Sunday, June 30, 2013

என் கவிதை

எனக்கான வார்த்தைகளைப் போட்டு
சமைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு கவி
விரைவில்
உங்களுக்கும் பரிமாறுவேன்
அது என் சுவை
பழகிய ருசி
தொன்று தொட்டு ஒரே சேர்மானம்
சமைக்கும் போது சுவைப்பதில்லை
அதில்
இரண்டு கல் உப்பு அதிகமிருக்கலாம்
நான்கு சிட்டிகை இனிப்பு
குறைத்துப் போட்டிருக்கலாம்
புளிப்போ கசப்போ
ஏதோவொன்று தூக்கலாய் இருக்கலாம்
உவகை மேவிய உவர்ப்புமிருக்கலாம்
அனுமானங்களெல்லாம்
’....லாம்’ களாய் முடிந்தாலும்
அதுயெனக்கு மனவலிக் கசாயம்
விரும்பினால் பருகுங்கள்
வேண்டாமெனில்
நாளையின் இரவுக்கென நான் அதை சேமிப்பேன்

Friday, June 28, 2013

உயிர்வாங்கிப் பறவை

ஈரலில் படிந்த விசத்தை
கிளறி விடுகிறாய்
ஒரு கோப்பைச் சாராயத்தில்...
குடிப்பதற்கு மட்டும்
ஆயிரம் காரணங்களுனக்கு
வரிசையில் நிற்கின்றன

வசவித் தெளிந்துணர
வாடிக்கையாய்
நான்கைந்து பெட்டிகள்
புகைத்துத் தீர்க்கிறாய்!
சுகித்துக் களித்த
பெண்களனைவரையும்
ஊர்,பெயர் சகிதம்
ஒப்பித்தபடி தூங்கிப் போகிறாய்
எத்தனை தான் பாறையென்றாலும்
இத்தனையில் கடைசிக்கு
கலங்காமலா இருக்கும்?

கண்ணீர் வரிகளோடு
நிசப்தம் சூழந்த இரவு
மேல்மாடச் சாளரங்களில்லாவிடில்
குமைந்தே குறுகிவிடும் வாழ்நாட்கள்
காற்று தழுவும் இளமையையும்
மார்பிலாடும் சரடையும்
பெருமூச்சோடு தொட்டு மீள்கிறேன்
பந்தமில்லா கயிறெதற்கு
பற்றோடு ஒட்டிக் கொண்டிருக்கும்
பரிதாபமிக்க ஜீவன்கள் காரணம்

நீ சொல்லும் கதை கேட்டால்
புலரும் சூரியனும் கூசிப்போகும்
ஆணென்ற அடையாளம்
தவறுகளுக்கெல்லாம்
தனிஅர்த்தம் கற்பிக்கும்
எல்லாம் சரி!
என்னை ஏன்
பாதிரி ஆக்குகிறாய்
கவிதையெழுதுவதைத் தவிர
நின் மனையாள் வேறொரு பாவமும்
செய்தேனில்லை

சுதந்திரமானவர்கள் துணைக்கு
அடிமைகளையே தேர்கிறார்கள்

Tuesday, June 25, 2013

போலிகளே!!!

எத்தனை தடவை தான்
நிரூபிப்பது?
நீ தேடும் காரணிகளேதுமில்லாத
சாமான்ய பெண் நானென்று?
திரும்பத் திரும்ப இம்சிப்பதில்
தெளிவாகிறது
நான் யாரெனச் சொல்வதில்
நான் யாரென அறிவித்தலில்
என் இயலாமையை உலகறியச் செய்தலில்
என்னைப் பற்றி நீ கட்டமைத்த
ஏதோவொரு
முன்முடிவின் அடித்தளம் வலுப்படுகிறது
வலுத்த அரசியல் பிண்ணனியாயிருக்கும்
அறியாமைகளென நான் சொன்னதை
கண்டுபிடித்ததாய் நீ அறிவிக்கிறாய்
அடிபொடிகளின் கரகோஷத்தில் விண்ணதிர்கிறது
என்னைப் பற்றிய உண்மைகள் தான்
இருந்தாலும் குரல் வேறு
அவமானத்தில் கூனிப் போகிறேன்
அழுது முடியும் வரை தைரியம் வரப்போவதில்லை
அழுவது வீரமல்ல இது மனச்சாட்சி
அதனாலென்ன விருதுக்கெனவா வீற்றிருக்கிறேன்
அவமானத்துக்கு அழுவது கறை கழுவுதல்
போலிகளை இனங்காண்வதாய்
போலிகளே புறப்படுகிறார்கள்
உரைக்கப் பேசுபவன்
உத்தமனாகிறான்
என் உழைப்பெல்லாம் பிரளயம் விழுங்கிவிட்டது
இருக்கும் பிடி தானியத்தில்
எத்தனை கதிர் விளையும்
கணக்கீடுகளோடு
வரப்பு வயல்களில் நீர்வடியுமட்டும்...

Monday, June 24, 2013

கவிக் கோர்வை - 12

*

அகில் புகையில்
மயங்கி ஒடுங்குகிறது
வெற்றிவேர்
தணலின் வாட்டத்தில்
சுழலும் சுருளது
மூர்ச்சித்தவனின் சுவாசம்
கலக்கிறது
வேர் மடிந்ததும்
அவன் எழுந்ததும்
ஒரே கணத்தில்...
உச்சாடனங்கள் ஓங்கியதிர
கனவு கலைகிறது

*

காற்றில் பறந்தபடி இருக்கட்டும்
அந்தச் சிறகு
சாதி பகுத்த மண் வேண்டாம்

*

Saturday, June 22, 2013

பலவீனம்

ஒரு கோடை விடுமுறைக் காலம்.பேத்தியைப் பார்க்க மகள் வீட்டுக்கு வந்திருக்கிறார் அந்த கிராமத்து முதியவர். ’எப்ப பார்த்தாலும் ஏன் தாத்தா வாழைப்பழமே வாங்கி வர்றீங்க. சுத்த போர்’ என்றபடி ஓடிவிட்டாள் குட்டிப் பேத்தி. கழட்டி மாட்டியிருந்த கதர்ச் சட்டையில் பயணச் செலவுக்கு ஒரேயொரு ஐம்பது ரூபாய் மட்டும். கூடவே கத்தையாய் ஏதேதோ ரசீதுகள். தலை வாழை உணவு உபசரிப்பில் தூக்கம் வந்துவிட்டது. பயணக் களைப்போடு நன்றாய் தூங்கி விட்டார். ஐஸ் வண்டிகாரனின் அவரசரத்தில் வீட்டிலிருந்த குட்டிப் பெண் அவரிடம் கேட்காமலே சட்டையிலிருந்த பணத்தை எடுத்து விட, இது எதுவும் அறியாமல் விடைபெற்று கிளம்பி விட்டார். பேரூந்து ஏறிய பின் தான் தெரிந்திருக்கிறது. பாதி வழியில் இறக்கிவிடப்பட்டு பெரம்பூரிலிருந்து சூளைமேடு வரை நடந்தே வந்திருக்கிறார். பசியும் களைப்புமாய் சோர்ந்து வந்தவரிடம் கோபமாய்,
‘இவ்ளோ தூரம் நடக்கறாதுக்கு, திரும்பி அங்கேயே போய் கொஞ்சம் பணம் வாங்கி வருவது தானே?’
தயக்கமாய் பதில் சொல்கிறார்,
‘தன்மானம் இடம் கொடுக்கல. நடந்தே வரலாம்னு நடக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் தண்ணி கொடும்மா.’ தளர்வாய் உட்காரும் அவரை காண்பது மிகவும் கஷ்டமாயிருந்தது.
மகன் வீட்டுக்குப் போக வேண்டும். திருவெற்றியூரில் இருக்கிறது.

‘ஏன் பெரியப்பா இப்டி வயசான காலத்துல இங்கயும் அங்கயும் அல்லாடிக்கிட்டு. ஊரில போய் நிம்மதியா இருக்கலாம்ல?’

‘அந்தத் தனிமையும் முதியோர் இல்லம் மாதிரி தானே. வேலைக்கு போகிற மகனுக்கும் மருமகளுக்கும் ஒத்தாசையா இருக்கலாமேன்னு தான். அத விடு, அம்மா டேய்! பூண்டுக் குழம்பும் உருளைக்கிழங்கும் செஞ்சி தாடா’

உரிமையாய் கேட்டதும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பெரியம்மா இருந்த வரையிலும் அவர் இத்தனை தளர்ந்து பசிக் களைப்போடு நான் பார்த்ததேயில்லை. எல்லா சொத்துக்களையும் விற்று கல்யாணமான மகனுக்கும் மருமகளுக்கும் தந்துவிட்டு இப்படி அலைகிறார். பென்சன் பணமும் கை விட்டுப் போகிறது. மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணமென்று. தன்னுடன் இருக்கும் அப்பாவிடம் பணமென்று வாங்குவதில்லை கட்டணங்களை தலையில் கட்டி விடுகிறான் அண்ணன். தனக்கென ஏதும் வைத்திராமல் இப்படி இருக்கும் அவரைப் பார்த்தால் கோபமாகவும் அதே சமயம் பாவமாகவும்.ஒரு வார்த்தை அண்ணாவையோ அண்ணியையோ குறைவாக பேசமாட்டார். அத்தானையும் அக்காவையும் கூட.

நன்றாய் படித்து அரசு வேலையில் மிடுக்காய் இருந்தவர். காலை எழுவதே வேலைக்குச் செல்வதற்கென்று வாழ்ந்து பழகியவர். சம்பாதிக்கும் பணமத்தனையும் பெரியம்மாவின் நிர்வாகத்தில் தான். அத்தனை ஒற்றுமையான தம்பதிகள். எப்படியிருந்த மனுசன் என்கிற வார்த்தை ஏனோ அவரை நினைவுக்குள் இழுத்துவருகிறது.

அவரறியாமல் ஐந்து நூறு ரூபாய் தாள்களை சட்டைப்பையில் வைத்துவிட்டேன். கிளம்பும் போது பார்த்து விட்டார் போலும்.
’எதுக்குடா இவ்ளோ எனக்கு, இந்தா’ நான்கு தாள்களைத் திருப்பித் தந்தார். அழுதுகொண்டே முறைத்ததில், ‘சரி சரி அழாதே!’ நெற்றியில் முத்தமிட்டு விடைபெறும் அவரை நான் என்னுடனே வைத்துக் கொள்ள நான் அவருக்கு மகனாய் பிறந்திருக்க வேண்டும்.பணம் என்கிற வஸ்துவின் தேவை குறையும் போது அண்ணாவுக்கும் இவர் கண்ணுக்குத் தெரியலாம்.
அப்போது வரை பெரியப்பா இப்படியே தான் அல்லாடக் கூடும். தப்புவிக்க என்னிடம் மனமிருந்தாலும் உரிமை இல்லை. ஒரு முறை அண்ணியிடம் ‘அவர் என்னுடனே இருக்கட்டும் ‘ எனக் கேட்டு ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். அண்ணாவை விடவும் அக்காவை விடவும் எனக்கு அவரிடம் உரிமையில்லை... ஆனால் பாசம் அதிகம்.

முதியோர் இல்லங்களைப் புறக்கணிக்காதீர்கள் நண்பர்களே! பாசமற்று பெயருக்கு சேர்ந்து வாழ்தலை விடவும் தன் வயதொத்த நண்பர்களுடன் வாழ்ந்து முடிதல் சுகம். பெரியப்பா போல சுமைதாங்கி இயந்திரங்கள் ஓய்வு காலத்தில் விரும்பியபடி வாழ்தல் எங்கு சாத்தியமோ அங்கேயே இருக்கட்டும்.

ஆனால் அவருக்கு பாசமென்பதே பலவீனம்....

Thursday, June 20, 2013

சண்முகம் F/O கயல்விழி


அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் தான் பிடிக்கும். வெறிப்பிடித்த ரசிகர். அப்பாவென்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி கலர் டீவி வந்த பின்னாடியும் அடிக்கடி கருப்பு வெள்ளைப் படத்தை பார்க்க வைப்பார். அன்பே வா போன்ற படங்கள் ஆறுதல். வீட்டிலிருக்கும் நேரம் குறைவென்றாலும் இருக்கும் நேரம் முழுதும் எம்.ஜி.ஆர் மட்டும் தான். படுதீவிரமான அதிமுக காரர்.அ.தி.மு.க ஆரம்பித்த நாளிலிருந்து இன்னும் எந்தக் கட்சிக்கும் மாறாமல்(தாவாமல்), எந்தப் பெரிய பதவியும் தரப்படாமல், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும் விசுவாசத்தினால் கட்சியில் இருக்கும் ஏமாளிகளைக் கணக்கெடுத்தால் பதிலாய் கிடைக்கும் அடிமட்டத் தொண்டர்களில் என் அப்பா நிச்சயம் இருப்பார். அம்மா புகழ்பாடும் விசிலடிச்சான்களுக்கு மத்தியில் இவரின் தமிழ் புலமை பாவம் என்ன செய்யும். தவிர சபை நாகரிகம் வேறு பார்ப்பார். அவர் தமிழுக்கும் அரசியல் வாழ்வுக்கும் உந்துதலாய் இருந்த பெருமக்கள் அப்படியான பெருமைக்குரியவர்கள்.

திராவிடக் கட்சியான அதிமுகவில் இருக்கும் பெரியார்
கொள்கையாளர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர். காலில் விழாதவர்கள் கவனிக்கப்படமாட்டார்கள்.காரணம்,கட்சித் தலைமைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அடிபொடிகள் வகுத்த கட்சியின் நியதி. மாறுதலுக்கு ஆட்படுமா எதிர்காலம். கேள்வி மட்டும் பதில் என்னிடமும் இல்லை.

அரசியல் நிலைப்பாடும் இலக்கிய ஆர்வமும் அவருக்கு வெவ்வேறு துருவங்கள். கலைஞரின் தமிழ் மிகவும் பிடிக்கும். நல்ல இலக்கிய ரசனை உள்ளவர். குறிஞ்சிப்பா பாடுவார். புறநானூற்றுப் பாடல்களத்தனையும் எளிதாய் சொல்லுவார். சிலப்பதிகாரம் அசை பிரித்து பொருள் விளக்குவார். இலக்கியவாதியான அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதேனும் எட்டிப் பார்க்கும் அந்த முகம். அவரின் சில நண்பர்கள். முக்கியமாக காரையூர் தமிழ் வாத்தியார். இருவரிடையே நிகழும் இலக்கிய விவாதங்களை கேட்க பார்க்க மிகவும் பிடிக்கும்.

’சண்முகம் பொண்ணா நீ? உச்சரிப்பே சரியில்ல’ இந்திரா டீச்சர் அழுந்தக் கொட்டியது இன்னும் நினைவிலிருக்கிறது. அவரின் கல்லூரித் தோழி. அப்பாவின் சொற்பொழிவுகள் பற்றிய பெரிய பிரசங்கம் அவர் நிகழ்த்தக் கேட்டிருக்கிறேன். அரசியலுக்கு வந்தபின் இலக்கியத்தை மறந்துவிட்டார் அப்பா. மீட்டு வர, வேண்டுமென்றே தப்புத்தப்பாய் சங்கத் தமிழ் வாசித்தால் போதும். அடங்காக் கோபத்துடன் வெளிப்படும் அந்த முகம். இழுத்து வைத்து அசை பிரித்து பொருள் விளக்கி என் காதும் சிவந்து....

பத்ரகாளி படத்துல வர்ற ‘கண்ணனொரு கைக் குழந்தை’ பாட்டு மிகவும் பிடிக்கும் அவருக்கு. இளையராஜாவை நாங்களெல்லாம் பெரிதாய் கொண்டாடும் போது பாவலரை பெருமையாய் நினைவுகூர்வார். இசையை விடவும் வரிகளை அதிகம் ரசிக்கும் அப்பாவுக்கு இன்றைய இசைவடிவம் எரிச்சலூட்டும் விடயம்.சமீபத்தில் அவருக்கு பிடித்த பாடல்கள், ‘அய்யங்காரு வீட்டு அழகே..’ ,’அனல் மேலே பனித்துளி’. :) தமிழ் காரணமா இருக்குமென்றே நம்புகிறேன்.

திரைபாடலுக்கென கண்ணதாசனையும், நா.காமராசனையும், மருதகாசியையும்,கலைவாணரையும் கொண்டாடுவார். வரிகளின் அமைப்பைக் கேட்ட மாத்திரத்தில் யார் எழுதியது என்று சொல்லிவிடுவார். வைரமுத்துவை அதிகம் விமர்ச்சித்தாலும் அவரின் புத்தகங்களில் எல்லாமும் வாங்கி வைத்திருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘யாரையும் படிக்காம விமர்ச்சிக்கக் கூடாது’.

ஜெயக்காந்தனை மிகவும் பிடிக்கும். அவரின் மிடுக்கான பேச்சை அதிகம் சிலாகிப்பார். அது போலவே நாகூர் ஹனிபாவின் குரலும். சிங்கத்தின் கர்ஜனை என்பார்.அவருக்குப் பிடித்த பேச்சாளர்கள் நிறையப் பேர் உண்டு. அதில் எப்போதும் ம.பொ.சி தான் அவருக்கு சட்டென நினைவில் வரும் பெயர்.குன்றக்குடி அடிகளாரின் பிரியத்துக்குரியவராகவும் இருந்திருக்கிறார். அதே சமயம் பெரியாரின் எல்லா அரசியல் நிகழ்வுகளும் விரல் நுனியிலிருக்கும். இப்போது அவருக்கு வழக்கில் உள்ள பெயர் பெரியார் சூட்டியது. நான் அதை உபயோகிப்பதில்லை. அவர் அப்பா அவருக்கு வைத்த பெயர் தான் எங்களின் எல்லா சான்றிதழ்களிலும் இருக்கும். நானும் அதைத் தான் பயன்படுத்துகிறேன்.
வீட்டிலிருக்கும் நேரங்களில் தோளில் துண்டோடும் கையில் கரண்டியோடும் ஏதோவொரு அசைவ சமையலில் அமர்க்களப்படுத்துமவர் அம்மாவை விடவும் அருமையாய் சமைப்பார். எப்போதும் சமைக்கும் அம்மாவை மறந்து அப்பாவுக்கு ஜால்ரா அடிப்போம். அசைவமாச்சே... பூஜை, நேரம்,காலம் எதுவும் கிடையாது.பார்க்கும் வரை-சாப்பிடாத வரைக்கும் விரதமென்பார். மிகச் சரியாய் கடைபிடிக்கிறேன். :)

பழகுவதற்கு மிகவும் இலகுவான மனிதராய், நகைச்சுவையும் குறும்புமாய் இருந்த இளமைக்கால அப்பாவை அவருள் தேடிப் பார்க்கிறேன். காணக்கிடைக்கவேயில்லை. அப்பாவின் குணநலன்களில் மாற்றம் எப்போது வந்தது? பெரிய தம்பியின் மறைவுக்குப் பின்னால், சின்னச் சின்ன விசயத்துக்கும் பதறிப் போகும் மனிதராய், விரக்தியோடு பற்றில்லாது, கடமைக்கென வாழும் மனிதராய் மாறிப் போனார். காயம் பட்ட சிங்கத்தைச் சீண்டி தன் வீரத்தை நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் உறவென்னும் ஊண் தின்னி காகங்கள். சிதைந்து போகும் அபாயத்திலிருக்கும் கூட்டுக் குடும்பத்தை ஒட்ட வைக்கும் முயற்சியில் நிம்மதியிழந்த வீட்டுப் பெரியவர்கள் வரிசையில் இப்போது அப்பாவும். போதாக் குறைக்கு, எனக்கு அப்பாவென்கிற கூடுதல் பொறுப்பும். மகள்கள் எப்போதும் இளமையில் மகிழ்வாகவும் முதுமையில் சுமையாகவும் இருக்கிறார்கள். வாழ்க்கையை நகர்த்தும் காரணமாகவும்....

இத்தனைக்கு மத்தியிலும், அரசியல் கூட்டங்களுக்கு செல்வதும் பேரூரை ஆற்றுவதும் பொன்னாடைகளையும் மாலைகளையும் சொத்தாய்(!) சேர்ப்பதுவும் நிகழ்ந்தபடிதானிருக்கிறது. அவரின் தன்முகவரியுடை கடிதத்தாளில்(letter pad) ஒரு வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்கும்,

“வீரன் தோற்றதுண்டு விசுவாசி தோற்றதில்லை”

கவிக் கோர்வை -11

*

பேரூந்து கூட்டத்தில்
மடியேறும் குழந்தையொன்று
தாயென்றெண்ணி
என் முலைபற்றி பதற வைக்கிறது
கருவைச் சுமந்தறியாக் கருப்பை
தன்னையே சபித்தழுகிறது
வேதியல் மாற்றத்தில்
காம்பு வரை திரளும் ஏதோவொன்று
கண்ணீராய் தளும்பி நிற்கிறது

*

அறைந்து சாத்துகிறேன்
படுக்கையறைக் கதவை...
முழுதும் தாழிட்டுக் கொள்ளாமல்
ஒருக்களித்தபடி அசைகிறது
பருத்தும் மெலிந்தும்
எட்டி எட்டிப் பார்க்கிறது
வெளிச்சம்
கதறியழுகிறேன்
காயப்படுத்தியவர்கள் எவரோ
அறைக்கு வெளியே
கைபிசைந்தபடி கண்ணீரோடு
நிற்கிறாள் அம்மா

*

Wednesday, June 19, 2013

கவிக் கோர்வை -10

*

என்னவென்றே தெரியாது
கேட்ட மாத்திரத்தில்
வசப்பட்டுப் போகிறேன்
சர்வ வல்லமையின்
சரியான பிரதிநிதி
இசை தான்

*

நானொரு காலப்பறவை
குளிர்காலங்களில்
உறங்கிக் களிக்கிறேன்

*

கூடடையும் அவசரத்தில்
மேகப் பறவைகள்
மழை பொழியும் இந்நேரத்தில்
எந்தக் குடைக்குள்ளேனும்
ஒதுங்கியிருக்கக்கூடும்

*

Tuesday, June 18, 2013

கவிக் கோர்வை -09

*

எண்வகைக் கைகளில்லை
ஒளிவட்டங்களில்லை
சொல்லியும் திரிவதில்லை
ஆனாலும் நினைவில் கொள்க
நானோர்
சக்தியின் அம்சம்

*

நிழலோடு பேசுமவனை
பைத்தியமென்கிறார்கள்
தினமும்
நம்மோடு நாம்
பேசிக் கொள்வதில்லையா
என்ன?

*

இமை முடி உறுத்தலுக்கும்
கலங்கும் கண்கள்
இதயத்தின் நரம்பதிர்தலுக்கு
விசும்பாதா என்ன?

*

Thursday, June 13, 2013

தேசாந்திரி

கத்தையாய் தைத்த
கையெழுத்துப் பிரதிகள்
எண்ணிலடங்கா துணுக்குகள்
பழுப்பேறிய காகிதத்தில்
அழிக்கப்பட்ட இன வரலாறு
மசி தோய்ந்த சித்திரங்களுமிருந்தன
குறிப்புகள் தான்
குவியல் குவியலாய்...
பாமரத்தியெனக்கு எதுவும் புரியவில்லை
வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை பட்டபின்
வரலாறும் ஒரு கேடா?
பணமென்றேதுமில்லாதபோது காகிதங்கள்
அத்துணை முக்கியமில்லை தான்
வெறுப்பில் கடாசி விட முனைகிறேன்
கால் இடறி கவனம் சிதைத்த
தேசாந்திரியின் புத்தகப் பையொன்றை...
மனக்கிலேசமொன்று மனமேறி நிற்கிறது
எல்லோரும் முன்னோக்கி
ஓடிக் கொண்டிருக்க
ஆதிக் குடிகளை ஆதூரமாய்
அணுகியவனைப் தேடிப் பார்க்கிறேன்
சுயநினைவின்றி மயங்கிக் கிடக்கிறான்
தூரத்து மரத்தடியில்..
தெளிவித்து உணவிட்டு நீங்குகிறேன்
புதையலைக் கண்டவன் போல்
பறித்துக் கொண்டான் கையிலிருந்ததை...
காணாக் குழந்தையை கண்ட
தாயின் பரவசம் கண்டேன்
பிறவாக் குழந்தை மார்முட்டும்
பரவசம் எனக்குள்ளும்...
அவன் யார்?
அந்தக் குறிப்புகளென்ன?
எவர் வரலாறு அது?
இதெல்லாமா இப்போது முக்கியம்
குழந்தையை தாயிடம் சேர்த்தாயிற்று
வரலாறு வளர்க்கப்படும்
வாழ்ந்து விட்டுப் போகட்டும்
பந்தயப் புரவியாயிராது
இவனைப் போல் இன்னும் சிலர்...

Tuesday, June 11, 2013

அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.

அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.
 

வீட்டுப் பெண்களெல்லாம் தலைக்குத் தேய்க்கும் வெட்டிவேரும் வெந்தயமும் சேர்ந்தூறிய தேங்காய் எண்ணெயின் மணத்தால் முற்றம் நிரம்பியிருக்கும். முகம் கழுவி,தலைவாரிப் பின்னலிட்டு பவுடரும் சாந்தும் மணக்கும் இந்நேரம்.
நானும் லதாவும் கொடிமல்லிப் பூப்பறிப்போம். ஆச்சி வெள்ளரளி பறித்து ஒவ்வொரு படமாய் வைத்துக் கொண்டிருப்பார். மலருமுன்னே கொய்யப்பட்ட மொட்டுக்களை வாகாய் கட்டித் ஒவ்வொரு தலைக்கும் சிறு இனுக்கு குடியேறும்.
இஞ்சி தட்டிப் போட்ட தேநீர், பெரிய குவளை நிறைய வந்திறங்கும். இஞ்சியும் சேர்த்துக் கொண்டு மணக்கும் முற்றம்.
தேநீரோடு திண்பண்டமோ அவித்த பயறொ கிடைக்கப் பெற்றால் அத்தனை சுகம். அதுவும் சேர்ந்து மணக்கும்.
வாசல் தெளித்து கோலமிட்டு படியில் குங்குமமிட்டு நிமிர்கையில் நனைந்த சாணித் தரையும் ஒரு வித வாடையை முற்றத்துக்கு தந்துவிடும்.
மின் விளக்கேற்றுமுன், சாமி விளக்கேற்றி சாம்பிராணி போட முற்றம் வரை எட்டும் புகையும் சேர்ந்து கமழும்.
நானோ ஏதோவொரு கதைப் புத்தகத்தின் எழுத்துக்களை கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டிருப்பேன்.
இழுத்துப் பின்னலிட்ட சுருள் குழல் மேவிய முல்லையின் வாசனையை நுகர்ந்தபடி ஆகாசவாணியின் செய்திகளை சரோஜ் நாராயண சாமி வாசித்துக் கொண்டிருப்பார்.
வைகை அணையின் நீர்மட்டம் கேட்கப்பெற்றதும் ஆச்சிக்கு செய்தியில் சுவராஸியம் போய் இலங்கை வானொலிக்கு மாற்றுவார்.
அம்மம்மா,அப்பப்பா,தங்கை ,அண்ணன் இப்படி யார்யாரோ விரும்பிக் கேட்டது நமக்கும் விருப்பமாகிப் போகும். இடையிடையே போர் குறித்த நிகழ்வுகளும். அச்சச்சோ, அடப்பாவமே என்றபடி அரசியல் பற்றிப்  பேசுவார்கள். புரியாமல் ஆனால் வார்த்தையின் வீச்சை ரசித்துக் கொண்டிருப்பேன்.
மின் விளக்கேற்றிய நேரத்துக்கெல்லாம் புத்தகப் பை பிரித்து சத்தமாய் படிப்பாள் பக்கத்து வீட்டு வாசுகி. காமாட்சிப் பாட்டி முதல் ஐந்தாறு பெரியவர்கள் கூட்டமாய் வந்து ஊர் நிலவரம் பேசிப் போவர். கிண்டலாய்,கேலியாய் நகரும் அப்பொழுதுகள்.
ஆம்.
அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.

இதோ கண்ணாடித் திரைக்குப் பின்னால் நின்று நகரும் நகரத்தைப் பார்க்கிறேன். கோப்பைத் தேநீருண்டு. பருக ஆவலுமுண்டு. பேசிக் களிக்க நண்பரும் உண்டு. பேசுவதற்கு தான் மேற்சொன்ன அற்ப விசயங்கள் இல்லை. அறிவுஜீவியாய் காண்பித்துக் கொள்ள முகடெல்லாம் தொட்டுப் பிடிக்கிறேன். மனம் நாடுமந்த முற்றத்து வாசனையை என்னைப் போல் மறக்காத எவரேனும் இப்போதும் நினைக்கக் கூடும்.

Monday, June 10, 2013

பிம்பம்

அசைந்தபடியிருக்கிறது
ஒளி பிம்பமொன்று
இருட்டில் கவனிக்கிறேன்
இல்லாத பயமொன்று பீடிக்கிறது
அமானுஷ்யங்களைப் பொருத்தி
அல்லல் படுத்துகிறது
அறிவீனம்
மெல்ல நடுங்குகிறேன்
குளிரூட்டப்பட்ட அறையிலும்
வியர்த்துக் கொட்டுகிறது
பயம் பழகியபின்
பகுத்தறியும் மூளையும்
கண்மூடி ஆராய்கிறது
மூலமெதுவென்று
நீண்ட மௌனத்திற்குப் பின்
கண்டுவிட்டேன் காரணத்தை...
தெரு விளக்கொளி தான்
அசையும் ஆடியிலகப்பட்டு
 பிரதிபலிக்கிறது
அலைவுறும் கற்றை
இப்போதொரு தேர்ந்த நடனத்தை
அரங்கேற்றுகிறது
கால்களையும் கைகளையும்
உருவகித்தது போலவே
அசைபவற்றுள் ஆணையும் பெண்ணையும்
பொருத்திப் பார்க்கிறேன்
கனவோ கற்பனையோ 
தூங்கிப் போகிறேன் நினைவுகளில் ....

Sunday, June 2, 2013

நோய்க்கூறு#5

                  மிகக் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வர ஒரே வழி வாசிப்பு தான். வாசிப்பின் மீதான காதலில் திறக்கப்பட்ட கதவுகள் தான் நிம்மதியாய் சுவாசிக்க வழி செய்தன. மனதின் மொழியை பலவேறு கோர்வைகளுடன் இசைத்து மகிழ்ந்திருக்கிறேன். எப்போதும் சுருதி தப்பியதைப் பற்றிக் கவலைப்பட்டதேயில்லை.இருட்டை நேசித்ததில்லை. பீடித்தவற்றையும் விரட்டி அனுப்ப எப்போதும் வாசிப்பின் சன்னல்களும் உழைப்பிற்கான கதவுகளும்...
                  நள்ளிரவில் ஒரு நிமிட தொலைபேசி அழைப்பில் வாழ்க்கையை இருட்டாக்கி விட்டு ஓடிப் போன நம்பிக்கைகளைப் பற்றி யோசித்தாக வேண்டியிருக்கிறது.துரோகமிழைத்தவர்கெல்லாம் நன்றியைப் பரிசாக்க வேண்டியது கடமை. மோசமான மனிதர்கள் என்றெவரும் நான் பார்த்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவர் தரப்பிலும் நியாயங்கள் இருக்கக் கூடும்.உறவுகள் உட்பட சந்தர்ப்பவாதிகளையும் யதார்த்தவாதிகளையும் அதிகமாய் அருகிருந்து பார்த்துச் சலித்திருக்கிறேன்.ஒரு போதும் எதிர்படும் மனிதரை முந்தையோர் வகையில் ஒப்பிட்டு மகிழ்ந்ததில்லை. அவர்களெல்லாம் தான் வெற்றியின் நாயகர்களாக இருக்கிறார்கள். அது போலான வெற்றியில் எப்போதும் உவப்பில்லையாதலால் இன்னும் இப்படியே...
                  நிராதரவாக விடப்பட்ட அந்தத் தருணங்களை மீட்டிப் பார்த்தேனாகில், மனக்கண்ணில் பயந்து நடுங்கும் ஒரு அபலையின் உருவம். சுயகழிவிரக்கமொன்று மடியிலேறி என்னை மடக்கிப் போடுகிறது. அவ்வேதனையைக் கண்ணீரால் கழுவி மங்கலாக இந்த இரவு விடிவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். துணையாய் இசையுண்டு. மொழிகளற்ற நாதங்கள்,தந்திகளின் அதிர்வுகள் என் நரம்புகளை தூங்கச் செய்யும். ஜலதரங்கம் கேட்கிறேன் செல்களைப் புதுப்பிக்குமது.
    என் துக்கம், அதை நானே சுமந்து சாகனும். வார்த்தையாலும் கூட ஒத்தாசைக்கு யாருமில்லை. ஏக்கம் போய் பிடிப்பு வ்ந்து விட்டது என்மீதான நம்பிக்கையில்,காதலில், ஆசையில்.எல்லாம் இருந்த போது விரக்தி தொற்றி தற்கொலைக்கு முயன்ற அற்பமான சந்தர்ப்பங்களுமுண்டு. எதுவுமில்லாத போது எவருமில்லாத போது வாழத்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன் முன்னிலும் சிறப்பாய்....
                  சுகமாகத் தான் இருக்கிறது. நாதியில்லா நரகப் பெருவாழ்வு. தோல் சுருங்கி வயோதிகம் கதவு தட்டும் இந்தக் காலத்தில் தான் முனைப்புடன் இருந்தாக வேண்டும்.காலை நடை, கருப்பட்டிக் காப்பி, நிதமொரு நவதானியம், சமைக்காத காய்கறிகள்,பழங்கள்,படுக்கைக்குச் செல்லுமுன் இரண்டு பாதாம் ஒரு கோப்பைப் பால்.

என்னுலகம் மிகமிக ரசனையானது, எளிமையானதும் கூட. இசை,கவிதை,இயற்கை,குழந்தைகள்,ஓவியம் இதைத் தவிரவும் நிரம்ப உண்டு. நிரப்பிக் கொள்ளவும் எத்தனையோ உண்டு.

எவருக்கென்றுமில்லை பச்சைப்பசேலென்ற இயற்கை பிடிக்கும் பங்களிப்பாய் சில மரங்கள் நடுகிறேன்.

எந்தக் குழந்தைகென்று இல்லாது எதிர்படும் எல்லாருக்கும் தாயன்போடு முத்தமிடுகிறேன்.

என்னோடு வாழ்ந்து மரித்த ஆன்மாக்களுக்கு வருடத்தில் ஒரு நாள் அவர் பெயரால் இயன்றவரை அன்னதானம். எண்ணிக்கை சிறிதெனினும் கடமைக்குப் பலன் நிம்மதி.

புரிகிறதா!
நீ இல்லாத நான் வெறுமையாயில்லை.
வக்கிரங்களும் குரோதங்களும் என்னிடம் ஒட்டிக் கொள்ள எப்போதும் நான் வெறுமையாய் இல்லை.
ஒரு நாளில் நேரில் சொல்லிக்கொள்ளத் திராணியின்றி பிரிந்து போன கோழை நீ! உனக்கெப்படித் தெரியும் தினம் தினம் நான் உயிரோடிருக்க போராடிக்கொண்டிருப்பது. போராளி நான். தோல்விக்கு அழுவதுமில்லை  வெற்றிக்குச் சிரிப்பதுமில்லை. அந்தக் கணங்களை அப்படியே ஏற்று வாழும் திறமையிருக்கிறது.
சகுனம் பார்ப்பவரிடமும் சாதி பார்ப்பவரிடமும் சிக்கிச் சீரழியுமிந்த வாழ்வில் வெறுமையேது? ஏதேனுமொன்று மனமேறி நடக்கச் செய்கிறது... அதோ அந்தக் கிழக்கில் தானே சூரியன் உதிக்க வேண்டும் நானில்லாது போனாலும்....

தெளிவாய் இருக்கிறேன்.

நினைவுகளே துன்புறுத்தாதீர்கள்!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!