Tuesday, February 1, 2011

ஒரு நதி



பாடும் பறவையொன்றின்
குரல்வளை கிழித்த அம்பு
வேடனின் குடிலுக்கு
ஒரு கோப்பைக் கறி 
இரு அகப்பை குருதி
மாமிசமணத்தோடு பரிமாறிய
ருசியான உணவாகியிருக்கலாம்.


தொலைநோக்கி குறிபார்த்து
வில்வளைத்தவன் வீரம்
உயிரொன்றை அம்பெய்து
தனதாக்கிய ஆளுமை
எல்லாம் சரி,

மரிக்குமுன்னிருந்த இன்னிசையும்
கானப் பறவையதன்
இசை நவின்ற குதூகலமும்
கொடும் வேடனின் நாவறியுமா?
இல்லை
அதனுயிர் தொட்டுப் பிரித்த
வில்லம்பறியுமா?

**************

ஓடுவதில் களைத்த நதியொன்றின்
பயணம்
போதுமென்ற புள்ளியில்
ஆழ்துளையிறக்கி தன்னிருத்தலை
பதிவு செய்கிறது.

ஊறிப்போதலினுள் உவப்பெய்தா
அந்நதியோ
பயணத்தில் லயித்து
தேக்கி வைத்த
புள்ளிகளுக்கிடையில்
தொடர்ந்தபடியிருக்கிறது
வாய்க்கால் வாயிலாக...


17 comments:

தோழி said...

// கானப் பறவையதன் இசை நவின்ற
குதூகலத்தையும் கொடும்
வேடனின் நாவறியுமா?
இல்லை அதனுயிர் தொட்டுப் பிரித்த
வில்லம்பறியுமா? //



நல்ல சிந்தனை.. சூப்பரா எழுதிருக்கீங்க..

chandru2110 said...

ஆஹா ...அருமை ! அருமை ! மிக சிறந்த சொல் மற்றும் பொருள் வளம்.

மதி said...

excellent words and depiction .. a good deep poem really !

பா.ராஜாராம் said...

அட!

கலக்குறேயேடா பயலே! :-)

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு....

பழமைபேசி said...

கலக்குற பயலே,

வெட்டி மடக்குறதுல இடறுதடா.......

//மரிக்குமுன்னிருந்த இன்னிசையையும்
கானப் பறவையதன் இசை நவின்ற
குதூகலத்தையும் கொடும்
வேடனின் நாவறியுமா?//

மரிக்குமுன்னிருந்த இன்னிசையையும்
கானப் பறவையதன்
இசை நவின்ற குதூகலத்தையும்
கொடும் வேடனின் நாவறியுமா?

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு....

சுசி said...

நல்லா இருக்கு கயல்.

நிலாரசிகன் said...

கவிதைகள் நன்று.வாழ்த்துகள்.

Unknown said...

அதாவது ஆத்தோரமா ஆழ்துளைக் கிணறு அதாவது போர்வெல் போட்டு தண்ணி எடுத்து வயலுக்கு வாய்க்கா வழியாப் பாய்ச்சுறாங்க! கரெக்டா

Madumitha said...

முதற் கவிதை மிகவும்
உணர்வுபூர்வமானது.
சொற்பிரயோகம் அட்டகாசம்.

சின்னப்பயல் said...

இசைப்பிரியாவிற்கு இரங்கற்பா..

VELU.G said...

நல்ல சிந்தனை வளம்

சுசி said...

டொக் டொக்.. தொடர் பதிவுக்கு கூப்டுருக்கேன் மேட்டம் :)

Unknown said...

பிரமாதம்..

கயல் said...

அனைவருக்கும் நன்றி!

J S Gnanasekar said...

இரண்டும் அருமை.

முதல் கவிதையின் கருவில் எப்போதோ யாரோ எழுதிய கவிதை ஒன்று நினைவில் வர, தேடிக் கண்டுபிடித்தேன்.

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.

- ஞானசேகர்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!