Tuesday, September 24, 2013

மனம் திறந்த ஒரு கடிதம்

தோழிக்கு!

தேர்ந்த வித்தகியின் வினயத்தினை ஒத்தது நின் விழி பேசும் மொழி...
பயமாய் இருக்கிறது பிள்ளைமை படர்ந்திராத பெண்களைப் பார்க்க...
கடினமொழியுனது... மழலையைத் தான் விரும்பி ஏற்கிறேன்.
பேசுவதைக் கேட்கப்பிடிக்காமல் கண்கள் ஏதோவொரு குழந்தையைத் தேடுகின்றன....
எவர் மீதோ எவரின் நட்பின் மீதோ நான் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தகர்க்கும் காரியத்தில் முழுமூச்சாய் இறங்குகிறாய்...

விளக்கம் கேட்கவும் விளக்கம் சொல்லவும் நாங்களே விரும்பியதில்லை. தேவையுமிருந்ததில்லை. பாலின பேதம் நுழையாத தனிவழியில் பயணிக்கும் நட்பது.நானே தேர்ந்த நல்லுறவானதந்த நட்பு. ஆத்மஞானியவன். உடல்களைக் கடந்தவன். இனி சுகிக்க துக்கிக்க மிச்சமில்லாத அனுபவக்குவியல்.அங்கே என் அடையாளம் பெண்ணாய் எப்போதுமில்லை. சகஜீவி என்கிற தோழமையுண்டு. முழுதாய் சுதந்திரமாய் உணரும் தருணங்கள் நாங்கள் விவாதிக்கும் மின்னாடல் தருணங்கள். பேசியிருக்கலாம் தான் இத்தனையும்...நெற்றி நெறித்து தீவிழியோடு பேசும் என் கோபம் தாங்குவாயா? முதல் சந்திப்பு வேறு. மரியாதை நிமித்தம் மௌனம் பேசி வந்தேன். மெசியாவெனச் சொல்லிக் கொண்டாய். சிரித்துக் கொண்டேன். நன்னீரோடையைக் குட்டையெனக் குழப்பி மீன் பிடிக்கும் வேலையெல்லாமா மெசியாக்கள் செய்வார்கள்.

தெளிவாய் தோழி!

அத்தனை ஆபத்தானவர்கள் என்னுடன் இல்லை. அன்பாலானது என்னுலகம். அடக்குமுறைகளின்றி கரங்கோர்த்துச் சிரிக்கும் இயல்பானவர்கள் சூழ் உலகம். போலியில்லாத நண்பர்கள் வரிசையில் ஏன் உன்னைச் சேர்த்தேன்? உன் எழுத்தும் அதன் நேர்மையும் உண்மையென்றெண்ணினேனோ என்னவோ! முதல் சந்திப்பே இத்தனை கசந்தது உன்னுடன் மட்டும் தான். நான் சுதந்திரப்பறவை. கண்ணிகள் வைத்து என்னைப் பறக்க விடாது சிறைபடுத்துபவர்களைப் புறக்கணிப்பது என் கட்டாயமாகிறது. எப்போதும் சிக்கினேனில்லை. :)

மன்னிக்கவும் தோழி!
நடத்தை, சுய ஒழுக்கம், கண்ணியம் இதெல்லாம் என் வரையில் நான் மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளேன். அங்கே நீங்கள் ஏன் கல்லெறிகிறீர்கள்? காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று உங்களின் தேவையில்லாத அக்கறை எரிச்சலாயிருக்கிறது. எவர் அசைத்தும் நகராத கரும்பாறை மனமிது. அத்தனை எளிதல்ல நானும் என் கோட்பாடுகளும். அப்பாவிடம் சொன்னேன். சிரித்தார்.அவரிடமும் பேசியிருக்கிறாய். நல்லது. புரிதலுக்கு ஆட்பட்ட எந்த உறவுக்குள்ளும் அத்தனை சீக்கிரம் நுழைந்துவிடுவதில்லை இது போன்ற சந்தேகக் கணைகள்.
பிறகேன் இத்தனை வரிகள்? கேட்பது கேட்கிறது. வலிதனை வரிகளில் இறக்கி வைத்தே கடந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே... நிச்சயம் படிப்பாய் தெரியும்.  உனக்கென்பதுவும் புரியும். படி. தெளி.

தனிப்பட்ட பிரச்சினை தான் பேசித் தீர்க்கலாமே ஏன் இப்படியொரு பதிவு? இப்படி கேட்பவர்களுக்கும் ஒரே பதில் விஷ மரமொன்றின் வேர் நானறியாமல் பரவியிருக்கிறது. அதன் பரவல் எத்துணை தூரமென்று தெரிந்த நாளின் அதிர்ச்சி இன்று வரை நீடிக்கிறது.
நீ பரப்பும் பொய்யுரைகள் என் காது நிறையும் போது எத்தனை வலி தெரியுமா? என்ன மாதிரியான புகழுக்காக இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி அதற்கு என் பெயர் சூட்டுகிறாய்?  பிரபலமாதலும் பிரபலத்துவமும் வெளியுலக வெளிச்சமும் தேவையில்லாத தன்னிறைவு நிம்மதியில் தான் திளைத்திருக்கிறேன். இப்படியொரு அடிக்கோடிதலுக்கு என்ன அவசியம் வந்தது? அலர்தூற்றும் ஒரு அறிவிலியுடனா நான் என் 72 நிமிடங்களைப் பேசிக் கழித்திருக்கிறேன்.

உன் குரல் கேட்கவோ உன்னைப் பற்றி பேசவோ விரும்பாத மனநிலை தான் இன்றுவரை. உன் அக்கறையின் பேரில் திடீரெனக் குதிக்கும் உறவு/நட்பின் கரங்களின் எண்ணிக்கை தான் என்னை இப்படி எழுத வைக்கிறது. புறம் பேசுதலுக்கென உள்பெட்டியில் கருத்துரையிடுபவர்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை எப்போதுமே.

பிரச்சினையில்லாத எனக்கேன் தீர்வுகளைப் பரிந்துரைக்கிறீர்கள்?!

பெண்ணென்ற கரிசனத்தோடென்றால் இதல்ல கரிசனமென்பது... அப்பட்டமான கீழ்மையின் பாதிப்பு. தவிர எவ்விடத்திலும் பெண் என்கிற அடையாளத்திற்காக சலுகை பெறத் துடிக்கும் நிலையிலும் நானில்லை. இது உங்கள் மனவளப் பிரச்சினை. மீண்டு வாருங்கள் தோழி.

நீங்கள் இத்தனை தூற்றியும், நீங்கள் எதிர்வரும் போழ்தில் இதழிடையில் மலர்வானதொரு புன்னகை மிச்சமிருக்கும்.
பிரச்சாரத் தொனியிலிருந்து விலகி நேர்மையான எழுத்துக்களோடு பயணியுங்கள். வாசகியாய் இருப்பேன். அதே நட்பென்பது கடினமெனினும் பழக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
காலத்தின் கைகளில் எனை ஒப்புவித்தபடி... ஓடிக்கொண்டிருக்கிறேன். நின்று நிதானிக்க நேரமில்லை.

வாழ்த்துகளும் வணக்கங்களும்...

வாழ்க வளமுடன்

- கயல்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!