Tuesday, June 11, 2013

அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.

அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.
 

வீட்டுப் பெண்களெல்லாம் தலைக்குத் தேய்க்கும் வெட்டிவேரும் வெந்தயமும் சேர்ந்தூறிய தேங்காய் எண்ணெயின் மணத்தால் முற்றம் நிரம்பியிருக்கும். முகம் கழுவி,தலைவாரிப் பின்னலிட்டு பவுடரும் சாந்தும் மணக்கும் இந்நேரம்.
நானும் லதாவும் கொடிமல்லிப் பூப்பறிப்போம். ஆச்சி வெள்ளரளி பறித்து ஒவ்வொரு படமாய் வைத்துக் கொண்டிருப்பார். மலருமுன்னே கொய்யப்பட்ட மொட்டுக்களை வாகாய் கட்டித் ஒவ்வொரு தலைக்கும் சிறு இனுக்கு குடியேறும்.
இஞ்சி தட்டிப் போட்ட தேநீர், பெரிய குவளை நிறைய வந்திறங்கும். இஞ்சியும் சேர்த்துக் கொண்டு மணக்கும் முற்றம்.
தேநீரோடு திண்பண்டமோ அவித்த பயறொ கிடைக்கப் பெற்றால் அத்தனை சுகம். அதுவும் சேர்ந்து மணக்கும்.
வாசல் தெளித்து கோலமிட்டு படியில் குங்குமமிட்டு நிமிர்கையில் நனைந்த சாணித் தரையும் ஒரு வித வாடையை முற்றத்துக்கு தந்துவிடும்.
மின் விளக்கேற்றுமுன், சாமி விளக்கேற்றி சாம்பிராணி போட முற்றம் வரை எட்டும் புகையும் சேர்ந்து கமழும்.
நானோ ஏதோவொரு கதைப் புத்தகத்தின் எழுத்துக்களை கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டிருப்பேன்.
இழுத்துப் பின்னலிட்ட சுருள் குழல் மேவிய முல்லையின் வாசனையை நுகர்ந்தபடி ஆகாசவாணியின் செய்திகளை சரோஜ் நாராயண சாமி வாசித்துக் கொண்டிருப்பார்.
வைகை அணையின் நீர்மட்டம் கேட்கப்பெற்றதும் ஆச்சிக்கு செய்தியில் சுவராஸியம் போய் இலங்கை வானொலிக்கு மாற்றுவார்.
அம்மம்மா,அப்பப்பா,தங்கை ,அண்ணன் இப்படி யார்யாரோ விரும்பிக் கேட்டது நமக்கும் விருப்பமாகிப் போகும். இடையிடையே போர் குறித்த நிகழ்வுகளும். அச்சச்சோ, அடப்பாவமே என்றபடி அரசியல் பற்றிப்  பேசுவார்கள். புரியாமல் ஆனால் வார்த்தையின் வீச்சை ரசித்துக் கொண்டிருப்பேன்.
மின் விளக்கேற்றிய நேரத்துக்கெல்லாம் புத்தகப் பை பிரித்து சத்தமாய் படிப்பாள் பக்கத்து வீட்டு வாசுகி. காமாட்சிப் பாட்டி முதல் ஐந்தாறு பெரியவர்கள் கூட்டமாய் வந்து ஊர் நிலவரம் பேசிப் போவர். கிண்டலாய்,கேலியாய் நகரும் அப்பொழுதுகள்.
ஆம்.
அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.

இதோ கண்ணாடித் திரைக்குப் பின்னால் நின்று நகரும் நகரத்தைப் பார்க்கிறேன். கோப்பைத் தேநீருண்டு. பருக ஆவலுமுண்டு. பேசிக் களிக்க நண்பரும் உண்டு. பேசுவதற்கு தான் மேற்சொன்ன அற்ப விசயங்கள் இல்லை. அறிவுஜீவியாய் காண்பித்துக் கொள்ள முகடெல்லாம் தொட்டுப் பிடிக்கிறேன். மனம் நாடுமந்த முற்றத்து வாசனையை என்னைப் போல் மறக்காத எவரேனும் இப்போதும் நினைக்கக் கூடும்.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!