Wednesday, June 30, 2010

பூந்தொட்டி

விரிசல் விழுந்த மண்தொட்டியில்
பதியமிட்ட ரோஜாசெடி
ஈரம் காயாது தினம் தினம்
நனைவது சாத்தியமானது
மொட்டொன்று மலரும் வரை!

ஞாயிறின் ஒளிக்கீற்றில்
இதழ் பிரியத் தொடங்கியது
மொட்டு!

பூரித்துச் சிரித்த மலரினைக்
குறித்து ஏக சந்தோசம்
செடிக்கும் மண்ணுக்கும்
ஏதோ பிறவிப்பயன் அடைந்ததாய்...

பாராட்டுதலும் பரிவுகாட்டலும்
இதழ் உதிர்ந்த பின் இல்லாது போயிற்று
காரணமாக்கப்பட்டது உடைந்த பூந்தொட்டி!

பாவம் அது!
பீடித்தது பெருங்கவலை
இருக்கும் ஈரம் எத்தனை நாள்
இலைக்கு போதுமென!

Sunday, June 27, 2010

சிதறிய பருக்கை


இராப்பிச்சை ஒருவன்
எல்லோர் வாசலிலும்
இரைந்து கூச்சலிட்டான்
சத்தமிடும் வயிறை
சட்டை செய்யாமல்..

யாசித்து முடிக்கையில்
நள்ளிரவு கடந்திருந்தது

சொற்பமான உணவு
சூரப்பசிக்கு அவல்பொரி

ஒருவாய் இறங்கியிருக்கும்
வழக்கமான ஈனக்குரல்
ஒட்டிய வயிறோடு
வாலைக் குழைத்து
ஓலமிட்டது விசுவாசத்தில்..

உள்ளதில் பாதி போனாலும்
மெல்ல முனங்கினான்
“நாங் கேட்டே இம்புட்டு தான்
இந்தா சாப்பிடு பரவால்ல”
சிதறிய பருக்கைகளைச் சுற்றி
நாய் ஈ எறும்பு இன்னும் சில...
Thursday, June 24, 2010

கடவுளின் குழந்தை

சாத்தான்களும் பிடாரிகளும்
சகஜமாய் புழங்கும் கானகத்தில்
குழந்தையொன்று மந்திரகவசத்தோடும்
உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும்
களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்...

ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம்
அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர்
எப்போதும் இறக்கைகள் முளைத்த
தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன

சாத்தான்களின் பாசறையை
கடவுளின் அரண்மனையாய்
மாற்றுவதாய் ஏற்பாடு!

ஈட்டிகள் துளைக்கையிலும்
மரண அவஸ்தை உச்சத்திலும்
உதவி வேண்டி குழந்தையின் கதறல்
விண்ணைப் பிளந்தும்
தேவதைகள் வரவேயில்லை!

பார்த்தது குழந்தை!
இவ்விடம் வாழ இன்னது ஏற்பு
பகுத்தறிந்து பாந்தமாய் உறவாடியது

இப்போது கடவுளை வரவேற்க
குழந்தை தயார்
ஒரு காட்டேரியின் மடியில்
குருதியை சுவைத்தபடி!

Wednesday, June 23, 2010

இற்றை நாள்

முகத்திலறையும் காற்றோடு
முடிக்கற்றைகளின் போராட்டம்
சொல்லடிபட்ட மனமும்
பதிலடி தராத பாசமும்
இயலாமை தாங்கி கண்கள்
கன்னங்களில் நீர்க்கோலமிட்டபடி...

சொல்லம்பு வார்த்தைகளும்
அது தந்த காயங்களும்
எய்தவரெல்லாம் எம்மவர்கள்
பதிலே இல்லை என்னிடம்!

பேரூந்தின் வேகத்திற்கு சளைக்காமல்
உள்ளுக்குள் நிகழ்ந்தவை யாவும்
அதே தாள லயத்தில்....

இன்னமும் நேரமிருக்கிறது
விடிவதற்கும் விழிப்பதற்கும்
உள்ளுக்குள் கொந்தளிந்தபின்
உறக்கம் கலைக்கப்பட்டது

கண்ணாடிச் சாளரம் வழியே
பாதாசாரிகள் உலகம்...

அம்மாவின் ஒட்டிய மார்பில்
பாலை தேடித் தோற்றதில்
வீறிடும் குழந்தை
அரை நிர்வாணமாய் உலகை
மறந்த நித்திரையில் தாய்!

முடிவுக்கு வரும் இரவுக்கு
இப்போதே ஒட வேணும்
ஒற்றைக் காலோடு ஒருவன்
கனமாக எதையோ சுமந்தபடி!

ஏதோ ஒரு உயிர் பரிதவிக்கிறது
கடந்து போகும் நொடியில்
பதற வைக்கும் அவசர ஊர்தி!

காலைநேரத்து தேன் சிட்டாய்
பறந்தும் படித்தும் வாரநாளை
கடத்திக் கொண்டிருந்த குழந்தைகள்!

”அம்மா!வேலை கிடைச்சிடும்மா,
எல்லாம் மாறும் பாரேன்”
ஒரு கையில் செல்பேசி
மறுகை சில்லரைகளை கணக்கிட்டபடி
ம்ம்,என்னைப் போலொருவன்!

பட்டினிக்கு பயந்து
எட்டாத மேசைக்கும்
எம்பிக்குதித்து சுத்தம்
செய்யும் ஏழைச் சிறுவன்!

சாட்டையில் ரத்தம் தோயத் தோய
தன்னையே விளாசிக் கொள்ளும்
தெருக் கூத்தாடி...
பரட்டைச் சிறுமியொருத்தி
வறட்டுப் புன்னகையில்
வயிறைக் காட்டி யாசித்தபடி...

தள்ளாடும் வயதில்
அரைச்சாண் வயிற்றுக்கு
பொதிசுமக்கும் குடுகுடு கிழவன்!

ஒரு கையில் உலகை
சாமளித்தபடி மனிதனொருவன்
ஊசி பாசிமணிகளோடு
தன்னம்பிக்கையின் அடித்தளமாய்

மனக்கண்ணாடியில்
என்னைப் பார்த்தபோது
கேலியாய் சிரித்தது பிம்பம்
”இன்னுமா புரியல உனக்கு?”

விரலைக் கேட்டவன்
வில்லங்கம் தெரிந்தும்
விசும்பாது விலகாது
ஏகலைவனாய் .....
ஏன் முடியாது?
மற்ற விரல்களோடு
மிச்சமிருக்கும் நாட்கள்....

வாட்டிய துன்பமும்
வருத்திய துரோகமும்
மாயமாகிப் போயின!
மெல்ல புலர்ந்தது இற்றைநாள்
இரவுக்குள் கூடு திரும்பவேணும்
பறவையாய் பறந்தது மனதுThursday, June 17, 2010

அன்றாடங்களை அந்நியமாக்கியவனுக்கு!


கனவுகள் தின்னும் விலங்கொன்றின்
தடதடக்கும் காலடியோசையில் ஏதோவொரு
பயங்கரத்தின் சமீபம் உணர்ந்து
பிரிகின்றன விழித்திரைகள்!

வாதிடும் மனதும் உதடும்
கட்டுக்குள் அடங்காமல்
சலசலத்த வண்ணம்....

சொல்லாமல் விட்ட பதங்களையும்
மிச்சமின்றி தின்று ஏப்பம் விடுகிறது
மாமிசவெறி கொண்ட அரக்கமனமதன்
நிழலீன்ற பயத்தின் ஆளுமையில்!

வெகுவாக விமர்சிக்கப்பட்ட அழகியலும்
அர்ச்சிக்கப்பட்ட ஆதரவு வார்த்தைகளும்
அடிக்கடி மனதில் ரீங்காரமிடுவதாய்...

இருப்பை தெளிந்து சுயம் உறைக்கையில்
களவாடப்பட்டிருந்தன என் நிம்மதியும்
அதன் நேற்றைய அடையாளங்களும்!


Tuesday, June 15, 2010

பூவெளி

நம்பமுடியாமல் மீண்டுமொருமுறை
கண்மூடித் திறக்கிறேன்
அட இது என்ன?
இமைகளில் மிச்சமான கனவா?

விரல் கொண்டு தீண்டிப் பார்க்கிறேன்
உயிர் கொண்டெழுந்த உரோமங்கள்
உண்மை தான் என்கின்றன.

பல்வித சுகந்தமும் வண்ணமும்
வாடினும் வளமாய்ச் சிரிக்கும்
பூபந்து குவியலுமாக...
நான் உலவக் கிடைத்த
புல்வெளி தோறும்
பரவிக் கிடந்தன மலர்கள்

மரங்கள் செடி கொடிகள்
எல்லாவற்றிலும்
இலைகள் தவிர்த்து
மலர்கள் மலர்கள்!

கதம்ப மணமும் கண்ணுக்கு
விருந்துமாக கூடிக்குலவிய
பூக்கள் யாவும் கவிதை பேசுவதாய்...
சூடியும் தூவியும் மலரோடு
குதுகலிக்கிறேன் நான்
நெடுநாட்களுக்குப் பின்!

பாதைகள் மறைத்த மலர்களை
கடக்க பாதுகை தவிர்த்தேன்
பூவோடு முள்ளையும்
நேசிக்க தவறியதால்
சட்டென தைத்த முள்ளில்
உயிர் தொட்ட வலி
உறிஞ்சிப் போனது இதுவரை
பூக்களுடனான என் காதலையும்
அதன் ஆழ்நிலை மகிழ்வையும்!

Thursday, June 10, 2010

கிழிக்கப்பட்ட நாட்குறிப்பு

ஒரு பெருங்கதறலை உள்விழுங்கி
சிலதுளிக் கண்ணீரை விசும்பலற்று
உகுக்கலாயிற்று உதாசீனப்பட்ட மனம்

அடித்துச் செல்லப்பட்ட வெள்ளத்தில்
மரணித்த ஒரு மனிதன் மீதும்
எறும்போ வண்டோ எதோவொரு
உயிரினம் அடைக்கலமாகத்தான் செய்கிறது

நீண்ட வாக்கியத்தின் கடைசியில்
பதியப்பட்ட முற்றுப்புள்ளியொன்றின்
தனித்திருத்தலை முன்னிட்டு
நடப்பட்டன சில புள்ளிகள்
முடிந்துவிட்ட வாக்கியத்தின் நீட்சியாக

அலைவரிசை சிதறிய பின்னும்
கரகரக்கிறது என் வானொலி
பசுமையான துவக்கங்களை
நடுநிசியில் அசை போட்டபடி...
நட்பு பொய்ப்பதில்லை போலும்
நண்பர்கள் உதிர்ந்த பின்னும்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!