Monday, February 11, 2013

அசுர கனா

பிடரி மயிர் கூச்செரியும் 
மின்வெட்டு இரவுகளில் 
அச்சுறுத்தும் குறட்டை ஒலிகளுக்கிடையில் 
அசுரன் ஒருவனின் அட்டகாசம் அதிகமிருக்கிறது
கையிலேந்திய வாட்களில் சொட்டும் குருதி 
ராஜபாட்டையில் ரத்தக்கம்பளம் விரித்துப் போகிறது 
குளம்படிகளின் பேரிரைச்சலைக் காட்டிலும் 
தூசிப் படலத்தில் மூச்சுத் திணறுகிறது 
கறைபடிந்த பற்களின் அசுத்தத்தைப் போலவே 
அவன் வார்த்தைகளும்... 
முகஞ்சுளிக்கிறேன்
குதிரையிலிருந்தபடியே
என் தலை கொய்து போகிறான்
பிரிந்த உடலின் தவிப்பை பாடியபடி
இமைக்க மறக்கிறேன் மெல்ல மெல்ல...
சாம்பிராணி புகையோடு
தினப்படி வசைபாடும் அம்மாவும்
புழுதி பறக்கும் மண்சாலையும்...
எது நிசமெனத் தெளியுமுன்
இயந்திரமாய் அலுவலகம் நுழைகிறேன்
நாளைய கனவிலேனும்
வெட்டப்படுமுன் விழித்துவிடவேண்டும்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!