Thursday, September 26, 2013

நந்தியும் சிவதரிசனமும்

ஒவ்வொரு சிவாலய தரிசனத்தின் போதும் அந்தப் பெரும் நந்தியின் காதில் சொல்லி வர நிறைய விசயங்கள் இருந்திருக்கின்றன. கரும்பாறை சிலையதன் உடல் சிலிர்க்க எத்தனை முறை பேசியிருப்பேன் நினைவில்லை. வெளிப் பிரகாரம் சுற்றிக் கொடிமரம் தொழுது இன்னுமொரு முறை சிவனைப் பார்க்க ஒரு அடி தள்ளித் தான் அமர்ந்திருக்கிறது நந்தி. மருளும் பார்வையென்றால் என்னவென்று கன்றின் கண்களைப் பார்த்தால் புரிந்துவிடும். ஏனோ மனதுக்கு இணக்கமான சிலை தான் நந்தி. வேண்டுதலென்று ஏதுமில்லாமல் அதன் காதில் இன்று வாழ்க வளமுடன் சொல்லி வந்தேன். பலநூறு வருடப் பழக்கத்தில் அதற்கு வாழ்த்துச் சொன்னவள் நானாக இருந்திருப்பேனென்று சிறுபூனையின் மனனிலையில் பெருமிதப்பட்டுக் கொண்டேன். பெருந்தன்மையாய் நந்தியும் மன்னித்திருக்கும்.

ஊரிலென்றால் சாயந்திரம் கோவிலுக்குள் நுழையும் போதே வாத்திய ஓசை கேட்கும். அம்மன் கோவிலில் தான் கூட்டம் நிரம்பி வழியும். சிவன் கோவிலிலோ ஒரு வயதான ஓதுவார் தேவாரப் பதிகத்தைத் தினமும் ஆர்மோனியப் பெட்டியுடன் வாசித்துக் கொண்டிருப்பார். காது கேளாத அவர், கூட்டம் இருக்கிறதா என்பதையும் பார்க்காமல் பாடிக் கொண்டிருப்பார். ஆனால் அந்தக் குரலில் ஏதோ உயிர்ப்பிருக்கும். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஆட்களும் நிறைய மணிப்புறாக்களும் அணிகளும் கோமாடத்துப் பசுக்களும் அழகாய் இருக்கும். மனம் நிறைந்தும் இருக்கும். அத்தனை அமைதியும் திருப்தியும் சென்னையிலுள்ள பழம்பெரும் சிவன் கோவில்களிலும் கிடைக்கிறது தான். ஆனாலும் இங்கே ஏதோ பக்தியில் நகரத்துவம் புகுந்தாற்போல..

இன்று ஒரு சிவாலய தரிசனம். பிரதோஷ நாட்களில் மட்டுமே ஆலய தரிசனம் என்கிற கணக்கெல்லாம் இல்லையென்றாலும் உபவாசமென்கிற எண்ணம் தோன்றும் போதெல்லாம் கோவிலுக்குப் போவதென்கிற வழக்கம் வைத்திருக்கிறேன். நிம்மதிக்கென என்கிற போதும் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தபடி மூலவர் கோபுர தரிசனமும் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் யாளியின் வடிவத்தில் பற்களை எண்ணுவதுமாய் கழியும் அந்த நாழிகைகள் அற்புதமானவை தான். கூடவே சிவபுராணமும் படிக்கக் கேட்க சரிவிகிதமாய் மனம் நிறைவு பெறும். கடவுளை தியானத்தின் மூலம் அடையமுடியுமென்றால் அந்த தியானத்திற்கான ஓர்மையுள் உறையும் பொழுதுகள் தான் ஆலய தரிசனங்கள். என் வரையில் பக்தியென்பது இப்படியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது நண்பர்காள்! சிவனோ அரியோ அம்மனோ இயேசுவோ பள்ளிவாசலோ மனம் எங்கு அமைதியுறுகிறதோ அங்கே தான் பக்தியும் மனதின் சுதந்திரமும் பிரவாகமெடுக்கிறது. இன்று உடல் மனம் ஒருமித்த மகிழ்வான தருணமதை உணர்ந்தேன்.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!