Saturday, April 18, 2015

மரம்

சென்ற ஆண்டு நாட்குறிப்பில் எழுதியிருந்தேன் இந்த வரிகளை....

உங்களுக்கும் மரங்களுக்கும் இடையே ஆன உறவு முழுமையானதும், உடனடியானதும் ஆகும். அவையும் நீங்களும் நண்பர்கள். எனவே நீங்கள் பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன். நீங்கள் அங்கே அழிப்பதற்காக இல்லை எனவே அவற்றுக்கும் உங்களுக்கும் இடையே அங்கு சாந்தி இருந்தது.

- ஜே.கிருஷ்ணமூர்த்தி

இப்போது படிக்க நேர்ந்தது...என்ன மாதிரியான உணர்வென்று தெரியவில்லை. நாளை மலரவிருக்கும் செம்பருத்திக்கென இப்போதே குதூகலிக்கிறது மனது. கூடவே மூங்கில் தோப்பும் பாம்புகள் அடர்ந்திருந்த என் கிராமத்தின் நாவல் மரங்களும் மந்திகள் சூழ் ஆலமரங்களும் நினைவில் வந்து மீள்கின்றன.

நீண்ட ஒற்றையடிப்பாதை. நெருஞ்சி முள்ளும் கற்றாழைச் செடிகளும் கூடவே அனைத்து கொடிய ஜீவராசிகளும் வாழும் அந்த கண்மாய் கரையின் ஒரு புறம் நெல்வயல்களும் மாமரங்களும் புதர்களும், மறுபுறம் அகண்டு விரிந்திருக்கும் நீர்ப்பரப்பில் கோரைகளும் தாமரையும் கொட்டிக் கிழங்குகளும் இன்னபிற பசும்செடிகள் விரவி, துள்ளும் கெண்டைகள் அவற்றுக்கென வந்திறங்கிய கொக்குகள்,நாரைகள் ஒருசேர காலையில் கிழக்கிலுதிக்கும் சூரியனைப் பார்க்க அத்தனை பிடிக்கும். சோம்பல் முறித்தவாறே வேப்பங்குச்சிகள் சகிதம் கோவணப் பெரிசுகள் ஏர் கலப்பையோடும் மாடுகளோடும் வயலுக்குப் போவதைப் பார்க்க முடியும்.

கண்மாயின் ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு பெயரிருக்கும். சின்னமடைக்கும் பெரிய மடைக்கும் இடைப்பட்ட கரை வளைவில் நாவல் மரமொன்று இருந்தது. பெரிய மரம். பொந்து விழுந்த மரம்.கிளைகளை வெட்டிய தடமிருக்கும். கணுக்களாய் ஆங்காங்கே உடைந்த தந்தமென தளிர்த்திருக்கும் ராட்சச கனிமரம். கண்மாயின் நீர் நிறைந்த நாட்களில் மரப்பொந்து பாதி மறைந்து ஒரு குகை போல இருக்கும். நூற்றாண்டு மரமது.. கிளைபரப்பி நிழல் நிறைந்து சகலருக்கும் தஞ்சமளிக்கும். பலநேரங்களில் குளித்துவிட்டு உடைமாற்றும் மறைவிடமாக பெண்களுக்கு அம்மரமிருந்தது.

ஏகத்துக்கும் கதைகள் உண்டு அந்த மரம் குறித்து.என்னைக் காட்டிலும் பெரிய அக்காக்கள் அப்பத்தா கதைகளை புறந்தள்ளினாலும் பொய்களால் இன்னும் மெருகேற்றி கேலிக்கதைகளாக்குவார்கள்.அப்படியொன்று இந்தக் கதை. பெருந்தனக்காரனொருவனின் திருட்டுச் சொத்து அங்குதானாம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. யட்சிணிகளை ஏவி கருநாகங்கள் காவலுக்கு வைத்துவிட்டார்களாம். பில்லிகாளி எனும் எங்களூர் சாமியாடியின் மந்திரக் கயிறைக் கட்டிக் கொண்டு தானாம் அம்மரத்தை வெட்ட முடியும். பெண்மக்கள் தூமையின் நாற்றம் பட்டால் பாம்புகள் ஊருக்குள் வந்திடுமாம். ஆகவே விலக்கு நாட்களில் அங்கெல்லாம் பெண்கள் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

நீர் நிறைந்திருக்கும் நாட்களில் அம்மரம் நன்கு செழித்து பெரும் அச்சத்தை தரும். அந்த மரப்பொந்தின் தோற்றம் மிகுந்த அச்சுறுத்தலைத் தரும். ஆனால் கொளுத்தும் கோடையில் நீர்வற்றி நிழலுக்கென அங்கு புகலிடமேகும் சகல ஜீவராசிகளில் அவ்வப்போது நானும் அடக்கம். மரகதமும் நானும் என் தம்பிகளும் அங்கெல்லாம் விளையாடியிருக்கிறோம். ஆடுமாடுகளோடு அங்கிருக்கும் சுள்ளிகள் பொறுக்கும் பெரியவர்களும்  அந்த மரப்பொந்து பற்றி கதை கதையாய் சொல்வார்கள். கதைகளில் வரும் அரக்கனை உருவகப்படுத்த பெரும் இரைச்சலுடன் அந்த நாவல் மரம் அசைந்து நடப்பதாய் கற்பனை செய்து பயந்திருக்கிறேன். பின்னொரு காலத்தில் சாலை அமைக்கவென அந்த மரத்தை வெட்டிவிட்டார்கள். மரத்தை வெட்டும் போது அந்தப் பொந்துக்குள் என்ன கிடைத்தது என்று கேட்டேன் தம்பியிடம். வெறும் பாம்புக்குட்டிகளாய் இருந்ததாம். பாவம் தாய் நாகங்கள் இரை தேடப் போயிருக்கும். ஏனோ வெட்டுப்பட்ட மரம் கொஞ்ச நாட்கள் நினைவில் இடறிக் கொண்டேயிருந்தது. காடும் கழனியும் பிணைந்து கிடந்த அந்த கிராமத்தில் மரங்களும் எங்களுடனே வாழ்ந்தன.

காலை குளியலுக்குப் பின், ஆலமரமொன்றின் அடிவேரில் விபூதி தொட்டு வைத்து விழுந்து கும்பிடும்  தினசரி வழக்கத்தை அய்யா வைத்திருந்தார். மரம் தான் அவரின் கடவுளாயிருந்தது. எனக்கும் தான். ஊருக்குள் செல்ல அப்போதெல்லாம் கண்மாய் கரைவழி நடப்பது குறுக்குப்பாதை. உச்சி வெயிலுக்குள் சுருண்டு, இளைப்பார நினைக்கையிலே நிழல் தந்து வாஞ்சையாய் குளிர்விக்கும் அந்த ஆலமரம் எப்போதும் அய்யாவை நினைவுறுத்தும். குரங்குளும் நாகப்பாம்புகளும் மைனாக்களும் செம்பூத்துக்களும் குயில்களும் வாசம் செய்யும் அவ்விடத்தில் ஆலமரங்கள் இருபுறமும் பிணைந்து கொண்டு நிழற்குடை போலிருக்கும். அச்சமும் பக்தியும் பாசமும் இது என்னிடமென்கிற பலமுமாய் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும்  ஒரு அலாதி சுகம்.

இந்த நிழலும் மரங்களும் என் பால்ய காலத்துக் கதை.இருபத்தைந்து வருடப் பழசு. ஆனாலென்ன மரங்களோடும் பசுமையோடும் கைகோர்த்து வாழும் இக்கலையை நான் அங்கிருந்தே கற்று வந்தேன்.

இப்போது நூற்றாண்டு கண்ட மரங்களுமில்லை.  நிழலுக்கென ஒதுங்கும் ஜீவராசிகளுமில்லை. மூங்கில் புதர்களும் ஆலமர விழுதுகளும் கட்டி வைத்திருந்த நீர்ப்பரப்பின் ஊற்றுக்கண் அங்கே தானிருக்கும். ஏதோவொரு மரத்தின் வேருறிஞ்சி நிழல் தரட்டும்.

Friday, April 17, 2015

ஆதியடிமைகள்

வசந்தசேனையின் முத்துப்பல்லாக்கில்
இரண்டாமடுக்கு கானகப் போரில்
கைபற்றிய முத்துகளாலானது
மூன்று நான்காம் அடுக்குகள் 
ஏதோவொரு தீவிலிருந்து
திருடப்பட்டது
கொள்ளையர் உபயம்
முதலடுக்கு உப்புநகரத்தில்
முதலையின் வியர்வையில்
பழுத்தது
மார்தொடும் ஆரமோ
முகலாய அரசிகளிடமிருந்து
பெற்றதாம்
வளை முத்துக்கள்
இடை முத்துக்கள்
காதணி முத்துக்கள்
விரலணி முத்துக்கள்
ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கதை
பன்னெடுங்கால வரலாறைச்
சுமப்பதெனவே
பெருமிதங் கொண்டனர்
தூக்குத் தூக்கிகள்
பல்லக்கு நிரந்தரம்
முக்காடிட்ட பேரழகிகள்
மாறிக்கொண்டேயிருக்கிறார்கள்
எல்லோருக்கும் ஒரே பெயர் தான்
வல்லமை மிக்க சமூகம்
நீந்திக் களிப்பதற்கும்
அவர்தம் குலவிளக்குகள்
காறி உமிழ்வதற்கும்
ஆதியடிமைகள் அவசியம் தானே?
பெண்ணுடல் மீது
ஆணாதிக்கம் தன் வக்கிரத்தை
புகழாய்
காமமாய்
வர்ணனையாய்
இரட்டுற மொழிதலாய்
இன்னும் பிறவாய்
பதித்துக் கொண்டே தானிருக்கிறது
புகழ் மிகுத்தது தன்னுடல்
வெகுமதிகள் முத்தென்று
மின்னி மறைகிறது
இளக்காரப் புன்னகை
அவள் முகத்தில்
தன்னிடமிருக்கும் சுதந்திர மனதை
கொய்திடவல்ல காதலுடைத் தலைவன்
இன்றுவரை பிறக்கவில்லையென்றே
செறுக்குடன் இறக்கிறார்கள்
தொன்மரபின் வசந்தசேனைகள்

Thursday, April 16, 2015

செய்தீ

குதறிக் கொண்டிருக்கும்
வெறிநாயின் பற்களில்
சிக்குண்ட சதை
முன்னொரு காலத்தில்
மயிர் மழித்து 
திரவியங்கள் பூசி
வழவழவென
அழகியுடல் தாங்கி
வீற்றிருந்த வெண்ணிற தந்தம்
உறுப்புகள் சிதறிக்கிடந்த
புதர் நடுவில்
நங்கையவள் சிதையுண்ட
சிகை
கூட்டமாய் வந்திறங்கி
கூச்சமின்றி புணர்ந்து
சாட்சிகள் ஏதுமின்றி....
சில மதுக்குப்பிகள்
சில வெண்சுருட்டு
மீந்து கிடந்த நொறுவகைகள்
கொண்டாட்டத்தின்
அடையாளங்கள்
அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுதான்
அவருக்கு ஏதாவது சிக்குமாவென்று
தேடிக் கொண்டிருக்கிறார் அதிகாரி
காணொளி செவ்விக்கு
கறைவேட்டிகள் வரிசை
நள்ளிரவு வேலைக்குச் சென்றது
குற்றமென நீளும் ஈயவாதிகள்
புறநகர் தாண்டியொரு
பன்னாட்டு நிறுவனத்தில்
இல்லாத வசதிகளுக்கென
எறும்பாய் உழைக்கும்
அபலை சார்ந்தவெளி
வேரற்று தள்ளாடுகிறது
இன்னமும் வீட்டிற்கு வராத அம்மாவுக்கென
காத்திருக்கும் மகளிடம்
வயோதிகத்தில் தடுமாறும் பெற்றவர்களிடம்
காதலுடன் காத்திருக்கும் கணவனிடம்
எப்படி சொல்வது
வல்லூறுகள் கூறுபோட்ட
வசந்தியின் முடிவை?

Saturday, April 11, 2015

குறுங்கவிதை

மித்தைகள்
மினுங்கும் 
மிதவையுள்
மாயை 
முத்தீ
மாழை
மயங்கும்
மந்திரக் களி
மணம்

*****


கின்னரத் தும்மலில் 
முயலொன்று பயந்து
எறும்பின் சாரை
சிதைத்து விரவியதில்
பற்றிக் கொண்டது காடு....
தீயோவென்று பதறிய மேகங்கள்
மழை பொழியும் போது
ஏகுமிடமற்ற எறும்புகள்
என்னவாகும்?????
*******

தான்தோன்றி

சுழலும் மின்விசிறியை பார்த்தபடி நான்கு சுவர்களுக்குள்ளான வாழ்க்கை.
முடக்கி போடுபவர்களை எதிர்த்து ஏதும் செய்யாது முடங்கிப் போனேன் என்பதே வலியாக இருக்கிறது.
பிரச்சினைகள் தலைவிரித்து ஆடும் போது எப்படி கொட்டாவியுடன் தூக்கம் வருகிறதுனக்கு என்கிற தோழியின் கேள்விக்கு குழறலாய் பதில் சொல்லி தூங்கிப் போகிறேன்.
எவர் அக்கறையும் பிடிப்பதில்லை.
எவர் உதவியும் சமயத்தில் கிடைக்காத காரணத்தாலே எவரிடமும் எதிர்பார்ப்பில்லை இப்போதெல்லாம்.
சில நேரம் என்போலான எந்திரங்கள் இப்படித் தான் பழுதாகும்.
மீண்டு வர என்ன வழி?
பிடித்த விசயங்களைத் தேடிப் பிடித்து படிப்பதும் சமைத்து ருசிப்பதும் பிழைப்புக்கென எல்லா சாத்தியங்களையும் கண்டடைவதும் இப்போதெல்லாம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறேன்.
சரி செய்து மீண்டும் பிழைப்புக்கென முடுக்கிவிடும் மிகப் பெரிய பொறுப்பும் என்னிடமே வரும்.
ம்ம்...
தான்தோன்றிப் பெண்.
இந்த சொலொன்று தைத்து தான் இத்தனை தூரம் வந்திருக்கிறேன்.
தான்தோன்றிகளை சுயம்பென்று கொண்டாடுங்கள். பழிக்காதீர்கள்.
எங்களைப் போன்ற எவருமற்றவர்கள் தான் சுயசார்புடைய
தன்னம்பிக்கை பெண்கள்.

Sunday, April 5, 2015

காணி நிலம்

கொஞ்ச நாளாவே இயற்கை விவசாய பைத்தியம் முற்றிவிட்டது. விழித்திருக்கும் இரவுகளில் ஒருங்கிணைந்த விவசாயம் குறித்த ஆராய்ச்சிகள் தான். பெரும் ஆய்வுக் கட்டுரை எழுதுமளவு மனதைத் தயாரித்திருக்கிறேன். கணினித் துறையும் அதிலிருக்கும் நிரந்திரமின்மையும் இப்படி நெட்டித்தள்ளியதெனலாம். அப்பத்தாவைப் போல் ஆச்சியைப் போல் அமைதியாக நாட்களை ரசிக்க வேண்டிய பேராவலாய் இருக்கக் கூடும். அவர்கள் உயிருடன் இருந்தால் இப்படியான எண்ணங்கள் என்னுள் எழா வண்ணம் அறிவுரை மற்றும் பேருரைகளை நிகழ்த்தியிருப்பார்கள். அவர்கள் காணாத உலகத்தை உயரத்தை நான் தொட வேண்டுமென்றும் அது படிப்பால் சாத்தியமென்றே ஊட்டி வளர்த்தவர்கள். ஆனால் ஏனோ சேற்றில் கால் வைத்தே வாழ விருப்பப்படுகிறது மனம்.
ஒரு பசுஞ்செடியின் துளிர்ப்புக்கு அத்தனை கொண்டாடும் இம்மனதை வைத்துக் கொண்டு பொருளாதாரத்துக்கென போராடும் நடுத்தரவாசியாகவும் வாழ வேண்டியிருக்கிறது.
ம்ம்...
கனவுகள் கனவுகள் தான். சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகளின்றி ஆழ்மனத் தூண்டலில் விளையும் கனவுகள். சில கவிதையாகவும் சில ஓவியமாகவும் உருப்பெற்றது போக மீந்திருக்கும் ஒரு கோடிக் கனவுகள். மிதிவண்டிச் சக்கரத்தில் நகர்கிறேன் தான் ஆனாலும் கனவுகள் மட்டும் ஆகாயவிமானத்தில் பயணிக்கின்றன.காதுமடல் பிடித்து நிகழ்வுக்கு அழைத்துவரும் பணி கணவனிடத்தே எப்போதும் தொடங்கும்.
இதோ அழைப்பொலி ..
‘ஏய்... குழம்பு கொதிச்சிடுச்சு பாரு’
இப்போதைக்கு இந்த வரிக்குள் மூழ்கி பாரதியாய் மாறிவிடுதல் சாத்தியமே...
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
- நிகரில்லா மாமணி பாரதி
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!