Monday, September 30, 2013

ஐயம்

நூற்றாண்டு மரத்திலிருந்து
உதிர்ந்த சருகுகளும்
உரிந்த பட்டைகளும்
மரத்தின் திசுக்களில்
தன்னிருப்பை எழுதி வந்திருக்குமோ
என்னவோ!
வெட்டப்பட்டக் கிளையின் வேதனையில்
பக்கக் கிளை வளருமே தவிர
அப்பாகம் துளிர்ப்பதில்லை காண்!
உடைபட்டக் கிளை பதித்து
அங்கோர் மரம் வளர்ந்ததுவும் காண்!
ஒளிர்வும் பொலிவும்
உற்றுநோக்கலும்
கற்றுத் தேர்தலும் வேர்பிடித்தலில் இருக்கிறது
தசை பெருக்கும்
தாவர சுழற்சியுள்
வெயில் மழை காற்று
என்பனவாகிய காலத்தின் கூறுகள்
பற்றுதலிலின்றி பரிணமிப்பதில்லை
தென்றலின் வருடலில்
உடல் கூசிப் பெருமூச்செறியும்
அவயங்களுடன் கதை பேச வந்திருக்கிறேன்
செவ்விக்குடன்படுமா அப்பெருமரம்?!

Sunday, September 29, 2013

விலங்கு பூண்டிருக்கும் விலங்கு

வாதைகளோடு பிணைந்து கிடக்கிறது
வலிக்கும் நிதர்ச்சனங்கள்
சொற்களற்ற கையறு நிலையில்
என் கவிதையை
எனக்காக நானே எழுதமுடிவதில்லை
எனைக் கடக்குமெவரேனும்
பிரதிபலன் பாராது
கைவிலங்கை உடைத்துவிடுங்கள்
வாய்க்கட்டையும் பிய்த்தெறியுங்கள்
ஒடுக்கப்பட்ட வாழ்வியலை
பேசவேண்டியது
வரலாற்று அவசியமாகிறது

Saturday, September 28, 2013

அவளாகி நானும்....

இன்னும் அந்தக் குழந்தைக்கு தலை நிற்கவில்லை. எல்லா விரல்களும் வாயினுள் விட்டு சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது.கிட்ட நெருக்கிய கணம், மற்றொரு கையால் என் தலை முடியைப் பிடித்துக் கொண்டது. மெதுவாய் விடுவித்துக் கொண்ட அதே நேரம் அந்தக் குழந்தையின் அம்மா என்னை நோக்கித் திரும்பினாள். புன்னகைத்தபடி
“கொஞ்சம் பிடிச்சக்கறீங்களா? இதோ வந்துடறேன்”

சென்னையில் இது போலும் நான் பார்த்ததில்லை.அத்தனை எளிதில் குழந்தையைப் பிறரிடம் தரும் தாய்மார்களைப் பார்த்ததில்லை. சுடிதார்ல குழந்தை பாத்ரூம் போனா என்னாகும் இங்கிருந்து வங்கிக்கு வேற போகனுமே.. அப்பாடா! வெள்ளை கவுன் பாதுகாப்பு அம்சங்கள் சகிதம் என் கைக்கு வந்தது அந்தக் குட்டி தேவதை. கழிப்பறை நோக்கிப் போனவள் முப்பது நிமிடம் ஆகியும் திரும்பி வரவில்லை. எந்த லக்கேஜூம் இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொதுவிடத்து வருகிறவள் போல் தெரியவில்லை. அவளும் ஏதோ குழப்பத்தில் இருப்பது போலவும்.... அய்யோ! சடாரென குழந்தை திருட்டு சம்பந்தமான எல்லா திரைப்படங்களும் செய்திகளும் வந்து போயின..

கண்சிகிச்சைப் பிரிவின் தளம் இது. இது போல நிறைய தளங்கள் உண்டு. ஒவ்வொரு வகை மருத்துவத்திற்கும் ஒவ்வொரு தளம். நான் வேறு இத்தனை நேரமாக குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேனே தவிர அவள் என்னவானாள் என்கிற கேள்வி என்னுள் கேட்டுக்கொள்ளாமல் இருந்தேனே! என்னை நானே நொந்து கொண்டு அவளைத் தேடத் துவங்கினேன். பயம் வேறு. இதற்கிடையில் கொஞ்சமும் அழாமல் தோளில் சாய்ந்தபடி கன்னம் காது என எச்சிலபிஷேகம் நடந்தபடியிருந்தது. முதல் தளம் இரண்டாம் தளமென்று தேடியும் கண்ணில் தட்டுப்படவில்லை. அலைபேசிய தோழி வேறு போலீஸ் கம்ளைண்ட் ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்தாள். போட்டோ எடுத்தியா? அந்தப் பொண்ணு எப்டி இருப்பான்னெல்லாம்... மிரண்டு போய்ட்டேன். இதென்னடா சனிக்கிழமையும் அதுவுமா இப்படி ?
கீழே ரிஷ்ப்சன் வரை இறங்கிப் போய் CCTV ரிக்கார்டிங் பார் என தோழியின் சமயோஜிதம் ஆறுதல் தந்தது.

என் அப்பாயின்மெண்ட் வந்து விட்டது. குழந்தையோடு உள்ளே நுழைந்தேன். கண் பரிசோதனையின் போது குழந்தை கையில் இருக்கக் கூடாதென்றார்கள். நர்சிடம் போவதற்கு அத்தனை கத்தியது குழந்தை. அதிசயமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு இவங்கம்மா வந்தா நான் இங்க இருக்கேன்னு சொல்லுங்க என்றேன் நர்சிடம். இருபது நிமிட பரிசோதனைக்குப் பின் குழந்தையோடு வெளியில் வந்தேன். முழுதாய் ஒரு மணி நேரம் என்ன செய்கிறாள் கழிப்பறையில்? செம கடுப்பாக வந்தது. என்னோடு இன்னும் இரண்டு நர்சுகளும் தேடிக் கொண்டிருந்தார்கள்.எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. வேறு தளத்திற்கு சென்று விட்டாளோ? சமர்த்தாக தோளில் சாய்ந்தபடி இருந்தது அந்தப் பஞ்சுக் குட்டி. அத்தனை அழகான குழந்தை. பேசாமல் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்து உட்கார்ந்தேன். இன்னும் ஒரு 40 நிமிடம் கடந்து ஒரு வயதான பாட்டியுடன் மெதுவாய் வந்தாள்.

”கஷ்டப்படுத்திட்டாளா குழந்தை?”
“அதில்ல. எங்க போனீங்க?ஒரு மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என்னங்க நீங்க”
“இல்ல பாட்டிக்கு லேப் டெஸ்ட் எடுக்கக் கொடுத்திருந்தேன். கூட்டி வர லேட்டாயிடுச்சு. அதான்”
“சொல்லி இருக்கலாம்ல? பயந்தே போயிட்டேன்”
“என்ன பயம்?” சிரித்தபடி கேட்டாள். ஒன்றும் சொல்ல முடியவில்லை. குழந்தையை வாங்கிக் கொண்டாள். வாயிலிருந்து கையை எடுத்ததும் முன்போல் கத்த ஆரம்பித்தது.இதானா காரணம். நான் கூட முன் ஜென்ம பந்தம் ஒட்டுதல் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டேனே! நல்ல அம்மா நல்ல குழந்தை. நல்லா வருவீக!

விடைபெறும் போது சொன்னாள்,

“முகத்தைப் பார்த்தா தெரியாதாங்க. நம்பிக்கையானவங்களா இல்லையான்னு?”

அது சரி! இளிச்சவாய்ன்னு பார்த்தாவே தெரியும் போல. சனிக்கிழமை வேறு. வங்கி சம்பந்தமான முன்று வேலைகள் முடிக்கமுடியாமல் போனது.இனி செவ்வாய் கிழமை தான்.

ஆனாலும் அந்தச் செல்லக்குட்டி.க்யூட். கண்ணுக்குள்ளேயே நிக்குது.

Thursday, September 26, 2013

நந்தியும் சிவதரிசனமும்

ஒவ்வொரு சிவாலய தரிசனத்தின் போதும் அந்தப் பெரும் நந்தியின் காதில் சொல்லி வர நிறைய விசயங்கள் இருந்திருக்கின்றன. கரும்பாறை சிலையதன் உடல் சிலிர்க்க எத்தனை முறை பேசியிருப்பேன் நினைவில்லை. வெளிப் பிரகாரம் சுற்றிக் கொடிமரம் தொழுது இன்னுமொரு முறை சிவனைப் பார்க்க ஒரு அடி தள்ளித் தான் அமர்ந்திருக்கிறது நந்தி. மருளும் பார்வையென்றால் என்னவென்று கன்றின் கண்களைப் பார்த்தால் புரிந்துவிடும். ஏனோ மனதுக்கு இணக்கமான சிலை தான் நந்தி. வேண்டுதலென்று ஏதுமில்லாமல் அதன் காதில் இன்று வாழ்க வளமுடன் சொல்லி வந்தேன். பலநூறு வருடப் பழக்கத்தில் அதற்கு வாழ்த்துச் சொன்னவள் நானாக இருந்திருப்பேனென்று சிறுபூனையின் மனனிலையில் பெருமிதப்பட்டுக் கொண்டேன். பெருந்தன்மையாய் நந்தியும் மன்னித்திருக்கும்.

ஊரிலென்றால் சாயந்திரம் கோவிலுக்குள் நுழையும் போதே வாத்திய ஓசை கேட்கும். அம்மன் கோவிலில் தான் கூட்டம் நிரம்பி வழியும். சிவன் கோவிலிலோ ஒரு வயதான ஓதுவார் தேவாரப் பதிகத்தைத் தினமும் ஆர்மோனியப் பெட்டியுடன் வாசித்துக் கொண்டிருப்பார். காது கேளாத அவர், கூட்டம் இருக்கிறதா என்பதையும் பார்க்காமல் பாடிக் கொண்டிருப்பார். ஆனால் அந்தக் குரலில் ஏதோ உயிர்ப்பிருக்கும். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஆட்களும் நிறைய மணிப்புறாக்களும் அணிகளும் கோமாடத்துப் பசுக்களும் அழகாய் இருக்கும். மனம் நிறைந்தும் இருக்கும். அத்தனை அமைதியும் திருப்தியும் சென்னையிலுள்ள பழம்பெரும் சிவன் கோவில்களிலும் கிடைக்கிறது தான். ஆனாலும் இங்கே ஏதோ பக்தியில் நகரத்துவம் புகுந்தாற்போல..

இன்று ஒரு சிவாலய தரிசனம். பிரதோஷ நாட்களில் மட்டுமே ஆலய தரிசனம் என்கிற கணக்கெல்லாம் இல்லையென்றாலும் உபவாசமென்கிற எண்ணம் தோன்றும் போதெல்லாம் கோவிலுக்குப் போவதென்கிற வழக்கம் வைத்திருக்கிறேன். நிம்மதிக்கென என்கிற போதும் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தபடி மூலவர் கோபுர தரிசனமும் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் யாளியின் வடிவத்தில் பற்களை எண்ணுவதுமாய் கழியும் அந்த நாழிகைகள் அற்புதமானவை தான். கூடவே சிவபுராணமும் படிக்கக் கேட்க சரிவிகிதமாய் மனம் நிறைவு பெறும். கடவுளை தியானத்தின் மூலம் அடையமுடியுமென்றால் அந்த தியானத்திற்கான ஓர்மையுள் உறையும் பொழுதுகள் தான் ஆலய தரிசனங்கள். என் வரையில் பக்தியென்பது இப்படியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது நண்பர்காள்! சிவனோ அரியோ அம்மனோ இயேசுவோ பள்ளிவாசலோ மனம் எங்கு அமைதியுறுகிறதோ அங்கே தான் பக்தியும் மனதின் சுதந்திரமும் பிரவாகமெடுக்கிறது. இன்று உடல் மனம் ஒருமித்த மகிழ்வான தருணமதை உணர்ந்தேன்.

Tuesday, September 24, 2013

மனம் திறந்த ஒரு கடிதம்

தோழிக்கு!

தேர்ந்த வித்தகியின் வினயத்தினை ஒத்தது நின் விழி பேசும் மொழி...
பயமாய் இருக்கிறது பிள்ளைமை படர்ந்திராத பெண்களைப் பார்க்க...
கடினமொழியுனது... மழலையைத் தான் விரும்பி ஏற்கிறேன்.
பேசுவதைக் கேட்கப்பிடிக்காமல் கண்கள் ஏதோவொரு குழந்தையைத் தேடுகின்றன....
எவர் மீதோ எவரின் நட்பின் மீதோ நான் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தகர்க்கும் காரியத்தில் முழுமூச்சாய் இறங்குகிறாய்...

விளக்கம் கேட்கவும் விளக்கம் சொல்லவும் நாங்களே விரும்பியதில்லை. தேவையுமிருந்ததில்லை. பாலின பேதம் நுழையாத தனிவழியில் பயணிக்கும் நட்பது.நானே தேர்ந்த நல்லுறவானதந்த நட்பு. ஆத்மஞானியவன். உடல்களைக் கடந்தவன். இனி சுகிக்க துக்கிக்க மிச்சமில்லாத அனுபவக்குவியல்.அங்கே என் அடையாளம் பெண்ணாய் எப்போதுமில்லை. சகஜீவி என்கிற தோழமையுண்டு. முழுதாய் சுதந்திரமாய் உணரும் தருணங்கள் நாங்கள் விவாதிக்கும் மின்னாடல் தருணங்கள். பேசியிருக்கலாம் தான் இத்தனையும்...நெற்றி நெறித்து தீவிழியோடு பேசும் என் கோபம் தாங்குவாயா? முதல் சந்திப்பு வேறு. மரியாதை நிமித்தம் மௌனம் பேசி வந்தேன். மெசியாவெனச் சொல்லிக் கொண்டாய். சிரித்துக் கொண்டேன். நன்னீரோடையைக் குட்டையெனக் குழப்பி மீன் பிடிக்கும் வேலையெல்லாமா மெசியாக்கள் செய்வார்கள்.

தெளிவாய் தோழி!

அத்தனை ஆபத்தானவர்கள் என்னுடன் இல்லை. அன்பாலானது என்னுலகம். அடக்குமுறைகளின்றி கரங்கோர்த்துச் சிரிக்கும் இயல்பானவர்கள் சூழ் உலகம். போலியில்லாத நண்பர்கள் வரிசையில் ஏன் உன்னைச் சேர்த்தேன்? உன் எழுத்தும் அதன் நேர்மையும் உண்மையென்றெண்ணினேனோ என்னவோ! முதல் சந்திப்பே இத்தனை கசந்தது உன்னுடன் மட்டும் தான். நான் சுதந்திரப்பறவை. கண்ணிகள் வைத்து என்னைப் பறக்க விடாது சிறைபடுத்துபவர்களைப் புறக்கணிப்பது என் கட்டாயமாகிறது. எப்போதும் சிக்கினேனில்லை. :)

மன்னிக்கவும் தோழி!
நடத்தை, சுய ஒழுக்கம், கண்ணியம் இதெல்லாம் என் வரையில் நான் மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளேன். அங்கே நீங்கள் ஏன் கல்லெறிகிறீர்கள்? காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று உங்களின் தேவையில்லாத அக்கறை எரிச்சலாயிருக்கிறது. எவர் அசைத்தும் நகராத கரும்பாறை மனமிது. அத்தனை எளிதல்ல நானும் என் கோட்பாடுகளும். அப்பாவிடம் சொன்னேன். சிரித்தார்.அவரிடமும் பேசியிருக்கிறாய். நல்லது. புரிதலுக்கு ஆட்பட்ட எந்த உறவுக்குள்ளும் அத்தனை சீக்கிரம் நுழைந்துவிடுவதில்லை இது போன்ற சந்தேகக் கணைகள்.
பிறகேன் இத்தனை வரிகள்? கேட்பது கேட்கிறது. வலிதனை வரிகளில் இறக்கி வைத்தே கடந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே... நிச்சயம் படிப்பாய் தெரியும்.  உனக்கென்பதுவும் புரியும். படி. தெளி.

தனிப்பட்ட பிரச்சினை தான் பேசித் தீர்க்கலாமே ஏன் இப்படியொரு பதிவு? இப்படி கேட்பவர்களுக்கும் ஒரே பதில் விஷ மரமொன்றின் வேர் நானறியாமல் பரவியிருக்கிறது. அதன் பரவல் எத்துணை தூரமென்று தெரிந்த நாளின் அதிர்ச்சி இன்று வரை நீடிக்கிறது.
நீ பரப்பும் பொய்யுரைகள் என் காது நிறையும் போது எத்தனை வலி தெரியுமா? என்ன மாதிரியான புகழுக்காக இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி அதற்கு என் பெயர் சூட்டுகிறாய்?  பிரபலமாதலும் பிரபலத்துவமும் வெளியுலக வெளிச்சமும் தேவையில்லாத தன்னிறைவு நிம்மதியில் தான் திளைத்திருக்கிறேன். இப்படியொரு அடிக்கோடிதலுக்கு என்ன அவசியம் வந்தது? அலர்தூற்றும் ஒரு அறிவிலியுடனா நான் என் 72 நிமிடங்களைப் பேசிக் கழித்திருக்கிறேன்.

உன் குரல் கேட்கவோ உன்னைப் பற்றி பேசவோ விரும்பாத மனநிலை தான் இன்றுவரை. உன் அக்கறையின் பேரில் திடீரெனக் குதிக்கும் உறவு/நட்பின் கரங்களின் எண்ணிக்கை தான் என்னை இப்படி எழுத வைக்கிறது. புறம் பேசுதலுக்கென உள்பெட்டியில் கருத்துரையிடுபவர்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை எப்போதுமே.

பிரச்சினையில்லாத எனக்கேன் தீர்வுகளைப் பரிந்துரைக்கிறீர்கள்?!

பெண்ணென்ற கரிசனத்தோடென்றால் இதல்ல கரிசனமென்பது... அப்பட்டமான கீழ்மையின் பாதிப்பு. தவிர எவ்விடத்திலும் பெண் என்கிற அடையாளத்திற்காக சலுகை பெறத் துடிக்கும் நிலையிலும் நானில்லை. இது உங்கள் மனவளப் பிரச்சினை. மீண்டு வாருங்கள் தோழி.

நீங்கள் இத்தனை தூற்றியும், நீங்கள் எதிர்வரும் போழ்தில் இதழிடையில் மலர்வானதொரு புன்னகை மிச்சமிருக்கும்.
பிரச்சாரத் தொனியிலிருந்து விலகி நேர்மையான எழுத்துக்களோடு பயணியுங்கள். வாசகியாய் இருப்பேன். அதே நட்பென்பது கடினமெனினும் பழக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
காலத்தின் கைகளில் எனை ஒப்புவித்தபடி... ஓடிக்கொண்டிருக்கிறேன். நின்று நிதானிக்க நேரமில்லை.

வாழ்த்துகளும் வணக்கங்களும்...

வாழ்க வளமுடன்

- கயல்

Monday, September 23, 2013

கவிக் கோர்வை - 18

எண்ணம் இடுதிரியோ
எரியும் சுடர் தான்
என் கவியோ?!
*****
சலங்கையிலிருந்து உதிர்ந்த
தனியொரு முத்துக்கும்
குலுங்கிச் சிரிக்கும் திறனுண்டு

*****
சொல்லாமல் வந்துவிட்டேன்
மயிற்கற்றைச் சுருளை அலுத்தபடி
பெருக்கித் தள்ளும் நாளில்
நினைத்துக் கொள்வாயா அம்மா?

*****
வாய்க்கூடணிந்த கன்றொன்று
மண் தின்பதற்கென்று அலைவுறுகிறது...

*****
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை
கடவுளுடனான சினேகத்தில்
மகிழ்கிறது

*****
நூறு சதவீதம் நிரம்பிய குளமும்
காற்றுக் குமிழிகளைத் துப்பியபடியிருக்கிறது....

*****
இரண்டாம் யாமத்தில்
வானக் குளத்து நிலா
பூமியில் மிதந்தபடியிருக்கிறது

*****
நிகழ் இரவில்
நிழல் தேடி...
தீபங்களேந்தியபடி
நகர்கிறதந்த நிஜம்

*****
தீர்ந்து போன வார்த்தைகளோடு
மௌனம் பருகி விடைபெறுமிந்த
சம்பிரதாயங்கள் வேண்டாமே!
வலுவில் கூட்டிவரும் சிரிப்பும்
அருகிருந்தும் தூர நிற்பதுவும்
அவஸ்தையாய் இருக்கிறது
பிறர் பார்க்க
பிறர் ரசிக்க
பிறர் புகழ
பிறர் மகிழ
பிறருக்கென....
எத்தனை முறைதான்
கிழித்து ரணமாக்குவாய்
உன் காதல் சுமந்தெறிந்த மனதை....

இரு தெய்வங்கள் வரமருள்கின்றன

இடைக்கச்சையும் மார்புக்கச்சையும்
அவிழும் பேராபத்தில்
அதிரும் இசைக்கென ஆடிக்கொண்டிருக்கிறாள்
நர்த்தகி ஒருத்தி
வெளிச்சம் பாய்ச்சி வியாபாரமாக்கும்
உத்திகளிலிருக்கின்றன
பணம் தந்த மிருகங்கள்
இமைக்காமல் கண்கள் விரிய காத்துக்கொண்டிருக்கின்றன
பலகோடிக் கண்கள்
பதைபதைபுடன் செய்வதறியாது என்போல் சிலரும்....
குழுவிலிருக்கும் இன்னொருத்தனும் இன்னொருத்தியும்
திடுமென புகுத்திய நடன அசைவுகளில் ஆடை திருத்த அவகாசமளிக்கிறார்கள்
கைதட்டுங்கள்!
ஒரு மனுசிக்கு
இரு தெய்வங்கள் வரமருள்கின்றன

Sunday, September 22, 2013

இருண்மை வலி

இருண்மை படர்ந்த கவிதையுள்
உருகும் சிறுமெழுகென
ஒளிசிந்திப் போகிறது ஏதோவொரு வரி
விலங்கிட்ட கைகளுடன்
பளீரிடும் சிரிப்பை உதிர்க்கும்
அவளை வெளிச்சத்தில் பாருங்கள்
ஒளி குன்றும் போதில் குளமாகிய கண்கள்
எழுத நினைத்த அனைத்தையும் மறந்துவிட்டேன்
இன்னொரு மெழுகுவர்த்தியைக் கொல்ல வேண்டும்
இப்போதைக்கு அவ்வளவு தான்
விலங்கை விடவும் இருளே அதிகம் அச்சுறுத்துகிறது
அவளையும் என்னையும்...
முடிந்தால் பூட்டிய விலங்குடைக்க
நாளை ஏதேனும் செய்யவேண்டும்

Saturday, September 21, 2013

தெத்துப்பல் அழகி

அரைமணி நேர உடற்பயிற்சியும் வேக நடையும் வெந்நீர் குளியலும் கடந்தும் அரற்றும் மனது ஒரே கேள்வியைத் தான் கேட்கிறது....
“உடல், உன் உயிரை விட பெரிதா ? அம்மணமென்ன அத்தனை பெரிதா?”
இந்த கவரிமான்,கற்பு பிதற்றலெல்லாம் எரிச்சலின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. உன்னுடம்பை ஆடையின்றி எவராவது பார்த்துவிட்டால் அவனோடே வாழ்ந்து செத்துப்போ எனவும் தூக்கில் தொங்கிவிடு என்றுமா நீ படித்த படிப்பு சொல்லி வளர்க்கிறது? எவர் வழி இவ்வழி தேர்ந்தாய்?
தெத்துப்பல்லிருக்கும். மாநிறம் தானென்றாலும் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகி. சின்ன வயதில் பார்த்தது. தோழியின் தங்கை. அத்தனைப் பரிச்சயமில்லையெனினும் பார்த்திருக்கிறேன்.
மரண ஓலமின்றி நடந்த அவளின் இறுதி ஊர்வலத்தில் கலந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் மனம் மரத்துவிட்டது. அழுகை வருவதில்லை அத்தனை சீக்கிரம். என்னை விடுங்கள். அங்கே பெரிதாய் எவருமே அரற்றவில்லை. சீக்கிரம் சீக்கிரமென்கிற குரல்கள் தான் கேட்டபடி இருந்தன. வந்ததிருந்த உறவினர்கள் யார் நீங்களென்று விசாரித்து உள்ளே விட்டார்கள்.
இன்னும் சிலமணி நேரத்தில் சிதைக்குப் போகும் மகளென்ற போதும் அவள் மரணத்தை விடவும் அதன் காரணத்தை மறைக்கும் தவிப்பிலிருக்கும் தகப்பன் எத்தனை பெரிய மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கிறான்? விசும்பாமல் வெறித்தபடியிருக்கும் அந்தக் குடும்பத்தின் அத்தனை முகத்திலும் பேரதிர்ச்சி.

’வயித்துவலி சார்’ அப்பட்டமாய் பொய் சொன்னார். எத்தனை வாதாடியும் ‘வேணாம்மா. போலீசு கீலீசு கோர்ட் பத்திரிக்கை இதெல்லாம் வேணாம்மா. விட்டுடுங்க ப்ளீஸ். இன்னும் ரெண்டு பொட்டப்பிள்ளைங்க...’ அமைதியாய் கலைந்தார்கள்.

எங்கிருந்தென்று புரியவில்லை.ஆனால் சரிசெய்ய வேண்டும். பாலியல் கொலைகளும் பலாத்காரங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணிகளாய் பிறர் இருந்தால் தண்டணை வாங்கித் தர முடியும். உள்ளுக்குள்ளே உடைந்து சிதறி தற்கொலையில் மாய்ந்து போகும் இவளைப் போன்றவர்கள் தான் சார்ந்த குடும்பத்துக்கு மனநோயை பரிசாய் தந்துவிடுகிறார்கள்.

அந்தம்மாவின் முகம் பார்க்கவே முடியவில்லை. சே! நினைவுகளைத் தூரப் போடும் வரமொன்று தாருங்களேன். இம்சித்தபடியிருக்கிறது வேதனையாய் தூங்கிய அந்த முகம்.

Thursday, September 19, 2013

நினைவுகளை ஏன் வைத்திருக்கிறேன்?

பதியமிட்ட ரோஜாச் செடி
நட்டுவைத்த முருங்கைக் கொம்பு
பிடுங்கி நட்ட பக்கவாழை
வேலியோரத்தில் செழித்து நிற்கும்
அடுக்குமல்லி
சிரிக்கக் காத்திருந்த
இதழ் வளர்ந்த செம்பருத்தி
மல்லி புதினா மணக்க கடும்புதரென
கறிவேப்பிலைக் காடு
வேம்பு பலா மா சேர நீண்டுயர்ந்த
தென்னைக் கூட்டம்
குளவிகள் கொசுக்களென்றிருந்தும்
சொக்கி நிற்க காரணமாய்
சிறு குருவிக் கூடு
கயிற்றுக் கட்டிலும்
கவிதைப் புத்தகங்களும்...
வெயில் பூசி தென்றல் ஆற்றும்
மிதஞ்சூட்டில் நித்திரைக் கனவு
எல்லாமும் விட்டு வந்தேன்
நினைவுகளை ஏன் வைத்திருக்கிறேன்?

Wednesday, September 18, 2013

அழகு தானில்லையா?!

விளையாடிக் கொண்டிருக்கிறோம்
உன் கவிதையில் நானும்
என் கவிதையில் நீயும்
சொல்லிக் கொள்ளாமல் நீண்டபடியிருக்கிறது
பொய்முகமூடி தானென்றாலும்
யார் முதலில் கழற்றி வைப்பதென்றே...
ம்ம்ம்...
இருபுறமும் துளையிட்ட குழல் என்கிறாய்
அதனுள் இசைத்தபடி நகரும்
காற்றென்கிறேன்
எவரோடு போனாலும் - எனை
வேரோடு பறித்துவரும் வல்லமை சாற்றுகிறாய்
ஆண்மையில் திளைத்துப் போய்
மௌனிக்கிறேன்
மனக்குதிரையை லாவகமாய் செலுத்துகிறாய்
உரசி வரும் உனை நான் காதலாய் பார்ப்பதும்
நீ என்னைச் சீண்டிச் சிரிப்பதுவும்
நகர்த்தும் சாட்டை எவரிடம்?
இசைந்தபடி இழுத்துக் கொண்டோடும்
காதலைத் தான் கேட்க வேண்டும்
அழகாய் இருக்கிறதிந்த
கவிதைக்கு பதிலாய் இன்னொரு கவிதை....

Tuesday, September 17, 2013

பொய்

ஒன்றைச் சொல்லியும்
பிரிதொன்றை மறைத்தும்
பொய்யில் பூக்க வைக்கிறேன்
உனது புன்னகையை...
நிலா, முற்றத்து அண்டாவில்
மூழ்கிக் குளிக்கிறது என்பது போல
எண்ணற்ற பொய்கள்
நீ சிரித்தால் போதும்
பாவக் கணக்கை
பிறகு பார்த்துக் கொள்ளலாம்

Monday, September 16, 2013

பிம்பம்

பிம்பங்களின் அசைவுகளில்
வசமிழந்து கிடக்கிறான்
ரசிகன்
உத்திகளின் கயிறு கொண்டு
ஆட்டுவிக்கிறது மாயை
பொம்மலாட்டத்தில்
லயித்துக் கிடக்கும் மனிதனை
பொம்மையாக்கி ஆட வைக்கிறது
திரையிலாடும் பிம்பம்

Sunday, September 15, 2013

சுயம்பென்றாலே தான்தோன்றிகள் தாம்!

நண்பனோடு உறவு கொள்வதில்லை
அவன் நண்பன்
நண்பன் மட்டுமே
தெளிவாகியிருக்கும் இந்நேரம்
நம்பாமல் கிசுகிசுத்தாலும்
கடுகளவும் மதிக்கப்போவதில்லை
உங்களுக்கு அவசியமில்லாத எதற்கும்
என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள்!
உறவுக்கழைக்கும் காதலனிடம் நட்பை வேண்டுகிறேன்
தாலிக்குப் பின்னென்ற
தீர்மானத்தை முன் வைக்கிறேன்
காதலன் கணவனாவதை தற்காலிகமாக தள்ளிவைக்கிறான்
என் நியாயம் இப்படி....
ஒருநாள் விருந்துக்கு
வாழ்நாள் மரத்தை வெட்டுவானேன்...
போலிகள் மீது நம்பிக்கையில்லாதயென்னை
சுற்றம் வெறுக்கிறது
இருந்தாலும்.....
கடலளவு பாசத்தோடு கரை தொடுகிறேன்
எதிர்படும் எல்லோருமென்னை
'கட்டுப்பெட்டிப் பட்டிக்காடு' என்கிறார்கள்
அங்கே தானே இம்மரம் வேர்பிடித்தது?
மிகையுணர்ச்சிகளுகாட்படும் வழக்கமில்லையாதலால்
பிள்ளைமை சிந்தும் செம்மொழிக்கவி
ஒரு கோப்பைத் தேநீர்
இரண்டு மெல்லிசைக் கோர்வைகள் போதும்
இயல்புக்கு வர....
அந்தோ பரிதாபம்!
அடிபட்டு எதிரியானோர் அணியில்
புறம்பேசி பல்கழன்றவர்களும் சேர்ந்திடுகிறார்கள்
எதிர்படும் நாளில் மலர்வாய் புன்னகைக்க வேண்டும்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!