நினைவில் நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்!
பார்வைகளில் மட்டுமே
கலந்துரையாடல்கள்!
*********************
பார்வை விபத்துக்கள்
நிகழும் நிமிடங்களில்
உணர்வுகள் மரித்துப் போகும்
உயிர் மட்டுமே மீதியாகும்!
*********************
ஒவ்வொரு நாளும் விடிவது
'அவன் தரிசனம் பெற' என்று மனம்
சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்!
கடிகார சத்தம் கூட
என் காதலின் எதிரியாகும்
மனதின் ரீங்காரத்தை முறியடிப்பதால்....
*********************
'இன்றாவது இன்றாவது சொல்லிவிடு'
என் மனம் துவண்டு துவண்டு
துடித்து எழும் அவன்
அமைதி முகம் காணும் வரை...
கண்டதும் வார்த்தைகள்
ஊமை விரதம் நடத்தும் - என்
தாய் மொழியின் வார்த்தைகள்
எண்ணத்துக்குள் சிறைபட்டு போகும்...
************************
அந்த நிழல் கூட
எனக்கே சொந்தம்
என் தமிழின வள்ளல்கள்
போற்றி வளர்த்த
'ஈதல்' என்பது - இந்த
விசயத்தில் மட்டும்
இல்லாமல் போகும்!
************************
அந்த பார்வைகள் சொல்வது
மெய்யா ? பொய்யா?
பகுத்தறிவு எனக்குள்
பட்டிமன்றம் நடத்தும்...
என்னைக் கண்டதும் - அந்த கண்கள்
மலர்வதாய் எனக்குள்
ஒரு சுயபொறி கருவி
மின்னலாய் சொல்லிச் செல்லும்!
******************************
அங்கும் இங்கும்
அலைந்து அலைந்து
ஓய்ந்து போன இருஜோடி விழிகள்
மோதும் போது அங்கே
"உணர்வின் பேரலை"
அந்த மனதின் வருத்தங்கள் - என்
ஆறுதல் தேடி அலைவதாய்
மன அகராதியில்
'புதிய விளக்கம்' பதிவாகும்!
கண்களென்னும் கருவிகள் மட்டுமே
கொண்டு இதய தொழிற்சாலை
இயங்கி கொண்டிருக்கும் !!!
***************************
உணர்வுகள் அத்தனையும்
பட்டினிப் போராட்டம் செய்யும்!
உள்ளுணர்வு இது சரியா? பிழையா?
தராசு முள்ளாய்
தடுமாறிக் கொண்டிருக்கும்!!
***************************
வார்த்தைகள் புதிய
சிக்கன சித்தாந்தம்
எழுதிக் கொண்டிருக்கும்!
உணர்வுகள், உறவுகள் - என
பாழாய் போன மனது
பழங்கதைகளை
பதிவு செய்து ஒளிபரப்பும்!!
************************
என்னைத் தவிர உலகம்
முழுதும் மகிழ்வதாய்...
ஒரு வருத்தப் போர்வை
மனதில் சட்டென படரும்!!
************************
பெண்மையின் தவம்
மனம் விரும்பும் ஆணின் நேசம்...
எதிர்பார்ப்புகள் எல்லைப் பிரச்சனை
செய்யும் எதுவரை முடிவதென்று?
அவனின் வார்த்தைகள் கூட
வரலாறாகும் இவளின் அதிகாரத்தில்...
தியாகங்கள் நித்தம்
ஒரு யாகமாய் அரங்கேறும்..
*******************************
ஒவ்வொரு நாளும் விடிவது
'ஒரு யுகம்'
கனவு நூற்றாண்டுகளை
விழிகள் கடந்து வருவதால்....
****************************
மனமெனும் குரங்கு
தோல்வியையும் வெற்றியையும்
தராசுத்தட்டில்
மாற்றி மாற்றி
நிறுத்துப் பார்க்கும்!
எதிர்காலம் எப்படியோ?
எதிர்பார்ப்புகளோடு
ஒவ்வொரு முறையும்
பார்வை விபத்துகள் நிகழ்ந்து
கொண்டுதானிருக்கும்!
விபத்தின் பலனாய்
இதயக் கட்டடம்
ஆடிக்கொண்டிருக்கும்
பலவீனத்தால் ......
************ <<முற்றும் >>*************
No comments:
Post a Comment