Wednesday, January 16, 2013

வாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்


மஞ்சு விரட்டு மாடுகள் வளர்ப்பது கிராமத்தின் முக்கியாம்சங்களில் ஒன்று. சிலர் இதை அரசியலாக்கி லாபம் காண்பதும் உண்டு. ’ஏறுதழுவல்’ வீரத்தமிழர் பண்பாடு.விழுப்புண் பெற்ற இளங்காளையர்க்கு மாலைசூட்டுதல் அவர்தம்
வழக்கம்.இலக்கிய காட்சிகள் அழகாக விவரித்துச் சொல்லும்.இதெல்லாம் இருக்கட்டும் இன்று காணும் பொங்கல். எங்க ஊர்ல - மஞ்சு விரட்டுக் களைகட்டும். கிராமத்து வாழ்க்கையைப் போலவே, இது போலான அரிய நிகழ்ச்சிகளையும் ரொம்பவே இழக்கிறேன்.

மஞ்சுவிரட்டுக் குறித்த விசயங்களில் எனக்கும் கொஞ்சம் பரிச்சயமுண்டு. அதற்கான ஆயத்தங்கள் பற்றியும் கொஞ்சம் அறிவுண்டு. பொங்கலுக்கு ஒரு மாதமுன்பே மாட்டின் வலுவிற்கான தயாரிப்புகள் ஆரம்பித்துவிடும் உணவுரீதியாக. மஞ்சுவிரட்டு மாட்டோட மூக்கணாங்கயிற முதல் நாள் தான்  பிரிச்சி எடுப்பாங்க. அப்பத் தான் அதுக்கு அதிக வெறி வரும்ன்னு.
சிவப்புக் கயிறும் சலங்கையும் நெத்திச் சுட்டியும் சந்தனப் பொட்டு மாலை என இன்னிக்கு மட்டும் எல்லா முரட்டுக் காளைகளும் மணக்கோலத்துல... மஞ்சு விரட்டில் மாடுகள் கட்டுமிடம்,தொழுவம் இதெல்லாம் வர்க்க ரீதியானதென்றாலும் நின்று விளையாடும் மாடுகளுக்கு எந்த வர்க்கபேதமும் இல்லை. கட்டவிழ்த்தால் எதிர்போரைத் தாக்கித் தனியிடமேகுவதே குறிக்கோளாயிருக்கும். மேல் பாய்ச்சல், கீழ்பாய்ச்சலென்று பழக்கிய வித்தைகளையெல்லாம் எதோவொரு வீரனிடம் காண்பித்துவிட்டு ரத்தம் வழியும் கொம்புகளோடு மண்மேட்டைக் குத்திக் கிளரும் அடங்காத மாடுகளைப் பார்த்திருக்கிறேன்.
எத்தனை பேர் குடல் சரிய இறந்து போனார்கள்? எத்தனை பேரின் நிலைக் கவலைக்கிடம் இதெல்லாம் காதில் போட்டுக் கொண்டே விருந்தோம்பல் கொஞ்சமும் குறைவின்றி நடந்தபடியிருக்கும்.

கட்டு அவிழப் பெற்ற மாடுகளைத் திருப்பியும் வீடு வந்து சேர்ப்பது தான் பெரிய வேலை.திருப்பியும் அதைக்  கட்டிப்போட பிடி கயிற்றோட இன்னிக்கு முச்சூடும் ஆட்களை எங்கள் பிராந்தியத்தில் பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் வேலை ரொம்ப மிச்சம், வெல்லம்-தேங்காய்-பச்சரிசி இத வச்சிக்கிட்டுச் சமர்த்தா வந்திருன்னு சொன்னாக் கேட்குமளவுக்கு ஒரு மாடு வளர்த்தேன்.அதை மெல்ல ஏமாற்றிக் கொம்புகளில், முடிச்சிட்ட கயிற்றை மாட்டி விட வேண்டும். பிறகனைத்தும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.மிகக் கூராகச் செதுக்கப்பட்டிருக்குமதன் கொம்புகளின் பிரயோகம் எனக்கெதிராய்த் திரும்பினால் மரணம் நிச்சயம்.என்னை விடவும் ’அது’  என்குறித்து மிகக்கவனத்தோடிருக்கும்.யாருக்கும் அடங்காத அந்த முரட்டு உருவத்துக்கு என் அன்பாலேயே வசியம் செய்திருந்தேன்.மூக்கணாங்கயிறு அழுந்திய ரணம் ரத்தமாய் வடிந்தாலும் என் கட்டளைக்குக்  கீழ்ப்படியும்.வாலையும் துமிலையும் தொடுவது மிகவும் ஆபத்தானது அந்த நேரத்தில்.. அத்தனை ஆக்ரோசமாயிருக்கும். ஆனாலும் என்னை அதன் கழுத்தை நீவி விட அனுமதிக்கும். அப்பாவுக்கு என் தைரியம் பெருமையாயிருக்குமென்பதாலே இந்த விசப்பரீட்சையில் நான் இறங்குவது வழக்கம். மிகவும் கம்பீரமான மாடு.அலங்காரங்கள் செய்தபின் அதன் துள்ளலும் துடிப்பும் பார்ப்பவரை மிரளவைக்கும்.மஞ்சுவிரட்டுக்குத் தோதான காளைப்பருவமதற்கு. அதற்கு மட்டும் பகுத்தறிவிருந்தால் அதன் சக்திக்கு முன் என்னையெல்லாம் மதிக்கவே செய்யாது.நல்லவேளையாக, அது என்னை எஜமானியாகவும் அதை நான் வளர்ப்புப் பிராணியாகவும் மனதார சுவீகரித்திருந்தோம்.
முக்கியமானதொரு விசயம் அதற்குச் சிவப்பென்றாலும் கறுப்பென்றாலும் ஆகாது. அந்தக் காலகட்டத்தில், அவ்விரு நிறங்களிலான ஆடைகளைத் தவிர்க்க எங்களுக்குள்ளான புரிதல் தாண்டிய பாசமொரு காரணம்.எங்களுள் நிலவியது நல்லதொரு நேயமென்றே கொள்ளவேண்டும். என் பெயரைக் கேட்டாலோ என் குரல் கேட்டாலோ அதனிடத்தில் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொள்வதைக்  கவனித்திருக்கிறேன்.
கல்லூரி முடித்து வீடு வந்தவுடன் அதனோடு பேசா விட்டால் தலை வெடித்துவிடும். என் வளர்ப்பு பிராணிகளில் நாய்கள்,மைனா,கிளி,பூனை,கோழி என எல்லாமும் இருந்திருக்கிறது, ஆனாலும் நான் அதிகம் நேசித்த ஒரு  ஜீவன் அதுவாகத் தானிருக்கும்.
மூன்று வருடங்கள் ’அது’ என்னோடிருந்தது.
வேலைக்கென ஊரை விட்டுச் சென்னை வந்த அடுத்த வருடம், யார் பராமரிப்பதென்ற குடும்ப அரசியலில் அதுவும் இல்லாமல் போனது மாட்டை மிகவும் நேசிக்கும் பெரியப்பாவைப் போல....

‘அது’வும் பெரியப்பாவும் எல்லாப் பொங்கலுக்கும் தவறாமல் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை வெற்றிடமொன்று பரவி வலியோடான கனம் பரவுகிறது.

 சொல்ல மறந்து விட்டேன் அதன் பேர் ‘ராமு’.

1 comment:

சே. குமார் said...

நல்ல பகிர்வு....

பணம் வேண்டும் வாழ்க்கையில் கிராமத்து வாழ்வைத் தொலைத்து விட்டோம்....

ராமு என்ற பேரைக்கேட்டதும் எங்கள் ஏரியாவில் இருந்த ராமுக்காளைதான் ஞாபகத்துக்கு வந்தது.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!