Wednesday, October 9, 2013

நான் பாஸாகி விட்டேன்

”என்ன பிரச்சினைடீ. இந்த நேரத்துல.....”

“ ”

“உங்கம்மாப்பாக்குள்ள சண்டையா?”

“ம்ம்ம்”

“சமைச்சாளோ”

“இல்ல”

“தோசை வார்க்கவா?”

“வேணாம். பத்தில லைட் மட்டும் எரியட்டுமா வாத்தியாரம்மா? படிச்சிக்கறேன்”

“இதுக்கேண்டி இத்தன தயங்குற...வெறும் வயித்திலயா கெடக்க? இரு இந்தா வர்றேன்”

இரண்டு தோசையும் பொடியும்...

‘உண்ணீர் உண்ணீரென’ ஔவையின் வாக்கின்படி அத்தனை அன்பாய் கெஞ்சுவாள். விண்டு விழுங்குமுன் கண்ணீர் நிறைத்து விம்மல் வெளிப்படும். தன்மானத்தில் கூனிக் குறுகிப்போய்....

தம்பிகள் சின்னவர்கள். தூங்கிக் கொண்டிருப்பார்கள். விவரம் தெரிந்த நான் மட்டும் வேதனையோடு அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருப்பேன்.

”அழக்கூடாது. நாளைக்கு பரிட்சையில்ல.படி”

அதட்டலின் தொனியில் இருமலோடு ஒரு குரல் வீட்டுக்குள்ளிருந்து கேக்கும்.

”படி.... அதெல்லாம் பெரியவங்க புரிஞ்சு சேர்ந்துக்குவாங்க. நீ அழாம படி”. செல்லம் வாத்தியார் ஆஸ்துமா முனங்கலோடு அதட்டுவார்.

விம்மலடங்க ஒரு குவளைத் தண்ணீரை நீட்டுவாள் அந்தம்மா.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு, Artificial Intelligence ஐ புரட்ட ஆரம்பிப்பேன். நள்ளிரவு கடந்து மணி ஒன்றை நெருங்கும் நேரம் தலையணையோடு போர்வையும் தந்தபடி என்னருகில் வந்து படுத்துக் கொள்வாள்.

விடிகாலை நாலுமணிக்கு எழுப்பி, செய்யும் அன்றாட வேலைகளுக்கிடையில் எனக்கும் வாத்தியாரய்யாவுக்கும் சுடச்சுட பில்டர் காப்பி. தெம்பாய் இருக்கும்.

ஆறுமணியானதும் எங்கள் வீட்டின் நிலவரமறிந்தும் அம்மாவுக்கு அறிவுரை சொல்லிய பின்னர் என்னை அனுப்பி வைப்பாள்.

அழுது வீங்கிய முகத்துடன் கல்லூரிக்குள் நுழையும் போது முட்டிக் கொண்டுவரும். என்ன என்ன என்று கேட்கும் தோழிகளிடம் எதுவும் சொல்லவும் முடியாமல்.... இதோ இப்படி எழுதுகிறேனே, அன்றைக்கெல்லாம் அத்தனை ரகசியமாய் இருந்தது என் வேதனைகளும் அழுகைகளும். பரீட்சை மும்முரத்தில் தோழிகள் முட்டிக் கொண்டிருக்க என் சுணக்கமறிந்தே நெருங்கி வந்து,

‘சாப்டியா கயல்’ என்ற நண்பனின் முகம் பார்க்காமல் திரும்பும் போதே தெரிந்துவிடும் அவனுக்கு.

’ஒழுங்கா எழுதுடா! இதெல்லாம் மறந்துடும் ஒருநாள் பாரு. கவலப்படாதே!’ பெரியமனுசனாய் ஆறுதல் சொல்வான் என் வயதுக்காரன்.

மாலையில் வீடு திரும்பினால் ஏதேனும் ஒரு உறவுக்கார கும்பல் வந்திருக்கும். அம்மாவும் அப்பாவும் சண்டையை மறந்து தடபுடல் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பேப்பரில் நான் பாஸாகி விட்டேன்.

இது போல் எத்தனையோ பரிட்சைகளிலும்....

நட்பாய் வாத்தியாரம்மா,வாத்தியாரய்யா, என்னுயிர் நண்பன் என்ற காரணிகள் இருந்திருக்கிறார்கள். நன்றி சொல்ல காரணமா இல்லை? உச்சி முகர்ந்து ஆனந்தப்பட அவர்கள் தானில்லை என்னுலகில்...

கணவன் இறந்த மூன்றாம் மாதத்தில் இறந்து போனாள் அந்தம்மா. தொலைதூர தேசமொன்றில் வசிக்கிறான் என் நண்பன்.

எங்கிருந்தாலும் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!