Saturday, April 25, 2009

நல்லதோர் வீணை செய்தே

உன்னோடு சேர்த்தே உன்னாலான
உறவுகளையும் நேசிப்பதால்
வர்த்தியாய் வாழ்வைத் தொலைக்கிறேன் - அவர்
வசிக்க தோதாய் வெளிச்ச‌ம் த‌ந்து
சிந்திய வேர்வைத் துளிகள் அத்தனையும்
சிப்பமாய் சேமித்து வைக்கிறேன்
என் சந்ததிகள் படித்துக் கொள்ளட்டுமென்று....

தனிமைக்கு ப‌ய‌ந்து உன‌க்குள் சிறைப‌ட்டேன்
வேட்டைக்கார‌னுக்கு ப‌ய‌ந்து வலை புகும்
முயற்குட்டியின் சாமர்த்தியத்தில்....
தெரிய‌வில்லை என‌க்கு அன்று
வீடு முழுக்க வியாபித்திருந்த‌
கூரிய‌ கொடுவாள்களுக்கு என் குருதி
இத்த‌னை பிரிய‌மென்று

கூலிக்கு அதிக‌மாய் கூவியும்
அற்ப‌மாய் கிடைத்த‌ பொருளோடு
கூடு திரும்புகிறேன்
விசிறி விட‌ வேண்டாம்
வேலால் குத்தாம‌லிருந்தால் ச‌ரி

த‌ட‌விப் பார்க்கையில்
த‌ழும்பு ம‌ட்டும் மிச்ச‌மாய்....
பார்ப்பவர்களுக்கு எப்ப‌டி புரியும்
காய‌ம் காய்ந்து வ‌டு வ‌ந்த‌ வ‌ர‌லாறு
கேட்டு அழ‌ வேண்டாம்
கேலி செய்யாதிருத்த‌ல் உத்த‌ம‌ம்

பெண்ணீய‌ம் பெருமையாய் பேசுகிறாய்
கேட்ட‌வ‌ர் அனைவ‌ரும் சொக்கிப் போகிறார்
'கொடுத்து வைத்த‌வ‌ள்'
ஒருமித்த‌ குர‌லில் ஒத்து ஊதுகிறார்
வேட‌னின் சாம‌ர்த்தியம் உன் க‌ண்ணில்...
வெறுப்பில் க‌ண்ணீர் வ‌ந்ததெனக்கு
'இல்லையென்று சொல்ல‌க் கூடாது'
வியாபாரியின் விற்ப‌னைக் கொள்கை போல‌
'எத‌ற்கும் க‌ண்ணீர் கூடாது'
வஞ்சியென் ‌வாழ்க்கை கொள்கை
மிட‌று போல் வேத‌னை விழுங்குகிறேன்

ந‌வ‌யுக‌ நாகரிக‌ங்க‌ள் எத‌ற்கும்
ஏங்க‌வுமில்லை ஏற்க‌வுமில்லை
இய‌ல்பாய் வாழ்வ‌தே இனிப்பாய்.....

வாழ்க்கை விற்று வ‌ச‌தி வாங்கும்
விற்ப‌னை பிர‌திநிதி நீ!
ம‌ல‌ரின் வாச‌னை என்றும்
மண் வாச‌னை என்றும்
தேடி நுக‌ர்வ‌து சாத்திய‌மில்லை
பண‌ம் ப‌ண்ணும் எந்திர‌ம் நீ
பாச‌த்துக்கு ப‌ணிவது சாத்திய‌மில்லை
உரையாடலுக்கு நடு நடுவே
ம‌ணித்துளிக‌ளை க‌ண‌க்கெடுக்கும் உன‌க்கு
ம‌ழையின் பிர‌வாக‌த்தினை எப்ப‌டி சொல்ல‌?

ய‌தார்த்த‌ம் பேசுவ‌தாய் சொல்லிக் கொண்டு
எத்த‌னையோ முறை மிச்ச‌மின்றி
கொன்றிருக்கிறாய் என்னை
ப‌திலேதும் சொல்லாம‌ல் பாவையாய் நான்!

எதுவுமே இல்லை ஆனாலும்
'அர‌சிள‌ங்குமாரி' நான் அப்பாவுக்கு
எல்லாமும் த‌ருகிறேன்
இருந்தும் ஏற்க‌ ம‌றுக்கிறாய்
நானும் சராச‌ரி ம‌னுசியென்று
கனவுகள் தீர்ந்த ந‌ர‌க‌ வாழ்வு
நித‌மும் தினுசு தினுசாய்
த‌ன்மான‌ ப‌டுகொலைகள்
குற்றுயிராய் குமைந்து மறுகினும்
பொழுது விடிகையில் புத்தம் புதியளாய்
உத‌ட்டில் ஒட்ட‌ வைத்த‌ புன்ன‌கையுட‌ன்
உற்சாக‌மாய் போலி ஊர்வ‌ல‌ம்
இயந்திர நாட்டியம் மாதக் கடைசிக்காய்
இவைதாம் நடுத்தரவர்க்கத்து மருமகள்


'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்ப‌வில்லை ம‌ன‌து
தானாய் வ‌ரைந்த‌ வ‌ட்ட‌த்தை
'சிறையென்றா' சொல்வ‌து?

க‌ண்ணாடி வேலி உடைப்ப‌து க‌டின‌மில்லை
ம‌‌ன‌மில்லையென்ப‌தே ம‌க‌த்தான உண்மை!
மாற்ற‌ம் வ‌ரும் ந‌ம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்த‌ப‌டி.....

Tuesday, April 21, 2009

படித்ததில் பிடித்தது

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன்


Monday, April 20, 2009

ஒளிவ‌ரும் நேர‌ங்க‌ள்ஓய்வு
ஒழிச்சலின்றி
உழைத்து விட்டு
உயிருள்ள சவமாய்
படுக்கையில் விழுகிறேன்!
பசியாறச் சொல்லியும்
பாசமாய் தலை தடவியும்
பக்கத்தில் நீ!

தன்மானம் துடித்து விழ
தளர்வாய் துவல்கிறேன்
இயலாமையில் கண்ணீர்
நில்லாமல் ஓட
பதறித் துடிக்கிறாய்
எனக்கே எனக்காய் நீ!

என்னை எடுத்தெறிந்து பேசும்
எல்லார் ம‌த்தியிலும் என‌க்காய் பேச‌
'என்ன‌வ‌ன்' ‌என்கிற‌ உரிமையில்
அன்பான ஆத‌ர‌வாய் நீ!

கால‌ ஓட்ட‌த்தில் க‌ரைந்து போன‌
க‌ன‌வுக‌ளை காப்பாற்றி க‌ரையேற்ற‌
க‌ட‌வுளாய் நீ!

த‌னிமையில் பேசுகையில்- நீ
த‌வ‌றி சொன்ன‌ வார்த்தைக‌ளுக்காய்
வாயாடிச் சிரிக்கையில்
வாரிய‌ணைத்து முத்த‌மிடும் நீ!

களிப்பில் கடமையை மறந்து
குழ‌ந்தையாய் மாறி குதூக‌லிக்கையில்
செல்ல‌மாய் குட்டி பொறுப்புண‌ர்த்தும்
புத்திசாலி போத‌க‌னாய் நீ!

த‌னிமையான‌ நேர‌ங்க‌ளில்
த‌ண்மையாய் சொல்கிறாய்
"க‌ல‌ங்காதே! நானிருக்கிறேன்"
துணிவோடு ந‌ட‌க்கிறேன் மீண்டும்!

ப‌குத்தறிவு வேலை செய்கையில்
புரிகிற‌து தெளிவாய்!
நீ என்ப‌து என் க‌ன‌வுக‌ளின்
எச்சம் என்று!

ம‌ன‌தின் உட்சுவரில் பூட்டி வைத்திருந்த
கற்பனை பிம்பம் கட்டுகாவல் தாண்டி
கள்ளனாய் சில‌ நேர‌ம் இப்ப‌டி
என்னுட‌ன் உலா வ‌ரும் நேர‌ங்க‌ள்
க‌வ‌லை தோய்ந்த‌ க‌ண்க‌ளில்
காதல் "ஒளிவ‌ரும் நேர‌ங்க‌ள்"!

Saturday, April 18, 2009

ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!

        பசுமையான‌ பள்ளி நாட்கள்! பள்ளியிறுதியாண்டில் நடைபெற்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு! பெண்கள் மட்டுமே படிக்கும் கிறித்துவ மதப் பள்ளி அது! அபூர்வமாய் ஆட்டம் போட வாய்ப்பு கிடைப்பதுண்டு! முதல் நாள் விடுதி தினக் கொண்டாட்டம்(Hostel Day Celeberation) ஆட்டம் பாட்டம் என அமர்கள‌ப்படுத்தி விட்டு மறுநாள் வகுப்பில‌ எல்லோரும் ஒரே சாமியாட்டம் தான்.தூக்கம்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். இந்த நெலமையில முதல் வகுப்பு வேதியியல் வகுப்பு எப்படியோ தள்ளியாச்சு!
        இரண்டாம் வகுப்பு, கண்டிப்புக்கு பேர் போன‌ ஒரு கன்னியாஸ்திரியின் தமிழ் வகுப்பு! கணீரென்ற குரலும் அவரது தமிழ் மொழி ஆளுமையும் கண்,செவி இரண்டையும் அவர்பால் இழுப்பதில் வியப்பொன்றும் இல்லை!ஆனா அன்னிக்கு எங்க‌ நெலமயே வேற!அவரோட வகுப்ப கவனிக்குற சுவராஸ்யத்த விடவும் நித்திரா தேவியின் தாலாட்டு ஆதரவா இருக்க போகவே, விடுதி மாணவிகள் எல்லோரும் அரைத் தூக்கத்துல! எங்கள் வரிசையில உள்ள ஐந்து பேர்ல ஒருத்தி தவிர எல்லோரும் சரியான தூக்கத்துல! என்னதான் சொல்லுங்க பாடம் நடத்துறவுங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு தூங்குறது ரொம்ப பெரிய சாதனை!
        இப்படியாக, "ஈன்று புறந்தருதல்"ன்னு ஆரம்பிக்கும் புறநானூறு(பொன்முடியார்) பாடலை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு நடைப்பெற்று கொண்டிருக்கையில், திடீரென நினைவு வந்தவர் போல், பாடத்தை நிறுத்தி விட்டு,"ஜான்சி,எங்கே படித்துக் காட்டு பார்க்கலாம்!", என்றார்.தெளிவான உச்சரிப்புக்கும், இனிமையான் குரலுக்கும் சொந்தக்காரியான,எனக்கடுத்து அம‌ர்ந்திருந்த‌ என் தோழிக்கான‌ அழைப்பு அது!
        அரை தூக்கத்திலிருந்த அத்த‌னை பேரும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஒர் வழியா சுயநினைவுக்கு வரவும், அவர் மத்த விசயங்களை சொல்லி முடித்து விட்டு, இவள் வாசிப்புக்கு செவிமடுக்கவும் மிகச் சரியா இருந்தது! (ந‌டுவுல எல்லாரும் தயாரா தமிழ் புத்தகத்ததுல அந்த குறிப்பிட்ட பக்கம் விரல் வச்சு கவனிக்குற அள‌வுக்கு பாசாங்கு) மொத்த வகுப்பும் ஜான்சியின் வாசிப்புக்கு கட்டுப்பட்டிருக்க, திடீரென ஒரே சிரிப்புச் சத்தம். மொத்த வகுப்பும் குலுங்கி குலுங்கி சிரிக்குது! ஜான்சிக்கோ,எனக்கோ ஒண்ணும் புரியல! எங்க தமிழாசிரியை அப்படி சிரிச்சு அதுவரைக்கும் பாத்ததேயில்லை! எதுக்கு சிரிக்கிறாங்கன்னே தெரியாம‌ நாங்களும் சிரிக்கோம்!!
        மெல்ல மெல்ல புரிய வந்துச்சு,ஜான்சி அம்மையார் தூக்க கலக்கத்துல இரண்டாம் வரியோட கடைசிய தூக்கி முதல் வரியில போட்டது தான் அந்த களேபாரத்துக்கு காரணம்!
        என்றைக்கும் நினைவில் நிற்கும் அந்த புற‌நானுற்றுப் பாட‌ல் பின்வ‌ருமாறு,

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
---புறநானூறு(பொன்முடியார்)


        ஒரு பெண்ணுக்கு தலையாய கடமையாக குழந்தைப் பேறும், தந்தைக்கு தலையாய‌ கடமை தன் குழந்தையை சான்றோனாக்குதலும் அவனுக்கு வேல் வடித்து தருதல் கொல்லனுக்கு கடமையாகவும், அப்படித் தயாராகி நிற்கும் தீரமான‌ இளைஞனுக்கு செழுமை நிரம்பிய நிலப்பரப்பை அரசாளக் கொடுப்பது வேந்தனுக்கு தலைக் கடமையாகவும் சொல்கிறது புறநானூறு.அப்படி சான்றோன் என பேர் பெற்ற அந்த இளைஞனுக்கு தலையாய கடமை, போரில் களிறை(யானையை) வென்று தன் வீரத்தை நிலை நிறுத்துவதே என்கிறார் பொன்முடியார்.இன்னார்க்கு இன்ன கடன் என வரைய‌றுக்கப்பட்ட சங்கத் தமிழர் நிலை போற்றுதற்குரியது. அது என் தோழியின் நாவில் பட்டு பொருள் மாறியது நகைப்புக்குரியது!'ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!' அதாவது குழந்தை பேறு தந்தைக்குரிய கடன் எனச் வாசித்ததால் பொருள் திரிந்து போயிற்று!
        முன் வ‌ரிசை தோழிக‌ள் மூலமா நில‌வ‌ர‌ம் தெரிஞ்சுக்கிட்டு, ஜான்சிக்கு எப்ப‌டியோ புரிய‌ வ‌ச்சுட்டேன்! எல்லாம் சைகையில‌ தான்! சிரித்து முடித்து விட்டு, திருப்பியும் இவளை வாசிக்கச் சொல்ல அதே த‌ப்பு! கூண்டோட‌ கைலாச‌ம்ன்னு நாங்க க‌தி க‌ல‌ங்கி போயிருக்கையில் ஜான்சி ராணி ஒரு விள‌க்க‌ம் கொடுத்தா பாருங‌க‌! ஆயுசுக்கும் ம‌ற‌க்காது!
        "இல்ல‌ சிஸ்ட‌ர்! எத்த‌னை நாள் தான் நாம‌லே சும‌க்குற‌து? பாட்டுல‌யாவ‌து மாத்த‌ம் வ‌ர‌ட்டுமேன்னு தான்" என்று பெரிய‌ மாத‌ர் ச‌ங்க‌ த‌லைவி க‌ணக்கா நீளமான‌ உரை வேற‌! வ‌குப்பு ஆணாதிக்க‌ ச‌மூக‌ம் ப‌ற்றி திசை திரும்ப‌ 'அப்பாடா த‌ப்பிச்சுட்டோம்' பெருமூச்சு விட்டு ஜான்சியை நிமிர்ந்து பாத்தா அவ‌ என்ன‌மோ ரொம்ப‌ தீவிர‌மா வகுப்ப கவனிச்சுக்கிட்டு இருந்தா, ரொம்ப நல்ல புள்ளையா!

Friday, April 17, 2009

வான‌வீதியில்...

இருண்ட கருவெளியில்
ஒளிதேடும் இர‌வுப் ப‌ற‌வையென‌
வாழ்க்கைச் சிக்கலுக்கு
விடை தேடும் முனைப்போடு....
குழ‌ப்ப‌மான‌ நேர‌ங்க‌ளின்
த‌ன்னாய்வு ப‌ய‌ண‌ங்க‌ள்
பெரும்பாலும் துணைய‌ற்ற‌
இர‌வுக‌ளாய் அமைவ‌துண்டு

அக‌ன்று நீண்ட‌ வானப் ப‌ர‌ப்பில்
அள்ளித் தெளித்த‌ மின்மினிப் பூச்சிகளென‌‌
ஆங்காங்கே விண்மீன் கூட்ட‌ங்க‌ள்
பால்வெளித் திர‌ளுக்குள்
பாந்த‌மாய் த‌ண்ணிலவு
படிக்க படிக்கச் சலிக்காத
பாமரத் தமிழ் பாட்டென
என்றைக்கும் அலுக்காத
இயற்கையின் பேரழகு!

கைக‌ளை த‌லைய‌ணையாக்கி
க‌ட்டாந்த‌ரையை ம‌ஞ்ச‌ன‌மாக்கி
வானுக்கும் 
எனக்கும் 
ஊடாய் யாதொரு திரையுமின்றி
விண்ணை நோக்கி என‌து
சிந்த‌னைப் ப‌ய‌ண‌ம் அண்ணாந்து
பார்த்த‌ப‌டி அடிக்கடி நிக‌ழ்வ‌துண்டு!


பேர‌ண்ட‌ம் குறித்த‌ அல‌ச‌லுட‌ன்
அத‌ன் பிர‌ம்மிப்பான‌ ப‌திவுகளுடன்
அள்ள‌ அள்ள‌க் குறையாத‌
அற்புத பேரழகோடு இரவுப் பெண்
நாழிகைக‌ளை ந‌ய‌மாய் ந‌க‌ர்த்த‌
அவளின் கைய‌ணைப்பில்
காலதேவனின் கசப்பான நினைவுகளை
களையெடுப்பது கைவ‌ந்த‌ க‌லையென‌க்கு!


ந‌ண்ப‌ர்க‌ள் என் செய‌லை
நாட்ப‌ட்ட‌ பித்த‌மென்ப‌ர்!

விரிந்து ப‌ர‌ந்த வான‌வீதிக‌ள் தோறும்
விழி தொடும் தூர‌ம் வரை
இல‌க்கின்றி சுற்றி அலைந்து பின்
அய‌ற்சியில் துயில் கொள்வ‌து
அன்றாட‌ உள்ளப்ப‌யிற்சி யென‌க்கு!

வானில் கொட்டி கிட‌க்கும்
விண்மீன் புள்ளிக‌ளுக்கிடையே
என‌க்கான‌ ப‌தில் ச‌ங்கேத‌மாய்...

என் ப‌ய‌ண‌ம் தொடங்குகையில்
வாழ்வு சார்ந்த கேள்விக‌ளோடும்
அதன் பதிலுக்கான‌ தேடலோடும்
புதிராய்...

முடிகையிலோ,
கைவரப் பெற்ற ப‌திலோடு கூட‌வே
அனுபவம் பொதிந்த

வாழ்க்கைச் ச‌ம‌ன்பாடும்!

Sunday, April 12, 2009

மழை நாட்கள்

அன்று அதிகாலை முத‌லே
அந்திக் க‌ருக்க‌லாய் அடிவான‌ம்
அள‌வில்லா ஆன‌ந்த‌த்தோடு
ஆசையாய் ம‌ழைநாளை
அனுப‌விக்க‌ தயாரானேன்!

அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம் - அதீத அழகில்
மிளிரும் மழை குறித்த‌ நினைவுகள்!
அதுவும் கோடையில் மழையெனில்
இன்னும் கொண்டாட்டம் குதூகலம்!

ஆராயும் மனப்பான்மையா?
அனுபவிக்கும் பேராவலா?
எப்படியோ தெரியாது
மழையோடான எனது சந்திப்புகள்
எல்லாமே இடம்பிடித்துவிடும்
மறக்கமுடியாத மகிழ்வான விசயங்களாய்!
உயிர்ப்பான அந்த கணங்களை
உயிரோவியமாய் உருவாக்கிவிடுவதென
எப்போதும் போல் இப்போதும் உறுதியெடுத்தேன்!

இதமான குளிருக்கு ப‌த‌மாய்,
மிதமான‌ சூட்டில் ஒரு கோப்பை தேநீர்
கூடவே கொறிக்க அவித்த வேர்க்கடலை!
நடமாட்டம் இல்லாத என்
வீட்டு மேல் மாடிச் சாளரம்
உற்ற களமென உறுதியாயிற்று!

க‌ம்ப‌ளியின் க‌த‌க‌த‌ப்பிலும் என்
க‌னிவான‌ வ‌ருட‌லிலும்
வசதியாய் ம‌டியிலுற‌ங்கும் என்
செல்ல‌ நாய்க் குட்டி!

ம‌ழையின் தாண்ட‌வ‌த்தினை
அப்படியே படியெடுக்க
காகித‌ கோப்புகளின் மேலே
முத்த‌மிட‌ காத்திருக்கும் என்
எழுத்தாணி!

அவளின்
ஆனந்த நர்த்தனத்தை
உள்ள‌ப‌டி ப‌ட‌ம் பிடிக்க
ஏதுவாய் இன்ன‌ பிற!

இடிமுழக்கம் மின்னல் ஒளிவெட்டென
நிகழ்ச்சி நயமாய் தொடங்கியது!

சின்ன‌தும் பெரிய‌துமான ம‌‌ழைத்துளிகள்
ஒன்றோடொன்று போட்டியிட்டு பூமி தொட‌
என‌னைப் போலே தாக‌ம் கொண்ட‌
ம‌ண்ம‌க‌ளும் மனம் நிறைந்த‌ உற்சாக‌த்தில்....

ம‌ண்ணைத் தொட்டு விடவேண்டுமென
சீரான‌ வேக‌த்தில் மின்ன‌லோடு
சீறி வ‌ந்த‌ மழை ம‌க‌ளும்
செல்ல‌மாய் ச‌ண்டையிட,
இன்ன‌தென்று தெரியாத‌ புதுவித
மயக்கத்தில் நானிருந்தேன்!
வழக்கமான
போட்டிதானென்றாலும்
என்றைக்கும் அலுக்காத காட்சியெனக்கு!

மின்னலின்
வெற்றியை இடியரசன்
சத்தமாய் முழக்கமிட
தோற்றுவிட்ட காரணத்தால்
மழைமக‌ளோ கோப‌த்தில் துவண்டு விழ ‌
வாரியணைத்து உள்ளிளுக்கும் மண்மகளின்
வாஞ்சையிலோ வாடாத தாய்மனசு!

அள‌வான‌ அதிர்வுக‌ளில்
அழ‌கான‌ சுருதியோடு
ஜ‌தி பிறழாம‌ல் ச‌திராடி
மெல்ல மெல்ல உச்சம் பெறும்
அவ‌ளின் ஆட்ட‌த்தில் என்
ஐம்புல‌னும் ஐக்கிய‌‌மாகிப் போகும்!
அடித்து ஓய்ந்து
'அப்பாடா' என்றவள் அடங்குகையில்
'அய்யோ' என்று நினைவு வரும்
எப்போதும் இப்ப‌டித் தான்
ஆயிர‌முறை அழகாய் ஆய‌த்த‌ம் செய்தாலும்
ஆட‌ல‌ர‌சி அபிந‌ய‌த்தில் அத்த‌னையும் மற‌ந்துவிடும்!
எத்த‌னை தான் முயன்றாலும்
கட்டி வைக்க முடிவ‌தில்லை
வ‌ஞ்சிய‌வ‌ள் வாச‌னைக்கு
வ‌ச‌மிழ‌க்கும் என் ம‌ன‌தை!
அத்த‌னையும் க‌ட்ட‌விழ்ந்து
க‌ன‌வ‌ல்ல‌ நிச‌மென‌ புரிகையிலோ
எல்லாமும் முடிந்திருக்கும்
எப்ப‌டி நான் ப‌திவு செய்ய‌?
அந்த‌ உயிர்ப்பான த‌ருண‌ங்க‌ளை!Friday, April 10, 2009

பூங்கொத்துவிடியல்நாளையென்ப‌து விடியுமென்ற‌
ந‌ம்பிக்கையில் இருளின்
ஊர்வ‌ல‌ம் இர‌வுக‌ளில்!


தோற்றப்பிழைஎட்டிக் குதித்து எம்பி பிடித்து
எப்ப‌டியோ தொட்டுவிட்ட‌து பூமி
தொடுவான‌ம்!


நிழல்
த‌னிமையிலும் கூட
தொட்டுத் தொடரும்
இன்னொரு தொல்லை!


ஓவிய‌ம்
வெண்ணிற‌ தாளில்
தூரிகை முத்தம்
அழகான அடையாள‌ம்!


காத‌ல் தீவிர‌வாதி
சாம பேத‌ தான‌ த‌ண்ட‌ம்
ம்ம்ஹீம்! காத‌லியை இருதுளி
க‌ண்ணீர் விட‌ச் சொல்லுங்க‌ள் போதும்!


சேகுவாரா'அட‌ச்சே' அல‌ட்சிய‌ம் இன்றி
அடடே! 'சே' என்கிற‌து நாக்கு - அவன்

பெய‌ரை மொழியும் க‌ர்வ‌த்தில்!


குறிப்பு :-
ஏதோ என‌க்கு தெரிஞ்ச‌ வித‌த்துல‌ கிறுக்கியிருக்கேன்! வ‌ழ‌க்க‌ம் போல‌வே இப்ப‌வும் ம‌ன்னிச்சிடுங்க‌! ஏன்னா இந்த‌ கிறுக்க‌ல் எந்த‌ வித‌ம்னு தெரியாத‌ குழ‌ப்ப‌த்துல‌யே இடுகை போட்டாச்சு! ஆனா வெவ‌ர‌மா க‌விதை , ஹைக்கூ ரெண்டுல‌யும் சேர்த்துட்டேன்! :-‍)
அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்பா!

Thursday, April 9, 2009

கதம்பம்


அஹிம்சை தத்துவம்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

உற்று நோக்கு!
உடன்படுவதில் உறுத்தலிருந்தால்
உடனே அகன்றுவிடு!!
கட்டளையிட்டார் மகாத்மா
அனைத்துக்கட்சி மாநாட்டில்!
கண நேரத்தில்
காலியானது சபை!


நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்தியனே!வராதே !
எங்க‌ள் எல்லைக்குள்!
ப‌குத்தலும் பாகுபாடும்
ஒட்டிக்கொள்ளும் எங்க‌ளுக்கும்!
-
இப்படிக்கு
பிரிவினையற்ற‌ இந்திய மிருகங்கள்,
காட்டு இலாகா, இந்திய காடுகள்.

குடிசை மாற்று வாரிய‌ம்

குடிசைக‌ள் இருந்த‌ இட‌ம்
கொழுத்த‌ ப‌ண‌த்தில்
குபேர‌ மாளிகைக‌ளாய்!
குடிசைவாசிக‌ள் அனைவ‌ரும்
தெருவாசிக‌ளாய்
வான‌க்கூரையின் கீழ்!

பார‌தி Vs பாபர் மசூதி

'ம‌த‌த்தீ'யினை அங்கிலோர்
கோவிலில் வைத்தான்
வெந்து த‌ணிந்த‌து 'நாடு'
கொடும் ம‌ட‌மையில்
குறைவென்றும்
நிறைவென்றும் உண்டோ?


நிதர்சனம்

தீயின் நாக்குக‌ள்
சுவைத்து தின்ற‌ன‌!
ஆரிய 'பிணம்'
திராவிட‌ 'பிண‌ம்'
மிச்ச‌மாய் சாம்ப‌ல்
ஒரே நிற‌த்தில்!

Wednesday, April 8, 2009

ந‌ங்கூர‌ம் பாய்ச்சி..அந்தி சாயும் நேர‌ங்க‌ளில்
அமைதியான‌ வீதிக‌ளில்
அவனுடன் அருகாமையில்
அன்பாய் அளவளாவி
அமைதியாய் ஆரவாரமின்றி
நடத்தல் பிடிக்குமென‌க்கு!

இருள் க‌விழும் நேர‌த்தில்
ம‌கிழ்வாய் சிரித்துப் பேசி -என்
உள‌ர‌ல்க‌ளை எல்லாம் கேலி செய்தும்
உரையாட‌லை உன்னிப்பாய்
கவனிப்பதான‌ உன் பாவ‌னை -பொய்யென‌
சொல்லும் உன் காந்த க‌ண்கள்
புரிந்தும் புரியாம‌லும் ந‌டிக்கும்
என் க‌ண்க‌ள் ஒரு தேர்ந்த‌
ந‌டிகையைப் போல்...

நின் தோள்க‌ளிர‌ண்டும்
என‌க்கென‌வே த‌வ‌ங்கிட‌ப்ப‌தாய்...
சாய்ந்து கொள்ள ச‌ம்ம‌திப்பாயென்று
பார்வையை ப‌ர‌வ‌ விடுகிறேன்
க‌ண்க‌ள் ப‌ரித‌விப்பினும்
வார்த்தைக‌ள் ம‌றுத்த‌னுப்புகின்ற‌து

பல‌முறை உன்னை நான்
சீண்டிப் பார்த்த‌துண்டு
பொழுது போக்கிற்காய் அல்ல‌ - நீ
பாறை என்ப‌தில் நான் கொண்ட‌
க‌ர்வ‌ம் ப‌ல‌ம் பெறுவ‌த‌ற்காய்..

என் கால்க‌ள் உன் வ‌ழி
தொட‌ரும் நிப‌ந்த‌னையின்றி...
ம‌ன‌ம் இடைவெளியை
நிர‌ப்பி விட‌ துடித்திடினும் -என் பெண்மை
நாண‌முறுக்கேறி முட‌ங்கி கொள்ளும்

இட‌றி விழுகையில் தாங்கி கொள்கிறாய்
'இறுதிவ‌ரை இப்படியே இருப்பாயா?'
வார்த்தைக‌ளின் ஜ‌ன‌ன‌ம் ஓசையின்றி
வெளிவ‌ராம‌லே ம‌டிந்து போகும்

'உன்னைப் போல் பிற‌ரை நேசி'
இயேசுவின் வாக்கு...
என்னிலும் மேலாய் உன்னை
பார்ப்ப‌தாலோ என்னவோ
புரியவைக்க ஏனோ தோன்றவில்லை
இன்று வரை

விடியலுக்கு பின்னே
விலகிப் போகும்
இமைகளின் பிரிவில்
எஞ்சி நிற்கும் உன்பிம்பம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக....

நிசமாய் நீயருகில்லை என்பது
கண்ணீர் பெருக்க
பிரிவு நிரந்தரமில்லையென்று
நெஞ்சம் உரைக்க
தீர்ப்பாய் கண்ணீர் பிரவாகம்

வார்த்தைக‌ளில் சொன்ன‌தில்லை
வ‌ரிக‌ளாய் வ‌டிக்கிறேன்
என் நெஞ்ச‌க் க‌ட‌லில் - நீ
என்றோ ப‌ல‌மாய்
ந‌ங்கூர‌ம் பாய்ச்சி.....

Tuesday, April 7, 2009

காணிக்கை

ஆதிக்கமிகுந்த சமுகத்தில் அட‌ங்க‌ ம‌றுத்து
அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை ஆத்திரமாய்
தட்டி கேட்டதே நின் தவறென போயிற்றோ?

வியர்வை சிந்தி வரப்பேற்றி
வயல் உழுது விதையிட்டு
உயிர் கொடுத்து ப‌யிர் வ‌ள‌ர்த்து
அறுவ‌டை பார்க்கையில்
அரைப்பிடி நெல்லேயுன‌க்கு
அதுவும் அடிமையாய் வாங்கிப் போ!
அதிகார‌மாய் சொன்ன‌வ‌னை
அனுச‌ரித்து போகாத‌தோ ‍உன்
த‌ப்பென‌ சொல்லுகின்றார்!
நீ த‌மிழ‌ன‌ல்லாவா?
எப்ப‌டி பிழைப்பாய் நீ
த‌ன்மான‌ம் விற்று?

உழுத‌வ‌னுக்கே உழ‌வுநில‌ம் சொந்த‌ம்
பொதுவுட‌மைச் சித்தாந்த‌ங்கள்
பெய‌ர‌ள‌வில் ப‌ள்ளிப்பாட‌மாய் இங்கே!
நெல்ம‌ணி எந்த‌ச் செடியில் காய்க்கும்?
பிள்ளையின் கேள்வியை பெருமையாய் பீற்றிக்கொண்டு!
தோளைத் த‌ட்டி முதுகை வ‌ளைக்கும் இராஜ‌த‌ந்திர‌ம்
தெரியாம‌ல் காலை தொட்டு சொகுசுக்காய்
தமிழின அடையாளத்தை தொலைத்து விட்டு
பதவிக்காய் நிறமாறும் அரசியல் தலைவர்கள்
இதையுமீறி எழுச்சிக்காய் யாராவது கருகிப்போனாலும் - ‍அது
அன்றைய நாளிதழ் செய்தியாய் மட்டும்....
த‌மிழா! இவ‌ர்களிட‌மா எதிர்பார்க்கிறாய் தார்மீக‌ ஆத‌ர‌வை?

வ‌ந்தாரை வாழ வைக்குமாம் த‌மிழ‌க‌ம்
வாழ்க்கை முழுதும் ஈழ‌த்த‌மிழ‌ன் - த‌ன்
விலாச‌த்தை தேடித் தேடி நாடோடியாய்-எஞ்சியோர்
ம‌ண்ணை விட்டு ம‌ர‌ண‌ம் தேடிக் கொண்டு!
புத்தனை வணங்கும் கூட்டம்
புத்தநெறி வழுவாதிருத்தல் அவசியமன்றோ?
தீர்வென‌ச் சொல்லிச் சொல்லி
தீது செய்யும் தீயோர் ந‌டுவில்
த‌ன‌துயிரை தான‌மாய் பெற்று வாழ‌
த‌மிழ‌ன் ஒருபோதும் தயாரில்லை
த‌ன்மான‌ம் இழ‌க்காத‌வ‌னை 'தீவிர‌வாதியென்று'
த‌னிப்ப‌ட்ட‌ தீர்மான‌த்தை த‌ர‌ணியெங்கும்
நிலையென‌ப் ப‌ர‌வ‌ச்செய்த‌‌ அர‌க்க‌ர் கூட்ட‌ம்
பொய்மைக்கு கிடைத்த‌ வெற்றியென‌
புல‌ம் பெய‌ரும் த‌மிழ‌ர் கூட்ட‌ம்...
எழில் கொஞ்சும் ஈழத்தீவில்
எழுத்தாணிக்குப் ப‌தில் எந்திர‌ துப்பாக்கி
இடிந்த‌ வீடுக‌ள் த‌க‌ர்ந்த‌ நிலைப்பாடு
மயானமாகிப் போன கிராமங்கள்
என்றைக்கு வ‌ரும் ம‌ர‌ண‌ம்
எதிர்பார்ப்பை தாங்கிய‌ப‌டி
த‌ன்மான‌ த‌மிழ‌னின்று த‌ன்ன‌ந்த‌னியாய்
த‌ன‌க்கான‌ ச‌ரித்திர‌த்தை எழுத‌
த‌ன் குருதியில் ந‌னைத்த‌ தூரிகையோடு.....

ப‌ல‌ ஆண்டு போராட்ட‌ம் - ஆனால்
இன்று,
த‌ன் விர‌ல் கொண்டு
த‌ன் க‌ண்ணைக் குத்தும்
ம‌னிதாபிமான‌ ப‌டுகொலை
தீவிர‌வாத‌ எதிர்ப்பு என்கிற‌ பெய‌ரில்...
க‌ருகிச் சாவ‌து அப்பாவி த‌மிழின‌ம் மட்டுமென்று
உல‌க‌ம் எப்போது ஏற்கும்?

க‌டுமையாய் எச்ச‌ரித்தாலும்
க‌ண்ணீர் ம‌ட்டும் க‌ட்டுக‌ட‌ங்காம‌ல்...
மொழி,இன‌ம்,ம‌த‌ம் க‌ட‌ந்த
இந்திய‌னாய் இருந்தாலும்
ம‌ற‌த்த‌மிழா உன் தியாகங்களுக்காய்
என்னால் இய‌ன்ற‌ காணிக்கையாய்
இந்த‌ க‌ண்ணீர் வ‌ரிக‌ள்

உன்னை விற்று ஓட்டு வாங்கும்
த‌ர‌மிழ‌ந்த‌ த‌மிழ‌னுக்கு ஒரு வார்த்தை
பார‌தியின் வ‌ரிக‌ளில்...
'சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்த‌ பிழைப்பு'

ஞாபகமாய்..


ஒன்றோடொன்று உரசி
உராய்ந்து ஓசையிடும்
கண்ணாடி வளை சுமந்த கரங்கள்
இத்துடன் முடிவதில்லையெனும்
அறிவிப்போடு நீண்டு தொடரும்
உள்ளங்கைகளில்
மருதாணி ஓவியம்
மகுடமாய் வர்ணம்
பூசிய நகங்கள்

முக‌ம் பார்த்த‌லைக் காட்டிலும்
கை பார்க்கும் இய‌ல்பாய் என் க‌ண்க‌ள்
க‌ண்ணாடியில்

சில்லறைக்காக கை நீட்டுகையில்
நடத்துனரின் பார்வை ....
தோழிகளின் பிரம்மித்த பாராட்டில்
சொல்லொணா ஆனந்தம்
வழக்கத்துக்கு மாறாய்
கைகளின் உபயோகம் கொஞ்சம்
அதிகமாய் உரையாடலில்....
கர்வமாய் த‌லையை
சிலுப்பிக் கொள்ளும் மனம்
'அலட்டல்' என்று குற்றஞ்சாட்டும்
அனைவருக்கும் பதிலாய்
சிறு புன்ன‌கை மட்டும்

எப்ப‌டி தெரியும் அவர்க‌ளுக்கு?
நன்றி சொல்லி பிரிகையில்
அவனின் கைரேகை பதிந்த
என் கரங்களை இப்படி
கவுரவிக்கிறேனென்று
எப்ப‌டி புரிய வைப்பேன் அவர்க‌ளுக்கு?

Monday, April 6, 2009

கடலோரம்

கால்களை நனைத்தபடி
கடற்கரையோரம்!

கனமான மனசு லேசாக‌
எனக்கு நானே செய்யும்
அன்றாட வைத்தியம்!

ஓடிவந்து தொட்டுப் பிடித்து
நாம் சுக‌த்தில் திளைக்கையில்
விட்டுப் பிரியும் அலையின்
விளையாட்டு எப்பவும் என‌க்கு
ஏமாற்றம் கலந்த பேரானந்தம்!

உள்ள‌க் கொதிப்புட‌ன்
ஆத்திர‌ப் பார்வையில்
அட‌ங்காத‌ சின‌த்துட‌ன்
ஆயிர‌முறை வ‌ந்திருக்கிறேன்
உன்னிட‌ம் ஆறுதல் தேடி!!

அலைகளின் ஆர்ப்பாட்ட‌த்தில்
சீறிவ‌ரும் நீர்த்திவ‌லைக‌ளில்
சில்லிட்ட‌ நனைத்த‌லில்
சின‌ம் சிதறிப் போன‌துண்டு கூட‌வே
சிறுமியாய் மாறி சிலிர்ப்ப‌துமுண்டு!
க‌வ‌லைகள் க‌ண்ணீராய்
பரிணாம‌ மெடுக்கையில்
'ஹோ' வெனும் பேரிரைச்சல்
க‌ண்ணீருக்கு போக்கு காட்டிவிட்டு
ம‌கிழ்ச்சிக்கு விதை போடுவ‌து த‌னிக்க‌தை!

உள்ள‌க்கிட‌க்கைகளில் ஒன்றையாவ‌து
உன்னிட‌ம் ச‌த்தமாய் முறையிடுவ‌து
வ‌ழ‌க்க‌ம் என்பதறியாத தோழி
ஒருத்தி 'பைத்தியமென்று' அல‌றியோடிய‌து போல்
கோமாளியான‌ க‌தைகள் ப‌ல‌வுண்டு!

எல்லோருக்கும் எப்ப‌டியோ
எனக்குள் நீ
சில‌ ச‌ம‌ய‌ம் தோழியாய்
சில‌ ச‌ம‌ய‌ம் ஆலோச‌கராய்
சில‌ ச‌ம‌ய‌ம் ஆசிரிய‌னாய்
பல சமயம் ஞானியாய்
உண்மையாதெனில்
ந‌ம‌க்குள்ளான‌ பிணைப்பை
உருவ‌க‌ப்படுத்த‌ வார்த்தைகளேயில்லை!

Sunday, April 5, 2009

பேசாத‌ வார்த்தைக்கு நீ எஜமான்! பேசிய வார்த்தை உனக்கு எஜமான்! ‍

-யாரோ

தாம்பத்தியம்

அவரது
ஐம்ப‌தாவ‌து திரும‌ணநாள்
முதியோர் இல்ல‌த்தில்...
ம‌னைவியின் கல்லறையில்
ம‌லர் வ‌ளைய‌ம்!
மவுனமொழி தனிமை
மானசீகமாய் காதல்
மறைந்த மனைவியோடு
இருக்கும் வரை சொன்னதில்லை 

ஒரு போதும் சொன்னதில்லை 
தன் காதலை...

Friday, April 3, 2009

சமத்துவ‌(?) கோட்பாடு

மேல்த்த‌ட்டு வ‌ர்க்க‌ம்
பிச்சையிடு!
கீழ்த்த‌ட்டு வ‌ர்க்க‌ம்
பிச்சையெடு!
ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌‌ம்
நியமங்களுக்கு உட்பட்ட
எதானாலும் செய்
பிச்சை தவிர!

சாதி(தீ)

குளுகுளு அறையில் தலைவர் தீப்பொறி
உலலாசமாய்......
கொடூர‌ நெருப்பில் தொண்டன் தினக்கூலி
குற்றுயிராய்....

தமிழ்ச்செல்வியும் நேர்முகத்தேர்வும்

யாருமறியாமல் மறைத்து வைத்திருந்தேன் - அந்த
அவமான தருணங்களை பதுக்கி வைத்திருந்தேன்
‍நினைவுச் சுரங்கத்தில் பாரமான நினைவுகளாய்...
இதுநாள் வரையில் இறுக்கி வைத்திருந்த
இருதயத்து நினைவுகளை எடுத்து பகிர்கின்றேன் ‍
எம்மக்கள் எல்லோரும் உணர்ந்திடவே!

எழுத்துத் தேர்வில் தேறிவிட்ட‌ ச‌ந்தோச‌த்தில்
நேர்முகத் தேர்வுக்கான அறிக்கையுடன்!
இனியாவது நிமிருமா என் பொருளாதாரம்?
இயல்பான எதிர்பார்ப்போடு ப‌த‌ட்டத்தில் நான்
பன்னாட்டு நிறுவ‌னமொன்றின் வ‌ரவேற்ப‌றையில் ....

பதிவு கோட்புகளில் பதியாத பெயரோடும்
பாமரத்தனம் பசி இன்னபிற குறைகளோடும்
ப‌டிப்பே தெரியாத‌ த‌மிழ‌க‌த்து சாப‌க்கேடு
நான் பிறந்த "மலைக் கிராம‌ம்"

சந்தவரி எழுதி சரித்திரமாக்க போவதில்லை
சமூகம் எனக்கிழைத்த சதியை எடுத்துரைத்து!
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் தெரிவதில்லை
உரிமையை தொலைத்த எம் மக்கள் வாழும்நிலை!!

க‌ற்பிழ‌ந்தால் க‌ன்னிம‌ட்டும் .....
கொள்கையிழ‌ந்த‌ மானுட‌ர் - த‌ம்
கொடிபிடிக்கும் குற்ற‌த்தை
என்ன‌வென்று இய‌ம்புவ‌து?

தேர்த‌ல் சமயம் ம‌ட்டும் தேடி வ‌ரும் ந‌ரிக்கூட்ட‌ம்
தேவை முடிந்த‌ பின் தேவ‌ர்க‌ளின் அணி வ‌குப்பாய்..
சூத்திர‌ சாதியென்று ஒதுக்கி வைக்கும் - அவ‌ர்த‌ம் வெற்றிக்கு
சூத்திர‌தாரியான‌ எம்ம‌க்க‌ள் கூட்ட‌த்தை!

மேடையெங்கும் பேய்முழ‌க்க‌ம் தாய்மொழியின் துளிர்பிற்க்காய்...
த‌மிழ் பாட‌மேயில்லாத‌ ப‌ள்ளியில் த‌ம்ம‌க்கள் ப‌டித்திடினும்
த‌ன்நெஞ்ச‌றிந்து பொய்யாய் முழங்குகின்றார்
த‌ம்ப‌ட்ட‌ம‌டிக்கின்றார் தாய்மொழிக்க‌ல்வி கொள்கையென்று!

த‌லைமை இப்ப‌டியிருக்க‌,
கொள்கை பிடிப்புட‌னே த‌ன்னைத் தொலைத்திட்ட‌ தொண்ட‌ன் - த‌ம்முள்
வளர்த்திட்ட வாழும் முறைமையினால்....

தாய்மொழி வ‌ழிக்க‌ல்வியெனும் தம்க‌ட்சி கொள்கைக்காய்
தார்மீக‌ப் பொறுப்புண‌ர்வில்‍ ‍என் த‌ந்தை!
படிப்பதே பெரும்பாடு இதிலே தரம் வேறா?
இப்படியாக,
த‌மிழ்வ‌ழிக்க‌ல்வி என் த‌லையெழுத்தாயிற்று!

எல்லோரும் சம‌மாய் வாழ்ந்திட்டால் எதுவுமே குற்றமில்லை - மாறாய்
த‌லைவ‌னென்றும் தொண்ட‌னென்றும் த‌ர‌ம்பிரித்த‌ வாழ்க்கைத்த‌ர‌ம்!
வ‌றுமை தொண்ட‌னுக்கென்றும் வ‌ச‌தி த‌லைவ‌னுக்கென்றும்
அண்மையில் மாறுதலுக்கு ஆட்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தால் ‍
ம‌திப்பிழ‌ந்த‌ த‌ன்மான‌ம் காலாவ‌தியான‌ க‌ன‌வுக‌ளுமாய்
காலச்சக்கரத்தில் நானும் வேலை தேடி....

பாவப்பட்ட சமூகத்தில் பதிக்கப்பட்ட விதை நான்!
பெரும்பாடுபட்டு சூரியவெளிச்சம் பார்த்த வீரிய‌ விதை நான்!
ப‌ட்ட‌ம் முடித்து ப‌ட்ட‌மேற்ப‌டிப்பு வரையான போதும்
பொருளாதார‌ம் ம‌ட்டும் க‌டைநிலையில்!

க‌ல‌ப்பில்லாத‌ மொழிய‌றிவு க‌ன‌வாகிவிட்ட‌ கார‌ண‌த்தால்
க‌ருத்தை தெரிவிக்க த‌மிழை த‌ழிழாக‌ச் சொல்லாம‌ல்
அந்நிய‌ மொழியோடு அரைகுறையாய் க‌ல‌க்க‌ச் செய்து....
அறிந்துமறியாம‌லும் யாம்புரியும் தவ‌ற‌னைத்தும்
பொருத்த‌ருள்வாய் த‌மிழ‌ன்னாய்!

வேலைநிமித்த‌ம் என்னுள் செத்துவிட்ட
தாய்மொழிக்காய் துக்க‌ம் கொண்டாடி
பாடாய்படுத்தும் பண நெருக்க‌டியால்
பிரிதொரு மொழியின் ஆளுமையில்!

க‌ருத்தாழம் மொழிய‌றிவு உட‌னான‌ கூட்ட‌ணி
தோற்றுப் போய் புதிய‌ மொழியொன்று
பிழைப்பிற்காய் உல‌வுகையில் எப்ப‌டி தொட‌ங்குவ‌து?
த‌ய‌க்க‌த்தில் க‌ல்லாய் அமர்ந்திருந்தேன்!

நாக‌ரீக நங்கையுட‌ன் நேர்முக‌த் தேர்வு!
பெய‌ரைக் கேட்ட‌ன‌ள் ப‌திலை சொன்னபின்
வேறொன்றும் கேளாமல் ம‌வுன‌மாய்- தாய்மொழியின்
தாக்க‌ம் உள்ள‌தென‌ த‌ட்டிக்க‌ழித்து விட்டாள்.
"த‌மிழ்ச்செல்வி" யெனும் என் பெய‌ரை
அம்மொழியில் எப்ப‌டித் தான் சொல்லுவ‌தோ?

அந்த‌ நொடிப் பொழுதில் நான் ப‌ட்ட‌
அவ‌மான‌த்தை என்ன‌வென்று எழுதிக்காட்ட‌?
அம்மொழியும் இல்லாம‌ல் ந‌ம்மொழியுமில்லாம‌ல் -க‌ல‌ப்பின‌த்
தமிழோடு உல‌வுத‌ல் தாம் இன்று பிழைக்கும்வ‌ழி!!

ப‌ழ‌மையை கொன்று புதுமையா? - இல்லை
ப‌ழ‌மையில் மெருகிடுவ‌து புதுமையா? - த‌மிழை
முத‌லாய் க‌ற்ற‌ கார‌ண‌த்தால் த‌ன்மான‌ம்
மிகுந்து போய் த‌ட்டி கேட்ட‌த‌ன் விளைவு?

தாய்ம‌ண்ணில் நானிருந்தும்
மொழியால் அந்நிய‌மாய்!!
தாய் மொழியே என் பெயரில் உள்ளதென
நான் கொண்ட‌ க‌ர்வ‌ம் த‌க‌ர்ந்து போய்
த‌லைகுனிந்து ந‌ட‌ந்ததேன் தன்னிலை மறந்து
என் எதிர்கால‌ம் குறித்த‌ எண்ணில்லா கேள்வியோடு!

வ‌றுமை வ‌தைத்த‌ போதே தெரிந்த‌து
வாழுத‌ற்கு வ‌ளைய‌ தெரிய‌ வேணுமென்று!
இன்று பன்னாட்டு நிறுவ‌னமொன்றின் நிர்வாக‌அறையில் ....
முய‌ன்ற‌வ‌ரை மொழி க‌ல‌ப்பின்றி மேலாள‌ர் " த‌மிழ்ச்செல்வி"!

கருணை

கூரை மேல் குடும்பம்
தெப்பமாய் குடிசை
வெள்ளத்தில் நாய்
துயரத்தில் சிறுவன்
தவிப்பில் க‌ண்ணீர் !

Thursday, April 2, 2009

என் கிராமத்து கனவு

அய்யர் வீட்டில்
அவ‌ருக்கு ச‌ம‌மாய்
அம்மாவாசை
சாப்பாடு
அபுபக்கருக்கு!


குறைந்த‌ப‌ட்ச‌ம்,
அய்யர் வீட்டில்
அவ‌ருக்கு ச‌ம‌மாய்
அம்மாவாசை
சாப்பாடு
அந்த‌ ஊர் த‌லித்துக்கு!

போதை

காற்றாய் வ‌ந்தாய்
அன்று (காத‌ல்)
போதை‌யிலிருந்தேன்!
நீ தென்ற‌லா
இல்லை புய‌லா?
த‌ர‌ம் பிரிக்க‌ முடிய‌வில்லை!
தெளிந்த‌பின் தெரிகிற‌து - நீ
'சுனாமி' என்று!
அத்தனையும் வாரிச் சென்றிருந்தாய்
நிம்மதியையும் சேர்த்து!

Wednesday, April 1, 2009

திரைக‌ட‌ல் ஓடியும்....

காத‌லாய் நோக்கினான்
குளமாய் கண்ணீர்!
இத‌ழ்க‌ளைப் பார்த்தான்
இன்னும் ஈர‌மாய்...
மருதாணி பாதம்
ஓசை எழுப்பவேயில்லை!
சின்னதொரு நடுக்கத்தில்
சித்திர‌ப்பாவை!
ம‌ண‌ம‌க‌ள் ஒப்ப‌னையெனினும்
உள்ளுக்குள் கொந்த‌ளிப்பாய்...
நான் வ‌ரும்வ‌ரை
நினைவாய் வைத்துக்கொள்!
நிழ‌ற்ப‌ட‌ங்க‌ள் த‌ந்தான்!
விடைபெற‌ எண்ணி
கைகளை விடுவிக்கையில்
அவ‌ள் சிந்திய
இருதுளிக் க‌ண்ணீர்!
வேலை நிமித்த‌ம்
வெயிலில் காய்ந்தாலும்
பொறுப்புகள் சுமந்தாலும்
உள்ள‌ங்கை பிசுபிசுக்கிற‌து
அவ‌ள் நினைவில்...
மந்திரிக்கு
உப்பு நீராம்
ஏழையின் கண்ணீர்!

"கோயில்"

க‌ருவ‌றையைச் சுற்றி
கறுப்புப் பணம் !
அர்ச்ச‌க‌ன் கூட
அரசியல் கைக்கூலியாய்!
எப்ப‌டி தெரியும் இறைவ‌னுக்கு
இந்தியா
ஏழைநாடென்று?

க‌ண்ணீரோவிய‌ம்

பாலுண்ணும் குழந்தை
பசியாற்றும் தாய்..
பகைவனின் தோட்டா
புறமுதுகைத் துளைத்திடினும்,
தாய்மையின் பெருமிதத்தில்
பசியாற்றும் தாய்..
பாலுண்ணும் குழந்தை!

[நிஜ‌மாய் இப்ப‌டி ஒரு ஓவிய‌ம் பார்த்தேன்! கண்ணீர் வ‌ரிக‌ள் க‌விதையாய்....]
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!