Friday, May 31, 2013

துவரஞ் செடியும் அவரைப் பூவும்

மிளகாய்,உப்பு,வெந்தயம்,கடுகு,பெருங்காயம் இன்னபிற சேர்மானங்கள் சேர்த்து இடித்து, ஊறவைத்த மாங்காயுடன் சேர்த்துக் குலுக்கி, பெரிய ஊறுகாய் ஜாடியில் போட்டு, வேடுகட்டி, வெய்யிலில் எடுத்து வைத்து பதனமாய் தயார் செய்வாள் அப்பத்தா. நார் அதிகம் உள்ள வரகாம் புஞ்சை மாமரத்து மாங்காய் தான் எனக்கு வேண்டுமென்று சொல்லிவிடுவேன். அந்த மாங்காய் ஊறுகாயின் ருசிக்கு என் பள்ளித் தோழிகள் அத்தனை பேரும் ரசிகைகள். எனக்கென தனியே இடித்துச் சேர்ப்பாள். அத்தனை அக்கறைக்கும், மெனக்கெடலுக்கும் பெயர் பாசம் என்று தெரிந்ததேயில்லை. உணர முடிகிறது இப்போது.

சித்திரைக் கடைசியிலெல்லாம் கடாகம் நிறைய மாங்காயும் வெண்டை வத்தலும், சீனி அவரங்காயும் மொட்டை மாடியில் காய்ந்தபடி இருக்கும் வருடம் முழுவதற்கும்....உப்புக் கண்டங்களும் சில வகை வற்றல்களும்...வெளியூரில் இருக்கும் மகள்களுக்கும் மகன்களுக்குமெனவும், என்னைப் போல வெளியூரில் தங்கிப் படிக்கும் வாண்டுகளுக்கெனவும் அத்தனை மெனக்கெடுவாள். சின்னச்சின்ன மூட்டைகளாய் அவலும் சத்துமாவும் புறப்படுமுன் வந்து சேரும். பாசிப்பயரு உருண்டை, எள் கலந்த இட்லிப் பொடியென ஒரு கிராமத்துப் பாட்டியின் கைவண்ணம் என் பை நிறைக்கும். அப்போதெல்லாம் தெரிந்ததேயில்லை அவள் பாசம்.



அம்மா மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆற்றுப் பாசனம் வாய்த்ததால் அங்கே வயல்களில் பயிர்செய்வார்கள். நாங்கள் சிவகங்கை மாவட்டத்தின் வறட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.வானம் பார்த்த பூமிக்கு புஞ்சை,தோட்டப் பயிர்கள் தான் விளையும். அதற்கும் கடும் உழைப்பும் முனைப்பும் தேவை. துவரை தான் எங்கள் குடும்பத்தின் முக்கிய விவசாயப் பயிர். அய்யா காலத்தில் எல்லாம் அதில் மகசூல் அதிகம் பெற்ற காரணத்தால் குடும்பத்துக்கும் அதே பெயர் வந்தததாம். ’ஏ ! யாருத்தா அது! துவரயன் வீட்டுக்குட்டியா?’ இப்போதும் இப்படியான விளிப்பு என் ஊரில் எனக்குக் கிடைக்கும்.

பாசிப்பயறு,தட்டைப்பயறு,வேர் கடலை போன்றவையும் விதைத்து சாதனை புரிந்திருக்கிறார்களாம்.திணை,கேழ்வரகு போன்றவையும் அப்பத்தா விவசாயம் செய்து பார்த்திருக்கிறேன். பொழுது புலர்ந்ததும் களைக்கொட்டும் கையுமாய் அவளை எப்போதும் புஞ்சையிலோ தோட்டத்திலோ பார்க்கலாம். மழைவரத்தைப் பொறுத்து தான் வயலில் விவசாயம். அதிலும் நெல்லைத் தவிர ஏதும் விளைவித்ததேயில்லை. அதும் வீட்டுத் தேவைக்கு மட்டுமே சரியாய் போகும். மாடுகளும் புஞ்சையும் தான் அத்தனை பெரிய குடும்பத்துக்கு முதுகெலும்பு. எப்படி விவசாயத்தை வைத்து இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கினாள்? யோசித்துப் பார்க்கையில் அழகியின் அயராத உழைப்பு அகக்கண்ணுக்குத் தெரிகிறது.

அப்பத்தா கடும் உழைப்பாளி.

தோட்டத்திலும் அவள் வியர்வை விளைந்தபடியிருக்கும். சிறுவாடு என்கிற சொல்லைக் கேட்டிருக்கிறீர்களா? யாருக்கும் தெரியாமல் வீட்டுப் பெண்கள் தனக்கென சேமிப்பது. வீட்டுக்கென காய்கறிகளில் எல்லாமும் விளைவிப்பாள்.ஆரம்பத்தில் கை இறவையில் தான் பாசனம். எங்கள் வீட்டுக் கத்திரிக்காய்க்கு ஏக மவுசு இருக்குமாம் அப்போதைய சந்தைகளில். எனக்கு விவரம் தெரிந்து விளையும் காய்கறிகள் வீட்டுக்குத் தானே தவிர வெளியில் விற்றுப் பார்த்ததில்லை.தனியாய் காய்கறி விற்று காசு சேர்க்கிறாள். கணக்கில் வருவதில்லையென்று அய்யாவும் அம்மா,சித்திகளும் கிசுகிசுத்துக் கேட்டிருக்கிறேன். அத்தோடு ஒரு சின்ன பம்புசெட் மோட்டார் அப்பத்தாவுக்கென பெரியப்பாவின் கொடையாக தரப்பட்டதில் அத்தனை மகிழ்ச்சி. அவள் பொழுது எப்போதும் தோட்டத்தில் தான் கழிந்தது. நானும் அவளிடம் தான் கற்றுக் கொண்டேன் காய்கறித் தோட்டமிடுவதை. சின்ன தோட்டத்தில் என்னவெல்லாம் இருந்தது. என்னவெல்லாம் கிடைத்தது! முள்வேலி தான். ஆத்தி மரத்தட்டி தான் கதவு. ஆனால் களவே போனதில்லை. அடுத்தவர் உழைப்பைச் சுரண்டாத நிஜ உழைப்பாளிகளை அனேகம் கிராமங்களில் பார்க்கலாம்.வாருங்கள் காண்பிக்கிறேன்.

மிகச் சிறந்த திட்ட மேலாண்மையுடன் பாத்தி பிரித்திருப்பாள். பூச்சி வெட்டு அதிகமாகச் சாத்தியமுள்ள காய்கறிகளை ஓரத்திலும், மீதமுள்ளவற்றை தோட்டத்தின் மத்தியிலும் பயிரிடுவாள். பெரும்பாலும் விதைக்கும் பருவத்தில் உடனிருக்கும் நான் காய்க்கும் பருவத்தில் தான் வீட்டிலிருப்பேன். அத்தனை சந்தோசமாய் இருக்கும் சின்னச்சின்னதாய் கறிகாய் முளைப்பதைப் பார்க்க. இரண்டு கிண்றுகள் உண்டு. அதில் ஒன்று தூர்ந்து போனபின் மோட்டாரின் தேவை அதிகரித்துவிட்டது. புதிதாய் வாங்கித் தந்தார் பெரியப்பா. இதை எல்லாச் செடிகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.மலர்வாக அவளைப் பார்க்க அத்தனை பிடிக்கும் எனக்கு.

வீட்டுக்கு வரும் உறவினர்களில் எங்கள் தோட்டத்துக் காய்கறி ருசியறியாதவர் எவரும் இருக்க முடியாது. மோர் உபசரிப்பும் நெய்யிட்ட பருப்புக் குழம்பும் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் பஞ்சம் தலைவிரித்தாடிய நாட்களிலும். ஒவ்வொரு செடியிடமும் ஒவ்வொரு கதை சொல்லி உச்சி நெருங்குகையில் பார்த்தால் அவளோடே பாதி நிலம் களையெடுத்திருப்போம். சாம்பலும் வேப்பம் புண்ணாக்கும் எருக்களும் தான் உரம். இரசாயன உரம் உபயோகித்து நான் பார்த்ததேயில்லை. இப்போது அடிக்கோடிடப்படும் இயற்கை விவசாயம் அதை இன்னதென்று அறியாமலே அமுலாக்கியிருக்கிறாள்.

நாட்டு வெண்டைக்காய்(வெள்ளை நிறத்தில் இருக்கும்), தோட்டத்து கத்திரிக்காய்(செட்டிநாட்டு உணவுகளில் இது பிரபலம்,பச்சை நிறத்திலிருக்கும்),பச்சை மிளகாய், சீனிமிளகாய்,தக்காளி,கருணை,முள்ளங்கி,பயித்தங்காய்,வெள்ளைப்பூசணி,குமுட்டிக் காய்,சர்கரைப்பூசணி,பீர்க்கை,புடலை என எல்லாமும் விளைவித்திருக்கிறோம். அவரைப்பூ போல அழகான பூ எதுவுமே இல்லை என் ரசனையின்படி.முளைக் கீரைகளுக்கென தனியாய் வலை பின்னி, சுற்றிலும் வேலி அமைத்து அழகாய் பராமரிப்பாள். எல்லாப் பயிரிலும் ஈசானிய மூலையில் நடப்பட்டது விதைக்கு. மாறிக் கொண்டேயிருக்கும் தோட்டப்பயிர்களில் ஏதேனும் தனித்துத் தெரிந்தால் அது விதைக்கு விடப்பட்டது எனத் தெளியலாம். எனக்கும் இதெல்லாம் பரிச்சயமே.

முருங்கை மரங்களில் எல்லா வகையும் இருந்தது. சித்தப்பாவின் ஆசையில் தென்னைமரங்களும் ஒன்றிரண்டு கொய்யா மரங்களும் தோட்டம் நிறைத்தன. விவசாயக் கூலியாய் இருந்தவளுக்கு தம் மக்கள் சம்பாதித்துத் தந்த அந்தத் தோட்டமே சொர்க்கம். பொன்னாங்கனி கீரையும் உண்டு. சீமைப் பொன்னாங்கனி,நாட்டுப் பொன்னாங்கனி என்று இரண்டு வகை இருக்கும். ஒரு மண்டலம் நாட்டுப் பொன்னாங்கனி கீரையை பருப்போடு சேர்த்து உண்டுவர ‘பொன்னால் ஆன கனி’ போல ஆகும் உடல் என்று வலம்புரி ஜான் சொன்னதைக் கேட்டு அப்பத்தாவை கிள்ளிக் கேட்டேன்,
’தங்கமாவா இருக்க அப்பத்தா?’
’வியாதியில்லாத உடம்பு தங்கம் தானடி’ சடாலென பதில் வந்தது.
ஆம். 92 வயது வரை வாழ்ந்தவளுக்கு வைத்தியமென்று பெரிதாய் எதுவும் செய்தோமா? நினைவேயில்லை.

பெரியமனுசியான ஒரு தினத்தில் அம்மாவின் வேலைப்பளு காரணமாக அப்பத்தாக்களின் பராமரிப்பில், கிராமத்தில் விடப்பட்டேன். சித்தி சித்தப்பாக்கள்,அண்ணியும் அண்ணன்களும் இருந்தாலும் அப்பத்தாக்களின் பங்களிப்பு எத்தனை எத்தனை? சிறுவாடு காசு மொத்தமும் எனக்கெனவே செலவு செய்தாள் அப்பத்தா. சில ஆயிரங்கள் தானென்றாலும் அதைச் சேர்க்க எத்தனை நாள் ஆகியிருக்கும்.உளுந்தங்களியும் தினமொரு பலகாரமும் நல்லெண்ணெய் முட்டையென ஒன்றரை மாதம் ராஜவாழ்க்கை வாழச்செய்தாள். பிறருக்கு மருந்துக்கும் செலவு செய்யாதவள் எனக்கென அத்தனை செய்ததின் பிண்ணனி சேர்த்து வைத்தப் பாசமென்று தெளிவாய் புரிந்தது. சிறுவாட்டுக் காசத்தனையும் எனக்கென செலவு செய்வதில் அத்தனை பெருமிதப்படும் அப்பத்தா படுக்கையில் இருக்கும் போது சொல்லிப் போனாள்,
‘படிப்பும் சம்பாத்தியமும் முக்கியமாத்தா! என்ன மாதிரி காட்டுலயும் மேட்டுலயும் கஷ்டப்படாத! பொம்பளன்னா ஒரு கவுரதை வேணும். ஆருக்கிட்டயும் கையேந்தி நிக்காத கவுரத. நெனவுல வச்சிப் பொழச்சிக்க கண்ணு!’

அவளில்லாத புஞ்சையும் காட்டுச் செடி படர்ந்த தோட்டமும் பார்த்தேன் போனமுறை ஊருக்கு போனபோது. மண்டியிட்டு அழுதுவிட்டு வந்தேன். பிறகு என்ன தான் செய்ய முடியும் ஆளில்லாத அவ்வூரில்?

4 comments:

sundar said...

குடுத்து வச்சிருக்கணும் இப்படி ஒரு அப்பத்தா கிடைக்க....

அவங்க பேர் சொல்ற மாதிரி வாழ்ந்து காட்டினாலே போதும்

sheik said...

அழகான பதிவு..சிறு செடிகள் தானியங்கள் பற்றி உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டுச் சென்ற அப்பத்தாவிற்கு என் அன்பு.

Som said...

அத்தனை அக்கறைக்கும், மெனக்கெடலுக்கும் பெயர் பாசம் என்று தெரிந்ததேயில்லை.

Ezhuthaalargalaal matumey sila unarvugalai udanukudan purindhu kolla mudiyum..

Apo neenga chinna ponnu adhunaala puriyala nu sonna othukiren..

But therindhadhey ilai na.. othuka maten...

Romba alaga irundhudhu padika..

Kaaigari vilaiyuradha.. paakanum nu aasai vara aluvuku vaarthaigal aluthamaa irundhudhu..

Siruvaadu pathi ipodhaan kelvi padren..

naveena mayamaakam.. Vaazhkaya kurachidudhu..
Valuvum koranjidudhu..

Neraya Ezhudhunga..

அமர பாரதி said...

Classic narration

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!