Sunday, August 15, 2010

காமாட்சிப் பாட்டி

“பேத்தி வந்திருக்காளா பார்வதி” ஆச்சிக்கிட்ட யாரோ பேசுவது கேட்டது. அந்தக் குரலின் குழைவு...அது காமாட்சிப் பாட்டி தானே.தட தடவென வெளியே வந்தேன்.

குதப்பிய வெத்தலையும், இரவிக்கை அணியாத சேலையும்,எந்நேரமும் வெத்தலை முடிச்சும் சுருக்குப்பையும் எல்லா கிராமத்து பாட்டிகளையும் போலவே தான் காமாட்சிப் பாட்டியும். ஆனால் எனக்கும் அவளுக்குமான அலைவரிசை கோடியில் ஒருத்தருக்கிட்ட தான் வருமாக்கும். ஏன்னு தெரியுமா ? எல்லாத்துக்கும் பெருமை அவளுக்கு என்மேல.யாரோடும் பங்கு போட அவசியமில்லாத எனக்கே எனக்கான பாசம். என் குறைகள் மட்டுமே விமர்ச்சிக்கப்படும் பள்ளி நாட்களில் என்னை கைவிடாத ஒரே கூட்டணி காமாட்சி பாட்டி தான்.

ஊருக்குள்ள பிரசவம் பார்ப்பதில் காமாட்சிப் பாட்டி ரொம்ப பிரபலம். குழந்தை பிறந்து 2 முதல் 3 மாதம் வரை பாட்டிக்கு அந்த வீட்டில் தான் வேலை. பொழுது முச்சூடும் புள்ளத்தாச்சி சாப்பிடும் முறையிலிருந்து,குழந்தை குளிப்பாட்டும் முறை வரைக்கும் அத்தனையும் கற்பித்து பதிலாய் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் தன் ஊதாரி மகனுக்கு தந்துவிட்டு எங்கள் வீட்டு புறக்கோடி திண்ணையில் சாய்ந்துவிடுவாள். இதுபோக, விதவை பென்சனும் பஞ்சாயத்து ஆபிஸ்ல சம்பளமும் அவள் ஊதாரி மகனுக்கு விழலுக்கிரைத்த நீராய் போயிற்று.ஆச்சியும் இதுவரை அவளை தூரமாய் பார்த்ததில்லை.தானாய் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வதும், எங்களை வளர்ப்பதும் தோட்டத்தில் வயலில் என எங்கும் நிறை பராபரமாய் அவள்.

“நீ பொறந்தப்போ மூக்கு சப்பையா போச்சுன்னு ஒன்னோட அத்த சொன்னாளா? எனக்கு சுள்ளுன்னு கோவம் வந்திருச்சு. அந்த முப்பது நாளக்கிம் மூக்க நிமிண்டி நிமிண்டி குளிப்பாட்டி... பாரு இப்ப உம்மூக்கு எப்படி இருக்குண்ணு? “என்னையறியாமல் கண்ணாடி பார்ப்பேன் நான். அத்தனை போராடியுமே இப்படியா..?

தன் விரலாலே சிக்கெடுத்து சாம்பிராணியிட்டு வளர்த்த என் நீண்ட கூந்தல் விடுதி வாழ்க்கை கருதி வெட்டப்பட்ட ஒரு தினத்தில் என்னை விடவும் எனக்காய் அழுத மகராசி.
”இப்ப என்னத்துக்கு நீ ஒப்பாரி வைக்கிற? மயிற தானே வெட்டுனோம் என்னமோ அவ தலைய சீவுன மாதிரி கூப்பாடு போடுற?” அம்மாவின் அதட்டலையும் சட்டை செய்யாமல் தாழ்வாரத்தின் மூலையில் விசும்பிக் கொண்டிருந்தாள் அவள்.

“அந்த மணியன் வீட்டு வாலுக்கு எப்பவுமே ஏந்தங்கத்த சீண்டலையின்னா ஒறக்கமே வராது. இரு இரு..நாளைக்கி அவன் காத திருகி கேணிக்குள்ள போட்டிடுறேன்.என்ன பண்ணுவான்னு பாக்குறேன்.நீ அழாதடா ராசாத்தி” அம்மா முதுகில் குடுத்த அடிகளின் வலி மறந்து ஓட்டைப்பல்லோடு சிரித்துக் கொண்டிருப்பேன் நான்.

”ஏந்தாயி இப்பத்தான் வந்தியா? வாரதே கொஞ்ச நாளு.வீட்டிலே இருக்காம என்னத்துக்கு வெயில்ல சுத்துற. கறுத்துப் போயிட்ட பாரு.” தம்பியும் அம்மாவும் செருமுவதில் ஏகப்பட்ட கேலியிருக்கும். ”நீ ஏன்டா சிரிக்கிற. அவளுக்கென்னடா குறைச்சல்?வெளியூருல தங்கின்னா படிக்குது. கஸ்தூரி மஞ்சளும் கடல மாவும் தேச்சா பழைய மாதிரி பொன்னா மின்னுவாள்ல.” சலுகையாய் அவள் மடிசாய்வேன் நான்.

கூட்டுக் குடும்பமாகையால் எங்க வீட்டில் ஒவ்வொருவரின் பிறந்தநாளும் அவரவர் நினைவு வைத்திருக்க வேண்டும். அந்த மாதம் பிறந்தவுடன் நச்சரிக்க ஆரம்பித்தால் தான் பரிசும் பணமும் பிறந்தநாளன்று நிறையச் சேரும்.மாதக் கடைசியில் வரும் பிறந்த நாளென்பதால் எனக்கு மட்டும் இந்த விற்பனை தந்திரம் பலிக்கவே செய்யாது.பாட்டி வீட்டில் மட்டும் அந்தக் குறை இருக்கவே இருக்காது. காரணம் காமாட்சிப் பாட்டி.
”கார்த்திகை பிறந்த தேதி முதலா காமாட்சிக்கா தொணத் தொணக்க ஆரம்பிச்சிருச்சு.அதான் எல்லாங் கெடக்கட்டுமுன்னு அம்முவ பார்க்க வந்துட்டேன். இந்தா”, தாத்தாவின் காலில் விழுந்து, ஆசிக்கு கூட காத்திராமல் பறித்துக் கொண்டு ஓடுவேன். காதிப் பட்டில் பாவடை சட்டை என் நீள அகலங்களை உத்தேசித்து அழகாய் அம்சமாய் தைக்கப்பட்டிருக்கும்.

பட்டுப்பாவடை தாவணியும்,தாழம்பூ தைத்த சடையும்,மை தீட்டப்பட்ட விழிகளுமாய் ஒருநாள் அவள் காலில் விழுந்த போது,
“ஆத்தி.ஒத்த ரூவாகூட இல்லையே புள்ள கையில வச்சுக் கொடுக்க..பொசுக்குன்னு கால்ல விழுந்திருச்சே. இரு இந்தா வாரேன்.” அவசர அவசரமாய் தன் இயலாமையை குறை கூறியபடியே போனவள்,கையில் இரண்டு ரூவாய் தாளோடும் தோட்டது வெண்பூசணிக்காயோடும் வந்தாள்.எனக்கும் திருஷ்டி சுத்த ஒருத்தி இருந்தான்னா அது எவ்வளோ பெரிய விசயம்?அவள் தந்த அந்த இரண்டு ரூபாய் நோட்டு இன்னும் என் பழைய நாட்குறிப்பில் ஞாபகக் குறிப்பாகவும்.

”கால் வலிக்குது பாட்டி!சொடக்கு எடுத்து விடு”, உரிமையாய் அதிகாரமிடும் வாடிக்கை அவளைத் தவிர இதுவரைக்கும் எவரிடமும் இல்லை.சிரிக்க சிரிக்க பாட்டுப்பாடி,பாவத்தோடு கதை சொல்லி தலை கோதியபடி தூங்கச்செய்வாள். அது போலே குலுங்க குலுங்க சிரித்தபடி தூங்கிப்போன என் இளமை காலங்கள், நடுநிசியில் ஆர்ப்பரிக்கும் மனதோடு கவிதையில் பாரத்தை இறக்கி விடத்துடிக்கும் இந்த வசதியான வாழ்க்கையில் ஏதோ இல்லாமை கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.

”ராத்திரியானா வேப்ப எண்ணை நாறும் அந்த கிழவிக்கிட்ட. ஆனா இவ அப்படியே உரசிக்கிட்டு கிடக்கறா.ஏண்டி நீ இப்படியிருக்க?” சித்தி முதல் தம்பிகள் வரை யாருக்கும் அவள் மனசு தெரிய வாய்ப்பேயில்லை. நாகரீகம் கருதி அவர்கள் அவளை நாடுவதேயில்லை. எனக்கு இதுவரை அந்தக் குறை தெரிந்ததேயில்லை.

நெனச்ச மாத்திரத்தில் நையாண்டி பாட்டுக்கட்டி அந்த எடம் முழுக்க சிரிக்க வைக்கும் தெறமசாலி.எப்படித்தான் வார்த்தை சேர்த்து மெட்டுப் போடுவாளோ தெரியாது. அவள் பாடும் தான்னான்னே இல்லாத முளைப்பாரியோ பாரிவேட்டையோ இது வரை அந்த ஊரில் இருந்ததில்லை.இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு திருவிழாவில், சாதிக்கலவரத்தில் மகன் செத்துப் போன பின், அது சம்பந்தமான வழக்கு வாய்தா என்று அவள் திண்ணையில் படுப்பது குறைந்து போயிற்று. இதோ அவள் தான் வந்திருக்கிறாள்.

“பாட்டீ” என்றவாறே அடுப்படிக்குள் நுழைந்தவளை வாரியணைத்தபடி,

“ஏஞ்சாமி. எப்படித்தா இருக்க? இன்னிக்கு தான் வந்தியா?” என்றவாறே கன்னம் வருடியவளின் உருவத்தில் அசைவில் நம்பிக்கையில் வயோதிகம் வெகுவாய் படர்ந்திருந்தது.

இரவு, முல்லையின் நறுமணத்தோடு நிலவை ரசித்திருந்த ஒரு பவித்திர தருணத்தில் மெதுவாய் கேட்டாள்.
”எம்புட்டு நா இங்கயிருப்ப?”

ஏனோ மனசு பிசைய, “பாட்டி எங்கூட சென்னைக்கு வந்திடு.நானிருக்கேன் உனக்கு!”

“வாரேஞ்சாமி! ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு எம்பேரு எழுதச் சொல்லித்தருவியா? அந்த கவர்மெண்டு கிளர்க்கு என்ன கைநாட்டு கைநாட்டுன்னு கூப்பிடுறான்.செத்தும் என்ன இப்படி அசிங்கப்பட வச்சிட்டானே எம்மவன்.”

சன்னமாய் கதறியவளுக்கு காமாட்சிப் பாட்டியாகிக் கொண்டிருந்தேன் நான்.

Saturday, August 14, 2010

ஒற்றை ரோஜா

இதழ் பறிக்கும் காற்றினோடு
கடும் மோதல்
அந்த ஒற்றை ரோஜாவுக்கு!
மொட்டாய் இருக்கையில்
மூடிக்காத்த இலைகள் கூட
முட்கள் போலவே இப்போது
எட்டாத தூரம்

வண்டின் வருத்தங்களை பரிகசிக்கிறது
சூலகம் காக்க திரணற்ற பூவிதழ்
காற்றின் அகோர வருடலில்
அலாதி சுகம் ருசித்து
ஆடிக்கொண்டிருந்தன தும்பிகள்!

மண்புழுவொன்றின் அகழ்வில்
பதியமிட்ட மற்றோர் கிளை
மெல்ல அசையத் தொடங்கியும்
தண்டின் பிடி தளர்வதாயில்லை

நான்
மலர் படும் பாட்டை கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நீரோவாய்
பிடிலுக்கு பதிலாய் பேனாவோடு

Wednesday, August 11, 2010

திறவுச் சூட்சுமம்

தொல்பொருள் கிடங்கில்
பதனிட்ட சவமாய்
அணுவைத் திறக்கும்
அதிசயம் தாங்கிய அற்புதப்பேழை
கனக்கும் கனவுகளை
கருவாய் சுமந்து...

எண்ணக் கருத்தாணிகள்
குத்திக் குத்திச் சீழ்வழி தலையில்
முளைத்தன பிறைச்சந்திரன்கள்
அறிவின் அடையாளமாய்...

எழுத்துச் சித்தனொருவன்
அறிவின் பன்மச் சிதறல்கள்
உதிர்த்த பொறியில்
திறவுச் சூட்சுமக் கபடம் கரைய
உருப்பெற்றன ஒளடத மந்திரங்கள்!

மறை பொருள் ஒளிபெறும் வேளை
நெருக்கும் வறுமை திறன்பளு
நெம்பித்தள்ள அரைப்படி அரிசிக்கு
அஸ்தமித்தன வாலிபக்கனவுகள்
வறுமைக்கோட்டின் எல்லை முடிவில்.

அதோ!
தொல்பொருள் கிடங்கில் திறவாத பேழை
இவன் கனவும் விழுங்கிச் செரித்தபடி...

கேள்வியும் அது சார்ந்ததும்

நம்ம சுசி என்ன பதிவுலகத்தில் நான் என்கிற தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருத்தாங்க.நன்றி சுசி.சரி அவங்களால சில வரிகள் எழுதியிருக்கேன்.பேத்தல் தான் இருந்தாலும் பொறுத்துக்கோங்க.சமூக கோவத்த காண்பிக்க எத்தனையோ வழியிருக்க ஏன் நீங்க வலைப்பதிவ தேர்ந்தெடுக்கறீங்கன்னு சில நல்லாதரவாளர்கள்(!) கேட்ட கேள்விகான பதில் இதில ஒளிஞ்சிட்டுருக்கு. தூங்காம படிச்சா கிடைக்கும். பாத்துக்குங்க உலகம் போற போக்குல நானெல்லாம் எங்க இருக்கேன்னு!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கயல்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாங்க! தானா அமைஞ்ச ஒரே நல்ல விசயம் இது தான்னு நினைக்கிறேன்!

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

எந்த சுவராஸ்யமான துவக்கமும் பல கசப்பான அனுபவங்களை அடியாய் கொண்டே ஆரம்பிக்கும்.ஒரு தங்கிலிஷ் கோர்வையை கவிதை எனப் படித்தபின் நாமும் கத்தி எடுக்கலாமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த வலைப்பதிவு. எண்ணங்களின் வடிகாலாய் கவிதை எழுத ஆரம்பித்து, நல்ல கவிதை எழுதக்கத்துக்கிட்டேனோ இல்லையோ எப்படி எழுதக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.தவிரவும் என் வலைப்பதிவு என்பது என் படைப்புகளை நிராகரிக்காத பத்திரிக்கை என்கிற எண்ணத்தில் துவங்கப்பட்டது.கிறுக்கலோ குப்பையோ நண்பர்கள் பார்வைக்கு... ஆனால் இந்த பயிற்சி காலம் எனக்கு மிகவும் முக்கியம் நல்ல வளமான இலக்கிய பயணத்தின் துவக்கத்திற்கு![நசரேயன் இந்த பதில் முழுக்க முழுக்க உங்கள் மேலான
பின்னூட்டத்துக்கு.. :)) ... நெம்ப அலப்பலா இருக்கு அண்ணாச்சி குட்டு வச்சாத்தான் சரிப்படும்]

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணுமே செய்யல. அதனாலயே இன்னும் பிரபலமடையலை. புகழ் மேல எல்லாம் ஆசை இல்லப்பா![சோம்பேறி.. சோம்பேறின்னு யாரோ திட்டுறாங்க பாருங்க]

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஓ! நிறைய தடவை பகிர்ந்திருக்கேன். என்னப் பத்தி சொல்லப் போக, அதனாலயே பல நண்பர்கள்,சில எதிரிகளை சம்பாதிச்சிருக்கேன். அந்த சில எதிரிகளையும் நண்பர்களாக்க முயற்சிக்கிறேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஏங்க நீங்க வேற! ஆயிரம் பேர கொன்னா அரை வைத்தியனாகலாம்ங்கிற மாதிரி நானே ஏதோ இப்பத்தான் எழுதிப் பழகுறேன்.அவங்கவங்க படிச்சிட்டு உசுரோட போறதே பெரிசு. சம்பாதிப்பதெல்லாம்.......

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போதைக்கு ஒரு வலைப்பதிவு மட்டும் தான். இன்னும் சில விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன்.[அழக்கூடாது!]

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நல்லா கவிதை எழுதுற எல்லாரு மேலயும் பொறாமை இருக்கு. ஆனா எனக்கு கஷ்டம் தராத யாரு மேலேயும் கோவம் இல்ல.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் ஆசான். ஒரு சில மணி நேரம் எனக்கெனவே செலவு செய்து நிறை குறைகளை திருத்திச் சொன்ன மாண்பு இன்னும் சிலிர்க்க வைக்குது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

கடைசியாவா? என்னப்பா இது ! நானும் என் கவிதைகளும்(?) இன்னும் ரொம்ப... நாளைக்கு உசுரோட பதிவுலகத்துல இருக்கணும். குறைந்த பட்சம் எழுத்துப்பிழை இல்லாம கவிதை(?) எழுதணும்.

இந்த பதிவ தொடர இவர்களை அழைக்கிறேன்

வயலான் குமார்
சங்கவி
கமலேஷ்
மதுமிதா

வாழ்த்துக்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!