Tuesday, April 20, 2010

நினைவுகள் அழிவதில்லை

எப்போதோ யாருடனோ
பகிர்ந்தளிக்கப்பட்ட
பாசத்தின் சொச்சம்
இன்னும் மிச்சமிருப்பதாய்...

வாழ்வின் வளமையெல்லாம்
தனியளாய் சுகிக்கையில்
ஒப்புக்குச் சிரித்தும்
உள்ளுக்குள் உறுத்தும்
வெற்றிடமொன்று
இன்னும் நிரம்ப வழிவகையற்று...

சட்டென இருள்பரவும்
மின்வெட்டுத் தருணங்களில்
துழாவும் கைகள்
எப்போதோ இழந்த
ஸ்பரிசத்தை இப்போது
தேடுவதாய்..

கை தவறிக் கொட்டிய
வெந்நீரை விடவும்
எனக்காய் வடிக்கப்பட்ட
கண்ணீர் இன்னும்
வலி தந்த பொழுதுகள்..

வேகமாய் நகரும்
வாகன நெரிசலில்
சாலை கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அனிச்சையாய் பற்றுதலை
எதிர்நோக்கும் எல்லா
நாட்களிலிலும்...

உன் கைபிடித்து விளையாடிய
வண்ணமிகு வசந்தங்கள்
மங்கலாய் வந்து மறைகிறது!
கூடவே
நான் மட்டும் பார்த்துத் துடித்த
உன் கடைசிநேர அவஸ்தைகளும்!

வரிகளில் எப்படி இத்தனை
வலியை அப்படியே வடிப்பது?
வலுவிழந்து போயின
வார்த்தைகளெல்லாம்...

வருடத்தில் ஒருநாள்
உன்னை மட்டுமே நினைக்க
ஒதுக்கினாலும் - உன்னை
நினைவுபடுத்தாத நாளொன்று
என் வாழ்வில் இல்லவேயில்லை!

புத்திக்குத் தெரிந்த உண்மை
நெஞ்சுக்கு புரிவதில்லை
ஆயிரந்தான் அழுதாலும்
மாண்டார் மீள்வதில்லை!

துண்டுகளாய் வெட்டப்பட்டும்
காற்றில் உயிர்பெறும்
அதிசய ஜீவியென - உன் பிரிவினில்
உருக்குலைந்த உள்ளத்துக்கு
ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்லி வைத்திருக்கிறேன்

உன்னை மகவெனச் சுமக்கும்
வரம் கைவரும் வரை
’பகிரத்துடித்த பாசத்தையெல்லாம்
பத்திரமாய் வைத்திரு!
என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்குமென்று!’



12 comments:

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கயல்.. ம்ம்..

நசரேயன் said...

//என் சகோதரனின் ஆன்மா
இப்போதும் என்னைத் தான்
சுற்றிக் கொண்டிருக்குமென்று!’//

ஆன்மா சாந்தியடைய நானும் பிராத்திக்கிறேன்

sathishsangkavi.blogspot.com said...

//புத்திக்குத் தெரிந்த உண்மை
நெஞ்சுக்கு புரிவதில்லை
ஆயிரந்தான் அழுதாலும்
மாண்டார் மீள்வதில்லை!//

அழகான, ஆழமான வரிகள்....

Anonymous said...

வார்த்தைகள் அனைத்தும் வலி சுமந்து ஏக்கங்களை சுமந்து ஏதோ ஒரு எதிர்பார்ப்பை சுமந்து அரவணைப்புக்கு ஏங்கி ஈடு செய்யமுடியாத இழப்பை உணர்த்துகிறது.... நினைவுகள் என்றும் ஈரமானவை......

பனித்துளி சங்கர் said...

///////உன் கைபிடித்து விளையாடிய
வண்ணமிகு வசந்தங்கள்
மங்கலாய் வந்து மறைகிறது!
கூடவே
நான் மட்டும் பார்த்துத் துடித்த
உன் கடைசிநேர அவஸ்தைகளும்!//////

மிகவும் அழகான சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

கார்க்கிபவா said...

//வரிகளில் எப்படி இத்தனை
வலியை அப்படியே வடிப்பது?
வலுவிழந்து போயின
வார்த்தைகளெல்லாம்.//

:((((

vasu balaji said...

நினைவுகளின் வலிக்கு வார்த்தைகளின் வடிகால். :(

'பரிவை' சே.குமார் said...

//கை தவறிக் கொட்டிய
வெந்நீரை விடவும்
எனக்காய் வடிக்கப்பட்ட
கண்ணீர் இன்னும்
வலி தந்த பொழுதுகள்..//
நல்லாயிருக்குங்க அனுபவிச்சு எழுதிய வலிகள்..... ம்ம்ம்ம்ம்.. சாரி வரிகள்...
கவிதையின் நீளத்தை வலிகள் குறைத்துவிட்டன.

ப்ரியமுடன் வசந்த் said...

கயல் தம்பியின் நினைவு நாள் கவிதையா? வலியோடு எழுதி இருக்க கயல் உன்னோடு சேர்ந்து நானும் உன் வலிகளை பகிர்ந்து கொள்கிறேன்...

கயல் said...

அனைவருக்கும் நன்றி!

கமலேஷ் said...

வலிகளை வரிப்படுத்தும் போது அது மிகவும் வலிமை கொண்டதாகி விடுகிறது...மனதில் உள்ளதை மிகவும் அடர்த்தியாக பதிவு செய்து இருகிறீர்கள்....

கயல் said...

கமலேஷ்,

தாங்களின் பதின்மம் பற்றிய பதிவுக்கு எனது நன்றிகள்!

மிக்க மகிழ்ச்சி!

நன்றிகள் பலகோடி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!