Saturday, January 16, 2010

அப்பத்தா! - ப‌ட‌ல‌ம் 4

"ஏலே! யாருப்பா அது? "

கருக்கலிலே சாணஞ் தெளிச்சு கோலம் போட்டு நிமிரவும், மாரியப்பன் கூவலோடு வாசல் மிதிக்கவும் ச‌ரியாயிருந்துச்சு!

"ஆங்! அழகியா! ஆத்தா! ஓம் புருசன கொஞ்சம் வெளிய வரச் சொல்லு தாயி!வெரசா ஒரு சேதி சொல்லோணும்!"

"சித்த இருங்கண்ணே வாரேன்" என்றபடி திரும்ப, கணவன் எதிர்படவும் "உங்களத் தான் கேட்டாக!" என்ற‌ப‌டி மெல்ல‌ ந‌க‌ர்ந்தாள்.

"என்னல‌‌! விடிய‌ல்ல‌ க‌த்திக்கிட்டிருக்க?என்ன சேதி?" என்ற‌வ‌ன், நிமிச‌த்துல‌ மாரி சொன்ன‌ விச‌ய‌த்த‌ கேட்ட‌தும் சிரிக்க‌வே தெரியாதுன்னு தெரிஞ்ச‌ மொக‌த்துல‌ அம்புட்டு சிரிப்பு!

வெரசா இவ‌ கிட்ட‌ வ‌ந்து , " ம‌லேயாவுல‌ வேல‌க்கி ஆளெடுக்காக‌ளாம்.நிச்ச‌ய‌ங் கெட‌ச்சுரும்! உம் மாம‌ங்கிட்ட‌ சொன்ன‌ மாதிரி உன்ன‌ ராசாத்தியா வ‌ச்சுக்குவேன்.நா ஏமாத்த‌ல‌ புள்ள‌ நீ என்ன‌ ந‌ம்பு. ந‌ல்ல‌ பொழ‌ப்பில்லாத கொற‌ தான் உங்கிட்ட‌ மொக‌ங்குடுத்து பேச‌ல‌.இப்ப‌ இந்த‌ வேல‌ த‌க‌ஞ்சுரும். போயிட்டு வாரேன்.வ‌ந்து பேசுதேன்"

ஒரு வார்த்த‌ பேச‌மாட்டானான்னு ஏங்கி கெட‌ந்த‌வ‌கிட்ட‌ ம‌ட‌ம‌ட‌ன்னு பொறிஞ்சிட்டு போயிட்டான். இத்த‌ன நா விடுக‌தக்கி இன்னைக்கு ப‌தில் கெட‌ச்சிருச்சு. அம்மான் என்ன‌ சொல்லி க‌லியாண‌ம் முடிச்சு குடுத்தாருன்னு தெரிஞ்ச‌ புள்ள‌ அவரு ஆக்ரோச‌த்துக்கும் கார‌ணம் தெரிஞ்சுகிட்டா. இத்தன பாசம் வச்சிருக்கானா எம்புருசன் எம்மேல? நெனைக்க நெனைக்க கரும்பா இனிக்கிது. எப்ப வருவான்னு காத்திருக்கா வாசல்ல ஒரு கண்ணும் அடுப்பில ஒரு கண்ணுமா.

'அடப்பாவி! காசில்லையினு தானா இம்புட்டு ரகளயும்! ஒத்த வார்த்த சொல்லப்பிடாது? நானும் என்னன்மோ நெனச்சு மருகி போனேனே.ஆத்தா மகமாயி! ஆகா ஓகோன்னு வாழலையினாலும் கவுரதயா,பாசமா வாழனும் தாயி! அதுக்கு வழி பண்ணு'

"என்னா? காலையிலேயே கனாவா? தோட்டத்துக்கு போகல?" ம‌ன‌சு போன‌ போக்க‌ மாமியாரு கொர‌லு வ‌ந்து க‌லைச்சு போட்டுது!

"இல்ல‌ அயித்த‌! அவுக‌ வெளிய‌ சோழியா போயிருக்காக‌! என்ன‌ ஏதுன்னு கேட்டுட்டு போக‌லாமின்னு........!"

"அதெல்லாம் நா பாத்துக்கிறேன்! நீ போ!" ச‌ட்ட‌மாய் சொன்ன‌தும் ம‌னசில்லாம‌ல் தென‌ச‌ரி பாக்குற‌ வேல‌ய‌ தொட‌ருறா அழ‌கி.

பொழுது சாய வீட்டுக்கு வ‌ந்தா வீடே த‌ல‌கீழா மாறியிருக்கு. க‌ப்ப‌ல்ல‌ ப‌ய‌ண‌மாம். ரெண்டு மூணு நாளைக்குள்ள கெள‌ம்ப‌னுமாம். அப்ப‌டி இப்படின்னு ஓர‌க‌த்திக்கிட்ட‌ வ‌ம்ப‌ள‌ந்துக்கிட்டிருந்த‌ மாமி,இவ‌ள‌ பாத்த‌தும் என்ன‌ தோணுச்சோ, "அவ‌ன் உள்ள‌ தான் இருக்கான் போயி பேசு" என்றாள்.

யோச‌னையா இருந்த‌வ‌ன் மெட்டி ஒலி கேக்க‌வும் மெல்லத் திரும்பி,மஞ்சளும் குங்குமமும் திகழ, தாமரப்பூ கணக்கா மலர்ந்து கெடந்த முகத்த பாத்ததும் பேச்சிலழந்தவன், திக்கித் திணறி ச‌ன்ன‌மா,

"ரெண்டு நாள்ல‌ கெள‌ம்ப‌ணும். மூணு வ‌ருச‌ம் ஆகும். கொஞ்ச‌ம் ந‌ம‌க்குண்ணு சேத்துகிட‌லாம்,அதேஞ் சரினுட்டேன். ஆனா நீ இங்க ச‌மாளிச்சிருவியா? இல்ல‌....உன்ன உன் வீட்டுல கொண்டு விட‌னுமா?"

அவ‌ன் மூச்சுக்காத்து த‌ந்த‌ க‌த‌க‌த‌ப்ப‌ அனுப‌விச்ச‌வ, க‌த்தியா வ‌ந்த‌ வார்த்தைக‌ள்ல‌ நொறுங்கி போனா.
"என்ன‌யிது? என் வீடு இது தானே! நான் உங்க‌ள‌ ந‌ம்பித்தானே வ‌ந்தேன்?இப்பிடி பிரிச்சு பேசுறீக‌? இதுக்கு முன்ன மாதிரி பேசமலே இருந்திருக்கலாம்!" விசும்ப‌லுட‌ன் க‌த‌ற‌லும் சேர‌ அப்ப‌டியே உருகிப் போயிட்டான்.

"இல்ல‌ புள்ள‌. நா ஒன்ன‌ ஒரு நாளும் பிரிக்க‌ல‌. என‌க்கு எல்லாமும் நீந்தேன். ஆத்தா என்ன‌ பெத்த‌வுக‌ இல்ல‌யினாலும் ந‌ல்லா வ‌ள‌த்த‌வுக. அதுக்கு ந‌ன்றிக்க‌ட‌னாத்தேன் நான் வ‌ர‌வு செல‌வு எதுவுமே கேட்குற‌தில்ல‌. இளைய‌வ‌ ப‌டுற‌பாடு தெரிஞ்சும் நா இல்லாத‌ ச‌ம‌ய‌த்துல உன்ன இங்க‌....நீ... அதாம்புள்ள‌ அப்பிடி..." க‌ண்க‌ல‌ங்க‌ நின்ன‌வன‌ பாத்த‌தும் ஏதோ ப‌த‌றிப் போச்சு இவ‌ளுக்குள்ள‌.

"ஆத்தி! என்ன‌ இப்ப? எதுக்கு கலங்குறீக?சீமைக்கு போயி ந‌ல்லா ச‌ம்பாதிங்க‌.அயித்த‌ சொல்லுற‌ வார்த்தைய‌ ம‌திச்சி ந‌ட‌ப்பேனுங்க. குடும்பத்த பத்தி வெசனப் படாதீக! ப‌ய‌ப்புடாதீக! ஆனா அக்க‌ர‌ சீம‌ போனாலும் உங்க‌ நென‌ப்போட‌ ஒருத்தி இருக்கான்னு ம‌ட்டும் நென‌வுல‌ வ‌ச்சுக்குங்க"

"என‌க்கு தெரியும்புள்ள‌! நீ சேக்க‌ வ‌ந்த‌வ‌, யாரையும் பிரிக்க‌ மாட்ட! எனக்கு தெரியும்"

காதலோடு கட்டி அணைத்ததும் மறுப்பேயில்லாமல், இது என‌க்கான‌ எட‌முங்கிற‌ உரிமையில‌ நா த‌ழுத‌ழுக்க பரவசக் கண்ணீரோட அவ‌ன் தோளில் ச‌ரிந்தாள் அழ‌கி.

<===========அழ‌கி புராண‌ம் தொட‌ரும் ===========>



11 comments:

கலகலப்ரியா said...

கொன்னுட்டீங்க... அருமையான நடை... அந்த மொழி அழகோ அழகு.. அழகி வரட்டும்.. தொடர்ந்து..

ப்ரியமுடன் வசந்த் said...

கயலு எங்கூர் யப்பத்தாக்கள் பேசுறமாதிரியே எழுதியிருக்கீக... அசத்துங்க.....

ஆரூரன் விசுவநாதன் said...

எழுத்துநடை அழகு.....

கமலேஷ் said...

கருவாச்சி காவியம் போலவே...இன்னும் ஒரு அழகி காவியமா.....தொடரட்டும் மிக நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

பழமைபேசி said...

அசத்துங்க....

கயல் said...

//

கலகலப்ரியா said...
கொன்னுட்டீங்க... அருமையான நடை... அந்த மொழி அழகோ அழகு.. அழகி வரட்டும்.. தொடர்ந்து..

//

ந‌ன்றி பிரியா!

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
கயலு எங்கூர் யப்பத்தாக்கள் பேசுறமாதிரியே எழுதியிருக்கீக... அசத்துங்க.....
//
அடி ஆத்தீ இந்த வ‌ச‌ந்து ந‌ம்மூரூகார‌வுக‌ளா? இம்புட்டு நா தெரியாம‌ போச்சே! ஒரு வ‌ண‌க்க‌ம் போட்டுக்க‌ தாயி!

கயல் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
எழுத்துநடை அழகு.....
//

ந‌ன்றிங்க‌!

கயல் said...

//
கமலேஷ் said...
கருவாச்சி காவியம் போலவே...இன்னும் ஒரு அழகி காவியமா.....தொடரட்டும் மிக நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...
//

ஆமாங்க‌! வைர‌முத்து ம‌ட்டும‌ல்ல‌ எல்லோரும் த‌ன் முன்னோர்கள் ப‌த்தி ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ ப‌கிர்ந்துகிட‌னும்! அதுல‌ நிச்ச‌ய‌ம் ஒரு வ‌ரி ந‌ம‌க்கான‌தா இருக்கும்! 'வாழ்ந்த‌வ‌ர்க‌ள் வாழ்க்கை வாழ்ப‌வ‌ர்க்கு பாட‌ம‌டி'ன்னு சும்மாவா சொன்னாங்க!இது, அப்ப‌டி நான் ப‌டிச்சு புரிஞ்சுக்கிட்ட‌ என் அப்ப‌த்தா ப‌த்தின‌து! உங்க‌ள் ஆத‌ர‌வும் க‌ருத்தும் தொடரணும் நண்பரே!

கயல் said...

//

பழமைபேசி said...
அசத்துங்க....

//

அப்பாடா! எங்க வாத்தியாரு ஊர்லேர்ந்து வந்தாச்சுப்பா! நல்ல தமிழ் படிக்கலாம் இனிமே! வ‌ருகைக்கு ந‌ன்றி!

Anonymous said...

குளம்,குட்டை,
வயல்,வாய்க்கால்,
கண்மாய்,கண்ணி,
ஏரி,கடல் என
எங்கும் கயலாய்,
இயலாய் நீர்.
இயம்பினீர்.
அருமையாய்
அழகியை ,
அழகிய காவியமாய்.
வடீத்தீர்!
வாழ்க!வளர்க!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!