அட இந்த நாளும் பொழுதுந்தேன் எப்படி விறுவிறுன்னு ஓடுது. ரெண்டு வருசம் முடிஞ்சி போச்சி. நல்லபடியா போய் சேந்ததா ஒரு தகவல் மட்டும் வந்துச்சு. மறுக்கா ஒரு தகவலும் இல்ல. நம்ம அழகிக்கு அப்ப என்ன வயசுங்கிறீக? ஒரு பதினாறு இருக்கும். உணர்ச்சிகள தகிச்சிக்கிட்டு, இல்ல அப்படீன்னா என்னன்னே தெரியாம,எதுக்கு ஏங்குறோம்முன்னு தெரியாமயே அந்த அசோகவனத்து வாழ்க்க பழகிடுச்சு அவளுக்கு.
அப்பப்போ அரசல் புரசலா இங்கிருந்து சீமைக்கு போனவிங்க அங்கேயே 'குடியும்' குடித்தனமா ஆகிட்டாங்கன்னு சேதி வரும். அப்பல்லாம் மாமியாரும் ஓரகத்தியும் பொலம்புறது நல்லா கேட்கும். சில சமயம் அது ஒப்பாரியா ஆரம்பிச்சு இவ ராசி மேல பழி வந்து நிக்கும்.ஆத்தா அப்பன முழுங்குன மாதிரி எம்மவனையும் முழுங்கிட்டான்னு ஏச்சு வசவா மாறி மனச நையப்புடைக்கும். அப்பல்லாம் மட்டும் இவ மனசு பாறையா இறுகி போயிடும்.
என்ன வாழ்க்கடா சாமின்னு சலிப்பு,மாமியாரோட வார்த்த சூட்ட தாங்காம கண்ணீர்,எது வந்தாலும் தளும்பி நிக்கிற புன்னகைக்குள்ள ஆயிரமாயிரம் வலிகளை மறைக்கிற வித்த நம்ம ஊரு பொண்னுக்குதாமய்யா சாத்தியம். 'அவுகளுக்கு ஒன்னும் ஆகாது நல்லபடியா திரும்பி வருவாக.எம்மேல ஆச உள்ள எம்புருசனாவே திரும்பி வருவாக.' ன்னு மனசுக்குள்ள எழுதி வச்சத திரும்ப திரும்ப படிச்சுக்குவா.
ஆச்சு. அந்தா இந்தான்னு முழுசா ரெண்டு வருசம். அந்த வருசக் கடைசீல ஊருக்காடெங்கும் ஒரே பஞ்சம் தலவிரிச்சாடுது.ஒரே நோவும் சாவும். எப்படி காலந்தள்ளுறதுன்னு தவிச்சுப் போயி பக்கவாததுல விழுந்துட்டா அந்த பெரிய மனுசி. அவ நடமாட்டம் இருந்த வரைக்கும் எந்த பயமும் இல்லாத வாழ்ந்தவுகளுக்கு அப்புறந்தேன் தெரியுது அவ அரும பெருமையெல்லாம். நம்ம அழகி மாமியா வாயிக்கும் அவ சலசலப்புக்கும் பயந்து கெடந்த மைனர் பயலுவ எல்லாருக்கும் அவ நோவு ஒரு வாய்ப்பா போச்சுது நெனச்சாகளாம். ஆம்பள இல்லாத வீடுன்னு சலம்பல் பண்ணுனவனுக்கு எல்லாம் நம்ம அழகியோட கருக்கருவா பதில் பேசிச்சாம்.
'புலிக்குனா இம்புட்டு நாளும் தண்ணி காட்டிருகோம்முன்னு நெனச்சு மனசுக்குள்ளே மருகிப் போறா மாமியார்காரி.இம்புட்டு ஆங்காரத்த உள்ள வச்சிக்கிட்டா இந்த புள்ள அப்புராணியா சொன்னத கேட்டுச்சு? எப்படியோ புள்ளகுட்டி பெறாத எனக்கு மருமகளுவள மகளா குடுத்த சாமிக்கு படப்பு வச்சுதேன் நன்றி சொல்லோணும்' வெகுவாரியா மனசுக்குள்ள உருகத்தேன் முடியுதே தவிர அந்த பெரிய மனுசியால ஒண்ணுமே முடியல.
அழகி வேறமாதிரி யோசிக்கிறா. சொத்தாய் இருந்த நாலு ஆடு மாடும்,வீட்டுக்கு பின்னாடியிருந்த தோட்டமும், கழனியாக்கப்பட்ட கட்டாந்தரையும் அடித்த பஞ்சத்துல ஆட்டங்காண ஆரம்பிச்சிட்டுது. எப்படி கரையேறுறதுன்னு யோசிக்கிறாக. கைப்புள்ளயோட சேத்து மூனு பொண்ணு ஓரகத்திக்கு. வய வேல அவளால் பாக்கமுடியாது. கூலி வேலைக்கு போனா வாற கூலி ஆறு உசுருக்கு எப்படி பத்தும்? திரும்பவும் ஒத்தயா விவசாயம் பண்ணுறதுன்னு முடிவுக்கு வந்துட்டா.
உழைப்புன்னா காத்தாடிக்கு கீழ கணக்கெழுதுற வேல இல்ல சாமி.. சூரியனுக்கு சவால் விடுற மாதிரி ஓய்வு ஒழிச்சலில்லாத நாய் பொழப்பு. மொதக் கோழி கூவயில தோட்டத்துக்கு போயிட்டானா, கை எறவையில தண்ணி பாய்ச்சி அங்கன சோழி முடிய சூரியன் உச்சிக்கு வந்திரும். தோட்டத்துல காய்கறி பயிருன்னா, அந்த வானம் பாத்த பூமிய நம்பியும் வருசமுச்சூடும் வெள்ளாம. இவ படுறபாடு அக்காளுக காதுக்கு வந்ததும் இவள மட்டும் கூப்பிடுறாக. அம்மானும் நடையா நடக்குறாரு வீட்டுக்கு கூப்பிட்டு.மழுப்பலா பதில் சொன்னாலும் அவ வைராக்கியத்துல அவ இம்மியும் அசையல.இதுக்கா எம்புள்ளய இங்கன கட்டிக் குடுத்தேன்னு பொலம்பி பொலம்பி,முடிவா அவரும் போய் சேந்துட்டாரு. சொந்தமுன்னு சொல்லிக்க யாருமில்லையின்னு மறுகாம இருக்குற வீட்டையே சேத்துக் கட்டுனா பாசத்தால.
அடுத்து அயித்தைக்கு வைத்தியம். சித்த வைத்தியமும் தைலமும் ஒரு ரொக்கத்த முழுங்க ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஒத்தாசைக்கு இளையவஞ் சம்சாரமும் வந்து நிக்கா. ஆம்பள இல்லாத வீடுன்னு எளப்பமா பேசுனவுக எல்லாரும் அசந்து போயி நின்னாக.ஒசரமுன்னு பாத்தா ஒன்னுமில்ல தான் . அதே வட்டக் குடிச, வசதி வாய்ப்பெல்லாம் ஒன்னும் ஏறல. ஆனா அழகி அந்த வீட்டுக்குள்ள அன்ப,பாசத்த வெதச்சு விட்டிருக்கா.அவ ஆசைக்கு தக்கன அந்த கூடு இப்ப மாறிப்போச்சு. சண்டை போடாத மாமியாரு மருமகளும், பொறாமையில்லாத மனுசமக்கன்னு அந்தக் குடிச இப்போ அழகியோட அன்பால அரண்மனையாயிருச்சு. ஓரகத்தி பிள்ளைகளுக்கு யாரு தன்ன பெத்தவனே தெரியாதாம் கலியாணம் வரைக்கும். உண்மை தாஞ் சாமி நம்பலயின்னா எங்கூரு பக்கம் வந்து பாருங்க இன்னும் பல கூட்டுக குடும்பங்களிலே இதுபோல நடக்கத்தாஞ் செய்யுது.
இத்தன ஓட்டத்துக்கு மத்திலேயும் 'அவுக எப்படி இருக்காகளோ? எப்ப பாப்பேனோ? மாரியாத்தா. எங்கண்ணுக்கு முன்னக் கொண்டாந்து நிறுத்திப்புடு.',வேண்டுதலும் மன்றாட்டும் அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டு தான் இருக்குது.
கட்டுப்பெட்டித் தனமான பொண்ணு,படிப்போ, வெளியுலக வாழ்க்கையோ தெரியாத ஒருத்தி, புருசனும் துணைக்கு இல்லாத ஒரு கிராமவாசி தன் கை உழைப்பை மட்டும் நம்பி ரெண்டு குடும்பத்தோட வளர்ச்சிக்கு காரணமாயிருந்து பாசத்தோட வறுமையை எதிர்த்து போராட முடிஞ்சுதுன்னா, ஏன் எல்லா திறமையும் உள்ள சில நவயுக பெண்கள் அற்ப காரணங்களுக்காக விவாகரத்துங்கிற கத்தியோட உதவிய நாடுறாங்க? பதில் சில சமயம் தலைமுறை இடைவெளின்னு வரும், சில சமயம் பெண்ணீயம் வளராத காலகட்டம்ன்னு சொல்லலாம்.ஆனா காரணம் அது இல்லைங்கிறது என் தாழ்மையான கருத்து.எடுத்த எடுப்பிலேயே பிரிவ பத்தின முன்மொழிதலோட தீர்வு காண ஆரம்பிக்கிறது தான் காரணம். பெண்ணுக்குள்ளே எல்லா ஆளுமையும் பூரணத்துவமும் உண்டு.ஏதோ ஓரிடத்தில் குறைகையிலே அடுத்தவர்க்கு அடிமையாதல் நிகழ்கிறது.அத சீர் செய்யோணுமே தவிர ஆண் போல பாவனை செய்வது சரியேயில்லை. வீட்டுப் பிரசனைகள்ல ஒரு பொண்ணால சாதிக்க முடியாதது எதுவுமேயில்ல.இது நமக்கு இப்போ தேவையில்லாத விசயம்.இருந்தாலும் ஒரு வித மனக்கசப்புங்க உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லுவேன்? அதேன் இப்புடி சில சமயம், கண்டுக்காதீங்க பாஸ். சரி வாங்க நம்ம விசயத்துக்கு.
அன்னிக்குன்னு பாத்து மனசு பட படன்னு அடிச்சுக்குது.என்னக்கிமில்லாம மேற்க பாத்து கெவுளி வேற நல்ல சகுனம் சொல்லுது.அழகிக்கு என்ன நல்லது நடந்திருக்கும். பாக்கலாம் வாங்க.
<========== அழகி புராணம் தொடரும் [5] ============>
12 comments:
உங்க அழகி புராணம் நல்லாயிருக்குங்க...
முதல்ல இருந்து படிக்கணும்...
//
Sangkavi said...
உங்க அழகி புராணம் நல்லாயிருக்குங்க...
//
வாங்க Sangkavi! நன்றி!
//
பழமைபேசி said...
முதல்ல இருந்து படிக்கணும்...
//
சரி!படிச்சிட்டு சொல்லுங்க ஆசானே!
பிற்காலத்தில் பதிப்பாய் வரலாம்
அம்மூர் காரவிக எழுதுன
கள்ளிக்காட்டு இதிகாசம்
கருவாச்சிகாவியம்
வரிசையில் அழகியும் வரக்கூடும்..!
உங்களோட இந்த ஸ்லங் படிக்க படிக்க ஊர்க்காரவிங்க கூட பேசுன மாரியே ஒரு ஃபீலு....
மிகவும் அருமையாக இருக்கிறது...அழகி தொடர்ந்து வரட்டும்...
//
உங்களோட இந்த ஸ்லங் படிக்க படிக்க ஊர்க்காரவிங்க கூட பேசுன மாரியே ஒரு ஃபீலு....
//
நன்றி வசந்த்!! அது எனக்கு நானே வச்சுக்கிட்ட பரீட்சை! பாஸாவேனா? நீங்க தான் சொல்லனும்!
//
பிற்காலத்தில் பதிப்பாய் வரலாம்
அம்மூர் காரவிக எழுதுன
கள்ளிக்காட்டு இதிகாசம்
கருவாச்சிகாவியம்
வரிசையில் அழகியும் வரக்கூடும்..!
//
ஆ!
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி....
நான் இன்னும் கத்துக்குட்டிதேன் சாமி!
//
கமலேஷ் said...
மிகவும் அருமையாக இருக்கிறது...அழகி தொடர்ந்து வரட்டும்...
//
நன்றி கமலேஷ்!!
வழக்கம் போல மிக மிக அழகா இருக்கா அழகி...
//
கலகலப்ரியா said...
வழக்கம் போல மிக மிக அழகா இருக்கா அழகி...
//
நன்றி பிரியா! உடம்புக்கு பரவாயில்லையா?
அப்பத்தா என்ற வார்த்தைக்காகவே முதலிருந்து படிக்க வேணும் என நான் எண்ணியதையே பழமை பேசி பதிஞ்சுட்டாரு.வணக்கம்மா.
//
தாராபுரத்தான் said...
அப்பத்தா என்ற வார்த்தைக்காகவே முதலிருந்து படிக்க வேணும் என நான் எண்ணியதையே பழமை பேசி பதிஞ்சுட்டாரு.வணக்கம்மா.
//
வணக்கம்! வருகைக்கு மிக்க நன்றி ஐயா! படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!
Post a Comment