Thursday, October 4, 2012

மறுதலிப்பின் நிழல்

எந்தவித மெனக்கெடலுமில்லாமல்
பூவிரியும் சுவாதீனத்துடன்
புன்னகைத்து காட்டிவிடுகிறாய்
எனக்கான உன் பிரியத்தை!

நானோ சீரற்ற லயத்தில்
உள்வாங்கி சிலிர்க்கிறேன்
அதிர்வெண் உச்சம் தொட்டு வீழ்கிறது
ஒவ்வொரு பார்வைக்கும்

தலைகோதலில்
நெட்டி முறித்தலில்
உதடு சுழிக்கையில்
கம்பீரமாய் நடைபயில்கையில்
வசமிழக்கத் தொடங்குகிறேன் நான்

எனக்குள் விஸ்ரூபமிட்டிருக்கும் நீ
சவ்வுக் காகிதத்தில் அடைப்பட்ட
பசிபிக் பெருங்கடல்
ஏதேனும் ஒரு சொல்லம்பு
அழித்துவிடக்கூடும்
என்னுலகத்தின் தலையெழுத்தை

மிகைப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யமது
கனவுத்தூண்கள் சேர்த்து மாளிகைகள்
எழுப்பியிருக்கிறேன்
அஸ்திவாரம் நீயென
கோயுரங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது

சூனியங்களை அடுக்கிக்கொண்டே
போகிறேன்
அதன் தொடக்கமாய்
உன்னை நிறுத்திடும் பொருட்டு

வாசிக்கப்படாத என் கிறுக்கல்கள்
உன் பார்வையில்படும்
அந்த பவித்திர தருணத்தில்
அவஸ்தை தாளாமல்
நான் மூர்ச்சித்திருக்கக்கூடும்

அன்று
உன்னிதழ் கொண்டு
என்னைத் திறந்திடு
கடவுச் சொல்லாய்
அதைத் தான் சேமித்திருக்கிறேன்

1 comment:

மதி said...

பேச்சற்று நிற்கிறேன்... அருமையான கவிதை .. ஒரு பெண்ணின் பார்வையிலான காதலுக்கான ஏக்கம் மிக அழகாக வெளிவந்திருக்கிறது.. ஆரம்ப வரிகளும் சரி கவிதையின் கடவுச்சொல் முடிவும் சரி .. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள் .. வாழ்த்துக்கள் .. சீக்கிரம் அவரிடம் காதலைச் சொல்லி விடுங்கள் :-)

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!