உயரப் பறத்தலில்
உச்சம் தொடுகிறது
உயர்சாதிப் பருந்து
தனக்கிருக்கும் பலத்துக்கு தக்கவாறு
எம்பிச் சிறகசைக்கிறது ஊர்க்குருவி
தோற்ற முயற்சிகளுக்கு
எள்ளி நகையாடுகின்றன
மனிதக் குயுக்தி புகுந்த சில மிருகங்கள்
தனக்கும் சிறகிருப்பதை
மறக்கடிக்கும் எதையும்
செவிமடுப்பதில்ல பறக்கத் துடிக்குமது
வக்கில்லாத முன்னோடிகளை
ஏறிட்டும் பார்ப்பதில்லை
ஆமாம், அதற்கெதற்கு பருந்தாகும் நிர்பந்தம்?
அது அதுவாகவே இருக்கட்டும்
வேண்டுவதெல்லாம்
வேடர்கள் கண்ணியில் சிக்காத
சுதந்திர வாழ்க்கை
பறக்கப் பறக்க
வசமாகும் வானம்
களைத்து பூமி தொடுகையில்
கண்ணுக்குப் புலப்பட
ஏதோவொரு நீர்நிலை
இரப்பை நிறைய
ஒன்றிரண்டு தானியங்கள்
மக்கிய மரத்தினையும் உபத்திரவிக்கும் புழுக்கள்
மறந்தும் பிறவுயிர் பிரிப்பதில்லையாதலால்
மீந்த மாமிசம்
இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்
மூக்கு வியர்க்கும் வியாதிகளில்லாது
இன்னும் இன்னும்
உயரப் பறத்தலின் கனவோடு...
தூறல் நனைத்த கார்காலத்தில்
அதோ
அந்த வானவில்லை நோக்கி
அம்பெனப் பாய்கிறதந்த மாமிசப்பக்ஷி!
2 comments:
மிக அருமையான படைப்பு ரசித்து படித்தேன்.
உங்களது வருத்தம் புரிகிறது மீண்டும் வருகிறேன் மீதமுள்ளதை தருகிறேன்
Post a Comment