Sunday, September 27, 2009

மூப்பெய்திய கவிதைகள்

கன்னித் தமிழுக்கு
களங்கம் அழித்துவிடு
தலைப்பை!

நில் மனச்சாட்சி!

இப்படி சொல்வோரும்
உளரேயெனும் கருத்தறிவித்தலிது!

அமைதி காக்க‌!

சாதி ஒழியவும்
சுதந்திரம் பேணவும்
சமூகம் மாறவும்
பாடின இறவா கவிகள்
எல்லாமும்
பழுதாய் போன‌தாம்!

வர்க்க பேதம்
மொழியியல் கூற்று
பொருளாதார‌ சம‌ச்சீர்
இப்படி எல்லாம் சொன்னால்?
இல்லவே இல்லை
நீ முன்னேற வழியேயில்லை!
சில‌ பதிவுலக பெருந்தகைகள்
பரிந்துரைத்த ப‌டைப்பு வரையறை!

எண்ணிக்கையிலடங்கும்
சிலபல வார்த்தைகள்
ந‌ம் மொழி பிற‌ மொழி
இழைய‌ இழைய‌
காத‌ல் க‌ல‌ந்த‌ காமம்
கூடவே
எதுகையும் மோனையும்,
ம்ம்! இப்ப‌டி இருக்க‌னும்
க‌விதை ப‌க்குவ‌ம்!

க‌வ‌னிக்க!
மேற்படி
க‌விதை ச‌மைத்த‌லில்
க‌ருத்தே இல்லை


எப்ப‌டிச் சொல்ல‌?
புதிய‌ன‌ புகுத‌ல்
ந‌ல‌மேயாயினும்
பழையன‌ அழித்த‌ல்
ந‌ல‌மா?

பொட்டி தட்டி
பிழைப்ப‌து எம்மொழியில்?
அடுத்த‌ கேள்வி!
என் நிலை
விரக்தியோடு நகைப்புக்குரியது
பிழைப்பு வாழ்வுக்காக
பிழைப்பே வாழ்வ‌ல்ல‌வே

அடுத்த‌ மொழியை
அழிப்பதோ தவிர்ப்பதோவல்ல
என் வாத‌ம்
த‌மிழ‌ருக்குள்ளாவ‌து எ‌ம் மொழி
த‌ழைக்க‌ட்டுமே

இடுகையோ ம‌றுமொழியோ
இய‌ன்ற‌வ‌ரை த‌மிழில்
முய‌லுங்க‌ளேன்
த‌மிழ‌னே த‌மிழை
த‌ள்ளி வைத்தால்......

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 3


அழகி க‌ல்யாணம் சீரும் சிறப்புமா நடந்தேறிச்சு. பந்தி முடிஞ்ச கையோட அம்மான் மக்க எல்லோரும் சொல்லாம கொள்ளாம வண்டியேறி போயிட்டாக. மனசு நெறஞ்ச கவலையோடவும் கண்ணு கொள்ளாத கண்ணீரோடவும். புதுப்பொண்ணு அம்மான் வீட்ட விட்டு கெளம்புறா. நல்லபடியா கரையேத்திட்டோம்கிற நம்பிக்கை அம்மானுக்கு. பாவம் வெள்ளந்தியான‌ மனுசந்தானே. மாப்பிள்ளய மட்டும் பாத்து ஏமாந்துட்டாரு.

'சல் சல்'ன்னு தாளத்த சிந்துன சதங்க சத்தம், பக்கத்துல தாலி கட்டுன புருசன்,சர சரக்குற கூரை புடவை.கதம்பமும் சந்தனமும் கலந்த வாடை. ஒரு திணுசான மயக்கத்துல இருந்தா அழகி. இப்போ நடக்குற பெரும்பாலான க‌ல்யாண‌த்துக்கு மாப்பிள்ள மட்டும் போதும், தனிக்குடித்தனம் வழக்கத்துல இல்லாத அந்த காலத்துல மாப்பிள்ளைய விடவும் மாப்பிள்ளைய சார்ந்தவுங்க ரொம்ப முக்கியம். அதுலயும் அழகி வாக்கப்பட்டு போற அந்த வீடு இருக்கே, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பிரச்சினைகள் வந்தமேனிக்கு இருக்கும்.ஆளாளுக்கு நாட்டாமை.புது அடிமைதான் நாம‌ அங்கன்னு தெரியாத‌ அழ‌கி, ந‌ம‌க்குன்னு ஒரு கூடு கெட‌ச்சிருச்சு,இப்ப‌டி வாழ‌னும் அப்ப‌டி வாழ‌னுமுன்னு க‌ண் நெறைய‌ க‌ன‌வோட, ஏகப்பட்ட எதிர்பார்ப்போட‌ மாமியார் வீட்டுக்கு போறா.
மாட்டு வ‌ண்டி நிக்குது, சுய‌ நென‌வுக்கு வ‌ந்த‌வ‌ளா திடுமென‌ முழிக்குறா. க‌ம்மாயிக்கு எதுக்க‌ மாதிரி ஒரு காலி எட‌ம், ந‌டுவுல‌ ஒரு வ‌ட்ட‌ குடிசை. 

'இது தான் ந‌ம்ம‌ வீடு எற‌ங்கு', ப‌தில் வ‌ந்த‌ தெச‌ய‌ பாத்தா சிரிக்க‌வே தெரியாத‌ மாதிரி ஒரு பொண்ணு நெற மாச சூலோட‌.மாப்பிள்ளையோட‌ த‌ம்பி பொண்டாட்டியாம்.சீம‌க் கெல்லாம் போன‌வ‌ருன்னாங்க‌ ஒரு வ‌ட்ட‌ குடுசையும் நால‌ஞ்சு ஆட்டுக் குட்டியும் தான் சொத்து போல‌.

க‌ல்யாண‌ வீடுன்னாங்க‌ ஒரு ச‌ன‌த்தையும் காணும். லேசா அழ‌கிக்கு உள்ளுக்குள்ள‌ கிலி பிடிக்குது.அம்மான் தான் விசயத்துல‌ ஏமாந்துட்டாருன்னு ம‌றுநா விடிஞ்ச‌தும் தெளிவா தெரிஞ்சு போச்சு.ஆனா என்ன‌ தோதுக்கு இந்த‌ க‌லியாண‌முன்னு ம‌ட்டும் புரிய‌வே மாட்டேங்குது அவ‌ளுக்கு.இங்க‌ எல்லாமே மாமியாரு ராஜ்ஜியமுன்னு புரிஞ்சி போச்சி அவ‌ளுக்கு. அரச புர‌சலா தெரிய‌ வ‌ருது மூத்த‌வ‌ நோவால‌ சாக‌ல, இவ‌ங்க படுத்தின பாடு தாங்காம செத்துப் போயிட்டான்னு.

மொத‌க் கோழி கூவுறதுக்கு முன்னாடி காட்டுக்கு போனா பொழுது சாய‌த்தான் திரும்ப‌ முடியுது,ராவுல‌ வாற‌ புருச‌னோ முழுக்க போதையில‌. என்ன‌ செய்யுற‌து? ஆன துணி கட்ட கூடாது,பக்கத்து வீடுகள்ல யாரோடயும் பேசக் கூடாது.அப்படி இப்படின்னு ஆயிரம் சட்டம்.குருவியா பறந்து திரிஞ்சவள கூண்டுக்குள்ள சுருக்குன மாதிரி. ஆசை மோகம் எல்லாஞ் சேத்து தொண்ணூறு நாளைக்கெல்லாம் தவிப்புகள் அத்தனையும் நத்தையா சுருங்கிப் போச்சு.ஆனா ஏதானாலும் யாருக்கிட்டேயும் கையேந்தி நிக்க மாட்டேன்னு ம‌னசுல‌ எழுதிக்கிட்டா.

இது தான் வாழ்க்கை, இதுல‌ தான் நீந்தி க‌ரையேற‌னும். எங்க‌ போக‌னுமின்னு தெரியாட்டினாலும் எங்க‌ போக‌க் கூடாதுன்னு தீர்மான‌ம் ப‌ண்ணிக்கிட்டா.அனாதையா நின்ன‌வ‌ள‌ தூக்கி எடுத்து,ம‌க‌ளுக்கும் மேலா வ‌ள‌த்த‌வ‌ரு த‌லை நிமிர‌ வாழ‌னுமின்னு முடிவு ப‌ண்ணிக்கிட்டா. ”மறு வீடு” கூட வராத மாப்பிள்ளையையும் பொண்ணையும் பாக்க‌ கூட்டாளி ச‌கித‌மா ஆசையோட அம்மான் வ‌ந்திருக்காரு. காத்துக் கெட‌க்காரு காத்துக் கெட‌க்காரு ம‌ணிக்க‌ண‌க்கா. இம்புட்டும் தெரியாம‌ அழ‌கி வாறா அலுத்துக் க‌ளைச்சு பொழுது சாய‌.

'வாடா. வாடா.ன்னு சொல்லி , மெல்ல நிமிந்து பாக்குறாரு‌ இவ‌ வந்து நின்னக் கோல‌த்த‌ப் பாத்து 'அய்யோ' ன்னு அல‌றிப் போயிட்டாரு. வாடி வ‌த‌ங்குன‌ வெத்த‌ல‌ கொடியா, நிக்க‌வும் தெர‌ணிய‌த்துப் போயி,அப்ப‌டியே சாஞ்சு நின்ன‌வ‌ள‌ உத்து பாக்குறாரு. ச‌ந்தோச‌த்துக்கான‌ அறிகுறி ஒன்னயும் காணும் அந்த கண்ணுல. 

ப‌திலுக்கு, அவ ஒடம்புல தழும்புகளும் காயங்களும் அம்மான் மனச ரணமாக்கிடுச்சு. வெறி கொண‌ட‌ வேங்கையா சீறுறாரு எல்லாருகிட்டேயும் . நியாய‌ம் கேக்குறாரு. என்ன‌ பிர‌யோச‌ன‌ம்? ஒரு அனாத‌ புள்ள‌ வாழ்க்க‌யில‌ வெள‌யாடிப்புட்டோமே.குடிகார‌ப் ப‌ய‌ வாக்க‌ ந‌ம்பி ஏமாந்துட்டோமேன்னு மெதுவா ஏறுது புத்திக்குள்ள‌.குத்தமுள்ள‌ நெஞ்சு ப‌ரிகார‌ம் தேட‌ நெனைக்குது.ஆனா பாவ‌ப்ப‌ட்ட‌ அழ‌கியோட‌ த‌லை எழுத்தோ அத்த‌ன‌ சீக்கிர‌ம் சீராயிடுமா என்ன‌?

<========= அழகி புராணம் தொடரும் ==========>

Sunday, September 13, 2009

அப்ப‌த்தா! - ப‌ட‌ல‌ம் 2


க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்த‌வுக‌ எல்லாரும் பெற‌ந்த‌ ம‌க்க‌ க‌ண்க‌ல‌ங்கி அழுவுற‌த‌ பாத்து ச‌ங்க‌ட்ட‌ப்ப‌ட்டு,வ‌ந்து ச‌மாதான‌ப் படுத்துறாக‌. ஆனா எல்லாரும் ஒரு ம‌ன‌சா இந்த‌ க‌லியாண‌த்த‌ வேணாமுங்குற‌துல‌ வெற‌ப்பா நிக்‍கிறாக‌.

கத்தலும் விசும்பலும் கலந்து வர,வெடுக்கென நிமிந்து பாக்குறா அழகி. என்ன ஆச்சு? திடுமென என்ன கொழப்பம்? வெரசா வந்து மணபந்தல பாக்குறா.
ஆளாக்கி வளத்தவரு கொலக்குத்தம் பண்ணுன‌வராட்டம் தல குனிஞ்சு தடுமாற நிக்க,அக்காமாரு அத்தன பேரும் இவ ஆத்தாவா மாறி அவரோட சண்டைக்கு நிக்க,அத்தன பேரு பாசமும் கண்ணீரா பொங்கி வழியுது.இதுவ‌ரைக்கும் க‌ண்ணீரும் க‌ம்ம‌லையுமா இருந்த‌ அழ‌கிக்கோ, இந்த‌ சடுதி மாத்த‌ம் ஒரு நிதான‌த்த‌ கொடுத்திருச்சு.

மெல்ல சுதாரிச்சு, சுத்தி முத்தி பாக்குறா. ம‌ல்லுக்கு நிக்குற‌ அம்மாவ‌ அட‌க்க‌ முடியாம‌ தெண‌றிக்கிட்டு,ஒடிச‌லா, ஒச‌ர‌மா,க‌ருப்பா ஒருத்த‌ரு ... ஆமா அவ‌ராத்தான் இருக்கோணும். ப‌ட்டு வேட்டி எல்லாம் உடுத்தியிருக்காரே. மொத மொதலா அழகிக்கு கண்ணால பேசுற பாசை எல்லாம் நல்லா புரியுது.

'இத்தன பேரு மத்தியிலயும் என்ன அசிங்க படுத்திபுடாத.'

மறுக்கா பாக்குறா,
'என்ன வுட்டு போயிறாத புள்ள.....'

அந்த கண்ணுல கெஞ்சலும் கதறலுமுன்னா, ஒன்னோட ஒன்னா பாவிக் கெடக்கு.

ச‌ட்டுன்னு , 
அட‌! ஒரே பார்வையில‌ க‌வுந்துட்டா போங்க‌.பொம்ப‌ள‌ புள்ள‌ மாட்டுற‌தே இந்த பரிதாப பார்வைக்குள்ள‌ தாங்க.

'பாத்தாக்க‌ பாவ‌மா இருக்கு. எம்புட்டு ந‌ல்ல‌வரா இருந்தா அம்மான் இத்த‌ன‌ போராட‌னும்?' மனசு அவர நோக்கி ஒடுதுன்னு புடி பட்டுருச்சு இவளுக்கு. 

வெக்கம் ஒடம்பு பூரா பரவுது.முகம் ரோசாப்பு கணக்கா செவந்திருச்சு. எம்புட்டு பெரிய‌ த‌கிரிய‌ சாலியா இருந்தாலும் காதலுக்கும்,பாசத்துக்கும் அட‌ங்கித் தானே ஆக‌னும். என்ன நாஞ் சொல்லுறது?

உள்ளுக்குள்ள என்ன‌ ந‌ட‌க்குதுன்னு தெரியாம‌, ப‌ர‌வ‌ச‌மாயி அழ‌கி செலை‌யா நிக்க‌யில‌,ஊருக்கு பெரிய‌வ‌ரு சீலக்கட மாத‌வ‌ன்னு பேரு, வ‌ந்து எல்லாரயும் அட‌க்கிபுட்டு,
'தே.முடிவா என்ன‌ சொல்லுறீக‌?'ன்னாரு.  
அக்காமாரு அத்த‌ன‌ பேரும் ஒருமனசா வேணாமுன்னு சொல்ல‌,ஒரு மொர‌ட்டு கொர‌லு ஊட‌ பாயுது. 
'பொண்ண‌ கேட்டுச் சொல்லுங்க‌.'
திரும்பி பாக்குறா, மாப்பிள‌ தான் பேசுன‌து. ச‌ன‌ மொத்த‌மும் இப்போ இவ‌ள‌ பாக்குது. ஆத்திர‌துல‌ அறிவிழ‌ந்தாலும் நிதான‌துல‌ இவ‌ ஆயிர‌ம் அறிவாளிக்குச் ச‌ம‌ம்.

அல்லிப்பூ அத‌ர‌ம் அதிராம‌ சொல்லுறா.

'என‌க்கு அவிய‌ள‌ க‌ட்டிக்க‌ச் ச‌ம்ம‌த‌ம்'. ப‌ரித‌விச்சு நின்ன‌ அம்மான் ஓடியாந்து,
'இது போதுமுடா.இது போதும்ன்னு!' 

க‌ல்யாண‌ ப‌ந்த‌ல், நாத‌சுவ‌ர‌முன்னு பதினாறு வயசு பாலகனாட்டம் ஓடி திரியுறாரு... சிந்துன‌ மூக்கும் நொந்த‌ ம‌ன‌சுமா அக்காமாரு இவ‌ளுக்கு அல‌ங்கார‌ம் ப‌ண்ணுறாக‌. அடுத்த‌வ‌ ப‌ங்கிட்ட‌ வாழ்க்க‌ ந‌ம்ம‌ த‌ங்க‌ச்சிக்கு கெடைக்குதேங்குற‌ வ‌ருத்த‌ம்.இவள இந்த கல்யாணத்துல இருந்து காப்பாத்த முடியலயேன்னு கோவம்.அப்ப‌ன‌ மீற‌ முடிய‌ல‌யேன்னு இயலாமை. எல்லாமும் சேந்து மூத்த‌வ‌ளுக்கு ஆங்கார‌த்த‌ குடுத்துருச்சு. 

ச‌ன்ன‌மா சொல்லுறா,'பாரு. எங்க‌ளுக்கு ம‌ருவாத‌ இல்லாத ஒன் வாழ்க்கையுல இனி எங்க‌ளுக்கு எந்த‌ ப‌ங்குமில்ல‌.' பூத்து நெற‌ஞ்ச க‌‌ண நேர‌த்து ச‌ந்தோச‌ம், வெய்யில் க‌ண்ட‌ ப‌னியா காஞ்சு போச்சு.சோதியெழ‌ந்த‌ க‌ண்ணோட,ஒட்ட வச்ச சிரிப்போட, சின்னாளப் ப‌ட்டு மினுமினுக்க,அழ‌கே உருவான‌ அழ‌கி ம‌ணப்ப‌ந்த‌லுக்குப் போறா.

ப‌ந்த‌ல்ல‌ மாப்புள‌, பொத‌ய‌ல் கெடைச்ச பூரிப்புல. அவன் நெற‌ஞ்ச‌ பார்வையில‌ தெளிவா புரியுது இவ‌ளுக்கு, அம்புட்டு ச‌ந்தோச‌ம். 'இனி எல்லாமே அவ‌ன் தான்'னு தெக்க‌த்து சாமியெல்லாம் ம‌னசார‌ வேண்டிக்கிட்டு த‌ல‌ குனிஞ்சு தாலி வாங்கிறா [எதிர்கால‌த்துல‌ தான் நிமிர‌வே போற‌தில்லைன்னு சொல்லுற‌‌ மாதிரி] மண்ணு செறக்க வாழ்ந்து நிக்கும் மகிழம்பூ மனசுக்காரி...

<======== அழ‌கி புராண‌ம் ========>

Wednesday, September 9, 2009

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 1


பல தலைமுறைகள் தழைக்க சில ஆணிவேர்கள் அடித்தளமாய் புதைபடுவது வழக்கம்.பெரும்பாலும் அவர்கள் பெண்களாயிருப்பதும்,அதனாலே அவர்கள், கால மாற்றத்தில் மறக்கப்படுவதும் வழக்கம்.எத்த‌னை வீட்டில் இன்றைக்கும் முன்னோர் வ‌ழிபாடு சாத்திய‌ம்? சில‌ ப‌கிர்த‌ல்,சில‌ நினைவு கூற‌ல் என‌ இந்த 'சில' விச‌ய‌ங்க‌ள் குடும்ப அங்கத்தினருக்கிடையே விரிசலில்லாத உறவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கதை கேட்க ஆரம்பித்த நாட்களில்,கறிகாய் நறுக்கியபடியோ,பூ தொடுத்தபடியோ,சோறு ஊட்டியபடியோ இருக்கும் அப்பத்தாவின் அருகாமையோடு,அவளின் பொக்கை வாய் அசைப்புக்கு அடிமையாயிருந்த காலங்கள், அவள் கதைய அவள் சொல்லிக் கேட்டு மெய்மறந்த நாட்கள், எத்தனை தவம் கிடந்தாலும் இனி கிடைக்கப் போவது இல்லை.சிலரின் பாதிப்பு நமக்கு தெரியாமலே நமக்குள் நம்மோடு கலந்து விடுவது தவிர்க்க முடியாதது. அதை நினைவு கூறுதல் அவர்களோடு சில கணங்கள் வாழச் செய்கிற முயற்சி. அப்படியாக இதுவும்......

"அப்பத்தா!"

அப்பவோட அம்மாவ நாங்க இப்படித் தான் கூப்பிடுவோம்.

வாழ‌க் க‌த்துக் கொடுத்து,தன‌க்கே தெரியாம‌, என‌க்கு வாய்மை,நேர்மை,உழைப்பு, அது த‌ரும் வலிமையென‌(!)[சரி,சரி .....] பெரிய பெரிய விசய‌ங்க‌ளை எல்லாம் சாதார‌ண‌ விள‌க்கத்துட‌னே, அடித்த‌ள‌மிட்டு போன‌ அப்பாத்தா தான் இப்ப‌வும் எப்ப‌வும் என‌க்கு பிடிச்ச‌ க‌தாநாயகி.
ச‌ரி வாங்க‌. ந‌ம்ம‌ கதாநாய‌கிய‌ ப‌த்தி தெரிஞ்சுக்க‌லாம்.
சின்ன‌ வ‌ய‌சுலேயே அம்மா அப்பா இல்லாம‌ அம்மான்(தாய்மாம‌ன்) த‌ய‌வுல‌ உசுர‌ காப்பாத்திக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். அம்மானோட‌ ஆறு பொண்ணுக‌ளோட‌ ஏழாவ‌து பொண்ணா,க‌டைசிப் பொண்ணா வ‌ள‌ர்ந்த‌ அப்ப‌த்தா சோத்துக்கு கையேந்துனாலும் சீமைக்கு ம‌காராணி க‌ண‌க்கா. அப்ப‌டி ஒரு அழ‌கு. அழ‌குக்கு த‌குந்த‌ மாதிரி தான் பேரும். ஆமா அவ பேரு,"பொன்ன‌ழ‌கி".

அஞ்சு பொண்ணு பெத்தா அர‌ச‌னும் ஆண்டி. ஆனா, இவுங்க‌ வீட்டுல‌யோ ஏழு பொண்ணு.க‌ஷ்ட‌ ஜீவ‌ன‌த்துல‌ எப்ப‌டி க‌ரையேத்த‌ போறோம்னு க‌வ‌ல‌ கொண்ட‌ப்போ,சின்ன‌வ‌ பொன்ன‌ழ‌கி,'ஏன் க‌லங்குறே? நான் இருக்கேன்னு. என்னக்கும் ஆம்ப‌ள‌ப்புள்ள‌ இல்லாத இந்த‌ வீட்டுக்கு நான் தான் எல்லாமுன்னு சொல்ல,பூரிச்சு போன அவ‌ளோட‌ அம்மான் சாகுற‌ வ‌ரைக்கும் 'அழ‌கா.அழ‌கா.' ன்னு தான் கூப்பிடுவாராம்.

வெறும் வாய்பந்தல் கட்டி பந்தி போடுற ரகமில்ல நம்ம அழகி.சிதறாம திங்கிற சோத்துலயும்,அதிராம பேசுற வார்த்தையிலயும் பெண்ணோட பண்பாடு தெரியுமுன்னு சொல்லுவாங்க.அதுலயும் நிதானிச்சு சொல்லுற கனிவான வார்த்த,எப்படிப்பட்டவங்களயும் கிட்ட சேத்துடும். நம்ம அழகியும் அப்படிப்பட்ட அதிசய தெறமக்காரி.அரைக்காணி நிலத்துல அக்கா தங்கச்சிங்க ஏழு பேரும் அப்பனுக்கு துணையா விவசாயம் பாக்குறாங்க. சுத்து பத்து எட்டு ஊரிலேயும் இவ‌ங்க‌ வெள்ளாம‌ காய்க‌றி தானாம் எல்லார் வீட்டு சமையலுக்கும்.அதுல வர்ற வருமானம் தான் குமரிங்களுக்கு 'சிறுவாடு'. இவ கட்டுட்சிட்டால பட்டி, தொழுவுன்னு அம்மான் வீடு பல்கிப் பெருகுது.

அவ சிந்துன வேர்வைக்கு பலனா, போதும் போதுமுங்குற அளவுக்கு தந்தா பூமாதேவி. தான் ஆறு ம‌க்க‌ளையும் ம‌க‌ளா பாக்குற‌ அம்மான், இவ‌ள‌ ம‌ட்டும் தான் ம‌க‌னா பாப்பாராம்.துரு துருன்னு வார்த்தைக்கு வார்த்த‌ தைரிய‌ம் சொல்லிக்கிட்டு திரியுற‌ இவ‌ள‌ பாக்குற‌வுக‌,அப்பிடியே அச‌ந்து போவாக‌. ம‌ன‌சுல‌ இருக்க‌ வைராக்கிய‌ம், க‌ண்ணுல‌ தெரிஞ்சாலும், பெண்மைக்கான‌ அத்த‌ன‌ அம்ச‌மும் அமைஞ்ச‌ பேர‌ழ‌கி. வார்த்தையில‌ இருக்குற‌ மென்மையும், பூமி நோகாம‌ ந‌ட‌க்குற ப‌த‌விசும், க‌ண்ட‌வ‌ங்க‌ அத்த‌னை பேரையும் ம‌ய‌க்கிப்புடும்.

ஏழு பேரு அழ‌குக்கும், குண‌த்துக்கும் ஒழ‌ச்சு பொழ‌க்கிற‌ த‌ன்மான‌த்துக்கும் ஆச‌ப் ப‌ட்டு சீரு கொடுத்து க‌ட்டிக் கிட்டு போனாங்க‌ளாம்(!). அந்தா இந்தான்னு ஆச்சு. அஞ்சு பொண்ண‌ க‌ரையேத்தின‌ கையோட‌ அவ‌ளோட‌ அயித்த‌ காரியும் காட்டோட‌ போயிட்டாளாம்.அம்மா முக‌மே தெரியாத‌வ‌ளுக்கு எல்லாமா இருந்த‌வ‌ போன‌தும், நிலைகுழைஞ்சு போனா அழகி.

மீத‌ ரெண்டு பேரையும் என்ன‌ செய்யிற‌துண்ணு தெரிய‌ல‌ அம்மானுக்கு. வீட்டுல‌ ஒருத்தி இருந்து காவாந்து ப‌ண்ணுற‌ சாம‌ர்த்திய‌ம் ஆம்ப‌ளைக்கு வ‌ருமா? என்ன பண்ண போறோமுன்னு மலைச்சு போயி நிக்கிறாரு. அப்பவும் 'வெசனப்படாத. நான் பாத்துகிறேன்னு' ன்னு ஆறுதல் சொல்லுறா அழகி.

வாற‌ வைகாசிக்குள்ள‌ ரெண்டு பேரையும் த‌ள்ளி விட்டுற‌துன்னு முடிவு ப‌ண்ணி, மும்முர‌மா வேல‌ ந‌ட‌க்குது. தானும் போயிட்டா அம்மானுக்கு யாரு பொங்கிப் போடுவான்னு த‌வியா த‌விக்கிறா அழ‌கி.ஆச்சு,முன்ன‌ இருக்க‌வ‌ளுக்கு ப‌ட்ட‌ம‌ங்க‌ல‌த்துல‌ ந‌ல்ல‌ப‌டியா அமைஞ்சு போச்சு. இப்போ தான் அம்மானுக்கு பொறி த‌ட்டுது. ஆயி அப்ப‌னில்லாத‌ புள்ள‌, யாரோ மொரட‌னுக்கிட்ட‌ குடுத்துட்டு நாம க‌ண்ண மூடிட்டா,அனாத‌ புள்ள‌ வாழ்க்கைய‌ கெடுத்த‌ பாவ‌ம் சேருமேன்னு, தான் ம‌க்க‌ள காட்டிலும் ந‌ல்ல‌ மாப்பிள்ளைக்கு வ‌லை வீசி தேடுறாரு. ஒரு வ‌ருச‌ம் க‌ழிச்சு,'ஒரு மாப்பிள்ள‌ வ‌ந்திருக்கு. வ‌ந்து முடிச்சு குடுத்துருங்க‌ன்னு தன் மகள்க‌ளுக்கு த‌க‌வ‌ல் அனுப்புறாரு.எல்லாரும் சபை நிறக்க வந்து நிக்கிறாங்க.அழ‌கி 'கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்'னு அட‌ம்புடிக்கிறா.இவ பேச்ச யாரும் செவிட்டுலேயே போட்டுக்க‌ல.

எல்லாரும் வ‌ந்துட்டாங்க‌. மாப்பிள்ளையும் வாறாரு.அக்கா த‌ங்க‌ச்சி அத்த‌ன‌ பேருக்கும் அட‌ங்காத‌ கோவ‌ம் அவ‌ர‌ பாத்த‌வுட‌னே. 'த‌ங்கச்செல‌ க‌ண‌க்கா த‌ங்க‌ச்சிக்கு நெய்வேலி க‌ரி க‌ண‌க்கா மாப்பிள்ள‌யா? இவ‌னையா வ‌லை போட்டு தேடீனீரு?'ன்னு ஒரே பிடி பிடிக்குறாளுக‌ அப்பார‌. அது ம‌ட்டுமா? மூத்த‌வ‌ளோட‌ புருஷ‌ன் சொன்ன‌து கேட்டு அத்த‌ன‌ பேரும் செலையா நிக்கிறாளுக‌.

ச‌ங்க‌தி இது தான் அழ‌கி,அந்த‌ மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தார‌ம்.மொத‌ தார‌ம் நோவால‌ மாண்டு போன‌துல‌ ம‌ன‌சொடிஞ்சு சீமைக்கு போன‌ ம‌க‌ன் திரும்பி வ‌ர‌வும்,கண்ணாலம் கட்டி வச்சு,இங்கயே த‌ங்க‌ வ‌க்க‌ ஆத்தாகாரி ஆச‌ப்ப‌டுறா. எல்லாம் நியாய‌ந்தான். ஆனா அழ‌கிக்கு இது அநியாய‌ந்தானே.

‍‍‍‍‍<=====அழ‌கி புராண‌ம் தொட‌ரும்====>

Sunday, September 6, 2009

எஸ்.எம்.எஸ் தத்துவம்!!

வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை

ஆனால்

வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு!!!

Friday, September 4, 2009

சாலையோர‌த்தில் இருந்தபடி .....

இருட்டுப் போர்வைக்குள்
பொத்தல் வெளிச்ச‌ம்
ந‌டுநிசி வானில்
விண்மீன் ப‌ர‌வ‌ல்!

**********

பாதியாய்
நெளித்த‌
அலுமினிய‌ த‌ட்டாய்
வ‌ள‌ர்பிறை ச‌ந்திர‌ன்!

**********

பிச்சையாய்
ஒற்றை ரூபாய்
ஒளிய‌றியா முக‌த்தில்
ஆயிர‌ம் மின்ன‌ல் கீற்று!

**********

உறுமும்
இடிமுழக்கம்
அதீத பசியில்
அர‌ற்றும் அடிவ‌யிறு!

**********

மழைக்குறி
கண்டு
அடைக்கலம் தேடி
அங்குமிங்கும் அலைந்தபடி
மேகக்கூட்டம்!

**********

வெட
‌வெட‌க்கும் குளிர்
கைதட்டி ம‌கிழும்
க‌ந்த‌லாடைச் சிறுமி
தேங்கிய ம‌ழைநீரில்
தள்ளாடிப் பயணிக்கும்
காகித‌க் க‌ப்ப‌ல்!

**********

‌ழையே வேண்டாம்
இப்ப‌டிக்கு கூரையில்லா
குடிசைவாசி!

**********

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!