Wednesday, October 16, 2013

என் (கிராமத்து) வீடு


வட்டக் குடிசையிலிருந்து மச்சு வீடுயர்த்த
அண்ணனும் தம்பியும்
காடாறு மாதம் வீடாறு மாதமென
திரைகடலோடி திரவியம் சேர்த்தார்களாம்
ஒண்டக் குடிசையிலாத
கருப்பனையும் ஆண்டியையும்
உயர்த்தி அழகு பார்த்தது

உழைப்பு

வியர்வையையும் கனவையும்
விதைத்தார்கள்
அடையாளமாய் நின்றிருந்தது வீடு
பிரமாண்ட கல்வெட்டென...

தேக்குமரக் கதவுகளும்
எட்டறை தடுத்து
நடுவிலோர் முற்றமும்
முகப்பும் பந்திக்கட்டும்
வழவழக்கும் சுண்ணாம்புச் சுவரெனவும்
அட்டகாசமாயிருக்கும் என் கிராமத்து வீடு

இரட்டை மாடிகளும்
ஆனையடிக்கல் பதித்த மொட்டைமாடியும்
சீட்டிப்படி அறைகளும்
வெள்ளைக் கற்படிகளும்
சங்கு பதித்த முன்வாசலும்
உள்ளறை அலமாரிகளும்
எப்போதும் மிளிர்ந்தபடியிருக்கும்
சாமி விளக்கும்...

அப்பத்தாவும் அய்யாவும்
ஆன்மாவாய் நிறைந்தயென் வீடு

நகரத்து எலிவளைக்குள் வாழ்ந்தாலும்
கிராமத்திலென் வளை அரண்மனையென
கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன்
திருமணக் கனவுகளிலெல்லாம்
முற்றத்துப் பந்தலில் தான்
தாலிகட்டுவான் மாப்பிள்ளை

சித்தப்பாவின் திருமணமும்
பெரியத்தான் திருமணமும்
அக்காக்களின் திருமணமும்
பிள்ளைப்பேறுகளும்
பூப்பெய்தல்களும்
கோலாகலப் பூரிப்புகளோடு
அவ்வீடு கண்டு சிரித்திருக்கிறது

ஏகப்பட்ட காதல்களை
ஏகப்பட்ட திருமணங்களை
ஏகப்பட்ட மரணங்களை
ஏகப்பட்ட உறவின் விரிசல்களை
இன்னும் எத்தனையோ
பார்த்தபின்னும் உருக்குலையாமல்
கம்பீரமாய் தானிருந்தது

ஒவ்வொரு பொங்கலும்
ஒவ்வொரு தைப்பூசமும்
ஒவ்வொரு பங்குனி உத்திரமும்
சின்னதொரு கல்யாணம்

உறவுகள் சூழ விருந்து வைத்து
உச்சி முகர்ந்து கொண்டாடி
சீண்டிப் பேசி சிரித்து மகிழ்ந்து
இளவரசியென மிதப்பாய்
செறுக்குற்றிருந்த பொழுதுகள்

மூத்தவனை பிணமாய் கிடத்திய
அதே கிழக்கு பார்த்த
சன்னல் முற்றத்தில்
அப்பத்தாவும் அய்யாவும்
சின்னப்பத்தாக்களும்
பெரியப்பாவும் பெரியம்மாவும்
நின்று எரிந்தார்கள் தீபமாய்....

சங்கரண்ணா வீட்டை இடித்துக் கட்டுகிறான்
சேதி சொன்னான் சின்னத்தம்பி

காரணங்கள் ஆயிரம்
ஏசி பாயிண்ட் வைக்கமுடியவில்லை
வாயில்கள் தலையிடிக்கின்றன
அட்டாச்டு பாத்ரூம் இல்லை
நவீனத் தோற்றமேயில்லை
கிராமத்து சாயலிருக்கிறது
கவனிப்பாரற்று கரையான் பூத்திருக்கிறது
மனைவி மக்களுக்கான புழக்கம் போதவில்லை
தேவைகளுக்குள் சமரசமாகி சத்தமின்றி
தேய்ந்து போகின்றன எதிர்ப்புக் குரல்கள்

ஒவ்வொரு கல்லாய் கட்டிச் சேர்த்த
அப்பத்தாவின் கண்ணீர்
கைகளில் பிசுபிசுக்கிறது
அவளரற்றும் ஓசை செவி நிறைக்கிறது

அய்யா அப்பத்தா போலவே
எழுபது வயது தாண்டிய
அவ்வீடும் மரணிக்கவிருக்கிறது

இடிக்கும் சப்தமேதும் கேட்காத தொலைவிலிருக்கிறேன்
கையாலாகாத என்னிடமேன் முறையிடுகின்றன
என்வீட்டின் தெய்வங்கள்?


2 comments:

Unknown said...

unnal unarnthen muthal malaiyin vasam mannil

கபாலி said...

கவிதை அருமை. http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/22346-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page__pid__370740__st__20#entry370740 -ல் தங்க்கள் முன் அனுமதியின்றி பதிவில் இணைத்துள்ளேன். மன்னிக்க...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!