Tuesday, October 30, 2012

நோய்க்கூறு#2

எங்கோ துவங்கி எங்கு முடிவதென்ற இலக்கில்லாமல் பயணிக்கிறேன். காடு,மலை,சமவெளி எனபதான புவிப்பரப்பின் எல்லா அங்கங்களையும் கடந்தே வருகிறேன். பாரத நாட்டின் சாபங்களில்(!) காலநிலை மாற்றங்களும் ஒன்று. வெள்ளத்தின் பிரளய நாட்களில் வடக்கில் கொட்டும் மழை  தெற்கே எட்டியும் பார்ப்பதில்லை. மாசுபட்ட புண்ணிய நதியதன் தளும்பலில் கழிமுகம் நோக்கிப் பயணிக்கும் மயிர்கற்றை நான்.தீண்டுதலுக்குட்பட்ட எல்லா சாத்தியங்களையும் தொட்டு மீள முடியும் என் பிறப்பின் பலனாய்.மிகைப்படுத்தப்பட்ட விதிகள் எதுவும் எம் நுனி சீண்டாது. எனக்கும் யாரும் பயணிக்காத வறண்ட பரப்புகளை உரசிப் போவதே பேரின்பம் என்ன செய்வது நதியின் போக்கில் நடைபயில்கிறதென் நிகழ்காலம்.மயிரென என்னைத் தீண்ட மறுப்போர் தீர்த்தமெனக் கொண்டாடும் நதி மாசுறும் கதை கேட்டால் எவ்விதம் முகம் கோணும்.நினைக்கையில் சிரிப்பு வருகிறது.புனிதமென்ற வரையறைகள் தனிமனித ஒழுக்கமென்பதை தவிர்த்து சாஸ்திரங்களோடு மல்லுக்கட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிக்கத் தோணுகிறது.அடுத்தவரை காயப்படுத்தி,வன்மமேவி,காழ்ப்பில் சொல்லடுக்கி நசுக்கி உமிழ்வோர் தவிர்த்து யாவரும் புனிதரே!பாவமந்த கங்கை நதி... எல்லார் சுயநலங்களையும் பொறுப்பின்மைகளையும் தாங்கியும் அருள்பாலிப்பதைத்  தொடர்ந்தாக வேண்டும்.மதக்குருக்கள்,கட்சிகள்,வாரியங்கள் இன்னும்பிற கட்டமைப்புகள் மிதக்கும் பிணங்களில் எப்படி நிலைநிறுத்தும் எம்மத தர்மத்தை..? இன்றதன் நிலைமை புரிந்தபின் இறக்கும் தருவாயில் விழுங்கும் கடைசி மிடறு அதன் தீர்த்தம் என்பதைக் காட்டிலும் என்வீட்டு கிணற்றடி நீரென்பதே என் வேண்டுதலாக இருக்கக் கூடும்.

பகுத்தறிவு பரவியிராத என் பாமர மூளைக்குள் கேள்விகள் முளைத்த வண்ணம் உள்ளன.

செத்த ஆடு,மீன்,கோழி என்றெல்லாமும் புசித்துப் பழகிய நான் ஏன் மனிதப் பிணம் மிதக்கும் புண்ணிய நீரைப் புனிதமென ஏற்பதில்லை?

என்னவாகும் சொல்லக் கேட்டச் சாஸ்திரங்கள் ?
நரகம் வாய்க்குமோ?
சிவபதம் சித்திக்குமா?

தமிழனா இந்தியனா இருக்கட்டும் அப்புறம்..

நான் இந்துவா.. ?
ஆமெனில் என்ன சாதி ?
ஆதிக்க வர்க்கமா அடிமைவர்க்கமா?
இத்துப்போன வர்ணாசிரமங்களில் வேதமென்பது எவருக்கு மட்டும்..?

இருவருக்கும் வெவ்வேறு சொர்க்கம் வெவ்வேறு நரகமா?

கங்கை நீரைக் குடித்தால் தான் சொர்க்கம் கிட்டுமமெனில் கங்கையை சுற்றியிருக்கும் அத்துணை பேரும் சொர்க்கம் சென்றாரா?

எடுத்த எடுப்பிலேயே மனிதனை நினைத்து புளங்காகிதம் அடைதல் நாத்திகம். சுயம் பற்றி தெளிவு வேண்டுமென்பதால் மிரட்டும் விசயமாய் இருக்கக் கூடும். தன்னையரிதல் ’அகம் பிரம்மாஸ்மி’ இதைத் தான் சொல்கிறது ஆத்திகம்.தன்னையறிந்தவனை கடைசியில் ‘ஞானி’ என்கிறது. கவனிக்க, மனிதர்கள் என்பவர்கள் மரபுகளுக்குட்பட்டு வாழும் மந்தை என்றெழுதப்பட்டிருக்கிறது. மரபைப் பேணாத என் போன்ற தாந்தோன்றிகள் தன்னையறிந்து மனிதனாய் இருக்கவே விழைகிறோம்.

புனிதம் குறித்த இத்தனை கருத்துக்களும் நா நுனிவரை வந்தும் சொல்லாமல் வந்துவிட்டேன்.சொல்லியிருந்தால் கேலியும் எள்ளலும் உன்னறை நிறைத்திருக்கும்.
ஒவ்வாத உணவை ஒதுக்குவது போல ஒவ்வாத கருத்துக்களோடும் பயணிப்பதில்லை நான். எல்லாரும் வழிதொடரும் மந்தை ஆடாய் நானிருக்கப் போவதில்லை.

ஆம்! நான் தூங்கும்போது கிசுகிசுத்துக் கொள்ளுங்கள் “பைத்தியம் உளறியதென்று”

Sunday, October 28, 2012

நோய்க்கூறு #1


வெறுமையும் இயலாமையும் கைகோர்த்துக் கொக்கரிக்கும் நிமிடங்களில் ஆழ்கடல் அமைதிக்குள் அமிழ்ந்து போகத் துடிக்கிறது மனது. தனிமையில் அழுவதெனக்கும் மிகப்பெரும் ஆசுவாசம்.பலவீனப்பட்டு விடுதலை உணர்தலில் சின்ன உறுத்தலும் கூட.தவிர்த்திடும் பொருட்டு எந்தப் புயல்மழைக்கும் அசையாதவாறு ஒரு கல்மண்டபமாய் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். சந்தர்ப்ப அணில்கள் சேமித்துவந்த சிறுகற்களில் கட்டுமானம் பாதி நிறைவுற்றது.விமானம் அமைத்துத் தரக் கடந்ததின் பெருங்காயங்களை அசைப்போட்டபடியிருக்கிறேன்.
                     சன்னமான கதறலோடு கிளறத் துவங்கி காயத்தின் ஆறாத பாகத்தில் கைபட்டவுடன் மூர்ச்சித்து விழுகிறேன். ஏதோவொரு நட்பின் கரம் தண்ணீர் தெளிக்கிறது. சுயநினைவுறுகையில் தோல்வியின் அவமானம் என்னுடல் முழுக்க அப்பியிருக்கிறது. இதோ தோல்வியைக் கழுவி வெற்றியாக்கும் பொருட்டுக் கத்திச் சொல்கிறேன், பசுங்காயங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் உறவுகளே எழுந்து வாருங்கள் எனக்கு உங்களின் தேவையிருக்கிறது இப்போது. என் விரல் கொண்டு என் ரணம் கீறப் பயமாயிருக்கிறது. அந்தப் பேருதவியை நீங்கள் இப்போது செய்வீர்களாக!என் அழுகையும் கதறலும் உமக்குவந்த இசையென்பதை நானறிவேன்.மீட்டிச் செல்லுங்கள் என் மனதின் ஓலங்கள் வரிசையில் நிற்கின்றன.
                     இருத்தலின் நிலையாமையினுள் புழுங்கிச் சாகும் வரை நான் வாழ்க்கையின் பரவசங்களைத் தீண்டப் போவதில்லை.தாயின் கருவறையிருந்து மரணப்பாசறை வரையிலான மானுடப் பயணத்தில் நானெங்கிருக்கிறேன் என்கிற தெளிவு வேண்டும்.பேரன்பு மிக்க உறவின் மேதகு மக்களே என் உச்சந்தலையில் கால்வைத்து உபதேசித்துப் போங்கள் எப்படி வாழ்தல் எனக்குகதென்று.
                     யாதொரு உயிர்க்கும் தீங்கிழைக்காமல், சொல்லுக்கு வலிக்குமெனச் சிந்திச் சென்ற என் வார்த்தைகளில் எது உங்களைத் தைத்ததென்று. எப்போது ஒழியும் இந்த ‘வாழ்ந்தானுக்கு மாரடிக்கும்’ மானங்கெட்டச் சீர்மிகுக் கலாச்சாரம்.இத்தனைக் குழப்பத்திலும் அடுத்தது என்ன? எவ்வித முன்னேற்பாடுமின்றி வெறித்த பார்வையில் வெதுவெதுப்பான தேனீரோடு நானிருப்பது நிச்சயம் உங்களுக்கு நோய்க்கூறென்றேபடும்.

ஆம்!நான் உம்மிலிருந்து சற்றே மனப்பிறழ்வெய்தியவள்.

Friday, October 26, 2012

அடவும் தன்னுடலேற்றலும்

நம்மைப் பற்றிச் சிலாகித்திருக்கையில்
நீ வந்து போன இடங்களிலெல்லாம்
அவனை நிரப்பிக் கொண்டிருந்தான்
நீயாகிப் போவானோ என்கிற
துணுக்குறலில்
அதட்டி அடங்க வைத்தேன்
என் மனதையும்
நீயாகிப் போன அவனையும்!

இதுவரை சொன்னதில்
நடந்து போனது அவனென்று
நினைத்துக் கொண்டிருக்கிறான்
இழந்ததில் ஏதோவொன்றை
மீட்டெடுத்த உடல்மொழியில்
மந்தகாசமாய்ச் சிரிக்குமவன்
மழலையில் மெய்மறக்கிறேன்
சட்டென்று ஒளியிருளும்
மதிமுகத்தை எதிர்கொள்ள
ஆயத்தங்களில்லை என்னிடம்
தொடர்ந்தபடியிருக்கிறது
நீ அவனாவதும்
அவன் தன்னுடலேற்பதும்!

பள்ளிக்கூடக் கதைகேட்கும்
அம்மாவாய்
சிறுமியின்
எல்லாச் சிலிர்ப்புகளையும்
உள்வாங்கி எதிரொளிக்கிறதவன்
நயனங்கள்

கடவுளோடும் சாத்தானோடும்
உறவாடும் வல்லமைபடைத்தவன்
பாசத்தில் எம்பக்கமிருப்பதில்
பெருமிதம் கலந்ததொரு பயம்

நினைக்கவே நடுக்கமாயிருக்கிறது
நீ கொன்றுவிட்ட என்மனதை
உயிரற்றது என்றிவனறியும் நாளில்
சோதியிழந்த அவன் முகம்

மானுடவெளி தாண்டிய
கடவுளையோ
சாத்தானையோ
எதிர்கொள்ள வேண்டியிருக்குமந்த
துயரமிகு நாளில்
அடவு கலையாதிருக்க
விழிகள்
கண்ணீரற்றுப் போகட்டும்!

Saturday, October 13, 2012

முயல் வேட்டை


ஒற்றைத் தீபத்தின் வழிகாட்டுதலோடு
பயணிக்கிறார்கள் அவர்கள்
எண்ணிக்கையில் நால்வராய் இருக்கலாம்
பெரும் மலைக்காடு
இருட்டுத் திரையிலிட்ட புள்ளிகளை
அழித்தபடி நகர்கிறது வெளிச்சம்
மிகவேகமாய்...
இரைதேடிகளும்
கூடடைந்தவர்களும்
தலைதூக்கிப் பின் தத்தம் பணிதொடர்கிறார்கள்
மனித வாடையில் பரபரத்த
தாய்ப்பறவையொன்று
இறக்கைப் போர்த்தித் தற்காத்துக் கொள்கிறது
ஆர்வந்தாழாமல் போர்வையெங்கும் முளைக்கின்றன
சின்னஞ் சிறு குருவிகள்!

நட்டநடுக் காடு
தீபம் தீப்பந்தமானது
கொலையாயுதங்கள் பரப்பி
நடுவில் மூட்டிய நெருப்போடு
வந்த வேலை ஆரம்பமாகியது
கண்ணி விரித்து
அமைதிகிழித்து
வேட்டையாடி
உயிர்பிரித்து
பத்தொன்பது சொச்சம் முயல்கள்
இருபதாக்குமுன் இரவு பிரியவே
திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்
பிரிந்தது
இணையோ
தாயோ
குட்டியோ
தேடிச்சலித்துப் பரிதவிக்கக்கூடும்
மிச்சமிருப்பவை
அவர்கள் கடந்து போனார்கள்
வனத்தின் பரிதவிப்பைப் புறக்கணித்து
செழுமையை மெச்சியபடி
மனிதப்பிரவேசத்தை முறியடிக்க
முயற்சியில் இறங்கியது
எரிச்சலடைந்த காடு

Monday, October 8, 2012

அவன் அழுவதில்லை

பிணந்தின்னி வண்டுக் குவியலில்
தோட்டாக்கள் முனுமுனுப்பில்
தூரிகையோ புகைப்படக்கருவியோ
ஏதேனும் ஒன்றின் பிடிமானத்தில்
வாழ்க்கை

நேர்பட உரைத்தல் தர்மம்

உதிரம் சொட்ட உயிர் துடிக்கும்
கடைசி நேரங்களை
காட்சிமைப்படுத்தும் பணி அவனுக்கு

புகையும் சுருட்டு இடக்கையில்
வண்ணத்தில் குளித்த தூரிகை
மறுகையில்
காய்ந்த ரத்தத்தை
சவத்தின் நாற்றத்தை
ஆர்வமாய் பதியத்துவங்கும்
அகோரியாய் வெறிகொண்டலையும்
சிதைந்த கோரங்களில் உக்கிரமானவொன்றின்
பிரதியை தாளில் தெளித்த பின்
சாந்தம் கொள்ளும் காளியின் பாவனையில்
சன்னமாய் அடங்குமவன் நாடிகள் ஏழும்!

போர்க்களங்கள்
போராட்டங்கள்
புரட்சிகள்

எதாகிலும் அழிவின் வர்ணனை
அப்படியே வேண்டும்
கற்பனைகள் கலக்காமல்

கொடூரங்கள் வாடிக்கையானபின்
சின்னதொரு மறுப்பிற்கோ
காதலியின் பிரிவுக்கோ
செல்ல நாயின் மரணத்திற்கோ
நடிகையின் தற்கொலைக்கோ
லௌகீகத்தின் உச்சத்துக்கோ
துடிப்பதேயில்லை அவன் மனம்

Thursday, October 4, 2012

மறுதலிப்பின் நிழல்

எந்தவித மெனக்கெடலுமில்லாமல்
பூவிரியும் சுவாதீனத்துடன்
புன்னகைத்து காட்டிவிடுகிறாய்
எனக்கான உன் பிரியத்தை!

நானோ சீரற்ற லயத்தில்
உள்வாங்கி சிலிர்க்கிறேன்
அதிர்வெண் உச்சம் தொட்டு வீழ்கிறது
ஒவ்வொரு பார்வைக்கும்

தலைகோதலில்
நெட்டி முறித்தலில்
உதடு சுழிக்கையில்
கம்பீரமாய் நடைபயில்கையில்
வசமிழக்கத் தொடங்குகிறேன் நான்

எனக்குள் விஸ்ரூபமிட்டிருக்கும் நீ
சவ்வுக் காகிதத்தில் அடைப்பட்ட
பசிபிக் பெருங்கடல்
ஏதேனும் ஒரு சொல்லம்பு
அழித்துவிடக்கூடும்
என்னுலகத்தின் தலையெழுத்தை

மிகைப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யமது
கனவுத்தூண்கள் சேர்த்து மாளிகைகள்
எழுப்பியிருக்கிறேன்
அஸ்திவாரம் நீயென
கோயுரங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது

சூனியங்களை அடுக்கிக்கொண்டே
போகிறேன்
அதன் தொடக்கமாய்
உன்னை நிறுத்திடும் பொருட்டு

வாசிக்கப்படாத என் கிறுக்கல்கள்
உன் பார்வையில்படும்
அந்த பவித்திர தருணத்தில்
அவஸ்தை தாளாமல்
நான் மூர்ச்சித்திருக்கக்கூடும்

அன்று
உன்னிதழ் கொண்டு
என்னைத் திறந்திடு
கடவுச் சொல்லாய்
அதைத் தான் சேமித்திருக்கிறேன்

Wednesday, October 3, 2012

நிறம்

கிடத்தப்பட்ட பிணம்
சிதைச்சூட்டில் எரியத்துவங்கியதும் 
கருகும் தோல் முழுதும்
மலரத் துவங்கின
செம்மஞ்சள் நிறமலர்கள்
உயிரற்ற உடலெங்கும்
அடையாளங்கள் அழிந்து
தசை தின்று சாம்பல் துப்பி
உயர்ந்து புகையாகி
சுவாசம் நிறைத்தது
தீயெனும் காலம்
அரூபமான ஆன்மா
மெல்ல அறியத்துவங்கியது
தன்னுடலின்
கடைசி பரிமாணத்தை!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!