நெடு நாளாயிற்று எனக்கு இப்படியிருந்து,வேடு கட்டிய தலையும் தூசிக்கு பதில் மரியாதையாய் தும்மியபடியும் சுறுசுறுப்பாய் இயங்கி...அந்த இருட்டு அறைக்குள் கரப்பான் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் அலட்சியம் செய்தபடி தேடிக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு மரப்பெட்டியாக! பரபரவென தேடுவதும் கண்டடையாத ஆற்றாமையில் உதடு சுழிப்பதுமாய்...
அம்மாவுக்கு ஆச்சர்யம். வந்ததும் அசதியா இருக்கென நத்தையாய் சுருங்கி கொள்பவள். என்ன முக்கியமானதுனாலும் தூங்கி எழுந்தபின் பேசலாமென்று கத்தரித்து போய்விடும் மகள்,ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக எதை தேடுகிறாள்?
தாத்தா எப்போதோ மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் வாங்கித் தந்த மரச்சொப்பு சாமான்களுடன் வந்ததாய் நினைவு. முத்துவும் மேரியும் இது குறித்து சண்டை போட்டது கூட இன்னும் அப்படியே. தம்பி ஒரு நாள் விளையாட்டாய் அரிவாள் கொண்டு பின்னமாக்கியதாய்..இன்னும் இன்னும் வரலாற்று முக்கியம் வாய்ந்த நிறைய போர்கள் ’அது’ யாருக்கு உரிமை என்கிற கேள்விக்கு பதிலாய்.
சட்டென ஏதோ உடம்பில் ஊர்வது கண்டு திடுக்கிட்டபடி,பழைய நினைவுகளை ஒழுங்குபடுத்தி ஞாபகங்களை தூசி தட்ட, அதன் இருப்பிடம் புலப்பட்டது.அந்த சுவரோரத்தில் இருக்கும் கள்ளி மரப்பெட்டிக்குள்ள தான் இருக்கணும். துருப்பிடித்த ஜாமெண்டரி பாக்ஸ், மை உறைந்தும் கூர் ஒடிந்தும் கிடக்கும் பேனாக்கள்,எலி கடித்தது போக இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் வலைகளோடு பிடி உடைந்த டென்னிஸ் பேட்,சுருட்டி வைத்த ஸ்க்கிப்பிங் கயிறு இத்யாதி இத்யாதி..ம்ம்.இங்க தான் எங்கோ இருக்கணும்.விழிகள் பளிச்சிட, அதோ அதோ அதே தான்.
ஒரு கை உடைந்த மரப்பாச்சி பொம்மை
கண்ணில் நீர் துளிர்க்க தூசு தட்டி முத்தமிட்டவள்,குழந்தையாதல் சாத்தியமல்லாத இயந்திர பொழுதுகளில் தன்னிலிருந்து தன்னையே மீட்டெடுக்க பத்திரப்படுத்தினேன் பெட்டிக்குள்.
4 comments:
awesome...
nallaairrukunngaa
//பழைய நினைவுகளை ஒழுங்குபடுத்தி ஞாபகங்களை தூசி தட்ட//
//குழந்தையாதல் சாத்தியமல்லாத இயந்திர பொழுதுகளில் தன்னிலிருந்து தன்னையே மீட்டெடுக்க பத்திரப்படுத்தி//
கயல்... மனதைத் தொடும் எழுத்து உங்களுடையது!சேமித்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு நெகிழ்வான நினைவல்லவா சேர்த்து அடைகாக்கப் படுகிறது!
வித்தியாசமான மொழி நடையில் ஒரு அருமையான ஞாபக மீட்டற் பதிவு.
உரை நடை அசத்தல்.
Post a Comment