Sunday, December 30, 2012

நேயமிகு எதிரிக்கு....

எனக்கும் அவனுக்கும் 
யாதொன்றிலும் 
கருத்தொற்றுமையில்லை 
எனக்கு ஆத்திகமென்றால் 
அவனுக்கு நாத்திகம் 
நான் பாரம்பரியமென்றால் 
அவன் நவீனம் 
இசையெனில் 
எனக்கு மெல்லிசை
அவனுக்குத் துள்ளிசை 
நான் ஆதிக்கத்தை வெறுப்பவள் 
அவனோ ஆணாதிக்கவாதியென்று 
முழங்கித் திரிபவன் 
இலக்கியத்திலும் கூட
சங்கத்தமிழென்றால் 
பின்நவீனத்துவமென்று...

நாங்கள் இருவேறு துருவங்கள்

காதல் காமமென்ற 
சராசரிகளில்லை 
பாலின பேதமென்பதேயில்லை 
தர்க்க மேடையே
எங்களின் இணைவுப் புள்ளி 

சமூகப் பார்வையில்
புரிதலில் 
ரசனையில்
ஏதொன்றிலும் 
சமரசமில்லை

எனக்கான பாசமோ பரிதவிப்போ மெனக்கெடல்களோ 
ஏதுமில்லாத நேயமிகு எதிரியென்று 
உற்சாகமாயிருந்தேன் -ஏனெனில் 
அன்பில் அதீதமென்றால் ஒவ்வாமையெனக்கு 

சலித்துக் கொண்டாலும் 
சிடுசிடுத்தாலும் 
திட்டித் திருத்தினாலும் 
எல்லாப் புலம்பலும் 
அவன் முகவரிக்கே

காதல் கடிதங்களிலிருந்து 
காதலன் முத்தம் வரை 
சொல்லிச் சிரித்து 
கைவசமிருந்த கொஞ்சமே கொஞ்சம்
ரகசியங்களையும் காலி செய்தாயிற்று 
எதிரியிடம் சொல்வானேன் 
யோசிக்கவேயில்லை 
அவனும் தான்
அத்தனை இயல்பாயிருந்தது 
உரையாடல்களனைத்தும்

வெற்றியின் மீது வெறியவனுக்கு 
தோல்விகள் பிடித்தமில்லையாயினும் 
அவனுக்கெனச் சிலமுறை 
என்னையுமறியாமல்...

என் சின்னதொரு தோல்விக்கு
அவன் ஆதங்கப்பட்ட
அக்கணம் சபிக்கப்பட்டது 

நண்பர்களென்றுணர்ந்தோம் 
பிரிந்து விட்டோம் 

அய்யோ!
கேட்க மறந்துவிட்டேன் 
எந்த அட்சரேகையில் அவன் கலம் 
பயணிக்குமென்று...
நேரெதிர் திசையில் 
தொடங்க வேண்டும் நான் 

உன் கோட்பாட்டை மாற்றியெழுது கலிலியோ
பூமி தட்டையாகவே இருக்கட்டும்!

Saturday, December 29, 2012

பலியின் விமரிசை விருந்தென்றறிக

மஞ்சளும் உப்பும் தோய்த்த
இறைச்சித் துணுக்குகள்
தோரணம் போல் கட்டப்பட்டிருக்கின்றன
காக்கைகள் அணுகாதவாறு
பெரியதொரு கழியுடன் காவலுக்குப் பெரியம்மா
தோலும் குடலும்
கத்தி பிடித்தவன் கூலிக்கு எடுத்துக் கொண்டான்
நான்கு கால்களும்
ஒரு தலையும்
நெருப்பில் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது
அம்மாவோ சித்தியோ
இரத்தத்தைப் பொரியல் செய்கிறார்கள்
அத்தைகள்
மாமிசத்தை அரிந்து கொண்டிருக்கிறார்கள்
பாக்குச் சுண்ணாம்போடு வெற்றிலையையும்
குதப்பிக் கொண்டிருக்கிறார்கள்
விருந்தினர்கள்
அமளிதுமளிபடுகிறது முன்பக்கத் தாழ்வாரம்
அரசியலும் சாதியும் மிதமிஞ்சிய சுயபிரதாபங்களும்
அலுப்புத் தட்டுகிறது
தூரத்தே சோம்பலாய் புல் மேய்கிறது
பங்குனித் திருவிழாவுக்கு நேர்ந்துவிட்ட வெள்ளாடு
இன்னொரு நாளும் இதே காட்சிகள் அரங்கேறலாம்

Monday, December 17, 2012

பிரமீடுக்குள் உறங்கும் பதில்கள்


கேள்விக்குறிகளாலொரு பிரமீடமைத்து 
உள்ளே பிரபஞ்சத்தின் பதில்களை 
உறங்கச் செய்திருக்கிறேன் 

ஐந்து 
நான்கு 
மூன்றென 
இறங்கு வரிசை 
இடுக்குப் புள்ளிகளில் 
ஒன்று உச்சத்திலிருக்கிறது 

மூலிகைச் சாற்றில் 
வளர்ந்தபடியிருக்கிறது 
பதில்களின் நகங்கள் 

பதப்படுத்தப்பட்ட 
மம்மிகளுக்குண்டான கரிசனத்தோடே 
முப்புறமும் சூழப்பட்டிருக்கிறது 
அப்பதில்கள் 

அதன் பக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும் 
ஆபரணங்களுக்காக 
எவனேனுமொருவன் நாளை 
துயிலெழுப்பலாம் மரணித்தவற்றை... 

பூர்வ ஜென்ம ஞாபகத்தில் 
பேராசைச் சிதைவுகளில் 
முளைவிடும் விதைகளுக்கு 
உரமாகியிருக்குமந்த
கேள்விகளைத் தேடத்துவங்கலாம் 

மீண்டுமொரு துவக்கம் 
அழிவுகளிலிருந்து... 

Monday, December 10, 2012

வானவெளிக் கனவுகளோடொரு மாமிசப்பக்ஷி


உயரப் பறத்தலில்
உச்சம் தொடுகிறது
உயர்சாதிப் பருந்து
தனக்கிருக்கும் பலத்துக்கு தக்கவாறு
எம்பிச் சிறகசைக்கிறது ஊர்க்குருவி
தோற்ற முயற்சிகளுக்கு
எள்ளி நகையாடுகின்றன
மனிதக் குயுக்தி புகுந்த சில மிருகங்கள்
தனக்கும் சிறகிருப்பதை
மறக்கடிக்கும் எதையும்
செவிமடுப்பதில்ல பறக்கத் துடிக்குமது
வக்கில்லாத முன்னோடிகளை
ஏறிட்டும் பார்ப்பதில்லை
ஆமாம், அதற்கெதற்கு பருந்தாகும் நிர்பந்தம்?
அது அதுவாகவே இருக்கட்டும்
வேண்டுவதெல்லாம்
வேடர்கள் கண்ணியில் சிக்காத
சுதந்திர வாழ்க்கை
பறக்கப் பறக்க
வசமாகும் வானம்
களைத்து பூமி தொடுகையில்
கண்ணுக்குப் புலப்பட
ஏதோவொரு நீர்நிலை
இரப்பை நிறைய
ஒன்றிரண்டு தானியங்கள்
மக்கிய மரத்தினையும் உபத்திரவிக்கும் புழுக்கள்
மறந்தும் பிறவுயிர் பிரிப்பதில்லையாதலால்  
மீந்த மாமிசம்
இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்
மூக்கு வியர்க்கும் வியாதிகளில்லாது
இன்னும் இன்னும்
உயரப் பறத்தலின் கனவோடு...
தூறல் நனைத்த கார்காலத்தில்
அதோ
அந்த வானவில்லை நோக்கி
அம்பெனப் பாய்கிறதந்த மாமிசப்பக்ஷி!

Saturday, December 8, 2012

பாமர பக்தி -06


உரிமையுடன் உன்னைக்
கலைத்துப் போடுகிறேன்
கிழித்தெறிகிறேன்
குதறியெடுக்கிறேன்
சபிக்கிறேன்
வசைபாடுகிறேன்
பேசத் திராணியற்று
முடிவிலுன் தோள் சாய்கிறேன்
கோபமேயில்லையா
இன்னுமேன் நீடித்து
இழுத்தடிக்கிறாயென் ஆயுளை?

பாமர பக்தி -05


கடவுளானபின்
காதல் கொள்வேனோ
என்னவோ
இப்போதைக்கு
சன்னலோர இருக்கையில் நான்
பக்கத்தில் நீ
எந்த திருப்பத்திலும்
சாத்தானாக மாறக்கூடும்
அபாயத்தில் நான்
எதற்கும் எச்சரிக்கையாயிரு!
தளரும் என்னைத் தாங்கிப் பிடிக்கையில்
எங்கேனும் கூர்நகம் பட்டவை
ஏதோவொரு மதத்தின்
சின்னமாய் உருமாறலாம்
பக்தியின் புரிதல் அப்படி...


பாமர பக்தி -04


கடவுளைத் திட்டாத
கவிஞரில்லை
மரபை உடைப்பானேன் ?
திருப்பித் திட்டாத
கருங்கல் கதாப்பாத்திரம்
வாங்கிக் கொள்ளட்டும்
படைத்ததின் பலனை
நேற்று விட்ட இடத்திலிருந்து
தொடரப் போகிறேன்...
விசுவாசிகளே விலகிச் சொல்லுங்கள்
எமக்குத் தனிமை அவசியம்

பாமர பக்தி -03


விளக்கொளி
தூபம்
சந்தனம்
மலர்கள்
இதோனோடான ஓர்மையில்
வேதங்களேதும் ஓதாது
யோகம் கைவரப் பெற்றபின்
அபத்தமான கேள்விகளுமில்லை
பதிலுக்கான
காத்திருத்தலுமில்லை
அதன் போக்கில்
ஓடிக் கொண்டிருக்கிறது
சண்டிக் குதிரை
குளம்படி யாவும்
ஒரே நேர்கோட்டில்

பாமர பக்தி -02


இருக்கிறாயா
இல்லையா
எனக்குள் பகுதறிவுசார்
கேள்விகளேயில்லை
நான் புலம்பும் போது
நீ இருந்தாய்
இப்போதைய நிலவரம்
எனக்கும் தெரியாது

பாமர பக்தி - 01


காற்றோ
நெருப்போ
விழுங்கிவிடும்
பிரித்து வைத்த
கற்பூரத்தை...
சொற்ப நேரத்துக்குள்
கடவுளுக்கு மரியாதையும்
கண்களுக்கு ஆரத்தியும்
செலவிட்ட காசுக்கு
நேர் செய்த கணக்குமாக...

Friday, December 7, 2012

சேரிகள் ஒளிபெறட்டும்

வீணையின் நாதம் 
எப்போதும் 
அரற்றும் வயிற்றோடு 
நின்று ஜெயிப்பதில்லை
ஆம்! 
பசியில் செவியுணர்வதில்லை 

சோதியா ஜோதியா 
என்பதிலெல்லாம் 
பெரிதாயென்ன வந்துவிடப்போகிறது 

அன்றாடத் தேவைகள் 
அவர் வரைவில் 
உழைப்பிற்குத் தக்க கூலியும் 
மங்கும் பார்வைக்கு 
ஒரு கைப்பிடிச் சோறும் 
பலகோடி ஒளிவெள்ளம் 
இருண்டு விட்ட குடிசைக்குள் 

சேரிகள் ஒளிபெறட்டும் முதலில் 
அதன்பின் 
கொண்டாடிக் கொள்ளுங்கள் 
அந்நிய முதலீட்டுக்கு 
அரசாங்கத் திருவிழா!

பசித்தவர்க்கு தன்னலமென்பது யாதெனில்....


பறந்து கொண்டிருக்கிறதோர்
தாய்ப்பறவை
விரலிடுக்கில் வேட்டைப்பொருள்...
அம்மாவுக்குக் காத்திருக்கும்
அன்றுதித்த பச்சிளம் பறவைகளோடு
விரிந்து தான் கிடக்கிறது
வழிநெடுகிலும்
அதன் கூட்டைப் போல்
ஆயிரம் கூடுகள்...
நொறுங்கிய ஓட்டில்
சிக்கிக் கொண்ட மெல்லிறகை
மீட்கும் பிரயத்னங்களிலிருக்கும்
தன் குஞ்சைப் பார்த்ததும்
பரபரப்போடு கூடடைகிறது அப்பறவை!
அலகால் சிக்கெடுத்து
வாய் பிளக்கும் அத்தனைக்கும்
உணவூட்டுமதற்கு
எப்போதும் நினைவில்லை
பசியோடிருக்கும் பக்கத்துக்கூடு!

கூசிப் போகும் என்னுடல்...

மீன் தொட்டி மீன்களிடம் நேசம் வைக்கிறேன் 
பூந்தொட்டியில் தோட்டம் வளர்க்கிறேன் 
படிப்பதெல்லாம் சோசலிசம் 
வாழ்வதென்னவோ அடிமை வாழ்க்கை 
சில நேரம் சீறியெழுகிறேன் 
சில நேரம் முகம் மூடி அழுகிறேன் 
சிலருக்கு மகுடியும் 
சிலருக்கு வீணையும் 
எப்போதும் உண்மையுரைக்கப் பறையோடும் 
பல்முக வித்தகனாய் 
எண்ணத்தின் வீச்சுக்களுக்கேற்ப....

சாத்தானாக வாழ்கிறேன்
கடவுளைச் சபிக்கிறேன்
மனிதர்களுக்குப் பயப்படுகிறேன்

நான் யாரென்கிற தெளிவிற்கு
நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை

எல்லா நேரத்திலும்
எனக்குப் பிடித்தமான நான்
என்பதே என் வரைவு

என் ரகசியங்கள் அமிழ்ந்து நின்ற கிணறுகள்
கடலோடு கலந்த அந்த நிமிடத்திலும்
போட்டு வைத்த கல்லில் எத்தனை சேதமென்று
கணக்கிடவில்லை
தேர்ந்தயிடம் தவறென்று மு்றையிடாது
சிரித்தபடி நகர்ந்தேன்

இப்போதும் இப்படித் தான்

பைத்தியமென்றும்
பிச்சியென்றும்
சொல்லாமல்
மனுசியென்று சொன்னால்
கூசிப் போகும் என்னுடல்...

சாத்தானாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்!

Wednesday, December 5, 2012

சொல்


எதை நோக்கிச் செலுத்தப்பட்டது
அந்தச் சொல்
உலுக்கியெடுக்கும் பிரளயங்கள்
உள்ளடக்கி
எய்யப்பட்டச் சொல்லம்பு
ஆட்டம் கண்டதென் அஸ்திவாரம்
பாவங்கள் பாவனைகளற்ற
ஆழ்மனப் பரிதவிப்போடு
பரிமாறப்பட்டதென் இலையில்...
ஆயிரம் சொல்தாங்கி
அபூர்வ சிந்தாமணி நான்
வலு பொருந்திய பதமதன்
கணம் பொறுக்காது
கலங்கி வழிகிறது கண்ணீர்
நெஞ்சமெங்கும் ஆர்ப்பரித்து
ஓடுகிறாய்
இதயத்தின் குறுக்குவாட்டு நரம்பில்
பிணைக்கப்பட்டிருக்கிறது
நின் அசுவத்தின் கடிவாளம்
அலைவுகளுக்கெல்லாம் புத்தம்புதிதாய்
வலியோடான மென்னதிர்வுகள்
தம்புராவின் மீட்டலையொத்து..
சிந்திக்கொண்டிருக்கிறது
பேரிசைச்
சொட்டுச் சொட்டாய்

Monday, December 3, 2012

நீந்தக் காத்திருக்கும் விண்மீன்


இணையும் புள்ளிகளைப் பொறுத்து
வட்டமென்றும்
சதுரமென்றும்
செவ்வகமென்றும்
அறுங்கோணமென்றும்
அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது
அதனதன்
சுற்றளவு
பரப்பளவுகளை
கணக்கிடுவதே வேலையாயிருந்தது
அளவீடுகள் தப்பிப் போய்ப்
பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன்
தேனுண்ட மயக்கத்தில்
திளைத்திருந்த அதன் மென்னுடம்பு
அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று
மந்திரப் பாயில் பயணிப்பது போல
சறுக்கியும்  தவழ்ந்தும்  விரிந்த
அதனுலகில் அலகுகளேதும்
நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை
இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில்
எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை
ஒளிபொருந்தியப் பயணமொன்றில்
விண்மீன்கள் நானென்ற  பிரம்மையிலாழ்ந்தேன்
பிரபஞ்சம் சுதந்திரமயமானது
எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும்
வடிவங்களற்ற அதனுலகம்
பிடித்துப் போய்  வாழ்க்கை முழுவதற்குமாய்
அதனோடே வாசம் செய்ய
நானுமொரு புள்ளியாய்
வாழ்ந்து மறைய
வலுவானதொரு
காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்…

நோய்க்கூறு#4

விம்மலுக்கு நடுவே 
கண்கள் சிவக்க 
கேவலும் புலம்பலுமாய் 
விரலின் தடம்பதிந்தக் கன்னத்தில் 
கோடுகோடாய் ஈரக்கோடுகள் 
சல்லடைக் துளைகளில் 
வழிந்த நேசமும் 
அப்படியும் ஏதாவது 
மீண்டதா என்கிற பரிதவிப்பும் 
ஒரு நீண்ட நெடுங்கதை... 
விழியெதிரே நடந்தேறியும்
நிகழ்வில்
அவர்தம் உலகமென்று
தேங்கிய சாலைநீர்
புடவை படாமல்
பாதுகாப்புணர்வோடு விலகிப்போகமுடிகிறது...

எனக்கு ராஜாக்கள் பிடிப்பதில்லை


’இறைவனுக்காக’
முத்தமிட்டுக் கோப்பை உயர்த்தி
பெரும் சரீரம் மெல்ல அசைய
நடனமொன்றை நிகழ்த்தினான்

பலிபீடத்தில் கிடத்தப்பட்ட
உயிருள்ள படையல்
உயிரற்றுப் பின்னடங்கியது

விருந்துக்குக் காரணமான வெற்றியில்
இறந்த எழுபதுபேருக்கும்
உயிரோடிருக்குமிவன்
ஒற்றைப் பிரதிநிதி

போதையிற் சிவந்த கண்களும்
மதுக்குடுவைத் தாங்கிய கைகளுமாய்
இந்திராதி தேவதைகள் யாவரும்
மன்னவன் சபையில்...
கச்சைகள் மறைத்த
பாகங்கள் தவிர்த்து
அத்தனையும் விருந்தினர் பார்வைக்கு
நிரம்பாத கோப்பைகளனைத்தும்
நிரம்பித் தளும்பின
கொட்டும் முழக்கங்கள் செவி நிறைக்க
மகுடம் சிரசேறியது

அதோ
அந்த மூன்றாம் அறையில்
சிப்பாயின் மனைவியை வன்புணர்கிறான்
விருந்துக்கு வந்தவன்
விசப்பற்கள் தடம்பதித்த பெருந்தனங்கள்
அவள்தம் பாலகன் சவைக்கையில்
பால் தருமா கொடும்நினைவின் விசம் தருமா?
யுத்தம் குத்தமென்பவனை
கழுவிலேற்றுங்கள்
ஆதிக்கவெறி நரம்பிலேறி
பல நூற்றாண்டுகளாயிற்று
கூனோடு எத்தனை நாள் வாழ்வது?

வரலாற்றில் ராஜாக்கள் வாழ்கிறார்கள்
தந்திரிகள் மெச்சப்படுகிறார்கள்
ஒன்றோயிரண்டோ மாவிரர்கள்
மீதமிருக்கும் சேனையிலெவரும்
வெளிச்சம் காண்பதில்லை

எதற்கென்பதில்லை
ஏனென்றும் கேட்பதில்லை
பதில் சொல்லவும் பொறுப்பிருப்பதில்லை
வன்மம் தலைக்கேறும் போதெல்லாம்
மிதிபட அடிமைகள் வேண்டும்
அரசவையில் சாமரம் வீசும்
தமக்கையின் நினைவு வர
தோற்றுப்போன விசுவாசத்தோடு
வீதியிலிறங்கினான் வெற்றிக்கு வித்திட்டவன்...

Sunday, December 2, 2012

நோய்க்கூறு#3



சௌஜன்யமாய் பழகத் தெரியவில்லை
முகஸ்துதியாய் பேசத் தெரியவில்லை
புறம் பேச கேட்க பிடிப்பதேயில்லை
ஆதாயத்தோடு எவரையும் அனுகப்பிடிக்கவில்லை
என்னுள் ஆதாயம் தேடுமெவரையும் அனுமதிப்பதில்லை
அதீத அன்பில் குழைவதும்
கண்ணுக்குத் தெரியாத அடக்குமுறைகளில்
சிக்கித் திணருவதும்
எப்போதும் உவப்பில்லை
நடக்கும் பாதையில்
எவரோடும் மோதாமல்
சிரித்த முகத்தோடு எம்மிடம்
சேர்வதே இயல்பென்றாயிருக்கிறது
என் சுதந்திரம் என்னுடன் இருக்கிறது
இதைப் படிக்கும் நீங்களெனக்கு
தாந்தோன்றியென்று பெயரிட்டால்
என் இதழிடையில் இன்னுமொரு புன்னகை பூக்கும்
மனநோயாளியென்றால் புன்னகை
சிரிப்பாய் மாறவும் வாய்ப்பிருக்கிறது...

Friday, November 30, 2012

தியாகப் பெருவெளியில்...

அகழிகள் சுற்றிப் படர்ந்த
கோட்டையின் மதில்களுக்கப்பால்
சிம்மாசனத்தில் நீ!
மானுட நேயமேதும்
சுவாசத்தில் கலக்காமலிருக்க
நரமாமிசம் தின்னும் முதலைகளை
மிதக்கவிட்டிருகிறாய்
எச்சரிக்கை முயற்சியாக...
நானாய் இறங்கி
மீனாய் மாறி
நானாகவே கரையேறுகிறேன்
நாக்கில் சொட்டும் நீரோடு
பின் தொடருமவற்றின்
பசி தீருமுன்
வாயிலைத் திறந்துவிடு
வாழ்க்கை என்பதன் அர்த்ததைக்
கற்பித்துவிட்டு
இரையாகிப் போகிறேன்
என்றேனுமொரு நாள்
தெளிவுற்ற நீ
உப்பரிகையில் என்னை நினைத்து
கண்ணீர் சிந்தலாம்
வந்தேறிய நோக்கத்தை
வரலாற்றில் வரவு வைத்துவிட்டு
கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் 
என் கவிதை!

Monday, November 12, 2012

தளும்பும் நினைவுகளும் தீபாவளி வாழ்த்துகளும்

தீபாவளி நேரம்.
ஏனோ தளும்பிக் கொண்டிருக்கிறது நினைவுகள்...

நேசமித்திரனின் Google Plus-ல் பகிரப்பட்டிருந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் உடைப்பெடுத்தது  கண்ணீர்.காரணம் இந்த வரிகள்,

”இதோ
இப்படி நீளும்
ஒரு தெருவின் இரண்டாம்
திருப்பத்தில் மூன்றாம் வீடு என்னுடையது.....”  

மெல்ல மெல்லச் சுழன்றது நினைவுகள் இந்த வரிகளின் வழியாக....

ஒரு பெரிய வாயகன்ற மண் பாத்திரம். மண்பானைக்கும் மீன்குழம்புச் சட்டிக்கும் இடைப்பட்ட வடிவிலிருக்குமது. இப்போது அது போல் கிடைப்பதில்லை. மூன்று படிப் பால் பிடிக்கும்.அது போல் இரண்டு பெரிய பாத்திரங்கள்.வீட்டுத் தேவைகள் போக மீதிப்பாலைச் சுண்டக் காய்ச்சி, ஆறவிட்டு, வேடு கட்டி, உறைக் குத்தி,சாமியறைக்குள் வைக்கும் வரை அப்பத்தாவின் முந்தானையோடு நானும் தொடர்ந்தபடியிருப்பேன். அந்த நேரங்களில் கருமமே கண்ணாய் அவள் சுழல்வதும் , மண்பாத்திரங்களைப் பதவிசாய் அவள் கையாளும் விதமும், ஊடாகச் சொல்லிக் கொண்டே போகும் நல்லதங்காள் கதையும்.. இதோ இப்போதும் நீர்க்கட்டுகிறது கண்ணில்.

“உம்பேரச் சொல்ல நானாச்சும் இருகேம்மா!” கெஞ்சும் கடைசிப் பிள்ளையை ஆரத்தழுவிக் கிணற்றில் குப்புறத் தள்ளும் நல்லதங்காள் என்னை விசும்பச் செய்வாள்.

“ஆத்தி! இப்டியாடி இருக்கது நெஞ்சொரமில்லாம? அழப்படாது! நீதியென்னா, கெட்டாலும் தமையன் வீடு செல்லப்படாது. அதத்தேன் மனசுல வாங்கிக்கனும். கோழயாட்டமா அழுவாக?” சேலைத் தலைப்பில் முகம் துடைத்துத் தூங்குவதற்கு அனுப்பி வைப்பாள்.

குசேலனும், கட்டபொம்முவும் அப்பத்தாவின் சொல்வழி அறிந்தவர் தாம். பின்பொருநாள் குசேலர் - சுதாமா எனவும் கட்டபொம்மு - சிவாஜியெனவும் பகுத்தறிந்து(!) அதில் நடித்தவர்களைப் பழைய கதையில் நிரப்பிக் கொண்டேன்.

வருடத்தில் எல்லா நாளும் ஏதாவது இரண்டு மாட்டின் சீம்பால் கிடைத்துக் கொண்டே இருக்கும்.நான்கு இல்லை மூன்று பசு மாடுகள் கன்று ஈன்று, பால் தந்தபடியிருக்கும்.கறவைக்கென வளர்க்கப்பட்ட கலப்பினப் பசுக்கள் எம்மிடம் இருந்ததாய் நினைவில் இல்லை.வெளியில் பால் விற்பதில்லை. எங்கள் மொத்தக் குடும்பத்திறகானத் தேவைக்கு மட்டுமே. அந்தப் பெரிய தொழுவத்தில் அடைக்க இடம் போதாது வைக்கோல் படல் சுற்றிலும் கல்தூண்களோடு ஆவினங்கள் பிணைக்கப்பட்டிருக்கும்.அட! எத்தனை அற்புதமானது அந்த வாழ்க்கை.

காலை விடிந்ததும், முற்றத்துத் தூணில் சாய்ந்தபடி,சிரத்தையாய் மோர்க்  கடைவாள். மத்தோடு தயிரும் தண்ணீரும் கலந்து கைகளால் முன்னுக்குப் பின் சிலுப்பித் தயிருக்கு ’மோர்’ என்னும் மற்றோர் வடிவம் தருவாள்.திரண்டு வரும் வெண்ணெய்(’மிதப்பு’ என்பது அப்பத்தாவின் சொலவடை) தண்ணீரில் போடப்பட்டு, பின்பு மற்றோர் மண்சாடியில் சேமிக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை, மதிய நேரங்களில் யார் வீட்டுக்கு வந்தாலும் மோர் தந்து உபசரிப்பது எங்கள் வழக்கமாயிருந்தது. வீட்டுக்குப் போக  மீதி களத்து மேட்டுக்குப் போகும்.அவள் புழக்கம் அவள் சார்ந்த மிக நுட்பமான வேலைகள் எல்லாமும் மண் பாத்திரங்களின் ஆளுமையில் இருந்தது.
அப்பத்தா இல்லாத வீடும் துப்புறவாய் ஒழிக்கப்பட்ட மண் பாத்திரங்களும்,ஏதோ எனக்கு வலிக்கத் தான் செய்கிறது. நானும் குழந்தையல்ல... குமரிப்பருவம் தாண்டி விட்டேன். ஆனாலும் ஆனாலும்.... குழந்தையென ஆவதற்கு எத்தனிக்கும் எல்லா நேரங்களிலும் அந்தக் கைகளின் வாஞ்சையோடு முகம் துடைக்கும் முந்தானையும் வேண்டுமெனக்கு... பாசத்துக்கு ஏங்கித் தான் போகிறேன்.

பீங்கான் தட்டுகளோடும்,தம்ளர்களோடும் புழங்கினாலும் உடைந்து போவது மண்பாத்திர மட்டுமென்பதை நினைவில் கொண்டு இழிவாய் பார்க்கும் நாகரிகம் அம்மாவுக்கும் சித்திக்கும் இருந்தது. ஆகவே, புரட்சி செய்யப்பட்ட சமையலறைக்குள் பால் காய்ச்சுவது தவிர வேறெதற்கும் அப்பத்தா பங்கெடுப்பதேயில்லை.

ஒரு வாரம் சேர்த்து வைத்த மிதப்பெல்லாம்,சனிக்கிழமையில் நெய்யாகக் காய்ச்சி விடுவாள். வரமிளகாய்,முருங்கைகீரை,உப்புக்கல், கைப்பிடி கறிவேப்பிலை எனச் சேர்த்து காய்ச்சும் அந்த நெய்யின் மணம் அலாதியானது. மீந்து கிடக்கும் மொரு மொரு முருங்கைக்கீரைக்கு அத்தனை கிராக்கியிருக்கும்.
”இப்ப முடிஞ்சிருமா? எவ்ளோ நேராகும்? சீக்ரம் அப்பத்தா. எனக்குத் தான் முதல்ல“ வாயூறப் பரபரக்கும் அந்தச் சிறுமியும்,
“உனக்குத் தாண்டி! சித்த பொறு,நெய்சாதம் உருட்டித் தாரேன் “ அடக்கி வைக்கும் அழகியிடமும் பொக்கிசமாய் எத்தனையோ இருந்தது.
இதோ இப்போது நான் அவளின் வழிகாட்டுதலினூடே தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உருகிவரும் நெய்யில் ஏதோ குறைகிறது.

முன்னெல்லாம் வீட்டு நெய்யில் தீபாவளிப் பலகாரம் செய்வது வழக்கமிருந்தது. பின்பு அதும் அரிதாகிப் போனது. அம்மாவின் Diet Conscious காரணமாயிருக்கலாம்.

பண்டிகைக்கு முதல் நாள்,முற்றத்தில் அடுப்பு மூட்டி எல்லாப் பேரன் பேத்திகளும் புடைசூழ முறுக்குச் சுடுவதில் ஆரம்பிக்கும் தீபாவளி. முறுக்குத் தனி, தேன்குழல் தனி. தேன்குழலில் தேங்க்காய்பால் சேர்ப்பாங்கன்னு நெனைக்கிறேன். சீப்புச் சீடைக்கும் இதே பக்குவம் தானென்று நினைவு. மரத்தாலான முறுக்கு பிழியும் உரல். நான் செய்றேன் நான் செய்றேன் என்றென் குரல் பெரும்பாலும் அம்மாவின் ஒரு சாத்தில் அடங்கிப் போகும். பச்சை முறுக்கு சாமிக்கு வச்சி கும்பிட்டுட்டு,
‘கயலெங்க...?’ என்று அப்பத்தா  கேட்கும் போது அடியெல்லாம் மறந்து அவள் காலைக் கட்டிக் கொண்டிருப்பேன்.

மணவோளம்(இந்த எழுத்துக் கோர்வை சரியா தெரில ஆனா இப்டித் தான் எனக்கு எழுத வருது. எல்லாம் செவிவழிக் கல்வி. உண்மையான வடிவம் கிடைக்கப் பெறல.தெரிஞ்சவங்க தவறிருந்தா திருத்துக்கப்பா)
அப்பத்தாவின் ஆளுமை ஜொலிக்கும்  இதில். நாள்ப்பட வைத்து சாப்பிடலாம்.தேங்காய்ப் பல்லும் பொட்டுக்கடலையும் வெல்லப்பாகில் ஊறிய முறுக்குமாக... செமயா இருக்கும். இப்பல்லாம் அம்மா கடையில வாங்கிடறாங்க எனக்குப் பிடிக்குமென்பதற்காக மறக்கப்படாமலிருப்பது சிறப்பு.

வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம்,அதிரசம்,வடை(ஆமவடை,உளுந்தவடை இரண்டும்), பால் பணியாரம்,மசாலா சுய்யம்(சுழியன் என்பது வேர்ச் சொல் என்றே நினைவு), இனிப்புச் சுய்யம் - இது தான் எல்லாத் தீபாவளிக்கும் எங்கள் வீட்டுப் பட்டியல். ஒற்றைப்படையில் பலகாரக் கணக்கு வரவேண்டும் என்பதற்காக இதில் ஒன்று குறைத்தோ, பஜ்ஜியை சேர்த்தோ நேர் செய்வாள் அப்பத்தா. நீளும் வேலைகளுக்கு அம்மாவிடமும் சித்தியிடமும் முணுமுணுப்பு. பார்க்க நல்லாயிருக்கும். சச்சரவில்லாத குடும்பம் என்னங்க குடும்பம்.அப்புறமென்ன ஒன்றுகூடல்?

எங்கள் வீட்டில் சாமிப்படங்கள் இருக்காது. முன்னோர்கள் வழிபாடே பிரதானம். அப்பாவுக்கும் இதே ஏற்பு.பெட்டகத்தில் சேலையும் இன்ன பிறவும் இருக்கும். தீபாவளி அன்னிக்கு காசு போடுவோம் அந்த ஓலைப் பெட்டிக்குள்.எண்ணெய் தேய்த்து குளித்து அய்யா அப்பத்தா காலில் விழுந்து விபூதி வாங்கி, புத்தாடையுடுத்தி ஸ்ரீதர் மாமாவின் கேமராவுக்குப் போஸ் குடுத்து, வளையலும் பாசிமணியும் நிறத்திற்குச் சரிபார்த்து... பசிக்கும் நேரத்தில் கால்கள்
தடதடவெனச் சாமியறைப் பக்கம் போகும்.பெரிய இலையில் வகைவகையாய்ப் பரப்பப்பட்ட பலகாரங்களுடன்,சாம்பிராணிப் புகையோடும் நெய்விளக்கோடும், எங்கள் வீட்டுச் சாமி அருள்பாலித்துக் கொண்டிருக்கும்.

பலகாரத்தின் சுவையை விடவும் பட்டாசே கவனத்தை ஈர்க்கும்.சில பல ஆணாதிக்கவாதிகள் உள்ள குடும்பத்தில், பொட்டு வெடியும் பாம்பு மாத்திரையும் என் பங்குக்கு வரும். அழுது அடம்பிடித்தாலும் சீனி வெடி(ஊசிப்பட்டாசு) தவிரப் பெரியவெடி எதுவும் கிடைக்காது.உண்ட பலகாரம் செரிக்கப் பனைவெல்லம் தருவார் அய்யா.

மதியம் உறவினர் வருகையோடும் அசைவ உணவோடும் தீபாவளிக்காசு என்பதாகப் பை நிறையும்.அத்தைகள்,மாமாக்கள்,அண்ணன்கள்,புதுமணத்தம்பதிகள்,அப்பாவின் நண்பர்களென வீடு கலகலக்கும்.ஒன்றுகூடல் இனிமையாய்ப் போகும்.

சந்தனமும் வெற்றிலைத் தாம்பூலமும் கையிலேந்திப் புத்தாடை மினுக்க,ஓட்டைப் பல்லோடும்,உச்சிக் குடுமியோடும் அதோ அந்தப் பெரிய வீட்டில் அழகியின் கண்டாங்கிச் சேலைத் தலைப்பை பற்றியபடி கைக்குள்ளும் காலுக்குள்ளும் ஓடித் திரியும் சிறுமியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகியின் பாமரத்தனமிகுந்த அன்பும் அவள் நேசம் படர்ந்த அந்தச் சிறுமியும் பழைய நிழற்படம் போல் அப்படியே இருக்கட்டும்.ரசமிழந்த கண்ணாடிக்குள் அசையும் பிம்பமென என் பால்ய நாட்கள், நான் இளவரசியாயிருந்த என் சிற்றரசின் மேதகு பெருமைகள்... முழுக்க முழுக்க அன்பாலனவை.

பெரியவர்கள் இல்லாத இந்தப் பண்டிகைகள் எனக்கு அத்தனை சுவை தருவதேயில்லை.இயல்பில் நானும் அப்பத்தாவைப் போலத் தான் வாழ ஆசைப்படுகிறேன். எல்லாருக்கும் உகந்தவளாய் - பாந்தமும் பாசமும் ஒருங்கே சேர்ந்து- எவர் குறையும் காணாது நிறையோடே அளவளாவி, அன்போடு  அரவணைத்து,குழைவாய்,நெகிழ்வாய்... வசப்பட எனக்கும் வயதாகவேணுமோ? :)

தளும்பும் நினைவுகளை முத்தாய்க் கோர்க்கும் எல்லா நிமிடங்களிலும் கண்களைக் குளமாக்குகிற ஏதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. நம்மொடு   கூடவே வாழ்ந்து சிறப்பித்துச் சென்ற முன்னோர் அனைவருக்கும் நம் வணக்கங்களைக் காணிக்கையாக்குவோமாக!

தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்காள்! வாழ்க வளமுடன்!

Friday, November 9, 2012

கண்டடையும் கணம் வரை


ஒரு கவிதையைச் சுமந்தபடி
அலைகிறதென் நினைவுகள் 
அடைப்புக்குறிகளுக்குள் பூட்டப்படாத 
சுதந்திர வனத்தில் 
தலைப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன் 
வாகாய் அமரவியலாத கோபத்தில் 
வழக்கத்தை விட ஆக்ரோசமாய் 
கத்திக் கொண்டிருக்கின்றன வார்த்தைகள் 
வலிகளைத் தாங்கிப் பழகிய 
தோள்களில் ஏற மறுக்கிறது 
கவிதை 
வேதனை சுமத்திய வடுக்கள் 
காரணமாயிருக்கலாம் 
அழகியல் மினுக்கப் பூந்துவலையொன்றை 
விரித்து விட்டு அழைக்கிறேன் 
சமரசங்களைப் பின்னுக்குத் தள்ளி 
விசும்பத் தொடங்கியது 
வடுக்களின் வலி உணர்ந்தது 
காரணமாயிருக்கலாம் 
சுட்டு விரல் கொண்டதன் கண்ணீர் துடைக்க 
நுனியிலிருந்த தலைப்பு 
அழிந்தே போயிற்று 
நான் தலைப்பைத் தேடுவதும்  
கவிதை என் தலைவருடுவதுமாக 
இதோ இவ்வனமெங்கும் சுற்றியலைகிறோம்..
கண்டடடையும் கணம் வரை 
தனிமை கவிதையாகவும்
கவிதை வாழ்க்கையாகவும் 

நீளுமிந்த நேசம்

Saturday, November 3, 2012

சிறகுலர்ந்த கவிதை

’சொல்லுங்கள் கவிதாயினி’
திடீரெனச் சூட்டப்பட்ட பட்டத்தில் திக்குமுக்காடிப் போனாள்.

எதிர்பாராத பாராட்டுக்கும் போதையிருக்கிறது.

இலக்கியவாதியவன் கரகரக்கும் குரலுக்கும் சற்றே வசீகரமிருக்கிறது.

வயப்பட்ட மனதை இழுத்துப்பிடித்தது மனசாட்சி.

நேர்பார்வையில் அத்தனையும் உடைத்து நீந்திச் செல்ல... புன்னகையோடு எதிர்கொண்டான் அவன்.

எதிர்நீச்சல் பழக்கமென்பது உறைத்திருக்குமவனுக்கு. சற்றே கர்வமாயிருந்தது.

காற்புள்ளி அரைப்புள்ளி முற்றென நீண்டதென் கதை.

மமதை களைந்த நடுக்கத்தோடு அவள் யாரென வரையறுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

கவனமெங்கும் மணக்கும் மண்ணின் வாசத்திலிருந்தது.

ஆடத் துடித்த கால்களும் மறைக்கப்பட்டிருந்த தோகையும் கரும்மேகக் கூடலில் பரபரக்கத் துவங்கின.

கடந்த காலத்தில் தன் கைவரைந்த கதாபாத்திரங்களின் கலவையாய்,கவிதைகளின் வடிவில்,தேவதை சாயலில்.. அவள்பால் மையம் கொண்ட காதலில் பிதற்றலானான்  கவிதை ஆர்வலன்.

உறைந்த தண்மையில் பனியாலொரு சிற்பம் செய்து, விழிவழியாய் உயிர்கொடுக்க இதழ் குவித்தான்.

சட்டெனத் தொடங்கிய பூமழைத் தூவலில், மேலடுக்குக் கலைந்துச் சிறுமியெனவானாள்,கிளித்தட்டுச் சுற்றி மழையுள் கலந்தாள் பனிச்சிற்பமாயிருந்தவள்.

பம்பரக்கால்கள் மெல்ல மெல்ல வேகம் குறைத்த போது மென் புறாவாய் மேலெழும்பி அவன் வசமடைந்தாள்.

வெள்ளங்கிப் போர்த்திய போதகன் கனிவில், குளிரில் வெடவெடக்கும் அச்சிறுவுயிரின் நனைந்த சிறகுகளைத் தன் அலகால் சிக்கெடுத்து சுவாசத்தால் உலர்த்தத் துவங்கினான் பறவை உருக்கொண்ட இலக்கிய வித்தகன்.

வார்த்தைச் சூட்டில் தன் ஆழ்மன வக்கிரங்களெல்லாம் அவளாய் மாறி அள்ளித் தெளித்தப்பின்  ஆதிக்கப் புன்னகையொன்றை சிந்திவிட்டு இதுவேதும் தெரியாமல் தன்னறையில் உறங்கிக் கொண்டிருந்தவளைக் காமப் பார்வைப் பார்த்தபடி கடந்து போனான்.ஒர் ஆன்மாவை கொன்றுவிட்டு கவிதை வடிக்கும் அவனோடு வசமாக மறுத்தன வார்த்தைகள். அடையாத ஒருத்தியை அடைந்ததாக நீளும் புனைவோடு வன்மமாய் தொடர்ந்தபடியிருந்தது இப்படியாக....

இரட்டைக்கிளவிகளும் வியங்கோள் வினைமுற்றுகளும் எச்சச் சொச்சங்களும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்க, கூச்சத்தால் மெய்சிலிர்க்கப் பெரும் குழைவோடு அவன் கவிக்கரமேகியது சிறகுலர்ந்த அக்கவிதை.

Friday, November 2, 2012

புகழ் கள்


பாதாளம் நோக்கி 
குழிகிறதொரு சுழல் 

சுழல் மீதொரு தக்கை 
உருளும் நீர்த்துளி 

நீர்த்துளி உடம்பில் 
நீலவண்ண ஆகாயம் 

ஆகாயம் சுற்றச்சுற்ற 
தக்கை நடனம் 

நடனம்  உவப்பாய் முடிய 
அலைகளின் கைதட்டல் 

கைதட்டல் போதையில் 
துள்ளிவிழுந்தது அச்சிறுதுளி 

சிறுதுளி மூழ்கிய வேகத்தில் 
ஆழியின் மீப்பெரு  நிசப்தம் 

நிசப்தம் கிழித்து 
சுற்றம் நோக்க 

நோக்கிய திசையெல்லாம் 
குதிக்கின்றன நீர்த்துளிகள் 

பாதாளம் நோக்கி...

Tuesday, October 30, 2012

நோய்க்கூறு#2

எங்கோ துவங்கி எங்கு முடிவதென்ற இலக்கில்லாமல் பயணிக்கிறேன். காடு,மலை,சமவெளி எனபதான புவிப்பரப்பின் எல்லா அங்கங்களையும் கடந்தே வருகிறேன். பாரத நாட்டின் சாபங்களில்(!) காலநிலை மாற்றங்களும் ஒன்று. வெள்ளத்தின் பிரளய நாட்களில் வடக்கில் கொட்டும் மழை  தெற்கே எட்டியும் பார்ப்பதில்லை. மாசுபட்ட புண்ணிய நதியதன் தளும்பலில் கழிமுகம் நோக்கிப் பயணிக்கும் மயிர்கற்றை நான்.தீண்டுதலுக்குட்பட்ட எல்லா சாத்தியங்களையும் தொட்டு மீள முடியும் என் பிறப்பின் பலனாய்.மிகைப்படுத்தப்பட்ட விதிகள் எதுவும் எம் நுனி சீண்டாது. எனக்கும் யாரும் பயணிக்காத வறண்ட பரப்புகளை உரசிப் போவதே பேரின்பம் என்ன செய்வது நதியின் போக்கில் நடைபயில்கிறதென் நிகழ்காலம்.மயிரென என்னைத் தீண்ட மறுப்போர் தீர்த்தமெனக் கொண்டாடும் நதி மாசுறும் கதை கேட்டால் எவ்விதம் முகம் கோணும்.நினைக்கையில் சிரிப்பு வருகிறது.புனிதமென்ற வரையறைகள் தனிமனித ஒழுக்கமென்பதை தவிர்த்து சாஸ்திரங்களோடு மல்லுக்கட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிக்கத் தோணுகிறது.அடுத்தவரை காயப்படுத்தி,வன்மமேவி,காழ்ப்பில் சொல்லடுக்கி நசுக்கி உமிழ்வோர் தவிர்த்து யாவரும் புனிதரே!பாவமந்த கங்கை நதி... எல்லார் சுயநலங்களையும் பொறுப்பின்மைகளையும் தாங்கியும் அருள்பாலிப்பதைத்  தொடர்ந்தாக வேண்டும்.மதக்குருக்கள்,கட்சிகள்,வாரியங்கள் இன்னும்பிற கட்டமைப்புகள் மிதக்கும் பிணங்களில் எப்படி நிலைநிறுத்தும் எம்மத தர்மத்தை..? இன்றதன் நிலைமை புரிந்தபின் இறக்கும் தருவாயில் விழுங்கும் கடைசி மிடறு அதன் தீர்த்தம் என்பதைக் காட்டிலும் என்வீட்டு கிணற்றடி நீரென்பதே என் வேண்டுதலாக இருக்கக் கூடும்.

பகுத்தறிவு பரவியிராத என் பாமர மூளைக்குள் கேள்விகள் முளைத்த வண்ணம் உள்ளன.

செத்த ஆடு,மீன்,கோழி என்றெல்லாமும் புசித்துப் பழகிய நான் ஏன் மனிதப் பிணம் மிதக்கும் புண்ணிய நீரைப் புனிதமென ஏற்பதில்லை?

என்னவாகும் சொல்லக் கேட்டச் சாஸ்திரங்கள் ?
நரகம் வாய்க்குமோ?
சிவபதம் சித்திக்குமா?

தமிழனா இந்தியனா இருக்கட்டும் அப்புறம்..

நான் இந்துவா.. ?
ஆமெனில் என்ன சாதி ?
ஆதிக்க வர்க்கமா அடிமைவர்க்கமா?
இத்துப்போன வர்ணாசிரமங்களில் வேதமென்பது எவருக்கு மட்டும்..?

இருவருக்கும் வெவ்வேறு சொர்க்கம் வெவ்வேறு நரகமா?

கங்கை நீரைக் குடித்தால் தான் சொர்க்கம் கிட்டுமமெனில் கங்கையை சுற்றியிருக்கும் அத்துணை பேரும் சொர்க்கம் சென்றாரா?

எடுத்த எடுப்பிலேயே மனிதனை நினைத்து புளங்காகிதம் அடைதல் நாத்திகம். சுயம் பற்றி தெளிவு வேண்டுமென்பதால் மிரட்டும் விசயமாய் இருக்கக் கூடும். தன்னையரிதல் ’அகம் பிரம்மாஸ்மி’ இதைத் தான் சொல்கிறது ஆத்திகம்.தன்னையறிந்தவனை கடைசியில் ‘ஞானி’ என்கிறது. கவனிக்க, மனிதர்கள் என்பவர்கள் மரபுகளுக்குட்பட்டு வாழும் மந்தை என்றெழுதப்பட்டிருக்கிறது. மரபைப் பேணாத என் போன்ற தாந்தோன்றிகள் தன்னையறிந்து மனிதனாய் இருக்கவே விழைகிறோம்.

புனிதம் குறித்த இத்தனை கருத்துக்களும் நா நுனிவரை வந்தும் சொல்லாமல் வந்துவிட்டேன்.சொல்லியிருந்தால் கேலியும் எள்ளலும் உன்னறை நிறைத்திருக்கும்.
ஒவ்வாத உணவை ஒதுக்குவது போல ஒவ்வாத கருத்துக்களோடும் பயணிப்பதில்லை நான். எல்லாரும் வழிதொடரும் மந்தை ஆடாய் நானிருக்கப் போவதில்லை.

ஆம்! நான் தூங்கும்போது கிசுகிசுத்துக் கொள்ளுங்கள் “பைத்தியம் உளறியதென்று”

Sunday, October 28, 2012

நோய்க்கூறு #1


வெறுமையும் இயலாமையும் கைகோர்த்துக் கொக்கரிக்கும் நிமிடங்களில் ஆழ்கடல் அமைதிக்குள் அமிழ்ந்து போகத் துடிக்கிறது மனது. தனிமையில் அழுவதெனக்கும் மிகப்பெரும் ஆசுவாசம்.பலவீனப்பட்டு விடுதலை உணர்தலில் சின்ன உறுத்தலும் கூட.தவிர்த்திடும் பொருட்டு எந்தப் புயல்மழைக்கும் அசையாதவாறு ஒரு கல்மண்டபமாய் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். சந்தர்ப்ப அணில்கள் சேமித்துவந்த சிறுகற்களில் கட்டுமானம் பாதி நிறைவுற்றது.விமானம் அமைத்துத் தரக் கடந்ததின் பெருங்காயங்களை அசைப்போட்டபடியிருக்கிறேன்.
                     சன்னமான கதறலோடு கிளறத் துவங்கி காயத்தின் ஆறாத பாகத்தில் கைபட்டவுடன் மூர்ச்சித்து விழுகிறேன். ஏதோவொரு நட்பின் கரம் தண்ணீர் தெளிக்கிறது. சுயநினைவுறுகையில் தோல்வியின் அவமானம் என்னுடல் முழுக்க அப்பியிருக்கிறது. இதோ தோல்வியைக் கழுவி வெற்றியாக்கும் பொருட்டுக் கத்திச் சொல்கிறேன், பசுங்காயங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் உறவுகளே எழுந்து வாருங்கள் எனக்கு உங்களின் தேவையிருக்கிறது இப்போது. என் விரல் கொண்டு என் ரணம் கீறப் பயமாயிருக்கிறது. அந்தப் பேருதவியை நீங்கள் இப்போது செய்வீர்களாக!என் அழுகையும் கதறலும் உமக்குவந்த இசையென்பதை நானறிவேன்.மீட்டிச் செல்லுங்கள் என் மனதின் ஓலங்கள் வரிசையில் நிற்கின்றன.
                     இருத்தலின் நிலையாமையினுள் புழுங்கிச் சாகும் வரை நான் வாழ்க்கையின் பரவசங்களைத் தீண்டப் போவதில்லை.தாயின் கருவறையிருந்து மரணப்பாசறை வரையிலான மானுடப் பயணத்தில் நானெங்கிருக்கிறேன் என்கிற தெளிவு வேண்டும்.பேரன்பு மிக்க உறவின் மேதகு மக்களே என் உச்சந்தலையில் கால்வைத்து உபதேசித்துப் போங்கள் எப்படி வாழ்தல் எனக்குகதென்று.
                     யாதொரு உயிர்க்கும் தீங்கிழைக்காமல், சொல்லுக்கு வலிக்குமெனச் சிந்திச் சென்ற என் வார்த்தைகளில் எது உங்களைத் தைத்ததென்று. எப்போது ஒழியும் இந்த ‘வாழ்ந்தானுக்கு மாரடிக்கும்’ மானங்கெட்டச் சீர்மிகுக் கலாச்சாரம்.இத்தனைக் குழப்பத்திலும் அடுத்தது என்ன? எவ்வித முன்னேற்பாடுமின்றி வெறித்த பார்வையில் வெதுவெதுப்பான தேனீரோடு நானிருப்பது நிச்சயம் உங்களுக்கு நோய்க்கூறென்றேபடும்.

ஆம்!நான் உம்மிலிருந்து சற்றே மனப்பிறழ்வெய்தியவள்.

Friday, October 26, 2012

அடவும் தன்னுடலேற்றலும்

நம்மைப் பற்றிச் சிலாகித்திருக்கையில்
நீ வந்து போன இடங்களிலெல்லாம்
அவனை நிரப்பிக் கொண்டிருந்தான்
நீயாகிப் போவானோ என்கிற
துணுக்குறலில்
அதட்டி அடங்க வைத்தேன்
என் மனதையும்
நீயாகிப் போன அவனையும்!

இதுவரை சொன்னதில்
நடந்து போனது அவனென்று
நினைத்துக் கொண்டிருக்கிறான்
இழந்ததில் ஏதோவொன்றை
மீட்டெடுத்த உடல்மொழியில்
மந்தகாசமாய்ச் சிரிக்குமவன்
மழலையில் மெய்மறக்கிறேன்
சட்டென்று ஒளியிருளும்
மதிமுகத்தை எதிர்கொள்ள
ஆயத்தங்களில்லை என்னிடம்
தொடர்ந்தபடியிருக்கிறது
நீ அவனாவதும்
அவன் தன்னுடலேற்பதும்!

பள்ளிக்கூடக் கதைகேட்கும்
அம்மாவாய்
சிறுமியின்
எல்லாச் சிலிர்ப்புகளையும்
உள்வாங்கி எதிரொளிக்கிறதவன்
நயனங்கள்

கடவுளோடும் சாத்தானோடும்
உறவாடும் வல்லமைபடைத்தவன்
பாசத்தில் எம்பக்கமிருப்பதில்
பெருமிதம் கலந்ததொரு பயம்

நினைக்கவே நடுக்கமாயிருக்கிறது
நீ கொன்றுவிட்ட என்மனதை
உயிரற்றது என்றிவனறியும் நாளில்
சோதியிழந்த அவன் முகம்

மானுடவெளி தாண்டிய
கடவுளையோ
சாத்தானையோ
எதிர்கொள்ள வேண்டியிருக்குமந்த
துயரமிகு நாளில்
அடவு கலையாதிருக்க
விழிகள்
கண்ணீரற்றுப் போகட்டும்!

Saturday, October 13, 2012

முயல் வேட்டை


ஒற்றைத் தீபத்தின் வழிகாட்டுதலோடு
பயணிக்கிறார்கள் அவர்கள்
எண்ணிக்கையில் நால்வராய் இருக்கலாம்
பெரும் மலைக்காடு
இருட்டுத் திரையிலிட்ட புள்ளிகளை
அழித்தபடி நகர்கிறது வெளிச்சம்
மிகவேகமாய்...
இரைதேடிகளும்
கூடடைந்தவர்களும்
தலைதூக்கிப் பின் தத்தம் பணிதொடர்கிறார்கள்
மனித வாடையில் பரபரத்த
தாய்ப்பறவையொன்று
இறக்கைப் போர்த்தித் தற்காத்துக் கொள்கிறது
ஆர்வந்தாழாமல் போர்வையெங்கும் முளைக்கின்றன
சின்னஞ் சிறு குருவிகள்!

நட்டநடுக் காடு
தீபம் தீப்பந்தமானது
கொலையாயுதங்கள் பரப்பி
நடுவில் மூட்டிய நெருப்போடு
வந்த வேலை ஆரம்பமாகியது
கண்ணி விரித்து
அமைதிகிழித்து
வேட்டையாடி
உயிர்பிரித்து
பத்தொன்பது சொச்சம் முயல்கள்
இருபதாக்குமுன் இரவு பிரியவே
திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்
பிரிந்தது
இணையோ
தாயோ
குட்டியோ
தேடிச்சலித்துப் பரிதவிக்கக்கூடும்
மிச்சமிருப்பவை
அவர்கள் கடந்து போனார்கள்
வனத்தின் பரிதவிப்பைப் புறக்கணித்து
செழுமையை மெச்சியபடி
மனிதப்பிரவேசத்தை முறியடிக்க
முயற்சியில் இறங்கியது
எரிச்சலடைந்த காடு

Monday, October 8, 2012

அவன் அழுவதில்லை

பிணந்தின்னி வண்டுக் குவியலில்
தோட்டாக்கள் முனுமுனுப்பில்
தூரிகையோ புகைப்படக்கருவியோ
ஏதேனும் ஒன்றின் பிடிமானத்தில்
வாழ்க்கை

நேர்பட உரைத்தல் தர்மம்

உதிரம் சொட்ட உயிர் துடிக்கும்
கடைசி நேரங்களை
காட்சிமைப்படுத்தும் பணி அவனுக்கு

புகையும் சுருட்டு இடக்கையில்
வண்ணத்தில் குளித்த தூரிகை
மறுகையில்
காய்ந்த ரத்தத்தை
சவத்தின் நாற்றத்தை
ஆர்வமாய் பதியத்துவங்கும்
அகோரியாய் வெறிகொண்டலையும்
சிதைந்த கோரங்களில் உக்கிரமானவொன்றின்
பிரதியை தாளில் தெளித்த பின்
சாந்தம் கொள்ளும் காளியின் பாவனையில்
சன்னமாய் அடங்குமவன் நாடிகள் ஏழும்!

போர்க்களங்கள்
போராட்டங்கள்
புரட்சிகள்

எதாகிலும் அழிவின் வர்ணனை
அப்படியே வேண்டும்
கற்பனைகள் கலக்காமல்

கொடூரங்கள் வாடிக்கையானபின்
சின்னதொரு மறுப்பிற்கோ
காதலியின் பிரிவுக்கோ
செல்ல நாயின் மரணத்திற்கோ
நடிகையின் தற்கொலைக்கோ
லௌகீகத்தின் உச்சத்துக்கோ
துடிப்பதேயில்லை அவன் மனம்

Thursday, October 4, 2012

மறுதலிப்பின் நிழல்

எந்தவித மெனக்கெடலுமில்லாமல்
பூவிரியும் சுவாதீனத்துடன்
புன்னகைத்து காட்டிவிடுகிறாய்
எனக்கான உன் பிரியத்தை!

நானோ சீரற்ற லயத்தில்
உள்வாங்கி சிலிர்க்கிறேன்
அதிர்வெண் உச்சம் தொட்டு வீழ்கிறது
ஒவ்வொரு பார்வைக்கும்

தலைகோதலில்
நெட்டி முறித்தலில்
உதடு சுழிக்கையில்
கம்பீரமாய் நடைபயில்கையில்
வசமிழக்கத் தொடங்குகிறேன் நான்

எனக்குள் விஸ்ரூபமிட்டிருக்கும் நீ
சவ்வுக் காகிதத்தில் அடைப்பட்ட
பசிபிக் பெருங்கடல்
ஏதேனும் ஒரு சொல்லம்பு
அழித்துவிடக்கூடும்
என்னுலகத்தின் தலையெழுத்தை

மிகைப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யமது
கனவுத்தூண்கள் சேர்த்து மாளிகைகள்
எழுப்பியிருக்கிறேன்
அஸ்திவாரம் நீயென
கோயுரங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது

சூனியங்களை அடுக்கிக்கொண்டே
போகிறேன்
அதன் தொடக்கமாய்
உன்னை நிறுத்திடும் பொருட்டு

வாசிக்கப்படாத என் கிறுக்கல்கள்
உன் பார்வையில்படும்
அந்த பவித்திர தருணத்தில்
அவஸ்தை தாளாமல்
நான் மூர்ச்சித்திருக்கக்கூடும்

அன்று
உன்னிதழ் கொண்டு
என்னைத் திறந்திடு
கடவுச் சொல்லாய்
அதைத் தான் சேமித்திருக்கிறேன்

Wednesday, October 3, 2012

நிறம்

கிடத்தப்பட்ட பிணம்
சிதைச்சூட்டில் எரியத்துவங்கியதும் 
கருகும் தோல் முழுதும்
மலரத் துவங்கின
செம்மஞ்சள் நிறமலர்கள்
உயிரற்ற உடலெங்கும்
அடையாளங்கள் அழிந்து
தசை தின்று சாம்பல் துப்பி
உயர்ந்து புகையாகி
சுவாசம் நிறைத்தது
தீயெனும் காலம்
அரூபமான ஆன்மா
மெல்ல அறியத்துவங்கியது
தன்னுடலின்
கடைசி பரிமாணத்தை!

Monday, September 24, 2012

நிலாச்சோறு


தோட்டத்தில் ஒரு பெட்டைக்கோழி
மண்ணைக் கிளறி
இரை தேடிக்கொண்டிருந்தது
கிடைக்கும் இரையை
அலகால் கொத்துவதும்
அதைப் பொடித்துக் குஞ்சுகளுக்கு
பங்கிடுவதுமாய்...
சட்டென நினைவுக்கு வந்தாள்
மாதக் கடைசிகளில்
நிலாச்சோறூட்டும் அம்மா!

நந்தனார்

கனன்ற நெருப்பில்
சிதைந்து போனது
புலையர்பாடி அடையாளங்கள்
சிதையின் புகையில்
கலந்த ஆன்மா
எவரையும் சட்டைசெய்யாமல்
சிவனையடைந்தது
நந்தன் அடியாரானது தெரியாமலே
ஆன்மசுத்தி மந்திரங்கள் முழங்கியபடியிருந்தனர்
தில்லையம்பதியின் வேதவிற்பனர்கள்
முன்னதை போல இதற்கும்
சிலையென சிரித்தபடியிருந்தான்
சித்தனான சிவக்கடவுள்!

Saturday, September 22, 2012

முன்னோடிகள்

மழிக்கப்பட்டத் தலையுடன்
காவி அங்கிகள் போர்த்தி
தழையத் தழைய நடந்து போகிறார்கள்
மடாலயச் சிறுவர்கள்
உச்சாடனங்கள் செய்தவாறு
வெற்றுக்கால்களுடன்
எறும்பென ஊர்கிறார்கள்
மனிதம் புழங்காத அப்பெரும்மலை
கூச்சத்தால் சிலிர்க்கிறது
கடைசிச் சிறுவன் மலையுச்சி
தொட்டவுடன் கர்ஜிக்கிறான்
அடிவாரத்தை நோக்கி
“வாருங்கள்!
பாதை  செய்தாகிவிட்டது!”
பிஞ்சுக் கால்கள் விரிந்த்துவிட்ட
இரத்தக் கம்பளங்களில்
பயணிக்கிறார்கள் அவர்கள்
உறுத்தலேதுமின்றி!

Wednesday, August 29, 2012

சமன் செய்

இருமனங்கள்
ஒன்றின்
உள்ளீடாய்
நட்பு
அதன்
வெளியீடாய்
மற்றதில்
குரோதம்.

சமன்பாட்டின்படி
நட்புக்கு பதிலாய்
நட்பே கிடைக்கவேண்டும்

நடுவழியில்
ஏதோ குளறுபடி

பிறழ்வுக்கு
ஏதேனும்
காரணமாயிருக்கலாம்
அப்படியேதும் இல்லையெனில்
நண்பனென நீ நினைத்தவன்
கபடனாய் இருக்கலாம்
ஆராய்ச்சியின் முடிவு
எப்படியிருந்தாலும்
உடனடியாக
அவனை நண்பனென
அழைப்பதை நிறுத்திவிடு!

பலன் எதிர்பாராதது
நட்பு
அது போலே
வெறுப்பையும்

யாரோ எறிந்த
சின்னஞ்சிறு கல் கூட
பேரலைகளை உண்டாக்குமெனில்
என் படகு பயணிக்க
வேறோர் ஆற்றுக்கு
கொடுப்பினையுண்டு

Tuesday, August 28, 2012

கனவு

பட்டாடைகள் மினுமினுக்க
குதிரையில் உலா வரும்
இளவரசனின் கதை கேட்டபடி
எச்சில் ஒழுக உறங்கிப்போகிறாள்
கந்தலாடைச் சிறுமி

கற்பனைக்கேற்றபடி
நிதமொரு அலங்காரம்
இவள் கனவில்
அவனுக்கு

பாட்டியின் சாமர்த்தியம்
பட்டாடைகள்
ராஜாக்கள் உடையென
நம்ப வைத்ததில்...

உலகம் புரியும் வரை
இதே தொனியில் தான்
அத்தனை கதையும்

உலகம் புரிந்தபின்
வயிற்றின் இரைச்சலில்
கனவுகள் வருமோ எவரறிவார்?

வேண்டுதல்

உள்ளுணர்வுகள் ஊமையாக்கப்பட்ட
பறவை நான்
எதிர்வரும் இன்னல்கள்
எம் புலன்கள்
முன்னறிந்து சொல்லாது

கண்டம் விட்டு கண்டம்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கடல் தாண்டும் வரை
பெரும் மழையோ கடும் புயலோ
என் சிறகுகளை
நனைக்காதிருக்கட்டும்...

அங்கொரு கூடுகட்டி
கூரை வேய்ந்ததும்
சொல்லியனுப்புகிறேன்
இயற்கையே!
தருவியும் மழையை
அப்போது.

Tuesday, August 14, 2012

மழைக் கதை

ஒளிவீசும் இறக்கைகளின் சிறகடிப்பில்
வண்ணங்கள் தூவும் தேவதையொருத்தி
கருமுகிலொன்றை நிறமாற்றயெண்ணி
பெருஞ்சித்திரக் கனவுகளோடு
ஆர்வமாய் துரத்தலானாள்

சூல்கொண்ட மழைத்துளிகள்
தள்ளாடும் தாய்மை
பிரசவிக்க தருணம் பார்த்து
கார்முகிலோ வலியோடு
மிதந்தபடியிருந்தது

அம்முகில் கூட்டம் அயர்ந்த நேரம்
இமைகளின் சிமிட்டலில்
பொய்வலை பின்னி நைச்சியமாய்
வட்டமிட்டாள் நிறங்களின் காரிகை

பனிச்சிப்பங்களை ஏடுகளாக்கி
விரல்களை தூரிகைகளாக்கி
பேரரசுகளின் வரலாற்றை
வண்ணங்களால் வடிவங்களாக்கினாள்

உயிர்கொண்டெழுந்த சித்திரங்கள்
விண்ணில் நகர்ந்தபடியிருந்தது
அலங்கரிக்கப்பட்ட தேராக...

கதை சொல்லி நிறுத்தினேன்
புரிந்தும் புரியாமலும்
எனை மொய்த்தன கண்கள்
“பிறகென்னவாயிற்று?”
வார்ததைகளாகவும் பார்வைகளாகவும்
கேள்விகள்
எம்மிடம் நிறைத்தன

ம்ம்...

பிறகு...

மலை முகடொன்றின் மோதலில் 
நீர்குடமுடைந்து மழை பிறந்தது

மண்ணோடு புதைந்தன
நிறுவிய கதாபத்திரங்கள்
கரைந்த ஓவியங்கள்
பூக்களாகவும் புற்களாகவும்
பூமியில் மாற்றுரு கொண்டன

சிதைந்து போன சித்திரக்கனவுகள்
சீர்படும் பொருட்டு
பட்டாம் பூச்சிகளின் இறக்கைகளில்
சிற்றரசுகளை நிறுவலானாள்
நிறங்களின் தேவதை

இன்றும் உலவியபடியிருக்கிறது
தேவதையவளின் உயிரோவியங்கள்
வண்ணத்துப் பூச்சிகளாக!

Saturday, July 28, 2012

இதுவரை...

நெஞ்சிற்கினியதைத் தீர்க்கமாய்
பகர்கின்ற எல்லாப்பொழுதிலும்
எதிர்ப்புகள்
திமிரென்றும் மமதையென்றும்
தலைமுறை இடைவெளியற்று
எல்லோரும் ஓரினமாய்
நான் மட்டும்
தனிமரமாய்....

உலகோடு ஒத்துவாழ்தலில்
அத்தனை சுகமில்லை
முரண்பட்டு வாழ்தல் நலம்
நேர்ந்தது நியாயமென்கிறபோது

ஏதோவொரு ஒன்றுகூடலில்
ஒப்புக்கு கைகலத்தல்
ஒப்பனைகள் ஆடைகள் ஆபரணங்கள்
மிஞ்சிப்போனால்
அவள் அவன் குறித்த விமர்சனங்கள்
புறம்பேசி அகம் மகிழ்வார் குழுமம்
என்ன செய்வது?
கூடாமல் தனித்திருந்தேன்
அவரவர் பார்வைப்படி
எள்ளலும் நகைத்தலும்
கசிந்த மெல்லிசையோடு மட்டும்
கூடிப் பிரிந்தேன்

நடுக்கம் மேவியதொரு
தேனீர் கோப்பை
மெதுவாய் உறிஞ்சி
நாவால் இதழ் துடைத்து
தன்வயமாக்கும் சுவை
அது கலை
சுற்றியிருப்போர் மறந்து
தொலைத்தல் பிழை!

பின்னிரவின் ஆரம்பத்தில்
வெறிச்சோடிக் கிடக்கும்
மாநகரச் சாலைகள்
சின்னச் சீறலோடு பயணிக்கும்
அற்புதமான தருணங்களில்
விழி மோதும் எதிர்காற்று
’ஹோ’வெனும் உள்மனக் கொண்டாட்டம்
உடல்மொழியில் நளினமாய்...
மீண்டும் அதே பிழை
’சுற்றம் மறத்தல்’

கற்பனையில் கண்ட உறவுகள்
என்றேனும் உயிர்கொண்டெழுந்தால்
ஆர்வமிகுதியில்
‘அப்பா’ ‘அண்ணா’ ‘அக்கா’
என்றெல்லாம்
உறவு மெச்சுதல்
அதிகபட்ச அநாகரிகம்...
அனேகமுறை நடப்பதுண்டு

வெளியூர் பிரயாணங்களில்
வயோதிகமோ பால்மணமோ
பாத்திரத்திற்கேற்றபடி
’வளவள’த்தலில்
வாய்க்கும் வழித்துணைகள்
வாழ்த்துகளோடு பிரிதல் சாத்தியம்

தனிமையில் புழுவாய்
வெளிச்சம் கண்டதும்
இறகு தரிக்கும்
அதிசயஜீவி நான்...
நிரந்தரமற்ற பறத்தலில்
ஒவ்வொரு கணமும்
வெற்றிடமற்று
நினைவுகள் தளும்ப...
பீனீக்ஸ் பறவையாய்

சரிகின்ற மாராப்பும்
குவிகின்ற பார்வைகளும்
அலட்சியப்படுத்தி
தடுமாறும் கிழவியை
தாங்கிப்பிடித்தால்
அடக்கமற்றவள் இன்னும்பிற
பட்டங்கள்
’ஆளப்பிறந்தவள்’ நான்....

அடுத்தவள் கணவன்
அவளின் அண்ணன்
தோழியின் காதலன்
நட்பெனும் போர்வையில் நஞ்சோ
உறவுக்குள் யாரோ எவரோ
அவரவர் அப்படியே
என் சுயம் காயப்படாத வரை.

அத்துமீறி அவமானப்பட்டவர்கள்
எதிரிகளாகிப் போயினர்
சேர்ந்த பழிகள்
எண்ணிக்கையில் ஏராளம்
காட்சிக்கு வைத்தால்
’கின்னஸ்’ சாதனை.
இருப்பினும்
எள்ளளவும் மாற்றமில்லை

குற்றப்பத்திரிக்கை நீள்கிறது....

இதுவரை எப்படியோ
இனிமேல்
இயல்பாய் இருத்தலை
நிறுத்தியாக வேண்டும்
நான்!
காரணம்
என் மனவீதியில் ஆட்களேயில்லை!

Tuesday, May 22, 2012

நான்....

பண்டிகைகள்,விழாக்கள்,ஒன்று கூடல் சந்திப்புகள் இது போன்ற விசயங்களில் ஒப்புக்கு கலந்து கொள்ளாமல், சிவாஜி அல்வா மாதிரி அந்த பாத்திரமாவேமாறிப் போறது என்னோட பால்ய காலத்து பாதிப்புங்க. இப்பவும் அப்படித் தான்...வியாதி குணமாகல.பின்புலம் என்னான்னா? நான் வளர்ந்த குடும்ப சூழல் அப்படி. மொத்தமா ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு பேரு உள்ள கூட்டுக் குடும்பத்தில பிறந்து வளர்ந்துட்டு,சட்டுன்னு விலக்கி படிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டு,காலப்போக்கில் வேலை,முன்னேற்றம் என மாறிப்போனது வாழ்வின் திசை. எண்ணங்களும் சமூகத்தின் மீதான மதிப்பீடல்களும் அவ்விதமே!
ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஏதோவொரு குறை எனக்குள் உறுத்திக் கொண்டேயிருக்கும்.உடையோ,காசோ,ஆபரணங்களோ ஏதோவொன்று மற்றவர்களை விடசற்று குறைவோ என்ற எண்ணம் இருந்ததுண்டு. அந்த நிறைவில்லாத மனப்பான்மையில் சில பொழுதுகள் அழுதே கழிந்ததுண்டு. இன்னிக்கு தவற விட்ட இந்தநாளும் வயசும் திரும்பி வராதுன்னு என் வீட்டு பெரிய மனுசி எப்பவும் சொல்லுறதுண்டு. அது எத்தன உண்மையின்னு இப்போல்லாம் உணர ஆரம்பிச்சிருக்கேன்.
பள்ளியில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள்.அத்தனையும் களையத் துடிக்கும் மனம். யாரேனும் எது சொன்னாலும் அதை மீறியே ஆகனும்கிற வம்வரும். அப்போது பெரிதும் விரும்பப்பட்ட மையிடலும்,மல்லிகைப்பூவும் கல்லூரிக் காலங்களில் அபத்தமாயிப் போயின. பெரியார் தாக்கம் நிறைந்திருந்த காலங்களில் அணிகலன்கள் ஏதுமின்றி கருப்பு நிற உடைகளோடு சுற்றின நாட்களும் உண்டு. அம்மாவுக்கு கறுப்பு நிற உடைகள் பிடிக்காது என்பதால்அவரிலிருந்து என்னை அறிவுஜீவியாய் காட்டிக் கொள்ள அதைத் தேர்ந்தேன் என்றும் சொல்லாம்.மிகவும் நேசித்த எல்லாமும் ஏதேனும் ஒரு சில வினாடியில் அற்பமாகிப் போவதன் மாயமென்ன? கவிஞரின் வரிகள் எத்தனை சத்தியமானது?
 ’மாற்றம் என்பது மானிடத்தத்துவம்...’ விலங்காத்தான் இருந்தேனோ இத்தனை நாளும்.மனசு தான் எத்தனை வினோதமானதுங்க?  நெனைக்க நெனைக்க ஆச்சர்யம் தாங்க முடியல. வித விதமான எண்ணங்கள். பிரச்சனைகள் கொப்பளிக்கும் வாழ்வில் எதையும் மீறாமல் எதுவும் பிறழாமல் வாழ்தல் நிச்சயம் பெரிய விசயம் தான். பிரச்சனைக்குள் தலை மூழ்கி மூச்சடக்கி வாழும்ஆசையில் நீர்க்காகமாய் தலை சிலுப்பும் போதில் எனக்கு நானே செல்லமாய் தட்டிக் கொள்வதுண்டு ’சமத்துடீ நீ!’.

Wednesday, April 25, 2012

மௌன ஒலி


கலைத்திறன் பொருந்திய
கண்ணாடிக் கோப்பைகள்
பரிசாய் வந்தவை
முன்னொரு காலத்தில்
பேரரசிகள் புழங்கியவையாம்
துடைக்கப்படும் ஒவ்வொருமுறையும்
இதழ்களை ஒற்றுவது போலே
பதமாய்ப் பதவிசாய் ...
சந்தடியில்லாதவொரு இரவில்
திடுமென நொறுங்கிச் சிதறின
சகிக்க முடியாத மௌனம்
கலைத்த பேரதிர்வுகள்
மெல்ல மெல்ல
ஓய்ந்தே போனது!
எவருமற்ற நிதர்சனத்தில்
இன்னும் தொடரும் இரவுகளின்
மௌனம் உடைக்க

இருளின் கருமை போல
எங்கும் வியாபித்திருக்கும்
வெறுமையைக் கொல்ல
ஒலிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

எல்லாச் சப்தங்களையும்
தாலாட்டி உறங்கச் செய்கிறது
மௌனமான இரவு
நானோ ராப்பாடியாய்
ஒலிகளைத் தேடியும் பாடியும்....

Saturday, April 21, 2012

முத்தக்கா

மதிய நேரங்களில் புழக்கடை திண்ணையில் சீட்டி கலந்த சினிமாப்பாட்டு வாசனையோடு, உளுந்தும் அரிசியும் வாயில் பாதியும் ஆட்டுக்கல்லில் மீதியுமாய் அரைபட்டுக் கொண்டிருக்கும்.
இன்னாருக்கு இன்ன வேலை. தப்பாது நேர்த்தியாக செய்து முடிக்க வேணும். அப்பத்தாவின் வீட்டு நிர்வாகத்தின் எழுதப்படாத சட்டம்.ஆட்டுக்கல் சாம்ராஜ்யம் பெரும்பாலும் முத்தக்காவினுடையது.

”ஒரே நாள் உனை நான்..ம்ம்ம்ஹீம்ஹீம்”

”பார்த்த ஞாபகம் இல்லையோ...ம்ம்ம்ம்ம்...பருவ நாடகம் ...”

சுருதி சேராமல் ஆனா பாட்டு வரி பிசகாமல் ஒரு சங்கீதக் கச்சேரி. முத்தக்கா அதில் மகா கெட்டிக்காரி. இழுத்துச் சொருகிய பாவாடையும் அவள் தலை முடி போட்டிருக்கும் விதத்திலும் தெரியும் அவள் எத்தனை உழைப்பாளி என்று. ஒரு பெரிய ஆட்டுக்கல். மரப்பிடி கொண்ட குழவிக்கல். அசைக்க முடியாது நம்மால். அதைக் அப்படியே காற்றில் கை துழாவுவது போல் அசாதாரணமாய் சுற்றிக் கொண்டிருப்பாள்.

பாட்டுக் கட்டினால் அது ஒரு வேகம். ஊர்ப் புரணி பேசினால் அது ஒரு வேகம். அம்மாவோ சித்தியோ திட்டி விட்டால் இன்னொரு வேகம். ஒளியும் ஒலியும் பார்க்க போக வேணி வந்தால் அது ஒரு வேகம். இட்லிக்கு உளுந்து தனி, அரிசி தனி ஆட்ட வேண்டும். தோசைக்கு இரண்டும் சேர்ந்து. இடைப்பலகாரத்துக்கு தனியொரு பக்குவம்.எல்லாம்
அத்துப்படி. எனக்கு அவளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். முத்தக்கா எத்தனை பலசாலி.அப்படியே பரபரவென ஒரு பம்பரத்துக்கு கால் முளைத்தாற் போல.அத்தனை சுறுசுறுப்பு. ஏதோ ஒரு பாட்டை எப்போதும் முனுமுனுத்துக்கொண்டிருப்பாள். சிரித்த முகமும் சீதேவியும். பார்த்ததுமே நமக்கும் அவள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். முகமோ நிறமோ எடுப்பில்லை என்றாலும் வனப்பின் மிகுதிக்கு குறைவே இருக்காது. செதுக்கி வைத்த கருஞ்சிலை போல் இருப்பாள்.

வீட்டு வேலை தொடங்கி தொழுவம் வரைக்கும் அவளின் பங்களிப்பு இருக்கும். சமையலறைக்குள்ளும் அப்படியே... அவள் கைப்பக்குவம் எவருக்கும் வராது.

”ஏ முத்து..”

“அடியே முத்து...”

“முத்தூ...”

இப்படியான ஏதோ ஒரு தொனியில் முத்தக்கா எப்போதும் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பாள்.

“இங்க வா.இந்த லெட்டரை முத்தப்பண்ணனங்கிட்ட குடுத்துட்டு ஓடியாந்துரு. நடுவில ஆருக்கிட்டயும் கொடுத்துறப்டாது. சரியா?”

இப்படி ஆரம்பித்த தகவல் பரிமாற்றத்தில் அன்றைக்கொரு சிக்கல். சித்தப்பாவின் கைகளில் அகப்பட்டுக் கொண்டது கடிதம். ஆறாம் வகுப்பு வரை அவள் கற்ற கல்வி அன்பே ஆருயிரே அத்தான் என்றெல்லாம் புலம்புவதற்கு போதுமானதாக இருந்தது.ஆனால் அவள் தலையெழுத்துத் தான் சரியேயில்லை.முத்தக்காவுக்கு அப்பா இல்லை. அவள் அண்ணாவும் தங்கையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம் எங்கள் வீட்டினை அடைக்கலமாக கொண்டிருந்தது.அவள் அம்மாவோ அத்தனை சுதாரிப்பில்லை. அண்ணாவும் தங்கையும் படிக்க தன்னை உருக்கிக்
கொண்டிருந்தாள். அவள் எனக்கு அத்தைமகள் உறவு.அந்த செக்கு மாட்டின் மேலும் யாரோ காதலெனும் கல்லெறிந்தார்கள்.

அப்பா,அய்யா,பெரியப்பா இப்படி யாருமே ஊரில் இல்லை.கல்லூரியில் படிக்கும் சித்தப்பாவும் என் அண்ணன்மார்களும் இந்த வழக்குக்கு நீதிபதிகளாயினர்.பெல்டும் பிரம்புகளும் அவளுடலை நன்றாய் பதம் பார்த்தன. பூட்டப்பட்டிருந்த பந்திக்கட்டு கீழறையில் ”அய்யோ அம்மா” என்ற கொடூரமான சத்தம் காதுகளின் வழி இதயத்தை கிழித்துக் கொண்டிருந்தது.வீட்டுப் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். செய்வதறியாது அழுது கொண்டிருந்தோம் நடக்கும் விபரீதத்தின் வீரியம் தெரியாமல்.

”தம்பி விட்டிருங்க! பாவம் செத்துறப் போவுது” இது அம்மா.

“வேணாம்பா பாவம் பொம்பளப்புள்ள” இது சித்தி.

“வயசு வந்த புள்ளடா!கை நீட்டப்படாது” இது அப்பத்தா.

“கொல்லு மாணிக்கம். கொன்னு போடு! நமக்கு வேண்டாம் அந்தப் பயபுள்ள” இது முத்தக்காவோட அம்மா.

“கொன்னுருங்க மாமா!” இது முத்தக்காவோட அண்ணன்.

பிரம்பு ஒடிஞ்சதோ, கை ஓய்ந்ததோ ... கதவு மெதுவாய் திறந்தது.

வேர்த்து விறுவிறுக்க, கைகளை உதறியபடி சித்தப்பாவும் அண்ணன்களும் ஏதோ சாதித்த பூரிப்பில்... காது கூசுமளவுக்கு வசவுகளை சிந்தியபடி நகர்ந்தார்கள்.

அடுத்து பெண்கள் கூட்டம். நைந்து போன அவளை இன்னும் நோகடித்துக் கொண்டிருந்தது வார்த்தைகளால்...

அப்பா வரும் வரை கிழிந்த நாராய் கிடந்தாள் அந்த காற்றோட்டமில்லாத அறைக்குள். அன்று தொடங்கி நாலு நாட்கள் முத்தக்கா கண்ணில் படவேயில்லை. ”முத்தக்கா எங்கம்மா?”

வாயில் சோற்றோடு மெதுவாய் கேட்டேன். பதிலாய் சப்பென அறை விழுந்தது.

அப்பா வந்தார். சத்தமாய் பேசினார். அய்யாவும் பெரியப்பாவும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்கள். அண்ணகளும் சித்தப்பாவும் ஆக்ரோசமாய் கத்தினார்கள்.

முத்தக்காவின் அம்மா அய்யாவின் காலில் விழுந்து அழுது கொண்டிருந்தார்.

முத்தக்கா முற்றத்து தூணோரம் ஒடிந்து நின்றிருந்தாள்.அழுது வீங்கிய கண்களும் உதடு கிழுந்து வீங்கிய முகமுமாய் பார்த்ததும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.நான் அவளின் ரசிகை. அவள் சுறுசுறுப்பின் - அவள் வழி நுகர்ந்த சினிமா பாடல்கள்-பால் கறக்கும் இலட்சுமி பசு -முற்றத்து மாக்கோலம்- மொட்டை மாடி வற்றலென எனக்கு அவள் செய்கைகள் மீதான பிரமிப்பும் ஈர்ப்பும் அலாதி. என் பசிக்கு சோறூட்டிய கை. தலை பின்னி பூ முடித்த கை. கைகளுக்குள் கை கோர்த்து ராட்டினம் போல சுற்றிக்காட்டுவாள். எனக்கு

தலை கிறுகிறுக்கும் ஆனால் அவள் அசையாம்ல் அப்படியே நிற்பாள். ஆச்சரியமாய் இருக்கும்.இப்போதோ சோர்ந்து போய்க் கிடந்தாள்.
இரவு முழுக்க ஒரே இரைச்சல்.அத்தைகளும் வந்திருந்தார்கள்.தூங்கிப் போனேன்.

மறுநாள் வீடு முழுக்க தேடியும் முத்தக்கா கண்ணில் படவேயில்லை. வெள்ளிக் கிழமை அப்பத்தாவுடன் கோவிலுக்கு போகும் போது பார்த்தேன். முத்தக்கா முத்தப்பண்ணன் வீட்டில் பாத்திரம் தேய்ப்பதை. மூணரை வயதுக்கு சாதியும் காதலும் பெரிதாய் தெரியவில்லை எனக்கு.

”முத்தக்காஆஆ!”

என் பெயரைச் சொல்லியபடி ஓடிவந்தவள் அப்பத்தாவின் சுட்டெரிக்கும் பார்வையில் அப்படியே நின்றுவிட்டாள். கோயில் வந்து விட்டது. முத்தக்கா சின்னதொரு புள்ளியாகிப் போனாள்.

“ம்ம்ம்! கையில அரைக்கிற மாதிரி வருமா மிசினில அரைக்கிறது? கல்லுமாதிரிக் கெடக்கு இட்டிலி... “ அங்கலாய்த்த அப்பத்தா மருந்துக்கும் ’முத்து இருந்தா..’ என்று

சொல்லவில்லை. வம்படியாக மறக்கப்பட்டாள் அவள் காதலின் பெயரால்...

ஈரம் படாமல் எவர் கையும் படாமல் வெறிச்செனக் கிடந்தது ஆட்டுக்கல்.

Wednesday, February 15, 2012

தடுமாற்றம்


இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது
சகுனம் சரியில்லையென்றாள் ஒருத்தி
சத்துக் குறைவென்றாள் இன்னொருத்தி
’தூங்கினால் தானே’ அலுத்துக் கொண்டாள்
மற்றொருத்தி!
’கண்ணுக்கு மூக்குக் கண்ணாடியிடு’
சிரிப்பலைகள் பரவி ஓய்ந்தன.

தோழிகளின் சீண்டல்களைப் போலவே
நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது
தாழிடாமலும்
முற்றிலும் திறந்திடாமலும்
காற்றில் அல்லாடும் கதவுபோல
இமைகளோடு இடது கண்!

அதே லயத்தில்
பார்வையில் பருகிய உன்னை
பத்திரப்படுத்தவா வேண்டாமா
பதறிக் கொண்டிருக்கிறது இதயம்

Monday, February 6, 2012

நிரம்பியவை


கோடிட்ட இடங்களில் 
வசதிப்படி வந்தமர்கின்றன 
வார்த்தைகள்
முழுமையடைகிறது 
வாக்கியம்!
அதற்குள்
அனேகமுறை 
நிரப்பி 
அழித்து 
களைத்துவிட்டது 
மனம்

Sunday, February 5, 2012

கவித்துளி

கவிதை சொல்வதை
கைத்தொழிலாய் கொண்டால்
உணர்வோடு உயிர்ப்பும்
போகக்கூடும்

வெறும் சொற்களின்
கூட்டமாய் கவிதை - அதில்
உவப்பில்லை எனக்கு!

நடப்பில் செரிக்கவியலாதவற்றை
எழுத்தில் சொல்லி
உயிர் கொண்டெழுகிறேன்
வடிகாலாய் கவிதைகள்!

சில மனங்கள்
நனையக்கூடும்

சூழ்நிலை சார்ந்து
ஏதேனும் ஒருதுளியேனும்
கடல் சேரலாம்
அதனதன் படைப்பின்
காரணத்தை தாங்கியபடி!



மொக்கவிழ்ந்த நொடி


ஒரு கோடைகால ஞாயிறு
வெயில் தகித்த மணல்
வெற்றுக் கால்கள்
வெம்மையின் வேதனை
கைகள் காலணித் தரித்திருந்தன!

நடந்து கொண்டிருந்தோம்
நிறையப் பேச வேண்டியிருந்தது
எதில் தொடங்குவது என்பதில்
வார்த்தைகள் சிக்கியிருந்தன

சொல்லிவிட்டால் என்னுடல்
சுவாசிக்கக் கூடும் - இருப்பினும்
கேட்கத் துணிவில்லை
செவிகளுக்கு!

பீடிகைகளில் புரிந்திருந்தது
ஏனோ  வார்த்தைகளில்
வசமாகவில்லை!

முழுதாக ஒரு மணிநேரம்
செலவிடப்பட்ட வினாடிகள்
எங்களைக் கேலி செய்தபடி...

உப்பு நிறைந்த நீர்
கல் மனதை
கரைத்துப் போயிருந்தது

கணிச இடைவெளியில்
மனங்கள தழுவிக்கொண்டிருந்தன

“நேரமாச்சு மாமா போகலாமா..?”
பொறுமையிழந்தேன்

“ம்ம்”
அமர்த்தலாய் ...

அமைதியாகத் திரும்பினோம்
சொல்லிக் கொள்ளவேயில்லை

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
மோதிக் கொள்ளும் ஆபத்தில்

“ஆயுசுக்கும் வாழணும்டி உங்கூட”

மௌனம் உடைத்த
அவன் குரல் தழுதழுத்தது!
நினைவுச் சுரங்கத்தில்...
இன்னும்
பசுமை மாறாமல்
என்னுள் காதல்
மொக்கவிழ்ந்த நொடி!

Monday, January 30, 2012

மாறுதல்

நினைவிருக்கிறது
ஒரு கோடைகாலத்தில் 
களைப்பில் தலைசாய்ந்ததும்
மனிதம் புழங்காத இவ்விடம் 
காயம் தந்ததும் 
கற்களின் கூர்முனை 
உதிரம் கொண்டதும்!

இப்போதும் 
அதே கற்களின் மீதே என்படுக்கை
இடையே வழுக்கிக் கொண்டோடுகிறது 
நட்பெனும் மழைநீர்!

Saturday, January 7, 2012

6 நிமிடங்களில்...


”வேகமாய் போ! அந்த கறுப்பு நிற ... ம்ம் மஞ்சள் சட்டை ஊதா ஜீன்ஸ்
அவந்தான் பார்ட்டி”

“சரி சரி, இனி நான் பாத்துக்கிறேன்!நீ வை”

அலைபேசியை மடித்து கைப்பைக்குள் போட, தவறி தரையில் விழுந்தது.
அவள் அதை எடுக்கக் குனிந்த அதே நேரம், மதுக்குப்பிகளோடு ஒருவன் தன்னை அந்த காருக்குள் நிரப்பி அதை உயிர்ப்பித்தான்.
கணநேரத்தில் வந்த வேலை காரேறி போனது.
சிணுங்கியது அலைபேசி.
“முட்டாள். முட்டாள். கவனமேயில்லை. எல்லாங் கெட்டுச்சி. அறுவது லட்சம் மொத்தமா அறுவது.உன்னையெல்லாம் பெரிய பிஸ்துங்கிரானுங்க.... $$#$@@$@$”

வழக்கமான வசவுகள் தான். சளைக்காமல் இருந்தாள். அவன் கொதித்து முடித்ததும் ,

”முடிச்சிட்டு வர்றேன் நீ போ! சும்மா கத்திட்டேயிருக்காத”


15..30..45...60...
சரியாக ஒரு மணி நேரம் கழித்து .... 

அதே கார். கண்ணைக் கசக்கி கொண்டு பார்த்தாள். அந்த மூன்று நட்சத்திர விடுதி முகப்பின் சொற்ப விளக்கு வெளிச்சம் கனவல்ல மெய்தானென்றது.
கிரீச்சிட்டு நின்றது. அந்த மஞ்சள் சட்டையோடு ஒரு வெள்ளைச் சட்டையும் கூடுதல் இணைப்பாக. கைப்பையை தடவிக் கொண்டாள்.இன்னிக்கு என் திறமையை நிரூபிக்கிறேன் பார்.

“அறுவது லட்சம் மொத்தமா அறுவது” அசரீரியாய் கேட்டது இவள் காதுக்கு மட்டும்.

அவன் தள்ளாடியபடி நடந்து போனான். ஏதோ இரைந்தபடி, கூட வந்தவனிடம்
காட்டுக்கத்தலாய் கத்திக் கொண்டிருந்தான்.

”தண்ணி கேட்ட வாங்கித் தந்தேன்.இப்போ நீ எனக்கு கடனாளி.பதிலா நான் கேட்டா என்ன மழுப்புற”
ஓ! பிரகாசமானது முகம்.வழி கிடைக்கும்... காத்திருந்தாள்.

எதிர்பார்த்தபடி அரைமணியில் வெள்ளைச்சட்டை மட்டும் வர,மெல்ல நெருங்கினாள்.

”இல்ல மாமு! அவன் பொண்டாட்டி சரியில்லன்னு தண்ணியடிக்க கூப்டான். வந்தேன். தண்ணியடிச்சி முடிச்சதும் இப்ப வேற வேணுங்றான். இவன்டயும் இவங்கப்பன் கிட்டயும் கெடந்து அல்லாடுறேன். ஒரே ராவடி....அதான் தெரிஞ்ச இடமெல்லாம் தேடிப் பாக்கலாம்னு. உனக்கு யாருன்னா தெரியுமா மாமு?”
இவளின் நெருக்கத்தை வெளிநாட்டு சென்டின் மணம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

"மாமு நான் அப்றம் கூப்டறேன்”

“என்னா”

சில சமிஞ்ஞைகள். கண்டு கொண்டான்.
 சடாரலென,
“எவ்ளோ?”

“அறுவது”

“ஆயிரம்?”

“இல்ல லட்சம்”

“ஹிஹி உனக்கு குடுக்கலாம்.ஹி ஹி...”

“உன்னால முடியாது”

“ஆமா ஆமா உள்ள இருக்கது மந்திரி மகன் அவனால முடியும். ஹி ஹி”

“வழியக் காட்டு நான் கெளம்பணும்”

வரவேற்பறையில் “சார்” எனக் குரல் தந்தவன் வெள்ளைச் சட்டையின்
கண்சிமிட்டலில் தெளிந்தவனாக எரிச்சலாய் தலை குனிந்து கொண்டான்.

வரவேற்பறை கடந்து, முதல் மாடியில் , அடுத்த மாடிப் படிக்கட்டின் தொடக்கத்தில் அந்த அறை.அனிச்சையாய் கடிகாரம் பார்த்தாள்.மணி அதிகாலை 1.00.

அழைப்பு மணியை தொட நீட்டிய அவன் கைகளை, இழுத்து முறித்தவள் சத்தம் வராதபடி வாயை மூடினாள். விலா எலும்புகள் நொறுங்கி விழுமளவு கால் முட்டியால் தாக்கப்பட்டவன் மடிந்து மாடிப் படியின் ஓரத்தில் உட்கார்ந்தான்.கைப்பையினுள் துழாவி கிடைத்த மாத்திரத்தில், சராலென பிரயோகித்தாள் அவன் குரல்வளையில். இரண்டு மூன்று நான்கு ...பருத்த சரீரம்.வெள்ளை சட்டையை நனைக்க தொடங்கியது குருதி....

யாரும் பார்க்குமுன் அறுவது லட்சம்....

சட்டை நனைத்த குருதி படிக்கட்டுகளில் பரவும் முன்னர்.... திட்ட மிட்டுக் கொண்டாள்.
அழையாத விருந்தாளியாக அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் சிதறிக்கிடந்தவனை நிதானமாகப் பார்த்தாள்.

”வா... வா.. எடுப்பு நீ கில்லாடிடா.தேவதடா.. எங்க ... அவன் ...?”

தள்ளாடி எழ முயற்சித்தவனை தள்ளி அவன் கழுத்து,மார்பு என விரும்பியபடி கத்தியால் கிழித்துப் பார்த்தாள்.துடித்து அடங்கியது அவனுயிர்.பீறீட்ட ரத்தம் பஞ்சணை நனைத்தது.


கடிகாரம் பார்த்தாள்.இரவு  1.03.

சட்டென கண்ணாடி பார்த்தவள். அணிந்திருந்த வெள்ளை உடுப்பை கழற்றி,
வேறுடை ,வேற்று உருவமென கண நேரத்தில மாறினாள். கதவை திறந்து வெளியே வந்து படியிறங்கினாள். அவளோடே படியிறங்கியது குருதி ஒரு மெல்லிய கோடாக....

வரவேற்பறையை கடக்கையில், மெல்ல நிமிர்ந்த தலை ஏதும் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொணடது.

ஹோட்டலை விட்டு நெடுஞ்சாலைக்கு வந்தவள், திடுமென ஒரு பெரிய லாரியின் உரசலில் திடுகிட்டு பின் முகமலர்தாள்.அவளையும் அள்ளிக் கொண்டு பறந்தது லாரி.

மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தாள் 1:06.

”நீ டாக்டர் படிப்பை முடிச்சி வேலை செஞ்சா கூட இவ்ளோ சீக்கிரம் இவ்ளோ பணத்தை பார்க்க முடியாது.ஹி ஹி”
கறைபடிந்த பற்கள் தெரிய சிரித்தான்.

ரத்தம் படிந்த கையுறைகளோடு பணத்தையும் பையில் போட்டுக் கொண்டாள்.ஆயுதம் இடறவும்,’அடுத்த முறை ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’. விரக்தியாய் சாலையை வெறிக்கத் தொடங்கினாள். அவள் கண்ணெதிரே கடந்து போனது மருத்துவக் கல்லூரி.

அந்த திசைக்கு நேரெதிரே அவர்கள் பயணிக்கத் தொடங்கினார்கள்.
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!