Friday, January 11, 2013

முன்பொருநாள் இங்கொரு குளமிருந்தது

கோடைப் பொழுதுகளில் 
தாகம் தீர வேண்டி 
பறவைகள் படையுடன் 
வந்து செல்லும்

மக்கிய எச்சங்களில் முளைத்ததொரு  
பெருமரம் நீர்ச்சத்தின் அடையாளமாய்...
பாதைகள் கூட 
உரசாமல் ஒதுங்கிச் சென்றன
குளமிருந்தயிடத்தில்
குடியிருப்புகள்
ஆனாலும் மரத்துக்குண்டான
மரியாதை மட்டும் அப்படியே

விருந்தினர் வருவதும்
கூடமைப்பதும்
குஞ்சுகள் பொரிப்பதுமென
மரத்துக்குண்டான வாழ்வை
அம்மரம் வாழ்ந்து கொண்டிருந்தது

பாதை நெடுஞ்சாலையாவதில்
ஆட்டம் கண்டது ஆயுட்காலம்

பறவைகளுக்காக 

கண்ணீர் வடிக்காதீர்கள்!
இங்கில்லையெனில்
இன்னொரு மரக்கிளையில் 

அமைந்துவிடுமதற்கொரு கூடு..
மரத்துக்கென மன்றாடுங்கள்
வெட்டிச் சாய்க்கப்படும்
இப்பெருமரத்தின் அடிவேரில் தான்
குளத்தின் கடைசித்துளி
பதுங்கியிருக்கிறதென்று 

வெட்டுவதற்கு முன்
யாரேனும் சொல்லுங்கள்!

2 comments:

நிலாமகள் said...

மரத்துக்குண்டான வாழ்வை...

மரத்துக்கென மன்றாடுங்கள்...

குளத்தின் கடைசி துளி...

அழகும் அர்த்தமும் மனசில் நிற்கிறது.
கசியும் இருதுளிகள் மரத்துக்கும் அக்குளத்துக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

இப்பெருமரத்தின் அடிவேரில் தான்
குளத்தின் கடைசித்துளி
பதுங்கியிருக்கிறதென்று
வெட்டுய்வதற்கு முன்
யாரேனும் சொல்லுங்கள்!

கூர்வாளாய் வரிகள்...!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!