இணையும் புள்ளிகளைப் பொறுத்து
வட்டமென்றும்
சதுரமென்றும்
செவ்வகமென்றும்
அறுங்கோணமென்றும்
அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது
அதனதன்
சுற்றளவு
பரப்பளவுகளை
கணக்கிடுவதே வேலையாயிருந்தது
அளவீடுகள் தப்பிப் போய்ப்
பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன்
தேனுண்ட மயக்கத்தில்
திளைத்திருந்த அதன் மென்னுடம்பு
அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று
மந்திரப் பாயில் பயணிப்பது போல
சறுக்கியும் தவழ்ந்தும் விரிந்த
அதனுலகில் அலகுகளேதும்
நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை
இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில்
எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை
ஒளிபொருந்தியப் பயணமொன்றில்
விண்மீன்கள் நானென்ற பிரம்மையிலாழ்ந்தேன்
பிரபஞ்சம் சுதந்திரமயமானது
எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும்
வடிவங்களற்ற அதனுலகம்
பிடித்துப் போய் வாழ்க்கை முழுவதற்குமாய்
அதனோடே வாசம் செய்ய
நானுமொரு புள்ளியாய்
வாழ்ந்து மறைய
வலுவானதொரு
காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்…
No comments:
Post a Comment