Tuesday, April 20, 2010

நினைவுகள் அழிவதில்லை

எப்போதோ யாருடனோ
பகிர்ந்தளிக்கப்பட்ட
பாசத்தின் சொச்சம்
இன்னும் மிச்சமிருப்பதாய்...

வாழ்வின் வளமையெல்லாம்
தனியளாய் சுகிக்கையில்
ஒப்புக்குச் சிரித்தும்
உள்ளுக்குள் உறுத்தும்
வெற்றிடமொன்று
இன்னும் நிரம்ப வழிவகையற்று...

சட்டென இருள்பரவும்
மின்வெட்டுத் தருணங்களில்
துழாவும் கைகள்
எப்போதோ இழந்த
ஸ்பரிசத்தை இப்போது
தேடுவதாய்..

கை தவறிக் கொட்டிய
வெந்நீரை விடவும்
எனக்காய் வடிக்கப்பட்ட
கண்ணீர் இன்னும்
வலி தந்த பொழுதுகள்..

வேகமாய் நகரும்
வாகன நெரிசலில்
சாலை கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அனிச்சையாய் பற்றுதலை
எதிர்நோக்கும் எல்லா
நாட்களிலிலும்...

உன் கைபிடித்து விளையாடிய
வண்ணமிகு வசந்தங்கள்
மங்கலாய் வந்து மறைகிறது!
கூடவே
நான் மட்டும் பார்த்துத் துடித்த
உன் கடைசிநேர அவஸ்தைகளும்!

வரிகளில் எப்படி இத்தனை
வலியை அப்படியே வடிப்பது?
வலுவிழந்து போயின
வார்த்தைகளெல்லாம்...

வருடத்தில் ஒருநாள்
உன்னை மட்டுமே நினைக்க
ஒதுக்கினாலும் - உன்னை
நினைவுபடுத்தாத நாளொன்று
என் வாழ்வில் இல்லவேயில்லை!

புத்திக்குத் தெரிந்த உண்மை
நெஞ்சுக்கு புரிவதில்லை
ஆயிரந்தான் அழுதாலும்
மாண்டார் மீள்வதில்லை!

துண்டுகளாய் வெட்டப்பட்டும்
காற்றில் உயிர்பெறும்
அதிசய ஜீவியென - உன் பிரிவினில்
உருக்குலைந்த உள்ளத்துக்கு
ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்லி வைத்திருக்கிறேன்

உன்னை மகவெனச் சுமக்கும்
வரம் கைவரும் வரை
’பகிரத்துடித்த பாசத்தையெல்லாம்
பத்திரமாய் வைத்திரு!
என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்குமென்று!’



Friday, April 2, 2010

என் சமையலறையில் அவள்...

காதல் மனைவி.அழகான மாலை நேரம்.மெல்லப் பேச தொடங்கினான்!

”ஏய் நீ நல்லா சமைப்பியா?”

“ம்ம்!கவிதையா சமைப்பேன்!”

“அய்யோ! அப்போ சாப்பிட்டா வாயிலயிருந்தும் ரத்தம் வருமா? இல்ல உன் கவிதைய கேட்டு காதுலேருந்து ரத்தம் வருதில்ல.... அந்த மாதிரி... அய்யோ ! அய்யோ அடிக்காதடி..”

“போடா! அப்போ ஏன் என்ன மாதிரி பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்ட! நல்ல பைவ் ஸ்டார் ஹோட்டல் சீப் குக்கா பாத்து கட்டிக்கிறது தானே!”

“எல்லாம் விதி! மாத்தவா முடியும்?சே கோவத்துல கூட உன் மூக்குத்தி என்னமா ஜொலிக்குது பாரேன்”

“மொக்க! சமாதானப் படுத்தவாவது தெரியுதா? கல்வச்ச மூக்குத்தி வெளிச்சம் பட்டு ஜொலிக்காம? மூக்குத்திக்கு பதில் மூக்க புகழ்ந்திருந்தா பரவாயில்ல.மன்னிக்கிறத பத்தி யோசிக்கலாம்.வேற வழியே இல்ல. இதுக்கு தண்டணையா இந்த ஒரு மாசம் நீ தான் சமையல்”

“கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வச்சாலும் வச்சாங்க.வெளியில சாப்பிட்டா ஆகலைன்னு வீட்டுல சமைச்சா..ஆபிசுக்கும் போயிட்டு வீட்டுலயும் சமைச்சு..ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!தாலிகட்டுன ஆம்பளைங்க பாடு.. ம்ம் ... ஊமையின் கதறல் யாருக்கும் கேக்காது!பாருடி சோகத்துல கவிதை எல்லாம் வருது!”

“உன் வாய்க் கொழுப்பால தான் இதெல்லாம்.. அடக்க ஒடுக்கமா ஆம்பளயா லட்டசணமா பேசக் கத்துக்கோ!ஆனா நாக்குக்கு ருசியா சமைச்சு போடுற கணவன் கிடைக்க எத்தனை தவம் செய்தேனோ?”

“இப்படி பேசிப் பேசியே மயக்கிடு!”

*********************

தண்டனை காலம் முடிந்து(சமையல் செய்யுறதிலிருந்து மட்டும் தான்), கவிதாயினி சமையலறையில் பிரவேசிக்கும் முன் ஒரு சின்ன நேர்காணல்.ம்ம் என்னா பாக்குறீங்க சாப்பிட போறது நான் தானே? உங்களுக்கென்ன சிரிச்சிட்டு போயிட்டே இருப்பீங்க... இருங்க என் தர்ம பத்தினியின் சமையல் அறிவு எப்படி இருக்குன்னு பாக்கலாம்.

”ஏய் என்னப்பா சமைக்கப் போற? சாப்பாடா இல்ல ஏதாவது டிபனா?”

“ம்ம்! காலையிலேயே சாப்பாடா? நீ என்ன வயக்காட்டுக்கா போற பசிக்கு தாங்குமான்னு பாக்க!ஆபிசில உக்காந்து கணக்கு தானே எழுதப்போற? பின்ன?”

“சரி! சரி! நீ என்ன சமைச்சாலும் நான் தாங்குவேண்டி செல்லம். சொல்லு சொல்லு எப்படி பண்ணப்போற? என்ன சமைக்கப் போற?”(அப்பத்தானே முன்னெச்சரிக்கையா ஏதாவது மருந்து வாங்கி வச்சுக்கலாம்!)

”தோசையா இட்லியான்னு குழப்பமா இருக்கு டா!”

“ம்ம்! எனக்கு தோசை தான்பா வேணும்”

“அப்பச் சரி!முதல் முதல்ல சமைக்கிறேன்ல அதனால இன்னிக்கு பால் பாயாசம் வைக்கப் போறேன்! அப்புறம் தோசைக்கு சாம்பார் சட்னி.. ஏய்..என்ன குட்டிமா கண்ணெல்லாம் கலங்குது”

“இல்லப்பா!3 வருசமா நானே சமைச்சு நானே சாப்பிட்டு வாழ்ந்த இந்த பிரம்மச்சாரிய வாழ்க்கை எத்தன கொடும தெரியுமா? ஒரு பொண்ணு வந்து அழகா சமைச்சு, அன்பா பரிமாற மாட்டாளான்னு இருக்கும்.அன்னிக்கு உனக்கு சமைக்கத் தெரியுமுன்னு சென்னாருல்ல உங்கப்பா அப்போல இருந்து உன் கையால சாப்பிட தவங்கெடக்குறேன் தெரியுமா? நீ என்னடான்னா எனக்கு தண்டனை கொடுத்து கொடுத்து நானே கரண்டி புடிக்கிறதா இருக்கு!”

“இவளோ ஏக்கமாடா? சே, எனக்கு புரியாம போயிடுச்சே! சரி இன்னிலேர்ந்து நானே.. நானே சமைக்குறேன். ஆனா குறை சொல்லாம சாப்பிடணும் சரியா!குறை ஏதாவது சொன்ன... அப்புறம் நீதான் சமைக்கணும் எப்பவும். சரியா?”

“இல்லடீ நீ சமைக்குறதுக்கு முன்னாடி எப்படி சமைக்கப் போறேன்னு சொன்னா நல்லா இருக்குமுல்ல?”

“ம்ம்!அப்படிக் கேளு! மாவை எடுத்து ஊத்தி சீரா பரவவிட்டு,பக்குவமா எண்ணெய் தெளிச்சு, ஒட்டாம வாகா திருப்பி, உள்ளும் புறமும் வாட்டி எடுத்தா அது தான் தோசை!”

“ஆகா! கவிதை கவிதை! நாக்குல எச்சில் ஊறுது போ!அப்புறம் பாயாசம்?”

”அதென்ன பிரமாதம்! பாலைக்காய்ச்சி, சவ்வரிசி சேமியா சர்க்கரை இப்படி பங்காளி சகிதம் உள்ளிறக்கி,ஏலம் பொடித்து முந்திரி திராட்சை வறுத்துச் சேர்த்தால் உன் ஆயாசம் மாறி பவ்யமாய் வந்திடுவாய் பாயாசம் பக்கத்தில்!”

“அய்யோ அய்யோ! என் பொண்டாட்டி சொல்லுற கவித மாதிரி அப்துல கலாமே.. சே அவரு விஞ்ஞானி.. அப்துல் ரகுமான் கூட இதுவரைக்கும் எழுதல போங்க!உன்னப் போயி உங்கம்மா லூசுன்னு அன்னிக்கு திட்டுனாங்களேடி! அதான் வருத்தம்.”

”இப்ப எதுக்கு அவங்கெல்லாம்.ஏய் நீ வஞ்சப் புகழ்ச்சி ஏதும் பண்ணலயே?”

”சத்தியமா! நீயும் கவிதை .. உன் சமையலும் கவிதை! சே.. நான் ரொம்ப குடுத்து வச்சவன்! நாளைக்கு ஆபிஸ் போயி ஒரு பத்து பிரம்மச்சாரியாவது வயிறு எரிய இதச் சொல்லி சிரிக்கணும்! அப்புறம்..கல்யாணம் பண்ணி என்னத்தக் கிழிச்சேன்னு வெறுப்பேத்துறாங்க சாமி! இருக்கட்டும் இருக்கட்டும் !”

பேப்பர் படித்தவாறு, தொலைக்காட்சியின் தொல்லைகளை இன்பமாய் உள்வாங்கிக் கொண்டே சமையலறையில் அவள் நடமாடுவதை ரசித்தான். இது தான் காலங்காலமாய் அவன் கனவு கண்ட காட்சி! சே இன்னிக்குத் தாண்டா நாம வாழவே ஆரம்பிக்கிறோம் குடும்பத் தலைவனா!

*******************************

அரைமணி நேரங்கழித்து,அலுவலகம் பற்றிய நினைவு வரவும்....
அடுக்களைக்குள்ளே எட்டிப்பார்த்தான்.

”என்ன சத்தமே இல்ல? என்னம்மா பண்ணிட்டிருக்க? என்ன யோசனையா குழப்பமா இருக்க?”

“இல்லடா! ஒரு சின்ன விசயம்! அடுப்ப எப்படி பத்த வைக்கிறது?”

”என்ன .. என்ன அடுப்ப.. அடுப்ப எப்படி பத்த வைக்கிறதுன்னு தெரியலயா? என்னடீ சொல்லுற?”

“இல்ல எங்க வீட்டுலயெல்லாம் நாங்க தோசைய ஓவன்ல தான் செய்வோமா அதான் அடுப்ப....”

“தோசைய ... அய்யோ.... அப்ப அப்ப உ..உனக்கு....”

“உண்மை என்னன்னா எனக்கு ச..சமைக்கவே தெரியாது. சுடு தண்ணி கூட வச்சதில்ல. ரொம்ப செல்லமா வளந்திட்டேனா...அதான்...”

“உங்கப்பா அன்னிக்கு சொன்னாரே! நீ நல்லா சமைப்பேன்னு...அ..அது எல்லாம் பொய்யா?”

“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணுன்னு சொல்லுவாங்கல்ல!அதான்...”

அவள் பேச பேச, அங்கேயே அவன் எதிர்காலம் தெரிய... மயங்கிச் சரிந்தான் அவன்!

பின்குறிப்பு:-

இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்பட்டது இல்லை! அப்படி தவறுதலாய் ஏதேனும் நடந்திருந்தால் தனியாக மின்னஞ்சலில் திட்டவும். தாறுமாறாக பின்னூட்டமிட எத்தனிக்கும் நண்பர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், மீறினால் இந்த கதாநாயகனைப் போல சபிக்கப்பட நேரும் எனபதை எங்கள் அகில உலக அடாவடி மகளீரணி தெரிவித்துக் கொள்கிறது. நன்றி! மேலும்,பாராட்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!