமுன்னரே ஸ்ரீதர் மாமா, பெரிய பெட்டியோடு வாசலில் நின்றிருப்பார்.குலுவான்கள் அத்தனைக்கும் அவரவர் பேரிட்டு கொத்து கொத்தாய் ஆடைகள் பிரிக்கப்பட்டிருக்கும்.கூடவே எனக்கு மட்டும் இரண்டு மூன்று ஜோடிச் செறுப்புகள். சரியான அளவுகளில் கனக்கச்சிதமாக.மலேயாவிலிருப்பவர்களின் சேமலாபங்களை அப்பத்தா விசும்பலோடு கேக்க, அங்கிருப்பவர்களுக்காய் இது அத்தனையும் கேமராவுக்குள் அடக்கிக் கொண்டிருப்பார் ஸ்ரீதர் மாமா. இத்தனை பிள்ளைகளிருந்தாலும் அங்கிருக்கும் பிள்ளைகள் மீதான பாசம் கண்ணீராய் கரைந்து கொண்டிருக்கும்.அழகி பேரழகியாவாள் அப்போதெல்லாம்.

ஏனோ சில நாட்களாக ஏதோ ஒரு பயங்கலந்த விலகல்.எல்லோருடனுடமும் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.பெரியப்பாவின் உடல் நிலை குறித்த தகவல்கள் ஏதும் சரியாகயில்லை.எப்பவும் நிகழலாம் என்கிற கவலை படர்ந்த எதிர்பார்ப்பு.ஒருநாள் காலை அப்பா விம்மலுடன் அந்தச் சேதி சொன்னார். எதுவுமே சொல்லாமல் அழைப்பை துண்டித்து விட்டேன். கண்ணீர் வர நெடுநேரம் பிடித்தது. கண்ணீர் வரும் வரையிலான மனப்போராட்டம் அப்பப்பா கொடுமை.தனிமையில் கதறி ஓய்ந்ததும் இரண்டு வருடங்களுக்கு முந்திய பொங்கல்தினம் மின்னல் கீற்றாய்...உடல் நலக் குறைவு இருந்தபோதும் எல்லா பொங்கலுக்கும் ஊருக்கு வருவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

“அப்பா! இந்தாங்கப்பா இது என் காசு நானே சம்பாதிச்சது.” இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை பெரியப்பாவின் சட்டைப் பையில் வைத்தேன். பெருமை பொங்க தளும்பும் கண்ணீரோடு கைகளைப் பிடித்தவர். அப்படியே சாமியறைக்கு கூட்டி போய் கதறியழுதார். அய்யோ ஏதேனும் அதிகபிரசிங்கித்தனமோ என நான் பயந்துபோய் இருக்க,
“எம்புள்ள இப்படியிருக்கணும் தாண்டா ஆசப்பட்டேன்.யாரையும் நம்பாத. பொம்பளப்புள்ள சுய கால்ல நிக்கணும். அதான் அதுக்கு தான் படிப்பு.இந்த உசிருக்கு இது போதும். இது போதும்.எம்புள்ள சம்பாதிச்ச காசு..” சட்டைப்பையை தடவிக்கொண்டார். உணர்ச்சி மிகுதியில் தள்ளாடிய பெரியப்பா இன்னும் கண்ணை விட்டகலாமல்...

பெரியப்பாவின் பாசமும் அரவணைப்பும் இனியொருமுறை கிடைக்கப் போவதில்லை.ஆயிரந்தான் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. ஆனாலும்....ஆனாலும்....உள்ளுக்குள் எழுந்தடங்கும் அழுகைக்கு எழுத்துக்களால் அடைக்கலம் தேடி இப்படியாக நான்.

***********


Wednesday, October 27, 2010

காதலுறை பனிக்காலம்


 கூட்டவும் பெருக்கவும்
மட்டுமே முடிகிறது
கழிக்கவோ வகுக்கவோ
வெட்கம் தடுக்கிறது
வினோதமிந்த
’முத்தக்’கணக்கு!
மென் கழுத்தில் 
சிலபல சங்கதிகளை
கோலமாய் வரைந்தபடி நின் விரல்...
படர்தலின் விபரீதத்தில்
விதிர்த்து எழுகிறேன்
’இல்ல சங்கிலி தங்கமான்னு...?’ 
திணறலில் கோழையாகினும்
முத்தம் சிந்தியபின்னே மீள்கிறது
உன் காதலான காமம்!
சாலச் சிறந்த கவிகளெல்லாம்
’இதென்ன பிரமாதம்’
இளப்பமாய் விமர்சித்தவன்
’உன் இதழ்களைத் தா’
எழுதிக்காட்டுகிறேன்
’சிற்றின்பக் கதம்பம்’ என்றான்
வழமை போல் அன்றும்
இமை தாழ்த்தி இம்சித்தேன்  
பதிலேதுமில்லாமல்...
பொறுமையிழந்து வீரனாய்
விஸ்ரூபமெடுத்தவன்
சிறையெடுத்திருந்தான்
அதரங்களிரண்டையும்...
அவனின்றி
அழகற்றிருப்பதாய் சொன்னதும்
ஆத்திரமாய் தரையில் எறிந்தேன்
ஆயிரஞ் சில்லாய் சிதறிச் சிரித்து
அதையே தீர்க்கமாய்ச் சொன்னது
கண்ணாடி!

Tuesday, October 26, 2010

முத்துக்கள் மூன்று


நீர்க்கோலத்துத் தாமரைகளென
நாலைந்துக் குற்றலைகள்
சலனமடங்குமுன் அமிழ்ந்து போனது
புள்ளியிட்டக் கல்

***

தொண்ணூறுபாகையில்
சூரியதரிசனம்
தகிப்பில் பாதம் பணிந்தது
நிழல்!

**

பசியில் சலசலத்தது கூடு
இடுக்கிய இரையுடன் தாய்ப்பறவை
குடையாகித் தொடர்ந்தது மேகம்

*

Monday, October 25, 2010

என் தேவதைக்கு

”ஹலோ! யாருங்க..?”

“நாந்தாம்மா பேசுறேன். எப்டி இருக்க?”

நாந்தாம்மா என்கிற அழுத்தத்தில் முகம் ரோசாப்பூவாய் சில்லிட்டது.

”நீ..நீங்களா? இருங்க மாடிக்கு வர்றேன். இங்க பேசமுடியாது” கொஞ்சலாய் வெளிப்பட்டது வார்த்தைகள்.
கேள்வியோடு மாமியார் பார்வையையும் சட்டை செய்யாமல் மாடியேறி மூச்சிறைக்க,

“சொல்லுங்க.. மாடியில இருக்கேன்.”

“சாப்பிட்டியாடா நீ!” கரகரத்த ஆண்குரலில் பாசம் பொங்கியது.

“ம்ம்!” விசும்பலாய் வந்தது வார்த்தைகள்.

பத்து நிமிட உரையாடலில் ஏனோ அவள் எதிர்பார்த்த விசயம் தவிர எல்லா சம்பிரதாய விசாரிப்புகளும்.

“அப்புறம்”

சிலுசிலுவென சிறகடித்த இதயத்தின் மத்தியில் நரம்பொன்றை கத்தரித்த வலி வரும் அவளுக்கு இந்த வார்த்தையை கேக்கும் போதெல்லாம்.வெளியூரிலிருக்கும் கணவனின் அழைப்பிற்கு ஏங்கித் தவிப்பதும்,வந்ததும் குதுகலிப்பதும் அவன் குரல் கேக்கும் இந்த சில நிமிடங்களுக்கு தானே.அவனுக்கு தன்னிடம் பகிர விசயமே இல்லாது எல்லாமும் தீர்ந்து போயிற்று என்கிற வெறுமையை வலியோடு உணர்த்தும் இந்த வார்த்தை நிச்சயம் கொடிது.

“ம்ம்.. சரி ஒண்ணுமில்ல” வீம்பாய் சொன்னாலும் பரிதவிக்கும் மனசு.இன்னிக்கும் அப்படித்தான்.ஆனால் கண்ணீர் மட்டும் முட்டிக்கொண்டு வந்தது.

“சரிம்மா. பாத்துக்கோ!அடுத்தவாரம் பேசுறேன்”

”ம்ம்...வந்து..” சொல்லி முடிப்பதற்குள் அலைபேசி அடக்கமானது.

ஏனோ அழனும் போல இருந்தது.சின்னதா ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாம்.என்ன தான் வேலையினாலும் பொண்டாட்டி பிறந்தநாள் கூடவா மறந்துபோகும்.எல்லாமே நானா சொல்லிச் சொல்லி வாங்கனுமா என்ன? காலையில் பால் பாயசம் செஞ்சதுக்கே நக்கல் தாங்கல. ரெண்டு பிள்ளைங்களுக்கப்புறம், இந்த வயசுல இது வேறயான்னு? இப்படி அழுறது தெரிஞ்சா நாத்தி நமட்டு சிரிப்பு சிரிச்சே கொன்னுருவா. ஏன்மா என்னப் பெத்தே? அனாவசிமாய் அம்மாவுக்கு வசவு விழுந்தது. அவனை குறை சொல்ல முடியாத கோவம் கேவலாய் வந்தது.கண்களைத் துடைத்துக் கொண்டு வேகவேகமாய் நடந்தாள். மூச்சை மெல்ல இழுத்துவிட்டுக்கொண்டாள். சமாதானமானது மனது.

மாடியிறங்கி வந்தாள். வழக்கம் போல சலனமற்ற முகத்துடன்...

துணிமடிக்கையில் வாசலில் அழைப்புமணி சத்தம்.

”அம்மா பார்சல் வந்திருக்கு.”

யாருக்கிட்ட இருந்து? பெயர் எதுவும் இல்லாமல் ரோஜாக்கள் சகிதம் உள்ளே அழகான ஒரு தேவதை பொம்மை. நேர்த்தியும் அழகும் குழைந்து ஏதோ மனதை ஈர்த்தது.

என் தேவதைக்கு என்றெழுதியதை தவிர வேறேதும் இல்லை. வினாடி நிதானித்தவள் வந்த சில நிமிடங்களில் இறக்கைகள் முளைத்து கணவனிடம் தேடி பறக்கலானாள்.

”அண்ணி... அது... அது எனக்கு வந்தது... நரேன் கிட்ட இருந்து. அதான்... அம்மாட்ட சொல்லிராதீங்க”

வருங்கால கணவனிடமிருந்து அவளுக்கு வந்த பரிசு.

“யாருக்குன்னு தெரியாமத்தான் நித்தி...மன்னிச்சிடு. சிக்கிரம் எடுத்துட்டுப் போ.அத்தை வந்திடுவாங்க”

நட்பாய் சிரித்தாள் அவள். ஏனோ குதூகலித்தது மனசு.

Friday, October 15, 2010

எப்போதேனும்...


எப்போதும்
எளிதாய்க் கடந்துவிடுகிற
காட்சிதான் அது,
பள்ளிக்குப் போகும் குழந்தைக்கு
முத்தமிட்டு வழியனுப்பும் தாய்!
ஏனோ
பார்த்தயென் கன்னம் முழுவதும்
ஈரம்
கண்களிலும் அதன்
மிச்சசொச்சம்

* * * * *

”என்  ராசாத்தி”
வருடிச் சொடுக்கெடுக்கும்
கரங்கள்
திருஷ்டிக்குப் பலியாகும்
உப்புக் கட்டிகள்
யாருமில்லாத பொழுதொன்றில்
மிளகாய்கமறலோடு
சன்னமான வெடிச்சத்தம்
என் செவிக்கு மட்டும்!

* * * *

மொத்தமாய் ஐந்துரூபாய்
பட்டாணியா?
தேன்மிட்டாயா?
குச்சி ஐஸா?
பலவேறு குழப்பங்களுடன்
கணக்குப் புத்தகத்தில்
ஓய்வெடுக்கும் திருவிழாக்காசு
உறக்கமிழந்த இரவுகள்

* * *

“இந்தா ஒருவாய்ச் சாப்பிட்டிரு”
கெஞ்சலும் என் சிணுங்கலும்
விரவி ஓய்ந்த
பின்னிரவு நாட்கள்
மனம் ஒன்றா உணவோடும்
வெறும் வயிற்றோடும்
எவருமில்லா வெறுமையில்
அயர்வாய் விழுகையில்
அனிச்சையாய்த் துடைக்கிறது கை
உதட்டோரம் ஒற்றைப் பருக்கை

* *

உருமிச் சத்தம்
பாண்டிச் சாமியாடி
பூம்பூம் மாடு
குடுகுடுப்பைக்காரன்
கிறுக்குச் சுப்பைய்யா
இன்னபிறவும் உண்டு
பயமூட்டும் பட்டியலில்...
மனதில் வாசித்துச் சிரிப்பதுண்டு
பேரிடிச் முழக்கம் கேட்கையில்
தொடைநடுங்கும் பயத்தினோடே
அனிச்சையாய் மொழியும்
’அர்ச்சுனன் அபயமும்’
தானாய் தேடும்
அப்பாவின் அருகாமையும்...

*
சலங்கை வைத்த கொலுசு
பட்டுப் பாவாடை
அரையடி குடுமிக்கு
ஆறுமுழம் மல்லிப்பூ
குலுங்கிச் சிரிக்கும் வளையல்கள்
தீட்டித் தீர்ந்த மை
சூதோ வினையோ ஏதுமில்லாது
சட்டென நம்பி ஒட்டாதாயின்
பட்டென விலகிய
வெள்ளந்தி பால்யம்
இப்படி...
காலச் சக்கரத்தில்
நாகரிகம் கருதி
இழந்துவிட்ட எல்லாமும்
எப்போதேனும்
மிக அரிதாக எப்போதேனும்...


Thursday, October 14, 2010

தென்றல் வந்து தீண்டும் போது...

படித்ததில் பிடித்தது

இப்போ கொஞ்ச நாளா தான் இவங்களப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மரபிசைத் தமிழோட மொத்த சுவையும் தளும்ப தளும்ப ... இவங்களும் நம்ம சக பயணின்னு நெனைக்கிறப்போ ரொம்ப பெருமையா இருக்குங்க. பெண்ணீயம், பதிவரசியல் இதையெல்லாம் கலக்காம தமிழ்....தமிழ் மட்டுமே வாசிக்கத் தருகிற அற்புதமான படைப்பாளி - கவிஞர். ஒவ்வொரு கவியும் பொருள் புரிய அத்தனை நேரம் பிடித்தது எனக்கு. எல்லாமே நல்லாயிருந்தாலும் என்னைப் பத்தி(?) இவங்க எழுதின இந்த கவிதை ரொம்ப பிடிச்சதுங்க.
மீன் = கயல். அதனால .....

மீன்

கடல் கொழிக்கும் நீரின் இனத்தில்
வளையும் வாளில் தண்மை இல்லா
கொதிக்கும் புனலாய் புள் மறையும்
கொத்தும் அலகில் குதித்து கீறும்


வாய் அகலும் மச்சத்தின் உள்புகும்
சிற்சில்லுயிரின் சிறை இரையாய்
வலை காணா வலிகாண் வல்லினம்
கடிமரத்தின் திசை போகா கலத்தில்


கெளிற்றின் கொள்வாய் கௌவை
அலை ஆழம் பாசிக்குள் முகிழும்
தூண்டில் வழுவி சிற்றலை தழுவும்
ஒற்றை புற்றில் ஓர் நிலை அறியா


கற்றலையின் சிறுகண் தப்பும் அவ்விலை
தூங்கா திரையில் கலக்கும் பொழுது
வாட்டும் ஒளிக்கீற்று கூசித் தேடும்
கள்ளூறா பாறை இடுங்கில் பெருக


என்பின் முள்ளாய் துருத்தும்
தசையில் உணவாய் கரைய
நசையற்று நவிலும் ஓசை
உப்பில் ஊறும் ஒரு சுவை.


துள்ளும் வாலில் கெண்டை சிக்க
தளரா பாய்ச்சலில் கழுகும் கொத்த
தீரா பகை தீரும் கண்ணியில்
வாழா வினை பகருமோ மீன்.


- 'Writer' Mubeen Sadhika

கேட்டதில் பிடித்தது

எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி தான் எனக்கும் இசைஞானிய பிடிக்கும்.ஆனா இந்த பாட்டை கேக்கும் போது ஏனோ அவரை ரொம்ப... ரொம்பப் பிடிக்கும்.
பார்த்ததில் பிடித்தது

ஊரிலே இருந்து தோழி வந்திருக்கா. எங்கயாவது போலாம்டீன்னு ஒரே நச்சு. அவள கூட்டிட்டு போய் பாஸ் படம் பார்த்தோம். முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் பார்த்திட்டாலும் நாங்க ரெண்டு பேரும் +  இன்னும் இரண்டு கல்லூரித் தோழிகள் சேர்ந்து பாக்குறதுன்னா... செம காமெடியா இருக்கும். நானெல்லாம் படம் பார்க்கப் போறது அந்தப் பாப்கார்னுக்கும் ஐஸ்கீரீமுக்கும் தான். ஆனா அம்மணி படத்தப் பாத்துட்டு மெசேஜ் ஏதாவது இருக்கான்னு தேடுற ஆளு. ஈரானியப் படங்கள்,அகிரா குரோசவான்னு வாய் ஓயாம பேசும். அவளே படம் முடியிற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல படம். எந்திரன்? விசில் ஓயட்டும். மெதுவா பாத்துக்கறேன்.

படம் பார்த்திட்டு கடை கடையா சுமாரான விலையில ஒரு புடவை தேடி அலைஞ்சப்போ... கண்ணுல பட்டு ஒட்டிக்கிட்டது இது.

ஆசைக்கு அலைபேசில படம்பிடிச்சிட்டு வந்தாச்சு. பின்ன நெசத்துல வாங்குறதுன்னா Diva க்கு என்னோட மொத்த சொத்தையும்(?) எழுதி வைக்கணும். திருமண வகைகள்ல இருந்திச்சு. நேரிலே இன்னும் அழகாயிருந்திச்சி. என் ஓட்டை மொபைல்லையே இவ்வளோ அழகுன்னா பாத்துக்கோங்க. நாளைக்கு மாம்ஸ் வந்து உனக்கு என்ன வேணும்ன்னு கேப்பாரில்ல அன்னிக்கு இதான் வேணும்ன்னு சொல்லுறதுக்காக. ஒரு தொலைநோக்கு பார்வை தாங்க :)

Tuesday, October 12, 2010

திருக்கூத்து

அருஞ்சுவை உண்டி அமரவர் உப்பரிக்கை
அம்பாரி பவனி ஆஞ்சநேயம் வியந்தோதி
வான்பொழி அமிழ்தம் அந்தாதி பிதற்றல்
மேருகொள் தீரம் ஆழியமிழ் பொறைமை
உளங்கனி திருவருட் சிந்தை பகர்ந்து
சொலவடை இலக்கணம் கூறு பிரித்து
சிலேடை முகர்ந்து சிறுநகையூட்டி மீள,
ஆவிபோக்கி மிடரு விழுங்கும் வன்பசி
அல்லையரற்றி அறுந்துவிழும் சுவைநரம்புகள்
கரவொலி கேட்டு கண்ணொளியது உயிர்பெற
கதிரவன் தகித்தும் அகமலர்ந்து குரல்மீட்டி
மாயவன் எழிலை மாசற வடிக்கலானான்
காலாஞ்சி சிறுகடலை கைப்பிடிச்சோறு தாம்பூலத்தோடு
இறைவன் சூடிக்கழித்த மாலையும் கைவர!

Sunday, October 10, 2010

சேது (எ) சேதுராமன்

மனம் போல் வாழ்வது எத்தனை சுகம் தெரியுமா? ஒரு இறகின் பயணம் போல இலகுவாய்.. கனமேதுமில்லாமல்.. அரிதாய் வாய்ப்பதுண்டு.அப்படி வாழபவர்கள் நிச்சயம் திறமைசாலிகள்.இந்த தத்துவத்துக்குப் பின்னாடியிருக்க கத என்னான்னா? அதிகப்படியான விடுமுறைகளை எப்படித் தள்ளுறதுன்னு தெரியாம முழிக்க வேண்டியதாயிருக்கு. வெட்டியா இருக்கோமுங்குறத எப்படி எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.அட.. பொழுதே போகமாட்டேங்குதுப்பா!
பாட்டுக் கேக்கலாம். ம்ம்ஹ்ஹும் எல்லாப்பாட்டும் கேட்டாச்சு. புதுசா எதாவது கேக்கறதுன்னா? பதிவிறக்கம் ம்ம் பொறுமை அவசியம். இன்னிக்கு இல்ல இன்னொரு நாளைக்கு...

படம்,பார்க்,பீச் இப்படி எங்காவது போகலாம். யாருமே இல்ல வெறிச்சோடிக் கிடக்குது இங்க. துணைக்கு யாருமில்லாம எப்படி... தோழிகள் யாரையாவது கூப்பிட்டால்?ஞாயிற்றுக்கிழமை கணவன்மார் சாபத்துக்கு ஆளாகக்கூடும்.

எங்காவது கடைக்கு போயிட்டு வரலாம். ஹிக்கிம்போதம்ஸ் போகலாம்.கூட்டமா இருக்கும் கூடவே ஆர்வக்கோளாறு பர்ஸ காலி பண்ணிடும். போகவேணாமுன்னு தோணுது.கோயில்? நேத்து கூட்டத்துல சிக்கி நூலானது போதும். அடுத்தவாரம் பாத்துக்கலாம்.

அலைபேசலாம். நேத்தி பூரா அம்மாட்ட பேசிப்பேசி வாய்வலிக்குது.அறிவுரை திலகம் என் அருமை உடன்பிறப்பு பொழிஞ்ச அக்கறையில(!) காது ரெண்டும் உய்ய்ய்ய்ங்குது.

எதாவது படிக்கலாம்.இருக்க புத்தகம் எல்லாமும் படிச்சாச்சு.முறிந்த சிறகுகள் - இன்னொரு முறை படிக்கலாம். ஆனா அடுத்து என்னவரி வரும்ன்னு தெரிஞ்சே படிக்கிறதுக்கு ரசிகத்தன்மை வேணும். அதில்ல இப்போ. இன்னிக்கு ஏதும் புதிதாய் படிக்க மனமில்லை.

ரொம்ப நாளாச்சு பெயிண்டிங் பண்ணி.இன்னிக்கு பண்ணுவோம். பாதிவரை முடித்ததும் ஒன்றுதல் இல்லாமல் ....

கதிரி கேட்கலாம்... கிருஷ்ணா நீ வேதமே.... சாக்ஸோஃபோன் உருகிக் கொண்டிருந்ததது.அதையடுத்த அரைமணி நேரத்தில் அறுவதுக்கும் மேற்பட்ட பாடல்கள். ஹி ஹி ஹி. ஆரம்பம் மட்டும் கேட்டேன்.இந்த நிலையற்ற மனநிலைக்கு தீர்வு?

ம்ம். நல்ல காஃபி சாப்பிட்டா இதமா இருக்கும். கூடவே அண்ணியோட நக்கலும் நையாண்டியும்..என் அருமை வாலுங்க கூட்டமும் அங்கதானே? சரி போய்வரலாம்.போனவாரம் வா வான்னு கூப்பிட்டாங்க.போகமுடியல. இன்னிக்கு போகலாம்.முன்னறிவிப்பில்லாம போறோமே? பரவால்ல சொல்லிட்டு போனா நாகரீகமா இருக்காது.

****************************

இருபது நிமிட பயணம்.நகரின் பிரபலமான அடுக்குமாடிக் கட்டடம். பத்தாவது தளம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அலைபேசவும், “என்னம்மா? தியேட்டர்ல இருக்கேன்.எல்லாரும் வந்தோம்.பக்கத்துல தான். நீ எங்க இருக்க?”
“உங்களபாக்க வந்தேண்ணா. சரி நான் கிளம்புறேன். இன்னொரு நாளைக்கு வர்றேன்.”

“இரு இரு.படம் முடிய இன்னும் 20 நிமிசந்தான். மொத்தமா அரைமணிநேரம் பொறுமை கிடையாதா? திடீர்ன்னு வந்திட்டு இப்படி ஓடற. இரு இரு. உங்க அண்ணி வந்து உனக்கு பேயோட்டுனாத்தான் அடங்குவ.போனவாரம் நீ ஏன் வரல.ம்ம்?” திரையரங்க இரைச்சலுக்குள்ளும் அண்ணாவின் கர்ஜனை கொஞ்சம் நடுக்கத்தை தந்தது.
“சரி சரி.வாங்கண்ணா. இருக்கேன்”

சொல்லாமல் வந்ததற்கு மனதிற்குள் நொந்தவாறே திரும்பவும், இடிப்பது போல் ஒரு முதியவர் வந்து எதிரே நிற்க திணறிப்போனேன். அவருக்கு சுமார் 60-65 வயதிருக்கலாம்.மிடுக்காக உடையணிந்தபடி இளமை துள்ளும் கண்களை மறைத்த கண்ணாடி, கையில் இந்தியா டுடே. என்னை விட சற்றே உயரம். அதாவது குள்ளம் - சராசரிக்கும் குறைவான உயரம்.ஏதோ நடைபயிற்சி சென்று திரும்பியிருக்க வேண்டும்.ஆயத்தங்கள் அவ்விதம் உரைத்தன.

”யாருவேணும் உங்களுக்கு?நான் ஏதேனும் உதவலாமா?”

பொதுவாக இதுபோலும் பிளாட்டில் உள்ளவர்கள் எதிரில் வருபவர்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் பார்ப்பது வழக்கம். தவறி ”இதானே E10” என்கிற மாதிரியான கேள்விகளுக்குக் கூட இயந்திரதனமாய் பதில் வரும்.இந்த முதியவர் போல் வலிய வந்து கேட்பவர்கள் மிகச் சிலர்.அப்படிக் கேட்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இப்போது தான் கவனிக்கிறேன் போன முறை வந்தபோது காலியாய் இருந்த வீடு....குடி வந்தாயிற்று போல.சேதுராமன்,மரகதம் என மின்னியது பெயர் பலகை.

”உங்களத்தான் மேடம். என்ன பாக்குறீங்க. யாரப்பாக்க வந்தீங்கன்னு சொல்லுறது ஒண்ணும் அத்தனை தவறான விசயம் கிடையாதே!” முதலில் தமிழில் கேட்டவர்,சிறு இளக்கத்துடன் சுத்தமான ஆங்கிலத்தில் மறுபடிக் கேட்கவும் சிரித்தபடி தமிழில் பதில் சொன்னேன்.

“ஓ. கணேசன் வீட்டுக்கா? நமக்கு இந்த வீடும்மா. நம்மூரு பொண்ணா நீ? திமிரா பேசயிலேயே தெரிஞ்சது வைகையாத்து வாசம்.” கலகலவெனப் பேசிக் கொண்டே கதவருகில் சென்று ”மரகதம் கணேசன் தங்கை வந்திருக்காம்மா.ரெண்டு காபி குடு” என்றபடி உள்ளே போனார். நான் தயங்குவது தெரிஞ்சதும்,”உள்ளவா நாங்களும் மதுரக்காரங்க தான்.பயப்படாதே என் மனைவி நல்லா காபி போடுவா” சிரித்தபடி பேசியவர் ஏனோ நெடுநாள் பழகியதான உணர்வை தந்தார்.கூடவே தமிழனுக்குள்ளான பிரிவினை வலிக்கத்தான் செய்தது. மதுரையா? கோவையா? காவிரிக்கரையா? எனக்கேட்டு கேட்டு கூட்டம் சேரும் மாண்பு அப்படியே சிலிர்க்க(?) வைத்தது.அதுபோலும் குறுகிய வட்டமோ இது என்கிற வருத்ததை அடுத்த சில நொடிகளில் போக்கினார் சேது.

“வாம்மா!உள்ளவா!கணேசனுக்கு உறவா?தங்கையின மாதிரிக் கேட்டது.” மென்மையான மதுர குரல்.அழகான லட்சுமிகரமான முகம். தேஜஸான முகத்தில் மஞ்சள் குங்குமம் அதையும் மிஞ்சி ஜொலிக்கும் கல்மூக்குத்தி. ஒரு கறுப்பு முடிகூட எடுக்க முடியாது என்கிற அளவுக்கு வெளுத்த கேசம்.
நான் எழுந்து கரம் குவிக்கவும், “என்னைவிட இவ கொஞ்சம் வயசானமாதிரி தெரியுறால்ல?அதானே வணக்கமெல்லாம் சொல்லுறே! நீ வேணா அவள பாட்டீன்னு கூப்பிடு. என்ன சேதுன்னே கூப்பிடு.” என்றபடி நமட்டலாய் சிரித்தார் சேது.

“ம்ம்க்கும்! யாராவது சின்னப் பொண்ணுங்க வந்திட்டா போதும்.கமலஹாசன் மாதிரி நெனச்சுக்கும் கிழம். இருங்க இருங்க காபிக்கு sugarfree கூட போட போறதில்ல.கொழுப்பு அடங்கட்டும்” அந்த அழகான ஊடலை ரசித்தபடி இருக்க, அண்ணா வரும் வரை பொழுது போவது ஒன்றும் அத்தனை கடினமல்ல எனப் புரிந்தது.
சாலை கடக்கும் பொழுதுகளில் கைபிடிக்கும் யாரோ, கூட்டநெரிசலில் தவறி விழப் போகையில் தோள் பற்றும் யாரோ, ஏதோ ஒரு நகைச்சுவைக்கு பொதுவில் சிரிக்கையில் சினேகித பார்வை பகிரும் எவரோ,முகம் தெரியாத சிலருடன் மின்னாடலில் பகிரும் வார்த்தைகளின் வழியே உணரும் பாசம் இப்படி அறிவிற்கு எட்டாத ஏதோ ஒரு விசயம் மனிதம் இருப்பதை எப்போதுமெனக்கு நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது.இயல்பான வாழ்க்கை மீதான என் காதலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

சேதுராமன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஏதோ ராணுவக் கிட்டங்கியில் வேலைபார்த்ததாகவும்,பின்னர் சில காலம் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் சொன்னார்.மகனும் மருமகளும் லண்டனில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.பரஸ்பரம் அறிமுகப்படலம் முடிந்து வீட்டை சுற்றிக்காண்பிக்கலானார்.மனுசன் அறுபதுகளில் ரொம்ப ரசனையான உலகத்தை அனுபவித்தவர் போலும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னார்.கல்லூரி நாட்களில் காரைக்குடி CECRIயில் வருடம் ஒருமுறை அறிவியற்கண்காட்சி நடத்தப்படும்.அதில் ஹைதர் காலத்து(?) ஃபிளாப்பி டிரைவ் எல்லாம் இருக்கும்.பார்க்க வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும்.அதே உணர்வும் ஆர்வமும் அந்த வீட்டில் உள்ளவற்றை காணும் போதும். எல்லாமே மிகவும் அருமையான கலைப்பொக்கிஷங்கள்.அதுல ஒரு பொருள் மிகவும் கவர்ந்தது.டேப் ரிக்கார்டுகளுக்கு முந்தைய இசையுலகம். கிராமோஃபோன்.நான் பிறக்கும்போதே கிராமஃபோன்கள் செல்வாக்கை இழந்திருந்தன. என் வீட்டில் ஒரு பெரிய கறுப்பு நிற டேப்ரிக்கார்டர் இருந்ததாக நினைவு. இந்தக்கருவியை நான் சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.நேரில் அதன் செயல்பாட்டை பார்க்க வாய்த்த அரிதான சந்தர்ப்பம்.


 சேதுவிடம் நிறைய இசைத்தட்டுகள் இருந்தது. சிலவகை அபூர்வமான குரல்களெல்லாம் தன்னிடம் உண்டு என்பதாகச் சொன்னதோடல்லாமல் ஒவ்வொன்றாக போட்டு வேறு காண்பித்தார். கேவி மகாதேவன் மீது மிகப்பற்றுள்ள காரணத்ததால் அவரது பாடல்களே அலமாரியெங்கும் நிரம்பி வழிந்தன. அதுல ஒரு பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க. ஆடவந்த தெய்வம் படத்துக்காக டி.ஆர்.மகாலிங்கம் பாடின பாட்டு. ’கோடி கோடி இன்பம் தரவே’ எனத் தொடங்குமது. கொஞ்சம் கீறலோடும் இழுத்தவாறும் இருந்தாலும் அமுதமாய் இருந்தது இசையும் குரலும்.பாடலுக்கு நடுவே காபியோடு மரகதம்மா வரவும், அவங்கள நோக்கி பாடியபடி ஆடவும் செய்தார் சேது. ’ம்ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சலில்லை’ என்று வாய் சொன்னாலும் அவரையும் அவர் பாவங்களையும் ரசித்துக்கொண்டிருந்தாள். அன்று வெட்கப் பொழிவோடு சிரித்த அம்முகத்துக்கு நிகரான உயிருள்ள ஓவியம் இருக்கவே முடியாது நான் பார்த்தவரையில்.அவரது இசையார்வம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.வெகுநேரமாய் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி கேட்டேவிட்டேன்.

“ஓய்வுக்குப் பின்னாடி சொந்த கிராமத்துக்குப்போயி வாழறவங்களத்தான் பார்த்திருக்கேன்.ஆனா இந்த வயசுல தனியா இங்க சொந்தபந்தமில்லாம இருக்கீங்களே.கஷ்டமாயில்லையா?”

“மதுரைப்பக்கம் ஒரு சின்ன கிராமம் என்னோடது. ஐந்து பெண்கள். நான் மூணாவது.அக்கா தங்கச்சிங்க வாழ்க்கையெல்லாம் சீராக்கின பின்னாடி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என் மனைவிக்கு அப்போ என்னால தனிப்பட்ட வசதிவாய்ப்புகள் செய்து தரமுடியல.பையனும் கிராமத்து சூழ்நிலையில தான் படிச்சி வந்தான்.அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தான் நாங்க இங்க வந்தது.ஏன்னா இன்னிக்கு கிராமம் எப்படியிருக்கு தெரியுமா? ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு கொடி பிடிச்சிக்கிட்டு இல்ல சாதி மதமுன்னு சிலபேரு ஊரக்கெடுத்திட்டிருக்கான். பங்காளிச்சண்டை சொத்துப்பிரச்சனையின்னு சில பேரு.இதையும் மீறி நாம ஏதாவது செஞ்சா நீயென்ன புதுசா தலைவராக பாக்குறியான்னு கேக்குறாங்கம்மா. நமக்கான வசதிகள் செஞ்சுக்கக் கூட பலபேரு தயவ எதிர்பார்க்கறதாயிருக்கு.காந்தி எதிர்பார்த்த சுதந்திரம் அங்கில்லமா.பலகிராமங்கள்ல கட்டப்பஞ்சாயத்து தான் நடந்திட்டு இருக்கு.அதுக்கும் மேல நாங்க ரெண்டு பேரும் வயசானவங்க மருத்துவ வசதி,போக்குவரத்து வசதி எங்களுக்கு வேணும்.தேசியகீதம் படம் பார்த்தியா அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட ஊர்கள்ல ஒரு ஊருதான் என்னோடது.அதான்மா கிராமத்த விட்டுட்டு இங்க வந்திட்டோம். கிராமத்துல நகரத்தோட சீரழிவுகள் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிட்டு இருக்கு. பாரு நான் இங்கே தன்னார்வத்தொண்டனா என்ன வேணா செய்யலாம். ஆனா கிராமத்துல என் சாதி முன்மொழியப்படும். அதான் மாசில்லா தண்ணியும் காத்தும் கூட வேணாமுன்னு இங்கயே...” நிறுத்தி நீண்ட பெருமூச்சு விட்டார் சேது.அவர் பக்கமும் நியாயமிருக்கக்கூடும். சாதிகள்,மதங்கள் இல்லாத இந்தியா வர என்ன செய்ய வேண்டும் கலாம்? கனவு மட்டும் கண்டு கொண்டிருக்கிறேன், ஆதிக்கமில்லாத சமுதாயம் வேண்டி.சிலபல ஆதிக்க சக்திகளுக்கு உட்பட்டு நானும் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கிறேன்.

”அத்தே என்ன மிலிட்டரி தாத்தா உங்க காதுல ரத்தம் வர வச்சிட்டாரா?அப்பா கூப்பிடுறாங்க தப்பிச்சி ஓடிடுங்க” சிவா, அண்ணாவின் பத்து வயது மகன் திடுமெனப் புகுந்தான் எங்கள் அமைதிக்குள்.

“அடி படவா!” என்றபடி துரத்தலானார் சேது.

அண்ணியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு, அண்ணாவிடம் மெதுவாய் கேட்டேன்.
“சென்னையில எங்கண்ணா கிராமஃபோன் கிடைக்கும்? அந்த இசைத்தட்டுகளும் வேணுமே”

புரிந்தாற்போல் மெல்லச் சிரித்தவர், “ரொம்ப சுவராஸ்யமான மனிதர்.நான் நிறைய பேசுவேன் அவர்கூட.அண்ணி தான் பேசவே விடமாட்டா.பொறாமை எங்க நட்ப பார்த்து”

”ஆமா ஆமா மிலிட்டரி சரக்கு உள்ள தள்ளிக்கிட்டே ரொம்ப பேசுவாங்க ரெண்டு பேரும்”, நக்கலான குரல் கேட்டது உள்ளிருந்து.

பின்குறிப்பு:-

சேதுவின் புண்ணியத்தில், அன்றைக்கு என்கிட்ட மின்னாடலிலே மாட்டின தொலைதூர நண்பர்கள் எல்லாரையும் கொடுமைப்படுத்திட்டேன் இந்தப்பாட்டுப் பாடி. தப்பிச்ச மீதிப்பேருக்கு மின்னஞ்சலா போயிருக்கும்.இடுகைய படிக்கற எல்லா பாவப்பட்ட மக்களும் இந்த பாட்ட தவறாம கேக்கனுமின்னு அகில உலக
அடாவடி மகளீர் அணி சார்பா கேட்டுக்கறேனுங்கோ!

Saturday, October 9, 2010

கபடந்தரி


பெருமழை பீடித்த பிரளய பொழுதொன்றில்
கடல் நுழைந்தது மரக்கலமொன்று
சுழற்றும் காற்றின் சூழ்ச்சியின் வலுவில்
சிக்கியதாய்க் குறைபட்டார் மாலுமி
ஆருடம் பலிக்கும் என்றார் சோதிடர்
வீரர்களுண்டு வாட்களுண்டென்றார் படைவீரர்
கடவுளருள் நிச்சயமுண்டென்றார் போதகர்

நீர்மிக்கத் தடாகத்தின் உட்சுழி சக்கரமாய்
குழப்பத்தில் சுழன்றபடியிருந்தது மிதவை
புறவிசை ஆளுமை தட்டிய தட்டிற்கு
சமனற்ற போக்கில் ஆடிக்கொண்டிருந்ததது
உடைவது மனமா தடுமாறும் கலமா
வசதியாய் இடியிடித்து வாதமுரைத்தது மழை!

’நலமே விளையும் நம்புக’
சத்தமாய் உச்சரித்தபடி
செத்து விழுந்த பறவையொன்றின் இறகோடு
கர்ம சிரத்தையாய் தன் காதுகுடையலானார்
நன்மொழி போதகர்.

எல்லோரும் எல்லாம் வல்லவனை
புகழ்ந்து பாடியபடியிருக்க
கடமையுணர்ந்து
நீர்புகும் உடைப்பையெல்லாம்
போராடிச் சரிசெய்தான் மாலுமி.

தீவின் கரைதொட்டது கலம்
நிலமுலர்ந்த பொழுதொன்றில்
புதையலும் மெய்ப்பட
பெரிதாய் படையலிட்டனர்
போதகன் போற்றிய கடவுளுக்கு!

சிரித்தபடி நடந்தான்
கரை சேர்த்தவன்.

Friday, October 8, 2010

அறிவிலி


பற்றி எரிகையிலும் பூப்பூக்க
உன்னால் மட்டுமே முடியும்
'மத்தாப்பூ'!

சுற்றி எரிகையிலும்
உள்ளே,
பூகம்பம் வெடிக்கையிலும்
சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய்
பாசாங்கு செய்ய
என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து

எள்ளி ந‌கையாடும் எல்லோரையும்
ஏதேதோ க‌தைக்கிறாரென‌
செவிடு பாய்ச்சுவ‌து
எப்ப‌டி அக‌ந்தையாகும்?
புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌
உல‌க‌த்தில்....

பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌
குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து
கோரிக்கையோ கட்டளையோ
இல்லாத செல்லச் சிணுங்களில்
சிக்குண்டுச் சிரிப்பதை
ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா?

செய‌ற்கையாய் சிரித்துச் சிரித்து
க‌ண்ணில் நீர்வர மெய்யாய்
சிரித்த‌து எப்போது?
நினைவேயில்லை

வலி நிர‌ப்பி வடித்த
வார்த்தைச் சித்திர‌மெல்லாம்
அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில்
அதே காயாத‌ குருதி வாச‌னை
கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும்
தைக்க‌ப்படவேயில்லை

சுயமெனும் இருள்வெளி தாண்டி
புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌
வாய்ப்புகளெல்லாம் வாகாய்
வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌
விரும்பிய‌ திசை எதுவென
தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி....

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை
க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி
ஏனோ,
வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை
வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை

கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக‌!

ஒரு வருத்தமான நிகழ்வின் போது எழுதியது.அதுபோலுமின்று ஐம்பதாம் நிகழ்வு. வாங்க கொண்டாடலாம்.:))

Thursday, October 7, 2010

யாழ் நீ


சிறு மென்விரல் தொடுகை
சந்நாதமெழ பதறினள்
கடம்பவன தேனீக்கள்
தீண்டலென என்னுயிரும்...

திம்மென்று கனத்தது நெஞ்சம்
எத்தனை திங்கள் கழித்திருந்தாள்
சுரமொழி மௌனியாய்...

நாண்கள் ஒவ்வொன்றாய்
இழுத்து மீட்ட உருப்பெற்றது
சிதிலமான கலைப்பொருள்
நிமிடத்தில் இசைப்பொருளாய்...

உயிர்பெற்றவள் ஆன்மத்தீண்டல்
தேனமிர்தத் திரட்டலாய்
செவியிறங்கி இதயம்வரைக்கும்
நிரம்பி வழிந்தது நாதம்
பெருமழையாய்...

Tuesday, October 5, 2010

சீழ்க்கை

திருவாய் மலர்ந்து
மடக்கிய நாக்கில்
இருவிரல் அழுத்தி
பூவிதழ் அணைப்பில்
சிறைசெய்த காற்றை
விடுதலை செய்ய...

ஏதும் நிகழாத தடுமாற்றத்தில் நான்
ஏதாவது நிகழாதா என்றேங்கியபடி அவன்

எண்ணிலடங்கா தோல்விக்குப்பின்
நான் மொழிந்ததை அவன் நடத்த
அன்றேயென் பாலகுருவானான்

நான் பயின்றபடியேயிருக்க
வகுப்பில் என்னைப் போல்
இன்னும் சில மாணவிகள்!

Saturday, October 2, 2010

வாழ்க நீ எம்மான்முண்டாசு கவிஞன் பாரதியின் வரிகளில் மானுடருள் உயர்ந்து சிறந்த மகாத்மாவுக்கு என் வணக்கங்கள் சமர்ப்பணம்.


தேசிய கீதங்கள்

 வாழ்க நீ எம்மான்

மகாத்மா காந்தி பஞ்சகம் 


வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க! 1

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்,
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய், புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!2

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்,
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!

Thursday, September 30, 2010

எஸ்தரம்மா

“எவ்வளோ நேரம்டி?இத்தனை நேரம் என்ன பண்ணின? போன் கூட எடுக்காம?”

அம்மாவின் காட்டுக்கத்தலில் நியாயம் இருந்தது. 12 அழைப்புகள்.இருந்தாலும்,“தூங்கிட்டிருந்தேன். இப்போ என்ன? காலையில எட்டுமணிக்கு கூப்பிட்டா என்னவாம்? அதுக்கு முன்னால ஏன்மா கொல்லுறீங்க? அப்படி என்ன தலை போற விசயம்?”

”இல்ல..எஸ்தரம்மாக்கு... ஆஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு கொண்டாந்துட்டாங்க. உடம்பெல்லாம் விறைச்சிட்டு.சரிடாம்மா. நீ இங்க கொஞ்சம் கிளம்பி வர்றியா? பாவம் அந்த ரேகா பொண்ணு.யாரிட்டயும் பேசவே இல்லை.கஷ்டமா இருக்கு. வந்திரு என்ன?அப்பா உனக்கு சொல்ல வேணாமுன்னு தான் சொன்னார்.ஆனாலும்..வரப்பாரு.ஏன்னா எஸ்தரம்மாக்கு நீயும் ரேகாவும் வேற இல்ல எப்பவும்...”, அம்மாவின் விசும்பல் கேட்டது.

அழைப்பு துண்டிக்கப்பட்டும் காதிலே வைத்திருந்தேன் கைபேசியை. சில நிமிட இடைவேளைக்குப் பின் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.யாருமறியாமல் அழுவதே நிசமான ஆறுதலும் ஆசுவாசமும்.மொட்டைமாடிக் கைபிடிச்சுவரில் சாய்ந்தபடி கண்ணீர் சிந்துவது இறுக்கமான அந்த சூழ்நிலைக்கு தேவையானதாக இருந்தது.அடுத்த அரைமணியில்,அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு கோயம்பேடு நோக்கி பறந்திருந்தேன். ஏதேதோ சிந்தனைகள் மேவ,அலைபேசி சிணுங்கியது.புவனா,அலுவலகத் தோழி.

“யாருக்குடி உடம்பு சரியில்ல. உன் டீம் மேட் சொன்னான் திங்கட்கிழமை தான் வருவியாமே.உனக்கு சொந்தக்காரங்கன்னாவே பிடிக்காதே. இப்ப மட்டும்?ஹேய்.. தூங்குறதானே ஹாஸ்டல்ல”

“என் எஸ்தரம்மாவுக்குடி.என்னாச்சுன்னு தெரியல”

வார்த்தையின் அழுத்தம் ஏதோ உணர்த்தியிருக்க வேண்டும்.

“சாரிப்பா! பார்த்து போயிட்டு வா!பத்திரம்”

அணைக்கப்பட்டது அலைபேசி.விட்ட இடத்திலிருந்து கிளம்பத் தொடங்கியிருந்தன நினைவுகள்.


*******************பகல்நேரப் பயணங்கள் எப்போதும் நீண்டிருப்பதாய் தோணும். உறக்கமும் வராமல்,இருப்பும் கொள்ளாமல் கொஞ்சம் அசவுகரியத்தை தருவதாயும், இப்போது இதெல்லாம் உணரும் மனநிலை இல்லை .எஸ்தரம்மா...எஸ்தரம்மா... நெஞ்சம் முழுக்க நிறைந்து நிற்கும் அன்பு தேவதை. பேரூந்து நகர நகர எஸ்தரம்மா குறித்த நினைவுகள்.எப்போது முதலில் பார்த்தேன் என்பதில் தொடங்கி கலவையாக ஏதேதோ!


”காலையில என் பெரிய பையனுக்கு பிறந்த நாள்.ஒரு பத்து பதினஞ்சு பேருக்கு சமைக்கணும்.என்னென்ன செய்யலாம் சொல்லுங்களேன். நீங்க செய்யுற கேக்கு தான் வேணுமாம் அடம்புடிக்கிறான்”

“நாளைக்கு மார்கழி 1. இரங்கோலி போடனும். ஒரு நல்ல ஐடியா குடுங்களேன்.”

“இவளுக்கு பட்டுப்பாவடை சட்டை தைக்கணும். இந்த மாடல் சரியா சொல்லுங்களேன்.”

“ஒரு ஆர்.டி தொடங்கணும். பேங்க் வரைக்கும் வர்றீங்களா எஸ்தரம்மா?”

“அப்பாவுக்கு உடம்புக்கு முடியலயாம் அவசரமா கிளம்புறேன்.பாத்துக்கோங்க.அவர் வர ராத்திரியாகும்.அதுவரைக்கும் பசி தாங்காதுங்க. பாத்துக்கோங்க”
இப்படி அம்மாவின் நம்பிக்கைக்குரிய தோழி. என் தோழிகளின் அம்மா.என் ஆங்கில குரு.பியானோவின் மீது என் காதலுக்கு வித்திட்ட முதல் தேவதை.சேக்ஸ்பியரும் ஆங்கில இலக்கியமும் அத்தனை எளிமையாய் எனக்கு இதுவரை யாரும் சொன்னதில்லை.எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பக்கத்து வீட்டு கதாபாத்திரம்.இதோ இன்றோ நாளையோ... என்னுடன் இனி நினைவுகளாய் மட்டும். தொண்டையடைத்தது.
இருபத்தியிரண்டு வருடங்கள். அவள் வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் கண்ணார கண்டு சந்தோஷித்து,விமர்சித்து,சண்டையிட்டு,துக்கம் கொண்டு என எல்லா கோணத்திலும் அவளுக்கும் எனக்கும் ரேகாவுக்கும் இடையேயான பிணைப்பு இறுகியபடியே வந்திருக்கிறது.


**************************”நவம்பர் வருதுப்பா. உன் லைஃப்ல நான் வந்ததும் வர்ற முதல் பிறந்தநாள். என்ன வேணும் என் கண்மணிக்கு?” நிச்சயிக்கப்பட்டவன் காதலாய் கேட்கும் போதும்...


“எதுனாலும் என் எஸ்தரம்மா தந்ததை விட பெஸ்டா இருக்காதுங்க. அவளோ கலாரசனை உள்ளவங்க. பத்தாங் கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததுக்கு அவங்க எனக்கு ஒரு வளையல் வாங்கித்தந்தாங்க.முத்து வச்சது.இன்னும் அப்படியே வச்சிருக்கேன் தெரியுமா?”

“முத்துன்னா அவ்ளோ பிடிக்குமா?”

“இல்ல எஸ்தரம்மான்னா அவளோ பிடிக்கும்”

“உன்னெல்லாம் கட்டிக்கிட்டு.... உனக்கு என்ன பிடிக்குமின்னு கேட்டா? ஏன்பா நீ இப்படியிருக்க..” கோபத்தில் அழைப்பைக் கத்தரித்தான்.

மறுநாள் அவளைப் பற்றி அழுதபடி சொன்னதும் உருகிப் போனவன் “நான் ஒரு தடவை பேசனுமே” என்றான்.

”இப்பவா? ... அவங்களுக்கு புரியுமா தெரியலையே”

”உங்க ஆண்டாளு மாதிரி தான் நானும் நோன்பிருந்து அத்தானை கட்டிக்கிட்டேனாக்கும். என்பதுகள்லயே புரட்சி திருமணம் எங்களது. யாரெல்லாம் வந்தா தெரியுமா? உங்கல்யாணத்துக்கு பாருடீ. எஸ்தரம்மா என்னவெல்லாம் டெகரேட் செய்யுறேன்னு?”  மடியிலிருக்கும் என்னை கொஞ்சியபடி சொல்வாள். “அப்போ எனக்கு” என ரேகா கொஞ்சுவதும் சிண்டரெல்லா கதைகளில் வரும் திருமணங்களை போல நடத்துவேனாக்கும் என்று அவளை கற்பனைக்கு தள்ளிவிட்டு நமட்டு சிரிப்பு சிரிப்பாள்.
எஸ்தரம்மா! தெரியுமா? எனக்கு திருமணம்.அலங்கரிக்கவோ,அந்தரங்கம் சொல்லித்தரவோ நீங்கள் இருக்கப்போறதில்ல.என்னென்ன கனவுகள் இருந்தது உங்களுக்கு என் குறித்தும் ரேகா குறித்தும். ரேகா எப்படி ஆறுதல் சொல்வேன் உனக்கு? அழுதுவிடு. மனம்விட்டு அழுதுவிடு.
விம்மலாய் எழுந்த துக்கம் கண்ணீராய் ஓடிக் கொண்டிருந்தது.

”என்னக்கா ஆச்சு?” பக்கத்திலிருந்த சிறுமி கேக்கவும் “ஒன்னுமில்லடா” என்றவாறு கண்ணைத் துடைத்துக் கொண்டேன்.எதிரெதிரான மனநிலையுடன் அவள் வேறு கேள்வி கேட்டு அடிக்கடி இம்சித்துக் கொண்டிருந்தாள் என் கண்ணீரை தடுக்கும் பொருட்டு.ஆனால் அதை ரசித்து ஏற்கும் மனநிலையில் நான் இல்லை இன்று.

****************

“அட கண்ணம்மா! இன்னிக்குத் தான் வந்தியா?இளைச்சிட்டாள்ல?” அம்மா ஏதோ போகட்டும் என “ஆமாம்மா” சொல்லி வைப்பாள்.நான் மட்டும் ஓடிப் போய் சினேகமாய் அவளைக் கட்டிக் கொள்வேன்.எஸ்தரம்மா ரொம்ப அழகு.முகம் அத்தனை சாந்தம்.அதன் வசீகரமோ என்னவோ யாருக்கும் அவரென்றென்றால் சட்டென ஒட்டிக் கொள்ளச் சொல்லும். பெருந்தன்மையான சுபாவம் என்பதாலே அக்கம்பக்கத்து பெண்களிடத்தில் நல்ல பெயர் அவளுக்கு.மெத்மெத்தென்ற அவள் மடியில் படுத்ததும் தூங்கிப் போவேனாம்.எனக்கு மூத்த பொண்ணுடீ நீ எனச் சொல்லிச் சிரிப்பாள்.நான் பழிப்புக்காட்ட ரேகா அழுவது வேடிக்கையாயிருக்கும்.


ரேகா,ஜூலி என எஸ்தரம்மாவுக்கு இரண்டு பெண்கள்.ரேகாவின் அப்பா வெளியூரில் தங்கி இரும்பு சம்பந்தமான ஏதோ தொழிற்சாலை நடத்துவதாய் கேள்வி. ஆரம்ப காலங்களில் எல்லா கடைசி ஞாயிற்று கிழமைகளிலும் எஸ்தரம்மா வீடு களை கட்டும். கேக், பிரியாணி, வித விதமான வெளிநாட்டு சாக்லேட்டுகள் என எங்கள் வீட்டில் உள்ள வாலுகளுக்கும் அங்கே தான் வாசம்.அன்னிக்கு தான் ரேகாவோட அப்பாவ பாக்க முடியும். ரேகாவும் ஜூலியும் அவரிடம் அத்தனை ஒட்டுதலாய் இருப்பது பார்க்க நன்றாக இருக்கும். சர்ச்சுக்கு குடும்பம் சகிதமாக எஸ்தரம்மா கிளம்பிப் போகையில் அவரின் நடை உடை பாவனை என எல்லாவற்றிலும் ஒரு மிடுக்கு. இத்தனை அழகா இவள்? விழிகள் விரிய ரசித்துக் கொண்டிருப்பேன்.ரேகா என்னை விட இரண்டு வயது சின்னவள். ஆனால் நிறைய பெரிய மனுசித்தனம் தெரியும்.என் வாய்த்துடுக்கும் வாலுத்தனமும் இவளின் பொறுப்புணர்ச்சிக்கு முன்னால் அம்பேல்.

எஸ்தரம்மா எங்கள் ஊரிலேயே ரொம்ப வசதியான வீட்டில் பிறந்தவர். ஒரே ஒரு தம்பி மட்டும்.ஆனால் பணத்திமிரோ முதுகலை ஆங்கிலம் படித்த திமிரோ எதுவுமே இருக்காது. எஸ்தரம்மாவுக்கு தன் கணவன் தான் எல்லாமும்.அவர் சொல் தான் வேதம்.இருவரும் வெவ்வேறு மதம். காதல் திருமணம் என்பதால் தம்பதிகளுக்குள்ளே அத்தனை நெருக்கம்.அம்மாவிடம் பேசும்போதெல்லாம் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் ”ரேகாப்பா” என்று தன் கணவனை சேர்த்துக் கொள்வாள். பிரிஞ்சிருந்தா தான் பாசம் இருக்கும் போல ’எஸ்தரம்மாவ பாரு’ அம்மா ஒருமுறை சலிப்பாய் அங்கலாய்த்தது நினைவிருக்கிறது.எஸ்தரம்மாவின் அப்பா இறப்புக்குப் பின் கிடைத்த பெரும் பங்கு பணத்தில் தான் ரேகா அப்பாவின் தொழில் நடந்து கொண்டிருந்தது.அதிலேற்ப்பட்ட பிரச்சினைக்குப் பின் அவள் அம்மாவுடனோ தம்பியுடனோ பேசுவதோ பழகுவதோ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிற்று.காரணம் தன் அப்பா தான் என்று ஒருமுறை ரேகா சொன்னதாய் ஞாபகம்.

********************************

ஒரு அரையாண்டு தேர்வு விடுமுறை.என் வீட்டு முகப்பில்,ரேகாவும் நானும் ஏதோ ஒரு கணக்கை விடுவிப்பதில் மும்முரமாயிருந்தோம். ஜூலி திடுதிடுவென எங்களை கடந்து ஓடினாள்.


“மல்லிகாம்மா! எங்கம்மாக்கு ஏதோ பண்ணுது.ஒரு மாதிரி பாக்குறாங்க.பல்லை கடிக்கறாங்க. வாங்களேன்” அழுகையும் பயமுமாக அவள் சொல்லவும், அதே பயமும் பதட்டமும் எங்களுக்கும் பற்றிக் கொண்டது.

இடையே ஒரே ஒரு சுவர் தான். நிறைய கலைப்பொருட்களுடன் விஸ்தாரமாய் இருக்கும் ரேகாவின் வீடு.தட தடவென தெருவில் இறங்கி வீட்டுக்குள் செல்லவும் அங்கே நான் கண்ட காட்சி இப்போதும் நினைவில் மங்காமல்...பற்களை கடித்துக் கொண்டு,உதடுகளில் ரத்தம் வடியும் பிரஞ்ஞை கூட இல்லாமல், கலைந்த கேசமும் நழுவ விட்ட மாராப்புமான ஏதோ ஒரு சூனியவெளியில் சஞ்சரிப்பவள் போல. கண்களில் மட்டும் அத்தனை குரோதம்.

நாங்கள் மூவரும் பலதடவை கூப்பிட்டும் எந்த அசைவும் இல்லை.ஏதோ வெறி கொண்டவளாக திடீரென எழுந்தவள் எதிரிலிருப்பதை எல்லாம் உடைக்கத் தொடங்கினாள்.அம்மாவும் வீட்டு வேலைக்காரம்மாவும் தடுத்தும் முடியவில்லை. எஸ்தரம்மாவின் கோவத்தில் அந்த வீடு சிலமணி நேரத்தில் சின்னாபின்னமானது.
அம்மா அறிவாளியாக செயல்படத் தொடங்கினாள். எங்களை எல்லாம் வெளித்தள்ளிவிட்டு, உள்ளே போனவள்.“எஸ்தரம்மா! உங்க வீட்டுக்காரரு போன்ல. பேசுங்க வாங்க. சேகரண்ணா இருங்க இருங்க வராங்க” எனவும் சட்டென திரும்பியவள் ”அவரா? போன்ல அவரா?” என வாயில் ரத்தம் சொட்டுவது கூட தெரியாமல் போனை எடுத்து பேசத்தொடங்கினாள் மிகவும் கொச்சை கொச்சையாக.அத்தான் அத்தான் என்று உருகிப்போகிறவள், ஒவ்வொரு பிடிச்சோறும் அவனுக்காக,அலங்காரங்கள் அவனுக்காக எனச்சொல்லிச் சொல்லி மாய்பவள். அத்தனை கடுமையாக வெறிபிடித்தவளாக கத்திக் கொண்டிருந்தாள் சித்தமிழந்து.

அவளை உள்ளே தள்ளி கதவை தாளிட்டு விட்டு, மின்சாரத்தையும் நிறுத்தி விட்டு நிமிர்ந்த அம்மாவின் முகத்தில் ஏதேதோ கேள்விகள்.நேத்து காலையில் எஸ்தரம்மா முகத்தில் இருந்த தெளிவு அவள் கணவன் வந்து போனபின் இல்லையே.என்னாயிற்று? அவரா காரணம்? இதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்த ரேகா மெதுவாய் ”அம்மாக்கு என்ன மல்லிகாம்மா” எனக் கேட்க அவளைக் கட்டிக்கொண்டு அம்மாவும் அழத்தொடங்கினாள்.ரேகாவின் அப்பாவான சேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்த சிலமணி நேரங்களில் நடந்த கொடுமைகள் சொல்லி மாளாது.

”உனக்கு என்ன தரல ஏன் என்ன நாசம் பண்ணிட்டே! வேணாம் அத்தான் போகாதே ப்ளீஸ். அவளைப்பாரு என்ன பண்ணுறேன்னு. தப்பு தப்பு. அவ அங்கயே இருக்கட்டும். நான் ஒண்ணும் சொல்லல நீங்க போகாதீங்க.போனா...அய்யய்யோ தெரியாம அடிச்சிட்டேன்.. கொல்லாதீங்க. என் கண்ணில்ல. என் ஆச அத்தானில்ல”

அவரை சராமாரியாக தாக்குவதும், தடாலென காலில் விழுந்து கெஞ்சுவதுமாக இருந்த எஸ்தரம்மா இன்னும் என் கண்ணில் பரிதாபகரமாக அப்படியே. மனநிலை சரியில்லாத குழந்தை அது. அதைக் கூட புரிந்து கொள்ளாமல் அவளது தாக்குதலுக்கு பதிலாய் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டால் விளாசித்தள்ளினார் சேகரன். கூட வந்த ஆட்களைக் கொண்டு கைகளைக் கட்டியும் நீளமான முடியை கட்டிலோடு இணைத்தும் திமுறும் அவளை மோசமாக அர்ச்சித்த வண்ணம்,
“பைத்தியக்காரி! பைத்தியக்காரி! இவள என் தலையில கட்டி வச்சு என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டான் அந்தாளு.” ஆத்திரமும் கோவமுமாய் கத்திக் கொண்டிருந்தார்.காதலித்து கைபிடித்த மனைவி, அவரது தவறான நடத்தையின் பேரில் மனநிலை சிதறியதும், இரண்டு பெண்பிள்ளைகள் அநாதரவாய் இருப்பதும் மறந்து 45 வயதில் வாழ்க்கையை இழந்ததாய் உறுமிக் கொண்டிருந்தது அந்த கிழட்டுச் அசிங்கம். ஒரு நிமிடத்தில் எஸ்தரம்மா பிறப்பிலேயே சித்தசுவாதீனம் இல்லாதவள் போல சித்தரிக்கப்பட்டாள். பெண்மோகம் ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.


அடுத்த அரைமணியில் உடற்காயங்களினாலான கதறலா இல்லை உள்ளத்து கதறலா எனத்தெரியாதபடிக்கு மிகக் கொடூரமாய் கத்தியபடி மனநிலை மருத்துவமனை வண்டியொன்றில் ஏற்றப்பட்டுவிட்டிருந்தாள். ’அம்மா அம்மா’ எனக் கத்தியபடி ரேகாவும் ஜூலியும் என் அம்மாவின் பிடிக்குள்.
”பைத்தியத்தைக் கட்டிக்கிட்டு இவன் என்ன பண்ணுவான்? பாவம் சேகரன்” உச்சுக் கொட்டியபடி கலைந்தது கூட்டம்.


“பாத்துக்கோங்க இதுங்கள!” மேலோட்டமாய் சொல்லி விட்டுப் போனார். என் வீட்டில் நால்வரோடும் ஜூலியும் ரேகாவும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சகஜத்துக்கு கொண்டு வர பெரும் பாடானது. இரண்டு நாட்களில் சிங்கப்பூரிலிருந்து ரேகாவின் மாமாவும் மாமியும் வர குழந்தைகள் அவர்களுடன் அனுப்பவேண்டாம் என்ற சேகரனின் கட்டளை அவர் காரியதரிசியின் மூலமாகவே தெரிவிக்கப்பட்டது.

“எல்லாமே குடுத்துட்டமே! என்ன வேணும் அவனுக்கு.அந்தப் பொம்பள சகவாசம் தான் வேணுமின்னா போகட்டும்.எம்பொண்ண உசிரோட குடுத்துற சொல்லுங்கப்பா” அம்முச்சியின் கதறல், இது இன்றைய பிரச்சனையல்ல நெடுநாளாய் எஸ்தரம்மா மனதுக்குள்ளிருந்த அழுத்தமென்று புரியவந்தது. உள்ளே அழுது கொண்டும் வெளியே சிரித்துக் கொண்டும் அவள் பட்டிருக்கும் பாடு ரேகாவுக்கு மட்டுமல்ல எனக்கும் பேரதிர்ச்சி. ஏனெனில் அவள் முகத்தில் அப்படி எந்த தடயமும் இருந்ததே இல்லை.


நாற்பது நாள் சிகிச்சைக்குப்பின் எஸ்தரம்மா அவரது அம்மா வீட்டுக்கு கொண்டுவரப்பட்டாள். சங்கிலியால் பிணையப்பட்டும் மாத்திரைகளின் ஊட்டம் தந்த மயக்கமுமாக இருந்தவளை பார்த்தபோது நான் ரேகாவை கட்டிக் கொண்டு அழுதேன். பதிலுக்கு ரேகாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

“அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கார்டி. அந்தப் பெண்ணை சட்டப்பூர்வமான மனைவியாக்குவதாய் சொன்னதும் தான் அம்மாவுக்கு இத்தனை பிரச்சனையும். அஞ்சு வருசமா பொறுத்திட்டு இருந்திருக்கா.எல்லாம் எங்களுக்காக.அவர் தினமும் சித்திரவதை பண்ணியிருக்கார். இனிமே இங்க வரமாட்டேனுட்டாராம்.அவர திருத்திட முடியும்கிற இவ நம்பிக்கை பொய்யா போனதும் என் அம்மா இப்படி உருக்குலைஞ்சு....” கரகரப்பான குரலுடன் விளக்கத் தொடங்கினாள்.ஒரு பதினைந்து வயதுப் பெண் இப்படி பற்றற்று பேசுவது சகிக்க முடியாததாயிருந்தது.

அம்மாவாசை,பௌர்ணமி தினங்களில் எஸ்தரம்மா தன்னைத்தானே சித்திரவதை பண்ணிக் கொள்ளுவதும், இரவில் வெறிப்பிடித்த மாதிரி ஓடுவதும்,துணிகளை களைந்து விட்டு சேகரனை சத்தமாய் வசைபாடுவதும்,விடிய விடிய அவருடன் பேசுவதாய் தனிமையில் பேசி ஓய்வதும்  என அவளது மூளைக்கோளாறு வளர்ந்த வண்ணம் இருந்தது. தம்பி மனைவியின் அலட்சியப் போக்கும், எஸ்தரம்மா அவள் வாழ்வதை பார்த்து கொந்தளிப்பதாக கட்டி விட்ட புரளியும் ரேகா,ஜூலி,அம்முச்சி,எஸ்தரம்மா என நால்வர் மட்டும் பழையபடி என் பக்கத்து வீட்டுக்கே குடிவரக் காரணமாயிற்று.

அம்முச்சி இரண்டு வேலையாட்களை அமர்த்திக் கொண்டார். எஸ்தரம்மாவுக்கு ராஜ வைத்தியம் பார்த்தார். பணத்துக்கு குறைவில்லை. பேத்திகளை நன்றாக படிக்க வைத்தார். எஸ்தரம்மாவுக்கு கவுன்சிலிங் கூட்டி போனார். படிப்படியாக அவளின் இறுக்கம் குறைந்து, எப்பவுமே என்பது மறைந்து எப்போதாவது,அது கூட வீட்டை விட்டு ஓடும் அளவிற்கு இல்லை என்கிற அளவுக்கு எஸ்தரம்மா நிலை தேறியிருந்தது.ரேகாவின் மாமாவும் உதவியாக இருந்தார்.

அழகாக உடையணிவது,பியானோ வாசிப்பது,அக்கம்பக்கத்தில் பேசுவது என மிகச்சாதாரணமாக மாறத்தொடங்கியிருந்தாள். எம்பிராய்டரி செயவதில் தொடங்கி ஆயில் பெயிண்டிங்,கிளாஸ் பெயிண்டிங்,கிராப்ட் வொர்க் என அவள் உலகம் ரசனையானது. உர்ரென்று இருப்பதாகவோ,முறைப்பதாகவோ தோன்றினால் ஜூலி,வேலம்மா இருவரும் சேர்ந்து பேசிப்பேசி அறைக்குள் அடைத்து விடுவர். மாதத்தில் 10 -15 நாட்கள் அவளுக்கு சித்திரவதையாகப் போகும்.
யாருக்கும் தொந்தரவில்லை ஆனால் அவள் அனுபவிக்கும் சித்திரவதை பார்ப்பவர் கண்ணுக்கு கொடுமையான தண்டனை.
அப்படியான ஒரு பொழுதில் அவளை நான் பார்க்க நேர்ந்த போது ....
“வேணாம்டி. நான் அசிங்கம். எஸ்தரம்மாவ பாக்காத..போயிரு..போ” எனக் கத்தியபடி கதவுக்குப்பின் ஒடுங்கிப்போனாள்.

*****************************

அட திருச்சி வந்திருச்சா?


இன்னும் இரண்டு மணிநேரத்தில்... எப்படி எதிர்கொள்வேன் ரேகாவை?இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை எல்லாமும் சரியாகத்தானே இருந்தது.என்னிடம் மறைத்துவிட்டாளா?
”உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி நீலக்கறை வச்ச வெண்பட்டு எடுக்கணுமின்னு சொன்னாங்கடி அம்மா.மாதா திருநாளுக்கு வந்திடு. மாமா நெறைய ப்ளான் வச்சிருக்கார்” ரேகாவின் குரலில் எந்த பாதிப்பும் இல்லையே. ஒருவேளை அவளுக்கும் தெரிந்திருக்கவில்லையோ? பத்து வருடமாக தன் தாய்க்கு தாயாகிப் போன பக்குவமும் முதிர்ச்சியும் அவளை நன்றாக வைரமாக்கியிருந்தது. அவளுக்குள் இருக்கும் ஏக்கமும்  மென்மையும் கர்த்தர் தவிர்த்து எனக்கு மட்டும் வெளிச்சம்.

”அம்மா படுற வேதனையெல்லாம் பாக்குறப்போ அவ சாகுறதே மேல்ன்னு தோணும்டீ. ஆனா எனக்கும் ஜூலிக்கும் அம்மான்னு கணக்குக்கு இருந்தாவே போதும். மாமா கேட்டார் போன மாதம். ரொம்ப சித்திரவதை பண்ணிக்கிறா. சகிக்கல. பேசமா ஊசி போட சொல்லியிருவமான்னு. எஸ்தரம்மா எப்படி இருந்தவங்கடி? அவள கொன்னுடுவமான்னு என்கிட்டயே கேக்குறாங்கடீ. மாதாவே என்ன கொடுமை இது?” மடியில் விழுந்தவளை சமாதானப்படுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.

நானும் அவரும் எப்படி லவ் பண்ணினோம் தெரியுமா? இப்படித் தான் பைக்ல போவோம். அந்த பிங்க் கலர் ஸாரி தான் அவர் எனக்கு மொத மொதலா வாங்கித்தந்தார்.அத்தானுக்கு மல்லிப்பூன்னா ரொம்ப பிடிக்கும். இப்படி சேகரனை பத்தி பேசும் போது கனவில் சஞ்சரித்தபடி கிறக்கமாய் சொல்வதில் அவள் காதல் தளும்பி வழியும்.  ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே படபடவென அவள் வாயில் அடித்துவிட்டு “அவனால தான் நீ இப்படி இருக்கிற இன்னும் ஏன்?” என்றவாறு ஜூலி அவளை கட்டியழுதது நினைவிருக்கு.

************************

ஊரு வந்ததும் வீடு வந்ததும் தெரியவேயில்லை.அனிச்சையாக கால்கள் எஸ்தரம்மாவை நோக்கி நடந்தன.அந்த பெரிய வீட்டில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. யாரும் அழவேயில்லை. முகம் தவிர உடல் முழுதும் மூடப்பட்டு மூட்டையாக இருந்தது. கூட்டமும் அதிகமில்லை.அவரவர் ஏதோ காரியமாக போவதும் வருவதும். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய படத்தில் பட்டதாரி எஸ்தரம்மா கர்வமாய் சிரித்துக்கொண்டிருந்தாள்.சிந்தும் கண்ணீரோடு என் கண்கள் ரேகாவை தேடின. பியானோ இருந்த மூலையில் உத்திரத்தை வெறித்தபடி இருந்தவளிடம்
“ரேகா!” என்று தோள் தொட்டேன்.

நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் ஜீவனேயில்லை.களைப்பாய் பேசினாள். உள்ளுக்குள்ளே குமைந்து கொண்டிருந்தாள் போல. ஏதேதோ யோசனைகள். எஸ்தரம்மா கடைசி நேரங்களில் அதிகமாய் கஷ்டப்பட்டிருப்பாளோ? ரேகாவிடமிருந்து தட்டுத் தடுமாறி வந்த வார்த்தைகள்  பெருங்கதறலில் முடிந்தது. 


“சாகுறப்போ கூட அம்மாக்கு நானெல்லாம் நினைவேயில்லடீ! அத்தான்

அத்தான்னு தான் உயிர் போச்சு. அவ்வளோ பாசம்டி அந்தாளு மேல.இவளுக்குப் போய் துரோகம் பண்ணிட்டானேடீ!அவந்தான் இவளுக்கு மருந்துன்னே தெரியாம அம்மாவ சாகக் குடுதுட்டேனடி.அவன் கையில காலுல விழுந்தாவது....இவ வேணாமுன்னு போனவன் தானேடீ.ஏண்டீ இவளோ பாசம்?
அய்யோ! உன் எஸ்தரம்மா இனிமே வரவே மாட்டாங்க.. வரவே மாட்டாங்கடீ...” கட்டிக் கொண்டழுதவளுக்கு எப்படி ஆறுதல் சொல்ல?


முற்றத்தில் முன் எப்போதும் இல்லாத அமைதியுடன் எஸ்தரம்மா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள் அதே வசீகர புன்னகையுடன்.


************************

Tuesday, September 28, 2010

அன்றாடக்காட்சி


வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தான்
வீசியெறிந்தச் செறுப்பின் வேகத்தில்
பாதிப் புரிந்திருக்கும் அவளுக்கு!
உள்ளக் கொதிப்பை
உதட்டுக்குள் ஒழித்து
தலைகவிழ்ந்தாள்
கறிகாயோடு கைவேலையும்
தொடரலானாள்

போக்குவரத்து நெரிசல்
வெகுஜனக் கோவம்
மேலாளர் வசவு
மாதக்கடைசி
அம்மாவின் ஆஸ்துமா
பிள்ளையின் பள்ளிக்கட்டணம்
வெளியேறத் தருணம் பார்த்து
குமுறிக் கொண்டிருந்தது
இயலாமை இல்லாமை
இரண்டும் சேர்ந்து
எரிமலையாய் அவனுள்!

பென்சில் கேட்டு
அழுத மகனின் முதுகில்
இடியென இறங்கியபின்
ஆரம்பித்தது கச்சேரி!

எப்போதோ வார்த்தையில்
கூடிய சுருதி -அவள்
செவி நிறைந்ததில்
சிந்திய இருதுளிக் கண்ணீரோடு
முற்றுப்பெற்றன அத்தனை
அபஸ்வரங்களும்!

ஆவேசம் ஆத்திரம்
அத்தனைக்கும் காரணம்
தெரியுமவளுக்கு!
இங்கேனும் ஜம்பம் பலித்தது
கொட்டிவிட்டுப் போ
என்பதானப் பாவனையில்
அவன் நாடகம் நித்தமும்..

“பசியாயிருப்பீங்க!
தோசை வார்க்கறேன்
வாங்க சாப்பிடலாம்!”
கனத்த மௌனமும்
மகனின் விசும்பலும்
நின்றுபோயின
சகஜமானது வீடு

அவளுக்குள்ளும்
ஆயிரெத்தெட்டுத் தலைவலி
அதற்குள்
அலுவலகமும் அடக்கம்
பெருமூச்செறிந்தபடி
பாத்திரங்களைத் துலக்க
துவங்கியிருந்தாள் அமைதியாக!


Saturday, September 25, 2010

பட்டியல்


”அப்பா அந்த மிட்டாய்
வாங்கித்தாங்கப்பா”
ஆசையாய் கேட்டான் மகன்

”பல்லு சொத்தையாயிரும்
பூச்சிப்பல் வந்துரும்
அதுக்குப் பதிலா ...”
வெறும் சட்டைப்பையை
தடவியவாறே...
”இல்ல...
வீட்டுக்குப் போய்
சாப்பிட்டுக்கலாம் வா”

ஏமாற்றமாய் நிமிர்ந்தவன்
”காசு வந்ததும் வாங்கித்தாங்கப்பா
பரவால்ல”
என்றான்

இப்போது அந்த மிட்டாயும்
இடம்பிடித்து விட்டது
சம்பளம் வந்ததும் நிறைவேறும்
திட்டங்களின் பட்டியலில்...

Friday, September 24, 2010

குருவிக்கூடு

”அம்மு!விடிஞ்சு இம்புட்டு நேரமாகியும் இன்னுமா தூங்குற? எழுந்து பல்ல வெளக்கிட்டு வா! சுக்குத் தண்ணி இருக்கு குவளையில! எதமா இருக்கும் தொண்டைக்கு..எந்திரி!எந்திரி!”
நேத்து இருமினதுக்கு இன்னிக்கு தண்டனை.அனுமதிக்கு கூட காத்திராமல் போர்வையை என்னிலிருந்து பிரித்து கவனமாய் மடிக்கத் துவங்கும் அப்பத்தா,என் விடிகாலைத் தூக்கத்தைக் கெடுக்கும் வில்லி. மனதுக்குள் அவளுக்கு ஆயிரமுறை அர்ச்சனை செய்தவாறே திருப்பள்ளி எழுவது எல்லா மழைக்கால விடுமுறையிலும் எனக்கு வழக்கம். இல்லை பதிலுக்கு முரண்டு பிடித்து படுக்கலாம் என்றால் வீட்டில் எல்லோரிடமும் நான் அர்ச்சனை வாங்கும் பரிதாபம் வாய்க்கக்கூடும்.

பல்துலக்கியபடியே சன்னல் வரை நகர்ந்து பக்கவாட்டில் நீண்டு எட்டிப்பார்க்கும் மாமரத்தை நோட்டமிடுவது வழக்கம்.பழம் ஏதாவது இருக்கா, அணில் கொறித்திருக்கிறதா, தரையில் விழுந்து கிடைக்கிறதா என்பது போலும் புள்ளிவிவரக் கணக்குகள் அந்த சில நிமிடங்களில் ஞாபகத்திரையில் பதியப்படும். பொறுப்பா இருக்கறதா காட்டிக்க வேண்டிய சந்தர்பங்கள் இருக்குமென்பதால் இது போலும் சிலவை அவசியம்.இத்தனை மேதாவித்தனமும் முடிகையில் சுக்குத்தண்ணி பச்சைத் தண்ணியாகியிருக்கும்.

‘படிக்கிற புள்ள வேலையேதும் சொல்லிப்புடாதீக. பரீட்சை இருக்காம் அதுக்கு.போத்தா மேவூட்டுக்கு போயி படி’, இப்படி யாராவது சொல்லி என்னை கெளரவிப்பது வழக்கம்.மத்தியான நேரங்களில் படிப்பதாய் பேர் பண்ணிக் கொண்டு மாடியறைக்கு வருவதும் சத்தமாய் வானொலியை அதிரவிட்டு என் கடமையுணர்ச்சியின் ஸ்திரத்தை ஊருக்கு உணர்த்துவதுமாய் போகும்.இன்னிக்கு ஏனோ மாமரத்து கிளைகளில் ஏதோ பரபரப்பு.இரண்டு குருவிகள் வலுவானதொரு கிளையின் பிடிப்பில் தன் கூட்டைக் கட்ட ஆரம்பித்திருந்தது.ஏறத்தாழ முடிந்திருந்த கூட்டின் கட்டமைப்பில் இன்னும் ஏதோ சில புற்களை தன் அலகால் அழகாய் மேலும் கீழும் நெய்ய ஆரம்பித்தது. அதன் சாமர்த்தியத்தில் லயித்துப் போய் மெய்மறந்திருந்த வேளை சட சடவென பெய்தமழை துவைத்துப் போட்ட துணி,காய வைத்த வற்றல்,கோதுமை என எல்லாமும் மறக்கடித்திருந்தன குருவியையும் அதன் உழைப்பையும்.

பந்திக்கட்டை கடக்கும் போது ஈரச்சாக்குப் போட்டு மறைத்திருந்த விதைநெல் வினோத மணத்தைப் பரப்பியது.முற்றம் முழுவதும் மழை நீர் சிந்தியபடி இருக்க, முகப்பு திண்ணையில் மணல் பரப்பி அதில் அடுப்பேற்றி வேர்கடலை வறுக்கவும் வறக்காப்பி போடவும் அப்பத்தா கடை அழகாய் அரங்கேறியிருந்தது.அதோ மூலையில் சாய்க்கப்பட்டிருக்கிற பனை ஓலையில் சாயமிட்டு பதனமாய் காய வைத்து உட்காரும் தடுக்கு,ஓலைப்பெட்டி,படுக்கிற பாய் என அழகான வடிவம் கொண்ட கலைப்பொருட்களாய் செய்வது அப்பத்தாவின் அன்றாட பொழுது போக்கு. சோம வாரங்களில் பூசைக்கு அரிசி,வெல்லம்,பருப்பு,தேங்காய் என ஒவ்வொன்றுக்கும் ஒரு புது ஓலைப்பெட்டி தவிர சீர் அனுப்ப, மற்ற காரியங்களுக்கு என எல்லாத்துக்கும் அப்பத்தா பின்னும் இந்த ஓலைப்பெட்டிகள் தான்.அம்மாவின் அதிரடி மாற்றங்களால் சாப்பாட்டு மேசையே பிரதானமாய் போனாலும் அப்பத்தாவின் உபசரிப்பு இந்த ஓலைப்பாய் நாகரிகத்திலே ஆரம்பிக்கும். அம்மாவோ சித்தியோ இவற்றை பாவிப்பார்களா என்பது நிச்சயம் கேள்விக்குறி தான்.ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சின்ன ஓலைப்பெட்டி மூடியோட,அதில் வறுத்த கடலை நிரப்பி பித்தளைக் குவளையொன்றில் மணக்கமணக்க பனங்கருப்பட்டி காப்பி தரப்படும். நடவு நாட்களிலும் வயல் வேலை நாட்களிலும் அப்பத்தா கைமணம் அரிதாய் சுவைக்க கிடைக்கும்.நாளைக் காலை விதை பாவுவது போல, அதான் அத்தை வீடெல்லாம் வந்திருக்காங்க.இப்படி கூட்டமா இருந்தா தான் அப்பத்தா முகத்தில சிரிப்பே வரும்.பாருங்க அந்த பொக்கை வாய் கிழவி சிரிச்சிக்கிட்டு இருக்கிறத.ஆனா ஆளுங்க இல்லாம போனா வெறிச்சோடின வீட்டை விடவும் பேச்சுத் துணைக்கு யாருமில்லாமல் தவிக்கும் அப்பத்தா தான் மிகவும் பரிதாபத்திற்குரியவள்.

அத விடுங்க,கருப்பட்டி காப்பியும் வறுத்த கடலையும் அருமையான கூட்டணிங்க. சுவைத்ததுண்டா நீங்கள்? எனக்கு பலசமயம் அந்த பாக்கியம் வாய்த்திருக்கிறது.இன்னிக்கும் அதே கூட்டணியோடு மாடியேறவும் சிட்டுக்குருவிகள் பத்தின நினைவு, நடை துரிதமடைந்து கடைக்கோடி சாளரத்தினருகே நின்றது. மரத்தில் கூட்டையும் காணவில்லை குருவிகளையும் காணவில்லை. எம்பிப் பார்க்கையில் மாமரத்துக்கடியில் மழைநீர் ஏகிய கூட்டை காணமுடிந்தது. இந்தக் கூட்டை கட்ட எத்தனை நேரம் பிடித்ததோ அதற்கு.இன்னும் ஒரு கூடு, இது போலும் அழிந்து போகாது என்பது எப்படி சாத்தியம்?அடுத்த முறை நம் வீட்டுக்குள் கூடு கட்ட பழக்க வேணும்.எனக்குள் சொல்லிக் கொண்டேன்.ஏனோ அப்பத்தாவின் உழைப்பு மழுங்கடிக்கப்பட்ட வலி குருவிக் கூடு கலைந்த போதும் இருந்தது.

அடுத்த விடுமுறைக்கு வரும் போது மாடியில்,அந்த அறையை ஒட்டிய முகப்பின் தாழ்வாரத்தில் கீச் கீச் எனும் சத்தம்.தேடிப் பார்த்தபோது தாழ்வாரத்துக்கும் மாடியறைக்கும் இடையே ஒரு அழகான கூடு நிறைந்திருந்தது.அதில் இரண்டு குருவிகளும் சில முட்டைகளும் இருந்தன. இரை தேடி போகிற நேரங்களில் முட்டைகள் தனித்துவிடப்படுவதை பார்த்ததும் விடுதி வாழ்க்கை நினைவுக்கு வர, இரையை நானே தருவது என முடிவு கொண்டேன். அகலமான பிளாஸ்டிக் டப்பாக்களில் அரிசி கம்பு என தானியங்கள் நிறைத்து கூட்டின் அருகே கட்டி தொங்க விட்டேன். இப்போதெல்லாம் குருவிகளில் ஒன்று வெளியே செல்வதும் மற்றொன்று முட்டைகளின் அருகில் இருப்பதும் பார்க்கவே மிகுந்த சந்தோசத்தை தந்தது. வெளிச்சென்ற குருவி வந்ததும் தன் அலகால் அதன் அலகை உரசுவதும்,இறக்கைகளை நீவிவிடுவதும், கூட்டுக்குள்ளே சண்டையிட்டு ஊடலோடு தத்தி தத்தி பறப்பதும் என அவற்றின் அன்றாடங்கள், அழகான சமிஞ்கைகளாக எனக்கு புரியத் தொடங்கியிருந்தன. பின் வந்த நாட்களில், அவற்றின் ஒவ்வொரு அசைவும் அழகியலோடு உயிர்ப்பான ஓவியமாய் தோன்றியது எனக்கு.

கீச் கீச் கீச்.
வந்திட்டாங்க போல. வழக்கமான தொந்தரவு தான்.பழகிடுச்சு. காலை பரபரப்பு ஒடுங்கி வீடே அமைதியாகிப் போகும் அந்த அழகான தருணங்கள் இவற்றினோடு கழியத் தொடங்கியிருந்தது இரை வைப்பதால் ஏதோ ஒரு எஜமான விசுவாசமோ, பக்கத்து வீட்டுக்காரி என்கிற பந்தபாசமோ தினமும் என்னோடு பயமின்றி பழகுவது அந்த ஜோடிக்கு வாடிக்கையாய் போயிற்று.இமைகள் திறக்காமல் ஏதும் அசையாமல் அப்படியே படுத்திருந்தேன்.சத்தம் இன்னும் அதிகரிக்கவே கண்களை திறந்து பார்த்தேன். இரண்டும் என்னை சுற்றி பறந்து கூட்டில் உட்கார்ந்து கொண்டன.கடந்த பத்து நாட்களாக மேல் மாடிக்கு வருவதும், சாளரத்தின் எதிரே அமர்ந்து தத்தி பறந்து மகிழும் பறவைகளோடு பொழுதைக் கழிப்பதுமென விடுமுறையெல்லாம் இப்படி செலவாகிக் கொண்டிருந்தது.

ஒரு அதிகாலை பொழுதன்று என்னை எழுப்ப வந்த அப்பத்தா ஆச்சர்யத்தோடு,

”என்னாத்தா? ஏதும் உடம்புக்கு நோவா?இம்புட்டு சீக்கிரமே முழிச்சிட்ட?” கரிசனமாய் நெற்றி தொட்டவளை இழுத்து போய் குருவிக் கூட்டை காண்பித்தேன். புதிதாய் பிறந்த நாலைந்து குருவி குஞ்சுகளோடு கீச் கீச் சத்தமிட்டபடி அங்கே ஒரே பரபரப்பாயிருந்தது.

”அட குருவிக்கூடு! எப்போயிருந்து கட்டியிருக்கு.நல்ல சகுனந்தேன்.அதென்ன டப்பாவுல? தீனியா? நீயா வச்ச? வேலை மும்முரத்துல கவனிகாம விட்டுட்டனே.ஒஞ்சித்தப்பனுக்கு தெரிஞ்சா வீட்டக் கெடுக்குதுன்னு கூட்ட பிரிச்சுப்புடுவானே” சந்தோசமும் ஆச்சர்யமும் பதைபதைப்பும் அவளின் முகத்தில் நொடிக்கொருமுறை மாறிய வண்ணம் இருந்தது.

“இல்ல அப்பத்தா! நாங்க லீவு முடிஞ்சி போனப்புறம் நீ தனியா இருக்க கஷ்டமா இருக்குமில்ல.இந்த சொந்தகாரங்களாச்சும் இங்கயே இருக்கட்டுமின்னு தான்!”

பதிலேதும் சொல்லாமல் வாஞ்சையாய் தலை வருடியபடி கண்ணீர் மல்க என் கன்னம் தொட்டு நெட்டி முறித்தாள் அப்பத்தா.

Thursday, September 23, 2010

விழியால் பேசுகிறேன் - II

"போ” என்கிற இதழசைவும்
“வா” என்பதான விழியசைவும்
இன்னதென்று விளங்காமல்
நீள்கிறது பயணங்கள்
நாள் தவறாமல்...
புலம்பிக் கொண்டிருந்தது காதல்!

----

சிந்திய வார்த்தைகளில்
எது இதயத்தினது
எது இதழினது என்று
பகுத்தறியாத பாமரன்
நாத்திகனாவது எப்படி?
அலுத்துக் கொண்டது மனது!

----

ஏதோவொரு விழிகுத்திய வலி
திரும்பிய நொடியில்
காதலாய் சிரித்தாய் நீ!

திருமணப் புள்ளியில்
நிறுவிய அரசு கவிழ்ந்த போது
காணாமல் போயிருந்தன
நின் தன்மானமும் அது குறித்த
சகல பிதற்றல்களும்...
பார்வை பருகி இதயம் வருடிய
சில்லிட்ட நினைவுகள்
கல்வெட்டாய் போயின

பணத்துக்கு விலை போனவன்
பிணமென எட்டி விலக்கியும்
எப்போதோ சொல் தைத்த வலி -அன்று்
என் பாதையில் முட்களை
சொல்லாய் விதைத்தவன் நீயென...

இப்போதும் நினைவிருக்கிறது
இதயம் முழுக்க முழுக்க
துக்கத்தை தந்துவிட்டு
தூக்கத்தின் அவசியம் உரைத்தது.

என்ன செய்தாய் எனக்கு நீ
நான் இத்தனை பாசத்தை
மழையென பொழியுமளவிற்கு?
சிந்தித்தபடி சிரித்துவிட்டுப் போகிறேன்
பதில் தெரியாமல்...

----

நிலை கொள்ளாத மனதுடனும்
வெறித்த பார்வையுடனும் - நீ
வெளியேறுகையில்
தெரிந்திருக்கவில்லை - பிரிவு
இத்தனை கொடுமையென்று!

----

Monday, September 20, 2010

நிறம் மாறும் தேவதைகள்

கடவுளர்களின் ஆசிகள்
நிரப்பிய போதையில்
உறங்கிக் கொண்டிருந்தனர்
தேவதைகள்
சாகுந்தலங்கள் மறைத்த
கதிரவ சிதறல்களாய்
வெண்ணிற இறக்கைகள் போர்த்தி!

உற்சவர் பள்ளியறை உபயத்தில்
உலகை மறந்திருந்தார்
மானுடப் புலம்பல்களை
பலமுறை மறுதலித்தவண்ணம்

நடுநிசியிரவில்
பல்லக்கு தூக்கிகள் ஓதுவோர்
மடப்பள்ளி சேவகர்கள்
எவர்காதுக்கும் எட்டாத லயத்தில்
முனங்கிக் கொண்டிருந்தது
கோவில் தொழுவத்தில் சினைப்பசு
சிறு குரங்கொன்றின் குதறலில்
பெருங்காயம் பட்ட வலி

பசுவின் பிதற்றலில் பரிந்து
பதமாய் மருந்திட துணிந்தான்
சாமிக்கு சாமரம் வீசும்
சாமான்ய சிறுவனொருவன்

மருந்திட ஏதுவாய் இறகு தேடி
கிடைத்ததை பறிக்க
விதிர்த்தெழுந்தது தேவதையொன்று
வழக்கம் மாறி சாபமாய்
விழுந்தன வார்த்தைகள்

சபிக்கப்பட்டவன் ஏக்கமாய் நோக்கினான்
அசதியில் தூங்கும் அத்தனை பேரையும்!

பசுவின் முனங்கல் தொடர்ந்தபடியிருக்க
வலியின் மிச்சத்தை சாபமாய்
கொட்டியபடி தேவதையும்....

மெல்ல மெல்ல விடிந்துகொண்டிருந்தது
கடவுளர்கள் தேவதைகள் தவிர்த்து
யாராவது மருந்திடக்கூடும்

Friday, September 10, 2010

நினைவில் தளும்பியவை

வரைந்து சிதைத்த
எல்லா பின்னமான பிம்பமும்
சொல்லிப் போகிறது
அதன் அழகான துவக்கத்தை ...

உளிபட்டு சிலையான
பாறைகளனைத்திற்கும்
மழைநீர் தழுவி மகிழ்ந்த
வசந்த காலங்களுண்டு..

சுவர் இடிந்து
பழுதான கோட்டைக்கும்
தாங்கி நிற்க வலுவான
அஸ்திவாரமுண்டு...

நினைவுகளை துணைக்கழைப்பது
நினைவுகளோடு வாழ்வது
இன்னபிற இயற்பிழைகள்
மனோவியாதிகள்
இயல்பாய் சாத்தியமாகிறது
கனவுகளை கவிதையாய்
வடிக்கும் போதும்
நேற்றைய வலியை மறைத்து
இன்று கவிதை
வரையும் போதும்...

மெல்லப் பனிக்கும் கண்ணீரும்
கனக்கும் இதயம் மறைக்க
இதழிடைப் பூக்கும் புன்னகையும்
சொல்லித்தான் போகிறது
கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!Sunday, August 15, 2010

காமாட்சிப் பாட்டி

“பேத்தி வந்திருக்காளா பார்வதி” ஆச்சிக்கிட்ட யாரோ பேசுவது கேட்டது. அந்தக் குரலின் குழைவு...அது காமாட்சிப் பாட்டி தானே.தட தடவென வெளியே வந்தேன்.

குதப்பிய வெத்தலையும், இரவிக்கை அணியாத சேலையும்,எந்நேரமும் வெத்தலை முடிச்சும் சுருக்குப்பையும் எல்லா கிராமத்து பாட்டிகளையும் போலவே தான் காமாட்சிப் பாட்டியும். ஆனால் எனக்கும் அவளுக்குமான அலைவரிசை கோடியில் ஒருத்தருக்கிட்ட தான் வருமாக்கும். ஏன்னு தெரியுமா ? எல்லாத்துக்கும் பெருமை அவளுக்கு என்மேல.யாரோடும் பங்கு போட அவசியமில்லாத எனக்கே எனக்கான பாசம். என் குறைகள் மட்டுமே விமர்ச்சிக்கப்படும் பள்ளி நாட்களில் என்னை கைவிடாத ஒரே கூட்டணி காமாட்சி பாட்டி தான்.

ஊருக்குள்ள பிரசவம் பார்ப்பதில் காமாட்சிப் பாட்டி ரொம்ப பிரபலம். குழந்தை பிறந்து 2 முதல் 3 மாதம் வரை பாட்டிக்கு அந்த வீட்டில் தான் வேலை. பொழுது முச்சூடும் புள்ளத்தாச்சி சாப்பிடும் முறையிலிருந்து,குழந்தை குளிப்பாட்டும் முறை வரைக்கும் அத்தனையும் கற்பித்து பதிலாய் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் தன் ஊதாரி மகனுக்கு தந்துவிட்டு எங்கள் வீட்டு புறக்கோடி திண்ணையில் சாய்ந்துவிடுவாள். இதுபோக, விதவை பென்சனும் பஞ்சாயத்து ஆபிஸ்ல சம்பளமும் அவள் ஊதாரி மகனுக்கு விழலுக்கிரைத்த நீராய் போயிற்று.ஆச்சியும் இதுவரை அவளை தூரமாய் பார்த்ததில்லை.தானாய் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வதும், எங்களை வளர்ப்பதும் தோட்டத்தில் வயலில் என எங்கும் நிறை பராபரமாய் அவள்.

“நீ பொறந்தப்போ மூக்கு சப்பையா போச்சுன்னு ஒன்னோட அத்த சொன்னாளா? எனக்கு சுள்ளுன்னு கோவம் வந்திருச்சு. அந்த முப்பது நாளக்கிம் மூக்க நிமிண்டி நிமிண்டி குளிப்பாட்டி... பாரு இப்ப உம்மூக்கு எப்படி இருக்குண்ணு? “என்னையறியாமல் கண்ணாடி பார்ப்பேன் நான். அத்தனை போராடியுமே இப்படியா..?

தன் விரலாலே சிக்கெடுத்து சாம்பிராணியிட்டு வளர்த்த என் நீண்ட கூந்தல் விடுதி வாழ்க்கை கருதி வெட்டப்பட்ட ஒரு தினத்தில் என்னை விடவும் எனக்காய் அழுத மகராசி.
”இப்ப என்னத்துக்கு நீ ஒப்பாரி வைக்கிற? மயிற தானே வெட்டுனோம் என்னமோ அவ தலைய சீவுன மாதிரி கூப்பாடு போடுற?” அம்மாவின் அதட்டலையும் சட்டை செய்யாமல் தாழ்வாரத்தின் மூலையில் விசும்பிக் கொண்டிருந்தாள் அவள்.

“அந்த மணியன் வீட்டு வாலுக்கு எப்பவுமே ஏந்தங்கத்த சீண்டலையின்னா ஒறக்கமே வராது. இரு இரு..நாளைக்கி அவன் காத திருகி கேணிக்குள்ள போட்டிடுறேன்.என்ன பண்ணுவான்னு பாக்குறேன்.நீ அழாதடா ராசாத்தி” அம்மா முதுகில் குடுத்த அடிகளின் வலி மறந்து ஓட்டைப்பல்லோடு சிரித்துக் கொண்டிருப்பேன் நான்.

”ஏந்தாயி இப்பத்தான் வந்தியா? வாரதே கொஞ்ச நாளு.வீட்டிலே இருக்காம என்னத்துக்கு வெயில்ல சுத்துற. கறுத்துப் போயிட்ட பாரு.” தம்பியும் அம்மாவும் செருமுவதில் ஏகப்பட்ட கேலியிருக்கும். ”நீ ஏன்டா சிரிக்கிற. அவளுக்கென்னடா குறைச்சல்?வெளியூருல தங்கின்னா படிக்குது. கஸ்தூரி மஞ்சளும் கடல மாவும் தேச்சா பழைய மாதிரி பொன்னா மின்னுவாள்ல.” சலுகையாய் அவள் மடிசாய்வேன் நான்.

கூட்டுக் குடும்பமாகையால் எங்க வீட்டில் ஒவ்வொருவரின் பிறந்தநாளும் அவரவர் நினைவு வைத்திருக்க வேண்டும். அந்த மாதம் பிறந்தவுடன் நச்சரிக்க ஆரம்பித்தால் தான் பரிசும் பணமும் பிறந்தநாளன்று நிறையச் சேரும்.மாதக் கடைசியில் வரும் பிறந்த நாளென்பதால் எனக்கு மட்டும் இந்த விற்பனை தந்திரம் பலிக்கவே செய்யாது.பாட்டி வீட்டில் மட்டும் அந்தக் குறை இருக்கவே இருக்காது. காரணம் காமாட்சிப் பாட்டி.
”கார்த்திகை பிறந்த தேதி முதலா காமாட்சிக்கா தொணத் தொணக்க ஆரம்பிச்சிருச்சு.அதான் எல்லாங் கெடக்கட்டுமுன்னு அம்முவ பார்க்க வந்துட்டேன். இந்தா”, தாத்தாவின் காலில் விழுந்து, ஆசிக்கு கூட காத்திராமல் பறித்துக் கொண்டு ஓடுவேன். காதிப் பட்டில் பாவடை சட்டை என் நீள அகலங்களை உத்தேசித்து அழகாய் அம்சமாய் தைக்கப்பட்டிருக்கும்.

பட்டுப்பாவடை தாவணியும்,தாழம்பூ தைத்த சடையும்,மை தீட்டப்பட்ட விழிகளுமாய் ஒருநாள் அவள் காலில் விழுந்த போது,
“ஆத்தி.ஒத்த ரூவாகூட இல்லையே புள்ள கையில வச்சுக் கொடுக்க..பொசுக்குன்னு கால்ல விழுந்திருச்சே. இரு இந்தா வாரேன்.” அவசர அவசரமாய் தன் இயலாமையை குறை கூறியபடியே போனவள்,கையில் இரண்டு ரூவாய் தாளோடும் தோட்டது வெண்பூசணிக்காயோடும் வந்தாள்.எனக்கும் திருஷ்டி சுத்த ஒருத்தி இருந்தான்னா அது எவ்வளோ பெரிய விசயம்?அவள் தந்த அந்த இரண்டு ரூபாய் நோட்டு இன்னும் என் பழைய நாட்குறிப்பில் ஞாபகக் குறிப்பாகவும்.

”கால் வலிக்குது பாட்டி!சொடக்கு எடுத்து விடு”, உரிமையாய் அதிகாரமிடும் வாடிக்கை அவளைத் தவிர இதுவரைக்கும் எவரிடமும் இல்லை.சிரிக்க சிரிக்க பாட்டுப்பாடி,பாவத்தோடு கதை சொல்லி தலை கோதியபடி தூங்கச்செய்வாள். அது போலே குலுங்க குலுங்க சிரித்தபடி தூங்கிப்போன என் இளமை காலங்கள், நடுநிசியில் ஆர்ப்பரிக்கும் மனதோடு கவிதையில் பாரத்தை இறக்கி விடத்துடிக்கும் இந்த வசதியான வாழ்க்கையில் ஏதோ இல்லாமை கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.

”ராத்திரியானா வேப்ப எண்ணை நாறும் அந்த கிழவிக்கிட்ட. ஆனா இவ அப்படியே உரசிக்கிட்டு கிடக்கறா.ஏண்டி நீ இப்படியிருக்க?” சித்தி முதல் தம்பிகள் வரை யாருக்கும் அவள் மனசு தெரிய வாய்ப்பேயில்லை. நாகரீகம் கருதி அவர்கள் அவளை நாடுவதேயில்லை. எனக்கு இதுவரை அந்தக் குறை தெரிந்ததேயில்லை.

நெனச்ச மாத்திரத்தில் நையாண்டி பாட்டுக்கட்டி அந்த எடம் முழுக்க சிரிக்க வைக்கும் தெறமசாலி.எப்படித்தான் வார்த்தை சேர்த்து மெட்டுப் போடுவாளோ தெரியாது. அவள் பாடும் தான்னான்னே இல்லாத முளைப்பாரியோ பாரிவேட்டையோ இது வரை அந்த ஊரில் இருந்ததில்லை.இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு திருவிழாவில், சாதிக்கலவரத்தில் மகன் செத்துப் போன பின், அது சம்பந்தமான வழக்கு வாய்தா என்று அவள் திண்ணையில் படுப்பது குறைந்து போயிற்று. இதோ அவள் தான் வந்திருக்கிறாள்.

“பாட்டீ” என்றவாறே அடுப்படிக்குள் நுழைந்தவளை வாரியணைத்தபடி,

“ஏஞ்சாமி. எப்படித்தா இருக்க? இன்னிக்கு தான் வந்தியா?” என்றவாறே கன்னம் வருடியவளின் உருவத்தில் அசைவில் நம்பிக்கையில் வயோதிகம் வெகுவாய் படர்ந்திருந்தது.

இரவு, முல்லையின் நறுமணத்தோடு நிலவை ரசித்திருந்த ஒரு பவித்திர தருணத்தில் மெதுவாய் கேட்டாள்.
”எம்புட்டு நா இங்கயிருப்ப?”

ஏனோ மனசு பிசைய, “பாட்டி எங்கூட சென்னைக்கு வந்திடு.நானிருக்கேன் உனக்கு!”

“வாரேஞ்சாமி! ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு எம்பேரு எழுதச் சொல்லித்தருவியா? அந்த கவர்மெண்டு கிளர்க்கு என்ன கைநாட்டு கைநாட்டுன்னு கூப்பிடுறான்.செத்தும் என்ன இப்படி அசிங்கப்பட வச்சிட்டானே எம்மவன்.”

சன்னமாய் கதறியவளுக்கு காமாட்சிப் பாட்டியாகிக் கொண்டிருந்தேன் நான்.

Saturday, August 14, 2010

ஒற்றை ரோஜா

இதழ் பறிக்கும் காற்றினோடு
கடும் மோதல்
அந்த ஒற்றை ரோஜாவுக்கு!
மொட்டாய் இருக்கையில்
மூடிக்காத்த இலைகள் கூட
முட்கள் போலவே இப்போது
எட்டாத தூரம்

வண்டின் வருத்தங்களை பரிகசிக்கிறது
சூலகம் காக்க திரணற்ற பூவிதழ்
காற்றின் அகோர வருடலில்
அலாதி சுகம் ருசித்து
ஆடிக்கொண்டிருந்தன தும்பிகள்!

மண்புழுவொன்றின் அகழ்வில்
பதியமிட்ட மற்றோர் கிளை
மெல்ல அசையத் தொடங்கியும்
தண்டின் பிடி தளர்வதாயில்லை

நான்
மலர் படும் பாட்டை கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நீரோவாய்
பிடிலுக்கு பதிலாய் பேனாவோடு

Wednesday, August 11, 2010

திறவுச் சூட்சுமம்

தொல்பொருள் கிடங்கில்
பதனிட்ட சவமாய்
அணுவைத் திறக்கும்
அதிசயம் தாங்கிய அற்புதப்பேழை
கனக்கும் கனவுகளை
கருவாய் சுமந்து...

எண்ணக் கருத்தாணிகள்
குத்திக் குத்திச் சீழ்வழி தலையில்
முளைத்தன பிறைச்சந்திரன்கள்
அறிவின் அடையாளமாய்...

எழுத்துச் சித்தனொருவன்
அறிவின் பன்மச் சிதறல்கள்
உதிர்த்த பொறியில்
திறவுச் சூட்சுமக் கபடம் கரைய
உருப்பெற்றன ஒளடத மந்திரங்கள்!

மறை பொருள் ஒளிபெறும் வேளை
நெருக்கும் வறுமை திறன்பளு
நெம்பித்தள்ள அரைப்படி அரிசிக்கு
அஸ்தமித்தன வாலிபக்கனவுகள்
வறுமைக்கோட்டின் எல்லை முடிவில்.

அதோ!
தொல்பொருள் கிடங்கில் திறவாத பேழை
இவன் கனவும் விழுங்கிச் செரித்தபடி...

கேள்வியும் அது சார்ந்ததும்

நம்ம சுசி என்ன பதிவுலகத்தில் நான் என்கிற தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருத்தாங்க.நன்றி சுசி.சரி அவங்களால சில வரிகள் எழுதியிருக்கேன்.பேத்தல் தான் இருந்தாலும் பொறுத்துக்கோங்க.சமூக கோவத்த காண்பிக்க எத்தனையோ வழியிருக்க ஏன் நீங்க வலைப்பதிவ தேர்ந்தெடுக்கறீங்கன்னு சில நல்லாதரவாளர்கள்(!) கேட்ட கேள்விகான பதில் இதில ஒளிஞ்சிட்டுருக்கு. தூங்காம படிச்சா கிடைக்கும். பாத்துக்குங்க உலகம் போற போக்குல நானெல்லாம் எங்க இருக்கேன்னு!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கயல்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாங்க! தானா அமைஞ்ச ஒரே நல்ல விசயம் இது தான்னு நினைக்கிறேன்!

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

எந்த சுவராஸ்யமான துவக்கமும் பல கசப்பான அனுபவங்களை அடியாய் கொண்டே ஆரம்பிக்கும்.ஒரு தங்கிலிஷ் கோர்வையை கவிதை எனப் படித்தபின் நாமும் கத்தி எடுக்கலாமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த வலைப்பதிவு. எண்ணங்களின் வடிகாலாய் கவிதை எழுத ஆரம்பித்து, நல்ல கவிதை எழுதக்கத்துக்கிட்டேனோ இல்லையோ எப்படி எழுதக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.தவிரவும் என் வலைப்பதிவு என்பது என் படைப்புகளை நிராகரிக்காத பத்திரிக்கை என்கிற எண்ணத்தில் துவங்கப்பட்டது.கிறுக்கலோ குப்பையோ நண்பர்கள் பார்வைக்கு... ஆனால் இந்த பயிற்சி காலம் எனக்கு மிகவும் முக்கியம் நல்ல வளமான இலக்கிய பயணத்தின் துவக்கத்திற்கு![நசரேயன் இந்த பதில் முழுக்க முழுக்க உங்கள் மேலான
பின்னூட்டத்துக்கு.. :)) ... நெம்ப அலப்பலா இருக்கு அண்ணாச்சி குட்டு வச்சாத்தான் சரிப்படும்]

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணுமே செய்யல. அதனாலயே இன்னும் பிரபலமடையலை. புகழ் மேல எல்லாம் ஆசை இல்லப்பா![சோம்பேறி.. சோம்பேறின்னு யாரோ திட்டுறாங்க பாருங்க]

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஓ! நிறைய தடவை பகிர்ந்திருக்கேன். என்னப் பத்தி சொல்லப் போக, அதனாலயே பல நண்பர்கள்,சில எதிரிகளை சம்பாதிச்சிருக்கேன். அந்த சில எதிரிகளையும் நண்பர்களாக்க முயற்சிக்கிறேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஏங்க நீங்க வேற! ஆயிரம் பேர கொன்னா அரை வைத்தியனாகலாம்ங்கிற மாதிரி நானே ஏதோ இப்பத்தான் எழுதிப் பழகுறேன்.அவங்கவங்க படிச்சிட்டு உசுரோட போறதே பெரிசு. சம்பாதிப்பதெல்லாம்.......

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போதைக்கு ஒரு வலைப்பதிவு மட்டும் தான். இன்னும் சில விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன்.[அழக்கூடாது!]

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நல்லா கவிதை எழுதுற எல்லாரு மேலயும் பொறாமை இருக்கு. ஆனா எனக்கு கஷ்டம் தராத யாரு மேலேயும் கோவம் இல்ல.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் ஆசான். ஒரு சில மணி நேரம் எனக்கெனவே செலவு செய்து நிறை குறைகளை திருத்திச் சொன்ன மாண்பு இன்னும் சிலிர்க்க வைக்குது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

கடைசியாவா? என்னப்பா இது ! நானும் என் கவிதைகளும்(?) இன்னும் ரொம்ப... நாளைக்கு உசுரோட பதிவுலகத்துல இருக்கணும். குறைந்த பட்சம் எழுத்துப்பிழை இல்லாம கவிதை(?) எழுதணும்.

இந்த பதிவ தொடர இவர்களை அழைக்கிறேன்

வயலான் குமார்
சங்கவி
கமலேஷ்
மதுமிதா

வாழ்த்துக்கள்.

Tuesday, July 20, 2010

அற்ப தத்துவம்

பசியோடிருக்கும் வல்லூறொன்றின்
பார்வையில் சின்னஞ்சிறு கோழிக்குஞ்சு
பாவமோ பாதிப்போ எதன் நிழலும்
படியாத பவித்திர ஜீவன் அது!

தாய்க்கோழி நொறுக்கித்தந்த நெல்மணியும்
விழுங்க சக்தியற்ற சின்னஞ்சிறு குரல்வளை!
நகரும் புழுவொன்றின் நடனத்தில் லயித்தபோது
விதியின் வாய்க்குள் சிக்குண்ட பரிதாபம்!
வலியவன் அடிக்க இளைத்தவன் மடிய
பசிக்கு உயிர் புசிக்கும் அவலம்.

நகர்ந்து செல்லும் எறும்புகளின் ஊர்வலத்தில்
எப்போதாவது
மரணித்த பூச்சியை பார்ப்பதுண்டு!

தேங்காய்த்துருவலோ திண்பண்டமோ
சுமந்து செல்லுகையில் மேலிடும்
உற்சாகம் இருப்பதில்லை
அவ்வினாடியில்.
ஏதோ பெருந்துயரம் தாங்கிய
இறுதி யாத்திரையாகத் தோன்றுமெனக்கு!
காய்ந்து மக்கிப் போதலைக் காட்டிலும்
யாருக்கோ உணவாதல் உத்தமம் என்கிறபடியாய்
அவ்வுணர்வும் ஜீரணித்துப்போகும் காலமாற்றத்தில்...

ஒரு சுதந்திரத் திருநாளில்
நான் வளர்த்த புறாக்கள் சில
விருந்தாளிக்கு விருந்தான கொடுமை
எப்போதாவது நினைவு கூர்வதுண்டு!
கனத்த மவுனமும் கேலிச் சிரிப்பும்
நண்பர்கள் மனநிலை சார்ந்து
விதவிதமான வித்தியாசம் தாங்கி!

மயானத்தில் அகழ்வராய்ச்சி
எல்லா எலும்புக்கூடும் கிழவனுக்கு
பால்யத்து காதலியை நினைவூட்டியதாம்!
ஒரு அற்பப்புழுவின் ஆயுள்
விதிவசம் சேர்ந்த பலருக்கு வாய்ப்பதில்லை

ஆகையினால் இனிமையானவர்களே!
வாழும் வரை வாழ்ந்திடுங்கள்
சக உயிரியாய் சாதியும் மதமும்
அதனாலான கர்வமும் தொலைத்து!

Sunday, July 18, 2010

சுயபுராணம் ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கல

பாத்தீங்களா! தலைப்ப படிக்கிறப்ப்போவே சிரிப்பு வருதுல்ல. இதாங்க நாம!விசயமும் ஒண்ணும் அத்தனை பெரிசில்ல. தன்னிலை விளக்கம் கொடுக்குற அளவுக்கு நாம ’பிரபலம்’ இல்லீங்கோ இல்லீங்கோ!அப்புறம் எதுக்கு இந்த சொறிதல்?என்னா சின்னப்புள்ளத் தனம்ன்னு கொந்தளிக்கிறது புரியுது.

இருங்க! இருங்க! திட்டாம கேளுங்க!

விசயம் இதாங்க! எஸ்தரம்மாவ பத்திப் புலம்பப் போய் அது பெண்ணீயவாதிங்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கு போல! பிரசூரிக்கப்படாத பின்னூட்டங்களும் மின்னஞ்சல்களும் சொல்கின்றன.சேகரனை வில்லனாக மிகைப்படுத்திச் சித்தரித்திருப்பதாக சொல்லபடுகிறது. எனக்கு அவரை முழுதாக,அப்பட்டமாக கொண்டுவரமுடியவில்லை என்கிற ஆதங்கமே இருக்கிறது.செய்தது பிழையோ என்ற குற்ற உணர்ச்சியோ,எந்த ஆணையும் குறிப்பதாகவோ தோன்றவில்லை.இது ஒரு வளர்ப்புத்தாயின் மீதான பற்று. அவள் வாழ்க்கை,இறப்பு குறித்த வேதனையின் பகிர்வு. இதற்கும் என் குறித்து நான் கொண்டிருக்கும் கருத்துக்கும் சம்பந்தமேயில்ல. நான் ஆதிக்கத்துக்கு எதிரானவாதி. அவளோ தான் சொல்ல முடியும். பெண் என்பதற்கான எந்த தனிப்பட்ட அங்கீகாரமோ சலுகையோ வேண்டாது அதே சமயம் அடக்குமுறையும் விரும்பாது சகஜீவியாக அவளும் மதிக்கப்படனும் என்கிற கோட்பாடுள்ளவள். என்னை[குறிப்பாக] அடக்குபவர் யாராயிருந்தாலும் அது ஆணோ பெண்ணோ வாளெடுக்கும் போராளி...

வின்சென்ட்சர்ச்சில் பத்தின ஒரு சுவையான சேதி. அவரது மேடைப் பேச்சுக்கான உரையை அவரே தான் தயார் செய்வாராம். அப்படி தயார் செய்யும் போது எங்கெல்லாம் கைதட்டல் வேண்டுமென நினைக்கிறாரோ அங்கெல்லாம் அடைப்புக்குள் claps என்று குறித்துக்கொள்ளுவாராம். உரை வாசிக்கப்படுகையில் அவ்விடத்தில் சில வினாடிகள் வாசிப்பை நிறுத்துவாராம்.கைதட்டல் கிடைக்குதோ இல்லயோ அங்கே நிறுத்தி பின் தொடர்வது வழக்கம். இது,ஒரு அரசியல்வாதி,தன் கருத்துக் குறித்த ஸ்திர தன்மையின் வெளிப்பாடு. மக்களின் எதிர்பார்ப்பும் தன் கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு.இதை எழுதினா இப்படி பிரச்சனை வரலாம் என்கிற அளவுக்கு முதிர்ந்த ஞானம் ஏதும் எனக்கில்லை.

தவிரவும்,மக்களின் எதிர்பார்ப்பு மீதான பார்வை ஒரு கலைஞனுக்கு இப்படியிருக்க முடியுமா? இது மட்டும் கவனத்தில் இருந்தால் அவன் எதிர்பார்க்கும் ஆன்ம திருப்தி கிடைக்குமா? இதற்கும் பதிலுண்டு இசைஞானியின் வார்த்தைகளின் வாயிலாக. எத்தனையோ நல்ல பாடல்கள் தந்தும் அதில் ஏதோ சிலவற்றுக்குத் தான் தேசிய விருது கிடைக்கிறது.விருதுகளை எதிர்பார்த்து ஒரு கலைஞன் தன் கலையைத் தொடர்வதில்லை.தன் மனதுக்கு பிடித்த மிகச்சிறந்ததையே தருகிறான் எப்போதும்.அதில் மக்கள் விரும்பியவையும் இருக்கிறது.
பதிவுலகம் தரும் அங்கீகாரத்தை கருத்தில் கொண்டதல்ல எனது முயற்சிகள்.என் ரசனைகள் குறித்தது.பிழைகள் எதுவும் இல்லாமல் தமிழை என் கருத்தின் வடிவமாக்கிப் பார்ப்பதான சொற்ப சிந்தனை விகிதம்.அது என் சுதந்திரம் என்றெண்ணுகிறேன்.

ஆகையினால் அன்பர்காள்,
நான் தேர்ந்த கலைஞனோ,பதிவரசியல்வாதியோ குறைந்தபட்சம் ‘பிரபல’ பதிவரோ அல்ல. தமிழ் கற்கும் மாணவி. கிறுக்கல்களை பதிவேற்றி விமர்சனங்களை உள்வாங்கி தமிழை படித்துக்கொண்டிருக்கிறேன் ரசனையோடு.
என் வரையில்,
ஒரு தமிழ் கற்கும் மாணவியின் மனப்பாங்கு தமிழ் எழுதுகையில்.எப்போதாவது, மிக அரிதாக கவிதையில்(?) உண்மையைச் சொல்லுதல், தமிழ் கற்க முற்படுதலினால் கொஞ்சம் தன்மானம் மிகுத்து நியாயமான சமூகக் கோவம் இப்படியாக பதிவுலகப் பயணம்.அவ்வளவே! எஸ்தரம்மா என் கண்முன்னே வாழ்ந்த ஒரு கதாபாத்திரத்தின் எழுத்து வடிவம்.அவளை அப்படியே வெளிக்கொண்டுவர முடியாமல் தோற்றதாய் நினைத்திருந்தேன்.வழக்கமான வாழ்த்துக்களையும்,குட்டுக்களையும் மீறி சில வசைகள் தெளிக்கப்பட்ட பின் தான் உணர்ந்தேன் திட்டினவங்களை எல்லாம் நான் எங்கேயோ பாதித்திருக்கிறேன் என்று. இது என் கிறுக்கலுக்கு வெற்றி என்பதாக எடுத்துக் கொண்டு மீண்டும் வருவேன் எனக் கூறி முடிக்கிறேன்.[விடாது கருப்பு]

பின்குறிப்பு:-
கல்லூரி நாட்களில் எங்கள் தமிழ்த்துறை தலைவர் கதிரேசன் அவர்கள்  சொன்ன ஒரு வேடிக்கை சம்பவம் நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஜீவகாருண்யம் சம்பந்தமாக பாடம் நடத்தி விட்டு வெளியே வந்தாராம். அந்த வகுப்பு மாணவன் ஒருவன் நடக்கக் கூட திராணியற்ற ஒரு நாயை இவர் கண் முன்னே துரத்தித் துரத்திக் கல்லால் அடித்தானாம். பார்த்த இவருக்கு ரொம்ப மனவருத்தம்.
“ஏம்பா! இப்போ தானே பாடம் நடத்தினேன். கருணையே இல்லாம ஏன் இப்படி அடிக்கிறே. பாவம் அது” என்றாராம்.
ஏற இறங்க பார்த்துவிட்டு,
“உங்க சகோதரபாசம் பிரமிக்க வைக்குது சார்” என்றானாம் புத்திசாலி மாணவன். தூங்காம பாடத்த புரிஞ்சிக்கிட்டான்னு சந்தோசப்படுவாரா இல்ல இப்படி தன்னை இறக்கிட்டானேன்னு வருத்தப்படுவாரா?அவரு மாணவனை விட இன்னும் புத்திசாலி எல்லா வகுப்புலயும் இதச் சொல்லிச் சொல்லி ஜீவகாருண்யத்த ஆரப்பிப்பாராம்.மாணவர்கள் சிரிப்பொலியோட எல்லார் பார்வையும் இவன் மீது ஒருமுறை பட்டு மீளுமாம். வகுப்பு சுவராஸ்யமா போகுமாம்.அவருக்கு அதானே முக்கியம்.முதல்ல அவனுக்கு பெருமையா இருந்தாலும் போகப் போக அவனுக்கு ஏண்டா இவர கிண்டல் பண்ணினோமுன்னு ஆகிடுச்சாம்.அடுத்தவங்கள அவமதிச்சு தான் தான் எப்பவும் பெரிசுன்னு காட்டிக்க நினைக்கிறவங்களுக்கு நான் தமிழாசிரியராவே இருந்துட்டுப் போறேன். ஆனா இவக்கிட்ட ஏண்டா அரசியல் பண்ணினோம்கிற அளவுக்கு அவங்க வருத்தப்படுவாங்கன்னும் தாழ்மையா சொல்லிக்கிறேன்.

*

Saturday, July 17, 2010

சொல்லத்துடிக்குது மனசு!

”எல்லாம் எடுத்தாச்சா?” அத்தை தான் இது, ”ம்ம்”  அய்யோ! தெரியலயே!

என்ன நான்? நானா இப்படி? ஒரு தடவைக்கு மேலே சரிப்பாக்குறது இது தான் முதல் தடவை! ஒரு இரயில் பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் என்னைச் சுற்றி ஆரவாரமா நடந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன புல்லாங்குழல் அது பாட்டுக்கு உருகிக்கிட்டு தான் இருக்கு!கால்கள் நடந்தாலும் மனசு மட்டும் காத்துல பறக்குற மாதிரி. ஏனோ தெரியல இங்கேயே இருந்துடலாம் போல.எல்லாத்துக்கும் காரணம் அவன் அவன் .... அவன் மட்டுமா .. அது மட்டும் தானா?

”கவுசி!ஏய் கவுசி!எத்தன தடவை கூப்பிடுறது? என்ன பண்ணுற அங்க?”

அத்தை அழைக்கவும் சட்டென சுதாரித்தேன்.

“இல்ல எல்லாஞ் சரியா இருக்கான்னு ஒரு தடவ பாத்துக்கிட்டேன்.”

“சரி சரி ரெண்டு நாளாகும் வீட்டுக்கு போக...சாப்பாடு எல்லாம் கட்டி வச்சிட்டேன்.வேற என்ன வேணும் சொல்லு.மாமாவ கடைக்கு அனுப்பறேன்.”

”ஒண்ணும் வேணாம் அத்தே. போகவே மனசில்ல. உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு.”, வார்த்தைகள் விசும்பலோடு வந்தது.

“என்னடா குட்டி. இதுக்கு போய் கண் கலங்கிட்டு.படிப்பு முடிஞ்சு இங்க தானே வேலை செய்யப் போற. நல்லபடியா படி. அப்பா அம்மாவ கேட்டதா சொல்லு.அடுத்த பரீட்சை லீவுக்கு இங்க தான் வரணும் சரியா.கல கலன்னு இருந்துச்சு. நீ இல்லாம திரும்பவும் வீடே வெறிச்சுன்னு ஆயிடும்.அப்பாவுக்கும் மகனுக்கும் வெளிய நெறைய வேலை.கம்ப்யூட்டரே கதி..எப்பவும் பிஸி தான்.ம்ம்ம். நான் தான் நீயில்லாம ரொம்ப தவிச்சுப் போவேன்.”

அத்தையும் கண்கலங்கவும் பேச்சை மாற்ற எண்ணி,

“கார்த்திக் எங்க அத்தை? ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு வர்றேன்”

“அவன் அந்த லேப்டாப்போட தான் மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பான்.மேல போயி பாரு.”

அத்தை அப்பாவின் அக்கா. தன் கணவரோடும்,ஒரே மகனோடும் விசாகப்பட்டிணத்தில் வசிப்பவள்.மாமா ஒரு ராணுவ அதிகாரி என்பதால் இந்தியா முழுதும் வசிக்க வாய்ப்புக் கிடைத்தது.சரளமாக எல்லா இந்திய மொழிகளும் அங்கு புழங்கும். அத்தை மாதிரி ஒரு பூரணத்துவமான பெண்ணைப் பார்ப்பது அரிது.அழகுணர்ச்சி மிக மிக அதிகம். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் மிகக் கச்சிதமாக இருக்கும்.தோட்டம்,பூஜையறை,சமையலறை எல்லாமும்,எல்லாமும்.

நான் சரியான லூசுங்க. பின்ன, எத எப்ப உங்க கிட்ட சொல்லணும்கிற அறிவிருக்கா பாருங்க. ஒரே அத்தை புராணமாயிருக்கா? ம்ம். என்னங்க செய்யுறது,பாசம் கண்ண மறைக்குது. அழகான அறிவான அம்சமான பையன பெத்தவங்குறதுனால எல்லாம் இல்லங்க. நெசமாவே அத்தையின்னா எனக்கு உயிர். பெண் குழந்தையே இல்லாத அத்தைக்கும் நான்னா கொள்ளைப் பிரியம்.

சரி வாங்க நம்ம ... ம்ம்ஹீம் என் கார்த்திக்கை கொஞ்சம் பாக்கலாம்.

********************

அதோ அவன் தான் என் கார்த்திக். அலைஅலையான கேசம் நெற்றியில் தவழ,வலிமையான புஜங்களும் அகன்ற மார்பும்,எப்போதும் கேலியாய் சிரிக்கும் உதடுகளுமாய் இருக்கும் அவன் ஒரு கணிணிக் காதலன். இந்த பதினைஞ்சு நாளா எனக்கும்.பெரிய ஏற்றுமதி நிறுவனமொன்றின் துடிப்பான இளம் அதிகாரி. நல்லா கிடார் வாசிப்பான். அருமையா பாடுவான்.மேற்கத்திய நடனத்தில் ஏதோ படித்தானாம்.பெரிசா சொன்னாங்க எல்லாரும்.மாமாவும் இவனும் பேசிக்கிறப்போ எல்லாம் இலக்கியம் தூள் பறக்கும்.ஆனா நமக்கு அதெல்லாம் புரியாதுங்க. எல்லாம் இங்கிலீசா இருக்குமுல்ல. எங்கிட்டு புரிய.ஆனா ஒரே ஒரு குறை தான்.அவன் சரியான அம்மாபுள்ளை.

“அத்தான். உள்ள வரலாமா?”

“வாடி! என்ன மரியாதை எல்லாம் தூள் பறக்குது. அத்தான்! ஹா ஹா! ம்ம் நேத்து சாயந்திரம் கூட எருமை மாடுன்னு திட்டினதா ஞாபகம்! ம்ம் என்ன விசயம்?”

“உனக்கு போய் மரியாதை தந்தேன் பாரு. என்ன எதாலயோ அடிச்சுக்கணும். தடிமாடு. எருமை மாடு.”

“பார்த்தியா எங்க போனாலும் உன் ஊரு புத்தி போகுதா பாரு. மாடு ஆடுன்னு தான் திட்டத் தோணுதில்ல.ஹா ஹா ஹா.” , கணிணித்திரையிலிருந்து பார்வை விலகாமல் பதில் சொன்னவன்,கேலியாய் சிரித்தபடி நிமிர்ந்தான்.

“ஷ்ஷ்! போதும் நிறுத்து! நான் உன்கிட்ட ஊருக்கு போறேன்னு சொல்லத்தான் வந்தேன்.”

“ம்ம்.சரி. அப்புறம்?”

மார்புக்கு நேராய் கைகளைக் கட்டிக் கொண்டு, விசமமாய் பார்க்கவும் என்னவோ போலாயிற்று இவளுக்கு.தடுமாறி சுதாரிக்கவும் அவன் கண்களில் நக்கல் தொனியில் மீண்டும் சிதைந்து போனாள்.

“அப்புறம் ஒண்ணுமில்ல.வர்றேன். காலையில ஆறு மணிக்கு இங்க இருந்து கெளம்புறேன்”

“அப்பாடா! ஒரு பதினஞ்சு நாளா என்னப் பிடிச்ச சனி இன்னையோட ஒழியுது.”

“அவ்வளோ கஷ்டப்பட்டியாடா? ம்ம்ம்? இனிமே நான் இங்க வரவே மாட்டேன் பாரு. ரொம்ப சலிச்சுக்காத”

“என்ன அழப்போறியா? கீழே போய் உன் அருமை அத்தை மடியில படுத்திட்டே அழு. இங்க ஆரம்பிச்சிடாதே. போம்மா போ”

என்ன திமிரு. கான்வெண்ட் கலாச்சாரம். கொஞ்சமாவது மரியாதை தெரியுதா பாரு. எப்ப பாத்தாலும் மிசினோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மனசே இல்லாத மனுசனாயிட்டான் போல. சே! ஏண்டா நீ என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்குற? இங்கயே இருன்னு சொல்லமாட்டியான்னு இருக்கு. பாத்துட்டே இரு. இங்க வராம,நான் சென்னையிலயே ஒரு நல்ல வேலை பார்த்து, நல்லா சமபாதிச்சு,உனக்கு முன்னாடி கார்ல வருவேன் பாரு.ஆனாலும் முன்ன மாதிரி நான் இல்லயோ?அம்மா கண்டுபிடிச்சிடுவாங்களோ? ஏன் இப்படி.. ஆனா நான் அழவெல்லாம் மாட்டேன். போறப்போ கூட உன்கிட்ட சொல்ல மாட்டேன் பாரு.

சொல்லலன்னா கூட நீ கவலையா படப்போற?

ம்ம்! நான் அவனால லூசாயிட்டேன்னு முன்னுக்குப் பின்னா மேல உள்ள பத்திய படிச்சாவே புரிஞ்சிருக்குமே! ஆனா அந்த பக்கம் எப்பவும் சிகப்பு கலருல்ல தான்பா லைட் எரியுது. என்ன செய்ய அத்தைக்கு நான் மகளா மட்டும் தான் இருப்பேன் போல. இவனுக்கு?

**************************

இன்னும் 12மணி நேரம் தான்.அப்புறம் இவனை எப்போ பார்ப்பேனோ? இன்னும் ஒரு வருசமாகும் நான் இங்க வர. அதுக்குள்ள அதுக்குள்ள.. அன்னிக்கு அவன் ஆபிஸ்லேர்ந்து ஒரு பொண்ணு பேசிச்சு. சூப்பரான பேரு...ஆங் ‘லீனா’. ஆளு கூட சூப்பரா இருந்துச்சு. குட்டைப் பாவாடையும் ஒட்டிய சட்டையுமா. இங்க எல்லாப் பொண்ணுகளும் ரொம்ப அழகு தான் இல்ல. இப்படி வளந்தவனுக்கு எப்படி என்னப் புடிக்கும்? இவன் வேற எப்ப பாத்தாலும் அமெரிக்காவில பொறந்தமாதிரி டஸ்ஸு புஸ்ஸுன்னு பீத்திக்கிட்டு அலையுறான்.அத்தையக் கூட ‘அம்மான்னு’ அழகா கூப்பிடுறதில்ல. ‘மாம்’ன்னு தான் கூப்பிடுறான். இவனெல்லாம் எங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப் போயி மந்திரிக்கணும்.நாக்குல வசம்ப வச்சு தேய்க்கணும்.என்ன தான் கடலியல் துறையில் முதுகலை படித்தாலும் அத்தனை ஆதிக்கம் இல்லை எனக்கு ஆங்கிலத்தில்.இந்தக் குறை இவனிடம் பல முறை பல்பு வாங்கியபோதே தெரிந்தது.இத மொதல்ல சரி பண்ணணும்.

”அத்தை நீங்க வரலையா? இப்படியே இருக்கீங்க?கெளம்பல?”

“ம்ம்! யாரு தான் நான் சொன்னத கேக்குறா? மரியாத தெரியாத புள்ளையின்னுல்ல பேரு வாங்கப் போறான்”

“யாரு என்ன? புரியல அத்தே!”

“ம்ம்! இரு இந்தா வர்றேன்”

உள்ளே சென்ற அத்தையை குழப்பமாய் பார்த்தபடியே தயாரானாள் அரை மனதோடு.

சத்தமாய் கார்த்திக்கின் அறையில் மாமா கத்துவது கேட்டது. விடுவிடுவென மாமா படிகளில் இறங்கி வந்தார்.

“காமாட்சி! இவன் என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறான்? நீ சொல்லு வந்து...”

“நெறைய சொல்லிட்டேன்.கேட்டாத் தானே! நாம தாங்க செல்லம் குடுத்து கெடுத்துட்டோம்.”

“அதில்ல நாஞ் சொல்ல வந்ததது. இப்போ வேணாமுன்னு தான். அவளும் கொஞ்ச நாள் இவங்கிட்ட சிக்காம நிம்மதியா இருக்கட்டும்.”

“ம்ம்..திடு திப்புன்னு கல்யாணம்னா சொந்தகாரங்கெல்லாம் என்ன பேசுவாகளோ!ஏதோ கசமுசான்னு நெனச்சுக்க மாட்டாங்க.”

கடவுளே! என்ன நடக்குது இங்க? கார்த்திக் யாரையோ கல்யாணம் செய்திக்குவேன்னு அடம்புடிக்கிறான் போல. பேச்சிலிருந்து அத்த மாமாவுக்கு சம்மதம் மாதிரி தெரியுது.கசமுசான்னு.... அய்யோ!அப்போ நீ எனக்கில்லையா? இந்த சம்பாஷைணையும் காதில் ஏறவே இல்ல அதுக்கப்புறம். தலை கிறுகிறுவென சுற்ற படுக்கையில் சரிந்தாள்.

*************************

விடியக் காலையிலேயே ஒரு பரபரப்பு தெரிந்தது அந்த வீட்டில். மாமாவைக் காணவில்லை.

அத்தை சமையலறையில் இருப்பது புரிந்தது.

”அம்மா இந்த லூச தண்ணி தெளிச்சி எழுப்புங்கம்மா! ஊருக்கு போற பதட்டமே இல்லாம எப்படி தூங்குது பாருங்க!”

“சாரி அத்தே! கொஞ்சம் லேசா தலைவலி அதான்”

“ம்ம்! முகம் அலம்பினா எல்லாம் சரியாயிடும்.போ! சூடா ஒரு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்”

அத்தை நகரவும், “சரி நீ வெளிய கெளம்புரியா கார்த்திக்? மாமா தான் வர்றாங்களா என்னை வழியனுப்ப?”

“இல்லப்பா! யாரும் வரல. நான் தான் உன்னக் கொண்டு போய் விடனும்.அப்பா ஏதோ அவசர வேலையா வெளியே போகனுமாம்.ஏன் உன்ன வழியனுப்ப ஒரு ஊரே வரணுமா? உம்மூஞ்சிக்கு நான் மட்டும் போதும்”

அத்தனை ஆர்வமும் சட்டென வடிந்தது. நேற்று வரை என்னை மகள் மகள் எனக் கொண்டாடிய மாமாவுக்கு இன்னிக்கு ஏதோ திடீர் வேலை. இந்த அத்தை ஏதோ விட்டேத்தியாவே பேசுறாங்க. என்னதான் இருந்தாலும் நான் இவங்களுக்கு தூரம் தானே இப்போ. கண்ணீர் அரும்பியது. புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பது எனக்கு ரொம்ப கடினம்.

”நானே போயிக்கிறேன். நீ ஒண்ணும் வர வேணாம்.யாரு வேலையும் கெட வேணாம் என்னால.”

“அடேயப்பா! தன்மானத் தமிழச்சி.சரி போ! யாரு வேணாம்னா?”

“இந்தா டீ சாப்பிடு! இதமா இருக்கும்.” பரிவோடு தலைவருடியபடி அத்தையின் அருகாமை இன்னும் கோழையாக்கியது. மெதுவா,

“மாமாவால வர முடியலைன்னா நானே போயிக்கிறேன் ஸ்டேசன் வரையும். இவன்... இவர் வர வேண்டாம். நீங்களே சொல்லிடுங்கத்த!”

”இவரா! அதுக்குள்ளேயுமா? ம்ம்... சரி சரி..அவ தான் சொல்லுறாள்ல நீ போக வேணாம் கார்த்திக் இங்கயே இரு.” நமட்டுச் சிரிப்புடன் அத்தையின் கேலி எதுவும் ரசிக்கவில்லை
இவளுக்கு.

”விடுங்கம்மா! இந்த லூசு பேச்சக் கேட்டுக்கிட்டு நீங்க வேற...”

”இன்னொரு தடவ லூசுன்னு சொன்னே அவ்ளோதான்”

“என்ன சொல்லாட்டி மட்டும் டைட்டாயிடுவியா என்ன?அப்படித்தான் சொல்லுவேன். லூசு... லூசு... லூசு.....”

மாமா அவசரமாய் உள்ளே நுழைந்தார்.

”என்ன சத்தம். கவுசி கெளம்பு!எல்லாம் சரியா இருக்கா ஒரு தடவ பாத்துக்க!கார்த்திக் நீயும் தான் சீக்கிரம்”

“மாமா! டிக்கெட் தான் இல்ல. உங்க கிட்ட தானே இருக்கு. இருக்கா?”

”கார்த்திக் கிட்ட இருக்கும்மா!”

மடமடவென தயாரானாள். அதிசயமாய் அவனும் அவளும் ஒரே நிறத்தில் உடையணிந்திருந்தார்கள்.

வழக்கமான விடைபெறுதலை விடவும் கனமான ஏதோ ஒன்று. இந்த பாசத்துக்கும் அருகாமைக்கும் எவளோ ஒருத்தி. அது நானில்லை. மனம் சட்டென இறகுகளை உள்வாங்கி கவலையாய் நிகழ்வுகளோடு இரண்டற கலந்தது.

மணி காலை : 6:35.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.வண்டி வந்ததும் குறிப்பிட்ட பெட்டி, இருக்கை எல்லாம் தேடித்தேடி அமர்ந்தார்கள்.

மாமா வெளியே நின்று கொண்டிருந்தார். கார்த்திக் சாமான்களை அடுக்குவதில் குறியாய் இருக்க,இவளோ உணர்வேயின்றி சிலையாய் இருந்தாள்.மாமா ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் காதில் வாங்காமல் தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தாள். எதோ உள்ளுணர்வு குறுகுறுக்க நிமிர்ந்தவள் அவன் கேலியாய் சிரிக்கவும் கண்ணீர் தழும்ப மவுனமாய் தலைகுனிந்தாள்.

பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.வண்டி நகரத் தொடங்கியது.அப்போது தான் சுரணை வர,

“மாமா டிக்கெட் எங்க? கார்த்திக் டிக்கெட் எங்க?ஏய் வண்டி கிளம்புது... நீ போகலையா? என்னடா சிரிக்குற.. ப்ளீஸ் சிரிக்காம டிக்கெட் கொடு!மாமா மாமா..” மாமா புள்ளியாய் மறைந்த்தார். வண்டி வேகமெடுத்தது. ஏதோ புரிய ஆனாலும் உண்மையா என்கிற குழப்பம் மேலிட அவனை பதற்றமாய் பார்த்தாள்.

”நீயும் வர்றியா ஊருக்கு?விளையாடாத. டிக்கெட் எங்க காட்டு பார்க்கணும்?”

“ம்ம்!இப்பத்தான் மகாராணி கனவிலேர்ந்து நனவுக்கு வந்தீங்களோ?அப்பா இவளோ நேரம் காட்டுக் கத்தா கத்திட்டிருக்கார் நீ பாட்டுக்கு என்னய சைட் அடிச்சிட்டிருக்க! அவருக்கு புரிஞ்சிடுச்சு!சே என்ன பொண்ணுடீ நீ? கூட வர்றவன்கிட்டயே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வர்றா”

”ஆமாடா நான் பொண்ணே இல்ல.இவரு பெரிய மன்மதரு சைட் அடிக்கிறாங்க.நில்லு நில்லு என்ன புரிஞ்சிடுச்சு?”

“நம்ம பையன் விரிச்ச வலையில கவுசி விழுந்திட்டான்னு அப்பாவுக்கு புரிஞ்சிடுச்சு!”

”யாரும் விழல.”

“நெசமாவா? ஆனா உன் கண்ணு வேற சொல்லுதே!பொய் பேசுற இந்த இதழ்களுக்கு எப்பவும் ஒரே தண்டனை தான்.”

“என்ன தண்டனை?”

“ம்ம் எப்பவும் என் இதழ்களின் அரவணைப்பில் இருப்பது!அதுக்கு தான் ...அந்த ராட்சசியோட அப்பாகிட்ட அனுமதி கேக்கப் போறேனாக்கும்”

“ஏண்டா பொய் சொன்ன?என்னமா நடிச்ச? சே நீ மனுசனே இல்ல! அத்தை மாமா கூட... அய்யோ என்ன நெனச்சிருப்பாங்க?ச்சீய்” அழகாய்ச் சிணுங்கி அவன் தோளில் சரிந்தாள்.

அந்த இளம் ஜோடிகளின் சந்தோச சிணுங்கல்களை சுமந்தபடி, ஒய்யாரமாய் விசிலடித்தவாறு பயணித்தது தொடர்வண்டி.
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!