விஜய் டீவில இன்னிக்கு 'நீயா?நானா?' பார்த்தேன்.நான் பார்த்த எல்லா ஷோவைக் காட்டிலும் ஒரு கிராமப்புற மாணவியா இதான் ’பெஸ்ட்’ந்னு சொல்வேன். அத்தனை அற்புதமா அரசுக் கலைக் கல்லூரிகளின் கல்வித்தரம் பத்திச் சொன்னாங்க.விவரிச்சாங்க.ஏத்துக்கிட்டாங்க.சொல்லப்பட்ட விதம் கூட ரொம்ப அறிவார்த்தமாவும் இயல்பாவும் இருந்துச்சு. கேட்டுக்கிட்டே இருந்தேனா என்னோட கல்லூரியப் பத்தின நினைவுகளில் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.மிகவும் போராட்டமாத் தான் அமைஞ்சது கல்லூரி வாழ்க்கைக்குப் பின் வேலை தேடும் படலம்.வாழ்க்கையில ஏற்ற இறக்கங்களைச் சுலபமா எதிர்கொள்கிற துணிவும் தைரியமும் இதுபோலான கல்லூரிகளிலே படிக்கற நடுத்தரவர்க்கத்துப் பெண்களுக்குத் தான் இயல்பா வருதுன்னு சொன்னாங்க.100% சரி. எப்பவும் போல எனனை முழுதா ஆராய்ந்தபின்னாடியே தான் இதச் சொல்றேன்.கல்லூரிச் சூழல் என் வாழ்வில் மிகவும் அருமையான,முக்கியமான காலகட்டம்.
படிப்பில நான் ரொம்பவே சுமார்.ஆனா மதிப்பெண் வாங்குறதுக்குப் படிக்காம,எப்படி எதில் படித்ததை உபயோகிப்பது என்கிற சுதந்திரத்தோடு சுயசிந்தனையை வளரச் செய்தயென் கல்லூரிக்கு நன்றி.மனிதர்களைப் படிக்கிற வித்தையை அங்க தான் நான் கத்துக்கிட்டேன்.அருமையான வாழ்வியல் கற்றுத் தந்தது என் கல்லூரி.
ஏனோ இன்னிக்கு என்னோட கல்லூரி மேல அத்தன மரியாதை வருது. எப்பவும் இருக்கும்னாலும் எழுதத் தோணினதில்ல.ஆகா,உனக்கு வயசாயிடுச்சுடீன்னு உள்ளுக்குள்ள அடிச்சிக்கிட்டாலும் சொல்லவந்ததச் சொல்லியே ஆகனும்.
எம்.ஜி.ஆர். காரைக்குடிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில கலந்துக்க வந்தப்போ, அவரை ஏழைப் பங்காளன்,வள்ளலென்றெல்லாம் அழைப்பதை இடைநிறுத்திச் சொன்னாராம்,’இது அழகப்பர் வாழ்ந்த மண். இங்க என்னை வள்ளல்ன்னு சொல்லாதீங்க.அதுக்கு நான் தகுதியானவனில்லைன்னு’. பல்கலைக்கழகத்திலிருந்து உடற்கல்வி பயிற்சிக் கல்லூரி வரையிலான அத்தனை பெரிய நிலப்பரப்பு. தானமாத் தர யாருக்கு மனசு வரும்? கடன் வாங்கிக் கல்விக் கண் திறக்க எந்த மாமனிதனுக்குத் தோணும்? தன் உடல்நிலை சரியில்லாத காலகட்டத்திலும் கூட? எத்தனையோ பேர் அவரை எத்தனையோ விதமா புகழ்ந்திருந்தாலும் நானும் சொல்ல வேணாமா? நான் என்ன சாதிச்சிட்டேன். அவர் புகழ் பாட நானெல்லாம் ஆளான்னு மனசாட்சி கேட்டாலும், ’உரிமை தான்’ன்னு பெருமையாச் சொல்லிக்கிறேன். ஒரு தனி மனுஷியாய் என் சாதனைகளுக்கு ஒன்றும் குறைவில்லை.
வள்ளல் அழகப்பர் என்கிற மாமனிதன் நிர்மாணித்த அந்தக் கல்லூரியில் படித்தேன் என்பதை நான் படிக்கும் காலத்தில் உணரவேயில்லை. ஏனெனில்,அது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமானதொரு கல்லூரி. :). அப்பா சித்தப்பா,அண்ணன்கள், தம்பி, தங்கை என என் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் எல்லோரும் ஒரு முறையாவது தங்கள் கல்விக் காலத்தை அந்தப் பெயரோடு தொடர்புபடுத்திக் கொண்டிருப்பர். அப்படி எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்தது ‘அழகப்பச் செட்டியார்’ என்கிற பெயர்.
மூன்றாமாண்டு என்று நினைக்கிறேன், அப்பாவும் ராஜூ மாமாவும்(அப்பாவின் கல்லூரித் தோழன்) பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் கால்பந்து போட்டி நடந்து முடிந்ததும் அழகப்பர் வீட்டிலிருந்து உணவு வருமாம். அவரோடு சேர்ந்து எல்லோரும் சாப்பிடுவார்களாம்.போட்டியில் தோற்றாலும் இதே உபசரிப்பென்பது கூடுதல் தகவல்.தன் மாணவர்களைத் தன் சகதோழனாகப் பாவிக்கும் மாண்பு வள்ளலின் தனிச்சிறப்பு.அப்பாவின் வாழ்வில் அவர் கல்லூரிப் பேராசிரியர்கள் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தார்கள். பெரியார் வழிக்கு, சுயமரியாதை என்கிற சொல்லுக்கு வித்திட்டவர்களுள் ஒருவரென வள்ளலை அப்பா சொல்வது வழக்கம். தறிகெட்டலைந்த காலகட்டங்களையும் கல்லூரிக்குள் கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களையும் பகிருவார் அப்பா. பெருமையாயிருக்கும். எளிமை, அடக்கம்,அறிவுசார் வாழ்வென வள்ளலிடம் கற்றுக் கொள்ள ஏராளமான உயரிய பண்புகளுண்டு. அத்தனைக்கும் மேல் கல்லூரியை உயிராய் நேசித்தவர் வள்ளல் அழகப்பச் செட்டியார். கல்லூரியிலேயே தான் அவர் சமாதியும் அமைந்திருக்கிறது.
அவரின் கொடைச் சிறப்புப் பற்றிக் கூகிளில் தேடினால் ஆயிரம் கிடைக்கும். என்வரையில் பிரம்மித்த விசயத்தைச் சொல்கிறேன்.எங்கள் கல்லூரி நூலகத்திற்குச் செல்லுங்கள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்களைப் பாருங்கள். தன் வாழ்நாள் முழுவதும் தேடிச் சேகரித்த அத்தனை புத்தகங்களையும் தானமாய்த் தான் நேசித்த கல்லூரிக்கே தந்து அறிவுக் கண் திறந்த அவரின் பெருந்தன்மைக்கு எப்படி நன்றி சொல்ல? அவர் வாழ்ந்த காலத்தில் கிட்டத் தட்ட எல்லாத் தரப்பு நூல்களும் அங்கிருக்கும். குறிப்பாய், தமிழ்த்துறைசார் நூட்கள் யாவும் அங்கு கிடைக்கும்.
“கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்தவீடும் கொடுத்த விழுத்தெய்வம் – தேடியும்அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்வெள்ளி விளக்கே விளக்கு”
இந்த வாழ்த்தை,எல்லாக் கல்லூரி விழாக்களிலும் வாசிப்போம்.மனப்பாடமும் கூட. ஆனால் இப்போது இதை வாசிக்கும் போது ஏனோ திரைகட்டுகிறது கண்ணீர். ஒரு தனிமனித முயற்சியும் கனவும் சமுதாய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிகோலும் என்பதை வாழ்ந்து சாதித்தவர். பொதுவாய், மனிதர்களைப் புகழ்வது எனக்கு வழக்கமல்ல. இவரைப் போல மனிதருள் வாழ்ந்து சிறந்த தெய்வங்களைப் புகழாது போனால் எனக்குத் தெரிந்த சொற்பத் தமிழும் என்னைப் புறக்கணிக்கும்.
ஆம், வள்ளல் அழகப்பச் செட்டியார் எங்களுள் வாழும் தெய்வம்.
1 comment:
"நீயா நானா "வை நானும் பார்த்தேன் ! கண் கல்aங்கியது ! நானும் இடுகை இட்டுள்ளென்! அன்Ru கல்வி தானமாக கொடுக்கப்பட்டுள்ளது ! இன்று வியாபாரமாகி விட்டது ! முடியுமானால் pl.visit kashyapan blog spot ! ---kashyapan
Post a Comment