"கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்."
கண்ணதாசனின் சத்தியமான வரிகள் இவை. மாற்றம் எல்லா தரப்பிலும் அங்கீகரிக்கபடுகிறது. மொழியெனும் போது கூட சொற்களஞ்சியம் விரிவாக்கப்படுவது மேன்மையான விசயம்.அறிவியல் சொற்கள் பல நம்மிடையே தமிழில் உளவும் போது மகிழ்வோடு செவிமடுப்பது இயல்பாகிப் போயிற்று.இதில் புதியன புகுதல் சரி, பழையன கழிதல் எனபது மொழியின் வனப்பை பொருத்தமட்டில் வருத்தமான விசயம்.
எங்கள் நட்பு வட்டத்தில் தோழி ஒருத்தி உண்டு. பெரியாரின் கொள்கைகளோடு வாழும் ஒரு வீராங்கணை,அவள் செய்யும் எல்லா செயலும் சிற்சில முரண்பாடுகள் கொண்டதும், தேவையற்ற மூட நம்பிக்கைகளை களைவதும் என, கொள்கையை வாழ்க்கையில் கடைபிடிக்கும் தீரமிக்க பெண்மணி.அதனாலேயே அவளோடான நட்பு இத்தனை வருடம் நீடிக்கிறது என்பது தனிக்கதை. யாரும் பண்ணாத அளவுக்கு சீர்திருத்த திருமணம் என்பது அவளின் இலக்கு.
ஒரு நாள் சட்டென,"இராகு காலத்துல கல்யாணம் பாத்துருப்பீங்க. ஆனா நான் என்னோட திருமணத்த மார்கழியில வைக்க போறேன்டீ." என்றாள். அவள் இப்படி சொன்னது, இந்த மாறுதல் பற்றி யோசிக்க தூண்டியது.எங்கள் பகுதியில் மார்கழி மாதத்தில் திருமணம் என்பது கூடாது எனவும், நல்ல காரியங்கள் செய்ய அது ஏற்ற மாதமல்ல என்றும்,அது பீடை மாதம் என்றும் ஒரு வழக்கு இருக்கு. அதை முறியடிக்க கொஞ்சம் அலசுனதுல பல ருசிகர தகவல்கள்.
"பீடுடைய மாதம் மார்கழி"
பீடு = சிறப்பு, பீடு மருவி பீடையானதால் மார்கழியின் சிறப்பு அப்படியே திரிந்து போனது. திருவெம்பாவை,திருப்பாவை,திருப்பள்ளியெழுச்சி எல்லாம் பற்றி சொல்லி மார்கழி "பீடு" உடைய மாதம் என விளக்க வேண்டியதாயிற்று.
இது போலவே,
"சனி நீராடு" கிழமை குறித்த வழக்கு அல்ல.
நீரின் தண்மை குறித்த வழக்கு.
சனி நீர் = குளிர்ந்த நீர்/தண்ணீர்
'படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்பது போல இந்த திரிபு சொற்களால் பொருளே மாற்றி அர்த்தம் கொள்ளப்படுவது வேதனையான விசயம். சரி,'படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்று ஏன் வந்துச்சு? அது வேறொண்ணும் இல்ல, இப்போ இருக்க இசையமைப்பாளர்கள் போல, அந்த காலத்துல ஒரு நாடக கலைஞன் இருந்தானாம். அவனுக்கு சொற்களைக் காட்டிலும் சந்தமே பிரதானமாம்.மகா பாரத்துல,பீமனின் வீரத்த சொல்லும் ஒரு வரி அவனுக்கு ரொம்ப தலைவலியா இருந்துச்சு. விடுவானா நம்மாளு?
"நூறானை பலம் கொண்ட
பீம மகராசா மரத்தப் புடுங்கினானே....."
இந்த வரிக்கு ஒரு 'நச்' இல்லையேன்னு சொல்லி,
படிச்சான் இப்படி...
"பீம மகராசா மரத்தேப்பூ மரத்தேப்பூ
டிங்கினானே. டிங்கினானே."
இந்த விளக்கம் பாமரத்தனமாவும் நாகரீகமில்லாமல் இருந்தாலும் சொல்லவரும் உண்மை கசப்பானது. தொன்மையான சொற்கள் உண்மையில் தொலைந்து போயிற்றா? இல்லை வேருஉ கொண்டு உலவுதா? சிந்திக்கையில் வருத்தம் மிக்க பதிலே வந்தது.
சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் மேத்தாவின் கலைஞர் பற்றிய நினைவுகூறல் ஒன்று அருமையாக இருந்தது. விதவை என்ற சொல்லில் கூட பொட்டிட[அந்த வார்த்தையில் ஒற்று எழுத்து இல்லை] முடியவில்லை என்பன போன்ற ஒரு வளர்கவியின் கவிதையை மேற்கோளிட்டு பேசியதாகவும், பதிலாய் கலைஞர், " விதவை என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. வடசொல்,ஆகையினாலே இந்த தவிப்பு. அதற்கு இணையான தமிழ்ச்சொல் கைம்பெண் என்பதாம். இதில் இருமுறை பொட்டிடபட்டிருக்கிறது.தமிழர் மாண்பு வார்த்தையில் தெரிகிறது" என்றாராம்.
பட்டப்படிப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தும் என் தாய்மொழியின் ஆளுமை என்னுள் மிகவும் குறைவே. மற்றமொழிகளை கற்றதன் பயனாய் தமிழின் சுவை புரியலாயிற்று. பிறமொழி ஆதிக்கமின்றி கவிதை(!) படைப்பதை பழக்கமாக்க வேண்டும் என்ற கருத்தில் வெற்றி கொண்டதாய் ஒரு உணர்வு. இல்லாதிருப்பின் மன்னிப்பீராக.இனியேனும் முயல்வேன் என்று நம்புவீராக!
"கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்.
எறும்புந்தன் கையாலெண் சாண்."
வளர்க தமிழர் மாண்பு! ஓங்குக செம்மொழி புகழ்!
12 comments:
கலைஞரின் கைம்பெண் விளக்கம் சுவாரஸ்யம்...!
மூடநம்பிக்கை=மூடனின் நம்பிக்கை
நல்லதொரு சுவாரஸ்ய பதிவு...!
எழுத்தும் பச்சை படிக்க கடினமாக இருக்குங்க. மாத்துங்களேன்.
எழுத்து கலர தயவு செய்து மாத்துங்க... இல்லன்னா யாரும் உங்கள படிக்க முடியாது..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
நல்ல விஷயம்தான்.. ஆனால் யாரு கேக்கப்போறா? சரி ஊதறத ஊதி வைங்க..
//
பிரியமுடன்...வசந்த் said...
கலைஞரின் கைம்பெண் விளக்கம் சுவாரஸ்யம்...!
மூடநம்பிக்கை=மூடனின் நம்பிக்கை
நல்லதொரு சுவாரஸ்ய பதிவு...!
//
வாங்க வசந்த்! நன்றி!!!
//
வானம்பாடிகள் said...
எழுத்தும் பச்சை படிக்க கடினமாக இருக்குங்க. மாத்துங்களேன்.
//
மாத்திட்டேனுங்க!!
வருகைக்கு நன்றி!!அது சரி! எப்படி இருக்குன்னு சொல்ல்லவே இல்லையே நறுக்கவி அவர்களே?
//
அண்ணாமலையான் said...
நல்ல விஷயம்தான்.. ஆனால் யாரு கேக்கப்போறா? சரி ஊதறத ஊதி வைங்க..
//
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
ஆமாம்மா! யாரும் கேட்டாத்தான் இடுகை போடனும்னா நடக்குற காரியமா? நமக்கு புடிச்சத கிறுக்கிருவோம்!
சுவாரசியம்.. தமிழ்மொழிப்பற்றுக்கு வாழ்த்துக்கள்.
//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
சுவாரசியம்.. தமிழ்மொழிப்பற்றுக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க! வாங்க அடிக்கடி!
கயல் நல்ல விசயம், அருமையான பகிர்வு......
//
Sangkavi said...
கயல் நல்ல விசயம், அருமையான பகிர்வு......
//
இது போன்ற விசயங்களையும் பாராட்ட ஆள் இருப்பதே மனதிற்கு ஆறுதலாய்!வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்...
just now started reading your blog, ll write my comments once i finished reading...
Post a Comment