Thursday, September 30, 2010

எஸ்தரம்மா

“எவ்வளோ நேரம்டி?இத்தனை நேரம் என்ன பண்ணின? போன் கூட எடுக்காம?”

அம்மாவின் காட்டுக்கத்தலில் நியாயம் இருந்தது. 12 அழைப்புகள்.இருந்தாலும்,“தூங்கிட்டிருந்தேன். இப்போ என்ன? காலையில எட்டுமணிக்கு கூப்பிட்டா என்னவாம்? அதுக்கு முன்னால ஏன்மா கொல்லுறீங்க? அப்படி என்ன தலை போற விசயம்?”

”இல்ல..எஸ்தரம்மாக்கு... ஆஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு கொண்டாந்துட்டாங்க. உடம்பெல்லாம் விறைச்சிட்டு.சரிடாம்மா. நீ இங்க கொஞ்சம் கிளம்பி வர்றியா? பாவம் அந்த ரேகா பொண்ணு.யாரிட்டயும் பேசவே இல்லை.கஷ்டமா இருக்கு. வந்திரு என்ன?அப்பா உனக்கு சொல்ல வேணாமுன்னு தான் சொன்னார்.ஆனாலும்..வரப்பாரு.ஏன்னா எஸ்தரம்மாக்கு நீயும் ரேகாவும் வேற இல்ல எப்பவும்...”, அம்மாவின் விசும்பல் கேட்டது.

அழைப்பு துண்டிக்கப்பட்டும் காதிலே வைத்திருந்தேன் கைபேசியை. சில நிமிட இடைவேளைக்குப் பின் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.யாருமறியாமல் அழுவதே நிசமான ஆறுதலும் ஆசுவாசமும்.மொட்டைமாடிக் கைபிடிச்சுவரில் சாய்ந்தபடி கண்ணீர் சிந்துவது இறுக்கமான அந்த சூழ்நிலைக்கு தேவையானதாக இருந்தது.அடுத்த அரைமணியில்,அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு கோயம்பேடு நோக்கி பறந்திருந்தேன். ஏதேதோ சிந்தனைகள் மேவ,அலைபேசி சிணுங்கியது.புவனா,அலுவலகத் தோழி.

“யாருக்குடி உடம்பு சரியில்ல. உன் டீம் மேட் சொன்னான் திங்கட்கிழமை தான் வருவியாமே.உனக்கு சொந்தக்காரங்கன்னாவே பிடிக்காதே. இப்ப மட்டும்?ஹேய்.. தூங்குறதானே ஹாஸ்டல்ல”

“என் எஸ்தரம்மாவுக்குடி.என்னாச்சுன்னு தெரியல”

வார்த்தையின் அழுத்தம் ஏதோ உணர்த்தியிருக்க வேண்டும்.

“சாரிப்பா! பார்த்து போயிட்டு வா!பத்திரம்”

அணைக்கப்பட்டது அலைபேசி.விட்ட இடத்திலிருந்து கிளம்பத் தொடங்கியிருந்தன நினைவுகள்.


*******************பகல்நேரப் பயணங்கள் எப்போதும் நீண்டிருப்பதாய் தோணும். உறக்கமும் வராமல்,இருப்பும் கொள்ளாமல் கொஞ்சம் அசவுகரியத்தை தருவதாயும், இப்போது இதெல்லாம் உணரும் மனநிலை இல்லை .எஸ்தரம்மா...எஸ்தரம்மா... நெஞ்சம் முழுக்க நிறைந்து நிற்கும் அன்பு தேவதை. பேரூந்து நகர நகர எஸ்தரம்மா குறித்த நினைவுகள்.எப்போது முதலில் பார்த்தேன் என்பதில் தொடங்கி கலவையாக ஏதேதோ!


”காலையில என் பெரிய பையனுக்கு பிறந்த நாள்.ஒரு பத்து பதினஞ்சு பேருக்கு சமைக்கணும்.என்னென்ன செய்யலாம் சொல்லுங்களேன். நீங்க செய்யுற கேக்கு தான் வேணுமாம் அடம்புடிக்கிறான்”

“நாளைக்கு மார்கழி 1. இரங்கோலி போடனும். ஒரு நல்ல ஐடியா குடுங்களேன்.”

“இவளுக்கு பட்டுப்பாவடை சட்டை தைக்கணும். இந்த மாடல் சரியா சொல்லுங்களேன்.”

“ஒரு ஆர்.டி தொடங்கணும். பேங்க் வரைக்கும் வர்றீங்களா எஸ்தரம்மா?”

“அப்பாவுக்கு உடம்புக்கு முடியலயாம் அவசரமா கிளம்புறேன்.பாத்துக்கோங்க.அவர் வர ராத்திரியாகும்.அதுவரைக்கும் பசி தாங்காதுங்க. பாத்துக்கோங்க”
இப்படி அம்மாவின் நம்பிக்கைக்குரிய தோழி. என் தோழிகளின் அம்மா.என் ஆங்கில குரு.பியானோவின் மீது என் காதலுக்கு வித்திட்ட முதல் தேவதை.சேக்ஸ்பியரும் ஆங்கில இலக்கியமும் அத்தனை எளிமையாய் எனக்கு இதுவரை யாரும் சொன்னதில்லை.எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பக்கத்து வீட்டு கதாபாத்திரம்.இதோ இன்றோ நாளையோ... என்னுடன் இனி நினைவுகளாய் மட்டும். தொண்டையடைத்தது.
இருபத்தியிரண்டு வருடங்கள். அவள் வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் கண்ணார கண்டு சந்தோஷித்து,விமர்சித்து,சண்டையிட்டு,துக்கம் கொண்டு என எல்லா கோணத்திலும் அவளுக்கும் எனக்கும் ரேகாவுக்கும் இடையேயான பிணைப்பு இறுகியபடியே வந்திருக்கிறது.


**************************”நவம்பர் வருதுப்பா. உன் லைஃப்ல நான் வந்ததும் வர்ற முதல் பிறந்தநாள். என்ன வேணும் என் கண்மணிக்கு?” நிச்சயிக்கப்பட்டவன் காதலாய் கேட்கும் போதும்...


“எதுனாலும் என் எஸ்தரம்மா தந்ததை விட பெஸ்டா இருக்காதுங்க. அவளோ கலாரசனை உள்ளவங்க. பத்தாங் கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததுக்கு அவங்க எனக்கு ஒரு வளையல் வாங்கித்தந்தாங்க.முத்து வச்சது.இன்னும் அப்படியே வச்சிருக்கேன் தெரியுமா?”

“முத்துன்னா அவ்ளோ பிடிக்குமா?”

“இல்ல எஸ்தரம்மான்னா அவளோ பிடிக்கும்”

“உன்னெல்லாம் கட்டிக்கிட்டு.... உனக்கு என்ன பிடிக்குமின்னு கேட்டா? ஏன்பா நீ இப்படியிருக்க..” கோபத்தில் அழைப்பைக் கத்தரித்தான்.

மறுநாள் அவளைப் பற்றி அழுதபடி சொன்னதும் உருகிப் போனவன் “நான் ஒரு தடவை பேசனுமே” என்றான்.

”இப்பவா? ... அவங்களுக்கு புரியுமா தெரியலையே”

”உங்க ஆண்டாளு மாதிரி தான் நானும் நோன்பிருந்து அத்தானை கட்டிக்கிட்டேனாக்கும். என்பதுகள்லயே புரட்சி திருமணம் எங்களது. யாரெல்லாம் வந்தா தெரியுமா? உங்கல்யாணத்துக்கு பாருடீ. எஸ்தரம்மா என்னவெல்லாம் டெகரேட் செய்யுறேன்னு?”  மடியிலிருக்கும் என்னை கொஞ்சியபடி சொல்வாள். “அப்போ எனக்கு” என ரேகா கொஞ்சுவதும் சிண்டரெல்லா கதைகளில் வரும் திருமணங்களை போல நடத்துவேனாக்கும் என்று அவளை கற்பனைக்கு தள்ளிவிட்டு நமட்டு சிரிப்பு சிரிப்பாள்.
எஸ்தரம்மா! தெரியுமா? எனக்கு திருமணம்.அலங்கரிக்கவோ,அந்தரங்கம் சொல்லித்தரவோ நீங்கள் இருக்கப்போறதில்ல.என்னென்ன கனவுகள் இருந்தது உங்களுக்கு என் குறித்தும் ரேகா குறித்தும். ரேகா எப்படி ஆறுதல் சொல்வேன் உனக்கு? அழுதுவிடு. மனம்விட்டு அழுதுவிடு.
விம்மலாய் எழுந்த துக்கம் கண்ணீராய் ஓடிக் கொண்டிருந்தது.

”என்னக்கா ஆச்சு?” பக்கத்திலிருந்த சிறுமி கேக்கவும் “ஒன்னுமில்லடா” என்றவாறு கண்ணைத் துடைத்துக் கொண்டேன்.எதிரெதிரான மனநிலையுடன் அவள் வேறு கேள்வி கேட்டு அடிக்கடி இம்சித்துக் கொண்டிருந்தாள் என் கண்ணீரை தடுக்கும் பொருட்டு.ஆனால் அதை ரசித்து ஏற்கும் மனநிலையில் நான் இல்லை இன்று.

****************

“அட கண்ணம்மா! இன்னிக்குத் தான் வந்தியா?இளைச்சிட்டாள்ல?” அம்மா ஏதோ போகட்டும் என “ஆமாம்மா” சொல்லி வைப்பாள்.நான் மட்டும் ஓடிப் போய் சினேகமாய் அவளைக் கட்டிக் கொள்வேன்.எஸ்தரம்மா ரொம்ப அழகு.முகம் அத்தனை சாந்தம்.அதன் வசீகரமோ என்னவோ யாருக்கும் அவரென்றென்றால் சட்டென ஒட்டிக் கொள்ளச் சொல்லும். பெருந்தன்மையான சுபாவம் என்பதாலே அக்கம்பக்கத்து பெண்களிடத்தில் நல்ல பெயர் அவளுக்கு.மெத்மெத்தென்ற அவள் மடியில் படுத்ததும் தூங்கிப் போவேனாம்.எனக்கு மூத்த பொண்ணுடீ நீ எனச் சொல்லிச் சிரிப்பாள்.நான் பழிப்புக்காட்ட ரேகா அழுவது வேடிக்கையாயிருக்கும்.


ரேகா,ஜூலி என எஸ்தரம்மாவுக்கு இரண்டு பெண்கள்.ரேகாவின் அப்பா வெளியூரில் தங்கி இரும்பு சம்பந்தமான ஏதோ தொழிற்சாலை நடத்துவதாய் கேள்வி. ஆரம்ப காலங்களில் எல்லா கடைசி ஞாயிற்று கிழமைகளிலும் எஸ்தரம்மா வீடு களை கட்டும். கேக், பிரியாணி, வித விதமான வெளிநாட்டு சாக்லேட்டுகள் என எங்கள் வீட்டில் உள்ள வாலுகளுக்கும் அங்கே தான் வாசம்.அன்னிக்கு தான் ரேகாவோட அப்பாவ பாக்க முடியும். ரேகாவும் ஜூலியும் அவரிடம் அத்தனை ஒட்டுதலாய் இருப்பது பார்க்க நன்றாக இருக்கும். சர்ச்சுக்கு குடும்பம் சகிதமாக எஸ்தரம்மா கிளம்பிப் போகையில் அவரின் நடை உடை பாவனை என எல்லாவற்றிலும் ஒரு மிடுக்கு. இத்தனை அழகா இவள்? விழிகள் விரிய ரசித்துக் கொண்டிருப்பேன்.ரேகா என்னை விட இரண்டு வயது சின்னவள். ஆனால் நிறைய பெரிய மனுசித்தனம் தெரியும்.என் வாய்த்துடுக்கும் வாலுத்தனமும் இவளின் பொறுப்புணர்ச்சிக்கு முன்னால் அம்பேல்.

எஸ்தரம்மா எங்கள் ஊரிலேயே ரொம்ப வசதியான வீட்டில் பிறந்தவர். ஒரே ஒரு தம்பி மட்டும்.ஆனால் பணத்திமிரோ முதுகலை ஆங்கிலம் படித்த திமிரோ எதுவுமே இருக்காது. எஸ்தரம்மாவுக்கு தன் கணவன் தான் எல்லாமும்.அவர் சொல் தான் வேதம்.இருவரும் வெவ்வேறு மதம். காதல் திருமணம் என்பதால் தம்பதிகளுக்குள்ளே அத்தனை நெருக்கம்.அம்மாவிடம் பேசும்போதெல்லாம் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் ”ரேகாப்பா” என்று தன் கணவனை சேர்த்துக் கொள்வாள். பிரிஞ்சிருந்தா தான் பாசம் இருக்கும் போல ’எஸ்தரம்மாவ பாரு’ அம்மா ஒருமுறை சலிப்பாய் அங்கலாய்த்தது நினைவிருக்கிறது.எஸ்தரம்மாவின் அப்பா இறப்புக்குப் பின் கிடைத்த பெரும் பங்கு பணத்தில் தான் ரேகா அப்பாவின் தொழில் நடந்து கொண்டிருந்தது.அதிலேற்ப்பட்ட பிரச்சினைக்குப் பின் அவள் அம்மாவுடனோ தம்பியுடனோ பேசுவதோ பழகுவதோ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிற்று.காரணம் தன் அப்பா தான் என்று ஒருமுறை ரேகா சொன்னதாய் ஞாபகம்.

********************************

ஒரு அரையாண்டு தேர்வு விடுமுறை.என் வீட்டு முகப்பில்,ரேகாவும் நானும் ஏதோ ஒரு கணக்கை விடுவிப்பதில் மும்முரமாயிருந்தோம். ஜூலி திடுதிடுவென எங்களை கடந்து ஓடினாள்.


“மல்லிகாம்மா! எங்கம்மாக்கு ஏதோ பண்ணுது.ஒரு மாதிரி பாக்குறாங்க.பல்லை கடிக்கறாங்க. வாங்களேன்” அழுகையும் பயமுமாக அவள் சொல்லவும், அதே பயமும் பதட்டமும் எங்களுக்கும் பற்றிக் கொண்டது.

இடையே ஒரே ஒரு சுவர் தான். நிறைய கலைப்பொருட்களுடன் விஸ்தாரமாய் இருக்கும் ரேகாவின் வீடு.தட தடவென தெருவில் இறங்கி வீட்டுக்குள் செல்லவும் அங்கே நான் கண்ட காட்சி இப்போதும் நினைவில் மங்காமல்...பற்களை கடித்துக் கொண்டு,உதடுகளில் ரத்தம் வடியும் பிரஞ்ஞை கூட இல்லாமல், கலைந்த கேசமும் நழுவ விட்ட மாராப்புமான ஏதோ ஒரு சூனியவெளியில் சஞ்சரிப்பவள் போல. கண்களில் மட்டும் அத்தனை குரோதம்.

நாங்கள் மூவரும் பலதடவை கூப்பிட்டும் எந்த அசைவும் இல்லை.ஏதோ வெறி கொண்டவளாக திடீரென எழுந்தவள் எதிரிலிருப்பதை எல்லாம் உடைக்கத் தொடங்கினாள்.அம்மாவும் வீட்டு வேலைக்காரம்மாவும் தடுத்தும் முடியவில்லை. எஸ்தரம்மாவின் கோவத்தில் அந்த வீடு சிலமணி நேரத்தில் சின்னாபின்னமானது.
அம்மா அறிவாளியாக செயல்படத் தொடங்கினாள். எங்களை எல்லாம் வெளித்தள்ளிவிட்டு, உள்ளே போனவள்.“எஸ்தரம்மா! உங்க வீட்டுக்காரரு போன்ல. பேசுங்க வாங்க. சேகரண்ணா இருங்க இருங்க வராங்க” எனவும் சட்டென திரும்பியவள் ”அவரா? போன்ல அவரா?” என வாயில் ரத்தம் சொட்டுவது கூட தெரியாமல் போனை எடுத்து பேசத்தொடங்கினாள் மிகவும் கொச்சை கொச்சையாக.அத்தான் அத்தான் என்று உருகிப்போகிறவள், ஒவ்வொரு பிடிச்சோறும் அவனுக்காக,அலங்காரங்கள் அவனுக்காக எனச்சொல்லிச் சொல்லி மாய்பவள். அத்தனை கடுமையாக வெறிபிடித்தவளாக கத்திக் கொண்டிருந்தாள் சித்தமிழந்து.

அவளை உள்ளே தள்ளி கதவை தாளிட்டு விட்டு, மின்சாரத்தையும் நிறுத்தி விட்டு நிமிர்ந்த அம்மாவின் முகத்தில் ஏதேதோ கேள்விகள்.நேத்து காலையில் எஸ்தரம்மா முகத்தில் இருந்த தெளிவு அவள் கணவன் வந்து போனபின் இல்லையே.என்னாயிற்று? அவரா காரணம்? இதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்த ரேகா மெதுவாய் ”அம்மாக்கு என்ன மல்லிகாம்மா” எனக் கேட்க அவளைக் கட்டிக்கொண்டு அம்மாவும் அழத்தொடங்கினாள்.ரேகாவின் அப்பாவான சேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்த சிலமணி நேரங்களில் நடந்த கொடுமைகள் சொல்லி மாளாது.

”உனக்கு என்ன தரல ஏன் என்ன நாசம் பண்ணிட்டே! வேணாம் அத்தான் போகாதே ப்ளீஸ். அவளைப்பாரு என்ன பண்ணுறேன்னு. தப்பு தப்பு. அவ அங்கயே இருக்கட்டும். நான் ஒண்ணும் சொல்லல நீங்க போகாதீங்க.போனா...அய்யய்யோ தெரியாம அடிச்சிட்டேன்.. கொல்லாதீங்க. என் கண்ணில்ல. என் ஆச அத்தானில்ல”

அவரை சராமாரியாக தாக்குவதும், தடாலென காலில் விழுந்து கெஞ்சுவதுமாக இருந்த எஸ்தரம்மா இன்னும் என் கண்ணில் பரிதாபகரமாக அப்படியே. மனநிலை சரியில்லாத குழந்தை அது. அதைக் கூட புரிந்து கொள்ளாமல் அவளது தாக்குதலுக்கு பதிலாய் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டால் விளாசித்தள்ளினார் சேகரன். கூட வந்த ஆட்களைக் கொண்டு கைகளைக் கட்டியும் நீளமான முடியை கட்டிலோடு இணைத்தும் திமுறும் அவளை மோசமாக அர்ச்சித்த வண்ணம்,
“பைத்தியக்காரி! பைத்தியக்காரி! இவள என் தலையில கட்டி வச்சு என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டான் அந்தாளு.” ஆத்திரமும் கோவமுமாய் கத்திக் கொண்டிருந்தார்.காதலித்து கைபிடித்த மனைவி, அவரது தவறான நடத்தையின் பேரில் மனநிலை சிதறியதும், இரண்டு பெண்பிள்ளைகள் அநாதரவாய் இருப்பதும் மறந்து 45 வயதில் வாழ்க்கையை இழந்ததாய் உறுமிக் கொண்டிருந்தது அந்த கிழட்டுச் அசிங்கம். ஒரு நிமிடத்தில் எஸ்தரம்மா பிறப்பிலேயே சித்தசுவாதீனம் இல்லாதவள் போல சித்தரிக்கப்பட்டாள். பெண்மோகம் ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.


அடுத்த அரைமணியில் உடற்காயங்களினாலான கதறலா இல்லை உள்ளத்து கதறலா எனத்தெரியாதபடிக்கு மிகக் கொடூரமாய் கத்தியபடி மனநிலை மருத்துவமனை வண்டியொன்றில் ஏற்றப்பட்டுவிட்டிருந்தாள். ’அம்மா அம்மா’ எனக் கத்தியபடி ரேகாவும் ஜூலியும் என் அம்மாவின் பிடிக்குள்.
”பைத்தியத்தைக் கட்டிக்கிட்டு இவன் என்ன பண்ணுவான்? பாவம் சேகரன்” உச்சுக் கொட்டியபடி கலைந்தது கூட்டம்.


“பாத்துக்கோங்க இதுங்கள!” மேலோட்டமாய் சொல்லி விட்டுப் போனார். என் வீட்டில் நால்வரோடும் ஜூலியும் ரேகாவும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சகஜத்துக்கு கொண்டு வர பெரும் பாடானது. இரண்டு நாட்களில் சிங்கப்பூரிலிருந்து ரேகாவின் மாமாவும் மாமியும் வர குழந்தைகள் அவர்களுடன் அனுப்பவேண்டாம் என்ற சேகரனின் கட்டளை அவர் காரியதரிசியின் மூலமாகவே தெரிவிக்கப்பட்டது.

“எல்லாமே குடுத்துட்டமே! என்ன வேணும் அவனுக்கு.அந்தப் பொம்பள சகவாசம் தான் வேணுமின்னா போகட்டும்.எம்பொண்ண உசிரோட குடுத்துற சொல்லுங்கப்பா” அம்முச்சியின் கதறல், இது இன்றைய பிரச்சனையல்ல நெடுநாளாய் எஸ்தரம்மா மனதுக்குள்ளிருந்த அழுத்தமென்று புரியவந்தது. உள்ளே அழுது கொண்டும் வெளியே சிரித்துக் கொண்டும் அவள் பட்டிருக்கும் பாடு ரேகாவுக்கு மட்டுமல்ல எனக்கும் பேரதிர்ச்சி. ஏனெனில் அவள் முகத்தில் அப்படி எந்த தடயமும் இருந்ததே இல்லை.


நாற்பது நாள் சிகிச்சைக்குப்பின் எஸ்தரம்மா அவரது அம்மா வீட்டுக்கு கொண்டுவரப்பட்டாள். சங்கிலியால் பிணையப்பட்டும் மாத்திரைகளின் ஊட்டம் தந்த மயக்கமுமாக இருந்தவளை பார்த்தபோது நான் ரேகாவை கட்டிக் கொண்டு அழுதேன். பதிலுக்கு ரேகாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

“அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கார்டி. அந்தப் பெண்ணை சட்டப்பூர்வமான மனைவியாக்குவதாய் சொன்னதும் தான் அம்மாவுக்கு இத்தனை பிரச்சனையும். அஞ்சு வருசமா பொறுத்திட்டு இருந்திருக்கா.எல்லாம் எங்களுக்காக.அவர் தினமும் சித்திரவதை பண்ணியிருக்கார். இனிமே இங்க வரமாட்டேனுட்டாராம்.அவர திருத்திட முடியும்கிற இவ நம்பிக்கை பொய்யா போனதும் என் அம்மா இப்படி உருக்குலைஞ்சு....” கரகரப்பான குரலுடன் விளக்கத் தொடங்கினாள்.ஒரு பதினைந்து வயதுப் பெண் இப்படி பற்றற்று பேசுவது சகிக்க முடியாததாயிருந்தது.

அம்மாவாசை,பௌர்ணமி தினங்களில் எஸ்தரம்மா தன்னைத்தானே சித்திரவதை பண்ணிக் கொள்ளுவதும், இரவில் வெறிப்பிடித்த மாதிரி ஓடுவதும்,துணிகளை களைந்து விட்டு சேகரனை சத்தமாய் வசைபாடுவதும்,விடிய விடிய அவருடன் பேசுவதாய் தனிமையில் பேசி ஓய்வதும்  என அவளது மூளைக்கோளாறு வளர்ந்த வண்ணம் இருந்தது. தம்பி மனைவியின் அலட்சியப் போக்கும், எஸ்தரம்மா அவள் வாழ்வதை பார்த்து கொந்தளிப்பதாக கட்டி விட்ட புரளியும் ரேகா,ஜூலி,அம்முச்சி,எஸ்தரம்மா என நால்வர் மட்டும் பழையபடி என் பக்கத்து வீட்டுக்கே குடிவரக் காரணமாயிற்று.

அம்முச்சி இரண்டு வேலையாட்களை அமர்த்திக் கொண்டார். எஸ்தரம்மாவுக்கு ராஜ வைத்தியம் பார்த்தார். பணத்துக்கு குறைவில்லை. பேத்திகளை நன்றாக படிக்க வைத்தார். எஸ்தரம்மாவுக்கு கவுன்சிலிங் கூட்டி போனார். படிப்படியாக அவளின் இறுக்கம் குறைந்து, எப்பவுமே என்பது மறைந்து எப்போதாவது,அது கூட வீட்டை விட்டு ஓடும் அளவிற்கு இல்லை என்கிற அளவுக்கு எஸ்தரம்மா நிலை தேறியிருந்தது.ரேகாவின் மாமாவும் உதவியாக இருந்தார்.

அழகாக உடையணிவது,பியானோ வாசிப்பது,அக்கம்பக்கத்தில் பேசுவது என மிகச்சாதாரணமாக மாறத்தொடங்கியிருந்தாள். எம்பிராய்டரி செயவதில் தொடங்கி ஆயில் பெயிண்டிங்,கிளாஸ் பெயிண்டிங்,கிராப்ட் வொர்க் என அவள் உலகம் ரசனையானது. உர்ரென்று இருப்பதாகவோ,முறைப்பதாகவோ தோன்றினால் ஜூலி,வேலம்மா இருவரும் சேர்ந்து பேசிப்பேசி அறைக்குள் அடைத்து விடுவர். மாதத்தில் 10 -15 நாட்கள் அவளுக்கு சித்திரவதையாகப் போகும்.
யாருக்கும் தொந்தரவில்லை ஆனால் அவள் அனுபவிக்கும் சித்திரவதை பார்ப்பவர் கண்ணுக்கு கொடுமையான தண்டனை.
அப்படியான ஒரு பொழுதில் அவளை நான் பார்க்க நேர்ந்த போது ....
“வேணாம்டி. நான் அசிங்கம். எஸ்தரம்மாவ பாக்காத..போயிரு..போ” எனக் கத்தியபடி கதவுக்குப்பின் ஒடுங்கிப்போனாள்.

*****************************

அட திருச்சி வந்திருச்சா?


இன்னும் இரண்டு மணிநேரத்தில்... எப்படி எதிர்கொள்வேன் ரேகாவை?இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை எல்லாமும் சரியாகத்தானே இருந்தது.என்னிடம் மறைத்துவிட்டாளா?
”உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி நீலக்கறை வச்ச வெண்பட்டு எடுக்கணுமின்னு சொன்னாங்கடி அம்மா.மாதா திருநாளுக்கு வந்திடு. மாமா நெறைய ப்ளான் வச்சிருக்கார்” ரேகாவின் குரலில் எந்த பாதிப்பும் இல்லையே. ஒருவேளை அவளுக்கும் தெரிந்திருக்கவில்லையோ? பத்து வருடமாக தன் தாய்க்கு தாயாகிப் போன பக்குவமும் முதிர்ச்சியும் அவளை நன்றாக வைரமாக்கியிருந்தது. அவளுக்குள் இருக்கும் ஏக்கமும்  மென்மையும் கர்த்தர் தவிர்த்து எனக்கு மட்டும் வெளிச்சம்.

”அம்மா படுற வேதனையெல்லாம் பாக்குறப்போ அவ சாகுறதே மேல்ன்னு தோணும்டீ. ஆனா எனக்கும் ஜூலிக்கும் அம்மான்னு கணக்குக்கு இருந்தாவே போதும். மாமா கேட்டார் போன மாதம். ரொம்ப சித்திரவதை பண்ணிக்கிறா. சகிக்கல. பேசமா ஊசி போட சொல்லியிருவமான்னு. எஸ்தரம்மா எப்படி இருந்தவங்கடி? அவள கொன்னுடுவமான்னு என்கிட்டயே கேக்குறாங்கடீ. மாதாவே என்ன கொடுமை இது?” மடியில் விழுந்தவளை சமாதானப்படுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.

நானும் அவரும் எப்படி லவ் பண்ணினோம் தெரியுமா? இப்படித் தான் பைக்ல போவோம். அந்த பிங்க் கலர் ஸாரி தான் அவர் எனக்கு மொத மொதலா வாங்கித்தந்தார்.அத்தானுக்கு மல்லிப்பூன்னா ரொம்ப பிடிக்கும். இப்படி சேகரனை பத்தி பேசும் போது கனவில் சஞ்சரித்தபடி கிறக்கமாய் சொல்வதில் அவள் காதல் தளும்பி வழியும்.  ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே படபடவென அவள் வாயில் அடித்துவிட்டு “அவனால தான் நீ இப்படி இருக்கிற இன்னும் ஏன்?” என்றவாறு ஜூலி அவளை கட்டியழுதது நினைவிருக்கு.

************************

ஊரு வந்ததும் வீடு வந்ததும் தெரியவேயில்லை.அனிச்சையாக கால்கள் எஸ்தரம்மாவை நோக்கி நடந்தன.அந்த பெரிய வீட்டில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. யாரும் அழவேயில்லை. முகம் தவிர உடல் முழுதும் மூடப்பட்டு மூட்டையாக இருந்தது. கூட்டமும் அதிகமில்லை.அவரவர் ஏதோ காரியமாக போவதும் வருவதும். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய படத்தில் பட்டதாரி எஸ்தரம்மா கர்வமாய் சிரித்துக்கொண்டிருந்தாள்.சிந்தும் கண்ணீரோடு என் கண்கள் ரேகாவை தேடின. பியானோ இருந்த மூலையில் உத்திரத்தை வெறித்தபடி இருந்தவளிடம்
“ரேகா!” என்று தோள் தொட்டேன்.

நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் ஜீவனேயில்லை.களைப்பாய் பேசினாள். உள்ளுக்குள்ளே குமைந்து கொண்டிருந்தாள் போல. ஏதேதோ யோசனைகள். எஸ்தரம்மா கடைசி நேரங்களில் அதிகமாய் கஷ்டப்பட்டிருப்பாளோ? ரேகாவிடமிருந்து தட்டுத் தடுமாறி வந்த வார்த்தைகள்  பெருங்கதறலில் முடிந்தது. 


“சாகுறப்போ கூட அம்மாக்கு நானெல்லாம் நினைவேயில்லடீ! அத்தான்

அத்தான்னு தான் உயிர் போச்சு. அவ்வளோ பாசம்டி அந்தாளு மேல.இவளுக்குப் போய் துரோகம் பண்ணிட்டானேடீ!அவந்தான் இவளுக்கு மருந்துன்னே தெரியாம அம்மாவ சாகக் குடுதுட்டேனடி.அவன் கையில காலுல விழுந்தாவது....இவ வேணாமுன்னு போனவன் தானேடீ.ஏண்டீ இவளோ பாசம்?
அய்யோ! உன் எஸ்தரம்மா இனிமே வரவே மாட்டாங்க.. வரவே மாட்டாங்கடீ...” கட்டிக் கொண்டழுதவளுக்கு எப்படி ஆறுதல் சொல்ல?


முற்றத்தில் முன் எப்போதும் இல்லாத அமைதியுடன் எஸ்தரம்மா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள் அதே வசீகர புன்னகையுடன்.


************************

Tuesday, September 28, 2010

அன்றாடக்காட்சி


வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தான்
வீசியெறிந்தச் செறுப்பின் வேகத்தில்
பாதிப் புரிந்திருக்கும் அவளுக்கு!
உள்ளக் கொதிப்பை
உதட்டுக்குள் ஒழித்து
தலைகவிழ்ந்தாள்
கறிகாயோடு கைவேலையும்
தொடரலானாள்

போக்குவரத்து நெரிசல்
வெகுஜனக் கோவம்
மேலாளர் வசவு
மாதக்கடைசி
அம்மாவின் ஆஸ்துமா
பிள்ளையின் பள்ளிக்கட்டணம்
வெளியேறத் தருணம் பார்த்து
குமுறிக் கொண்டிருந்தது
இயலாமை இல்லாமை
இரண்டும் சேர்ந்து
எரிமலையாய் அவனுள்!

பென்சில் கேட்டு
அழுத மகனின் முதுகில்
இடியென இறங்கியபின்
ஆரம்பித்தது கச்சேரி!

எப்போதோ வார்த்தையில்
கூடிய சுருதி -அவள்
செவி நிறைந்ததில்
சிந்திய இருதுளிக் கண்ணீரோடு
முற்றுப்பெற்றன அத்தனை
அபஸ்வரங்களும்!

ஆவேசம் ஆத்திரம்
அத்தனைக்கும் காரணம்
தெரியுமவளுக்கு!
இங்கேனும் ஜம்பம் பலித்தது
கொட்டிவிட்டுப் போ
என்பதானப் பாவனையில்
அவன் நாடகம் நித்தமும்..

“பசியாயிருப்பீங்க!
தோசை வார்க்கறேன்
வாங்க சாப்பிடலாம்!”
கனத்த மௌனமும்
மகனின் விசும்பலும்
நின்றுபோயின
சகஜமானது வீடு

அவளுக்குள்ளும்
ஆயிரெத்தெட்டுத் தலைவலி
அதற்குள்
அலுவலகமும் அடக்கம்
பெருமூச்செறிந்தபடி
பாத்திரங்களைத் துலக்க
துவங்கியிருந்தாள் அமைதியாக!


Saturday, September 25, 2010

பட்டியல்


”அப்பா அந்த மிட்டாய்
வாங்கித்தாங்கப்பா”
ஆசையாய் கேட்டான் மகன்

”பல்லு சொத்தையாயிரும்
பூச்சிப்பல் வந்துரும்
அதுக்குப் பதிலா ...”
வெறும் சட்டைப்பையை
தடவியவாறே...
”இல்ல...
வீட்டுக்குப் போய்
சாப்பிட்டுக்கலாம் வா”

ஏமாற்றமாய் நிமிர்ந்தவன்
”காசு வந்ததும் வாங்கித்தாங்கப்பா
பரவால்ல”
என்றான்

இப்போது அந்த மிட்டாயும்
இடம்பிடித்து விட்டது
சம்பளம் வந்ததும் நிறைவேறும்
திட்டங்களின் பட்டியலில்...

Friday, September 24, 2010

குருவிக்கூடு

”அம்மு!விடிஞ்சு இம்புட்டு நேரமாகியும் இன்னுமா தூங்குற? எழுந்து பல்ல வெளக்கிட்டு வா! சுக்குத் தண்ணி இருக்கு குவளையில! எதமா இருக்கும் தொண்டைக்கு..எந்திரி!எந்திரி!”
நேத்து இருமினதுக்கு இன்னிக்கு தண்டனை.அனுமதிக்கு கூட காத்திராமல் போர்வையை என்னிலிருந்து பிரித்து கவனமாய் மடிக்கத் துவங்கும் அப்பத்தா,என் விடிகாலைத் தூக்கத்தைக் கெடுக்கும் வில்லி. மனதுக்குள் அவளுக்கு ஆயிரமுறை அர்ச்சனை செய்தவாறே திருப்பள்ளி எழுவது எல்லா மழைக்கால விடுமுறையிலும் எனக்கு வழக்கம். இல்லை பதிலுக்கு முரண்டு பிடித்து படுக்கலாம் என்றால் வீட்டில் எல்லோரிடமும் நான் அர்ச்சனை வாங்கும் பரிதாபம் வாய்க்கக்கூடும்.

பல்துலக்கியபடியே சன்னல் வரை நகர்ந்து பக்கவாட்டில் நீண்டு எட்டிப்பார்க்கும் மாமரத்தை நோட்டமிடுவது வழக்கம்.பழம் ஏதாவது இருக்கா, அணில் கொறித்திருக்கிறதா, தரையில் விழுந்து கிடைக்கிறதா என்பது போலும் புள்ளிவிவரக் கணக்குகள் அந்த சில நிமிடங்களில் ஞாபகத்திரையில் பதியப்படும். பொறுப்பா இருக்கறதா காட்டிக்க வேண்டிய சந்தர்பங்கள் இருக்குமென்பதால் இது போலும் சிலவை அவசியம்.இத்தனை மேதாவித்தனமும் முடிகையில் சுக்குத்தண்ணி பச்சைத் தண்ணியாகியிருக்கும்.

‘படிக்கிற புள்ள வேலையேதும் சொல்லிப்புடாதீக. பரீட்சை இருக்காம் அதுக்கு.போத்தா மேவூட்டுக்கு போயி படி’, இப்படி யாராவது சொல்லி என்னை கெளரவிப்பது வழக்கம்.மத்தியான நேரங்களில் படிப்பதாய் பேர் பண்ணிக் கொண்டு மாடியறைக்கு வருவதும் சத்தமாய் வானொலியை அதிரவிட்டு என் கடமையுணர்ச்சியின் ஸ்திரத்தை ஊருக்கு உணர்த்துவதுமாய் போகும்.இன்னிக்கு ஏனோ மாமரத்து கிளைகளில் ஏதோ பரபரப்பு.இரண்டு குருவிகள் வலுவானதொரு கிளையின் பிடிப்பில் தன் கூட்டைக் கட்ட ஆரம்பித்திருந்தது.ஏறத்தாழ முடிந்திருந்த கூட்டின் கட்டமைப்பில் இன்னும் ஏதோ சில புற்களை தன் அலகால் அழகாய் மேலும் கீழும் நெய்ய ஆரம்பித்தது. அதன் சாமர்த்தியத்தில் லயித்துப் போய் மெய்மறந்திருந்த வேளை சட சடவென பெய்தமழை துவைத்துப் போட்ட துணி,காய வைத்த வற்றல்,கோதுமை என எல்லாமும் மறக்கடித்திருந்தன குருவியையும் அதன் உழைப்பையும்.

பந்திக்கட்டை கடக்கும் போது ஈரச்சாக்குப் போட்டு மறைத்திருந்த விதைநெல் வினோத மணத்தைப் பரப்பியது.முற்றம் முழுவதும் மழை நீர் சிந்தியபடி இருக்க, முகப்பு திண்ணையில் மணல் பரப்பி அதில் அடுப்பேற்றி வேர்கடலை வறுக்கவும் வறக்காப்பி போடவும் அப்பத்தா கடை அழகாய் அரங்கேறியிருந்தது.அதோ மூலையில் சாய்க்கப்பட்டிருக்கிற பனை ஓலையில் சாயமிட்டு பதனமாய் காய வைத்து உட்காரும் தடுக்கு,ஓலைப்பெட்டி,படுக்கிற பாய் என அழகான வடிவம் கொண்ட கலைப்பொருட்களாய் செய்வது அப்பத்தாவின் அன்றாட பொழுது போக்கு. சோம வாரங்களில் பூசைக்கு அரிசி,வெல்லம்,பருப்பு,தேங்காய் என ஒவ்வொன்றுக்கும் ஒரு புது ஓலைப்பெட்டி தவிர சீர் அனுப்ப, மற்ற காரியங்களுக்கு என எல்லாத்துக்கும் அப்பத்தா பின்னும் இந்த ஓலைப்பெட்டிகள் தான்.அம்மாவின் அதிரடி மாற்றங்களால் சாப்பாட்டு மேசையே பிரதானமாய் போனாலும் அப்பத்தாவின் உபசரிப்பு இந்த ஓலைப்பாய் நாகரிகத்திலே ஆரம்பிக்கும். அம்மாவோ சித்தியோ இவற்றை பாவிப்பார்களா என்பது நிச்சயம் கேள்விக்குறி தான்.ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சின்ன ஓலைப்பெட்டி மூடியோட,அதில் வறுத்த கடலை நிரப்பி பித்தளைக் குவளையொன்றில் மணக்கமணக்க பனங்கருப்பட்டி காப்பி தரப்படும். நடவு நாட்களிலும் வயல் வேலை நாட்களிலும் அப்பத்தா கைமணம் அரிதாய் சுவைக்க கிடைக்கும்.நாளைக் காலை விதை பாவுவது போல, அதான் அத்தை வீடெல்லாம் வந்திருக்காங்க.இப்படி கூட்டமா இருந்தா தான் அப்பத்தா முகத்தில சிரிப்பே வரும்.பாருங்க அந்த பொக்கை வாய் கிழவி சிரிச்சிக்கிட்டு இருக்கிறத.ஆனா ஆளுங்க இல்லாம போனா வெறிச்சோடின வீட்டை விடவும் பேச்சுத் துணைக்கு யாருமில்லாமல் தவிக்கும் அப்பத்தா தான் மிகவும் பரிதாபத்திற்குரியவள்.

அத விடுங்க,கருப்பட்டி காப்பியும் வறுத்த கடலையும் அருமையான கூட்டணிங்க. சுவைத்ததுண்டா நீங்கள்? எனக்கு பலசமயம் அந்த பாக்கியம் வாய்த்திருக்கிறது.இன்னிக்கும் அதே கூட்டணியோடு மாடியேறவும் சிட்டுக்குருவிகள் பத்தின நினைவு, நடை துரிதமடைந்து கடைக்கோடி சாளரத்தினருகே நின்றது. மரத்தில் கூட்டையும் காணவில்லை குருவிகளையும் காணவில்லை. எம்பிப் பார்க்கையில் மாமரத்துக்கடியில் மழைநீர் ஏகிய கூட்டை காணமுடிந்தது. இந்தக் கூட்டை கட்ட எத்தனை நேரம் பிடித்ததோ அதற்கு.இன்னும் ஒரு கூடு, இது போலும் அழிந்து போகாது என்பது எப்படி சாத்தியம்?அடுத்த முறை நம் வீட்டுக்குள் கூடு கட்ட பழக்க வேணும்.எனக்குள் சொல்லிக் கொண்டேன்.ஏனோ அப்பத்தாவின் உழைப்பு மழுங்கடிக்கப்பட்ட வலி குருவிக் கூடு கலைந்த போதும் இருந்தது.

அடுத்த விடுமுறைக்கு வரும் போது மாடியில்,அந்த அறையை ஒட்டிய முகப்பின் தாழ்வாரத்தில் கீச் கீச் எனும் சத்தம்.தேடிப் பார்த்தபோது தாழ்வாரத்துக்கும் மாடியறைக்கும் இடையே ஒரு அழகான கூடு நிறைந்திருந்தது.அதில் இரண்டு குருவிகளும் சில முட்டைகளும் இருந்தன. இரை தேடி போகிற நேரங்களில் முட்டைகள் தனித்துவிடப்படுவதை பார்த்ததும் விடுதி வாழ்க்கை நினைவுக்கு வர, இரையை நானே தருவது என முடிவு கொண்டேன். அகலமான பிளாஸ்டிக் டப்பாக்களில் அரிசி கம்பு என தானியங்கள் நிறைத்து கூட்டின் அருகே கட்டி தொங்க விட்டேன். இப்போதெல்லாம் குருவிகளில் ஒன்று வெளியே செல்வதும் மற்றொன்று முட்டைகளின் அருகில் இருப்பதும் பார்க்கவே மிகுந்த சந்தோசத்தை தந்தது. வெளிச்சென்ற குருவி வந்ததும் தன் அலகால் அதன் அலகை உரசுவதும்,இறக்கைகளை நீவிவிடுவதும், கூட்டுக்குள்ளே சண்டையிட்டு ஊடலோடு தத்தி தத்தி பறப்பதும் என அவற்றின் அன்றாடங்கள், அழகான சமிஞ்கைகளாக எனக்கு புரியத் தொடங்கியிருந்தன. பின் வந்த நாட்களில், அவற்றின் ஒவ்வொரு அசைவும் அழகியலோடு உயிர்ப்பான ஓவியமாய் தோன்றியது எனக்கு.

கீச் கீச் கீச்.
வந்திட்டாங்க போல. வழக்கமான தொந்தரவு தான்.பழகிடுச்சு. காலை பரபரப்பு ஒடுங்கி வீடே அமைதியாகிப் போகும் அந்த அழகான தருணங்கள் இவற்றினோடு கழியத் தொடங்கியிருந்தது இரை வைப்பதால் ஏதோ ஒரு எஜமான விசுவாசமோ, பக்கத்து வீட்டுக்காரி என்கிற பந்தபாசமோ தினமும் என்னோடு பயமின்றி பழகுவது அந்த ஜோடிக்கு வாடிக்கையாய் போயிற்று.இமைகள் திறக்காமல் ஏதும் அசையாமல் அப்படியே படுத்திருந்தேன்.சத்தம் இன்னும் அதிகரிக்கவே கண்களை திறந்து பார்த்தேன். இரண்டும் என்னை சுற்றி பறந்து கூட்டில் உட்கார்ந்து கொண்டன.கடந்த பத்து நாட்களாக மேல் மாடிக்கு வருவதும், சாளரத்தின் எதிரே அமர்ந்து தத்தி பறந்து மகிழும் பறவைகளோடு பொழுதைக் கழிப்பதுமென விடுமுறையெல்லாம் இப்படி செலவாகிக் கொண்டிருந்தது.

ஒரு அதிகாலை பொழுதன்று என்னை எழுப்ப வந்த அப்பத்தா ஆச்சர்யத்தோடு,

”என்னாத்தா? ஏதும் உடம்புக்கு நோவா?இம்புட்டு சீக்கிரமே முழிச்சிட்ட?” கரிசனமாய் நெற்றி தொட்டவளை இழுத்து போய் குருவிக் கூட்டை காண்பித்தேன். புதிதாய் பிறந்த நாலைந்து குருவி குஞ்சுகளோடு கீச் கீச் சத்தமிட்டபடி அங்கே ஒரே பரபரப்பாயிருந்தது.

”அட குருவிக்கூடு! எப்போயிருந்து கட்டியிருக்கு.நல்ல சகுனந்தேன்.அதென்ன டப்பாவுல? தீனியா? நீயா வச்ச? வேலை மும்முரத்துல கவனிகாம விட்டுட்டனே.ஒஞ்சித்தப்பனுக்கு தெரிஞ்சா வீட்டக் கெடுக்குதுன்னு கூட்ட பிரிச்சுப்புடுவானே” சந்தோசமும் ஆச்சர்யமும் பதைபதைப்பும் அவளின் முகத்தில் நொடிக்கொருமுறை மாறிய வண்ணம் இருந்தது.

“இல்ல அப்பத்தா! நாங்க லீவு முடிஞ்சி போனப்புறம் நீ தனியா இருக்க கஷ்டமா இருக்குமில்ல.இந்த சொந்தகாரங்களாச்சும் இங்கயே இருக்கட்டுமின்னு தான்!”

பதிலேதும் சொல்லாமல் வாஞ்சையாய் தலை வருடியபடி கண்ணீர் மல்க என் கன்னம் தொட்டு நெட்டி முறித்தாள் அப்பத்தா.

Thursday, September 23, 2010

விழியால் பேசுகிறேன் - II

"போ” என்கிற இதழசைவும்
“வா” என்பதான விழியசைவும்
இன்னதென்று விளங்காமல்
நீள்கிறது பயணங்கள்
நாள் தவறாமல்...
புலம்பிக் கொண்டிருந்தது காதல்!

----

சிந்திய வார்த்தைகளில்
எது இதயத்தினது
எது இதழினது என்று
பகுத்தறியாத பாமரன்
நாத்திகனாவது எப்படி?
அலுத்துக் கொண்டது மனது!

----

ஏதோவொரு விழிகுத்திய வலி
திரும்பிய நொடியில்
காதலாய் சிரித்தாய் நீ!

திருமணப் புள்ளியில்
நிறுவிய அரசு கவிழ்ந்த போது
காணாமல் போயிருந்தன
நின் தன்மானமும் அது குறித்த
சகல பிதற்றல்களும்...
பார்வை பருகி இதயம் வருடிய
சில்லிட்ட நினைவுகள்
கல்வெட்டாய் போயின

பணத்துக்கு விலை போனவன்
பிணமென எட்டி விலக்கியும்
எப்போதோ சொல் தைத்த வலி -அன்று்
என் பாதையில் முட்களை
சொல்லாய் விதைத்தவன் நீயென...

இப்போதும் நினைவிருக்கிறது
இதயம் முழுக்க முழுக்க
துக்கத்தை தந்துவிட்டு
தூக்கத்தின் அவசியம் உரைத்தது.

என்ன செய்தாய் எனக்கு நீ
நான் இத்தனை பாசத்தை
மழையென பொழியுமளவிற்கு?
சிந்தித்தபடி சிரித்துவிட்டுப் போகிறேன்
பதில் தெரியாமல்...

----

நிலை கொள்ளாத மனதுடனும்
வெறித்த பார்வையுடனும் - நீ
வெளியேறுகையில்
தெரிந்திருக்கவில்லை - பிரிவு
இத்தனை கொடுமையென்று!

----

Monday, September 20, 2010

நிறம் மாறும் தேவதைகள்

கடவுளர்களின் ஆசிகள்
நிரப்பிய போதையில்
உறங்கிக் கொண்டிருந்தனர்
தேவதைகள்
சாகுந்தலங்கள் மறைத்த
கதிரவ சிதறல்களாய்
வெண்ணிற இறக்கைகள் போர்த்தி!

உற்சவர் பள்ளியறை உபயத்தில்
உலகை மறந்திருந்தார்
மானுடப் புலம்பல்களை
பலமுறை மறுதலித்தவண்ணம்

நடுநிசியிரவில்
பல்லக்கு தூக்கிகள் ஓதுவோர்
மடப்பள்ளி சேவகர்கள்
எவர்காதுக்கும் எட்டாத லயத்தில்
முனங்கிக் கொண்டிருந்தது
கோவில் தொழுவத்தில் சினைப்பசு
சிறு குரங்கொன்றின் குதறலில்
பெருங்காயம் பட்ட வலி

பசுவின் பிதற்றலில் பரிந்து
பதமாய் மருந்திட துணிந்தான்
சாமிக்கு சாமரம் வீசும்
சாமான்ய சிறுவனொருவன்

மருந்திட ஏதுவாய் இறகு தேடி
கிடைத்ததை பறிக்க
விதிர்த்தெழுந்தது தேவதையொன்று
வழக்கம் மாறி சாபமாய்
விழுந்தன வார்த்தைகள்

சபிக்கப்பட்டவன் ஏக்கமாய் நோக்கினான்
அசதியில் தூங்கும் அத்தனை பேரையும்!

பசுவின் முனங்கல் தொடர்ந்தபடியிருக்க
வலியின் மிச்சத்தை சாபமாய்
கொட்டியபடி தேவதையும்....

மெல்ல மெல்ல விடிந்துகொண்டிருந்தது
கடவுளர்கள் தேவதைகள் தவிர்த்து
யாராவது மருந்திடக்கூடும்

Friday, September 10, 2010

நினைவில் தளும்பியவை

வரைந்து சிதைத்த
எல்லா பின்னமான பிம்பமும்
சொல்லிப் போகிறது
அதன் அழகான துவக்கத்தை ...

உளிபட்டு சிலையான
பாறைகளனைத்திற்கும்
மழைநீர் தழுவி மகிழ்ந்த
வசந்த காலங்களுண்டு..

சுவர் இடிந்து
பழுதான கோட்டைக்கும்
தாங்கி நிற்க வலுவான
அஸ்திவாரமுண்டு...

நினைவுகளை துணைக்கழைப்பது
நினைவுகளோடு வாழ்வது
இன்னபிற இயற்பிழைகள்
மனோவியாதிகள்
இயல்பாய் சாத்தியமாகிறது
கனவுகளை கவிதையாய்
வடிக்கும் போதும்
நேற்றைய வலியை மறைத்து
இன்று கவிதை
வரையும் போதும்...

மெல்லப் பனிக்கும் கண்ணீரும்
கனக்கும் இதயம் மறைக்க
இதழிடைப் பூக்கும் புன்னகையும்
சொல்லித்தான் போகிறது
கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!