Sunday, January 31, 2010

நீலக் கருவிழிக்கப்பால் ....


உயர் நட்சத்திர கேளிக்கை கூடம்
திருமண வரவேற்புடன்
கூடிய கொண்டாட்டம் வேறு!
ஒப்பாத சூழல்
ஓரமாய் நின்று நோக்கலானேன்!

ப‌கலா? இர‌வா?
குழம்பித் தெளியுமுன்
சரவெடி சிதறலாய்
இசை அதிர்வுக‌ள்!
சில‌ வ‌கை அல‌ற‌லாய்...

கேளிக்கை விருந்தில்
மேலும் குதுக‌ல‌ம் கூட்ட
ஒப்ப‌ந்த‌ ந‌டிகையொருத்தி!

அலட்சிய புன்னகையுடன்
அனாயசமாய் அபிநயங்களை
அள்ளித் தெளித்தபடி...

இளசுகளின் மகிழ்ச்சிக்கு
சொல்ல‌வா வேணும்?

அரைமணி ஒருமணி
நேரம் ஆக ஆக மனிதம்
தொலைந்து மிருகம் நுழைய‌
இலைம‌றை காயாக
இருக்க‌ வேண்டிய‌து
கட்டவிழ்ந்து
கண்ணியம் மீறியது!
உள்ளே சென்ற
வ‌ஸ்துவின் ப‌ல‌னாய்....

இதுவரை கண்களால் மட்டும்
களவாடப்பட்ட அவளின்
அங்க லாவண்யங்கள்
கைகளாலும் சிறை பிடிக்கப்படும்
அவ‌ல‌ நிலையில்....

வேதனையின் சாயல்
வெளிப்படையாய் தெரிந்தாலும்
ஒப்பந்தத்தின் பேரில்
இயந்திரமாய் இசைக்கு
இயங்கிக் கொண்டிருந்தாள்.

அந்த‌ நீல‌க்கருவிழிக்க‌ப்பால்
ஏதேனும் அவ‌ல‌ம் இருக்குமோ?
எந்த‌ க‌ட்டாய‌ம் அவ‌ளை
இவ்வித‌ம் செய்த‌து?
அவளுக்கு இதுபோலும்
எத்த‌னை சோத‌னையோ
இன்றைக்கு?
ஒருவேளை அவ‌ள்
கண்களால் அழைப்ப‌து
கிருஷ்ண‌ ப‌ர‌மாத்மாவையோ?

முக‌ச்சுளிப்புட‌ன் அவ‌ஸ்தையாய்
உண‌ருகையில்
ப‌ரிச‌ளிப்பு ப‌ட‌லம் தொட‌ங்கிற்று
அப்பாடா!
இதுவ‌ரை கையில் க‌ன‌த்த‌தை
த‌ந்துவிட்டு ம‌ன‌த்தில்
ஏறிய‌ பாரத்தை
என்ன‌ செய்வ‌து
என்கிற‌ கேள்வியுட‌ன்....


Saturday, January 30, 2010

மாவீரன்

திடீரென ஒரு நடுத்தர வயது மனிதர் பெருங்குரலெடுத்து அழுதால் எப்படி இருக்கும்? அந்த அறையின் அமைதியை முழுக்கவே கிழித்துப் போட்டுவிட்டு கதறிக் கொண்டிருந்தார் அவர். என்னவாயிற்று? சில வினாடிகள் சுரணையற்று நின்றோம் செய்வதறியாமல்! கையில் வைத்திருந்த செய்தித்தாளை முகத்தில் ஒற்றி 'இழந்துட்டோமே! இழந்துட்டோமே' என்றவாறு பிதற்றிக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு தீய செய்தி! காரணமறிய செய்தி தாளை பார்த்தால் போதும்!ஒருவாறு வழி புலப்பட்டதும்,அது அவர் குடும்பத்தினர் குறித்த செய்தியாயிருக்கலாம் என்றெண்ணினேன். கப்பற் படையில் பணிபுரியும் அவரது இளைய மகனோ? இல்லை வளைகாப்பிற்கு வருவதாயிருந்த அவரது கர்பிணி மகளோ ஆபத்திலிருக்கலாம்! அவர் மனைவியும் மருமகளும் பயந்து போய் தூர நின்றிருந்தார்கள். மெல்ல நெருங்கி அவர் தோளைத் தொட்டேன். கண்ணீருடன் நிமிர்ந்தவர்,

"பாரும்மா! இவன பாரு! இந்த முட்டாப் பசங்களுக்கு உணர்வு வரணுமின்னு தன்னையே காவு கொடுத்திருக்கான் பாரு! எத்தன நிதானம்? எத்தன‌ கொள்கைப் பிடிப்பு? சாகும் வரைக்கும் தன்னை தன் இனத்தின் பிரதிநிதியா நெனச்சு வாழ்ந்திருக்கான் பாரு! தியாகி! நெசத் தியாகி! இப்படி ஒரு பிள்ளைய நான் பெத்துக்கலயே! உணர்வுள்ள ஒரு தமிழன் செத்துட்டான்! இழந்துட்டோமே! இழந்துட்டோமே!" திரும்பவும் கதறலானார்.

"எல்லா விசயத்துக்கும் அதிகமா அலட்டிக்கிறதே இந்தாளுக்கு வேலையா போச்சு! ஏய்! நீ டீவிய போடுடீ! சீரியல் பாக்கனும்! நான் கூட‌ என்ன‌மோ ஏதோன்னு" அல‌ட்சிய‌மாய் ச‌க‌ஜ‌மான‌து அந்த வீடு!

கசங்கிய செய்திதாளுக்குள்ளே என் இனத்தின் கம்பீரம் ஒளிர்ந்திருந்தது.

முத்துக்குமார்!

தன் இனத்தின் அழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க, ஈழத்தில் இறந்து கொண்டிருந்த மனித நேயத்தை உயிர்பிக்க, தன்னையே பலியிட்ட எழுச்சி மிகு தமிழன். கடைசி மணித்துளி வரையிலும் தன் மரண வாக்கு மூலத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல துடித்தானே தவிர, பிழைக்க நினைக்கவேயில்லை!

உலகம் ஒரு முறையாவது ஈழம் பிறக்க வழி செய்ததா?

எத்தனை எத்தனை போராட்டங்கள்,மறியல்கள், உண்ணாவிரதங்கள் ஏதாவது ஏதாவது தமிழீழம் உயிர்க்க வழி செய்ததா?

தொட்டுவிடும் தூரத்தில் நீ!

நான் இந்தியத் தமிழனென்றும்

நீ ஈழத் தமிழனென்றும்!

கை பிசைந்தபடி, சர்வ வல்லமை படைத்த விதியை நொந்தபடி,

எங்கள் இழிவான இயலாமை முட்டி தள்ள

எதுவும் செய்ய முடியாமல் ......

மதிப்புமிக்க தமிழர் ஒருவர் சொன்னது, "ஊடகங்கள் தவறான அனுகுமுறையால் பிரசாரத்தால் ஒரு இளைஞனின் உயிரை பறித்துவிட்டன!"

உன் வாக்குமூலத்தை படித்திருந்தால் தெரியும் நீ சாவை எதற்கு எவ்விதம் வருவித்துக் கொண்டாய் என்று!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாராம் வடலூரார்!

அதற்குப் பெயர் ஜீவகாருண்யமாம்!

சொல்கிறார்கள் மெத்தப் படித்தவர்கள்! ஆயிரமாயிரம் உயிர்கள் அழிந்து கொண்டிருக்கையில் என்ன செய்தார்கள்? அஹிம்சை தேசம் என்ன செய்தது?
அவர்களுக்காக எல்லாரும் கண்ணீர் மட்டும் சிந்துகையில் உயிரையே தந்து போன மாவீரன் நீ!

மறத்தமிழா!

நீ விட்டுப் போன கனவுகளெல்லாம் பலித்ததா? தெரியாது!

தூங்கிய தமிழன் விழித்தானா? தெரியாது!

மனிதம் மலிந்த தேசத்தில் பிறந்ததாலோ என்னவோ உன் மரணம் வெறும் செய்தியாக போயிற்று!

இன்றைக்கு என்ன சமையல்? அந்த நடிகைக்கும் இந்த நடிகனுக்கும் ஏதோவாமே! அக்கம் பக்கம் புரணி என இத்தனைக்கு மத்தியிலும் உன் தியாகம் பேசுமா? தெரியாது!

சலித்துக் கொள்ள மட்டுமே முடிகிற‌,எதுவுமே செய்ய திரணியற்ற வெற்றுக் கூட்டத்தில் நானும் ஒருத்தி என்கிற குற்ற உணர்வில்,என்னால் ஆன காணிக்கையாய் இந்த கண்ணீர் வரிகள் உன் ஆன்மாவிற்கு!

ஆப்ரகாம் லிங்கனும் அதிமேதாவியும்
ஒரு ஏழை விவசாயி மகனாக பிறந்து, பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த ஒரு மாமனிதன் ஆப்ரகாம் லிங்கன்! பலமுறை ஜனாதிபதி தேர்தலில் தோற்றும்,அவரது விடாமுயற்சியின் பலனாக அந்த பதவியை வென்று சிறந்தவர் என்பது உலகம் அறிந்ததே! என்றென்றும் உலக வரலாற்றில் விடாமுயற்சி என்ற சொல்லின் பொருளாக லிங்கனின் பெயர் இருக்குமென்பதில் ஐயமில்லை!

ம‌க்க‌ள் பிர‌திநிதி செல்வ‌ந்த‌ர்க‌ள் ம‌த்தியிலும் ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைவ‌து ச‌க‌ஜ‌ம் தானே!பொதுவாக, மேல்த்தட்டு வர்க்கம் அடிம‌ட்ட‌த்திலிருந்து துளிர்விட‌ துடிப்ப‌வ‌னை மேலெழும்ப‌ விடாது அழுத்தி,அழிக்கப் பார்க்கும்! பார‌ம்ப‌ரிய‌ம்,அந்த‌ஸ்து,நிறம்,ம‌த‌ம்,இன‌ம்,சாதி இன்ன‌ பிற‌ கார‌ணிக‌ள் அவர்கள் பக்கம் இருக்கலாம்.தன் பெருமை குறித்து த‌ம்ப‌ட்டம் அடித்தும், 'எனக்கு நீ நிகரில்லை' என இழித்துப் பேசியும் ஒருவனின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதில் வெறி கொண்டவர்களாகவே சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.இது மாதிரியான ச‌ந்த‌ர்ப்ப‌ங்களை எப்படி எதிர் கொள்ள‌ வேண்டுமென்ப‌த‌ற்கு கீழ் வ‌ரும் நிக‌ழ்வு ஒரு சிறந்த முன்மாதிரி!அவ‌ர‌து வாழ்க்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ல‌வித‌ உருசிக‌ர ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இதுவும் ஒன்று!

ஒரு பெரிய‌ செல்வ‌ந்த‌ர் தந்த‌ விருந்து ஒன்றில் லிங்க‌னும் க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டியிருந்த‌து.அந்த‌ செல்வ‌ந்த‌ர் நிற‌வெறிக் கொள்கை கொண்ட‌வ‌ர் என்ப‌து லிங்க‌ன் முத‌ல் அனைவ‌ரும் அறிந்த‌தே! விருந்து மிக‌வும் கோலாக‌ல‌மாக‌வும் அம‌ர்க‌ள‌மாக‌வும் ந‌ட‌ந்து கொண்டிருந்தது.ப‌ல‌ முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளுட‌ன் லிங்க‌ன் உரையாடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று செல்வந்தர் இடைமறித்து,

"லிங்க‌ன்! ஒரு ம‌னித‌னுக்கு சராச‌ரியாக‌ கால்க‌ளின் நீள‌ம் எவ்வ‌ள‌வு இருக்க‌வேணும்?" என்றார் அறிந்து கொள்ளத் துடிக்கும் பொய்யான‌ பாவ‌னையுட‌ன்.

கேள்வியின் உட்க‌ருத்தை உண‌ர்ந்த‌ அத்த‌னை பேரும் ப‌ல‌மாக‌ சிரிக்க‌த் தொட‌ங்கின‌ராம். அதாவ‌து,லிங்க‌னின் உருவ‌ அமைப்புக் குறித்த‌ ப‌ரிகாச‌ம் அது.லிங்கன் சராசரிக்கும் சற்று அதிகமான உயரமும், கறுப்பான‌ ஒடிசலான தேக அமைப்பும் கொண்டவர். அவ‌ர‌து கால்க‌ள் ச‌ற்றே நீண்டிருக்கும்.

அத்தனை கிண்டலுக்கு மத்தியிலும் எந்த‌வித‌ ச‌ல‌ன‌முமின்றி லிங்கன்,

"பொதுவாக‌ கால்க‌ளின் நீள‌ம் இடுப்பிலிருந்து த‌ரையை தொடும் வ‌ரையில் இருந்தால் போதுமான‌து" என்றாராம்.

நகைசுவையோடு கலந்த ச‌ம‌யோஜித‌ அறிவு மட்டுமல்லாது, பிறர் கேலியையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தெளிவு கொண்டவர் அவ‌ர்.

அப்புறமென்ன ? அந்த கிண்டல் ஆசாமி விருந்து முடியும் வரையில் கப்சிப்!Tuesday, January 26, 2010குடியரசு தின நல்வாழ்த்துக்கள் !

இனிப்புக்கு இங்கே சொடுக்கவும்!


Sunday, January 24, 2010

த‌ன்னிக‌ர‌ற்ற‌ த‌லைவ‌னுக்கு அஞ்சலி

அரசியல் செய்தியா?
அசிரத்தையுடன் அலட்சியமாய்
விமர்ச்சித்த நானும்
விழிகள் விரிய
விபரம் கேட்கலானேன்
அப்பாவின் வாயிலாக!

ஆர்வம் வரக் கண்டு
அவரைப் பற்றிய
புத்தகங்களையும் செய்திகளையும்
தேடித் தேடி படிக்கலானேன்!
அதுவரையிருந்த அரசியல் குறித்த
அவநம்பிக்கைகள் அகன்று
இப்படியும் இருக்கிறாரென
நம்பிக்கை வந்தது!

காந்தீயம் என்பது குறித்த
காகித கோப்புகளின் வரிகளுக்கு
கணக்கச்சிதம்
'மார்க்கசீயம்' சுமந்த
ஜோதிபாசு அவர்கள்!

எளிமை என்பது என்ன?
தலைவன் என்பவன் யார்?
மொத்தமாய் விழுங்கும்
மேல்த்தட்டு முதலாளி
வர்க்கத்துக்குள் தொழிலாளி
தலையெடுப்பது சாத்தியமா?
மேற்படி கேள்விகளுக்கு பதிலாய்
என் தலைமுறையில்
நான் கண்டு,கேட்டு தெளிந்த
களங்கமில்லா உதாரணம்
தலைவர் ஜோதிபாசு!

'ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள் உல்லாசம்'
இப்படி நடைமுறை
அரசியல் தவிர்த்து
உள்ளும் புறமும்
உயர்வாய்
கட்டமைக்கப்பட்ட
அற்புத தலைவன்!

சர்ச்சைகளின் போது
கொள்கைப் பிடிப்புடன்
அனாயசமாய் வழிநடத்தும்
சீர் மறை காத்த
செம்மல் ஜோதிபாசு!

புகழஞ்சலி வாசிப்பதில்
மட்டும் பயனேது?
உன் சீரிய வழியொற்றி
வாழ்க்கையை நயமாய்
ஒழுங்குற வளைத்து
வாழ்வதில் தானே இருக்கிறது
நீ விதைத்த கொள்கையின் பயன்?

அடக்குமுறைக்கு தலை வணங்குவதில்லை
இனியெப்போதும் என் பேனாவும் நானும்!

கொஞ்சம் அகந்தை கலந்த
வாக்கியமானலும்
என் வாழ்வின் கட்டாய
கொள்கையாக்கியிருக்கிறேன்
இவரைப் படித்து!

ஓடி ஓடி உழைத்து
இப்போது தான்
ஓய்வெடுக்கிறாய்!
துயில் கொள்!
எப்போதும் எமக்குள்
எரியும்
எம் வாழ்வு மலர‌
நீ ஏற்றி வைத்த 'செந்தீ'!

வாழ்ந்து சிறந்து உயர்ந்த
சாமான்யனின் பிரதிநிதிக்கு
செவ்வணக்கம்!


Saturday, January 23, 2010

அப்ப‌த்தா!! ‍ப‌ட‌ல‌ம் 5


அட இந்த நாளும் பொழுதுந்தேன் எப்படி விறுவிறுன்னு ஓடுது. ரெண்டு வருசம் முடிஞ்சி போச்சி. நல்லபடியா போய் சேந்ததா ஒரு தகவல் மட்டும் வந்துச்சு. மறுக்கா ஒரு தகவலும் இல்ல. நம்ம அழகிக்கு அப்ப என்ன வயசுங்கிறீக? ஒரு பதினாறு இருக்கும். உண‌ர்ச்சிக‌ள‌ த‌கிச்சிக்கிட்டு, இல்ல அப்படீன்னா என்னன்னே தெரியாம,எதுக்கு ஏங்குறோம்முன்னு தெரியாமயே அந்த அசோகவனத்து வாழ்க்க பழகிடுச்சு அவ‌ளுக்கு.

அப்ப‌ப்போ அரச‌ல் புர‌ச‌லா இங்கிருந்து சீமைக்கு போன‌விங்க‌ அங்கேயே 'குடியும்' குடித்த‌ன‌மா ஆகிட்டாங்க‌ன்னு சேதி வ‌ரும். அப்ப‌ல்லாம் மாமியாரும் ஓர‌க‌த்தியும் பொல‌ம்புற‌து ந‌ல்லா கேட்கும். சில‌ ச‌ம‌ய‌ம் அது ஒப்பாரியா ஆர‌ம்பிச்சு இவ‌ ராசி மேல‌ ப‌ழி வ‌ந்து நிக்கும்.ஆத்தா அப்ப‌ன‌ முழுங்குன‌ மாதிரி எம்ம‌வ‌னையும் முழுங்கிட்டான்னு ஏச்சு வ‌ச‌வா மாறி மனச நைய‌ப்புடைக்கும். அப்ப‌ல்லாம் ம‌ட்டும் இவ‌ ம‌ன‌சு பாறையா இறுகி போயிடும்.

என்ன வாழ்க்கடா சாமின்னு சலிப்பு,மாமியாரோட வார்த்த‌ சூட்ட‌ தாங்காம‌ க‌ண்ணீர்,எது வ‌ந்தாலும் தளும்பி நிக்கிற‌ புன்ன‌கைக்குள்ள‌ ஆயிர‌மாயிர‌ம் வ‌லிக‌ளை ம‌றைக்கிற‌ வித்த‌ ந‌ம்ம‌ ஊரு பொண்னுக்குதாம‌ய்யா சாத்தியம். 'அவுக‌ளுக்கு ஒன்னும் ஆகாது ந‌ல்ல‌ப‌டியா திரும்பி வ‌ருவாக.எம்மேல ஆச உள்ள எம்புருசனாவே திரும்பி வருவாக.' ன்னு ம‌ன‌சுக்குள்ள‌ எழுதி வ‌ச்ச‌த‌ திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சுக்குவா.

ஆச்சு. அந்தா இந்தான்னு முழுசா ரெண்டு வருசம். அந்த வருசக் கடைசீல ஊருக்காடெங்கும் ஒரே பஞ்சம் தலவிரிச்சாடுது.ஒரே நோவும் சாவும். எப்படி காலந்தள்ளுறதுன்னு தவிச்சுப் போயி பக்கவாததுல விழுந்துட்டா அந்த பெரிய மனுசி. அவ நடமாட்டம் இருந்த வரைக்கும் எந்த பயமும் இல்லாத வாழ்ந்த‌வுகளுக்கு அப்புறந்தேன் தெரியுது அவ அரும பெருமையெல்லாம். நம்ம அழகி மாமியா வாயிக்கும் அவ சலசலப்புக்கும் பயந்து கெடந்த மைனர் பயலுவ எல்லாருக்கும் அவ நோவு ஒரு வாய்ப்பா போச்சுது நெனச்சாகளாம். ஆம்பள இல்லாத வீடுன்னு சலம்பல் பண்ணுனவனுக்கு எல்லாம் நம்ம அழகியோட கருக்கருவா பதில் பேசிச்சாம்.

'புலிக்குனா இம்புட்டு நாளும் தண்ணி காட்டிருகோம்முன்னு நெனச்சு மனசுக்குள்ளே மருகிப் போறா மாமியார்காரி.இம்புட்டு ஆங்காரத்த உள்ள வச்சிக்கிட்டா இந்த புள்ள அப்புராணியா சொன்னத கேட்டுச்சு? எப்படியோ புள்ளகுட்டி பெறாத எனக்கு மருமகளுவள மகளா குடுத்த சாமிக்கு படப்பு வச்சுதேன் நன்றி சொல்லோணும்' வெகுவாரியா மனசுக்குள்ள உருகத்தேன் முடியுதே தவிர அந்த பெரிய மனுசியால ஒண்ணுமே முடியல‌.

அழகி வேறமாதிரி யோசிக்கிறா. சொத்தாய் இருந்த நாலு ஆடு மாடும்,வீட்டுக்கு பின்னாடியிருந்த தோட்டமும், கழனியாக்கப்பட்ட கட்டாந்தரையும் அடித்த பஞ்சத்துல ஆட்டங்காண ஆரம்பிச்சிட்டுது. எப்படி கரையேறுறதுன்னு யோசிக்கிறாக. கைப்புள்ளயோட சேத்து மூனு பொண்ணு ஓரகத்திக்கு. வய வேல அவளால் பாக்கமுடியாது. கூலி வேலைக்கு போனா வாற கூலி ஆறு உசுருக்கு எப்படி பத்தும்? திரும்பவும் ஒத்தயா விவசாயம் பண்ணுறதுன்னு முடிவுக்கு வந்துட்டா.

உழைப்புன்னா காத்தாடிக்கு கீழ கணக்கெழுதுற வேல இல்ல சாமி.. சூரியனுக்கு சவால் விடுற மாதிரி ஓய்வு ஒழிச்சலில்லாத நாய் பொழப்பு. மொதக் கோழி கூவயில தோட்டத்துக்கு போயிட்டானா, கை எறவையில தண்ணி பாய்ச்சி அங்கன சோழி முடிய சூரியன் உச்சிக்கு வந்திரும். தோட்டத்துல காய்கறி பயிருன்னா, அந்த வானம் பாத்த பூமிய நம்பியும் வருசமுச்சூடும் வெள்ளாம. இவ படுற‌பாடு அக்காளுக காதுக்கு வந்ததும் இவள மட்டும் கூப்பிடுறாக. அம்மானும் நடையா நடக்குறாரு வீட்டுக்கு கூப்பிட்டு.மழுப்பலா பதில் சொன்னாலும் அவ வைராக்கியத்துல அவ இம்மியும் அசையல.இதுக்கா எம்புள்ளய இங்கன‌ கட்டிக் குடுத்தேன்னு பொலம்பி பொலம்பி,முடிவா அவரும் போய் சேந்துட்டாரு. சொந்தமுன்னு சொல்லிக்க யாருமில்லையின்னு மறுகாம இருக்குற வீட்டையே சேத்துக் கட்டுனா பாசத்தால.

அடுத்து அயித்தைக்கு வைத்தியம். சித்த வைத்தியமும் தைலமும் ஒரு ரொக்கத்த முழுங்க ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஒத்தாசைக்கு இளையவஞ் சம்சாரமும் வந்து நிக்கா. ஆம்பள இல்லாத வீடுன்னு எளப்பமா பேசுனவுக எல்லாரும் அசந்து போயி நின்னாக.ஒசரமுன்னு பாத்தா ஒன்னுமில்ல தான் . அதே வட்டக் குடிச, வசதி வாய்ப்பெல்லாம் ஒன்னும் ஏறல. ஆனா அழகி அந்த வீட்டுக்குள்ள அன்ப,பாசத்த வெதச்சு விட்டிருக்கா.அவ ஆசைக்கு தக்கன அந்த கூடு இப்ப மாறிப்போச்சு. சண்டை போடாத மாமியாரு மருமகளும், பொறாமையில்லாத மனுசமக்கன்னு அந்தக் குடிச இப்போ அழ‌கியோட அன்பால அரண்மனையாயிருச்சு. ஓரகத்தி பிள்ளைகளுக்கு யாரு தன்ன பெத்தவனே தெரியாதாம் கலியாணம் வரைக்கும். உண்மை தாஞ் சாமி நம்பல‌யின்னா எங்கூரு பக்கம் வந்து பாருங்க இன்னும் பல கூட்டுக குடும்பங்களிலே இதுபோல நடக்கத்தாஞ் செய்யுது.

இத்தன ஓட்டத்துக்கு மத்திலேயும் 'அவுக எப்படி இருக்காகளோ? எப்ப பாப்பேனோ? மாரியாத்தா. எங்கண்ணுக்கு முன்னக் கொண்டாந்து நிறுத்திப்புடு.',வேண்டுதலும் மன்றாட்டும் அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டு தான் இருக்குது.

க‌ட்டுப்பெட்டித் த‌ன‌மான‌ பொண்ணு,ப‌டிப்போ, வெளியுலக‌ வாழ்க்கையோ தெரியாத‌ ஒருத்தி, புருச‌னும் துணைக்கு இல்லாத‌ ஒரு கிராம‌வாசி த‌ன் கை உழைப்பை ம‌ட்டும் ந‌ம்பி ரெண்டு குடும்ப‌த்தோட‌ வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ணமாயிருந்து பாசத்தோட வறுமையை எதிர்த்து போராட‌ முடிஞ்சுதுன்னா, ஏன் எல்லா திற‌மையும் உள்ள சில‌ ந‌வ‌யுக‌ பெண்க‌ள் அற்ப‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ விவாக‌ர‌த்துங்கிற‌ க‌த்தியோட‌ உத‌விய‌ நாடுறாங்க‌? ப‌தில் சில‌ சம‌ய‌ம் த‌லைமுறை இடைவெளின்னு வ‌ரும், சில சமயம் பெண்ணீயம் வளராத காலகட்டம்ன்னு சொல்லலாம்.ஆனா கார‌ண‌ம் அது இல்லைங்கிற‌து என் தாழ்மையான‌ க‌ருத்து.எடுத்த‌ எடுப்பிலேயே பிரிவ‌ ப‌த்தின‌ முன்மொழித‌லோட‌ தீர்வு காண‌ ஆர‌ம்பிக்கிற‌து தான் காரணம். பெண்ணுக்குள்ளே எல்லா ஆளுமையும் பூரணத்துவமும் உண்டு.ஏதோ ஓரிடத்தில் குறைகையிலே அடுத்தவர்க்கு அடிமையாதல் நிகழ்கிறது.அத சீர் செய்யோணுமே தவிர ஆண் போல பாவனை செய்வது சரியேயில்லை. வீட்டுப் பிரசனைக‌ள்ல ஒரு பொண்ணால சாதிக்க முடியாதது எதுவுமேயில்ல.இது ந‌ம‌க்கு இப்போ தேவையில்லாத விச‌ய‌ம்.இருந்தாலும் ஒரு வித‌ ம‌ன‌க்க‌ச‌ப்புங்க‌ உங்க‌கிட்ட‌ சொல்லாம‌ யாருகிட்ட‌ சொல்லுவேன்? அதேன் இப்புடி சில‌ ச‌ம‌ய‌ம், க‌ண்டுக்காதீங்க‌ பாஸ். ச‌ரி வாங்க‌ ந‌ம்ம‌ விச‌ய‌த்துக்கு.

அன்னிக்குன்னு பாத்து மனசு பட‌ படன்னு அடிச்சுக்குது.என்னக்கிமில்லாம மேற்க பாத்து கெவுளி வேற நல்ல சகுனம் சொல்லுது.அழகிக்கு என்ன நல்லது நடந்திருக்கும். பாக்கலாம் வாங்க.

<========== அழகி புராணம் தொடரும் [5] ============>

நா.முத்துக்குமார் கவிதை

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்.

Thursday, January 21, 2010

வ‌ழமை போல் இனியும்...

தோல்வித் தருணங்களில்
துணை தேடுகின்ற மனம்-‍அதுவே
நட்பாய் வாய்க்கையில்
குழந்தையாய் மாறி குதூகலிக்கிறது!

இயல்பாய் கிடைத்த
உறவுகள் பலதில்
நானே தேர்ந்த
நல்லுறவென்பதில்
கூடுதல் பற்றும் பரிவும்!

அம்மா அப்பா
அண்ணன் தம்பி
எத்தனை இருந்தும்
உண்மையில் உன்னிடம்
கிடைக்கும் ஆறுதல்
அவர்களின் புரிதலில்
இருக்குமா சந்தேகமே!

பலநூறு மைல்களுக்கப்பால்
மனைவி மக்களென நீ!
தொலைபேசியில் என் குரலை
வைத்தே நடப்பது என்ன
தீர்மானத்துக்கு வரும்
தீர்க்கதரிசி!

இது தப்பு அது தப்பு
குறை சொல்ல ஆயிரம்பேர்
ஆனால் கைபிடித்து
கரையேற்ற நீ மட்டும்!

எல்லோருக்கும் ஏதாவது
மனக்குறை உண்டு!
சேதத்தின் சதவீதமே
பலவீனம் பலமிரண்டையும்
பாங்காய் பகுக்கிறது!

கண்ணீர் மல்க
கடினமான கடந்தவை
பகிர்கின்றேன்!
விழித்திரை தாண்டியது
தான் தாமதம் அனிச்சையாய்
துடைக்கிறது உன் விரல்!
அரற்றி ஓய்ந்து
நிமிர்ந்து பார்க்கையில்
உன் கண்ணிலும் கண்ணீர்!
துடைக்கும் விரல்களின்றி!

அவ்வைக்கும் அதியனுக்கும்
நட்பிலக்கணம் நவில்வோர்
சமவயதான
ஆணுக்கும் பெண்ணுக்கும்
நடுவே
காதல் தாண்டி நட்பிருக்கும்
கருத்தை ஒரு மனதாக
ஏற்பதேயில்லை!

காதல் நலிந்து நண்பராய் பிரிவதும்
நட்பு திரிந்து காதலாய் தொடர்வதுமான
வழக்கங்கள் நவயுக நாகரிகமென்பதால்
தலைமுறை இடைவெளி
இதை ஆதரிப்பதேயில்லை!

எது எப்படியாயினும்
எனக்கு கவலையேயில்லை!
நம் நட்புக் குறித்த‌
அடுத்தவர் விமர்சனம்
அவசியமேயில்லை!
என் இதய சிம்மாசனத்தில்
நண்பனாய்
நல்லெண்ண விளக்கில்
ஒற்றைத் திரியாய்
ஆறுதல் தந்து மீட்டெடுக்கும்
ஆபத்துதவியாய்
எப்போதும் போல் இனியும் நீ!

Wednesday, January 20, 2010

அறிவிலி


பற்றி எரிகையிலும் பூ பூக்க
உன்னால் மட்டுமே முடியும்.
'மத்தாப்பூ'.

சுற்றி எரிகையிலும்
உள்ளே,
பூகம்பம் வெடிக்கையிலும்
சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய்
பாசாங்கு பண்ண‌
என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து.

எள்ளி ந‌கையாடும் எல்லோரையும்
ஏதேதோ க‌தைக்கிறாரென‌
செவிடு பாய்ச்சுவ‌து
எப்ப‌டி அக‌ந்தையாகும்?
புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌
உல‌க‌த்தில்....

பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌
குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து எனக்கு.
கோரிக்கையோ கட்டளையோ
இல்லாத செல்லச் சிணுங்களில்
சிக்குண்டு சிரிப்பதை
ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா?

செய‌ற்கையாய் சிரித்து சிரித்து
க‌ண்ணில் நீர்வர மெய்யாய்
சிரித்த‌து எப்போது?
நினைவேயில்லை..

வலி நிர‌ப்பி வடித்த
வார்த்தைச் சித்திர‌மெல்லாம்
அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில்
அதே காயாத‌ குருதி வாச‌னை.
கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும்
தைக்க‌ப்படவேயில்லை.

சுயமெனும் இருள்வெளி தாண்டி
புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌
வாய்ப்புகளெல்லாம் வாகாய்
வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌.
விரும்பிய‌ திசை எதுவென
தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி....

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை
க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி
ஏனோ,
வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை
வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை.

கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
இந்த அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக‌!

Tuesday, January 19, 2010

நீர் வகைப்பாடு

ப‌ல்லாயிர‌ம் அலைக‌ளை
ப‌லியாக்கிய‌ பின்னும்
கரைதொடும் முய‌ற்சியில்
'ஆழ்க‌ட‌ல்'

எவர் பேச்சும் கேளாமல்
எதிர்த்த‌வ‌ரை எள்ளியபடி
கழிமுக‌ம் காணும் வ‌ரை
க‌ட‌மையின் பிடியில்
'ஆறு'

முர‌டான கற்பாறையும்
'பாசத்தால்' வழுக்கியது!
த‌ண்ணீரின் உற்சாகத் த‌ழுவ‌லில்
'அருவி'

வ‌ட்ட‌த்துக்குள் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌
வாட்ட‌த்தோடும் ச‌ல‌ன‌த்தோடும்
இய‌க்க‌ம் த‌விர்த்த‌ நீரின்
இன்னொரு பூகோள வடிவம்
'குட்டை'

பூமிக்குள் இழையோடும் ஈர‌த்தை
துளையிட்டு துவ‌ம்ச‌ம் செய்த ‍
மானுட‌த்தின் ம‌க‌த்தான தன்னலம்!
குற்றலைகள் ம‌ட்டும் கொண்டு
அதிராம‌ல் அலுத்த‌ப‌டி
'கிண‌று'

எல்லோர் வாழ்க்கையும்
இதில் எதோவொன்றுட‌ன்
ஒப்புமை கொண்டு....
சாத்தியமான‌தும் ச‌ரியான‌தும்
அவ‌ர‌வ‌ர் பார்வையில்!


Saturday, January 16, 2010

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 4

"ஏலே! யாருப்பா அது? "

கருக்கலிலே சாணஞ் தெளிச்சு கோலம் போட்டு நிமிரவும், மாரியப்பன் கூவலோடு வாசல் மிதிக்கவும் ச‌ரியாயிருந்துச்சு!

"ஆங்! அழகியா! ஆத்தா! ஓம் புருசன கொஞ்சம் வெளிய வரச் சொல்லு தாயி!வெரசா ஒரு சேதி சொல்லோணும்!"

"சித்த இருங்கண்ணே வாரேன்" என்றபடி திரும்ப, கணவன் எதிர்படவும் "உங்களத் தான் கேட்டாக!" என்ற‌ப‌டி மெல்ல‌ ந‌க‌ர்ந்தாள்.

"என்னல‌‌! விடிய‌ல்ல‌ க‌த்திக்கிட்டிருக்க?என்ன சேதி?" என்ற‌வ‌ன், நிமிச‌த்துல‌ மாரி சொன்ன‌ விச‌ய‌த்த‌ கேட்ட‌தும் சிரிக்க‌வே தெரியாதுன்னு தெரிஞ்ச‌ மொக‌த்துல‌ அம்புட்டு சிரிப்பு!

வெரசா இவ‌ கிட்ட‌ வ‌ந்து , " ம‌லேயாவுல‌ வேல‌க்கி ஆளெடுக்காக‌ளாம்.நிச்ச‌ய‌ங் கெட‌ச்சுரும்! உம் மாம‌ங்கிட்ட‌ சொன்ன‌ மாதிரி உன்ன‌ ராசாத்தியா வ‌ச்சுக்குவேன்.நா ஏமாத்த‌ல‌ புள்ள‌ நீ என்ன‌ ந‌ம்பு. ந‌ல்ல‌ பொழ‌ப்பில்லாத கொற‌ தான் உங்கிட்ட‌ மொக‌ங்குடுத்து பேச‌ல‌.இப்ப‌ இந்த‌ வேல‌ த‌க‌ஞ்சுரும். போயிட்டு வாரேன்.வ‌ந்து பேசுதேன்"

ஒரு வார்த்த‌ பேச‌மாட்டானான்னு ஏங்கி கெட‌ந்த‌வ‌கிட்ட‌ ம‌ட‌ம‌ட‌ன்னு பொறிஞ்சிட்டு போயிட்டான். இத்த‌ன நா விடுக‌தக்கி இன்னைக்கு ப‌தில் கெட‌ச்சிருச்சு. அம்மான் என்ன‌ சொல்லி க‌லியாண‌ம் முடிச்சு குடுத்தாருன்னு தெரிஞ்ச‌ புள்ள‌ அவரு ஆக்ரோச‌த்துக்கும் கார‌ணம் தெரிஞ்சுகிட்டா. இத்தன பாசம் வச்சிருக்கானா எம்புருசன் எம்மேல? நெனைக்க நெனைக்க கரும்பா இனிக்கிது. எப்ப வருவான்னு காத்திருக்கா வாசல்ல ஒரு கண்ணும் அடுப்பில ஒரு கண்ணுமா.

'அடப்பாவி! காசில்லையினு தானா இம்புட்டு ரகளயும்! ஒத்த வார்த்த சொல்லப்பிடாது? நானும் என்னன்மோ நெனச்சு மருகி போனேனே.ஆத்தா மகமாயி! ஆகா ஓகோன்னு வாழலையினாலும் கவுரதயா,பாசமா வாழனும் தாயி! அதுக்கு வழி பண்ணு'

"என்னா? காலையிலேயே கனாவா? தோட்டத்துக்கு போகல?" ம‌ன‌சு போன‌ போக்க‌ மாமியாரு கொர‌லு வ‌ந்து க‌லைச்சு போட்டுது!

"இல்ல‌ அயித்த‌! அவுக‌ வெளிய‌ சோழியா போயிருக்காக‌! என்ன‌ ஏதுன்னு கேட்டுட்டு போக‌லாமின்னு........!"

"அதெல்லாம் நா பாத்துக்கிறேன்! நீ போ!" ச‌ட்ட‌மாய் சொன்ன‌தும் ம‌னசில்லாம‌ல் தென‌ச‌ரி பாக்குற‌ வேல‌ய‌ தொட‌ருறா அழ‌கி.

பொழுது சாய வீட்டுக்கு வ‌ந்தா வீடே த‌ல‌கீழா மாறியிருக்கு. க‌ப்ப‌ல்ல‌ ப‌ய‌ண‌மாம். ரெண்டு மூணு நாளைக்குள்ள கெள‌ம்ப‌னுமாம். அப்ப‌டி இப்படின்னு ஓர‌க‌த்திக்கிட்ட‌ வ‌ம்ப‌ள‌ந்துக்கிட்டிருந்த‌ மாமி,இவ‌ள‌ பாத்த‌தும் என்ன‌ தோணுச்சோ, "அவ‌ன் உள்ள‌ தான் இருக்கான் போயி பேசு" என்றாள்.

யோச‌னையா இருந்த‌வ‌ன் மெட்டி ஒலி கேக்க‌வும் மெல்லத் திரும்பி,மஞ்சளும் குங்குமமும் திகழ, தாமரப்பூ கணக்கா மலர்ந்து கெடந்த முகத்த பாத்ததும் பேச்சிலழந்தவன், திக்கித் திணறி ச‌ன்ன‌மா,

"ரெண்டு நாள்ல‌ கெள‌ம்ப‌ணும். மூணு வ‌ருச‌ம் ஆகும். கொஞ்ச‌ம் ந‌ம‌க்குண்ணு சேத்துகிட‌லாம்,அதேஞ் சரினுட்டேன். ஆனா நீ இங்க ச‌மாளிச்சிருவியா? இல்ல‌....உன்ன உன் வீட்டுல கொண்டு விட‌னுமா?"

அவ‌ன் மூச்சுக்காத்து த‌ந்த‌ க‌த‌க‌த‌ப்ப‌ அனுப‌விச்ச‌வ, க‌த்தியா வ‌ந்த‌ வார்த்தைக‌ள்ல‌ நொறுங்கி போனா.
"என்ன‌யிது? என் வீடு இது தானே! நான் உங்க‌ள‌ ந‌ம்பித்தானே வ‌ந்தேன்?இப்பிடி பிரிச்சு பேசுறீக‌? இதுக்கு முன்ன மாதிரி பேசமலே இருந்திருக்கலாம்!" விசும்ப‌லுட‌ன் க‌த‌ற‌லும் சேர‌ அப்ப‌டியே உருகிப் போயிட்டான்.

"இல்ல‌ புள்ள‌. நா ஒன்ன‌ ஒரு நாளும் பிரிக்க‌ல‌. என‌க்கு எல்லாமும் நீந்தேன். ஆத்தா என்ன‌ பெத்த‌வுக‌ இல்ல‌யினாலும் ந‌ல்லா வ‌ள‌த்த‌வுக. அதுக்கு ந‌ன்றிக்க‌ட‌னாத்தேன் நான் வ‌ர‌வு செல‌வு எதுவுமே கேட்குற‌தில்ல‌. இளைய‌வ‌ ப‌டுற‌பாடு தெரிஞ்சும் நா இல்லாத‌ ச‌ம‌ய‌த்துல உன்ன இங்க‌....நீ... அதாம்புள்ள‌ அப்பிடி..." க‌ண்க‌ல‌ங்க‌ நின்ன‌வன‌ பாத்த‌தும் ஏதோ ப‌த‌றிப் போச்சு இவ‌ளுக்குள்ள‌.

"ஆத்தி! என்ன‌ இப்ப? எதுக்கு கலங்குறீக?சீமைக்கு போயி ந‌ல்லா ச‌ம்பாதிங்க‌.அயித்த‌ சொல்லுற‌ வார்த்தைய‌ ம‌திச்சி ந‌ட‌ப்பேனுங்க. குடும்பத்த பத்தி வெசனப் படாதீக! ப‌ய‌ப்புடாதீக! ஆனா அக்க‌ர‌ சீம‌ போனாலும் உங்க‌ நென‌ப்போட‌ ஒருத்தி இருக்கான்னு ம‌ட்டும் நென‌வுல‌ வ‌ச்சுக்குங்க"

"என‌க்கு தெரியும்புள்ள‌! நீ சேக்க‌ வ‌ந்த‌வ‌, யாரையும் பிரிக்க‌ மாட்ட! எனக்கு தெரியும்"

காதலோடு கட்டி அணைத்ததும் மறுப்பேயில்லாமல், இது என‌க்கான‌ எட‌முங்கிற‌ உரிமையில‌ நா த‌ழுத‌ழுக்க பரவசக் கண்ணீரோட அவ‌ன் தோளில் ச‌ரிந்தாள் அழ‌கி.

<===========அழ‌கி புராண‌ம் தொட‌ரும் ===========>Thursday, January 14, 2010

த‌மிழ‌ர் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

பூக்களெல்லாம் சிரித்துப் பேசி மணம் பரப்ப
ஓரறிவு உயிரின மெல்லாம் செழித்து
பூமிக்கு பசுமை போர்த்த‌
மார்கழியின் தண்மையோடு
தென்ற‌லும் சேர்ந்து வ‌ர‌
பிற‌ந்து விட்டாள் த‌மிழ‌ர் மாண்புய‌ர்த்தும்
"தை திங்கள் நல்லாள்"

பழையன கழிந்து புதியன மனைபுக
மாவிலையோடு ஆவரம்பூ தோரணங்கட்டி
பசுஞ் சாணமெடுத்து வீடு மொழுகி
வேலிப்பருத்தியிட்ட கோமியத்தால் சுத்திசெய்து
ப‌ச்ச‌ரிசி மாக்கோலம் பதவிசாய் அள்ளித் தெளித்து
உழைப்புக்கு ஒத்துழைத்த இயற்கை அன்னைக்கு
நன்றி நவில்வதாம் 'தைப் பொங்கல்'!

வேர்வை சிந்தி வ‌ர‌ப்புய‌ர்த்தி ப‌ருவ‌த்தில் நீர்பாய்ச்சி
ஓடி உழைத்து க‌ள‌ம் சேர்த்த‌ நெல்ம‌ணியை
பக்குவமாய் இடித்து புடைத்து அரிசி செய்து
பாலிட்டு பருப்போடு பனை வெல்ல‌ம் பசுநெய்
இன்ன‌பிற‌ கூட்ட‌ணி சேர்த்து இனிதாய் படையலிட
உள்ளம் களித்த கதிரவனும் கேட்ட வரமளித்திடுவான்!
மாதம் மும்மாரி பொழிய ஏது செய்வான்!

ந‌ன்றி மொழித‌லிலும் எம்ம‌வ‌ர் சிற‌ப்பு காண்!
எல்லாமாய் இருந்திட்ட இயற்கைக்கு முதல் வணக்கம்!
ஏர்பிடிக்க தோள்கொடுத்து உயர்வு நல்கிய‌
ஐந்த‌றிவின‌ங்க‌ளுக்கு இர‌ண்டாம் நாளாம்!
'இன்ன‌து கிட்டியது! வ‌ருக‌ கூடி ம‌கிழ‌வென'
சுற்ற‌ம் க‌ல‌த்த‌ல் மூன்றாம் நாளாம்!

மேற்ப‌டி ச‌ங்க‌திக‌ள் எதுவும்
ந‌க‌ரத்தில் சாத்திய‌மில்லை
எனினும்,
ஆர்ப‌ரித்து த‌மிழ‌ர் திருநாளை வ‌ர‌வேற்போம்!

'தை' பிறந்த சந்தோசத்தை
குலவையிட்டு குதுகலிக்க
வருக! வருக!

"நாடு செழிக்க‌ ந‌ல்ல‌ ம‌ழை பெய்திட‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
வீடு சிற‌க்க‌ ந‌ல்ல‌ன எல்லாம் பெற‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
ம‌த‌வெறிய‌து ந‌லிந்து ஒற்றுமை ஓங்க‌
பொங்க‌லோ பொங்க‌ல்!
த‌ர‌ணியெங்கும் அமைதி பெருகி வ‌ன்முறை ஒழிய‌
பொங்க‌லோ பொங்க‌ல்!"
நிக‌ழ்த‌க‌வு

ந‌ட்போடு உற‌வாடி நானிருப்பதாய் பொய்பேசி
ந‌ம்பிக்கை எல்லாம் த‌ந்து நீசமாய் மாறிப்போன‌
ந‌ட்பின் மீது நிறைவேற்ற‌ப்பட்ட
ந‌ம்பிக்கையில்லா தீர்மானங்கள்!
நட்பு கால‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு
ந‌டந்தவை ம‌ற‌ந்து செல்கிற‌து நாட்காட்டி!

ந‌ற்குடி மாண்பும் நேர்வழி நடத்தலும்
பிற‌ப்பிலா வருவ‌து?
நிச்ச‌ய‌மில்லை
வாழும் முறைமையில் வ‌ருவ‌து
சிற்பியின் கைத்திறன் முய‌ற்சியில‌ன்றி
பிற‌ப்பினில் ஆகாது காண்!
ஏகலைவன் வீரம்
சத்திரியனுக்கு சளைத்தாயென்ன?

அரிதாய் வாய்க்கும் வாய்ப்புக‌ளெல்லாம்
அவ‌ச‌ர‌மாய் முற்றுப் பெறுகையில்
அடுத்த‌ நாளுக்கான எறும்பின் முய‌ற்சி
அசட்டுத்தனமாயினும் அதிலும் அர்த்தமிருக்கிறது!

நாளை என்ப‌து நிச்ச‌ய‌ம‌ற்ற‌ இர‌வுக‌ளில்
நடுநிசியில் இர‌வை ந‌கர்த்தும்
திகிழ் நிறைந்த‌ நாழிகைக‌ள்
அற்புத‌மான‌வை!

வாழ்க்கையின் வரையறை என்ன?
நிச்சயிக்கப்பட்ட இற‌ப்புக்கும் நடப்புக்கும்
இடைப்ப‌ட்ட‌ நிக‌ழ்த‌க‌வு!
ஒன்றுக்கும் பூச்சிய‌த்திற்கும்
நாட்ப‌ட்ட‌‌ ப‌ந்த‌ய‌ம்
பூச்சிய‌ம் வென்றெடுக்காத வ‌ரையில்
பூமியில் பெய‌ருடை த‌ருவாய் நீ!
இவ்விட‌ம் ஜெயித்தேன் எவ்விட‌ம் தோற்பேன்?
க‌ட்ட‌ங்க‌ளிலும் கைரேகைக‌ளிலும் ப‌திலைத் தேடி
நிகழப்போகுமொன்றிற்கான ஆயத்தங்கள்
நிகழாத வரைக்குமான உத்திரவாதம்!

Saturday, January 9, 2010

கிணற்றுத் தவளைஏதாவது ஏதாவது எழுதனும். அப்படியே படிக்கிறப்பவே 'சும்மா கலக்கிட்டடீ'ன்னு தோழிகள் அலறனும். என்ன எழுதலாம்? காதலப் பத்தி? அய்ய! பிரின்சி முன்னாடிப் போய் எப்படி வாசிக்கிறது? அப்பாகிட்டப் போட்டுக் கொடுத்துட்டா? அண்ணன் வேற புதுசா வேவு பாக்க உளவுப் படை தயார் பண்ணிருவான்(!) வேற எழுதனும்.

தமிழ் பத்தி? ம்ம் எழுதலாம். ''ழ' கரம் சரியாவே வர மாட்டேங்குது. எனக்குப் போய் இவ பொண்ணாப் பொறந்துருக்காளே. நாக்குல வசம்ப வச்சுத் தேய்க்க‌' ஆத்திரத்தில் அப்பா கொட்டிய குட்டு இப்பவும் வலிக்குது. வேணாம் இலக்கியச் செய்தியெல்லாம். வம்பு.

வேற ஏதாச்சும்?

ந‌ட்பு ப‌த்தி. ம்ம். பூபால‌ன் அதான் எழுதுறான். ஒரே த‌லைப்பு. சே. ந‌ல்லாயிருக்காது.

பெண்மை,தாய்மை இதெல்லாம். எல்லாரும் பொண்ணு எழுதுற கவிதைனா இத தான் எதிர்பார்ப்பாங்க. வேணாம்.

எது நல்லாயிருக்கும்?இப்படியே துணிகளைத் துவைத்தபடி,இழுத்து சொருகிய பாவடை சட்டையுடன் தோட்டத்து கொசுக் கடியிலும் கனவில் உழன்ற நாட்கள்.பொருளோடு மனனம் செய்ய தினம் ஒரு குறள், அப்பாவின் தினப்படி கட்டளைக்குப் பயந்தே வீட்டு வேலையில் அக்கறை இருப்பதாய் அலட்டிக் கொண்ட என் இலக்கியம் அறியாத வயது.

'க‌டுகு பொரிய‌ல‌ பார்.' 'ப‌ச்சை வாடை போன‌தும் புளி ஊத்து.' 'ஈர்க்குச்சி கீழே விழுது பார். என்ன சந்திரமதின்னு நெனப்போ.' அப்ப‌த்தாவின் வார்த்தைக‌ளை அலட்சிய‌ ப‌டுத்திய‌ப‌டி,'அடுப்ப‌டிகுள்ளேயே முட‌ங்கிப் போவேன்னு நென‌ச்சியா? நாளை பார். உல‌க‌மே என்ன‌ பாக்க‌ போகுது.அப்புற‌ம் பேசிக்கிறேன்' ச‌த்த‌மின்றிச் ச‌ப‌த‌ம் செய்த‌ப‌டி, க‌விதைக்கான த‌லைப்பைத் தேடி,தேடி வெந்நீர் கொப்ப‌ரைக‌ளிட‌மும், ச‌மைய‌ல‌றை தட்டு முட்டு சாமான்களுடனுமான என் புலம்பல்கள் அப்பத்தாவின் கழுகுப் பார்வையில் பட்டதும் அர்த்தமே மாறிப் போயிற்று.

"டேய் ச‌ண்முக‌ம்!  இவ‌ போக்கே ச‌ரியில்ல‌டா. காலேஜுக்கு அனுப்பாதே  அனுப்பாதேன்னு ப‌டிச்சு ப‌டிச்சு சொன்னேன் கேட்டியா. தானா பேசிக்கிறா. சிரிக்கிறா. பொம்ப‌ள‌ புள்ள‌ இப்ப‌டியிருந்தா ஏடாகூட‌மாக‌ப் போகுதுடா!"

"சும்மா இருங்க‌ம்மா. ஒண்ணும் இருக்காது.கேக்குறேன் இப்ப‌வே. இங்க‌ வா."

க‌ண்ணில் நீர்க்கோர்த்து நடுங்கிய‌ப‌டி,"இல்ல‌ப்பா. க‌விதை ஒண்ணு எழுத‌னும் ஒரு விழாவில‌ வாசிக்க‌ . அதுக்குத் தான்." பய‌த்திலா ? ப‌டிப்புப் பறிபோய்விடும் ஆப‌த்திலா? தாரை தாரையாய் க‌ண்ணீர்.

அப்பா அதிசயமாய்ச் சிரித்த‌ப‌டி, "இது என்ன‌ பெரிய‌ விச‌யம். அல‌மாரில‌ இருக்க‌ புத்த‌க‌ங்க‌ள ப‌டி. ம‌.பொ.சி உரைக‌ள்,நா.காம‌ராச‌ன்,உல‌க அர‌சிய‌ல் எல்லாமும் இருக்கு பாரு. ப‌டி. பெரியாரின் சாதீய‌ம்,பெண்ணீய‌ம் எல்லாமும் இருக்கு. க‌க்க‌ன் முத‌ல் காந்தி வ‌ரை எல்லாமும் இருக்கு பார். தோணுனத‌ எழுது. திருத்தித் த‌ர்றேன். அப்புற‌ம் போய் வாசி.ஆனா 'அவை' நாகரீகம் ரொம்ப முக்கியம்"

இப்ப‌டியே என‌க்குப் புத்த‌க‌ங்க‌ள் தோழிக‌ள் ஆயின. வீட்டைத் தாண்டி வெளியே வர விருப்பமேயில்லை. சில‌ப்ப‌திகார‌மும் குறுந்தொகை கூட்ட‌மும் இவ்விதமே என் கூட்டாளிக‌ள் ஆயின‌. அம்மாவின் 'காந்தீய‌ம்' ப‌ற்றிய‌ கொள்கைக‌ள் அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ செவிக்கு வ‌ந்ததால் காந்தியையே என் க‌விதைக்கான‌ க‌ருப்பொருளாக்கினேன்.

புர‌ட்டிய‌ ப‌க்க‌ங்க‌ளின் வ‌ழியே சில‌ விய‌ப்புறும் உண்மைக‌ள் கிடைக்க‌ப் பெற்றேன். கோட்சேயான‌வ‌ன் ஆரம்பக் காலத்தில் காந்தியின் தொண்ட‌னென்றும் 'ம‌தம்' பிடித்த‌பின் மிருக‌மானான் என்றும். 'ஒரு க‌ன்ன‌த்தில‌றைந்தால் ம‌றுக‌ன்ன‌த்தைக் காட்டு' இது போலும் ந‌டைமுறைக்கு உத‌வாத‌(?) கொள்கைக‌ளைப் பொருட்ப‌டுத்தாத‌ வ‌ய‌து அது. கோட்சே பாவ‌ம் தெரியாம‌ ப‌ண்ணிட்டார் அப்ப‌டின்னு அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌து ம‌ன‌து.

துணி துவைக்கையிலும்,அரிசி களைகையிலும்,வீடு பெருக்கையிலும் க‌விதை குறித்த‌ க‌ன‌வுக‌ள்.இரவு முழுதும் எழுதி எழுதிக் கிழித்த‌ குப்பைக‌ளை அம்மா பார்க்குமுன் அப்புற‌ப்ப‌டுத்தினேன்.முடிவில் க‌விதைக்கான‌ க‌ருப்பொருள் பிடிச்சாச்சு. 'சொர்க்க‌ம் ந‌ர‌க‌ம் ப‌ற்றின‌ கோட்பாடுக‌ளில் ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்களுக்கு ம‌ட்டும்' பீடிகை எல்லாம் போட்டுச் சொர்க்க‌த்திலிருக்கும் காந்திக்கு(?) ந‌ர‌க‌த்திலிருக்கும் கோட்சே எழுதுவ‌தாய் ஒரு க‌டித‌ வ‌டிவில் க‌விதை ச‌ம‌ர்ப்பித்தேன்.

படிக்கப் படிக்கத் தாங்க முடியல நாமளா எழுதினோம்னு ஒரு பெருமிதம் கலந்த கர்வம். அடுத்து வரப் போற விபரீதம் தெரியாம. மூனு பக்கத்துக்கு கவிதை(?) எழுதி அப்பா வரட்டும்னு காத்திருந்தா ஏதோ மாநாட்டுக்குப் போறதா போனவுங்க ரெண்டு நாளாகும்னு தகவல் மட்டும் அனுபிச்சாங்க. என்ன பொறுப்பில்லாத் தனம்? அம்மாவுக்கு இந்தக் கவிதை கதை எல்லாம் படிக்கிறதே பிடிக்காது. என்ன செய்யலாம்? சரி துணிஞ்சு முடிவெடுத்தாச்சு.தப்போ சரியோ ஒரு கை பாத்துடுவோம்.

கல்லூரி வளாகம் களை கட்டுது.எங்கள் கணிப்பொறி துறை சார்ந்த இலக்கிய விழா. கல்லூரி முதல்வர்,துறைத்தலைவர் என எல்லாரும் இருக்க,நிகழ்ச்சியில் நான்காவதா என் கவிதை. மேடையில் என் பெயருக்கு அப்புறம் தோழி பிரசாந்தினி கவிதையின் தலைப்பை வாசிக்கிறா. வெளியில் செல்லவிருந்த முதல்வர் தலைப்பைக் கேட்டதும் திரும்பி வர்றாங்க. காரணம் என்னன்னா அவரு ஒரு காந்தியவாதி. சொந்த வாழ்க்கையிலும் எளிமையைக்  கடைபிடிக்கும் அருமையான‌ கல்வியாளர். தலைப்பு இது தான்.

"காந்தீயத்திற்கு ஒரு கலியுக விளக்கம்"

கிள‌ம்பிப் போயிருவாங்க‌ன்னு ஆர்வ‌மாப் பார்த்தா திரும்பி வ‌ர்றாங்க‌. அய்யோடா! ந‌ல்லா மாட்டிக்கிட்டோம்.முதல் இரண்டு நிமிட‌ம் செய‌ல‌ற்று நிற்க‌, அறிவிப்பாளினி வ‌ந்து சொன்ன‌தையே சொன்ன‌தும் தான் சுர‌ணை வ‌ந்த‌து.போகிற‌ போக்கில் கிள்ள‌ல் வேறு.கவிதை தொட‌ங்குமுன் கடிதம் பற்றி காட்சிகளை விள‌க்கிவிட்டு, நேராய் முத‌ல்வ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌வும் அவ்ர் வெகு சுவ‌ராசியமாக‌ கவ‌னித்துக் கொண்டிருந்தார்.

பாதி வ‌ரை முடிந்திருக்கும், லேசாய் நிமிர்ந்து பார்த்தேன். என்னை எரிப்ப‌து போல் அவர் பார்ப்ப‌து தெரிந்த‌து.முச்சு முழுசா நின்னுடுச்சு. ஆகா. ச‌ரியா மாட்டிக்கிட்டோமே. என்ன‌ ப‌ண்ணுற‌துன்னு நெனைச்ச‌ நேர‌த்துல‌ அடுத்த‌ வரி வாசிக்க‌ ம‌ற‌ந்துட்டேன். க‌விதை ப‌டிச்சு முடிச்சாச்சுன்னு ஒரே கைத‌ட்ட‌ல். வீட்டுக்கு அனுப்புறதிலயே குறியா இருந்தவுங்க கைங்கரியம்.

ஆனாலும் விடாம எல்லாத்தையும் எழுதின மாதிரி படிச்சிட்டு கீழே எறங்கி வந்துட்டேன். அதுக்கப் புற‌ம் ந‌ட‌ந்த‌ எதுவுமே க‌வ‌ன‌த்துக்கு வ‌ர‌லை. ப‌ய‌ந்த‌ மாதிரி முத‌ல்வ‌ர் எதுவுமே கேட்க‌ல‌. ஆனா அப்பா தான் பிச்சு வாங்கிட்டார். புதுக்க‌விதைக‌ள் மேலே அவ‌ருக்கு அப்ப‌டி ஒண்ணும் ஈடுபாடில்ல‌. அதுவும் க‌விதை, கோட்சே ம‌ன‌ம் திருந்தி காந்தியால் ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டான் என்கிற‌ மாதிரி. அம்மாவோட அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்கிற‌ம‌ட்டில் நான் செய்த‌து கொலை பாத‌க‌ம் போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டது வீட்டில். அப்பா வ‌லிய‌ போய் க‌ல்லூரி முத‌ல்வ‌ர்கிட்டே ம‌ன்னிப்பெல்லாம் கேட்டுட்டு வ‌ந்தார். அம்மா ஏதோ குல‌த்தைக் கெடுக்க‌ வ‌ந்த‌ கோடாரிக் காம்பேன்னு எல்லாம் பொறிஞ்சு த‌ள்ளிட்டாங்க‌.

என்ன‌ ந‌ட‌க்குமோன்னு க‌ல்லூரிக்கு போனா,வ‌குப்பில‌ எந்த‌ மாற்ற‌முமில்ல‌. ரொம்ப‌த் தான் எதிர்பாத்துட்டோம்னு ம‌ன‌ச‌த் தேத்திக்கிட்டேன். அடுத்த‌ சில‌ நாட்க‌ள்ல‌, முத‌ல்வ‌ர‌ நேருக்கு நேர் ச‌ந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. "இப்படி வா.அன்னிக்கு விழாவிலே நீ வார்தைக‌ளை கோர்த்த‌ வித‌ம் ந‌ல்லாயிருந்துச்சு ஆனா க‌ருத்துல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வை. மற்ற‌ப‌டி துணிச்ச‌லா இத‌ பேசினே பாரு பாராட்ட‌த்தான் வேணும்." என்ற‌ப‌டி சென்றார். என‌க்கோ மோதிர‌க் கையால் குட்டுப் பெற்ற‌ ம‌கிழ்ச்சி.

அதுக்கப்புற‌ம் க‌ணிணி என்கிற‌ இய‌ந்திர‌ம‌ய‌ம் என‌க்குள் உள்வாங்கின‌ பின் க‌விதைக‌ள் எப்போதாவ‌து என் நாளேடுக‌ளை நிறைப்ப‌தோடு சரி. அத‌ற்க‌டுத்த‌ ப‌ரிமாண‌த்தை அவை தொட‌வேயில்லை. வலைப்ப‌திவு ஆர‌ம்பித்த‌பின் அவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்வ‌தை அவ‌தானிக்க‌ முடிகிற‌து.

சில‌ த‌வ‌றுக‌ள், நாக‌ரீக‌ பிச‌வுக‌ள், க‌விதை என்கிற‌ பிடியில் பெண்மைக்குரிய‌ அட‌க்க‌ம் மீறிய‌ சில‌ வார்த்தைக‌ள் என இந்த கிறுக்கல்களிலும் பிழைகள் இருக்க‌க் கூடும்.கார‌ண‌ம் எதுவெனில், எல்லாவித‌மான‌ மனநிலையிலும் க‌விமொழித‌ல் கைவ‌ர‌ வேணுமென்கிற‌ ஆர்வம். அதுவே கோளாறு.

அய்ய‌,காத‌ல் தோல்வியா? யார‌ப் பாத்து காப்பிய‌டிச்சே? நெச‌மாலுமே ச‌மூக‌த்து மேல‌ கோவ‌ம் இருக்கா?இல்ல சீனா? எனக்கு டமீல்னா கொஞ்சம் அலர்ஜி . அது இது போலும் சில இழிப்புரைக‌ள். செவிடாய் ஊமையாய் இருக்க‌த் தான் முடிகிற‌தே த‌விர வேறொன்றும் சொல்வத‌ற்கில்லை.

அப்பாவின் அலமாரியில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை நூறுக்குள் அடங்கிவிடும்.அதில் நுனிப்புல் மேய்ந்தபடி கிறுக்கிய போதிருந்த துணிவு, ஓரளவு அனுபவம், கொஞ்சமேனும் மொழியறிவு,ஆழப் படித்த புத்தகங்கள், இப்படி அடிப்படை எல்லாம் கைவரப் பெற்றும் துணிவு ஏனோ துணை வர மறுக்கிறது. அந்தக் கிணற்றுத் தவளையின் கனவுகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே.

அதுல முதலாவது,
அப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும். சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி.

நிறைவேற உங்கள் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதலையும் எதிர்பார்த்தபடி
இனிவரும் படைப்புகள் அனைத்தும் தாங்களின் மேலான பார்வைக்கு. திருத்தி மதிப்பிடுங்கள். இலக்கியத்தில் வெளியுலகம் பார்க்கத் துடிக்கும் எனக்கு நட்பாய்க் கைகொடுங்கள். தவறெனில் தவறாது அடிக்கோடிடுங்கள்.

Thursday, January 7, 2010

ம‌றையாத‌ நினைவுகள்


நிமிட‌ங்களை க‌ட‌க்க
நிக‌ழ் கால‌த்தையும்
கடந்த காலத்தையும்
துணைக்க‌ழைக்கிறேன்!
இமைகளை இணைத்து
ந‌க‌ங்க‌ளை இரையாக்குகிறேன்!
பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாய்
கோரிக்கைகளை மறுத்தனுப்புகிறது
என் ஞாபகக் குறிப்பேடு!

துரோகியாவ‌தற்கு முன்
தோழியாய் இருந்த‌வ‌ளின்
பாத‌ப்ப‌திவுக‌ளை ப‌ரிசோதிக்கிறேன்!
பாத‌க‌ம் எதுவும் தென்ப‌ட‌வில்லை!

இடையினில் எப்படி?

இர‌வின் நடுநிசியில்
புற‌க்க‌ண் மூடி
அக‌க்க‌ண் விழிக்கும்
த‌ருண‌த்தில்
விம்முத‌லோடு
விழிக‌ட‌க்கிற‌து
இருதுளி க‌ண்ணீர்!
நட்பின் துரோக‌மாய்
சுயத்தின் இழித்துரைப்பாய்
நற்பண்பின் புற‌க்க‌ணிப்பாய்.....

இப்ப‌டி எல்லாமும்
செய்திருப்பினும்
"க‌டைசியாய் பார்க்கணும்"
ம‌ந்திர‌ச் சொல்லாய்
ம‌ன‌தை பிசைந்தது!

பெயர் கேட்ட‌ மாத்திரத்தில்
கொந்த‌ளித்த‌ உண‌ர்வுக‌ள்
அடுத்த‌ வார்த்தையில்
அப்படியே அடங்கின!
'அய்யோ! என்னவாயிற்று!'
கால்கள் தானே அவ்விடம் நாடின!

எப்போது அவ‌ளை
கடைசியாய் பார்த்த‌து?
நினைவில் இல்லை ‍- ஆனால்
நிச்ச‌ய‌மாய் அவள் இப்ப‌டியில்லை!

வானாளின் இறுதியை
தொட‌ப் போகும் அவ‌ச‌ர‌த்திலும்
அவ‌ள் முகம் மட்டும் அதே
ப‌வுர்ண‌மி பொலிவில்!

உடலோ வேத‌னைக‌ள்
வாட்டிய‌து போக‌
வ‌றுமை தீண்டிய‌து போக‌
மீதியாய் ஏதுமில்லை!

'வயதுக் கோளாரில் வந்தவினை'
என் வயோதிக மனது
விரக்தியாய் சொன்னது!

க‌ண‌வ‌ன் கைகுழ‌ந்தை
இன்னும் சில‌பேர்
சூழ‌யிருந்தும்
ந‌ட்பாய் நான் ம‌ட்டும்!

"வ‌ந்துட்டியா?வரமாட்டியோன்னு..."

"என்னடி நீ!வ‌ராம‌ இருப்பேனா?"

"நான் இன்ன‌மும் அப்படியே
தானா உன‌க்குள்ளே?"

"சரி!தூங்கு!ச‌ரியாயிடும்"

ஆதரவாய் தலை தடவினேன்

"சரியாகுமா?"
ச‌லிப்பாய் உத‌ட்டை பிதுக்கினாள்

நடுங்கும் குரலில் சன்னமாய்
"குழந்தை தான் பாவ‌ம்!"

இன்னும் சில நிமிட‌ங்க‌ளில் .....
செவிலிப் பெண்
சைகையில் சொல்லிப் போனாள்!

எம‌னை எதிர்க்கும் ஆவேச‌ம்
வ‌ந்த‌தென‌க்கு!
க‌ண்ணுக்கு தெரிந்தால் தானே!
விழிவ‌ழி பிரிந்த‌து உயிர்!
நாகரீகம் கருதி இதுவரை
அட‌க்கிய‌ க‌ண்ணீர்
க‌த‌ற‌லாய் வ‌ந்த‌து!

எல்லார் கை மாறியும்
எதிர்பார்த்த அணைப்பு கிட்டாமல்
அலறிய குழந்தையை
அனிச்சையாய் தூக்கினேன்
"அம்மாட்ட போக‌னும்!"
மழலை இருமுறை சொன்னதும்
என்னுள் செவியுணர்
க‌ருவிக‌ளனைத்தும் செத்துப்போயின‌!

ம‌ர‌ண‌ம‌டைவ‌தை பார்ப்ப‌து
ம‌ர‌ண‌த்தை விட‌வும்....

Wednesday, January 6, 2010

கொலவெறி

"கொஞ்சம் யோசிச்சு பாரு தாயி"

"எல்லாம் ஒரு வார‌த்துக்கு முன்னாடியே, நின்னு -‍ நட‌ந்து - உங்காந்து - பேசி - சிரிச்சு - யோசிச்சாச்சு!"


"ஏந்தாயி!பெத்ததுக்காக ஆயி அப்பன் பொறுத்துக்கலாம்!ஆனா, மத்தவ‌ங்க‌....."


"என்ன மட்டும் சொல்லுறியே! 'அவங்க' யாராவது நிறுத்தினாங்களா? அவங்கள நிறுத்தச் சொல்! நானும் நிறுத்துறேன்! [நாயகன் :) சரீ சரீ] எத்தன தடவ எத்தன‌ பேர ஈவு இரக்கமே இல்லாம‌ கொன்னுருக்காங்க! உன்னப் போல யாராவது தட்டி கேட்டாங்களா? இல்லையே! கூட‌யிருக்க‌ நீயே இப்ப‌டி சொன்னா? நான் என்ன‌ ப‌ண்ணுவேன்!எனக்கு மட்டும் ஏன் இப்புடி எல்லாம் நடக்குது?[why me????:=( ]"

"என்ன‌ தான் ஆத்திர‌மிருந்தாலும் இப்புடி ஒரு முடிவ‌ நீ எடுப்பேன்னு நான் நெச‌மா நெனைக்க‌வேயில்ல‌!"

"என்ன‌ ப‌ண்ணுற‌து! நானுந்தான் நெனைக்க‌வேயில்ல‌! நெல‌ம அப்புடி! வேற‌ வ‌ழியில்ல‌!"

"இம்புட்டு நாளு எங்க‌ போன‌?பழய ஆளுங்க சரி! வெவரம் புரியாம யாராவது புதுசா வந்துட்டா? அவங்க என்ன பாவம் பண்ணுனாங்க?"

"முடியாது ! முடியாது! நான் சொன்னா சொன்ன‌து தான்! புது வ‌ருச‌த்த‌ன்னிக்கு கொல‌ தெய்வ‌த்துக்கு முன்னாடி ச‌ப‌த‌ம் போட்டுருக்கேன்!கூட‌வே இருந்த,அப்ப‌ விட்டுட்டு இப்ப‌ குதிக்குற‌?"

"நீ சொன்ன்துல்ல ஒன்னு கூட‌ உருப்புடுற‌ மாதிரி இல்ல‌! ச‌ரி ச‌மூக‌ கோப‌ம்(!)(ஹீ ஹி ஹி) கொஞ்ச‌ நேர‌த்துல கொற‌ஞ்சுரும்னு இருந்தேன்!ஆனா ..."

"ஆனா என்ன ஆவன்னா? க‌ல‌க‌ல‌ப்பிரியாலேர்ந்து கார்க்கி வ‌ரைக்கும் யாரு சொன்னாலும் கேட்க‌ மாட்டேன்! கேட்க‌ மாட்டேன்! கேட்க‌ மாட்டேன்!!!!" [யப்பே! இப்பவே கண்ணக் கட்டுதே! உஸ்ஸ்! என்ன‌ விள‌ம்ப‌ர‌முடா சாமி?]

"ப்பூ!தோபாருடா! அவங்கெல்லாம் ரொம்ப பெரியாளுங்க! நீ கத்தி எடுத்தது தெரிஞ்சாவே ஆள வச்சு தூக்கிருவாங்க! வலையுலகத்து மேல ரொம்ப அக்கற உள்ளவிங்க! சொன்னா கேளு பெரியாளுங்க‌ பொல்லாப்பு வேணாம்! வுட்டுரூரூரூ........"

"அப்புடீங்கிறியா?"

"ஆமா தாயி ! அப்புடித்தான் அப்புடித்தான்! கொஞ்சங்கொஞ்சமா எறங்கி வா! வா!"

"ச‌ரி! ச‌ரி! என்ன‌ய என்ன‌ தான் செய்ய‌ சொல்லுற‌?"

"நாளொரு பதிவுங்குறத வாரம் ஒரு பதிவுன்னு மாத்தினா போதும்! பல பேரு உசுரு தப்பிரும்! அத‌யும் ஞாயித்து கெழ‌ம‌ போட்டீன்னா ஒன‌க்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து! "

"ஏன்? ஏன்??? "

"ஒரு தொலை நோக்கு பார்வை தான்!இஃகி!"
[ஆயிர‌த்தோட‌ ஆயிர‌த்தொன்னாயிடும் பாருங்க‌! வெட்டோட‌ ஆழ‌ம் கொஞ்ச‌ம் க‌ம்மியா தான் ப‌டும்!தப்புச்சுருவா!]

"நீ ஏதோ சொல்லுறேன்னு தானே த‌விர‌ ப‌ய‌ங்கிய‌மெல்லாம் ஒண்ணுங்
கெடையாது!லேசா ஒத‌றுது!ப‌ட‌ப‌ட‌ப்பு அம்புட்டு தான் ச‌ரியாப்போயிரும்!"

"அப்பாடா! பதிவர்கள் தர்ம அடியிலயிருந்தும் கொலவெறியுல[கவனிக்க‌] இருந்தும் இவள காப்பாத்துறதுக்குள்ளேயும்!"

"எழுதுற‌துக்கு ச‌ர‌க்கு இல்லையின்னு எல்லாம் நென‌ச்சுக்காத‌! தெக்க‌த்தி பொண்ணு தெரியுமுல்ல‌!"

"ஏய்! உன‌க்கு அவ்வ‌ள‌வு தான் ம‌ரியாத‌! தூங்கு பேசாம‌! என்னா சின்ன‌ புள்ள‌ த‌ன‌ம்!@#$%^&*"

"சாமிக் குத்த‌மாகாது?"

"எழுதினாத்தான் சாமி வந்து குத்தும்!"

"யாரு சொன்னா?"

"சாமி தான்!"

"சாமியே சொல்லிட்டா......ரா......?அப்பச் சரி!!"

பங்கேற்றோர் : கயல் மற்றும் கயலின் மனசாட்சி

குறிப்பு :‍-
பிரியா & கார்க்கி! ஒரு வீராவேசத்துல உங்களயும் இழுத்துட்டேன்! மன்னிச்சிடுங்க!

Tuesday, January 5, 2010

துளிரத் துடித்த மரம்

வசந்தம் வர காத்திருந்த மரம்
இன்னொரு இலையுதிர் காலத்தை
ஏக்க‌த்தோடு எதிர் கொண்டது

காற்றை மட்டுமே உண்டு
வாழக் கற்றுக் கொண்டது ‍- அந்த
பாலை நிலத்து மரம்

தண்ணீர் வெறும்
தீர்த்த துளிகளாய் மட்டும்
எப்போதாவது
சாங்கியம் கருதி
உறிஞ்சிக் கொண்டன
சோர்ந்து கிடந்த வேர்கள்

சார‌லோடு ஈர‌ம் ம‌ண‌க்கவே,
நெடுநாள் ப‌சி தீருமென
சுவை அரும்புகளை
தூசி தட்டி
திசுக்களை எல்லாம்
தீண்டி எழுப்பியது

நாளை முத‌ல் த‌ளிர்கள்
துளிர்க்க‌க் கூடும்
'த‌யாராயிரு!'

பட்டுப் போன‌து போக‌
ப‌ச்சை வெட்டிய‌
க‌ணுக்க‌ளுக்கெல்லாம்
மூட‌ப்பட்டிருந்த
'ப‌ச்சைய‌த் தொழிற்சாலை'
ப‌கிர‌ங்க‌ அறிவிப்பு செய்த‌து

த‌ட‌புட‌ல் ஏற்பாட்டிற்கிண‌ங்க
ம‌ழையும் வ‌ந்த‌து
பேயென‌ பெய்த‌ ம‌ழை
பெய‌ர்த்துப் போன‌து
வேர்க‌ளோடு சேர்த்து
க‌ணுக்க‌ளின் ந‌ம்பிக்கையையும்!

Monday, January 4, 2010

காலச் சக்கரத்தின் கழன்ற அச்சாணிநிச்சயமற்ற விடியல்களில்
வாழத்துடிக்கிற மனம்
பொழுது விடிந்தபின்
சோம்பிப் போகிறது!

மை தீர்ந்த பேனாக்களை
நம்பி வரிசையில் நிற்கும்
எண்ணக் குவியல்கள்!

எது சரி?
எது தவறு?
உள்ளது உள்ளபடி
சீர்தூக்கிப் பார்க்கும் மனச்சாட்சி
குறைகளை முன்வைக்க
ஏனோ பின்வாங்குகிறது!

உள்எழும்பி உதடு வரை வந்த
வார்த்தைகளெல்லாம்
சத்தமின்றி பெருமூச்சாய்
உருவகமெடுக்கிறது!

சோறா? மானமா?
சோறெனச் சொல்லும்
தைரியமின்றி
மானமெனச் சொல்லும்
தெளிவுமின்றி
தன்மான தராசு
இங்கும் அங்கும்!

சேர்ந்து சிரிக்கவரும் தோழமை
அழும் நேரத்தில் அண்டுவதேயில்லை!

இமைகளை மூடிவிட்டால் ....
உலகமே எனக்காய்
நின்றுவிடும்!
நெருக்கடியான சாலையி்ன் நடுவில்
சோதித்து பார்க்கிறேன்!
இந்த பூனையின் பாமரத்தனம்
வசவுகளுக்கு நடுவில்!

காலம் தாழ்த்தி ‍நான் தரும்
காணிக்கை முத்தங்கள்
காலதேவனின் சன்னதியில்
வேண்டாத பங்க‌ளிப்பாய்.....

Sunday, January 3, 2010

கற்றது கைம் மண்ணளவு


"கல்லாய் மரமாய் காடுமே டாக 
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்."

க‌ண்‍‍ணதாசனின் சத்தியமான வரிகள் இவை. மாற்றம் எல்லா தரப்பிலும் அங்கீகரிக்கபடுகிறது. மொழியெனும் போது கூட சொற்களஞ்சியம் விரிவாக்கப்படுவது மேன்மையான விசயம்.அறிவிய‌ல் சொற்க‌ள் ப‌ல‌ ந‌ம்மிடையே த‌மிழில் உள‌வும் போது ம‌கிழ்வோடு செவிம‌டுப்ப‌து இய‌ல்பாகிப் போயிற்று.இதில் புதியன புகுதல் சரி, பழையன கழிதல் எனபது மொழியின் வனப்பை பொருத்தமட்டில் வருத்தமான விசயம்.

எங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்தில் தோழி ஒருத்தி உண்டு. பெரியாரின் கொள்கைக‌ளோடு வாழும் ஒரு வீராங்கணை,அவள் செய்யும் எல்லா செய‌லும் சிற்சில‌ முர‌ண்பாடுக‌ள் கொண்டதும், தேவையற்ற மூட நம்பிக்கைகளை களைவதும் என, கொள்கையை வாழ்க்கையில் கடைபிடிக்கும் தீரமிக்க பெண்மணி.அத‌னாலேயே அவ‌ளோடான‌ நட்பு இத்த‌னை வ‌ருட‌ம் நீடிக்கிற‌து என்ப‌து த‌னிக்க‌தை. யாரும் பண்ணாத அளவுக்கு சீர்திருத்த திருமணம் என்பது அவளின் இலக்கு.

ஒரு நாள் சட்டென,"இராகு கால‌த்துல‌ க‌ல்யாண‌ம் பாத்துருப்பீங்க‌. ஆனா நான் என்னோட‌ திரும‌ண‌த்த‌ மார்க‌ழியில‌ வைக்க‌ போறேன்டீ." என்றாள். அவள் இப்படி‌ சொன்னது, இந்த மாறுத‌ல் ப‌ற்றி யோசிக்க‌ தூண்டிய‌து.எங்க‌ள் ப‌குதியில் மார்க‌ழி மாதத்தில் திரும‌ண‌ம் என்ப‌து கூடாது என‌வும், ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்ய‌ அது ஏற்ற‌ மாத‌ம‌ல்ல‌ என்றும்,அது பீடை மாதம் என்றும் ஒரு வ‌ழ‌க்கு இருக்கு. அதை முறிய‌டிக்க கொஞ்சம் அல‌சுன‌துல ப‌ல ருசிகர த‌க‌வ‌ல்க‌ள்.

"பீடுடைய மாதம் மார்கழி" ‍‍‍
பீடு = சிறப்பு‌, பீடு ம‌ருவி பீடையான‌தால் மார்க‌ழியின் சிற‌ப்பு அப்படியே திரிந்து போனது. திருவெம்பாவை,திருப்பாவை,திருப்பள்ளியெழுச்சி எல்லாம் பற்றி சொல்லி மார்கழி "பீடு" உடைய மாதம் என விளக்க வேண்டியதாயிற்று.

இது போலவே,
"ச‌னி நீராடு" ‍கிழ‌மை குறித்த‌ வ‌ழ‌க்கு அல்ல‌.
நீரின் த‌ண்மை குறித்த‌ வ‌ழ‌க்கு.
ச‌னி நீர் = குளிர்ந்த‌ நீர்/த‌ண்ணீர்

'படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்பது போல இந்த திரிபு சொற்களால் பொருளே மாற்றி அர்த்தம் கொள்ளப்படுவது வேதனையான விசயம். சரி,'படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்று ஏன் வந்துச்சு? அது வேறொண்ணும் இல்ல, இப்போ இருக்க இசையமைப்பாளர்கள் போல, அந்த காலத்துல ஒரு நாடக கலைஞன் இருந்தானாம். அவ‌னுக்கு சொற்க‌ளைக் காட்டிலும் ச‌ந்த‌மே பிர‌தான‌மாம்.மகா பாரத்துல,பீமனின் வீரத்த சொல்லும் ஒரு வரி அவனுக்கு ரொம்ப தலைவலியா இருந்துச்சு. விடுவானா நம்மாளு?

"நூறானை பலம் கொண்ட
பீம‌ ம‌க‌ராசா ம‌ர‌த்தப் புடுங்கினானே....."
இந்த வரிக்கு ஒரு 'நச்' இல்லையேன்னு சொல்லி,
ப‌டிச்சான் இப்ப‌டி...

"பீம‌ ம‌க‌ராசா ம‌ர‌த்தேப்பூ ம‌ர‌த்தேப்பூ
டிங்கினானே. டிங்கினானே."

இந்த‌ விள‌க்க‌ம் பாம‌ர‌த்த‌ன‌மாவும் நாக‌ரீக‌மில்லாம‌ல் இருந்தாலும் சொல்ல‌வ‌ரும் உண்மை க‌ச‌ப்பான‌து. தொன்மையான சொற்கள் உண்மையில் தொலைந்து போயிற்றா? இல்லை வேருஉ கொண்டு உலவுதா? சிந்திக்கையில் வருத்தம் மிக்க பதிலே வந்தது.

சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் மேத்தாவின் கலைஞர் பற்றிய‌ நினைவுகூறல் ஒன்று அருமையாக இருந்தது. விதவை என்ற சொல்லில் கூட பொட்டிட[அந்த வார்த்தையில் ஒற்று எழுத்து இல்லை] முடியவில்லை என்பன போன்ற ஒரு வளர்கவியின் கவிதையை மேற்கோளிட்டு பேசியதாகவும், பதிலாய் கலைஞர், " விதவை என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. வடசொல்,ஆகையினாலே இந்த தவிப்பு. அதற்கு இணையான தமிழ்ச்சொல் ‍கைம்பெண் என்பதாம். இதில் இருமுறை பொட்டிடபட்டிருக்கிறது.தமிழர் மாண்பு வார்த்தையில் தெரிகிறது" என்றாராம்.

பட்டப்படிப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தும் என் தாய்மொழியின் ஆளுமை என்னுள் மிகவும் குறைவே. மற்றமொழிகளை கற்றதன் பயனாய் தமிழின் சுவை புரியலாயிற்று. பிறமொழி ஆதிக்கமின்றி கவிதை(!) படைப்பதை பழக்கமாக்க வேண்டும் என்ற கருத்தில் வெற்றி கொண்டதாய் ஒரு உணர்வு. இல்லாதிருப்பின் மன்னிப்பீராக.இனியேனும் முய‌ல்வேன் என்று ந‌ம்புவீராக‌!

"கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்.
எறும்புந்தன் கையாலெண் சாண்."

வ‌ள‌ர்க‌ த‌மிழ‌ர் மாண்பு! ஓங்குக‌ செம்மொழி புக‌ழ்!


Friday, January 1, 2010

ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு!

வணக்க‌முங்க! நெம்ப நாளாச்சா இடுகை எழுதி அதேன் ஒரு வாட்டி எழுதி பாக்கலாமுன்னு! ஆர்வக் கோளாறு! இப்ப மட்டும் மன்னிச்சுக்கோங்க மக்கா! (இல்லையினா மட்டும்) திட்டுறது கேக்குது! விடுங்கப்பா அரசியல்ல இதெல்லாம் சகசமுங்க! தலைப்ப பாருங்க இப்போ திருப்தியா?


பக்கம் 1:

உன் பெண்மையின்
வைராக்கியத்தை கொஞ்சம்
உன் கண்களுக்கும்
சொல்லிக் கொடு!

உன்னை விட்டுப் பிரிகையில்
உன் உதட்டுக்கும் கண்ணுக்கும்
செய்கை அலைவரிசை
ஒத்துப் போவதே இல்லை!

பட படக்கும் இமைகளில்
பரிதவிக்கிறதடி
எனக்கான உன் காதல்!


*******

பக்கம் 2:

உறவுகள் ஒவ்வாமை
அயர்ச்சியில் துவல்கிறேன்
ஆதரவான நண்பன் நீ!
காதலெனும் வேண்டுதலோடு!

********

பக்கம் 3:

சருமத்தில் மினுமினுப்பு
கண்களில் ஒளிவெள்ளம்
இதழோர புன்னகை!
இப்படியாக
காதலின் பரிமாணங்கள்
ஆடியில் பிம்பமாய்...
காதலன் முகம் தவிர!

********

பக்கம் 4:

அலையும் வ‌ரை அலையவிடு
எங்கே போய்விடும்
அலைந்து விட்டு திரும்பி வரும்
காதல் கொண்ட மனம்!

*******

பக்கம் 5:

சொல்லால் சாதிக்கப்படாததெல்லாம்
காதலி கண்ணால் சாதிக்கப்படும்
காதல் அகராதியில்!

*******

பக்கம் 6:

செத்துவிடலாம் என்றிருக்கிறேன்
எக்காளமிடுகிறது மன‌ம்
காதல் வந்தபின்
சாவதில் இது எத்தனையாவது முறை?

*******

பக்கம் 7 :

சுளிப்பும் பழிப்பும்
சுற்றம் தந்த வெறுப்பும்
கதறி ஓய்ந்த கண்களும்
சீதனமாய் தாங்கி
மணமக்கள்
நிறைவேறிய காதலாம்!

*******

பக்கம் 8:

கனவு வரம் தந்த
தேவதை நீயெனக்கு!
வாழ்க்கை தந்து ஏன்
வரங்களை சாபமாக்கினாய்?
தேவதையாகவே இருந்திருக்கலாம்!

*******

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!