Friday, October 11, 2013

அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்

தோற்றுப் போனவர்களை குடும்பமும் மறந்து போகிறது...

நினைப்பை அவரிடத்தில் இருத்தி வைக்கவே ஜெயிப்பது அவசியமாகிறது. தன்முனைப்போடு போராடும் பெண்களில் பலருக்கு பால்யத்தின் பாசமென்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் வாழ்ந்த பேரன் பேத்திகளுக்கு அவர்களில்லாதவொரு தருணத்தில் வாழ்க்கைக்கான போராட்டமும் சேர்ந்து ஒரு வித சுமையைத் தந்துவிடுகிறது. கூட்டுக் குடும்பம், குடும்பப் பாங்கு என்றெல்லாம் பேசி வளர்த்தவர்கள் வளர்ப்பில் தனக்கென வாழாது வாழ்வைத் தொலைத்த அறிவிலிகளைத் தான் சொல்கிறேன்.


சில பல வருடங்களில் வருமானத்திறகென வரவேற்கப்படுகிறாள் அப்பெண். இவளின் வருமானம் அவசியமில்லாத போதும் இவள் குறித்த உறவினர்களின் தேவைகள் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. தன்னை விடவும் சின்னவர்கள் தன்னால் முன்னேறி குடும்பம் குழந்தையெனும் போது பெருமிதப்படும் மனது தனக்கென்றெதுவுமில்லாது போகுமொரு நாளில் பால்யத்தின் பாசத்திற்கென தவம் கிடக்கிறது. தன்னிறவு பெற்ற குடும்ப உறவுகளோ தனித்து விட்டுவிடுகின்றன. எத்தனை சுதந்திரமிருந்தும் தனக்கென ஒரு கூட்டிற்காக ஏங்கித் தவிக்கிறது பாழும் மனது. கூண்டில் அடைபட்ட பறவை பறந்து இரவுக்கு கூண்டுக்கு வருமாம் பழகிய தோஷத்திற்கு... நான் புறாக்களைத் தான் சொல்கிறேன்.

வீட்டிற்கென ஓடி ஓடி.. அவள் நிற்குமிடம் பெண்மையின் பலவீனங்கள் எட்டிப்பார்க்கும் அந்த வயோதிகத்தின் முன்வாசல். சமூகத்தின் பார்வையில் தன்னை நல்லவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்பெண் மீது அவமதிப்பெனும் சுமையையும் போர்த்துகிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். குற்றப்பெருக்கு. சுமை தாங்கி தானே! ஊமையாய் பாரம் சுமக்கும் எதிர்பார்ப்பில்லாத போராளிகள் நானறிந்த வரையில் ஆயிரம் பேர்.

சம்பாதிக்கும் பெண்.
தான் தோன்றிப் பெண்.
மனமுதிர்வான பெண்.
பொறுமையான பெண்.
அன்பான பெண்.
அடங்காப் பிடாரி பெண்.
அறிவுத் தெளிவுள்ள பெண்.

இத்தனைக்கும் பின்னர் அவள் சுமக்கும் இன்னொரு பட்டமுமிருக்கிறது....

தனித்த பெண்.

வயோதிகத்தில் இல்லாத வாலிபத்துக்கு இளப்பமும் எள்ளலும்... இவர்தம் கண் முன்னே தானே தீர்ந்தது அவள் இளமையும் வயதும். சுயநலத்துக்கென சுமை தூக்க விட்டுவிட்டு கூன் விழுந்த முதுகைப் பரிகசிக்கிறார்கள் தங்கைகளும் தம்பிகளும்....

இதெல்லாம் நடுத்தர வர்க்கத்து சாமான்ய சராசரிப் பெண்களைக் குறிப்பவை. ஒரு செக்கு மாட்டின் நகர்தலைப் போல அவர்களுக்கு வாழ்க்கை கனவுகளோடு மட்டும் முடிந்து விடுகிறது.

இதற்கிடையில் அவர்கள் பாலியல் துன்புறுத்தல்,சாதி,தற்காப்பு,மானம்,
சமூக மதிப்பென்று ஆயிரம் தீவேலிகளை அன்றாடம் கடந்தாக வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்!

உடலைக் கட்டிக் கொண்டழுதும் அவள் தெய்வமாகத் தெரியவில்லையா? நிர்வாண மனது வாய்த்தும் போர்த்திய உடைகளுடன் ஒரு தெய்வத்தை நீங்கள் அன்றாடம் தரிசிக்காமல் பரிகசிக்கிறீர்கள்....

உங்களால் உங்கள் ஊனக் கண்களால் தரிசிக்க இயலாது

ஆம்!

கருவறையில்லாத அவர்கள் தோற்றுப் போன தெய்வங்கள்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!