Tuesday, June 17, 2014

தற்கொலைக்குத் துணிந்தவளின் கடைசிக் கோரிக்கை
‘காப்பாற்றுங்கள்’ என்பதாகத்தானிருக்கும்.
சிலர் கணங்களை கடத்துவதான பாவனையில் எதிர்வரும் நிமிடங்களுக்கென பயப்படுவதைப் பார்த்திருக்கிறேன். கோழைகளின் ஆயுதம் தற்கொலை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோழைகளால் தற்கொலை பற்றி நினைத்திடவும் முடியாது. இது சில நிமிட துணிவு. கடந்தபின் கோழைத்தனம் சாமான்ய விசயங்களை ஒலிபரப்பித் துணிவை உறிஞ்சிவிடும். போலியான துணிவுக்கு அத்தனை தான் ஆயுள். கடப்பது தான் மனவலிமைக்கு சவால்.
பெண்களுக்கு உள்ளுள் குமைந்து மருகும் குணமுண்டு. இதே அத்தனை தூரத்துக்கு கொண்டு செல்கிறது.
பக்கத்து வீட்டுக் காரருடன் தொடர்புபடுத்தி பேசிய காரணத்துக்காக அமிலத்தைக் குடித்து மருத்துவமனைக்குப் போகும் வழியிலே உயிர்விட்ட ஒரு உறவுப் பெண்ணைப் பற்றின நினைவு வந்தது. வார்த்தை அத்தனை சுட்டிருக்குமோ ? சாக்பீஸ் தூவலுக்கும் சிவந்திடும் மென்மையான தேகம் அவளது. போகும் வழியிலே ஜீவன் பிரிந்ததென அழுதபடி சொன்ன அவளின் தோழியின் கேவல் ‘சீ... என்ன பெண் இவள். போராடி ஜெயிக்க வேண்டாமா?’ என்ற எரிச்சலும் கோவமுமென கடந்த அந்த ஈமக்கிரியை நாளின் பின்னிரவில் மூச்சுத் திணறி பெரும் போராட்டத்துக்குப் பின் சமனிலைக்கு வந்த குழந்தையொன்றின் பிரயாசை உயிரின் மகத்துவத்தை சொல்லிப் போனது.
தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளவர்களை சரியான முறையில் ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்துங்கள். உறவினர்களின் அலட்சியமே பல உயிர்களின் இழப்பிற்கு காரணமாயிருக்கிறது. எவருடனும் பங்கிடமுடியாத/பகிரமுடியாத துயரங்களை வடித்துவிடும் பெரும் ஆற்றல் இசைக்கு உண்டு. அதிலும் ராஜாவின் மெல்லிசைக்கு உண்டு. பல புத்தகங்களுக்கும் உண்டு. ஆனாலும் கேட்ட மாத்திரத்தில் மனமாற்றி செயலாற்றும் அமுத சஞ்சீவி இசை.
நல்ல இசையை கேளுங்கள். நல்ல விசயங்களை படியுங்கள்.
’அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது ’ என்கிற ஔவையின் கூற்றுக்கிணங்க உயிரின் மகத்தும் போற்றுவோமாக!
வாழ்க வளமுடன் நண்பர்காள்

1 comment:

ரிஷபன் said...

சமனிலைக்கு வந்த குழந்தையொன்றின் பிரயாசை உயிரின் மகத்துவத்தை சொல்லிப் போனது.


மனம் தளர்ந்து போகிறவர்கள் அதை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள் அவர்களை அறியாமலே.. ஆரம்பத்திலேயே ஆற்றுப்படுத்தி விட்டால் பின்னால் நிகழவிருக்கும் விபரீதங்களைக் கட்டுப்படுத்தி விடலாம்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!