Tuesday, October 15, 2013

அபிசேக மழை

கலச நீர்த்துளி பட்டுத்தீர
ஆயிரம் பாவங்களோடொரு கூட்டம்
கருடனின் வரவுக்கென...

யாக தூபத்தின்
ஆகுதீ வாசம் பிடித்தபடி
நெடுநேரக் காத்திருப்புக்குப் பின்
வட்டமிட்டதொரு கருடன்

உச்சிக் கோபுரத்தில்
மாவிலை நனைத்து
அள்ளித் தெளித்தார் அர்ச்சகர்

அத்தனை தலையிலும்
வைரம் மினுங்கி
நீரானது

நவதானியங்கள் சேர்த்தடைத்த
பொன் முலாமிட்ட
ஐம்பொன் கலசங்கள்
சூரியன் பட்டுத் தகதகத்தபடியிருக்க

தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு
ஓடி வந்த மழை
அளவிலாக் கூட்டத்தை விரட்டிவிட்டு
தான் மட்டும் தழுவி
மகிழ்கிறது

கங்கைநீரை விட மழைத்தீர்த்தம்
புனிதமென நனைந்தபடி கிடக்கிறான்
தெருப் பிச்சைக்காரன்

பாவங்களற்ற அவன் மேனியினின்று
அழுக்கை கழுவிப் போகிறது மழை

5 comments:

Kasthuri Rengan said...

இரா. எட்வின் அய்யாவின் முகநூல் அறிமுகத்தில் வந்தோம்.

நல்ல இருக்கு

தொடர்வேன்..

priyamudan said...

"அத்தனை தலையிலும்
வைரம் மினுங்கி
நீரானது"

- நல்ல ரசனை

priyamudan said...

"அத்தனை தலையிலும்
வைரம் மினுங்கி
நீரானது"

- நல்ல ரசனை

Karthikeyan said...

மென்மை கலந்த, நகைச்சுவையுடன், எளிய தமிழ். மனதுக்கு ரொம்ப பிடித்தது. நலம் பெற்று வாழ்க, இன்னும் நிறைய எழுதுக. இந்த காலத்தில், நிறையபேருக்கு மென்மையை சொல்லி கொடுக்கவேண்டியுள்ளது.

kumar said...

Nice blog. Continue your quest.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!