Tuesday, July 20, 2010

அற்ப தத்துவம்

பசியோடிருக்கும் வல்லூறொன்றின்
பார்வையில் சின்னஞ்சிறு கோழிக்குஞ்சு
பாவமோ பாதிப்போ எதன் நிழலும்
படியாத பவித்திர ஜீவன் அது!

தாய்க்கோழி நொறுக்கித்தந்த நெல்மணியும்
விழுங்க சக்தியற்ற சின்னஞ்சிறு குரல்வளை!
நகரும் புழுவொன்றின் நடனத்தில் லயித்தபோது
விதியின் வாய்க்குள் சிக்குண்ட பரிதாபம்!
வலியவன் அடிக்க இளைத்தவன் மடிய
பசிக்கு உயிர் புசிக்கும் அவலம்.

நகர்ந்து செல்லும் எறும்புகளின் ஊர்வலத்தில்
எப்போதாவது
மரணித்த பூச்சியை பார்ப்பதுண்டு!

தேங்காய்த்துருவலோ திண்பண்டமோ
சுமந்து செல்லுகையில் மேலிடும்
உற்சாகம் இருப்பதில்லை
அவ்வினாடியில்.
ஏதோ பெருந்துயரம் தாங்கிய
இறுதி யாத்திரையாகத் தோன்றுமெனக்கு!
காய்ந்து மக்கிப் போதலைக் காட்டிலும்
யாருக்கோ உணவாதல் உத்தமம் என்கிறபடியாய்
அவ்வுணர்வும் ஜீரணித்துப்போகும் காலமாற்றத்தில்...

ஒரு சுதந்திரத் திருநாளில்
நான் வளர்த்த புறாக்கள் சில
விருந்தாளிக்கு விருந்தான கொடுமை
எப்போதாவது நினைவு கூர்வதுண்டு!
கனத்த மவுனமும் கேலிச் சிரிப்பும்
நண்பர்கள் மனநிலை சார்ந்து
விதவிதமான வித்தியாசம் தாங்கி!

மயானத்தில் அகழ்வராய்ச்சி
எல்லா எலும்புக்கூடும் கிழவனுக்கு
பால்யத்து காதலியை நினைவூட்டியதாம்!
ஒரு அற்பப்புழுவின் ஆயுள்
விதிவசம் சேர்ந்த பலருக்கு வாய்ப்பதில்லை

ஆகையினால் இனிமையானவர்களே!
வாழும் வரை வாழ்ந்திடுங்கள்
சக உயிரியாய் சாதியும் மதமும்
அதனாலான கர்வமும் தொலைத்து!

Sunday, July 18, 2010

சுயபுராணம் ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கல

பாத்தீங்களா! தலைப்ப படிக்கிறப்ப்போவே சிரிப்பு வருதுல்ல. இதாங்க நாம!விசயமும் ஒண்ணும் அத்தனை பெரிசில்ல. தன்னிலை விளக்கம் கொடுக்குற அளவுக்கு நாம ’பிரபலம்’ இல்லீங்கோ இல்லீங்கோ!அப்புறம் எதுக்கு இந்த சொறிதல்?என்னா சின்னப்புள்ளத் தனம்ன்னு கொந்தளிக்கிறது புரியுது.

இருங்க! இருங்க! திட்டாம கேளுங்க!

விசயம் இதாங்க! எஸ்தரம்மாவ பத்திப் புலம்பப் போய் அது பெண்ணீயவாதிங்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கு போல! பிரசூரிக்கப்படாத பின்னூட்டங்களும் மின்னஞ்சல்களும் சொல்கின்றன.சேகரனை வில்லனாக மிகைப்படுத்திச் சித்தரித்திருப்பதாக சொல்லபடுகிறது. எனக்கு அவரை முழுதாக,அப்பட்டமாக கொண்டுவரமுடியவில்லை என்கிற ஆதங்கமே இருக்கிறது.செய்தது பிழையோ என்ற குற்ற உணர்ச்சியோ,எந்த ஆணையும் குறிப்பதாகவோ தோன்றவில்லை.இது ஒரு வளர்ப்புத்தாயின் மீதான பற்று. அவள் வாழ்க்கை,இறப்பு குறித்த வேதனையின் பகிர்வு. இதற்கும் என் குறித்து நான் கொண்டிருக்கும் கருத்துக்கும் சம்பந்தமேயில்ல. நான் ஆதிக்கத்துக்கு எதிரானவாதி. அவளோ தான் சொல்ல முடியும். பெண் என்பதற்கான எந்த தனிப்பட்ட அங்கீகாரமோ சலுகையோ வேண்டாது அதே சமயம் அடக்குமுறையும் விரும்பாது சகஜீவியாக அவளும் மதிக்கப்படனும் என்கிற கோட்பாடுள்ளவள். என்னை[குறிப்பாக] அடக்குபவர் யாராயிருந்தாலும் அது ஆணோ பெண்ணோ வாளெடுக்கும் போராளி...

வின்சென்ட்சர்ச்சில் பத்தின ஒரு சுவையான சேதி. அவரது மேடைப் பேச்சுக்கான உரையை அவரே தான் தயார் செய்வாராம். அப்படி தயார் செய்யும் போது எங்கெல்லாம் கைதட்டல் வேண்டுமென நினைக்கிறாரோ அங்கெல்லாம் அடைப்புக்குள் claps என்று குறித்துக்கொள்ளுவாராம். உரை வாசிக்கப்படுகையில் அவ்விடத்தில் சில வினாடிகள் வாசிப்பை நிறுத்துவாராம்.கைதட்டல் கிடைக்குதோ இல்லயோ அங்கே நிறுத்தி பின் தொடர்வது வழக்கம். இது,ஒரு அரசியல்வாதி,தன் கருத்துக் குறித்த ஸ்திர தன்மையின் வெளிப்பாடு. மக்களின் எதிர்பார்ப்பும் தன் கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு.இதை எழுதினா இப்படி பிரச்சனை வரலாம் என்கிற அளவுக்கு முதிர்ந்த ஞானம் ஏதும் எனக்கில்லை.

தவிரவும்,மக்களின் எதிர்பார்ப்பு மீதான பார்வை ஒரு கலைஞனுக்கு இப்படியிருக்க முடியுமா? இது மட்டும் கவனத்தில் இருந்தால் அவன் எதிர்பார்க்கும் ஆன்ம திருப்தி கிடைக்குமா? இதற்கும் பதிலுண்டு இசைஞானியின் வார்த்தைகளின் வாயிலாக. எத்தனையோ நல்ல பாடல்கள் தந்தும் அதில் ஏதோ சிலவற்றுக்குத் தான் தேசிய விருது கிடைக்கிறது.விருதுகளை எதிர்பார்த்து ஒரு கலைஞன் தன் கலையைத் தொடர்வதில்லை.தன் மனதுக்கு பிடித்த மிகச்சிறந்ததையே தருகிறான் எப்போதும்.அதில் மக்கள் விரும்பியவையும் இருக்கிறது.
பதிவுலகம் தரும் அங்கீகாரத்தை கருத்தில் கொண்டதல்ல எனது முயற்சிகள்.என் ரசனைகள் குறித்தது.பிழைகள் எதுவும் இல்லாமல் தமிழை என் கருத்தின் வடிவமாக்கிப் பார்ப்பதான சொற்ப சிந்தனை விகிதம்.அது என் சுதந்திரம் என்றெண்ணுகிறேன்.

ஆகையினால் அன்பர்காள்,
நான் தேர்ந்த கலைஞனோ,பதிவரசியல்வாதியோ குறைந்தபட்சம் ‘பிரபல’ பதிவரோ அல்ல. தமிழ் கற்கும் மாணவி. கிறுக்கல்களை பதிவேற்றி விமர்சனங்களை உள்வாங்கி தமிழை படித்துக்கொண்டிருக்கிறேன் ரசனையோடு.
என் வரையில்,
ஒரு தமிழ் கற்கும் மாணவியின் மனப்பாங்கு தமிழ் எழுதுகையில்.எப்போதாவது, மிக அரிதாக கவிதையில்(?) உண்மையைச் சொல்லுதல், தமிழ் கற்க முற்படுதலினால் கொஞ்சம் தன்மானம் மிகுத்து நியாயமான சமூகக் கோவம் இப்படியாக பதிவுலகப் பயணம்.அவ்வளவே! எஸ்தரம்மா என் கண்முன்னே வாழ்ந்த ஒரு கதாபாத்திரத்தின் எழுத்து வடிவம்.அவளை அப்படியே வெளிக்கொண்டுவர முடியாமல் தோற்றதாய் நினைத்திருந்தேன்.வழக்கமான வாழ்த்துக்களையும்,குட்டுக்களையும் மீறி சில வசைகள் தெளிக்கப்பட்ட பின் தான் உணர்ந்தேன் திட்டினவங்களை எல்லாம் நான் எங்கேயோ பாதித்திருக்கிறேன் என்று. இது என் கிறுக்கலுக்கு வெற்றி என்பதாக எடுத்துக் கொண்டு மீண்டும் வருவேன் எனக் கூறி முடிக்கிறேன்.[விடாது கருப்பு]

பின்குறிப்பு:-
கல்லூரி நாட்களில் எங்கள் தமிழ்த்துறை தலைவர் கதிரேசன் அவர்கள்  சொன்ன ஒரு வேடிக்கை சம்பவம் நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஜீவகாருண்யம் சம்பந்தமாக பாடம் நடத்தி விட்டு வெளியே வந்தாராம். அந்த வகுப்பு மாணவன் ஒருவன் நடக்கக் கூட திராணியற்ற ஒரு நாயை இவர் கண் முன்னே துரத்தித் துரத்திக் கல்லால் அடித்தானாம். பார்த்த இவருக்கு ரொம்ப மனவருத்தம்.
“ஏம்பா! இப்போ தானே பாடம் நடத்தினேன். கருணையே இல்லாம ஏன் இப்படி அடிக்கிறே. பாவம் அது” என்றாராம்.
ஏற இறங்க பார்த்துவிட்டு,
“உங்க சகோதரபாசம் பிரமிக்க வைக்குது சார்” என்றானாம் புத்திசாலி மாணவன். தூங்காம பாடத்த புரிஞ்சிக்கிட்டான்னு சந்தோசப்படுவாரா இல்ல இப்படி தன்னை இறக்கிட்டானேன்னு வருத்தப்படுவாரா?அவரு மாணவனை விட இன்னும் புத்திசாலி எல்லா வகுப்புலயும் இதச் சொல்லிச் சொல்லி ஜீவகாருண்யத்த ஆரப்பிப்பாராம்.மாணவர்கள் சிரிப்பொலியோட எல்லார் பார்வையும் இவன் மீது ஒருமுறை பட்டு மீளுமாம். வகுப்பு சுவராஸ்யமா போகுமாம்.அவருக்கு அதானே முக்கியம்.முதல்ல அவனுக்கு பெருமையா இருந்தாலும் போகப் போக அவனுக்கு ஏண்டா இவர கிண்டல் பண்ணினோமுன்னு ஆகிடுச்சாம்.அடுத்தவங்கள அவமதிச்சு தான் தான் எப்பவும் பெரிசுன்னு காட்டிக்க நினைக்கிறவங்களுக்கு நான் தமிழாசிரியராவே இருந்துட்டுப் போறேன். ஆனா இவக்கிட்ட ஏண்டா அரசியல் பண்ணினோம்கிற அளவுக்கு அவங்க வருத்தப்படுவாங்கன்னும் தாழ்மையா சொல்லிக்கிறேன்.

*

Saturday, July 17, 2010

சொல்லத்துடிக்குது மனசு!

”எல்லாம் எடுத்தாச்சா?” அத்தை தான் இது, ”ம்ம்”  அய்யோ! தெரியலயே!

என்ன நான்? நானா இப்படி? ஒரு தடவைக்கு மேலே சரிப்பாக்குறது இது தான் முதல் தடவை! ஒரு இரயில் பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் என்னைச் சுற்றி ஆரவாரமா நடந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன புல்லாங்குழல் அது பாட்டுக்கு உருகிக்கிட்டு தான் இருக்கு!கால்கள் நடந்தாலும் மனசு மட்டும் காத்துல பறக்குற மாதிரி. ஏனோ தெரியல இங்கேயே இருந்துடலாம் போல.எல்லாத்துக்கும் காரணம் அவன் அவன் .... அவன் மட்டுமா .. அது மட்டும் தானா?

”கவுசி!ஏய் கவுசி!எத்தன தடவை கூப்பிடுறது? என்ன பண்ணுற அங்க?”

அத்தை அழைக்கவும் சட்டென சுதாரித்தேன்.

“இல்ல எல்லாஞ் சரியா இருக்கான்னு ஒரு தடவ பாத்துக்கிட்டேன்.”

“சரி சரி ரெண்டு நாளாகும் வீட்டுக்கு போக...சாப்பாடு எல்லாம் கட்டி வச்சிட்டேன்.வேற என்ன வேணும் சொல்லு.மாமாவ கடைக்கு அனுப்பறேன்.”

”ஒண்ணும் வேணாம் அத்தே. போகவே மனசில்ல. உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு.”, வார்த்தைகள் விசும்பலோடு வந்தது.

“என்னடா குட்டி. இதுக்கு போய் கண் கலங்கிட்டு.படிப்பு முடிஞ்சு இங்க தானே வேலை செய்யப் போற. நல்லபடியா படி. அப்பா அம்மாவ கேட்டதா சொல்லு.அடுத்த பரீட்சை லீவுக்கு இங்க தான் வரணும் சரியா.கல கலன்னு இருந்துச்சு. நீ இல்லாம திரும்பவும் வீடே வெறிச்சுன்னு ஆயிடும்.அப்பாவுக்கும் மகனுக்கும் வெளிய நெறைய வேலை.கம்ப்யூட்டரே கதி..எப்பவும் பிஸி தான்.ம்ம்ம். நான் தான் நீயில்லாம ரொம்ப தவிச்சுப் போவேன்.”

அத்தையும் கண்கலங்கவும் பேச்சை மாற்ற எண்ணி,

“கார்த்திக் எங்க அத்தை? ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு வர்றேன்”

“அவன் அந்த லேப்டாப்போட தான் மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பான்.மேல போயி பாரு.”

அத்தை அப்பாவின் அக்கா. தன் கணவரோடும்,ஒரே மகனோடும் விசாகப்பட்டிணத்தில் வசிப்பவள்.மாமா ஒரு ராணுவ அதிகாரி என்பதால் இந்தியா முழுதும் வசிக்க வாய்ப்புக் கிடைத்தது.சரளமாக எல்லா இந்திய மொழிகளும் அங்கு புழங்கும். அத்தை மாதிரி ஒரு பூரணத்துவமான பெண்ணைப் பார்ப்பது அரிது.அழகுணர்ச்சி மிக மிக அதிகம். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் மிகக் கச்சிதமாக இருக்கும்.தோட்டம்,பூஜையறை,சமையலறை எல்லாமும்,எல்லாமும்.

நான் சரியான லூசுங்க. பின்ன, எத எப்ப உங்க கிட்ட சொல்லணும்கிற அறிவிருக்கா பாருங்க. ஒரே அத்தை புராணமாயிருக்கா? ம்ம். என்னங்க செய்யுறது,பாசம் கண்ண மறைக்குது. அழகான அறிவான அம்சமான பையன பெத்தவங்குறதுனால எல்லாம் இல்லங்க. நெசமாவே அத்தையின்னா எனக்கு உயிர். பெண் குழந்தையே இல்லாத அத்தைக்கும் நான்னா கொள்ளைப் பிரியம்.

சரி வாங்க நம்ம ... ம்ம்ஹீம் என் கார்த்திக்கை கொஞ்சம் பாக்கலாம்.

********************

அதோ அவன் தான் என் கார்த்திக். அலைஅலையான கேசம் நெற்றியில் தவழ,வலிமையான புஜங்களும் அகன்ற மார்பும்,எப்போதும் கேலியாய் சிரிக்கும் உதடுகளுமாய் இருக்கும் அவன் ஒரு கணிணிக் காதலன். இந்த பதினைஞ்சு நாளா எனக்கும்.பெரிய ஏற்றுமதி நிறுவனமொன்றின் துடிப்பான இளம் அதிகாரி. நல்லா கிடார் வாசிப்பான். அருமையா பாடுவான்.மேற்கத்திய நடனத்தில் ஏதோ படித்தானாம்.பெரிசா சொன்னாங்க எல்லாரும்.மாமாவும் இவனும் பேசிக்கிறப்போ எல்லாம் இலக்கியம் தூள் பறக்கும்.ஆனா நமக்கு அதெல்லாம் புரியாதுங்க. எல்லாம் இங்கிலீசா இருக்குமுல்ல. எங்கிட்டு புரிய.ஆனா ஒரே ஒரு குறை தான்.அவன் சரியான அம்மாபுள்ளை.

“அத்தான். உள்ள வரலாமா?”

“வாடி! என்ன மரியாதை எல்லாம் தூள் பறக்குது. அத்தான்! ஹா ஹா! ம்ம் நேத்து சாயந்திரம் கூட எருமை மாடுன்னு திட்டினதா ஞாபகம்! ம்ம் என்ன விசயம்?”

“உனக்கு போய் மரியாதை தந்தேன் பாரு. என்ன எதாலயோ அடிச்சுக்கணும். தடிமாடு. எருமை மாடு.”

“பார்த்தியா எங்க போனாலும் உன் ஊரு புத்தி போகுதா பாரு. மாடு ஆடுன்னு தான் திட்டத் தோணுதில்ல.ஹா ஹா ஹா.” , கணிணித்திரையிலிருந்து பார்வை விலகாமல் பதில் சொன்னவன்,கேலியாய் சிரித்தபடி நிமிர்ந்தான்.

“ஷ்ஷ்! போதும் நிறுத்து! நான் உன்கிட்ட ஊருக்கு போறேன்னு சொல்லத்தான் வந்தேன்.”

“ம்ம்.சரி. அப்புறம்?”

மார்புக்கு நேராய் கைகளைக் கட்டிக் கொண்டு, விசமமாய் பார்க்கவும் என்னவோ போலாயிற்று இவளுக்கு.தடுமாறி சுதாரிக்கவும் அவன் கண்களில் நக்கல் தொனியில் மீண்டும் சிதைந்து போனாள்.

“அப்புறம் ஒண்ணுமில்ல.வர்றேன். காலையில ஆறு மணிக்கு இங்க இருந்து கெளம்புறேன்”

“அப்பாடா! ஒரு பதினஞ்சு நாளா என்னப் பிடிச்ச சனி இன்னையோட ஒழியுது.”

“அவ்வளோ கஷ்டப்பட்டியாடா? ம்ம்ம்? இனிமே நான் இங்க வரவே மாட்டேன் பாரு. ரொம்ப சலிச்சுக்காத”

“என்ன அழப்போறியா? கீழே போய் உன் அருமை அத்தை மடியில படுத்திட்டே அழு. இங்க ஆரம்பிச்சிடாதே. போம்மா போ”

என்ன திமிரு. கான்வெண்ட் கலாச்சாரம். கொஞ்சமாவது மரியாதை தெரியுதா பாரு. எப்ப பாத்தாலும் மிசினோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மனசே இல்லாத மனுசனாயிட்டான் போல. சே! ஏண்டா நீ என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்குற? இங்கயே இருன்னு சொல்லமாட்டியான்னு இருக்கு. பாத்துட்டே இரு. இங்க வராம,நான் சென்னையிலயே ஒரு நல்ல வேலை பார்த்து, நல்லா சமபாதிச்சு,உனக்கு முன்னாடி கார்ல வருவேன் பாரு.ஆனாலும் முன்ன மாதிரி நான் இல்லயோ?அம்மா கண்டுபிடிச்சிடுவாங்களோ? ஏன் இப்படி.. ஆனா நான் அழவெல்லாம் மாட்டேன். போறப்போ கூட உன்கிட்ட சொல்ல மாட்டேன் பாரு.

சொல்லலன்னா கூட நீ கவலையா படப்போற?

ம்ம்! நான் அவனால லூசாயிட்டேன்னு முன்னுக்குப் பின்னா மேல உள்ள பத்திய படிச்சாவே புரிஞ்சிருக்குமே! ஆனா அந்த பக்கம் எப்பவும் சிகப்பு கலருல்ல தான்பா லைட் எரியுது. என்ன செய்ய அத்தைக்கு நான் மகளா மட்டும் தான் இருப்பேன் போல. இவனுக்கு?

**************************

இன்னும் 12மணி நேரம் தான்.அப்புறம் இவனை எப்போ பார்ப்பேனோ? இன்னும் ஒரு வருசமாகும் நான் இங்க வர. அதுக்குள்ள அதுக்குள்ள.. அன்னிக்கு அவன் ஆபிஸ்லேர்ந்து ஒரு பொண்ணு பேசிச்சு. சூப்பரான பேரு...ஆங் ‘லீனா’. ஆளு கூட சூப்பரா இருந்துச்சு. குட்டைப் பாவாடையும் ஒட்டிய சட்டையுமா. இங்க எல்லாப் பொண்ணுகளும் ரொம்ப அழகு தான் இல்ல. இப்படி வளந்தவனுக்கு எப்படி என்னப் புடிக்கும்? இவன் வேற எப்ப பாத்தாலும் அமெரிக்காவில பொறந்தமாதிரி டஸ்ஸு புஸ்ஸுன்னு பீத்திக்கிட்டு அலையுறான்.அத்தையக் கூட ‘அம்மான்னு’ அழகா கூப்பிடுறதில்ல. ‘மாம்’ன்னு தான் கூப்பிடுறான். இவனெல்லாம் எங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப் போயி மந்திரிக்கணும்.நாக்குல வசம்ப வச்சு தேய்க்கணும்.என்ன தான் கடலியல் துறையில் முதுகலை படித்தாலும் அத்தனை ஆதிக்கம் இல்லை எனக்கு ஆங்கிலத்தில்.இந்தக் குறை இவனிடம் பல முறை பல்பு வாங்கியபோதே தெரிந்தது.இத மொதல்ல சரி பண்ணணும்.

”அத்தை நீங்க வரலையா? இப்படியே இருக்கீங்க?கெளம்பல?”

“ம்ம்! யாரு தான் நான் சொன்னத கேக்குறா? மரியாத தெரியாத புள்ளையின்னுல்ல பேரு வாங்கப் போறான்”

“யாரு என்ன? புரியல அத்தே!”

“ம்ம்! இரு இந்தா வர்றேன்”

உள்ளே சென்ற அத்தையை குழப்பமாய் பார்த்தபடியே தயாரானாள் அரை மனதோடு.

சத்தமாய் கார்த்திக்கின் அறையில் மாமா கத்துவது கேட்டது. விடுவிடுவென மாமா படிகளில் இறங்கி வந்தார்.

“காமாட்சி! இவன் என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறான்? நீ சொல்லு வந்து...”

“நெறைய சொல்லிட்டேன்.கேட்டாத் தானே! நாம தாங்க செல்லம் குடுத்து கெடுத்துட்டோம்.”

“அதில்ல நாஞ் சொல்ல வந்ததது. இப்போ வேணாமுன்னு தான். அவளும் கொஞ்ச நாள் இவங்கிட்ட சிக்காம நிம்மதியா இருக்கட்டும்.”

“ம்ம்..திடு திப்புன்னு கல்யாணம்னா சொந்தகாரங்கெல்லாம் என்ன பேசுவாகளோ!ஏதோ கசமுசான்னு நெனச்சுக்க மாட்டாங்க.”

கடவுளே! என்ன நடக்குது இங்க? கார்த்திக் யாரையோ கல்யாணம் செய்திக்குவேன்னு அடம்புடிக்கிறான் போல. பேச்சிலிருந்து அத்த மாமாவுக்கு சம்மதம் மாதிரி தெரியுது.கசமுசான்னு.... அய்யோ!அப்போ நீ எனக்கில்லையா? இந்த சம்பாஷைணையும் காதில் ஏறவே இல்ல அதுக்கப்புறம். தலை கிறுகிறுவென சுற்ற படுக்கையில் சரிந்தாள்.

*************************

விடியக் காலையிலேயே ஒரு பரபரப்பு தெரிந்தது அந்த வீட்டில். மாமாவைக் காணவில்லை.

அத்தை சமையலறையில் இருப்பது புரிந்தது.

”அம்மா இந்த லூச தண்ணி தெளிச்சி எழுப்புங்கம்மா! ஊருக்கு போற பதட்டமே இல்லாம எப்படி தூங்குது பாருங்க!”

“சாரி அத்தே! கொஞ்சம் லேசா தலைவலி அதான்”

“ம்ம்! முகம் அலம்பினா எல்லாம் சரியாயிடும்.போ! சூடா ஒரு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்”

அத்தை நகரவும், “சரி நீ வெளிய கெளம்புரியா கார்த்திக்? மாமா தான் வர்றாங்களா என்னை வழியனுப்ப?”

“இல்லப்பா! யாரும் வரல. நான் தான் உன்னக் கொண்டு போய் விடனும்.அப்பா ஏதோ அவசர வேலையா வெளியே போகனுமாம்.ஏன் உன்ன வழியனுப்ப ஒரு ஊரே வரணுமா? உம்மூஞ்சிக்கு நான் மட்டும் போதும்”

அத்தனை ஆர்வமும் சட்டென வடிந்தது. நேற்று வரை என்னை மகள் மகள் எனக் கொண்டாடிய மாமாவுக்கு இன்னிக்கு ஏதோ திடீர் வேலை. இந்த அத்தை ஏதோ விட்டேத்தியாவே பேசுறாங்க. என்னதான் இருந்தாலும் நான் இவங்களுக்கு தூரம் தானே இப்போ. கண்ணீர் அரும்பியது. புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பது எனக்கு ரொம்ப கடினம்.

”நானே போயிக்கிறேன். நீ ஒண்ணும் வர வேணாம்.யாரு வேலையும் கெட வேணாம் என்னால.”

“அடேயப்பா! தன்மானத் தமிழச்சி.சரி போ! யாரு வேணாம்னா?”

“இந்தா டீ சாப்பிடு! இதமா இருக்கும்.” பரிவோடு தலைவருடியபடி அத்தையின் அருகாமை இன்னும் கோழையாக்கியது. மெதுவா,

“மாமாவால வர முடியலைன்னா நானே போயிக்கிறேன் ஸ்டேசன் வரையும். இவன்... இவர் வர வேண்டாம். நீங்களே சொல்லிடுங்கத்த!”

”இவரா! அதுக்குள்ளேயுமா? ம்ம்... சரி சரி..அவ தான் சொல்லுறாள்ல நீ போக வேணாம் கார்த்திக் இங்கயே இரு.” நமட்டுச் சிரிப்புடன் அத்தையின் கேலி எதுவும் ரசிக்கவில்லை
இவளுக்கு.

”விடுங்கம்மா! இந்த லூசு பேச்சக் கேட்டுக்கிட்டு நீங்க வேற...”

”இன்னொரு தடவ லூசுன்னு சொன்னே அவ்ளோதான்”

“என்ன சொல்லாட்டி மட்டும் டைட்டாயிடுவியா என்ன?அப்படித்தான் சொல்லுவேன். லூசு... லூசு... லூசு.....”

மாமா அவசரமாய் உள்ளே நுழைந்தார்.

”என்ன சத்தம். கவுசி கெளம்பு!எல்லாம் சரியா இருக்கா ஒரு தடவ பாத்துக்க!கார்த்திக் நீயும் தான் சீக்கிரம்”

“மாமா! டிக்கெட் தான் இல்ல. உங்க கிட்ட தானே இருக்கு. இருக்கா?”

”கார்த்திக் கிட்ட இருக்கும்மா!”

மடமடவென தயாரானாள். அதிசயமாய் அவனும் அவளும் ஒரே நிறத்தில் உடையணிந்திருந்தார்கள்.

வழக்கமான விடைபெறுதலை விடவும் கனமான ஏதோ ஒன்று. இந்த பாசத்துக்கும் அருகாமைக்கும் எவளோ ஒருத்தி. அது நானில்லை. மனம் சட்டென இறகுகளை உள்வாங்கி கவலையாய் நிகழ்வுகளோடு இரண்டற கலந்தது.

மணி காலை : 6:35.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.வண்டி வந்ததும் குறிப்பிட்ட பெட்டி, இருக்கை எல்லாம் தேடித்தேடி அமர்ந்தார்கள்.

மாமா வெளியே நின்று கொண்டிருந்தார். கார்த்திக் சாமான்களை அடுக்குவதில் குறியாய் இருக்க,இவளோ உணர்வேயின்றி சிலையாய் இருந்தாள்.மாமா ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் காதில் வாங்காமல் தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தாள். எதோ உள்ளுணர்வு குறுகுறுக்க நிமிர்ந்தவள் அவன் கேலியாய் சிரிக்கவும் கண்ணீர் தழும்ப மவுனமாய் தலைகுனிந்தாள்.

பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.வண்டி நகரத் தொடங்கியது.அப்போது தான் சுரணை வர,

“மாமா டிக்கெட் எங்க? கார்த்திக் டிக்கெட் எங்க?ஏய் வண்டி கிளம்புது... நீ போகலையா? என்னடா சிரிக்குற.. ப்ளீஸ் சிரிக்காம டிக்கெட் கொடு!மாமா மாமா..” மாமா புள்ளியாய் மறைந்த்தார். வண்டி வேகமெடுத்தது. ஏதோ புரிய ஆனாலும் உண்மையா என்கிற குழப்பம் மேலிட அவனை பதற்றமாய் பார்த்தாள்.

”நீயும் வர்றியா ஊருக்கு?விளையாடாத. டிக்கெட் எங்க காட்டு பார்க்கணும்?”

“ம்ம்!இப்பத்தான் மகாராணி கனவிலேர்ந்து நனவுக்கு வந்தீங்களோ?அப்பா இவளோ நேரம் காட்டுக் கத்தா கத்திட்டிருக்கார் நீ பாட்டுக்கு என்னய சைட் அடிச்சிட்டிருக்க! அவருக்கு புரிஞ்சிடுச்சு!சே என்ன பொண்ணுடீ நீ? கூட வர்றவன்கிட்டயே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வர்றா”

”ஆமாடா நான் பொண்ணே இல்ல.இவரு பெரிய மன்மதரு சைட் அடிக்கிறாங்க.நில்லு நில்லு என்ன புரிஞ்சிடுச்சு?”

“நம்ம பையன் விரிச்ச வலையில கவுசி விழுந்திட்டான்னு அப்பாவுக்கு புரிஞ்சிடுச்சு!”

”யாரும் விழல.”

“நெசமாவா? ஆனா உன் கண்ணு வேற சொல்லுதே!பொய் பேசுற இந்த இதழ்களுக்கு எப்பவும் ஒரே தண்டனை தான்.”

“என்ன தண்டனை?”

“ம்ம் எப்பவும் என் இதழ்களின் அரவணைப்பில் இருப்பது!அதுக்கு தான் ...அந்த ராட்சசியோட அப்பாகிட்ட அனுமதி கேக்கப் போறேனாக்கும்”

“ஏண்டா பொய் சொன்ன?என்னமா நடிச்ச? சே நீ மனுசனே இல்ல! அத்தை மாமா கூட... அய்யோ என்ன நெனச்சிருப்பாங்க?ச்சீய்” அழகாய்ச் சிணுங்கி அவன் தோளில் சரிந்தாள்.

அந்த இளம் ஜோடிகளின் சந்தோச சிணுங்கல்களை சுமந்தபடி, ஒய்யாரமாய் விசிலடித்தவாறு பயணித்தது தொடர்வண்டி.

Monday, July 12, 2010

விழியால் பேசுகிறேன் - 1

உன் பிம்பங்கள் விட்டுச்சென்ற
தடங்களை படியெடுக்கிறேன்
கேலி செய்கிறதென் மனசாட்சி!
நிறைசூல் சர்ப்பத்தின் சீற்றமும்
தளர்ச்சியும் கொண்டவாறே
என்னுள் உறைந்த உன்னை
மறைக்கிறேன் அதனிடம்!
ஒத்திகையில் தோற்றபின்
மேடையேற வாய்ப்பு...
இருக்குமென்ற இருத்தலைவிடவும்
இல்லையென்ற நிதர்சனம்
நிம்மதியென்பதால்
துணிகிறேன் உன் விழிகளை
சந்திக்க!

*****

என்னோடு போராடி வெல்வதில்
சுகம் காண்பவன் நீ!
அதற்கெனவே
தோற்பதாய் பாசாங்கு
செய்கிறேன் இப்போதெல்லாம்....
எப்படி சொல்வது உனக்கு
பெருமிதத்தில் திளைக்கையில்
தான் நீ பேரழகனென்று?

*****

Wednesday, July 7, 2010

உயிர்த்தீ

பாருங்கள் இவர்களை!

தன் அறியாமையை அறியாமலே
அடுத்தவர் குறித்து
பரிகசிக்கிறார்கள்!

ஒரு ஆலமரத்தின் பிரமாண்டத்தையும்
அதன் அகண்ட பரவலையும்
புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்
வித்திட்டவிதையின் விஸ்ரூபம்
தெரியாமல்....

பெருந்தீயில் சிதைந்த காட்டில்
எஞ்சியிருக்கும் கரித்துண்டுகளை
கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்
காட்டுத்தீயின் காரணம்
எத்தனை சிறியதென்று!

நடுவண் நிலைப்பாடும்
நாகரீக மிடுக்கும் கொண்டதாய்
சொல்லிக் கொண்டே
மனிதத்தின் மாண்பையும்
மன்னிப்பின் மதிப்பையும்
மிகச்சுலபமாய் மறந்துவிடுகிறார்கள்

யாதொரு காரணமுமில்லாமல்
என் நட்பின் உயிர்த்தீயை
அணைத்தது போலவே!

Tuesday, July 6, 2010

போதும் நிறுத்துங்கள்!


வழியும் என் குருதி தொட்டு
உலகச் சமாதானத்துக்கொரு
கவிதை வடிக்கிறீர்கள்

எழுத்தின் வடிவம்
பொருளின் செறிவு
இலக்கணச் சகிதம்
பரிசோதிக்கிறது உங்களின் பார்வை
ஓலையில் வரையப்பட்ட
கவியில் ஒரேயொரு குறை
குரலை உயர்த்தி
’எழுத்துரு நிறக்கவில்லை’
என்கிறீர்கள்

இதுவரை வலிபொறுத்த நான்
விசும்பத் தொடங்குகிறேன்
பயமா? பச்சாதாபமா?
புரியாத குழப்பத்தில்
உகுக்கப்படுகிறது கண்ணீர்

போதும் நிறுத்துங்கள்!
கீறப்பட்ட என் ரணம்
காயும் வரையாவது
கவிதை எழுதுவதை

Monday, July 5, 2010

சீதா பிராட்டிகள்

இரையை பிடிப்பதாயும்
இணையை தேடுவதாயுமான
ஒரு உணர்வின் விளிம்பு
தளும்ப நேரம் பார்த்து..

விளக்கொளியில் சுவர்கோழிகள்
இரண்டின் ஊடலும் குலவலும்..

பிரிந்த காதலோ இழந்த
நேசமோ ஏதோவொன்று
தொட்டிருக்க கூடும்
அவளின் உயிர் வரை

தெளிந்த நிலவொளியில்
விரகத்தின் பெருமூச்சு
அனேகம் குற்றலைகள்
அமைதியான ஊருணிக்குள்

மெல்ல மெல்ல விடிகையில்
ஈரமுலர்ந்த சேலையுடன்
குடம் நிறைய நீருடனும்
எத்தனை முறை பார்த்திருப்பேன்

வயல் வீடு பிள்ளை மக்கள்
மகசூல் வட்டிப்பணம் புள்ளிவரி
எல்லாமும் ஏறக்கட்டி
ராத்திரியில் தலைசாய்க்க
பாழும் அவன் நினைவு!

எப்போதோ வரும் கடுதாசியும்
எழுத்துக்கூட்டி கூட்டி
வரையப்பட்ட வார்த்தைகளும்
தபால்காரன் புண்ணியத்தில்
தாலிச்சரடோடு அவன்
குறித்த சேதிகளும்...

தீர்மானங்களும் சம்பிரதாயங்களும்
தானே நிர்மாணித்த சட்டங்களும்
திரவியம் தேடிப் போனவன்
திரும்பி வரும் வரை
முள் மேல் தவமாய்..

எல்லாப் பாசத்தையும்
குழந்தையிடம் நிரப்பிவிட்டு
கொண்டவன் முகம் காண..

இன்னமும் என் கிராமத்தில்
வறுமை சிறைபிடித்தும்
’சீதைகள்’ ஆயிரமுண்டு!

Friday, July 2, 2010

கழி நாண்(ன்) கயிறு

கழிநடனம் பார்த்ததுண்டா நீங்கள்?
கழி கொண்டாடுவது எனக் கொண்டால்
சர்வ நிச்சயமாய் தவறு உங்களது தான்!
இது கழிக்கு யாம் ஆடும் ஆட்டம்
அதாகப்பட்டது ஒவ்வொரு அசைவிலும்
விதிக்கும் நியதிக்கும் பயத்தினது முத்திரை!

சுளீரெனத் தோல் பட்டுத்தெறிக்கும்
சுடுமணலென கன்னம் தொடும்
பல சமயம் வார்த்தையின் வாயிலாய்
சில சமயம் பசியின் ரூபமாய்
இன்னும் தணலாய்,திரவ நெருப்பாய்...
வலியின் வேதனை மட்டும் ஒன்றே!

விசை கொண்டு இழுக்கும் கைகள்
அவதார புருசனது அலங்காரம் போல
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உருவில்....

வயிற்றை சுருக்கிய கயிற்றின் முனைகளில்
எங்களின் விலாசங்கள் எழுதப்பட்டிருக்கும்
இறுக்கிய வடுவை குறையெனக் கொண்டால்
வாழ்வையே தொலைக்க நேரிடும் அபாயம்!

கனவுகள் தின்னும் கொடும்பசி
தூங்கும் வயிற்றை தட்டியெழுப்பும்
விம்மியழும் எம்விதானங்கள்
என்ன செய்ய நித்தம் நிகழும்
இவ்விபத்து விதியெனச் சொல்லப்பட்டது...

எம் தலைகள் நிமிர மறுக்கப்பட்டவை
எவர் கரம் இன்று கழி சுழற்றியது
விபரங்கள் என்றும் விவரிக்கப்பட்டதில்லை
அழுத்தமாய் எழுதப்பட்ட அடிமைசாசனம்!

வளைந்த முதுகும் இளித்த இதழ்களும்
இட்டதை சட்டென முடிப்பதும்
சீருடையாய் எம்முடன் சேர்ந்தே வருவன

தசை சுருங்கி மயிர் நரைத்த பொழுதொன்றில்
தன்னிச்சையாய் நிமிர்வது சாத்தியமானது
பேரதிர்ச்சியில் கல்லாகிப் போனேன்
அட,இதுகாலும் ஒரு குரங்கின் கையில் கழி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!