Wednesday, June 23, 2010
இற்றை நாள்
முகத்திலறையும் காற்றோடு
முடிக்கற்றைகளின் போராட்டம்
சொல்லடிபட்ட மனமும்
பதிலடி தராத பாசமும்
இயலாமை தாங்கி கண்கள்
கன்னங்களில் நீர்க்கோலமிட்டபடி...
சொல்லம்பு வார்த்தைகளும்
அது தந்த காயங்களும்
எய்தவரெல்லாம் எம்மவர்கள்
பதிலே இல்லை என்னிடம்!
பேரூந்தின் வேகத்திற்கு சளைக்காமல்
உள்ளுக்குள் நிகழ்ந்தவை யாவும்
அதே தாள லயத்தில்....
இன்னமும் நேரமிருக்கிறது
விடிவதற்கும் விழிப்பதற்கும்
உள்ளுக்குள் கொந்தளிந்தபின்
உறக்கம் கலைக்கப்பட்டது
கண்ணாடிச் சாளரம் வழியே
பாதாசாரிகள் உலகம்...
அம்மாவின் ஒட்டிய மார்பில்
பாலை தேடித் தோற்றதில்
வீறிடும் குழந்தை
அரை நிர்வாணமாய் உலகை
மறந்த நித்திரையில் தாய்!
முடிவுக்கு வரும் இரவுக்கு
இப்போதே ஒட வேணும்
ஒற்றைக் காலோடு ஒருவன்
கனமாக எதையோ சுமந்தபடி!
ஏதோ ஒரு உயிர் பரிதவிக்கிறது
கடந்து போகும் நொடியில்
பதற வைக்கும் அவசர ஊர்தி!
காலைநேரத்து தேன் சிட்டாய்
பறந்தும் படித்தும் வாரநாளை
கடத்திக் கொண்டிருந்த குழந்தைகள்!
”அம்மா!வேலை கிடைச்சிடும்மா,
எல்லாம் மாறும் பாரேன்”
ஒரு கையில் செல்பேசி
மறுகை சில்லரைகளை கணக்கிட்டபடி
ம்ம்,என்னைப் போலொருவன்!
பட்டினிக்கு பயந்து
எட்டாத மேசைக்கும்
எம்பிக்குதித்து சுத்தம்
செய்யும் ஏழைச் சிறுவன்!
சாட்டையில் ரத்தம் தோயத் தோய
தன்னையே விளாசிக் கொள்ளும்
தெருக் கூத்தாடி...
பரட்டைச் சிறுமியொருத்தி
வறட்டுப் புன்னகையில்
வயிறைக் காட்டி யாசித்தபடி...
தள்ளாடும் வயதில்
அரைச்சாண் வயிற்றுக்கு
பொதிசுமக்கும் குடுகுடு கிழவன்!
ஒரு கையில் உலகை
சாமளித்தபடி மனிதனொருவன்
ஊசி பாசிமணிகளோடு
தன்னம்பிக்கையின் அடித்தளமாய்
மனக்கண்ணாடியில்
என்னைப் பார்த்தபோது
கேலியாய் சிரித்தது பிம்பம்
”இன்னுமா புரியல உனக்கு?”
விரலைக் கேட்டவன்
வில்லங்கம் தெரிந்தும்
விசும்பாது விலகாது
ஏகலைவனாய் .....
ஏன் முடியாது?
மற்ற விரல்களோடு
மிச்சமிருக்கும் நாட்கள்....
வாட்டிய துன்பமும்
வருத்திய துரோகமும்
மாயமாகிப் போயின!
மெல்ல புலர்ந்தது இற்றைநாள்
இரவுக்குள் கூடு திரும்பவேணும்
பறவையாய் பறந்தது மனது
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!
6 comments:
நல்ல கோர்வையாக வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள்
நைஸ் கவிதை!!
கூண்டுக்கு இந்த் பறவையை வரவேற்கிறேன்!!
:)
ரொம்ப நல்லா இருக்குங்க...
||பறவையாய் பறந்தது மனது||
ம்ம்... இதப் படிச்சப்போ என்னோட மனசும்... :)..
சீக்கிரம் கவிதைத் தொகுப்பு வரட்டும்..
kavithai super.
நல்ல கவிதை தோழி
sridhar.
Post a Comment