Saturday, March 16, 2013

உன்மத்தம் பிடித்த வாத்துக்கள்



உச்சிவெயில் பொழுதொன்றில்
மெல்ல நடந்து கொண்டிருந்தேன்
மூளை தொட்டச் சூட்டிற்கு
முக்காடிட்ட மரநிழல்கள்
வலப்புறம் அகன்ற வயல்வெளி
இடப்புறமொரு நீரோடும் வாய்க்கால்
சலசலத்தோடும் நீர்பரப்பெங்கும்
செழிப்பாய்ப் பசுங்கீரைகளும்
சிலவகைக் கோரைகளும்
மீன்களோடு வாத்துகளும்
தத்தம் திசையில் பயணித்தவாறு....
மத்தியான பவனியது

தூரத்தே தியான மண்டபம்
சுற்றிலும் பசுஞ்சோலை
விழிசுட்டும் வழியெல்லாம்
பச்சைப் பசேல் பசுங்காட்சி

சிலர் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்
சிலர் மத்தளம் தட்டிக் கொண்டிருந்தார்கள்
நான் அவர்களை வாசித்துக் கொண்டிருந்தேன்

மேய்ப்பவர்கள் எவருமில்லை
வாய்க்கால் மடை வரை
தாமே நீந்தி தாமே திரும்பிக் கொண்டிருந்தன
வாத்துக்கூட்டங்கள்
இயக்கியின் சூட்சுமத்தில் நகரும்
கைப்பாவை போன்றதானதொரு லயத்தில்....

மத்தளங்கள் அடங்கின
மடத்தலைவர் பிரசங்கம் செய்தார்
மனிதர்கள் வாத்துக்களானார்கள்
தண்ணீர் விட்டேறிச் சிறகுவிரித்து
சிறு பிள்ளைகள் பின்னோடி
தட்டைக் கால்த்தடம் பதித்து
வயல் பார்த்து
அவைதம் குலவிக் கூடி
அதிர்வுகளில்லாத மோனத்தில்
வாத்துக்கள் மனிதர்களாயின

படம் : நன்றி கூகுள்

Sunday, March 10, 2013

நீங்கா நிழல்

நடக்கத் துவங்கிய
நாளிலிருந்தே
பாதங்களின் அடியில்
முளைக்கத் துவக்கினாய் நீ
வெளிச்சத்தின் வீதம்
நீட்டிக் குறைக்கிறதுன் அளவை!

விட்டு விட்டு எரியும்
தெரு விளக்கொளியில்
ஊளையிடும் நாய்களுக்கு
உன்னைக் காட்டித்
தப்பிப் போயிருக்கிறேன்

இரவு வேளைகளில்
மேல்மாடிக் கதவடைக்க
எப்போதும்
உன் துணை தானெனக்கு

இரவில் என் முதுகின்
பின் நீ அயர
விடியும் வரையில்
தேடிக் கொண்டிருந்தேனுன்னை...


என்னோடு தூங்கி
என்னோடே எழுந்தாய் நீ
சூட்சுமம் புரியாமல்
காலத்தோடு கண்ணாம்பூச்சி ஆடிக்
கொண்டிருந்தேன்

விட்டுப் பிரியாமல்
விலகி நடக்காமல்
ஒட்டியும் உரசியும்
ஒன்றாகிய உன்னைப் போய்
எவருடனோ ஒப்பிட்டிருக்கிறேன்

நேற்றில்லை
இன்றில்லை
என்றும்
என்னோடே நீங்காது
நில் என் நிழலே!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!