Saturday, June 22, 2013

பலவீனம்

ஒரு கோடை விடுமுறைக் காலம்.பேத்தியைப் பார்க்க மகள் வீட்டுக்கு வந்திருக்கிறார் அந்த கிராமத்து முதியவர். ’எப்ப பார்த்தாலும் ஏன் தாத்தா வாழைப்பழமே வாங்கி வர்றீங்க. சுத்த போர்’ என்றபடி ஓடிவிட்டாள் குட்டிப் பேத்தி. கழட்டி மாட்டியிருந்த கதர்ச் சட்டையில் பயணச் செலவுக்கு ஒரேயொரு ஐம்பது ரூபாய் மட்டும். கூடவே கத்தையாய் ஏதேதோ ரசீதுகள். தலை வாழை உணவு உபசரிப்பில் தூக்கம் வந்துவிட்டது. பயணக் களைப்போடு நன்றாய் தூங்கி விட்டார். ஐஸ் வண்டிகாரனின் அவரசரத்தில் வீட்டிலிருந்த குட்டிப் பெண் அவரிடம் கேட்காமலே சட்டையிலிருந்த பணத்தை எடுத்து விட, இது எதுவும் அறியாமல் விடைபெற்று கிளம்பி விட்டார். பேரூந்து ஏறிய பின் தான் தெரிந்திருக்கிறது. பாதி வழியில் இறக்கிவிடப்பட்டு பெரம்பூரிலிருந்து சூளைமேடு வரை நடந்தே வந்திருக்கிறார். பசியும் களைப்புமாய் சோர்ந்து வந்தவரிடம் கோபமாய்,
‘இவ்ளோ தூரம் நடக்கறாதுக்கு, திரும்பி அங்கேயே போய் கொஞ்சம் பணம் வாங்கி வருவது தானே?’
தயக்கமாய் பதில் சொல்கிறார்,
‘தன்மானம் இடம் கொடுக்கல. நடந்தே வரலாம்னு நடக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் தண்ணி கொடும்மா.’ தளர்வாய் உட்காரும் அவரை காண்பது மிகவும் கஷ்டமாயிருந்தது.
மகன் வீட்டுக்குப் போக வேண்டும். திருவெற்றியூரில் இருக்கிறது.

‘ஏன் பெரியப்பா இப்டி வயசான காலத்துல இங்கயும் அங்கயும் அல்லாடிக்கிட்டு. ஊரில போய் நிம்மதியா இருக்கலாம்ல?’

‘அந்தத் தனிமையும் முதியோர் இல்லம் மாதிரி தானே. வேலைக்கு போகிற மகனுக்கும் மருமகளுக்கும் ஒத்தாசையா இருக்கலாமேன்னு தான். அத விடு, அம்மா டேய்! பூண்டுக் குழம்பும் உருளைக்கிழங்கும் செஞ்சி தாடா’

உரிமையாய் கேட்டதும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பெரியம்மா இருந்த வரையிலும் அவர் இத்தனை தளர்ந்து பசிக் களைப்போடு நான் பார்த்ததேயில்லை. எல்லா சொத்துக்களையும் விற்று கல்யாணமான மகனுக்கும் மருமகளுக்கும் தந்துவிட்டு இப்படி அலைகிறார். பென்சன் பணமும் கை விட்டுப் போகிறது. மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணமென்று. தன்னுடன் இருக்கும் அப்பாவிடம் பணமென்று வாங்குவதில்லை கட்டணங்களை தலையில் கட்டி விடுகிறான் அண்ணன். தனக்கென ஏதும் வைத்திராமல் இப்படி இருக்கும் அவரைப் பார்த்தால் கோபமாகவும் அதே சமயம் பாவமாகவும்.ஒரு வார்த்தை அண்ணாவையோ அண்ணியையோ குறைவாக பேசமாட்டார். அத்தானையும் அக்காவையும் கூட.

நன்றாய் படித்து அரசு வேலையில் மிடுக்காய் இருந்தவர். காலை எழுவதே வேலைக்குச் செல்வதற்கென்று வாழ்ந்து பழகியவர். சம்பாதிக்கும் பணமத்தனையும் பெரியம்மாவின் நிர்வாகத்தில் தான். அத்தனை ஒற்றுமையான தம்பதிகள். எப்படியிருந்த மனுசன் என்கிற வார்த்தை ஏனோ அவரை நினைவுக்குள் இழுத்துவருகிறது.

அவரறியாமல் ஐந்து நூறு ரூபாய் தாள்களை சட்டைப்பையில் வைத்துவிட்டேன். கிளம்பும் போது பார்த்து விட்டார் போலும்.
’எதுக்குடா இவ்ளோ எனக்கு, இந்தா’ நான்கு தாள்களைத் திருப்பித் தந்தார். அழுதுகொண்டே முறைத்ததில், ‘சரி சரி அழாதே!’ நெற்றியில் முத்தமிட்டு விடைபெறும் அவரை நான் என்னுடனே வைத்துக் கொள்ள நான் அவருக்கு மகனாய் பிறந்திருக்க வேண்டும்.பணம் என்கிற வஸ்துவின் தேவை குறையும் போது அண்ணாவுக்கும் இவர் கண்ணுக்குத் தெரியலாம்.
அப்போது வரை பெரியப்பா இப்படியே தான் அல்லாடக் கூடும். தப்புவிக்க என்னிடம் மனமிருந்தாலும் உரிமை இல்லை. ஒரு முறை அண்ணியிடம் ‘அவர் என்னுடனே இருக்கட்டும் ‘ எனக் கேட்டு ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். அண்ணாவை விடவும் அக்காவை விடவும் எனக்கு அவரிடம் உரிமையில்லை... ஆனால் பாசம் அதிகம்.

முதியோர் இல்லங்களைப் புறக்கணிக்காதீர்கள் நண்பர்களே! பாசமற்று பெயருக்கு சேர்ந்து வாழ்தலை விடவும் தன் வயதொத்த நண்பர்களுடன் வாழ்ந்து முடிதல் சுகம். பெரியப்பா போல சுமைதாங்கி இயந்திரங்கள் ஓய்வு காலத்தில் விரும்பியபடி வாழ்தல் எங்கு சாத்தியமோ அங்கேயே இருக்கட்டும்.

ஆனால் அவருக்கு பாசமென்பதே பலவீனம்....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!