Sunday, December 30, 2012

நேயமிகு எதிரிக்கு....

எனக்கும் அவனுக்கும் 
யாதொன்றிலும் 
கருத்தொற்றுமையில்லை 
எனக்கு ஆத்திகமென்றால் 
அவனுக்கு நாத்திகம் 
நான் பாரம்பரியமென்றால் 
அவன் நவீனம் 
இசையெனில் 
எனக்கு மெல்லிசை
அவனுக்குத் துள்ளிசை 
நான் ஆதிக்கத்தை வெறுப்பவள் 
அவனோ ஆணாதிக்கவாதியென்று 
முழங்கித் திரிபவன் 
இலக்கியத்திலும் கூட
சங்கத்தமிழென்றால் 
பின்நவீனத்துவமென்று...

நாங்கள் இருவேறு துருவங்கள்

காதல் காமமென்ற 
சராசரிகளில்லை 
பாலின பேதமென்பதேயில்லை 
தர்க்க மேடையே
எங்களின் இணைவுப் புள்ளி 

சமூகப் பார்வையில்
புரிதலில் 
ரசனையில்
ஏதொன்றிலும் 
சமரசமில்லை

எனக்கான பாசமோ பரிதவிப்போ மெனக்கெடல்களோ 
ஏதுமில்லாத நேயமிகு எதிரியென்று 
உற்சாகமாயிருந்தேன் -ஏனெனில் 
அன்பில் அதீதமென்றால் ஒவ்வாமையெனக்கு 

சலித்துக் கொண்டாலும் 
சிடுசிடுத்தாலும் 
திட்டித் திருத்தினாலும் 
எல்லாப் புலம்பலும் 
அவன் முகவரிக்கே

காதல் கடிதங்களிலிருந்து 
காதலன் முத்தம் வரை 
சொல்லிச் சிரித்து 
கைவசமிருந்த கொஞ்சமே கொஞ்சம்
ரகசியங்களையும் காலி செய்தாயிற்று 
எதிரியிடம் சொல்வானேன் 
யோசிக்கவேயில்லை 
அவனும் தான்
அத்தனை இயல்பாயிருந்தது 
உரையாடல்களனைத்தும்

வெற்றியின் மீது வெறியவனுக்கு 
தோல்விகள் பிடித்தமில்லையாயினும் 
அவனுக்கெனச் சிலமுறை 
என்னையுமறியாமல்...

என் சின்னதொரு தோல்விக்கு
அவன் ஆதங்கப்பட்ட
அக்கணம் சபிக்கப்பட்டது 

நண்பர்களென்றுணர்ந்தோம் 
பிரிந்து விட்டோம் 

அய்யோ!
கேட்க மறந்துவிட்டேன் 
எந்த அட்சரேகையில் அவன் கலம் 
பயணிக்குமென்று...
நேரெதிர் திசையில் 
தொடங்க வேண்டும் நான் 

உன் கோட்பாட்டை மாற்றியெழுது கலிலியோ
பூமி தட்டையாகவே இருக்கட்டும்!

Saturday, December 29, 2012

பலியின் விமரிசை விருந்தென்றறிக

மஞ்சளும் உப்பும் தோய்த்த
இறைச்சித் துணுக்குகள்
தோரணம் போல் கட்டப்பட்டிருக்கின்றன
காக்கைகள் அணுகாதவாறு
பெரியதொரு கழியுடன் காவலுக்குப் பெரியம்மா
தோலும் குடலும்
கத்தி பிடித்தவன் கூலிக்கு எடுத்துக் கொண்டான்
நான்கு கால்களும்
ஒரு தலையும்
நெருப்பில் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது
அம்மாவோ சித்தியோ
இரத்தத்தைப் பொரியல் செய்கிறார்கள்
அத்தைகள்
மாமிசத்தை அரிந்து கொண்டிருக்கிறார்கள்
பாக்குச் சுண்ணாம்போடு வெற்றிலையையும்
குதப்பிக் கொண்டிருக்கிறார்கள்
விருந்தினர்கள்
அமளிதுமளிபடுகிறது முன்பக்கத் தாழ்வாரம்
அரசியலும் சாதியும் மிதமிஞ்சிய சுயபிரதாபங்களும்
அலுப்புத் தட்டுகிறது
தூரத்தே சோம்பலாய் புல் மேய்கிறது
பங்குனித் திருவிழாவுக்கு நேர்ந்துவிட்ட வெள்ளாடு
இன்னொரு நாளும் இதே காட்சிகள் அரங்கேறலாம்

Monday, December 17, 2012

பிரமீடுக்குள் உறங்கும் பதில்கள்


கேள்விக்குறிகளாலொரு பிரமீடமைத்து 
உள்ளே பிரபஞ்சத்தின் பதில்களை 
உறங்கச் செய்திருக்கிறேன் 

ஐந்து 
நான்கு 
மூன்றென 
இறங்கு வரிசை 
இடுக்குப் புள்ளிகளில் 
ஒன்று உச்சத்திலிருக்கிறது 

மூலிகைச் சாற்றில் 
வளர்ந்தபடியிருக்கிறது 
பதில்களின் நகங்கள் 

பதப்படுத்தப்பட்ட 
மம்மிகளுக்குண்டான கரிசனத்தோடே 
முப்புறமும் சூழப்பட்டிருக்கிறது 
அப்பதில்கள் 

அதன் பக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும் 
ஆபரணங்களுக்காக 
எவனேனுமொருவன் நாளை 
துயிலெழுப்பலாம் மரணித்தவற்றை... 

பூர்வ ஜென்ம ஞாபகத்தில் 
பேராசைச் சிதைவுகளில் 
முளைவிடும் விதைகளுக்கு 
உரமாகியிருக்குமந்த
கேள்விகளைத் தேடத்துவங்கலாம் 

மீண்டுமொரு துவக்கம் 
அழிவுகளிலிருந்து... 

Monday, December 10, 2012

வானவெளிக் கனவுகளோடொரு மாமிசப்பக்ஷி


உயரப் பறத்தலில்
உச்சம் தொடுகிறது
உயர்சாதிப் பருந்து
தனக்கிருக்கும் பலத்துக்கு தக்கவாறு
எம்பிச் சிறகசைக்கிறது ஊர்க்குருவி
தோற்ற முயற்சிகளுக்கு
எள்ளி நகையாடுகின்றன
மனிதக் குயுக்தி புகுந்த சில மிருகங்கள்
தனக்கும் சிறகிருப்பதை
மறக்கடிக்கும் எதையும்
செவிமடுப்பதில்ல பறக்கத் துடிக்குமது
வக்கில்லாத முன்னோடிகளை
ஏறிட்டும் பார்ப்பதில்லை
ஆமாம், அதற்கெதற்கு பருந்தாகும் நிர்பந்தம்?
அது அதுவாகவே இருக்கட்டும்
வேண்டுவதெல்லாம்
வேடர்கள் கண்ணியில் சிக்காத
சுதந்திர வாழ்க்கை
பறக்கப் பறக்க
வசமாகும் வானம்
களைத்து பூமி தொடுகையில்
கண்ணுக்குப் புலப்பட
ஏதோவொரு நீர்நிலை
இரப்பை நிறைய
ஒன்றிரண்டு தானியங்கள்
மக்கிய மரத்தினையும் உபத்திரவிக்கும் புழுக்கள்
மறந்தும் பிறவுயிர் பிரிப்பதில்லையாதலால்  
மீந்த மாமிசம்
இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்
மூக்கு வியர்க்கும் வியாதிகளில்லாது
இன்னும் இன்னும்
உயரப் பறத்தலின் கனவோடு...
தூறல் நனைத்த கார்காலத்தில்
அதோ
அந்த வானவில்லை நோக்கி
அம்பெனப் பாய்கிறதந்த மாமிசப்பக்ஷி!

Saturday, December 8, 2012

பாமர பக்தி -06


உரிமையுடன் உன்னைக்
கலைத்துப் போடுகிறேன்
கிழித்தெறிகிறேன்
குதறியெடுக்கிறேன்
சபிக்கிறேன்
வசைபாடுகிறேன்
பேசத் திராணியற்று
முடிவிலுன் தோள் சாய்கிறேன்
கோபமேயில்லையா
இன்னுமேன் நீடித்து
இழுத்தடிக்கிறாயென் ஆயுளை?

பாமர பக்தி -05


கடவுளானபின்
காதல் கொள்வேனோ
என்னவோ
இப்போதைக்கு
சன்னலோர இருக்கையில் நான்
பக்கத்தில் நீ
எந்த திருப்பத்திலும்
சாத்தானாக மாறக்கூடும்
அபாயத்தில் நான்
எதற்கும் எச்சரிக்கையாயிரு!
தளரும் என்னைத் தாங்கிப் பிடிக்கையில்
எங்கேனும் கூர்நகம் பட்டவை
ஏதோவொரு மதத்தின்
சின்னமாய் உருமாறலாம்
பக்தியின் புரிதல் அப்படி...


பாமர பக்தி -04


கடவுளைத் திட்டாத
கவிஞரில்லை
மரபை உடைப்பானேன் ?
திருப்பித் திட்டாத
கருங்கல் கதாப்பாத்திரம்
வாங்கிக் கொள்ளட்டும்
படைத்ததின் பலனை
நேற்று விட்ட இடத்திலிருந்து
தொடரப் போகிறேன்...
விசுவாசிகளே விலகிச் சொல்லுங்கள்
எமக்குத் தனிமை அவசியம்

பாமர பக்தி -03


விளக்கொளி
தூபம்
சந்தனம்
மலர்கள்
இதோனோடான ஓர்மையில்
வேதங்களேதும் ஓதாது
யோகம் கைவரப் பெற்றபின்
அபத்தமான கேள்விகளுமில்லை
பதிலுக்கான
காத்திருத்தலுமில்லை
அதன் போக்கில்
ஓடிக் கொண்டிருக்கிறது
சண்டிக் குதிரை
குளம்படி யாவும்
ஒரே நேர்கோட்டில்

பாமர பக்தி -02


இருக்கிறாயா
இல்லையா
எனக்குள் பகுதறிவுசார்
கேள்விகளேயில்லை
நான் புலம்பும் போது
நீ இருந்தாய்
இப்போதைய நிலவரம்
எனக்கும் தெரியாது

பாமர பக்தி - 01


காற்றோ
நெருப்போ
விழுங்கிவிடும்
பிரித்து வைத்த
கற்பூரத்தை...
சொற்ப நேரத்துக்குள்
கடவுளுக்கு மரியாதையும்
கண்களுக்கு ஆரத்தியும்
செலவிட்ட காசுக்கு
நேர் செய்த கணக்குமாக...

Friday, December 7, 2012

சேரிகள் ஒளிபெறட்டும்

வீணையின் நாதம் 
எப்போதும் 
அரற்றும் வயிற்றோடு 
நின்று ஜெயிப்பதில்லை
ஆம்! 
பசியில் செவியுணர்வதில்லை 

சோதியா ஜோதியா 
என்பதிலெல்லாம் 
பெரிதாயென்ன வந்துவிடப்போகிறது 

அன்றாடத் தேவைகள் 
அவர் வரைவில் 
உழைப்பிற்குத் தக்க கூலியும் 
மங்கும் பார்வைக்கு 
ஒரு கைப்பிடிச் சோறும் 
பலகோடி ஒளிவெள்ளம் 
இருண்டு விட்ட குடிசைக்குள் 

சேரிகள் ஒளிபெறட்டும் முதலில் 
அதன்பின் 
கொண்டாடிக் கொள்ளுங்கள் 
அந்நிய முதலீட்டுக்கு 
அரசாங்கத் திருவிழா!

பசித்தவர்க்கு தன்னலமென்பது யாதெனில்....


பறந்து கொண்டிருக்கிறதோர்
தாய்ப்பறவை
விரலிடுக்கில் வேட்டைப்பொருள்...
அம்மாவுக்குக் காத்திருக்கும்
அன்றுதித்த பச்சிளம் பறவைகளோடு
விரிந்து தான் கிடக்கிறது
வழிநெடுகிலும்
அதன் கூட்டைப் போல்
ஆயிரம் கூடுகள்...
நொறுங்கிய ஓட்டில்
சிக்கிக் கொண்ட மெல்லிறகை
மீட்கும் பிரயத்னங்களிலிருக்கும்
தன் குஞ்சைப் பார்த்ததும்
பரபரப்போடு கூடடைகிறது அப்பறவை!
அலகால் சிக்கெடுத்து
வாய் பிளக்கும் அத்தனைக்கும்
உணவூட்டுமதற்கு
எப்போதும் நினைவில்லை
பசியோடிருக்கும் பக்கத்துக்கூடு!

கூசிப் போகும் என்னுடல்...

மீன் தொட்டி மீன்களிடம் நேசம் வைக்கிறேன் 
பூந்தொட்டியில் தோட்டம் வளர்க்கிறேன் 
படிப்பதெல்லாம் சோசலிசம் 
வாழ்வதென்னவோ அடிமை வாழ்க்கை 
சில நேரம் சீறியெழுகிறேன் 
சில நேரம் முகம் மூடி அழுகிறேன் 
சிலருக்கு மகுடியும் 
சிலருக்கு வீணையும் 
எப்போதும் உண்மையுரைக்கப் பறையோடும் 
பல்முக வித்தகனாய் 
எண்ணத்தின் வீச்சுக்களுக்கேற்ப....

சாத்தானாக வாழ்கிறேன்
கடவுளைச் சபிக்கிறேன்
மனிதர்களுக்குப் பயப்படுகிறேன்

நான் யாரென்கிற தெளிவிற்கு
நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை

எல்லா நேரத்திலும்
எனக்குப் பிடித்தமான நான்
என்பதே என் வரைவு

என் ரகசியங்கள் அமிழ்ந்து நின்ற கிணறுகள்
கடலோடு கலந்த அந்த நிமிடத்திலும்
போட்டு வைத்த கல்லில் எத்தனை சேதமென்று
கணக்கிடவில்லை
தேர்ந்தயிடம் தவறென்று மு்றையிடாது
சிரித்தபடி நகர்ந்தேன்

இப்போதும் இப்படித் தான்

பைத்தியமென்றும்
பிச்சியென்றும்
சொல்லாமல்
மனுசியென்று சொன்னால்
கூசிப் போகும் என்னுடல்...

சாத்தானாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்!

Wednesday, December 5, 2012

சொல்


எதை நோக்கிச் செலுத்தப்பட்டது
அந்தச் சொல்
உலுக்கியெடுக்கும் பிரளயங்கள்
உள்ளடக்கி
எய்யப்பட்டச் சொல்லம்பு
ஆட்டம் கண்டதென் அஸ்திவாரம்
பாவங்கள் பாவனைகளற்ற
ஆழ்மனப் பரிதவிப்போடு
பரிமாறப்பட்டதென் இலையில்...
ஆயிரம் சொல்தாங்கி
அபூர்வ சிந்தாமணி நான்
வலு பொருந்திய பதமதன்
கணம் பொறுக்காது
கலங்கி வழிகிறது கண்ணீர்
நெஞ்சமெங்கும் ஆர்ப்பரித்து
ஓடுகிறாய்
இதயத்தின் குறுக்குவாட்டு நரம்பில்
பிணைக்கப்பட்டிருக்கிறது
நின் அசுவத்தின் கடிவாளம்
அலைவுகளுக்கெல்லாம் புத்தம்புதிதாய்
வலியோடான மென்னதிர்வுகள்
தம்புராவின் மீட்டலையொத்து..
சிந்திக்கொண்டிருக்கிறது
பேரிசைச்
சொட்டுச் சொட்டாய்

Monday, December 3, 2012

நீந்தக் காத்திருக்கும் விண்மீன்


இணையும் புள்ளிகளைப் பொறுத்து
வட்டமென்றும்
சதுரமென்றும்
செவ்வகமென்றும்
அறுங்கோணமென்றும்
அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது
அதனதன்
சுற்றளவு
பரப்பளவுகளை
கணக்கிடுவதே வேலையாயிருந்தது
அளவீடுகள் தப்பிப் போய்ப்
பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன்
தேனுண்ட மயக்கத்தில்
திளைத்திருந்த அதன் மென்னுடம்பு
அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று
மந்திரப் பாயில் பயணிப்பது போல
சறுக்கியும்  தவழ்ந்தும்  விரிந்த
அதனுலகில் அலகுகளேதும்
நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை
இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில்
எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை
ஒளிபொருந்தியப் பயணமொன்றில்
விண்மீன்கள் நானென்ற  பிரம்மையிலாழ்ந்தேன்
பிரபஞ்சம் சுதந்திரமயமானது
எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும்
வடிவங்களற்ற அதனுலகம்
பிடித்துப் போய்  வாழ்க்கை முழுவதற்குமாய்
அதனோடே வாசம் செய்ய
நானுமொரு புள்ளியாய்
வாழ்ந்து மறைய
வலுவானதொரு
காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்…

நோய்க்கூறு#4

விம்மலுக்கு நடுவே 
கண்கள் சிவக்க 
கேவலும் புலம்பலுமாய் 
விரலின் தடம்பதிந்தக் கன்னத்தில் 
கோடுகோடாய் ஈரக்கோடுகள் 
சல்லடைக் துளைகளில் 
வழிந்த நேசமும் 
அப்படியும் ஏதாவது 
மீண்டதா என்கிற பரிதவிப்பும் 
ஒரு நீண்ட நெடுங்கதை... 
விழியெதிரே நடந்தேறியும்
நிகழ்வில்
அவர்தம் உலகமென்று
தேங்கிய சாலைநீர்
புடவை படாமல்
பாதுகாப்புணர்வோடு விலகிப்போகமுடிகிறது...

எனக்கு ராஜாக்கள் பிடிப்பதில்லை


’இறைவனுக்காக’
முத்தமிட்டுக் கோப்பை உயர்த்தி
பெரும் சரீரம் மெல்ல அசைய
நடனமொன்றை நிகழ்த்தினான்

பலிபீடத்தில் கிடத்தப்பட்ட
உயிருள்ள படையல்
உயிரற்றுப் பின்னடங்கியது

விருந்துக்குக் காரணமான வெற்றியில்
இறந்த எழுபதுபேருக்கும்
உயிரோடிருக்குமிவன்
ஒற்றைப் பிரதிநிதி

போதையிற் சிவந்த கண்களும்
மதுக்குடுவைத் தாங்கிய கைகளுமாய்
இந்திராதி தேவதைகள் யாவரும்
மன்னவன் சபையில்...
கச்சைகள் மறைத்த
பாகங்கள் தவிர்த்து
அத்தனையும் விருந்தினர் பார்வைக்கு
நிரம்பாத கோப்பைகளனைத்தும்
நிரம்பித் தளும்பின
கொட்டும் முழக்கங்கள் செவி நிறைக்க
மகுடம் சிரசேறியது

அதோ
அந்த மூன்றாம் அறையில்
சிப்பாயின் மனைவியை வன்புணர்கிறான்
விருந்துக்கு வந்தவன்
விசப்பற்கள் தடம்பதித்த பெருந்தனங்கள்
அவள்தம் பாலகன் சவைக்கையில்
பால் தருமா கொடும்நினைவின் விசம் தருமா?
யுத்தம் குத்தமென்பவனை
கழுவிலேற்றுங்கள்
ஆதிக்கவெறி நரம்பிலேறி
பல நூற்றாண்டுகளாயிற்று
கூனோடு எத்தனை நாள் வாழ்வது?

வரலாற்றில் ராஜாக்கள் வாழ்கிறார்கள்
தந்திரிகள் மெச்சப்படுகிறார்கள்
ஒன்றோயிரண்டோ மாவிரர்கள்
மீதமிருக்கும் சேனையிலெவரும்
வெளிச்சம் காண்பதில்லை

எதற்கென்பதில்லை
ஏனென்றும் கேட்பதில்லை
பதில் சொல்லவும் பொறுப்பிருப்பதில்லை
வன்மம் தலைக்கேறும் போதெல்லாம்
மிதிபட அடிமைகள் வேண்டும்
அரசவையில் சாமரம் வீசும்
தமக்கையின் நினைவு வர
தோற்றுப்போன விசுவாசத்தோடு
வீதியிலிறங்கினான் வெற்றிக்கு வித்திட்டவன்...

Sunday, December 2, 2012

நோய்க்கூறு#3சௌஜன்யமாய் பழகத் தெரியவில்லை
முகஸ்துதியாய் பேசத் தெரியவில்லை
புறம் பேச கேட்க பிடிப்பதேயில்லை
ஆதாயத்தோடு எவரையும் அனுகப்பிடிக்கவில்லை
என்னுள் ஆதாயம் தேடுமெவரையும் அனுமதிப்பதில்லை
அதீத அன்பில் குழைவதும்
கண்ணுக்குத் தெரியாத அடக்குமுறைகளில்
சிக்கித் திணருவதும்
எப்போதும் உவப்பில்லை
நடக்கும் பாதையில்
எவரோடும் மோதாமல்
சிரித்த முகத்தோடு எம்மிடம்
சேர்வதே இயல்பென்றாயிருக்கிறது
என் சுதந்திரம் என்னுடன் இருக்கிறது
இதைப் படிக்கும் நீங்களெனக்கு
தாந்தோன்றியென்று பெயரிட்டால்
என் இதழிடையில் இன்னுமொரு புன்னகை பூக்கும்
மனநோயாளியென்றால் புன்னகை
சிரிப்பாய் மாறவும் வாய்ப்பிருக்கிறது...
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!